திங்கள், 6 ஆகஸ்ட், 2018

"திங்க"க்கிழமை 180806 : கேரட் அல்வா - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
என் பையனுக்குப் பிடித்த ஸ்வீட் இது.  நான் செய்யும் முறை பையனுக்கும் பெண்ணுக்கும் பிடிக்காது. அதுல இனிப்பு அதிகம்.  நான் ஒரு தடவை கேரட்டும் பீட்ரூட்டும் சேர்த்து அல்வா செய்து அவங்களுக்குக் கொண்டு சென்றிருந்தேன். அப்போ ‘ஓகே’ என்று சொல்லியிருந்தார்கள். திங்கக் கிழமை பதிவிலும் அது வந்தது. (http://engalblog.blogspot.com/2017/04/blog-post_10.html) ஆனா, இந்தத் தடவைதான் தெரிந்தது, அது என் முயற்சிக்காக அவங்க சொன்ன ‘ஓகே’ என்பது. இந்தத் தடவை அவங்க, ‘அம்மா பண்ணறதுதான் பிடிக்கும் அதுதான் வேணும்’னு சொல்லிட்டாங்க.

அந்த ஊர்ல, உத்திரப்பிரதேசக் காரங்களுடைய ஸ்வீட் ஸ்டாலில் இருக்கும் கேரட் அல்வா, வேற மெத்தட். அவங்க கோவா அதிகம் சேர்ப்பாங்க. பால் சேர்க்கிறாங்களா என்பது சந்தேகம்தான். எனக்கு அது ரொம்பப் பிடிக்காது. சென்னைல, தேவி தியேட்டர் அருகில், பாம்பே லஸ்ஸி கடையில் கேரட் அல்வா ரொம்ப அருமையா இருந்தது. அந்தக் கடைல எல்லாமே ரொம்பப் பிடித்திருந்தது.  

மனைவி கேரட் அல்வா செய்தபோது நான் படங்கள் எடுத்துவைத்துக்கொண்டேன், எங்கள்  பிளாக்குக்கு தி.பதிவாக அனுப்பலாம் என்று.  இந்த வாரம், அந்த கேரட் அல்வா. 

தேவையான பொருட்கள்
6 கேரட், 1 லிட்டர் பால், 150 கிராம் ஜீனி, 5 ஸ்பூன் நெய், 4 ஏலக்காய் பொடி செய்தது, 10-12 முந்திரிப்பருப்பு.  தேவைனா உடைத்த பாதாமும் உபயோகிக்கலாம்.

செய்முறை

முந்திரிப் பருப்பை உடைத்து நெய்யில் வறுத்துக்கோங்க.
முதல்ல கேரட்டை தோல் எடுத்துட்டு நல்லா சீவிக்கவும்.
நல்ல கடாயில் (நாங்கள் குக்கர் உபயோகித்தோம்) கேரட்டையும், பாலையும் விட்டு நன்கு வேகவைக்கவும். பால் என்பதால் பொங்கும். அதனால் அவ்வப்போது கிளறவேண்டும். கேரட் நன்றாக வேகுவதற்கு நேரமாகும்.
கேரட் நல்லா பால்ல வெந்தபிறகு, பாலின் அளவும் மிகவும் குறைந்திருக்கும்.
இப்போ ஜீனியைச் சேர்த்து நன்கு கிளறவும். இந்தச் சமயத்தில் நெய்யையும் சேர்க்கவும்.
பால் வற்றி, கோவா, கேரட் சேர்ந்த கலவையைப்போல் வரும். கடாயில் ஓரளவு திரளுவதுபோல் அல்வா வரும்.
இப்போ ஏலக்காய் பவுடரைச் சேர்த்துக் கிளரவும்.
பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, வறுத்த முந்திரியையும் (பாதாம் இருந்தால் அதையும்) சேர்க்கவும்.
ஒரு பாத்திரத்தில் கேரட் அல்வாவை எடுத்துவைக்கவேண்டியதுதான்.

என் வீட்டில், பசங்க, ‘ரொம்ப நல்லா இருக்கு’ன்னு சொல்லிக்கிட்டே சாப்பிட்டாங்க. எனக்கு, இனிப்பு குறைவாக இருப்பதுபோல் தோன்றியது. (நான் செய்வதுபோல் இல்லை என்று சொல்லி மனைவியின் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஐச் சம்பாதித்துக்கொண்டது இந்த இடுகைக்குத் தேவையில்லாத விஷயம்)

இதில் சர்க்கரை சேர்க்காத கோவாவையும் பொடித்து கடைசி நேரத்தில் சேர்த்துக் கிளறலாம். நெய்யும் இன்னும்கூடச் சேர்க்கலாம்.

நீங்களும் செய்துபார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.


