செவ்வாய், 2 மே, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை : சீதை ராமனை மன்னித்தாள்! ரஞ்சனி நாராயணன்




     சீதைக் கதையில் திருமதி ரஞ்சனி நாராயணனின் கதை இன்று...



========================================================




சீதை ராமனை மன்னித்தாள்!  
ரஞ்சனி நாராயணன்


‘சீதை ராமனை மன்னித்தாள்’


‘இதுதான் கதையின் தலைப்பா?’ பாட்டி தொலைக்காட்சியிலிருந்து கண்களைத் திருப்பாமலேயே கேட்டாள்.



‘இல்லையில்லை. கதையின் கடைசி வரி இப்படி இருக்க வேண்டுமாம். ‘சீதை ராமனை மன்னித்தாள்’ என்று.



‘யார் கதை எழுதச் சொல்லியிருக்கா?’



‘எங்கள் ப்ளாக்’ ஸ்ரீராம் தான்!



‘ஓ! கேட்டு வாங்கிப் போட்ட கதையெல்லாம் முடிஞ்சு போச்சா? இப்போ கடைசி வரி கொடுத்து எழுதச் சொல்றாரா?’



‘இது அவரோட அப்பா சொன்னதாம். உறவுகளுக்கு இடையில் போட்டி வைக்க ‘சீதை ராமனை மன்னித்தாள்’ என்று கடைசி வரி அமையும்படி எழுதச் சொன்னாராம். ஸ்ரீராம் சொல்லாமலேயே விட்டுட்டார். இப்போ சக வலைப்பதிவாளர்களுக்குச் சொல்லி எழுதச் சொல்லியிருக்கிறார்....’



‘...........’

‘என்ன பாட்டி! பதிலே இல்ல. நீ ஏதானும் எழுதலாம்னு யோசிக்கிறயா?’



‘அதெல்லாம் இல்லை’  தொலைக்காட்சியை நிறுத்தி விட்டுப் பாட்டி தொடர்ந்தாள்: ‘எல்லா சீதைகளும் எல்லா ராமன்களையும் மன்னிக்கறதாலேதான் இந்த உலகமே சுழன்றுண்டு இருக்கு. இதிலே எந்த சீதை எந்த ராமனை மன்னித்தாள் என்று எந்தக் கதையை எழுதறது?’

‘அப்படியெல்லாம் இல்லை. சில சீதைகள் சில ராமன்களை மன்னிப்பதே இல்லை, தெரியுமா?’

‘யாரைச் சொல்ற?’

‘பெங்களூருல நம்மாத்துக்கு எதிர்ல ஒரு தாத்தா இருந்தாரே, நாங்க கூட அவருக்கு ‘டான்ஸிங்’ தாத்தா என்று செல்லப் பெயர் வைத்திருந்தோமே, நினைவிருக்கா? அவர் நடக்கும்போது உடம்பு முழுக்க ஆடும். ஏதோ ஆக்சிடெண்டு ஆகி அப்படி ஆயிட்டார்னு சொல்லுவா. அந்த பாட்டி அதான் அவரோட வைஃப் அவரோட பேசவே மாட்டாளாம். அவரோட பேசறத நிறுத்தி பல வருஷங்கள் ஆயிடுத்தாம். அந்தப் பாட்டியோட மாட்டுப்பெண் எங்க அம்மாவோட பேசும்போது ஒரு தடவ சொன்னாளாம்.... அவருக்கு முன்னாடி அந்தப் பாட்டி போயிட்டா. அதனால அந்த பாட்டி அவரை மன்னிக்கவேயில்லை அப்படீன்னுதானே அர்த்தம்?’

‘அந்தப் பாட்டிக்கு ‘சுமங்கலி’ன்னு பேர் வாங்கிக் கொடுத்த தாத்தாவை அந்தப் பாட்டி இப்போ நிச்சயம் மன்னிச்சிருப்பா... அத விடு. நீ எப்போ உன் ராமனை மன்னிக்கப் போற?’

‘பாட்டீ......!’

