செவ்வாய், 28 ஜனவரி, 2020

கேட்டு வாங்கிப்போடும் கதை :  சந்திப்போம்; பிரிவோம்;மீண்டும் சந்திப்போம்  1/3 - ஜீவி 

சந்திப்போம்;   பிரிவோம்;   மீண்டும் சந்திப்போம்!
ஜீவி

   ==========       

1/3


அது எப்படித்தான் அவளுக்கு விழிப்பு ஏற்பட்டதோ தெரியவில்லை.  கரெக்டாக அந்த நேரத்திற்கு விழித்துக் கொண்டிருக்கிறாள்.

மெல்ல என் தோள் அசைக்கப்பட, "என்ன?.." என்றேன்,  அசுவாரஸ்யமாக,  கொட்டாவியினூடே.

கிசுகிசு குரலில், "மணி நாலரைங்க.." என்றாள்.

"அதுக்கென்ன?"

"அவன் வர்ற நேரங்க.... எப்படியோ எனக்கு 'டக்'ன்னு முழிப்பு வந்திடுத்துங்க.."

"அதெல்லாம் அனிச்சை செயல்.  நேற்றைக்கு, அதுக்கு மொத நாள், இதே நேரத்துக்கு முழிச்சிண்டிருக்கேல்யோ,  அதான் இன்னிக்கும்.." என்று நான் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே,  "உஷ்.." என்று என் வாயைப் பொத்தினாள் உஷா.

"ரெண்டு நாள் தான் என்ன சொல்றான்னு கேட்காமத் தவற விட்டாச்சு..  இன்னிக்கானும் என்னன்னு உத்துக் கேளுங்க..  லேசா எனக்கு குடுகுடுப்பை சத்தம் கேக்கறது..  சாந்தி வீட்டு வாசல்லே இருக்கான்னு நெனைக்கிறேன்...  இன்னும் ரெண்டு நிமிஷத்துலே இங்கே வந்திடுவான்.."

உஷாவின் நெருங்கிய தோழி சாந்தி வீடு,  எங்கள் வீட்டுக்கு இரண்டு வீடு முன்னால் இருக்கிறது.  அங்கே தான் இருக்கான்.  எஸ்..  இப்பொழுது எனக்கும் தெளிவா அந்த குடுகுடுப்பை சப்தம் கேட்டது.  எங்கள் வீட்டுக்கு முன் வீட்டுக்கு வந்து விட்டான்.

எங்கள் வீட்டுப் படுக்கை அறை ரோடு பக்கம் பார்த்த மாதிரி இருந்தது.    இந்த அறைக்கு வெளிப்பக்கம் ஒரு சின்ன திண்ணை.  திண்ணையைத் தாண்டி ரோடு.  அவ்வளவுதான்.

"என்ன செய்யட்டும், உஷா?..  ஜன்னல் கதவை லேசா தொறந்து பாக்கட்டுமா?.."

"நோ.." என்று அடிக்குரலில் அதிர்ந்தாள் அவள்.  "இந்த நேரத்திலே அவனைப் பாக்கக் கூடாது.."  அவள் குரலில் பதற்றம் மேலோங்கியிருந்தது..  " அவன் சொன்னது பலிக்க வரம் வாங்கிண்டு, நேரே சுடுகாட்டிலேர்ந்து வர்றதா சொல்லுவாங்க.." 

"எந்தக் காட்டிலேர்ந்து வந்தா என்ன?..   இப்போ  என்னை வேறு 
எழுப்பி..."  எரிச்சலாக வந்தது எனக்கு.  அந்த எரிச்சலுக்கு ஊடே இன்னொரு கொட்டாவி.

"உஷ்..  இதோ வந்திட்டாங்க..  நம்ம வீட்டு வாசல்லேயே..  என்ன  சொல்றான்னு உத்துக் கேளுங்க.. அது  போதும்.." உஷா முடிக்கக் கூட இல்லை,  லேசான ஆனால் உறுதியான குடுகுடுப்பை ஒலி ஈனஸ்வரத்தில் ஆரம்பித்து  கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடிக் கொண்டு வந்தது.

தூக்கக் கலக்கம் போன இடம் தெரியவில்லை.

சடாரென்று நான் படுக்கையிலிருந்து  எழுந்து விட்டேன்.  உஷா தடுத்தும் கேளாமல்,  படுக்கை அறையிலிருந்து வெளி வந்து,  வாசல் பக்க மெயின்  டோர் நோக்கி சத்தமில்லாமல் நகர்ந்து,  கதவு பக்கம் காது வைத்து,  அந்தக் குடுகுடுப்பைக்காரன் என்ன  சொல்கிறான்  என்று கேட்க முனைந்தேன்...