அன்புடன்

நெல்லைத்தமிழன்

88 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம் , கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

   நீக்கு
  2. இப்போ சில நாட்கள் பெங்களூரில் இருப்பதால் காலையிலேயே இணையம் பார்க்க முடிகிறது. இல்லைனா, யோகா, நடை, குளியல், சுதர்சன் கிரியா என்று நான் ரொம்ப பிஸியாயிடுவேன். அதுக்கு ஏத்தமாதிரி 6 மணிக்குத்தான் எங்கள் பிளாக் 'பூங்கதவைத் தாள் திறப்பதால்', காலை 10 மணிக்கு முன்னால் பார்ப்பது அபூர்வம்.

   வாங்க துரை செல்வராஜு சார். காலை வணக்கம்.

   நீக்கு
 2. இன்றைய பந்தி உபசரிப்பு நெல்லை அவங்களோடது....ன்னு ஊர்க்குருவி முன்பே சொன்னது....

  பதிலளிநீக்கு
 3. மஞ்சள் வெயில் மாலையில்
  வண்ணப் பூங்காவிலே...

  ஆஹா.... காரட் அல்வா சுவைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்...

  அருமை.. அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் எனக்கு அல்வாவே பிடிக்காது! அப்படி இருக்க, இந்த கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா எல்லாம்...

   ஹா... ஹா... ஹா.. நெல்லை என்னை மன்னிக்கட்டும்!

   நீக்கு
  2. ஸ்ரீராம் - அல்வா பிடிக்காத மதுரைக் காரரா? அதுக்காக 'பசித்த புலி தின்னட்டும்' என்று சுஜாதா மாதிரி சொல்லிவிட மாட்டேன். நீங்க மதுரைல முந்திரி அல்வா அட்டஹாசமா இருக்கும்னு எழுதியிருந்தீங்களே. அதைப்பற்றிக் கேட்டபோதும் பதில் சொல்லலையே.

   நீக்கு
  3. துரை செல்வராஜு சார்... எனக்கு இப்படியான பொழுதுகளில் (மஞ்சள் வெயில், மாலைப் பொழுது, பூங்கா), எதைச் சாப்பிடும்போதும், தனிமையில் ரசித்துச் சாப்பிடுவதுதான் பிடிக்கும். பேசிக்கொண்டே என்னால் நல்ல ருசியான உணவுகளை ருசித்துச் சாப்பிடமுடியாது. எனக்குப் பிடித்த உணவுகளைத் தட்டில் போட்டுக்கொண்டால், அதில்தான் என் கவனம் இருக்கும். நீங்கள் எப்படியோ....

   நீக்கு
  4. நானும் அப்படியே...

   அதற்காகத்தான் அந்த பழைய பாட்டு...

   இருந்தாலும் மனையாளோடும் மக்களோடும் உண்பது தனி மகிழ்ச்சி.

   நீக்கு
 4. என்னப்பா.. இது!...
  ஒருத்தரையும் காணோம்!?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை செல்வராஜு சார்.. நேற்று காலையில் நான், 'காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி' என்று பார்த்துக்கொண்டிருந்தேன். ஏன் தாமதம் நேற்று? யாருமே ரொம்ப நேரம் வரவில்லை, ஸ்ரீராம் உள்பட.

   நீக்கு
  2. நேற்றைய என் தாமதத்துக்கு காரணம் மின்துறை! கடந்த இரண்டரை நாட்களில் கொடுமையான அனுபவம்...

   நீக்கு
  3. சனிக்கிழமை இரவு Net work நின்று போனது...

   இரவும் பகலும் வேலையானதால்
   ஞாயிறு மாலைதான் மறுபடியும் இணைப்பு...

   அதனால் தான் தாமதம்..

   நீக்கு
 5. ஹலோ...
  இன்னிக்கு திங்கக்கிழமை...
  மறந்துட்டீங்களா?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திங்கக்கிழமை... திங்கக்கிழமை... திங்க கிழமை... திங்கிற கிழமை கூட மறக்குமா...

   என்ன கொடுமை!!

   நீக்கு
  2. ஸ்ரீராம் - இப்போல்லாம் உங்கள் கருத்தை இடுகையில் எழுதறதில்லை. 'சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்' என்பதாகத்தான் நீங்க 'இனிப்பு பிடிக்காது' என்று சொல்றீங்களோ? இதோ... தீபாவளி நெருங்குகிறது....

   நீக்கு
 6. பதில்கள்
  1. கீதா அக்கா அவங்களோட திங்கற பதிவுல (சாப்பிட வாங்க) இருக்காங்க.. இதோ வருவாங்க...

   கீதா ரெங்கன் சில முக்கிய வேலைகள் காரணமாக இணையம் வர இன்னும் சில நாட்களாகலாம் என்று சொன்னார்கள். சீக்கிரம் வாங்க கீதா ரெங்கன்!

   நீக்கு
  2. தில்லையகத்து கீதா ரங்கன் இவ்வளவு நாளாக இணையத்தில் காணோம். என்ன இப்படித் 'தனித்து' இருக்காங்க. சீக்கிரம் வரும்படி ஸ்ரீராம் கூடச் சொல்லலை போலிருக்கு

   நீக்கு
 7. காலை வணக்கம்.