‘நீ வந்து ஒருமாசத்துக்கு மேல ஆறது. இதுவரைக்கும் ஒரு வார்த்தை நீ அவனைப் பத்திப் பேசல. கல்யாணத்துக்கு முன்னால எப்பவும் கைபேசியும் காதுமா இருப்ப. கல்யாணம் ஆகி இன்னும் ஒரு வருஷம் ஆகல. இப்ப அவனோட பேசறதையே நிறுத்திட்டயா? எத்தனை நாளுக்கு இங்க அம்மாவாத்துல இருப்ப? என்ன ஆடம்பரம், என்ன பகட்டு. உன் கல்யாணத்த தான் சொல்றேன்.  அதுக்கு அர்த்தமே இல்லையா? அத்தனை செலவழித்து நீ ஆசைப்பட்டவனையே உனக்கு
பண்ணி வைச்சாளே, உன் அம்மா அப்பா - அவாளுக்கு நீ கொடுக்கற மரியாதை என்ன?’

‘............................’


‘என்ன பேச்சையே காணும்?


உம்....’


‘கல்யாணம் என்கிறது பீச்சுல, பார்க்குல ஒண்ணா கைகோர்த்து நடக்கறது மட்டுமில்ல. வாழ்க்கையிலேயும் ஒண்ணா நடக்கக் கத்துக்கணும். உனக்குக் கல் தடுக்கினா அவன் அழணும்ன்னு எதிர்பார்க்கறது குழந்தைத்தனம். அதேபோல அவன் ஆபீஸ்லேர்ந்து வரும்போது நீ காப்பியும் கையுமா நிக்கணும்னு அவன் எதிர்பார்க்கறதும் தப்பு. ரெண்டுபேரும் அடுத்த தலைமுறையை வளர்க்கற பொறுப்பை ஏத்துக்க வேண்டியவா. அதை உணர்ந்து அவா அவா வேலையைப் பாருங்கோ. நீ தினமும் சமையல் பண்ணு. உனக்குப் பொறுப்பு வரும். அவனிடம்
பையைக் கொடுத்து மளிகை சாமான் வாங்கிண்டு வரச் சொல்லு. அவனுக்கும் பொறுப்பு வரும்’

‘....................’


‘ராமாயணத்துல ஒரு அழகான காட்சி: வனவாசம் முடிந்து ராமனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. ராமன் எல்லோருக்கும் பரிசுகளை வாரி வாரி வழங்குகிறான். சீதையும் கண்குளிர அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவர்கள் இருவரையும் கண் நிறைந்து அனுமன்
சேவித்துக் கொண்டிருக்கிறான். திவ்ய தம்பதிகள் இல்லையோ! சீதையின் பார்வை அனுமனின் மேல் விழுகிறது.


‘அடடா! இவன் எப்பேர்பட்ட காரியம் செய்திருக்கிறான். அன்று அசோக வனத்தில், நான் விரக்தியின் உச்சியில் என்னை மாய்த்துக் கொள்ள முயன்ற போது இவனல்லவா என் உயிரைக் காப்பாற்றினான். இவனுக்கு என்ன கொடுத்து கைம்மாறு செய்வது? எதைக் கொடுத்தாலும் அது போதாது. ஆனாலும் ஏதாவது கொடுக்க வேண்டும்’ என்று எண்ணியவாறே தன் கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலையை தடவிப் பார்த்தவாறே ராமனை நோக்குகிறாள்.

ராமனும் அவள் மனதறிந்து புன்னகைக்கிறான். கழுத்திலிருந்த முத்துமாலையை கழற்றி அனுமனிடம் கொடுக்கிறாள் சீதை. அவளிடமிருந்து பெற்றுக் கொண்ட மாலையை தனது பற்களால் கடித்துப் பார்க்கிறான் அனுமன். சீதை சிரித்துக் கொண்டே ‘மர்க்கடேச!’ என்கிறாள்’.

‘சீதையின் முகக்குறிப்பிலேயே அவளது மனதை அறியும் ராமன் தவறு செய்வானா? சீதை அவனை மன்னிக்கும்படியான சந்தர்ப்பம் வந்திருக்குமா? யோசித்துப் பார். நாமெல்லோரும் நமது சிந்தனைக்கு, தகுதிக்கு ஏற்ப இராமாயணத்தைப் படித்து தப்பும் தவறுமாகப் புரிந்துகொண்டு ராமன் செய்தது தவறு, சீதை பாவம் என்று வாதாடுகிறோம். இது நமது மடத்தனத்தைக்
காட்டுகிறது. அவ்வளவுதான்’

