Tuesday, August 16, 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: " அருவருப்பா இருக்கு!!! "
          எங்கள் பிளாக் தளத்தின் இந்த வார "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் ஆதி வெங்கட் அவர்களின் படைப்பு இடம் பெறுகிறது.

          இவரையும் இவர் கணவர் வெங்கட் நாகராஜனையும் அறியாதவர்கள் இருக்க முடியாது.  

          இவரது தளம் கோவை2தில்லி.

          இவர்களது மகள் ரோஷ்ணி வெங்கட்டும் ஒரு தளம் வைத்திருக்கிறார்.  அவரும் ஒரு பதிவர்.  அவரின் தளம் வெளிச்சக்கீற்றுகள்.

          கதை பற்றிய அவரது முன்னுரையைத் தொடர்ந்து அவர் படைப்பு தொடர்கிறது...


===================================================================

கதைக்கான கருவும், காரணமும்...

அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளிலேயே கதைகள் ஒளிந்துள்ளன.. அப்படி பார்த்த ஒரு சம்பவத்தை வைத்தே கதையாக எழுதியுள்ளேன். எனது கோவை2தில்லி எனும் வலைப்பூவில் எழுதிய

இரண்டாவது சிறுகதை இது...... முதலாவது சிறுகதை – பீட்சா-சீடை என்ற தலைப்பில் எழுதியது.

அதுவும் அனுபவக் கதை தான்..... அதை இங்கே படிக்கலாம்!

நட்புடன்

ஆதி வெங்கட்.=========================================================================

அருவருப்பா இருக்கு!!!


ஆதி வெங்கட்

அம்மா! கத்திரிக்கா, வெண்டக்கா, பாகக்கா எல்லாம் கொண்டு வந்துருக்கேன்…. காய் காய்….. வாங்கலையாம்மா….

அருகிலுள்ள கிராமத்திலிருந்து சைக்கிளில் காய்கறிகளை கொண்டு வந்து குடியிருப்புகளில் விற்பனை செய்கிறவர்.

சில நாட்களாக குடியிருப்பின் உள்ளே செல்ல வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதனால் வாயில் அருகிலேயே நின்று கொண்டு கூவிக் கொண்டிருந்தார். அம்மா! காய் காய்….

மகளை ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்ப வந்த பவானி. கையோடு குடத்தையும் கொண்டு வந்திருந்தாள் கீழே..

அம்மா!  பாகக்கா, கத்திரிக்கா………

இருக்குப்பா! நேத்து தான் சந்தையிலிருந்து வாங்கிட்டு வந்தேன்…

வீட்டுக்குள்ளேயே குடிநீர் குழாய் மூலம் வந்தாலும் ஏனோ அதிலுள்ள உப்பின் அளவு கூடுதலாக இருப்பதால், வயிற்றுக்கு ஒத்துக் கொள்வதில்லை…:((

குடியிருப்பிலேயே மாநகராட்சியின் குடிதண்ணீர் குழாய்கள் நான்கு உள்ளன. சுத்திரிக்கப்பட்ட நீராதலால் ஒரு சிலர் அதில் அன்றாடம் சமையலுக்கும், குடிநீருக்காகவும் பிடித்து செல்வதுண்டு.

பலர் வீட்டில் ஆரோ சிஸ்டம் வைத்திருக்க, ஒரு சிலர் குடிநீர் கேன்கள் வாங்கிக் கொள்ள, இப்படி பவானி மாதிரி சிலர் இந்தக் குழாய்களில் பிடித்து செல்வதுண்டு.

குடத்தை கழுவி விட்டு தண்ணீரை பிடித்து அங்குள்ள திட்டில் வைத்து விட்டு ஆட்டோவுக்காக காத்திருக்கையில்…….

“ஐய்யோ! ஐய்யோ! என்னய்யா இப்படி பண்ணிட்ட! இதில எப்படி நாங்க தண்ணி பிடிக்கிறது!   எச்ச பண்ணி குடிக்கிற! அந்த தண்ணியெல்லாம் இந்த குடத்துல எல்லாம் தெளிக்குது! வேற வழியில்லாம தான் நான் இங்க பிடிக்கிறேன்! அருவருப்பா இருக்கு! இதுக்கு தான் இங்க உள்ளே போக தடை போட்டிருக்காங்க. வந்தோமா! வியாபாரத்த பாத்தோமான்னு இல்லாம இப்படி பண்ணிட்டயே! உனக்கு வேணும்னா எங்கிட்ட கேட்டா நான் கொடுத்திருப்பேன்ல! என்று ஒரு பெண்மணி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண..

