திங்கள், 8 ஜூலை, 2019

"திங்க"க்கிழமை : குடமிளகாய் கட்லெட் - ரேவதி நரசிம்மன் ரெஸிப்பி


குடமிளகாய் கட்லெட்... 


எங்கள் ப்ளாக்  திங்கள் கிழமை,திங்கக்கிழமைக்காக  முன்னாள் 2007 இல் எழுதின பதிவைத் தூசி தட்டிக் கொடுத்திருக்கிறேன்.

அன்பின் ஸ்ரீராம், எழுத்துக்களைக் கௌரவிப்பதில் வல்லவர்.
எப்பொழுதும் நலமுடன் வாழ என் ஆசிகள்.



இது stuffed capsicum. இதையே  சோளமாவு,  துகள்களில் பிரட்டிப் பொரித்தால் கட்லெட் ஆகிடும்.


 1966 செப்டம்பர் மாதம் சேலத்தில் இருக்கும்போது கற்றுக்கொண்ட
செய்முறை.

திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகி இருந்தது.

புதிதாகக் கட்டப்பட்ட காலனி வீடுகள். ஐந்தாம் நம்பர் வீட்டில் நாங்கள்.
 பத்தாம் நம்பர் வீட்டில்  ஆயாம்மாவோடு ஒரு சின்னப் பையன் நாச்சியப்பன் இருந்தான் .அவன் பெற்றோர்கள் ராசிபுரத்தில் இருந்தார்கள் ஆறாம் வகுப்பு படிக்கப் பாட்டியுடன் இந்த ஊரில் குடித்தனம். 

3 ஆம் நம்ப்ர் வீட்டில் புதிதாகக் குடிவந்தவர் ரயில்வேயில் இஞ்சினீயர். 
அப்போதுதான் திண்டுக்கல் சேலம் இருப்புப் பாதை போட ஆரம்பித்திருந்தார்கள்.

எங்கள் வீட்டில் சிங்கத்துக்கு 7.30 மணிக்கு  ஜீப் வந்துவிடும். அதற்குள்
இரண்டு மூன்று காப்பிதான் அவருக்குக் காலை உணவு.

சில நாட்கள் மதியம் வருவார். சில நாட்கள் வரமாட்டார்.

நான் அங்கிருக்கும் நாடார் கடை,பால் கொண்டு வருபவர், வேலைக்கு வரும்
சின்னப்பாப்பா,புதிதாக வாங்கின வானொலியில் ,தமிழ் ,இந்தி,ஆங்கிலப் பாடலகள், பெரி மேசன்,சேஸ்,ஹரால்ட் ராபின்ஸ் என்று பொழுது போக்கிக் கொண்டிருந்தேன்.

அதுவும் இல்லையானால் கடைசி வீட்டுப் பாட்டியுடன் அரட்டை  அடிக்கப் போய் விட்டு ஏதாவது குழம்பு வகை, பொரியல்  வகை கற்றுக் கொள்வேன்.

இந்த கொஞ்சமே போரடித்த வாழ்க்கையில் இஞ்சினீயரின் தங்கை ரேவதி பஞ்சரத்தினம் வந்தாள். இருவருக்கும் ஒத்த சுவை படிப்பிலும், இசையிலும்.

சிங்கத்தின் ஜீப் கிளம்பக் காத்திருப்பாள்.  இங்கே வந்துவிடுவாள்.

ஹோம்சயன்ஸ் இரண்டாம் வருடம் படிக்க ஆரம்பித்திருந்தாள்.  ராணி மேரிக் கல்லூரி மாணவி.  சமையல் விதம் எல்லாம் அறிந்திருந்தாள்.
நீ சத்துடன் உண்ண வேண்டாமா என்றபடி, காய்க்காரரிடம் பேரம் பேசி காலிஃப்ளவர், பட்டாணி, காரட், குடமிளகாய் என்று வித விதமாக வாங்க வைப்பாள்.  அப்படிக் கற்றுக் கொண்டதுதான் இந்தக் குடமிளகாய் கட்லட்.
நான் என் வலைப்பதிவில் 2007 ஆம் வருடம் பதிந்திருந்தேன்.