‘வாழ்க்கை என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி அமைந்துவிடாது. ஏற்றத்தாழ்வுகள் நிச்சயம் இருக்கும். ஆண்கள் சிந்திப்பது வேறு. பெண்கள் சிந்திப்பது வேறு. இதைப் புரிந்து கொண்டு இருவரும் ஒன்றாக வாழ்வதுதான் வாழ்க்கை. முணுக் என்றால் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு வந்துவிட்டால் எல்லாம் சரியாகி விடுமா? நீ என்ன தவறு செய்தாய் என்று முதலில் யோசி. பிறகு அவனைக் குற்றம் சொல்லலாம். பேச்சு வார்த்தையால் தீர்க்க முடியாத பிரச்னைகளே கிடையாது. முதலில் உன் ராமனிடம் நீ பேசு. அவனிடம் போய்ச்சேர். பிறகு அந்த ராமனைப் பற்றியும், சீதையைப் பற்றியும் சிந்திக்கலாம்.... புரிகிறதா?’

மனம் நிறைய குழப்பங்கள் இருந்தாலும், பாட்டி சொல்வது சரி என்று புரிய தன் வாழ்க்கையை சரி செய்ய எழுந்தாள் பேத்தி.

இந்த சீதையும் தன் ராமனை மன்னிப்பாள் என்று நம்புவோம்!

53 கருத்துகள்:

  1. பிரமாதம் ரஞ்சனி! ராமாயணத்தையும் சொல்லி, தற்காலச் சூழ்நிலைக்குப் பொருந்துகிற கருவை அருமையாகக் கையாண்டிருக்கிறீர்கள். இந்தக் கரு நானும் யோசித்தது தான்! ஆனால் கொஞ்சம் யோசனையாக இருந்தது! :))) தற்காலப் பெண்கள் மனோநிலை யோசிக்க வைத்தது! :))))

    பதிலளிநீக்கு
  2. ஆனால் இவ்வளவு அருமையாக நான் சொல்லி இருப்பேனா என்பது சந்தேகமே!

    பதிலளிநீக்கு
  3. ‘எல்லா சீதைகளும் எல்லா ராமன்களையும் மன்னிக்கறதாலேதான் இந்த உலகமே சுழன்றுண்டு இருக்கு. இதிலே எந்த சீதை எந்த ராமனை மன்னித்தாள் என்று எந்தக் கதையை எழுதறது?’//

    ‘வாழ்க்கை என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி அமைந்துவிடாது. ஏற்றத்தாழ்வுகள் நிச்சயம் இருக்கும். ஆண்கள் சிந்திப்பது வேறு. பெண்கள் சிந்திப்பது வேறு. இதைப் புரிந்து கொண்டு இருவரும் ஒன்றாக வாழ்வதுதான் வாழ்க்கை.//

    பாட்டி சொன்னது அருமை.

    கதை மிக நன்றாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள் ரஞ்சனி.

    ஸ்ரீராமுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அற்புதம் ரஞ்சனி மேடம்
    பாட்டியின் உரையாடல் வழியே இராமாயணக்கதையை முன்னுதாரணமாக சொல்லி நிகழ்கால வாழ்க்கையை சொன்னது மிகவும் அருமை. - கில்லர்ஜி

    இந்தக்கூட்டத்தில் நானெல்லாம் கதை சோன்னால் சீதையை, சீடையாக்கியதுபோல் ஆகிடுமோ... ?

    பதிலளிநீக்கு
  5. இதுவரை வந்த 'சீதை மன்னித்தாள்' கதைகளிலேயே மாஸ்டர்பீஸ் இதுதான்! என்ன இருந்தாலும் அனுபவமிக்க எழுத்தாளர்களை ஜெயிக்கமுடியுமா? (ஒரு வேளை, என்னையும் இந்தப் போட்டிக்கு அழைத்து விடுவாரோ ஸ்ரீராம்? இப்போதே நடுக்கம் உண்டாகிறது.)

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  6. காலத்துக்கேற்ற பாட்டியும் பேத்தியும்.
    அருமையான கருவை
    அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
    இந்த வழிகாட்டுதல் எப்போதும் தேவை .ரஞ்சனி Great Job.

    பதிலளிநீக்கு
  7. >>> எல்லா சீதைகளும் எல்லா ராமன்களையும் மன்னிக்கறதாலேதான் இந்த உலகமே சுழன்றுண்டு இருக்கு. இதிலே எந்த சீதை எந்த ராமனை மன்னித்தாள் என்று எந்தக் கதையை எழுதறது?..<<<

    நிதர்சனம்..