  ஆஹா இன்னிக்கு காஜர் ஹல்வாவா இங்கே....

  நம்ம ஊர் கேரட்களில் இனிப்பு சுவை கிடையாது. மண்ணாந்தை மாதிரி இருக்கும். இங்கே இருக்கும் கேரட் தான் கேரட் ஹல்வாவிற்கு ஏற்றது. கேரட்டிலேயே கொஞ்சம் சுவை அதிகமாக இருப்பதால் ஹல்வா செய்யும்போது இன்னும் நன்றாக இருக்கும்.

  எங்கள் வீட்டு Gகாஜர் ஹல்வா இங்கே....

  http://kovai2delhi.blogspot.com/2011/12/g.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே, அதே , நானும் சொல்லி இருக்கேன். :)

   நீக்கு
  2. அடடே... கீதாக்கா சொல்லி இருப்பதையே அப்படியே சொல்லி இருக்கீங்க வெங்கட்...!

   நீக்கு
  3. காலை வணக்கம்! (பதில் வணக்கம் சொல்ல மறந்துட்டேன்!)

   நீக்கு
  4. வாங்க வெங்கட்.. வட நாட்டில், நெல்லையில் அல்வா கொடுப்பதுபோல், காஜர் அல்வா சுடச் சுட தொன்னையில் கொடுப்பார்களா? கேட்கவே நல்லா இருக்கு.

   நீங்க சொல்கிற கேரட்டை, நாங்கள் பாகிஸ்தானி கேரட் என்போம். அது ஒரு கலரில் கொஞ்சம் அழகில்லாமல் நீளமாக இருக்கும். ஆஸ்திரேலியா கேரட்தான் தொழிற்சாலையில் செய்ததுபோல் ஒரே அளவில் பள பளவென்று ஷேவ் செய்ததுபோல் பளிச்சுனு இருக்கும். இதை அப்படியே காப்பி அடித்து சீனாவிலிருந்தும் கேரட் மலிவாக வரும். இருந்தாலும் பலர் இந்த பாகிஸ்தானி கேரட்டில்தான் கேரட் அல்வா செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கின்றனர்.

   நீக்கு
 8. வழக்கம் போல் "திங்க"ற கிழமை தானே, நெ.த. தான் போட்டிருப்பார், மெதுவாப் போகலாம்னு வந்தேன். அதே போல் நெ.த. தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா சாம்பசிவம் மேடம்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். ஒருவேளை காவேரி வெள்ளம்போல் பாய்ந்து வந்தபிறகு, உங்களுக்கு 'சோம்பேறித்தனம்' ஜாஸ்தியாயிடுத்தோ? ஹா ஹா. நல்லவேளை 'மெதுவடை' எழுதலை. எழுதியிருந்தா இன்னும் மெதுவாக வருவீங்க போலிருக்கு.

   நீக்கு
  2. காலம்பர சீக்கிரம் வரதுக்கு இப்போல்லாம் போட்டி இருக்கிறதில்லை. அதோடு நான் எழுந்ததும் வீட்டு வேலைகள் அடுத்தடுத்து இருந்தால் அதைக் கவனிச்சுட்டுத் தான் வருவேன். சில சமயம் கணினியைத் திறக்கவே ஒன்பது மணி கூட ஆயிடும். நேத்திக்கு ச்ராத்தம் என்பதால் மாலை நான்கு மணி போல் தான் வந்தேன்.

   நீக்கு
  3. நேற்று ச்ராத்தம் என்பது மறந்துவிட்டது. நிறைய வேலைகள் இருந்திருக்கும். தப்பா எடுத்துக்காதீங்க

   நீக்கு
 9. பீட்ரூட் நம்ம ரங்க்ஸுக்குப் பிடிக்காததால், (அவர் கல்யாணம் ஆகியும் பிரமசாரியாய் இருந்த நாட்களில் ஓட்டல்களில் அதைப் போட்டே சாப்பிட வைச்சிருக்காங்க, நமக்கெல்லாம் அந்தத் திறமை இல்லை!) வாங்கவே மாட்டார். எனினும் ஒரு சில பீட்ரூட் சமையல்களும் போட்டிருக்கேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதுரை ஹேப்பிமேன் முந்திரி அல்வா, மதுரை ப்ரேமவிலாஸ் சூடான ஹல்வா கொஞ்சம் சாப்பிடுவேன். ப்ரேமவிலாஸ் அல்வா சூடாகக் கொடுப்பார்கள். அதன்மேல் காராபூந்தி தூவித் தருவார்கள். மதுரை ரயில்வே ஸ்டேஷன் எதிரே கடை... சென்றவார ஏதோ பத்திரிகையில் கூட இது பற்றி வந்திருந்தது.