 அப்போது நம் கீதா,இதற்கு ஸ்டஃப்ட் காப்சிகம் என்று பெயர் வைத்தார்.
 நான் கேட்டுக்கொண்டு ,ரேவதி வைத்த பெயர் காப்சிகம் கட்லட்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அவள் சொல்லிக் கொடுத்த குடமிளகாய்க் கட்லெட் செய்முறை இங்கே பதிகிறேன்.  உங்களுக்கும் தெரிந்திருக்கும். இன்னோரு தடவைப் படிப்பதால் குடமிளகாய் கோபிக்காது.:))

இரண்டு பேருக்கு கட்லெட் செய்ய 3 பெரிய குடமிளகாய் சரியாக இருக்கும்.

+++++++++++++++++++

தேவை....

திடமான பெரிய குடமிளகாய் இரண்டு.அல்லது மூன்று

ஸ்டஃப் செய்யத் தேவையான காய்கறிகள்
1, பட்டாணி,
2,காலிஃப்ளவர்,
3,காரட்,
4,பீன்ஸ்,

வேகவைத்து உரித்த உருளைக்கிழங்கு 5 பெரியது.

சேர்க்க வேண்டிய மசாலா
கசகசா,சோன்ஃப்,கிராம்பு,
துளி இஞ்சி,சின்னவெங்காயம் 6, 
,பச்சைமிளகாய் 4

மேல்மாவாக  சோளமாவும் + ப்ரெட் தூளும்.
உப்பு அவரவர் விருப்பம் 

செய்முறை.
1, மூன்று குடமிளகாயையும் நன்குக் கழுவித் துடைத்து,    ஆறு பாதிகளாகச் செய்து கொள்ளணும். ஒருபக்கம் குடுமி இருக்கணும். வாகாப் பிடித்துக்கொள்ளலாம் .அதில் இருக்கிற விதையெல்லாம் எடுத்துவிட்டுத் தயாராக வைத்துக் கொண்டு,நாலு உருளைக் கிழங்கையும் குக்கரில் உப்புப் போட்டுவேகவைத்து மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

2 காய்கறிகறிகளைப் பொடியாக அரிந்துகொள்ளணும்.  எல்லாவற்றையும் உப்பு,மஞ்சப்பொடியோடு வேகவைக்கணும்.

3.  மசாலா விஷயங்களை வாணலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ளணும்.

4.  சோள  மாவைத் தண்ணீர் விட்டு பஜ்ஜிமாவு மாதிரிக் கரைத்துக் கொள்ளணும். 

5.  சின்ன வெங்காயம் நறுக்கி, ப. மிளகாய், இஞ்சியோடு வதக்கி வேகவைத்த உருளைக்கிழங்கோடு, உப்பு, காய்கறி, மசாலா அரைத்தது, கொத்தமல்லித் தழை எல்லாவற்றோடும் சேர்த்துப் பிசைந்து வைத்துக் கொள்ளணும்.

ஒரு பெரிய வாணலியில் நாலே நாலு கரண்டி ரிஃபைண்ட் எண்ணையை
 விட்டு மிதமான சூட்டில் வைக்கணும்.

குடமிளகாய்க் கிண்ணங்களில் இந்தக் காய்கறிக் கலவையை நிரப்பி,
சோள மாவுக்  கரைசலில் முக்கி எடுத்து ப்ரெட் தூளில் ஒத்தி
சுட்டுக்கொண்டிருக்கும்  எண்ணையில் ஜாக்கிரதையாக வைக்கணும்.
ஒரு பக்கம் வெந்தவுடன் அப்படியே மாற்றி குடைமிளகாயோடத் தலைப்பக்கத்தை வைக்கணும்.

வடிவம் மாறாமல் அழகா இருக்கணும் இல்லையா?  இப்படியே பொறுமையா ஆறு கட்லெட் செய்து விடலாம். மீதி கலவை இருந்தால் உ.கிழங்கு பூரி மசாலாவாக வைத்துக் கொள்ளலாம்.

எல்லோருக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.  இதற்கான படங்களை கூகிளிலிருந்து தான் கொடுக்கப் போகிறேன்.

படம் எடுக்க காமிரா இல்லை.

ஐபாடில் எடுத்தால் முக நூலுக்குக் கொடுக்க முடியும்.  எல்லோரையும் போல அழகாகப் படம் கொடுக்காததற்கு மன்னிச்சுடணும். சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லவும். நன்றி  ஸ்ரீராம்.