    இப்படிப்பட்ட பாட்டிகளின் அறிவுரைகள் இருக்கும் வரைக்கும்
    எந்தப் பேத்தியின் வாழ்விலும் துயர் நேர்வதற்கில்லை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  8. ஹை இந்த கதை என்கிட்ட இருக்கே

    பதிலளிநீக்கு
  9. ஒரு பாட்டியோடு பேசிய பீலிங்ஸ் வருகிறது, மிக அருமையாக மனதுக்கு இதமாக இருக்கிறது கதை. அப்போ இந்தக் கதையில் வரும் சீதைக்கு, ராமனை மன்னிக்கும்படியான சந்தர்ப்பத்தை, ராமன் கொடுக்க இல்லைப்போல... தவறேதும் செய்திருந்தால்தானே மன்னிக்க முடியும்... :).
    வாழ்த்துக்கள், சுவாரஸ்யமாகப் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  10. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. வித்தியாசமாகவும் இருந்தது. அனுபவம் பேசுகிறது, அதனால் கதையின் தரமும் ரொம்ப நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  11. நீட்டி முழக்காமல், கச்சிதமாக ஆரம்பித்து முடித்திருக்கிறீர்கள். அதுவும் ஒரு திறமைதான்.

    பதிலளிநீக்கு
  12. கதை அருமை. இந்தக்காலத்தில் பாட்டியின் அறிவுரைகேட்டு பேத்தி சீதையாக மாறுவாள் என்பது வரவேற்கத் தக்கது. வக்கீலும்,குடும்பநலக்கோர்ட்டும்,நீதிபதியும்தான் முக்கால்வாசி நன்கு படித்த பெண்களின் நாடலாக உள்ளது.பாட்டியின் உதாரணம் இரண்டொரு வரிகளிலேயே அடங்கி விடுகிறது. ஸ்ரீராமனைக் குறை கூறியே பழக்கமில்லாத சீதைகளைத்தான் நாம் உருவகப் படுத்தி இருந்தோம். இப்போது மன்னிக்கும் சீதைகளையும் நாம் பார்க்கிறோம். யதார்த்தத்திற்கு வேண்டிய கதைக்கரு. சும்மா எழுத நீங்கள் ஆரம்பித்தவுடன் அது தானாக அமைந்து விட்டது என்று தோன்றியது. இன்னும் நிறைய எழுதலாம். பாராட்டோடு முடித்து விடுகிறேன். ஸ்ரீராம் அவர்களுக்கும் நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  13. இந்தப் பேத்தி சீதை கதை ஏற்கனவே கைவசம் இருக்கவே 'அந்த' சீதையோடு இந்த சீதையை முடிச்சுப்போட செளகரியமாக போயிற்று போலும்.

    ஆண்கள் சிந்திப்பது வேறு; பெண்கள் சிந்திப்பது வேறு ஆயினும் ஆண்களில் பெண்களின் சிந்தனையும், பெண்களில் ஆண்களின் சிந்தனையும் அபூர்வமாகக் கூடி வரும் பொழுது அது குடும்ப உறவுகளில் அற்புதமான இசைவாகிப் போகிறது.

    முணுக்கென்று கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு வந்து விட்டால்-- ஆரத்தி எடுக்காத குறையாக மகளை வரவேற்று விரிசல்களை அகலப்படுத்தும் அம்மாக்களும் இருக்கிறார்கள். காதல் திருமணங்கள் பொய்க்கும் பொழுது அம்மாக்களின் அனுசரணை ஆதரவானத் தேவையாக இருக்கிறது. பார்த்து, பேசி, பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் தகுந்த தேவையான புத்திமதிகளை கண்டிப்புடன்
    மகளுக்குச் சொல்லி பிறந்த வீட்டில் சாசுவதமாக தங்கி விடாமல், புகுந்த வீட்டில் வாழ வைக்கும் தாய்களின் தேவை இக்காலத்தில் நாள் தோறும் பெருகி வருகிறது.

    சீதையும் ராமனும் சேர்ந்தே நினைவில் மறைந்து போய் பாட்டி பிரமாண்டமாக மனசில் நிற்கிறார்.

    கடைசி வரி மட்டும் 'நீ என்ன தவறு செய்தாய் என்று முதலில் யோசி. பிறகு அவனைக் குற்றம் சொல்லலாம்' என்ற பாட்டியின் வழிகாட்டலில் கதைக்கு ஒட்டாமல் துண்டாக இருப்பது போல உணர்வு./

    இன்றைய காலகட்டத்திற்கு ஏற்பவான அற்புதமான கதையைப் படைத்தமைக்கு வாழ்த்துக்கள், சகோதரி!