"நல்ல  காலம் பொறக்குது..  நல்ல காலம் பொறக்குது.."  இது எல்லோரும் சொல்றது தான் என்று  நினைக்கையிலேயே, தொடர்ந்து  'குடுகுடு'வென்று உடுக்கை ஒலி.. தொடர்ந்து, அவன்  என்ன சொல்லப் போகிறான் என்று கேட்க நான் முனைகையிலேயே,  ஸ்பஷ்டமாக அவன் குரல் கேட்டது.. 

"இந்த வூட்டு சாமிக்கு நல்ல காலம் பொறக்குது..  நல்ல காலம் பொறக்குது...  அம்மணி அரச மரம் சுத்த வேண்டாம்;   அரசன் வரப் போறான்,  ஆறிரண்டு மாசத்திலே..  நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது.."

இதற்கு மேல் என்ன சொல்லப் போகிறான்  என்று கேட்டும் ஆவலில் காதைத் தீட்டிக் கொண்டேன்.

'குடுகுடு' சப்தம் நிறுத்தி அவன் சொல்ல ஆரம்பித்தது  தெளிவாக உள்பக்கம் எனக்குக் கேட்டது.. "கச்சி மூதூர்  கைலாசநாதனே..  இச்செகத்து நாயகனே..  இடும்பை தீருமய்யா, உன் தயவாலே.."

மீண்டும் 'குடுகுடு'.    ஒரு நிமிடம் ஒலி நிறுத்தித்  தொடர்ந்தான்: "ஐயிரண்டு திங்கள் அம்மணி அவனைச் சுமந்து..  அழகான குழந்தை அய்யா பேர் சொல்ல..  இது கைலாசநாதன் கருணை..  மறக்க வேண்டாம்...."   தொடர்ந்து  'குடுகுடு'  சப்தம்.   சற்று நேரத்தில் சப்தம் கொஞ்சமாகக்  குறைந்தது...

அடுத்த வீடு,  அதற்கடுத்த  வீடு..  தாண்டி போய் விட்டான்  போலும்.

அந்த இருட்டிலும் முகம் பிரகாசிக்க படுக்கை அறைக்குத் திரும்பினேன்.  உள்ளுக்குள் கொப்பளிக்கும் உற்சாகம் வடிகால் காணாது தவித்தது..  

உஷாவுக்கு வாளிப்பான உடலமைப்பு..   அவள் கதவு  மூடிய ஜன்னல் பக்கமிருந்து ஒயிலாக அசைந்து வந்தது அந்த இருட்டிலும் மனசுக்கு  இதமாக இருந்தது.

"என்ன நீயும்  கேட்டயா,  அவன்  சொன்னதை?"

"ஆமாங்க..  ரொம்ப சந்தோஷமாக இருந்தது.."  அவள் குரலில் வழிந்த உற்சாகம் எனக்கு  கிறக்கமாக இருந்தது.

அவளை ஆதுரத்துடன் அணைத்துக் கொள்ளும் பொழுது அவள் உடல் படபடப்பை உணர்ந்தேன்.  புறாவை அதன் சிறகடக்கிக் கையில் பொத்திய வெதுவெதுப்பு.   "கூல்.. " என்று அவளை ஆசுவாசப்படுத்தினேன்.

என் அணைப்பிற்கிடையே.  "என்ன தெளிவாகச் சொன்னான், கேட்டீங்களா?" என்று பரவசத்துடன்  கேட்டாள்.

"எனக்கென்னவோ,  அவன்  சொன்னது அரைகுறையாகத் தான் கேட்டது..." என்றேன்,   அவள் காது கவ்வி.   அவள் சொல்லியதை அவள் சொல்லிக் கேட்க வேண்டுமென்ற ஆசை.

"தெரியுமே, எனக்கு!  முக்கியமான சமயத்திலே கோட்டை விட்டு விடுவீங்கன்னு..."

"எல்லாம் நீ இருக்கும்  தைர்யம் தான்.  நீ தான் சொல்லேன்,  என்ன
சொன்னான்னுட்டு.."

உஷா என்னிடமிருந்து  லேசாக விலகி,  என்  மாரில் சுட்டு விரலால் லேசாக அழுத்தினாள்..   கோலம் போட்டபடியே, "அய்யாவுக்கு அய்யாவைப் போலவே அழகான..."