   நீக்கு
  2. ஸ்ரீராம் - எனக்கும் திருநெல்வேலியில் கிடைக்கும் அல்வாவைப் பற்றியும் எங்கே வாங்கிச் சாப்பிடலாம் என்பது பற்றியும் எழுத ஆசை. ஞாயிறுக்காக எழுதி அனுப்புகிறேன். சப்ஸ்டன்ஸ் இருந்தால் வெளியிடுங்க. 'மதுரை ஹேப்பிமேன் முந்திரி அல்வா' எங்க என்று இப்போ தேடணும்.

   இங்க வந்தபிறகு, 'தில்பசந்த்', 'தில்குஷ்', 'தாவண்கெரே பெண்ணே-வெண்ணெய்-வேறு ஏதோ நினைத்துக்கொள்ளப் போகிறீர்கள்- தோசை' சாப்பிடுவதில் பிஸி.

   நீக்கு
  3. கீதா சாம்பசிவம் மேடம் வாங்க.

   //அவர் கல்யாணம் ஆகியும் பிரமசாரியாய் இருந்த நாட்களில் ஓட்டல்களில் அதைப் போட்டே சாப்பிட வைச்சிருக்காங்க, நமக்கெல்லாம் அந்தத் திறமை இல்லை//

   இந்த வாக்கியமே தவறான பொருளைத் தருதே. நான் புரிந்துகொண்டது, 'ஹோட்டல்களில் கேரட் அல்வா அடிக்கடி அவர் சாப்பிட்டதால், நான் பண்ணிய அல்வா சுத்தமாக அவருக்குப் பிடிக்கலை. ஹோட்டல் அளவு நன்றாகச் செய்யும் திறமை எனக்கு இல்லை' என்று நீங்கள் சொல்லுவதாக எனக்கு அர்த்தமாகியது. என்மேல் 'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என்று கோபப்படுவதற்கு முன்னால், வாக்கியத்தை மாற்றிவிடுங்கள். ஹா ஹா.

   நீக்கு
  4. நான் ஊரில் இல்லாத சமயங்களில்! அவரே சமைச்சுச் சாப்பிடும் கொடுமைக்கு ஓட்டல் பரவாயில்லை போனால் அங்கே தினமும் விதவிதமா பீட்ரூட் சமைச்சுப் போட்டிருக்காங்க! :))))))

   நீக்கு
  5. கீசா மேடம்.. சமையல் சுலபம். மிஞ்சினதை கிளியர் செய்வது, பாத்திரம் சுத்தப்படுத்துவதுதான் கஷ்டம்.

   ஹோட்டல்ல சீசனல் சீப்பான காய்தானே உபயோகப்படுத்துவாங்க

   நீக்கு
 10. காரட் மட்டும் தனியாய்ப் போட்டுத் தான் அல்வா செய்வதே! அதிலும் வடக்கே உள்ள காரட் எனில் ஒரு காரட்டே சுமார் கால்கிலோ இருக்கும். எனினும் உள்ளே தண்டு இருக்காது. நல்ல பிஞ்சான காரட்டாக இருக்கும். அப்படியே சாப்பிடலாம். அந்த நிறம் ஒண்ணே போதும். அல்வா செய்யப் போறேன்னா 2,3 நாட்கள் முன்னால் இருந்தே பாலைச் சேகரித்துக் குறுக்கி வைத்து விடுவேன். காரட்டைத் துருவி நெய்யில் வதக்கிட்டு இந்தக் குறுக்கப்பட்ட பாலை விட்டுக் கிளறினால் சீக்கிரமும் வேகும், பாலும் நிறையச் சேர்க்கலாம். பாலைக் குறுக்காமல் அப்படியே விடுவதால் பால் குறுகக் கொஞ்சம் நேரம் எடுக்கும். பின்னர் மற்றவை எல்லாம் நெ.த. செய்முறை தான்! குறுக்கிய பாலைச் சேர்ப்பதால் அதிகமான பாலாகவும் சேர்க்க முடியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீசா மேடம்.... எனக்கு ஜீனியையும் துருவி பாலில் வேகவைத்து எடுத்த (பாலை கொஞ்சம் எடுத்துவிடலாம்) கேரட்டையும் போட்டு அல்வா பதத்துக்குக் கொண்டுவருவதுதான் மிகவும் பிடிக்கும். நேற்று கூட, இங்கு (பெங்களூரில்) மனைவி பரங்கி அல்வா செய்தாள். நான் நடைப் பயிற்சி என்று ஊர் சுற்றிவிட்டு, செல்லும் வழியில் வெண்ணெய் தோசை, நெய் தோசை (பெங்களூர் தோசை-அந்தக் கொடுமையை எப்படிச் சொல்லுவேன்), கரும்புச் சார் என்று மூன்று கடைகளில் சாப்பிட்டுவிட்டு வந்தபோது செய்துமுடித்திருந்தாள். படங்கள் எடுக்கலை. திருவிச் செய்திருந்தால் ரொம்ப அட்டஹாசமாக இருக்கும்னு சொன்னேன்.