46 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும், இனி வர இருக்கும் நம் நட்பு உறவுகளுக்கும் நல்வரவும், வணக்கமும் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. வரவேற்ற துரைக்கும் இனி வரப்போகும் நண்பர்களும், வந்திருக்கும் ஸ்ரீராமுக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

      நீக்கு
    3. இன்று 4 மணியிலிருந்து இப்போ வரை வேலை, திருமணம் ஒன்றிர்க்கும் செல்லவேண்டியிருந்தது. அதுதான் தாமதம்.

      நீக்கு
  2. இனிய மலரும் நினைவுகளுடன்
    குடமிளகாய் கட்லெட்...

    பார்க்கும் போதே அமர்க்களமாக இருக்கிறது...

    Sweet pepper என்றும் Bell pepper என்றும் சொல்லப்படும் இந்த வகை மிளகாய்களில் காரம் இருக்காது...

    இதன் (கீழ்ப்பகுதியை முழுதாக நறுக்காமல்) மூடி போல திறந்து கொண்டு அதனுள்ளிருக்கும் சூலகத்தை நீக்கி விட்டு ஊற வைத்த பாசுமதியுடன் கேரட் துருவல், கோஸ் துருவல் இவற்றுடன் மசாலா சேர்த்து இதேபோல நீராவியில் Stuffing செய்வது உண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை சொல்லி இருப்பது புதுமை! அதையும் செய்து பார்க்கலாம்.

      நீக்கு
    2. அட இது நன்றாக இருக்கிறதே. நன்றி துரை. எண்ணெய் இல்லாத
      பண்டம். உடலுக்கும் நல்லது.

      நீக்கு
    3. >>> எண்ணெய் இல்லாத
      பண்டம். உடலுக்கும் நல்லது...<<<

      இவ்வாறு நீராவியில் செய்யும் போது Crisp ஆக இருக்காது.. Knife & Spoon கொண்டு சாப்பிடலாம்... துணைக்கு Sweet Tomato Sauce நன்றாக இருக்கும்...

      சமையலறை கை விட்டுப் போனதால் ஒன்றும் இயலவில்லை...

      நீக்கு
    4. நீங்கள் சொல்லியிருப்பது புதிதாக இருக்கிறது துரை சார். உங்கள் செய்முறைப்படி செய்து குழந்தைகளுக்கு லன்ச் பாக்சில் வைத்து கொடுத்து விடலாமே.

      நீக்கு
    5. துரை சார்...அத்துடன் சின்னவெங்காயத்தை நீள்வாக்கில் திருத்திக்கொண்டு, நன்கு எண்ணெயில் வறுத்து, அதனையும் பாஸ்மதியுடன் சேர்த்துக்கொண்டால் இன்னும் சுவையாக இருக்கும். (ஏதோ என்னால் ஆன யோசனை)

      நீக்கு
  3. நமது தஞ்சையம்பதியில்
    நெல்லை அவர்களின் விருந்தினர் பக்கம்...

    அன்புடன் அழைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அத்திகிரி அருளாளர் உங்கள் பதிவில் எழுந்தருளி இருக்கிறார்.
      இப்போதுதான் படித்துவிட்டு வந்தேன் மிக மிக நன்றி மா அன்பு துரை.

      நீக்கு
    2. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியம்மா.. நன்றி...

      நீக்கு



  4. வல்லியின் ஆரம்பகாலப் பதிவுகளில் படிச்சிருக்கேன். ஆனால் இங்கே குடைமிளகாய்க்கே தடா! போணி ஆகாது. பெண், பிள்ளை இருந்தால் முன்னாடி எல்லாம் வாங்க முடியும். அவங்க எல்லாம் அவங்க வாழ்க்கையோடு நிலைக்க ஆரம்பிச்சதிலே இம்மாதிரிச் சில பண்டங்கள் பண்ண முடிவதில்லை! அதிலும் குடமிளகாயை நான் வருஷத்துக்கு 2 தரம் பார்த்தால் பெரிசு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாமா. நானும் எழுதினேன் என்பதற்கு நீங்கள் சாட்சி.haa haa.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவு சகோதரி ரேவதி நரசிம்மன் அவர்களின் கைவண்ணத்தில் மிகவும் சுவையாக இருக்கின்றது. குடமிளகாய் கட்லெட் இதுபோல் நான் செய்ததில்லை. குடமிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுள்ளேன். மற்றபடி குடமிளகாய் சாம்பார், ரசம், கலவன் சாதம் செய்வேன். அவியலுக்கு கூட சமயத்தில் குடமிளகாய் சேர்ப்பேன். குடமிளகாய் உடல் நலத்திற்கு உகந்தது. அதனுடன் இத்தனை காய்களும் சேரும் போது சுவை மிகுந்ததாக ஆகி விடும்.