"அழகான...?"

"க்குங்..."  என்று  சிணுங்கினாள்.  அந்த சிணுங்கலூடேயே, "குட்டிப் பாப்பா வந்து   குதிக்கப்  போகுதாம்.." என்று உஷா சொல்லி முடித்து வெட்கத்தில் என் கழுத்து கட்டிக் கொண்டாள்.

"அப்படியா சொன்னான்,  அவன்?.."

"பின்னே?..  நீங்க கேக்கலையா, அவன்  சொன்னதை?"  என்று ஏமாற்றம்  காட்டினாள்.

"பின்னேவா?..  பின்னாடி என்ன?"  என்று அப்பாவியாய் அவள் முதுகு திருப்பினேன்..

"ம்?..  குத்தினேனா,  பாரு.." என்று பொய்க்கோபத்தில் உஷா தன் வலக்கை குவித்து என் நெஞ்சு நோக்கிச் செலுத்துகையில், அவள் ரொம்பவும் குழைந்திருப்பதாக மனசுக்குப் பட்டது.

போதாக்குறைக்கு அதிகாலைக்  குளிர்  வேறு,  கொஞ்சம் கூடவே உள்ளறையிலும் உறைத்து சிலிர்ப்பேற்படுத்தியது.  போர்வையை இழுத்து மூடிக் கொள்கையில்  உள் கதகதப்பும்  உடலுக்கு  இதமாக இருந்தது.  

எப்பொழுது தூங்கினேன் என்ற நினைவேயில்லை. 

காலையில் எழுந்திருக்க முயற்சிக்கையிலேயே மணி  எட்டுக்கு  மேலாகி விட்டது.

ஒலிநாடாவில் ஒலித்துக் கொண்டிருந்த சுப்ரபாதம் தான் விழிப்பேற்படுத்தியிருக்கிறது.

பூஜை அறையில் ஊதுபத்தி மணத்திற்கிடையே  உஷா கைகுவித்து  ஆண்டவனிடம்  ஐக்கியமாகியிருந்தாள்.  தலையில் சுற்றியிருந்த டர்க்கி டவல், அவள் தலைக்குக் குளித்திருந்ததைத்  தெரிவித்தது. 

பல் விளக்கிக் குளித்து விட்டு வருகையில்,  உஷா புன்முறுவலுடன் எதிர்ப்பட்ட பொழுது  இன்றைக்கு வழக்கத்துக்கு  மீறி அழகாக இருப்பது போலத் தோன்றியது.    "டிபன்  ரெடி..   சாப்பிடறத்துக்கு முன்னாடி,  நீங்களும் சாமி  ரூம் போய் கும்பிட்டு வந்திடுங்க.." என்றாள்.

"ததாஸ்து.." என்று  நானும் பூஜை அறைக்குள் நுழைந்தேன்.  வழக்கமாகச் சொல்லும் தினப்படி ஸ்லோகங்களைச் சொல்லி, கும்பிட்டு தலை நிமிரும் போது தான்,  நிவேதனமாக வைத்திருந்த பழத்தட்டில்,  இரண்டாக மடிக்கப் பட்டிருந்த அந்த காகிதத்தைப் பார்த்தேன்.

'என்னவாயிருக்கும்' என்று  மனசு  நினைத்தாலும்   உஷாவிடம் கேட்டுக்  கொண்டால்  போயிற்று  என்று பூஜை  அறை விட்டு வெளி வந்தேன்.

டிபன்  சாப்பிடும் பொழுது உஷாவே சொன்னாள்.  "காலைலே எழுந்ததும் முதல்  வேலை என்ன தெரியுமா?..  நேத்து  ராத்திரி அந்த குடுகுடுப்பாண்டி சொன்னது அத்தனையும் வரிக்கு வரி ஞாபகப்படுத்திண்டு,  அட்சரம் பிசகாம அப்படியே  ஒரு பேப்பரில் எழுதிட்டேன்..  அவன்  சொன்னது மறக்காதுன்னாலும் பின்னாடி  எதுவும்  தப்பு நேர்ந்திடக் கூடாது, பாருங்கள்.."

"எழுதி,  பூஜை ரூம்லேயும் வைத்து  ஆண்டவன் கிட்டேயும் இத்தனை  நாள் மனசிலே வேண்டிண்டதை இப்போ எழுத்து ரூபமா எழுதி,  உன் கோரிக்கையை  சமர்ப்பித்து விட்டாயாக்கும்.." என்று சிரித்தேன்.