   நீங்களானா வட இந்திய காஜர் அல்வாதான் பிடிக்கும் என்று சொல்றீங்க.

   நீக்கு
  2. காஜர் அல்வா பிடிக்கும். ஆனால் காஜர்/காரட் வடக்கே விளையும் காரட்டில் உள்ள ருசி இங்கே ஊட்டி, பெண்களூர் காரட்டுகளில் இல்லை. இங்கே கொஞ்சம் சோகை பிடிச்சாப்போல் வெளிறிய ஆரஞ்சுக் கலரில் இருக்கு. சுவையும் இருக்காது! மட்டி மாதிரி இருக்கு!

   நீக்கு
 11. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

  செய்முறை படங்களுடன் காரட் அல்வா அருமை.
  என் குழந்தைகள் பீட்ரூட் சாப்பிட மாட்டார்கள் அதனால் காரட், பீட்ரூட் சேர்த்து அடிக்கடி அல்வா, பர்பி செய்து கொடுப்பேன்.
  நான் குக்கரில் பாலுடன் வேக வைத்து விட்டு பிறகு சீனி, நெய் சேர்த்து கிண்டிவிடுவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க வளமுடன் கோமதி அரசு மேடம். காரட்/பீட்ரூட் பர்பியா? செய்து படங்களோடு எழுதுங்களேன். உங்கள் கேரட் அல்வா செய்முறை எனக்குப் பிடித்ததுபோல் இருக்கிறது. நல்லா அல்வா பதத்துலதான இருக்கும்? (கொஞ்சம் கோந்து மாதிரி).

   நீக்கு
  2. நன்றாக வேகவைத்து விட்டால் தான் கோந்து மாதிரி இருக்கும், 5 நிமிடம் வேகவைத்து எடுத்தால் அல்வா நன்றாக இருக்கும். சீனியை பாகு வைத்துக் கொண்டு காரட், பீட்ரூட் விழுதைபோட்டு கிண்டினால் பர்பி கிடைக்கும். சின்ன குழந்தைகளாய் இருக்கும் போது இனிப்பில் என்ன செய்தாலும் சாப்பிடுவார்கள்.
   இப்போது வீட்டில் யார் இருக்கிறார்கள் இதை எல்லாம் செய்ய? மைசூர் பாகு மட்டும் தான் என்னவருக்கு பிடிக்கும். அடிக்கடி செய்வது இல்லை.

   நீக்கு
  3. சாதம் வைக்கக் கூடக் குக்கர் பயன்படுத்துவதில்லை. யாரானும் வந்தால் தான் குக்கர்! அதுவும் எங்க குழந்தைங்க எனில் குக்கர் வைக்கலைனாக் கூட அவங்க நேரடியா வடிச்ச சாதத்தைச் சாப்பிடுவாங்க! மத்தவங்க தான் குக்கர் சாதம் இல்லையானு யோசிப்பாங்க! இத்தனைக்கும் அவங்கல்லாம் சின்ன வயசில் விறகு அடுப்பில் வெண்கலப்பானையில் சமைச்சுச் சாப்பிட்டவங்க! :)))) குக்கர் சாதம் பொதுவாகவே சாப்பிடுவதைத் தவிர்க்கணும் என்றாலும் நீரிழிவுக்காரங்க நிச்சயம் சாப்பிடக் கூடாது. வடித்த சாதமே அவங்களுக்கு நல்லது!

   நீக்கு
  4. ஐயோ.. இது என்ன குக்கர் சாதம் பற்றி புதுக் கதை. எதனால் குக்கர் சாதம் நல்லதில்லை? பச்சரிசியை விட புழுங்கல் நல்லதா?

   எனக்கு எதுல சாதம் பண்ணினாலும் விரை விரையா (பொல பொலன்னு) இருக்கணும். குழைந்தால் சுத்தமா பிடிக்காது.

   நீக்கு
  5. குக்கர் பத்திப் புதுக்கதை எதுவும் இல்லை. பல்லாண்டுகளாக அனைவரும் சொல்வது தான்.

   நீக்கு
 12. கேரட் அல்வா
  மிகவும் விரும்பிச் சாப்பிடுவேன்
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 13. என்னை பிடிக்காது என்று சொல்லி விட்டதால், நான் சாப்பிடுவதில்லை...(!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன். ஒருவேளை அதிகமாக ஏற்கனவே இனிப்பு சாப்பிட்டுவிட்டீர்களோ?

   சமீபத்தில் நான் படித்தது, டயபடீசுக்கு, முழுமையாக கார்ப், அதாவது அரிசி, தோசை, கோதுமையைத் தவிர்க்கணும், பழவகைகளைத் தவிர்க்கவேண்டாம், அதனால் சுகர் ஏறாது என்று படித்தேன்.