    பதிலளிநீக்கு
  14. கதையில் வரும் பாட்டி கதாபாத்திரம் மனதில் நிற்பதாக உள்ளது. கதாசிரியருக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  15. சீதை மன்னித்து விட்டதாய் சொல்லிக் கொள்ளலாம் ,அங்கே போனால் ராமன் தீக்குளிக்கக் சொல்றானே :)

    பதிலளிநீக்கு
  16. அருமையான பேச்சுவழக்கில்கதைமகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  17. கதை வழ வழ என்று இல்லாமல் மிகவும் ஷார்ப்பாக அதே நேரத்தில் நல்ல கருத்தை மிக எளிமையாக சொல்லி சென்ற விதம் அருமை....எழுத்தில் மட்டும்மல்ல வாழ்க்கையிலும் அனுபவமிக்க ரஞ்சினி அம்மாவின் எழுத்து இங்கு பிரகாசக்கிறது...

    பதிலளிநீக்கு
  18. இங்கு பதியப்பட்ட ரஞ்சினி அம்மாவின் போட்டோவை எப்போதெல்லாம் நான் பார்க்கும் போது ம்றைந்த என் தாயாரின் நினைவுக்கு வருகிறது. ஏனென்று காரணம் சொல்ல தெரியவில்லை.....ரஞ்சினி அம்மா பல்லாண்டு வாழ்க என்ரு வாழ்த்தி பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  19. //பீச்சுல, பார்க்குல ஒண்ணா கைகோர்த்து நடக்கறது மட்டுமில்ல. வாழ்க்கையிலேயும் ஒண்ணா நடக்கக் கத்துக்கணும்//
    அட்டகாசமான மிகவும் உண்மையான வரிகள் ரஞ்சினிம்மா ....
    ரஞ்சனிம்மா எழுத்துக்களில் கதாபாத்திரங்களின்உணர்வுகள் அப்படியே வெளிப்படும் ..இதில் பாட்டி அழகா உரையாடுவது போலவே பேத்திக்கு அறிவுரை வழங்கிவிட்டார் ..

    பதிலளிநீக்கு
  20. இப்போல்லாம் பல விவாகரத்துகள் காதலித்து மணம் புரிந்தவர் இடையில் தான் நடைபெறுகிறது ..இந்த பாட்டி போன்றோர் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்

    பதிலளிநீக்கு
  21. அன்புள்ள ஸ்ரீராம்,
    கதையை வெளியிட்டதற்கு முதலில் நன்றி. நான் முதல் சிலவரிகளை மாற்றி எழுதி அனுப்பினேன். ஏனென்றால் நீங்கள் கொடுத்தது தலைப்பு இல்லை. முடிவு வரிகள் என்று சொன்னீர்கள். ஆனால் நான் முதலில் எழுதி அனுப்பியதையே வெளியிட்டு விட்டீர்கள்.

    உண்மையில் இத்தனை பாராட்டுக்கள் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அதுவும் கீதாவின் பாராட்டுக்கள் ரொம்பவும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. @ கீதா - நிச்சயம் உங்களால் இதை விட நன்றாக எழுத முடியும். எப்போதும் போல அடக்கி வாசிக்கிறீர்கள்.

    பாராட்டிற்கு நன்றி, கோமதி.

    @கில்லர்ஜி - ஒவ்வொருவரின் பார்வையும் ஒவ்வொரு மாதிரி. நிச்சயம் நீங்களும் எழுதலாம். பாராட்டிற்கு நன்றி.

    @இராய செல்லப்பா - நீங்களும் அனுபவம் மிக்கவர் தான் ஐயா. நிச்சயம் ஸ்ரீராம் உங்களையும் கேட்பார். அதற்கு முன் நீங்களாகவே எழுதி அனுப்பிவிடுங்களேன். பாராட்டிற்கு நன்றி.

    @கரந்தை ஜெயக்குமார் - பாராட்டிற்கு நன்றி.




    பதிலளிநீக்கு
  22. @வல்லி
    கீதாவின் பாராட்டுக்களைப் போலவே உங்கள் பாராட்டுக்களும் இன்றைய தினத்தை நிறைவு செய்து விட்டன. இருவருமாக எனது இன்றைய நாளை அழகாக மாற்றிவிட்டீர்கள். பாராட்டுக்களுக்கு நன்றி.