"க்குங்..." குஷி வந்து விட்டால் சொல்லும் அந்த  'க்குங்'கைச் சொல்லி, கன்னம் குழிவிழச் சிரித்தாள் உஷா.

இடையே இரண்டு மாதங்கள் ஓடிப்போனதே தெரியவில்லை.


ஒரு நாள் உஷாவிற்கு உடல்நிலை  சரியில்லாமல் இருந்தது.   "ஒண்ணுமில்லை;  சரியாய் போயிடும்.." என்று சொல்லச் சொல்ல மறுத்தவளை  வற்புறுத்தி  டாக்டரிடம் கூட்டிப் போனேன்.

டாக்டர் சொன்ன சேதி கேட்டு, ரெண்டு பேரும் ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தோம் என்று  தான்  சொல்ல வேண்டும்.

உஷாவின்  உயிருள் இன்னொரு உயிர் வளர்கிற செய்தியை போன்  போட்டு  அம்மாவுக்குச்  சொன்னேன்.  செய்தி கேட்டு  தம்பி வீட்டுக்குப் போயிருந்த அம்மா முகம் நிறைய சந்தோஷத்தைப் பூசிக் கொண்டு ஓடோடி வந்து விட்டாள்.

தலை குனிந்து நமஸ்காரம் பண்ணின மருமகளை,  கைத்தூக்கி  வாரி அணைத்துக் கொண்டாள்.   "சந்தோஷமா இருக்குடி, அம்மா..  எனக்கொரு பேரனையோ, பேத்தியையோ பெத்துக் குடுத்திட்டியானா,  அது போதும்.." என்று மனங்குளிர ஆசிர்வதித்தாள்.  உஷாவுக்கு ரொம்பவும் வெட்கமாகப் போய் விட்டது.    தலைகுனிந்து,  'க்குங்..' 

"உஷா.. எந்த பயமும் நீ  மனசிலே வைச்சிக்க வேண்டாம்..  அதான் நா வந்திட்டேன்லே?"..  என்று ஆதுரத்துடன் சொன்ன அம்மாவைக் காண எனக்குப் பெருமையாக இருந்தது.

குடுகுடுப்பைக்காரன் விஷயத்தை அம்மாவிடம் சொன்ன பொழுது
ஆச்சரியப்பட்டாள்.  "அன்னிக்குக் காலம்பற இப்படிச் சொன்னான்னு சொன்னியே?..  அப்புறம் அவன் வந்தானா?" என்று ஆர்வத்தோடு விசாரித்தாள்.

"இல்லேம்மா..  பொதுவா குடுகுடுப்பைக்காரர்களெல்லாம் நாடோடிகள் மாதிரி ஒரு ஊர்ன்னு நிலையில்லாம,  ஊர் ஊராச் சுத்துவாங்க..  எந்த ஊருக்குப் போனாலும் நாலைஞ்சு பேர்ன்னு ஒரே இடத்திலே தான் தங்கியிருந்து, தங்களுக்குள்ளே தெருத்தெருவா பிரிச்சிக்கிட்டு குறி சொல்லப் போவாங்கன்னு  எங்க ஆபிஸ்லே ஒருத்தர் சொன்னார்..  எங்கேயாவது அவனைப் பிடிச்சு,  அவன் சொன்ன நல்ல சேதிக்கு ஒரு நூறு ரூபாயாவது கொடுத்திடணும்ன்னு இதே வேலையா அலைஞ்சேன், அம்மா!  எங்கேயும் தட்டுப்படலே.. இவங்களைப் பத்தி விஷயம் தெரிந்த வேறு ஒருத்தர்,  இந்த மாசம் அவங்க வெளிலேயே வர மாட்டாங்களேன்னு சொன்னார்.  எனக்கு ஒண்ணுமே புரிலே, அம்மா.."

"நானும் அதைத் தாண்டா நினைச்சேன்..  எல்லாம் அந்த கைலாசநாதர் கருணைதாம்பா.  நாம்ப ஒரு தடவை காஞ்சீபுரம் போய்  அந்தக் கைலாசநாதர் சந்நதிலே வேண்டிண்டு,  கோயில் உண்டிலே,  அந்தப் பணத்தைச் சேர்த்திடலாம்..  நீ கவலைப்படாதே.." என்று தேற்றி, என் மனக்கவலைக்கு ஒரு மருந்தும் சொன்னாள்.

அம்மாவின் யோசனை எனக்கும் ஒரு விதத்தில் நிம்மதி ஏற்படுத்தியது.   