   நீக்கு
  2. டிடி, காரட் உங்களைப் பிடிக்கலைனு சொல்லிடுச்சா? எப்போ அது? :))))

   நீக்கு
  3. அது நடந்து ஒரு கால் நூற்றாண்டு ஆகி விட்டது அம்மா... ஆனால், (பச்சையாக) அப்படியே காரட் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும்...!

   நீக்கு
 14. சூடான கேரட் அல்வா வித் ஐஸ்க்ரிம் என்னுடைய சாய்ஸ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மதுரைத் தமிழன். கேரட் அல்வாவே இனிப்பு. அதனுடன் இன்னும் ஒரு இனிப்பா? ரொம்ப தைரியம்தான்.

   ஐஸ்க்ரீம், ஜாமூனுடனும், ஜிலேபியுடனும் நன்றாக இருக்கும். சாப்பிட்டுப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு கடைக்காரர், ஜிலேபியை புளிக்காத கெட்டித் தயிருடன் சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும் என்றார். நான் இன்னும் முயற்சிக்கலை.

   நீக்கு
 15. நான் செய்யும் முறையும் இதுதான். ஆனா, இவ்வளவு பால் சேர்க்கமாட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ராஜி.. கோவா ரொம்பச் சேர்க்காததுனால பால் அளவு ஜாஸ்தி. (இன்னும் நீங்க ரொம்ப நாளுக்கு முன் போட்ட 'வெல்லக் கொழுக்கட்டை' செய்துபார்க்கலை. லிஸ்டுல இருக்கு. அதைவிட என் மனதில் அந்தப் படம் பதிந்திருக்கு, வல்லிம்மா போட்ட பாதாம் அல்வா படம் போல)

   நீக்கு
 16. உங்கள் மனைவி செய்திருப்பது போலத்தான் நானும் செய்வேன் நெல்லை. ஒரே ஒரு முறை பால் கோவா சேர்த்து செய்தேன். காரட் ஹல்வா அல்லது பீட்ரூட் ஹல்வா வித் வெனிலா ஐஸ்க்ரீம் என் சாய்ஸ்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி பானுமதி வெங்கடேச்வரன் மேடம். தமிழக இனிப்போட ஐஸ்கிரீமா? நல்லதுதான்.

   எனக்கென்னவோ என் செய்முறைதான் ரொம்பப் பிடிக்கும்.

   நீக்கு
 17. //ப்ரேமவிலாஸ் அல்வா சூடாகக் கொடுப்பார்கள். அதன்மேல் காராபூந்தி தூவித் தருவார்கள். //
  அல்வா மீது காரா பூந்தியா? என்னமாதிரி ரசனை இது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைல, 10 ரூபாய்க்கு 50 கிராம் அல்வா இப்போ வாழை இலையில் வைத்துக் கொடுப்பார்கள். சில லாலாக் கடைகளில் அவங்களாகவே கொஞ்சம் மிக்சர் தருவாங்க (காரத்துக்கு). சிலவற்றில் கேட்டால் தருவார்கள். இது நான் நாலணாவுக்கு ஒரு மிக்சர் பாக்கெட் வாங்கும் காலத்திலேர்ந்தே இருக்கு. 1979ல்) மேல காராபூந்தி தூவித் தருவது, தயிர் வடைக்குத்தான் ஹா ஹா ஹா.

   நீக்கு
  2. நானும் நினைப்பேன். ஸ்வீட் மீது திருஷ்டியாக காரம் ஏன் என்று!

   நீக்கு
  3. நான் வேலைக்குப் போயிட்டிருந்த காலங்களில் கூடப் பல ஓட்டல்களில் வெறும் ஸ்வீட் மட்டும் சாப்பிட்டுட்டுக் காஃபி ஆர்டர் பண்ணினா ஒரு சின்ன பஜ்ஜியோ இல்லாட்டிக் காராபூந்தியோ கொடுப்பாங்க! அதுக்குக் காசு இல்லை! இப்போல்லாம் ம்ஹூம்! :)))) தயிர் வடைக்கு மேலே ஏதும் தூவினால் எனக்குப் பிடிக்காது. ஆனால் வட மாநிலம் போனப்புறமாத் தயிர் வடைன்னா பச்சைச் சட்னி, சிவப்புச் சட்னி இல்லாமல் பண்ணுவது இல்லை!:)))

   நீக்கு
  4. கீசா மேடம்.. ஒருவேளை நீங்க காரம் டேஸ்ட் பண்ணினப்பறம் இன்னும் அவைகளை வாங்குவீர்கள் என்று (தவறாக) எதிர்பார்த்திருக்கலாமோ?

   தயிர் வடைக்கு பச்சை/சிவப்பு சட்னியா? தயிரில் கலந்துவிடவா?

   நீக்கு
 18. என் மனைவி செய்யும் காரட் அல்வா பிடிக்கும் எல்லா காரட்களும் அல்வா செய்ய ஏற்றதல்ல என்பாள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேக்லாம் பண்ணிப்பார்க்கிறீங்க ஜி.எம்.பி சார். எப்படி இனிப்புகளைச் செய்துபார்க்காம விட்டீங்க? வருகைக்கு நன்றி.