    @துரை செல்வராஜூ - பாராட்டுக்களுக்கு நன்றி.

    Great minds think alike என்பார்கள். நாமிருவரும் ஒரே மாதிரி சிந்தித்திருக்கிறோம், போலிருக்கிறது, ராஜி.

    @நாகேந்திர பாரதி - பாராட்டுக்களுக்கு நன்றி.

    @அதிரா - நானும் ஒரு பாட்டிதான். அதனால் கதை இப்படி அமைந்துவிட்டது போலிருக்கிறது. பாராட்டுக்களுக்கு நன்றி.

    @நெல்லைத் தமிழன் - உண்மையில் அனுபவத்தைத் தான் எழுதியிருக்கிறேன். பாராட்டுக்களுக்கு நன்றி.

    @ஏகாந்தன் - உங்களை இங்கே சந்திப்பதில் மகிழ்ச்சி. பாராட்டிற்கு நன்றி.

    @காமாஷிமா -// சும்மா எழுத நீங்கள் ஆரம்பித்தவுடன் அது தானாக அமைந்து விட்டது என்று தோன்றியது.// நீங்கள் சொல்லியிருப்பது நூறு சதவிகிதம் உண்மை. நான் கேள்விப்பட்ட ஒரு விஷயம் மனதை மிகவும் வருத்தப்பட வைத்தது. ஸ்ரீராம் எழுதுங்கள் என்றவுடன் கொட்டிவிட்டேன் என்றே சொல்ல வேண்டும். ஒரே தடவையில் எழுதி முடித்த கதை இது. பாராட்டிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. அருமை அருமை.....ரஞ்சனி அக்கா....
    என்னால் எல்லாம் இப்படி எழுத முடியுமா தெரியவில்லை....பாட்டியின் வழி.... நீங்களும் பாட்டியாகிவிட்டீர்களே... உங்கள் எழுத்தனுபவம் பேசுகிறது...உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ள இருக்கிறது...மொபைலின் வழி கருத்திடுவதால் விரிவாகக் கருத்திட முடியவில்லை. வாழ்த்துகள்...

    கீதா

    பதிலளிநீக்கு
  24. திரு ஜீவி அவர்களுக்கு நாளை விரிவாக பதில் எழுதுகிறேன். இப்போதைக்கு விடை பெறுகிறேன். பாராட்டிய அத்தனை பேர்களுக்கும் நன்றி. நாளை தனித்தனியாக நன்றியை தெரிவிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  25. ஆஹா!ராமனை சீதை மன்னிக்கும் கதையை இப்படிக் கூட எழுத முடியுமா என்று வியப்பை ஏறபடுத்தி விட்டார் ரஞ்சனி மேடம்.

    பதிலளிநீக்கு
  26. //‘எல்லா சீதைகளும் எல்லா ராமன்களையும் மன்னிக்கறதாலேதான் இந்த உலகமே சுழன்றுண்டு இருக்கு. ...//

    ரொம்பச் சரி!

    பதிலளிநீக்கு
  27. இன்னும் எத்தன சீதைகள் ராமன்களை மன்னிக்கப் போகிறார்களோ

    பதிலளிநீக்கு
  28. நல்ல கதை...
    அன்றே வாசித்தேன்...
    அருமை.

    பதிலளிநீக்கு
  29. முதலில் திரு ஜீவியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன் - அடுத்த நாள் வருவதாகச் சொல்லிவிட்டு நான்கு நாட்கள் கழித்து வருவதற்கு. சம்சார சாகரத்தில் அவ்வப்போது அடிக்கும் சுனாமிகளை சமாளிக்க வேண்டியிருக்கிறது.

    பாராட்டுக்களுக்கு நன்றி. சமீபத்தில் இதைப் போல வாழ்க்கையை தொலைத்துவிட்டு அம்மா வீட்டிற்கு வந்திருக்கும் ஒரு பெண்ணைப் பார்த்தேன். மனதில் ஏற்பட்ட ஆதங்கத்திற்கு எல்லையே இல்லை. அதே சமயத்தில் 'பளாரென்று' அறைந்து ஒழுங்காக வாழக் கற்றுக் கொள் என்று சொல்லவேண்டும் போலவும் இருந்தது. இரண்டையும் சேர்த்துத்தான் இந்தக் கதை. தான் மிகுந்த அழகி என்ற தலைகனத்தில் அந்தப் பெண் ஆடும் ஆட்டத்திற்கு அம்மா அப்பா இரண்டு பேரும் ஆடுகிறார்கள், என்ன சொல்ல? எத்தனை நாட்கள் அம்மாவும் அப்பாவும் காப்பாற்றப் போகிறார்கள்? // 'நீ என்ன தவறு செய்தாய் என்று முதலில் யோசி. பிறகு அவனைக் குற்றம் சொல்லலாம்' // இந்த வார்த்தைகள் நான் அந்தப் பெண்ணிற்குச் சொல்ல நினைத்த வார்த்தைகள். அப்படியே எழுதிவிட்டேன்.