பவானி என்ன நடக்கிறதென்று புரியாமல் முழித்துக் கொண்டிருக்க அந்த காய்கறிக்காரர், வாடிய முகத்துடன் "தண்ணி தானம்மா குடிச்சேன். அது தப்பா?" என்று இவளிடம் புலம்பியபடியே வெளியேறினார்.

மகளை அனுப்பி விட்டு தன்னுடைய குடத்தை எடுக்கச் சென்ற போது அங்கிருந்த இன்னொரு பெண்மணியிடம் “என்னங்க நடக்குது! எந்த காலத்துல இருக்கோம்! வாய வெச்சா அவர் குடிச்சார்?"  எனக் கேட்க,


"இல்லங்க! கைய ஏந்தி தான் குடிச்சார்.. அதுக்கே அந்தம்மா கத்தறாங்க" எனச் சொல்ல… சொல்ல இயலா கோபத்துடன் குடத்தை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள். நேற்றைய ஒரு நிகழ்வினை நினைத்த படியே….

சாலையில் வந்து கொண்டிருக்கையில் மாடு ஒன்று குழாய் திறந்திருந்த நிலையில் கீழே விழும் நீரை நாக்கால் குடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தது. இதை பார்த்ததும் அடடா! இப்படி குடிச்சா எப்படி அதன் தாகம் அடங்கும்… வாயை பைப்பில் வைத்து குடிக்கக் கூடாதோ! என்று நினைத்தபடியே வந்து கொண்டிருந்த பவானிக்கு இன்றைய நிகழ்வின் மூலம்….

இப்படிப்பட்ட மனிதர்களால் தான் மாடு கூட பயந்து கீழே விழும் நீரால் நாக்கை ஈரப்படுத்திக் கொண்டிருந்ததோ என்று தோன்றியது. அல்லது அது நம் மீது அருவருப்பு பட்டுத் தான் தள்ளி நின்று குடித்ததோ என்று மனதுள் நினைத்துக் கொண்டிருந்தாள்.

சில நேரங்களில் தப்பைக் கண்டு தட்டிக் கேட்க மனது துடித்தாலும், வாயை மூடிக் கொண்டு தான் இருக்க வேண்டியுள்ளது என்று தன்னையே நொந்து கொண்டாள் பவானி.....

30 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அன்றாட நிகழ்வுகளை கதையாக்கிய விதம் அருமை
நன்றி நண்பரே
தம சுற்றிக் கொண்டேஇருக்கிறது

வெங்கட் நாகராஜ் said...

எனது மனைவி எழுதிய கதையை இங்கே வெளியிட்டதற்கு மிக்க நன்றி. கருத்திடப் போகும் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி!

Bagawanjee KA said...

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் கனவு ,இன்னும் நனவாகாதது வருத்தப் பட வேண்டிய ஒன்று :(

ADHI VENKAT said...

எனது கதையை தங்களின் தளத்தில் வெளியிட்டதற்கு மகிழ்ச்சியும், நன்றியும்..

ADHI VENKAT said...

எனது கதையை தங்களின் தளத்தில் வெளியிட்டதற்கு மகிழ்ச்சியும், நன்றியும்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

சிறியதொரு சம்பவத்தை எழுத்தில் வடித்து
சிந்திக்க வைத்துள்ள முயற்சி மிகவும் அருமை.

கதாசிரியருக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள்.

இங்கு இன்று பகிர்ந்து படிக்க வாய்ப்பளித்துள்ள
‘எங்கள் ப்ளாக்’க்கு என் நன்றிகள்

'நெல்லைத் தமிழன் said...

கதைக் கரு நல்லா இருக்கு.

Anuradha Prem said...

அருமை...

வலிப்போக்கன் said...

தகவலுக்கு நன்றி! கதை அருமை...

வலிப்போக்கன் said...

தகவலுக்கு நன்றி! கதை அருமை...

வல்லிசிம்ஹன் said...