    சகோதரியின் பழைய நினைவுகளுடன் குடமிளகாய் கட்லெட் செய்முறையை விளக்கி கூறியிருந்தது சிறப்பு. மிகவும் அருமையாக இருக்கிறது சகோதரி. நானும் இதுபோல் செய்து பார்க்கிறேன்.தங்களது பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு கமலா மா. அப்பொழுது எல்லாமே புதிது.
      திருமணம்,சமையல் எல்லாம் தான். சேலத்தில் எல்லாக் காய்கறிகளும் கிலோ ஒரு ரூபாய்க்கு வாங்கினது எல்லாம் சொப்பனம் போல இருக்கிறது.

      நீக்கு
  6. அனைவருக்கும் காலை வணக்கம். குடமிளகாயில் கட்லட்டா? இண்ட்ரெஸ்டிங்!. வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. வந்திருக்கும் அன்பு துரை செல்வராஜுவுக்கும், வரப்போகும்
    அன்புள்ளங்களுக்கும் இனிய காலை வணக்கம்.

    அன்பு ஸ்ரீராம் இந்த கட்லெட் செய்முறையை
    இன்று பதிந்ததற்கு மிக நன்றி.

    இங்கு வந்து இந்தக் கட்லெட் செய்யவில்லை.
    இந்த விடுமுறையில் செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. நல்லதொரு ரிசிப்பி அதை கட்லெட் என்று அழைப்பதைவிட stuffed capsicum என்று அழைப்பதுதான் பொருத்தம்.....

    எனக்கு தெரிஞ்ச வரை கசகசா,சோன்ஃப்,கிராம்பு, இது எல்லாம் பிராமணாள் ஆத்துல இருக்காதே??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏலக்காய், கிராம்பு எல்லாம் வெற்றிலை, பாக்குடன் வைத்துக் கொடுக்கும் பொருட்கள். அதுவும் ஸ்ராத்தம் முடிந்ததும் சாப்பிட்டவர்களுக்கு வெற்றிலை போடக் கொடுக்கையில் ஏலக்காய், கிராம்பு வைத்துத் தான் கொடுபபர்கள். ஜீரண சக்தியை அதிகரிக்கும். தினசரி வெற்றிலை போடுபவர்கள் கூட ஏலமும், கிராம்பும் வைத்துப் போடலாம்/போடுவார்கள். கசகசா, சோம்பு இரண்டுமே மருத்துவ குணம் கொண்டது. தினம் சோம்பு, ஜீரகம் போட்டுக் கொதிக்க வைத்த நீரைக் குடித்தால் வயிற்றுக்கு நல்லது. நான் தினமும் இந்தத் தண்ணீர் காலை ஒரு முறை, மாலை ஒரு முறை குடித்துவிடுவேன். குடிக்கலைனா அன்னிக்குக் கொஞ்சம் வயிறு தொந்திரவு செய்யும். எங்க வீட்டில் எல்லாப் பொருட்களுமே மருந்து என்னும் அளவில் வாங்கி வைப்போம்.வைச்சிருக்கோம்.

      நீக்கு
    2. மதுரைத் தமிழன் - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... கிராம்பு, கசகசா நிச்சயம் பிராமணாள் வீட்டில் இருக்கும். கிராம்பு சர்வ நிச்சயம். கசகசா, பாயசம் செய்ய உபயோகிப்பார்கள். கல்ஃப் தேசங்களுக்குப் போனபிறகுதான் தெரியும், கசகசா எதிலிருந்து வருகிறது என்று. அங்கெல்லாம் கசகசா கொண்டு செல்வது குற்றம்.

      நீக்கு
    3. அன்பு துரை இனிய காலை வணக்கம். கீதா ,நெல்லை சொன்னது போல
      ஜாதிக்காய்,ஏலக்காய்,லவங்கம்,கசகசா எல்லாம் மருந்தாக நிறைய
      உபயோகம் ஆகும் வீடுகளில்.