   நீக்கு
 19. காரட் அல்வா எனக்கு ரொம்பப் பிடிக்கும். செய்து, சாப்பிட இந்த வாரத்துக்குள் முயற்சிக்கிறேன்! நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இங்கிருந்து கிளம்புவதற்குள் முயற்சித்தால் சாப்பிட்டுப் பார்த்து எப்படி இருந்தது என்று எழுதுவேன் கேஜிஜி சார். (நீங்கள் பெங்களூருக்கு வந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்)

   நீக்கு
 20. எனக்கு சாப்பிடத்தான் தெரியும் செய்ய தெரியாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அசோகன் குப்புசாமி. நமக்கும் தெரிந்திருந்தால் நல்லதுதானே (இன்னிக்குப் பண்ணேன். முடியாதுங்க. அது பெரிய வேலை. ரொம்ப நேரம் எடுக்கும், நெய் நிறைய வேணும், அப்படில்லாம் யாரும் சாக்கு போக்கு சொல்லமுடியாது ஹா ஹா)

   நீக்கு
 21. அருமையான குறிப்பு. நீளமான சிவப்புக் கேரட் ஏற்கனவே இனிப்பு உள்ளது என்பதால் அல்வா செய்ய இன்னும் நன்றாக இருக்கும். கோவா சேர்ப்பதற்கு பதில் இறக்கும் சற்று முன் ஒரு டேபிள் ஸ்பூன் பால் பவுடர் சேர்த்துக் கிண்டினாலும் சுவை நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ராமலக்‌ஷ்மி மேடம். பால் பவுடர் கடைசியில் சேர்ப்பது நல்ல ஐடியா.

   சிவப்பு கேரட்டில் இனிப்புச் சத்து அதிகமா? எனக்குத் தெரியாத செய்தி

   நீக்கு
 22. நெ.த. வின் மனைவி ரெசிப்பி நன்றாக இருக்கிறது.
  //திங்கக் கிழமை பதிவிலும் அது வந்தது. (http://engalblog.blogspot.com/2017/04/blog-post_10.html) ஆனா, இந்தத் தடவைதான் தெரிந்தது, அது என் முயற்சிக்காக அவங்க சொன்ன ‘ஓகே’ என்பது.// :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மிடில் கிளாஸ் மாதவி. பெண்கள், பெண்களை சப்போர்ட் செய்வது ஆச்சரியமா என்ன. இருந்தாலும் உண்மையை நான் ஒத்துக்கொண்டுள்ளேனே..

   நீக்கு
 23. திரட்டுப்பால் ருசியுடன் கேரட் ஹல்வா நன்றாக உள்ளது. குளிர்கால வட இந்தியா கேரட் ருசி அலாதி. கேரட் துருவலை நெய்யில் வதக்கி பாலில் வேகவைத்துச் செய்யும் முறைதான் முதலில் இருந்தது. கோவா சேர்த்தாலும், பாலிலேயே செய்யும் முறைதான் அதிக ருசி. இப்போது மைக்ரோவேவில் செய்பவர்கள்தான் அதிகம். அதுவும் குறுக்கிய டின் பாலைச் சேர்த்து. இந்த பின்னூட்டங்களைப் பார்த்தாலே நிறைய மாதிரிகளில் செய்யத் தோன்றும். உங்கள் குறிப்பும் ருசியோ ருசி. படங்களும். அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க காமாட்சி அம்மா. நீங்க எழுதினதைப் பார்த்தால், காலம் மாற மாற, கேரட் அல்வாவை சுலபமாகச் செய்கிறார்கள், ஆனால் ருசி குறைகிறது என்று சொல்லுங்கள்.

   நேற்று இங்கு (பெங்களூரில்) தாவண்கெரே Bபெண்ணே தோசை சாப்பிட்டேன். மிகச் சிறிய கடை. பெரிய கல். அவர்கள் விறகை எரித்து தோசை வார்க்கிறார்கள் (உங்களுக்குத் தெரியும். நம்ம ஊரைப் போல தோசை பெரிசா இருக்காது. ஊத்தாப்பத்தை விடக் கொஞ்சம் பெரிய சைஸில் ஆனால் தடியாக முறுகலாக இருக்கும்).

   அதுனால, இப்போவும் பாரம்பர்ய முறையில் கேரட் அல்வா செய்பவர்கள் இருப்பார்கள். வருகைக்கு நன்றி.