- தொடரும் -


     

39 கருத்துகள்:

  1. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு...

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. நல்ல காலம் பொறக்கட்டும்...
    நல்ல காலம் பொறக்கட்டும்...

    குளிரோடு குளிராக -
    கதையும் சிலுசிலு என்று இருக்கிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துரை ஐயா,

      பொதுவாகவே குளிரும் சிலுசிலுப்பும் சேர்ந்தால் இளம் தம்பதிகளுக்குக் கொண்டாட்டம் தான். தங்கள் அன்பான வருகைக்கு நன்றி.

      நீக்கு
  4. நிகழ்காலத்தில் இப்படியான குடுகுடுப்பைக்காரர்கள் குறைந்து போயினர்..

    பதிலாக வேறு விதமான குடுகுடுப்பைகள் பெருகி விட்டன...

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிய நாளாக அமையவும் மனமாற இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    ஜீவி சாரின் கதை மிகவும் நன்றாக உள்ளது. கடவுள் அருளினால் ஒருநல்ல காரியம் கைகூடி வரும் போது அவனுக்கு நன்றி செலுத்துவது மிக நன்மை தரும் செயலே.. அம்மாவின் யோசனை அருமையானது. அடுத்த வாரமும் தொடர்ந்து படித்திட ஆவலுடன் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை வாசித்து கருத்து சொன்னதற்கு நன்றிம்மா.

      நன்றி மறப்பது நன்றன்று என்பது கடவுள் விஷயத்தில் மறந்து போகாமல் இருக்க வேண்டும் என்பதற்குத் தானே மனுஷப் பிறவியே!.. அம்மாவின் யோசனையை அங்கீகரித்தற்கு நன்றி. அந்தக்கால பெரியவர்கள் மது நுட்பமான யோசனைகளுக்கு
      பெயர் பெற்றவர்கள், இல்லையா?..

      அடுத்த பகுதி, அதற்கடுத்த பகுதி என்று முழுக் கதையையும் வாசித்து விடுங்களம்மா. உங்களுக்குப் பிடிக்கும்.

      நீக்கு
  6. அனைவருக்கும் காலை வணக்கம். சிலு சிலுவென்று தொடங்கியிருக்கிறது கதை. தொடரக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராமைக் கேட்டால் இந்த சிலுசிலுவுக்கு ஒரு சினிமா பாட்டைக்கூட பரிந்துரைப்பார்.

      அடுத்த வெள்ளிக்கு நேயர் விருப்பமாக எங்கள் ப்ளாக்கில் விடியோவுடன் பதிவிடட்டும்.

      அரைகுறை பின்னூட்டத்தை மறுபடி வந்து முழுமை செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன், பா.வெ..

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள். ஜீவி சாரின் இந்தக் கதையை நான் படிச்சிருக்கேன். எங்கேனு தெரியலை! முடிவும் தெரிஞ்சு போச்சு. ஆனால் படிச்சப்போ இது ஜீவி சார் தான் எழுதினது என்பது தெரியாமலேயே படிச்சிருக்கேன். நல்ல சரளமானா ஓட்டம். கைலாசநாதர் கோயிலில்...........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. சகோதரி. எனக்கும் கதையின் தலைப்பை பார்த்தவுடனே இந்த கதை என்றோ, எங்கோ படித்த நினைவு வந்தது. கதையை படிக்க, படிக்க நினைவுகள் ஊர்ஜிதமாகின. ஆனாலும், முடிவு வரை கதை ஞாபகமில்லை. ஜீவி சகோதரர் ஏதாவது இதழில் இந்தக் கதையை வெளியிட்டுயிருக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை. அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். பார்ப்போம். நன்றி.

      நீக்கு
    2. கீதாம்மாவின் அக்மார்க் பின்னூட்டம்.

      //ஜீவி சாரின் இந்தக் கதையை நான் படிச்சிருக்கேன். எங்கேனு தெரியலை.. //

      அந்தக் கால பத்திரிகை வாசிப்பாளர்களுக்கு இப்படித் தான். எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கும். எங்கேன்னு மட்டும் லேசில் நினைவுக்கு வராது.

      //ஆனால் படிச்சப்போ இது ஜீவி சார் தான் எழுதினது என்பது தெரியாமலேயே படிச்சிருக்கேன்.. //

      ஒரே மாதிரியான கதைக்கரு கொண்ட கதைகளும் இந்த மாதிரி குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

      வாசித்த மாதிரி எதுவும் நினைவில் படிந்ததிருப்பதற்குக் காரணம் ஒருமுறை வாசித்தவுடனேயே வாசித்தது மனசுக்கு நெருக்கமாக போய் விடுவது தான்.