      நீக்கு
    4. பொட்டுக்கடலை, தேங்காய், நாட்டுச்சர்க்கரை(முன்னெல்லாம் பூராச் சர்க்கரை எனக் கிடைக்கும். இப்போ அது என்னன்னே யாருக்கும் தெரியலை.) இவை போட்டுச் செய்யும் சோமாசி என்னும் தின்பண்டத்தில் கசகசா கட்டாயம் இடம் பெறும். நெய்யில் வறுத்துச் சேர்ப்பார்கள்.

      நீக்கு
    5. அன்பு முரளிமா இனிய மாலை வணக்கம்.
      உண்மைதான்.மருந்தாகவே உபயோகிக்கப்படும் கசகசாவைத் தலையில் வைத்துத் தேய்த்து
      அம்மா எண்ணெய்க் குளியல் எனக்குச் செய்வார்.
      பல்வலிக்குக் கிராம்பு,
      நீர் பிரிக்க, ஜீரணத்துக்கு சோம்பு ஜீரகம்.
      எல்லாம் உண்டுதான்.

      ஆமாம், இவர் அப்போது புல்லட் வைத்திருந்தார். சேலத்திலிருந்து மதுரைக்கு
      5 மணி நேரத்தில் வந்து விடுவார்,.

      இந்த கட்லட் மிகவும் பிடித்தது அவருக்கு.
      எப்பவும் பிடிக்கும்.
      அந்தப் பெண் ரேவதி, என் வயது.
      நான் கிளம்பிப் பிரசவத்துக்கு வந்த பிறகு He was looking like a man in an island
      என்று எனக்கு கடிதம் எழுதுவாள். எனக்கு வருத்தமாக இருக்கும்.
      அது ஒரு காலம்.
      உங்கள் நினைவு சக்தி பிரமிக்க வைக்கிறது.
      ஸ்ரீ அத்தி வரத தரிசனப் பதிவுக்கு மிக நன்றி.

      நீக்கு
  9. பழைய நினைவுகளுடன் சொல்லியது ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு தேவகோட்டை ஜி,
      இப்போது எல்லோரும் வித விதமாகக் கற்று சமையல் செய்கிறார்கள்.

      நல்ல கருத்துக்கு நன்றி மா.

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. அழகான மலரும் நினைவுகளுடன் சமையல் குறிப்பு அருமை அக்கா.

    ஆசை ஆசையாக புதிதாக வித விதமாய் கற்றுக் கொண்டு கணவனுக்கு அளித்து அவர்கள் பாராட்டை பெற விரும்பிய காலங்கள்.

    இனிமையான காலங்கள்தான்.

    செய்முறையும் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு தேவகோட்டை ஜி,
      இப்போது எல்லோரும் வித விதமாகக் கற்று சமையல் செய்கிறார்கள்.

      நல்ல கருத்துக்கு நன்றி மா.

      நீக்கு
  12. நல்லதொரு சமையல் குறிப்பு அம்மா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு தனபாலன்,
      குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
      எல்லாக் காய்கறிகளும் சேர்த்து செய்வதால்
      நன்றாகவே இருக்கும்.நன்றி மா.

      நீக்கு
  13. நான் இதையே சோள மாவில் புரட்டாமல் காய்கறிகளை ஸ்டஃப் செய்ததும், அவனில் வைத்து பேக் செய்து விடுவேன்.
    உங்கள் தோழியிடம் நீங்கள் கற்றுக் கொண்டு செய்தது சரி, அதை உங்கள் கணவர் எப்படி சுவைத்தார்? ரசித்தார் என்று சொல்லவே இல்லையே?
    இன்னும் சுவையான ரெசிபிக்களை சுவையான அனுபவங்களோடு எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு பானுமா.,எல்லா இடங்களிலும்
      பக்கத்து,எதிர் வீடுகளின் சமையல் முறையை அறிந்து
      கொள்வதில் மிகவும் இஷ்டம் எனக்கு.

      வாரம் ஒரு முறை இந்தக் கட்லெட் செய்து விடுவேன்.
      அவரும் ,பிற்காலத்தில் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

      ஆவணி மாதத்திலிருந்து காய்கறிகள் நிறையக் கிடைக்கும்.
      புலாவ், முள்ளங்கி சேர்த்த சப்பாத்தி என்று பலவித உணவு வகைகளைக்
      கற்றுக் கொண்டேன். அவள் இப்போது எங்கிருக்கிறாளோ.