   நீக்கு
 24. அபுதாபியில் கிருஷ்ணா ஸ்வீட் ஸ்டாலில் அருமையாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கில்லர்ஜி... நான் துபாய்/கராமால தான் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடை பார்த்திருக்கேன். (அவங்களுக்கு மறந்திருக்கலாம். நான் தான் முதல் முதலில் அங்கு திருப்பதி லட்டு செய்ய ஆர்டர் கொடுத்தேன், அது ஆரம்பித்த புதிதில்). அபுதாபியில் ஒரு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இருக்கா? ஒரு கேரட் அல்வாவுக்காக அபுதாபிக்குப் போகணுமா? வீட்டிலேயே செய்யச் சொல்லுங்கள் (இல்லைனா, பஜ்ஜி, சொஜ்ஜிக்குப் பதில், பஜ்ஜி, கேரட் அல்வா என்று கதையை மாற்றிவிடுங்கள்)

   நீக்கு
  2. அப்பாடி எல்லாரும் காரட்டைப் பிச்சிப் பிச்சி சாப்பிட்ட பிறகு
   எனக்கு என்ன மீதி ரிஉக்கும். கு.ப.ரா கதைகளில் மூழ்கி விழித்துக் கொள்ளும்போது இந்தியாவுக்கு சாயங்காலம் வந்து விட்டது.
   மிக நன்றாக வந்திருக்கிறது காரட் அல்வா.
   நான் இத்துடன் பாதம்,முந்திரி அரைத்துச் சேர்ப்பேன்.
   கெட்டியாக ஆகிவிடும்.

   கோவா சேர்ப்பதில்லை. குங்குமப்பூவும் போட்டால்
   இன்னும் வண்ணம் கூடும்.
   டெல்லி காரட் அல்வாவுக்கு ஏற்றது.
   சென்னையில் காரட் ருசியாக இருக்கிறதா தெரியவில்லை. இந்த ஊரில் மெக்சிகன் காரட்
   தனியாவே சாப்பிடலாம். தாமதமக வந்ததுக்கு மாப்பு கொடுங்கோ.

   வாழ்த்துகள்.

   நீக்கு
  3. வாங்க வல்லிம்மா. சென்னைக்காரங்க நீங்க. கேரட் ருசியா இருக்கான்னு சந்தேகம் வரலாமா? அடுத்த முறை பாதாம்+முந்திரி அரைத்து நான் செய்யும்போது சேர்க்கிறேன். கருத்துக்கு நன்றி.

   கதைகள் படிக்கும்போது கண் சோர்வடைவதில்லையா? நான் 30 வருடமா கணிணித் திரை பார்த்துப் பார்த்து கண் கொஞ்சம் வலிமை இழந்ததுபோல் தெரிகிறது.

   நீக்கு
 25. வணக்கம் சகோதரரே

  தாங்கள் செய்த காரட் அல்வா மிகவும் நன்றாக இருக்கிறது. படங்களும் அருமை.
  காரட், பீட்ரூட் என்று காய்களில் நானும் அல்வா செய்திருக்கிறேன். ஆனால் எங்கள் வீட்டில் அவ்வளவாக அதுக்கு மதிப்பு கிடையாது. (ஒருகால் நான் பண்ணிய விதத்தில் குறையோ.. இல்லை, காய்கள் அவர்களுக்கு பிடித்தமானவையாக இல்லையோ, தெரியவில்லை..) கோதுமை அல்வா செய்தால், நன்றாக வரும். அது அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் இப்போது அது மிகவும் எனக்கு கஸ்டமாகி விட்டது. அல்வா கோதுமை இரண்டு மூன்று பால் எடுத்து புளிக்க வைத்து, நீண்ட நேரம் கை விடாமல் கிளற வேன்டும். இப்போது நீங்கள் செய்த இந்த அல்வாவை முயற்சி செய்து பார்க்கிறேன். நன்றாக வருமென்று தோன்றுகிறது. தி. லி அல்வா (இருட்டு கடை) அங்கு போகும், வரும் போதும், வாங்கி வந்து நிறைய சாப்பிட்டாகி விட்டது. இந்த தடவை வரும் போது வாங்கி வர மறந்து விட்டது. நிறைய சாப்பிட்டதால், போரடித்து விட்டதோ, என்னவோ.. உங்கள் செய்முறை அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  தாமதமாக வந்து கருத்திடுவதற்கு மன்னிக்கவும்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் மனைவி செய்த கேரட் அல்வா உங்களுக்குப் பிடித்தது அறிந்து மகிழ்ச்சி கமலா ஹரிஹரன். நாங்கள் சமீபத்தில் வெளியூர் சென்றிருந்தபோது என் மகள் வீட்டில் கோதுமை அல்வா செய்தாள். அதனை எங்கள் பிளாக்கிற்கு அனுப்பப் போகிறேன். என் அப்பா, அந்தக் காலத்தில், கோதுமை, அப்புறம் மைதா இவற்றை வைத்து அல்வா செய்திருக்கிறார்.

   திருநெல்வேலி அல்வா - இதைப் பற்றி எழுதி அனுப்பலாம் என்று நினைத்திருக்கிறேன். சமீபத்தில் போயிருந்தபோது நிறைய சாப்பிட்டுப் பார்த்தேன். எங்க ஊர் அல்லவா?

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!