    இந்தக் காலத்திய அம்மா அப்பாக்களின் பொறுப்பு மிக அதிகம். பெண்ணைப் பெற்று படிக்க வைத்து அவர்களுக்கு நல்ல வழி காட்டாமல் அளவுக்கு மீறி சுதந்திரம் என்ற பெயரில் அவர்களுக்குள் ஒரு ஆணவத்தை விதைத்து விடுகிறார்கள். பிற்காலத்தில் அதன் பலனை அனுபவிக்கப் போகிறவர்களும் அவர்கள்தான் என்பதை விஷயம் கைமீறிய பிறகுதான் உணருகிறார்கள்.

    கதையை பூரணமாகப் படித்து விமரிசனம் எழுதுவது கூட ஒரு கலைதான். அதை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள். இந்தப் பாட்டி பாத்திரம் என் பாட்டி, என் அம்மா இவர்களின் கலவை.

    உங்களது வாழ்த்துக்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    பதிலளிநீக்கு
  30. நான் ஏற்கனவே கதையில் குறிப்பிட்ட படி ராமாயணத்தை விமரிசிக்க நமக்கு (என்னையும் சேர்த்து) தகுதியில்லை.நன்றி பகவான்ஜி.

    பதிலளிநீக்கு
  31. நன்றி அசோகன் குப்புசாமி.

    பதிலளிநீக்கு
  32. கதையைப் படித்துப் பாராட்டியதற்கும் உங்கள் வாழ்த்துக்களுக்கும் (பல்லாண்டு வேண்டாம், ப்ளீஸ்!) நன்றி மதுரைத் தமிழன்.

    பதிலளிநீக்கு
  33. பாராட்டுக்களுக்கு நன்றி ஏஞ்சலின்.

    பதிலளிநீக்கு
  34. பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி, கீதா (துளசிதரன் தில்லையகத்து)

    பதிலளிநீக்கு
  35. பாராட்டுக்களுக்கு நன்றி முரளிதரன்.

    பதிலளிநீக்கு
  36. கருத்துக்களுக்கு நன்றி, GMB சார்

    பதிலளிநீக்கு
  37. தங்களின் என் பின்னூட்டத்திற்கான பதிலைப் படித்தேன். இந்த விஷயத்தை ஆழ்ந்து பார்த்து அலசிய தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  38. எல்லோருக்கும் நன்றி சொல்லி விட்டேன் என்று நினைத்தேன். ஆனால் நெல்லைத் தமிழனை மிஸ் பண்ணிவிட்டேன். வரிசையாச் சொல்லிக் கொண்டு போனவள் அவரை எப்படித் தவறவிட்டேன்? வயதாகி விட்டதோ?
    இப்போது சொல்லிவிடுகிறேன்: நன்றி, நெல்லைத் தமிழன். மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  39. ஒரு சிறு விளக்கம் அளிக்க வேண்டும். ஸ்ரீராமிற்கு இந்தக் கதையை அனுப்பியவுடன் 'இது தலைப்பு இல்லை. கதையின் முடிவு இந்த வரிகளுடன் அமைய வேண்டும்' என்றார். சரி என்று முதல் சிலவரிகளைத் திருத்தி எழுதி அனுப்பினேன் இப்படி:

    ‘சீதை ராமனை மன்னித்தாள்’

    ‘இதுதான் கதையின் தலைப்பா?’ பாட்டி தொலைக்காட்சியிலிருந்து கண்களைத் திருப்பாமலேயே கேட்டாள்.