      நீக்கு
  14. நானும் ஸ்டஃப் செய்வதுண்டு. நல்ல குறிப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு மாதேவி, நலமாப்பா. கருத்துக்கு மிக நன்றி.

      நீக்கு
  15. குடமிளகாய் கட்லெட் ரொம்ப அருமையான ரெசிப்பி.

    நான் பெங்களூர்ல உணவுத் தெருவில் இதனைச் சாப்பிட்டிருக்கிறேன். எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

    ரெசிப்பி ஆரம்பத்தில் படிக்கும்போது 'பொரிப்பதா?', அப்படீன்னா ஸ்டஃப் செய்தது விழுந்துடாதோன்னு யோசித்தேன். திரும்பவும் படித்தபோது செய்முறை புரிந்துவிட்டது. இதுக்கு பட்டாணி தேவையில்லை என்று நினைக்கிறேன்.

    அந்தக் கடையில் கூடுதல் ருசிக்காக அஜினமோட்டோ போடறானோன்னு சந்தேகம்.

    அருமையான ரெசிப்பி. வாய்ப்பு வரும்போது செய்கிறேன். என் பசங்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு முரளி மா. நான் கற்ற போது புதிதாக இருந்தது 53
      வருடங்களுக்கு முன்னால்.
      சந்தேகமாக இருந்தால் அந்தக் கடையில் சாப்பிடாதீர்கள்.
      நீங்களே இத்தனை அழகாகச் சமிக்கிறீர்களே. மிகவும் பெருமையாக இருக்கிறது.

      நமக்குப் பிடித்த காய்கறி போட்டு செய்து கொள்ளலாமே.
      ஏற்காடு மலை அடிவாரத்தில் வீடு இருந்தது.
      அங்கிருந்து தோட்டக் காய்கறிகளாக எல்லாம் வரும்.
      விதவிதமாகச் சமைக்கலாம்.
      பழைய நினைவுகள் வசந்தமாக என்னுள் எப்பொழுதும்.
      மிக நல்ல மனிதர். ஒரு குழந்தையைப் போல் என்னக் கவனித்துக் கொள்வார்.
      எல்லாம் நல்லதுக்குத் தான் அவ்ர் உடல் நலம் குன்றிப் படுத்திருந்தால் நொந்து
      போயிருப்பேன்.

      நல்ல வார்த்தைகளுக்கு மிக மிக நன்றி மா.

      நீக்கு
  16. நீங்க உங்க அந்தக்கால வாழ்க்கையைக் குறிப்பிடும்போது, உங்கள் இடுகைகளைப் படித்த நினைவு வந்தது (புல்லட்டில் அவர் சேலம்? பிரயாணம் செய்தது, ஆரம்பகால திருமண வாழ்க்கையைப் பற்றி நீங்க எழுதியிருந்தது எல்லாம்).... அத்துடன் :-( சமீபத்தில் உங்க தளத்துல அவரைப்பற்றி எழுதியதும் நினைவுக்கு வந்தது.

    ஆமாம்..இதெல்லாம் நீங்கள் செய்துபார்த்தீர்களா? அவர் இந்த மாதிரி புதிது புதிதாக செய்வதை பாராட்டினாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Yes I did Muralima. the enthusiasm on a new life and a loving partner made life really vibrant.
      aND HE LOVED IT VERY MUCH.

      நீக்கு
    2. அன்பு முரளிமா,
      தேவை இல்லாமல் காபிடல் லெட்டர்ஸ் வந்து விட்டது.
      என் கணினியை மாற்ற வேண்டிய நேரம் என்று நினைக்கிறேன்.
      நன்றி ராஜா.

      நீக்கு
  17. சமையல் குறிப்பு வலைத்தளத்தில் எழுத முன்னோடியாய் இருக்கலாமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜி எம் பி சார். முன்னோடியாக நம் கீதா சாம்பசிவம்,
      நெல்லைத்தமிழன், கோமதி, பாபு வெங்கடேஷ்வரன்,கீதா ரங்கன் எல்லோரும்
      அருமையாக எழுதுகிறார்கள் .
      நடுவில் ஒரு நாள் நான் வந்தேன்.
      உங்கள் கருத்து மிகவும் உற்சாகம் கொடுக்கிறது.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!