இன்னும் இது போல நடக்கிறதா. தண்ணீருக்கா இந்தப் பாடு.
மிக அருமையாகக் கருத்தைச் சொல்லி இருக்கிறீர்கள் ஆதி. வாழ்த்துகள் மா.

Dr B Jambulingam said...

யதார்த்தமே சிறுகதை. உணர்ந்து எழுதிய விதம் அருமை. பகிர்வுக்கு நன்றி.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான பதிவு

Usha Krishnamurthy said...

Short n sweet

KILLERGEE Devakottai said...

யதார்த்தமான நிகழ்வுகள் சகோ ஆதி வெங்கட் அவர்களுக்கு வாழ்த்துகள்.

G.M Balasubramaniam said...

பலரது ஆழ்மனதில் இருக்கும் குணம் சில சமயம் வெளிப்பட்டு விடுகிறது இம்மாதிரி குணம் உண்மையிலேயே அருவருக்கத்தக்கது சிறிய கதை. சொல்ல முற்பட்டது பெரிய விஷயம்

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அருமையான கதை. ஒரு சிறிய நிகழ்வின் மூலம், நல்லதொரு கருத்தை திறம்பட கதையாக்கிய சகோதரிக்கு பாராட்டுடன் வாழ்த்துக்கள். அதை பகிர்ந்து வெளியிட்ட தங்களுக்கும் என் மனமார்ந்த தன்றிகள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ADHI VENKAT said...

கருத்துக்களை பகிர்ந்து கொண்டு என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

ADHI VENKAT said...

கருத்துக்களை பகிர்ந்து கொண்டு என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

S.P.SENTHIL KUMAR said...

நல்லதொரு அனுபவக் கதை
த ம 8

Ramani S said...

மிகச் சுருக்கமாக என்றாலும்
கதை மிக மிக அருமை
கேட்டு வாங்கிப்போட்டமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

காமாட்சி said...

கருத்தை முக்கியமாக விளக்கும் யதார்த்தமானகதை. பாராட்டுகள். அன்புடன்

‘தளிர்’ சுரேஷ் said...

சின்னதொரு சம்பவத்தை படிப்பினையூட்டும் கதையாக மாற்றிய எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்! அருமையான நடை! பாராட்டுக்கள்!

Thenammai Lakshmanan said...

சிறு சம்பவத்தை அழகான சிந்தனைக் கதையாக்கிய ஆதிவெங்கட்டுக்கு மனமார்ந்த பாராட்டுகள். முதன் முதலாக உங்கள் கதையைப் படிக்கின்றேன். அருமையா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள். மனிதநேயமே என்றும் ஜெயிக்கும். வாழ்க வளமுடன்.

இதை எங்கள் பார்வைக்குக் கொண்டுவந்த எங்கள் ப்ளாகுக்கும் ஸ்ரீராமுக்கும் நன்றிகள் பல !

ராமலக்ஷ்மி said...

அருமையான கதை. வாழ்த்துகள் ஆதி!

Thulasidharan V Thillaiakathu said...

ஒரு சிறு விஷயம்தான். ஆனால் அது ஒரு சிறு கதையாக உள்ளத்து எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கியிருக்கும் சகோ ஆதிவெங்கட்டிற்கு வாழ்த்துகள்! இன்னும் நிறைய எழுதுங்கள்!

சகோ ஆதி வெங்கட் அவர்களின் கதை எழுதும் திறமையை இங்கு வெளிப்படுத்திய எங்கள் ப்ளாகிற்கும் நன்றி. வாழ்த்துகள்!

Angelin said...

சிறு சம்பவம் சொல்லி சென்றது பல விஷயங்களை ..நிச்சயம் ஒரு காலம் வரும் மாடு மற்ற ஜீவராசிகளெல்லாம் மனிதரை பார்த்து அருவருக்க கூடும் ஹ்ம்ம் அதற்குள் மனிதர் தங்களை திருத்திக்கணும்

Bhanumathy Venkateswaran said...

இயல்பான எளிய நடை. அதுவும் அந்த முத்தாய்ப்பு பிரமாதம்!

பரிவை சே.குமார் said...

அருமையான கதை....
அங்கு வாசித்த ஞாபகம்...
எழுத்தாளருக்கும், தங்களுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா....

கோமதி அரசு said...

நல்ல கதை வாழ்த்துக்கள் ஆதி.

ஆதியின் கதையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!