    ‘இல்லையில்லை. கதையின் கடைசி வரி இப்படி இருக்க வேண்டுமாம். ‘சீதை ராமனை மன்னித்தாள்’ என்று.
    ‘யார் கதை எழுதச் சொல்லியிருக்கா?’
    ‘எங்கள் ப்ளாக்’ ஸ்ரீராம் தான்!
    ‘ஓ! கேட்டு வாங்கிப் போட்ட கதையெல்லாம் முடிஞ்சு போச்சா? இப்போ கடைசி வரி கொடுத்து எழுதச் சொல்றாரா?’
    ‘இது அவரோட அப்பா சொன்னதாம். உறவுகளுக்கு இடையில் போட்டி வைக்க ‘சீதை ராமனை மன்னித்தாள்’ என்று கடைசி வரி அமையும்படி எழுதச் சொன்னாராம். ஸ்ரீராம் சொல்லாமலேயே விட்டுட்டார். இப்போ சக வலைப்பதிவாளர்களுக்குச் சொல்லி எழுதச் சொல்லியிருக்கிறார்....’
    ‘...........’
    ‘என்ன பாட்டி! பதிலே இல்ல. நீ ஏதானும் எழுதலாம்னு யோசிக்கிறயா?’

    ஆனால் அவர் நான் முதலில் எழுதி அனுப்பியதையே போட்டுவிட்டார்.
    எல்லோருக்கும் தனது தளத்தில் எழுத வாய்ப்புக் கொடுக்கும் அவரை இதற்காகக் கோபிக்க வேண்டாம். நல்ல தம்பி அவர். மன்னிப்போம், மறப்போம்.

    பதிலளிநீக்கு
  40. 'மர்க்கடேச' என்றால் என்ன என்று ஸ்ரீராம் கேட்டிருந்தார். குரங்கு என்று பொருள். நாய்கள் எல்லாவற்றையும் முகர்ந்து பார்க்குமாம். அதைப்போல குரங்குகள் எதைக் கொடுத்தாலும் கடித்துப் பார்க்கும். சீதை கொடுத்த மாலையை வாங்கிய அனுமனும் தனது இனத்தின் பழக்க தோஷத்தால் கடித்துப் பார்க்க சீதை அவனை 'மர்க்கடேச' (குரங்கே!) என்று அழைக்கிறாள். அனுமனுக்கு மிகுந்த சந்தோஷம் சீதை அப்படி அழைப்பதைக் கேட்டு.

    நாங்கள் தினமும் சொல்லும் ஒரு ஸ்லோகத்தில் இது வருகிறது.

    அஸாத்ய சாதக ஸ்வாமின், அஸாத்யம் தவ கிம் வத? மர்க்கடேச மஹோத்ஸாக சர்வ சோக விநாசக மத் கார்யம் ஸாதயப் ப்ரபோ!
    ‘சாத்தியமில்லாதவற்றை சாதிப்பவரே! அஸாத்யத்தை எப்படி செய்து முடிக்கிறீர்? மர்க்கடேச என்று சொன்னபோது வெகுவாக சந்தோஷப் பட்டவரே! அத்தனை சோகங்களையும் நாசம் செய்பவரே, என் காரியத்தையும் சாதித்துக் கொடுக்க வேணும்’

    இதையும் இங்கு எழுத விரும்புகிறேன்.

    இத்தனை பாராட்டுக்கள் வரும் என்று நினைக்கவில்லை. மறுபடியும் ஸ்ரீராமுக்கும், படித்துப் பாராட்டியவர்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  41. காலத்திற்கு அவசியமான கருத்தை முன் வைத்திருக்கும் கதை. /இந்த சீதையும் தன் ராமனை மன்னிப்பாள் என்று நம்புவோம்!/ நம்புவோம்.

    //எல்லா சீதைகளும் எல்லா ராமன்களையும் மன்னிக்கறதாலேதான் இந்த உலகமே சுழன்றுண்டு இருக்கு. // உண்மை. இந்தக் கதையின் ராமன் பெரிய தவறேதும் செய்து விடவில்லை. பெரும் துயர் அனுபவித்த சீதைகள் மனதார மன்னித்தார்களா என்பது நமக்குத் தெரியாது. ஆனாலும் பெருந்தன்மையுடன் மறந்து விட்டுக் கொடுத்து வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள். அதனாலே உலகம் சுழன்று கொண்டிருக்கிறது.

    வாழ்த்துகள் ரஞ்சனிம்மா. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  42. உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி, ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  43. கருத்துப் பகிர்வுக்கு நன்றி
    Tamil News

    பதிலளிநீக்கு
  44. சீதை ராமனை நையப் புடைத்தாள்னு ஒரு பேச்சுக்குக் கூட சொல்ல மாட்டோம். விடுங்க.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!