      அடுத்த பகுதி, அதற்கடுத்த பகுதின்னு ரெண்டு இருக்கு. முழுக் கதையும் முடிந்த பிறகு நீங்கள் வாசித்தது இந்தக் கதை தானா என்று நிச்சயம் பண்ணி விட்டால் போச்சு. சரியா, கீதாம்மா?..


      நீக்கு
    3. //ஆனாலும், முடிவு வரை கதை ஞாபகமில்லை.. //

      இன்னும் இரண்டு பகுதிகள் இருக்கு இல்லையா?.. அப்போ முடிவு தெரிஞ்சிடப்போறது தானே?.. தங்கள் மறு வருகைக்கு மிக்க நன்றி, கமலாம்மா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. வருக, வருக, தங்கள் வரவு நல்வரவாகும். நன்றி.

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. ஜீவி சார் தளத்தில் படித்த மாதிரி தான் இருக்கிறது.
    கதை மிக அருமை.

    எங்கள் ஊர் பக்கம் கோடாங்கி(குடு குடுப்பைக்காரர்) காலையில் வந்து என்ன சொன்னாலும் பலிக்கும் என்று நம்புவார்கள்.
    அப்புறம் வந்து பழைய துணிமணி, அரிசி எல்லாம் வாங்கி போவார் என்பார்கள்.

    இப்போது கேட்கவே முடிவது இல்லை இங்கு. (நான் வசிக்கும் இடத்தில்) வேறு பக்கம் வந்தாலும் வருவார் என்று நினைக்கிறேன்.


    //காஞ்சீபுரம் போய் அந்தக் கைலாசநாதர் சந்நதிலே வேண்டிண்டு, கோயில் உண்டிலே, அந்தப் பணத்தைச் சேர்த்திடலாம்.. நீ கவலைப்படாதே.." என்று தேற்றி, என் மனக்கவலைக்கு ஒரு மருந்தும் சொன்னாள்.//

    நல்ல செய்தி சொன்னவருக்கு பணம் கொடுக்க முடியவில்லையே என்று வருந்த வேண்டாம். அம்மா சொன்னது போல் உண்டியலில் போட்டு மனம் மகிழலாம்.

    ஆனால் காஞ்சிபுரத்தில் என்ன நடக்க போகிறது என்று பார்க்க (படிக்க) வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிம்மா..

      குடுகுடுப்பைக்காரர்களின் நினைவுகள் மறக்காது தான்.

      எப்பவாவது வீட்டு வாசலில் வெளிச்ச நேரத்தில் அவர்களின் குடுகுடு சப்தம் கேட்க நேர்ந்தால் வீட்டுக்கு வெளியே வந்து ரொம்ப நெருக்கமாக அவர்களிடம் பேசுவது எனது வழக்கம்.
      என் குழந்தைகள் கூட மறைவாக நின்று பயத்துடன் அதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவனை அனுப்பி வைத்ததும்,
      "என்னப்பா கேட்டே?" என்று என் சிறுவயது மகன் ஆவலுடன் கேட்பது உண்டு. இப்பொழுது அதெல்லாம் நினைவுக்கு வருகிறது.

      அம்மா சொன்னதற்குத் தான் மாதர் மத்தியில் எத்தனை அங்கீகாரம்?.. பெண்கள் எல்ளோரும் ஒரே மாதிரி தான் நினைப்பார்கள் போலிருக்கு. :)

      காஞ்சீபுரம் மறக்க முடியாத ஊர். கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு மேல் வாசம் செய்த புண்ணிய ஸ்தலம். பெரிய காஞ்சீபுரம் மேற்கு ராஜ வீதியில் ஸ்ரீமடத்திற்கு அருகில் தான் வீடு.

      அடுத்த பகுதியில் என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து விடும் தான். வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  11. நான் இந்தக் கதை படித்ததில்லை.
    இனிமையாக இருக்கிறது. குடுகுடுப்பைக்காரர்னாலே
    எனக்குத் திகிலாக இருக்கும்.
    இவர் நல்ல செய்தி சொல்லி இருக்கார்.
    தொடரும் போட்டுவிட்டாரே.
    தம்பதிகள் நெருக்கம் அழகாக இருக்கிறது.

    டர்க்கிடவல்,தலையில் நிற்காது:)
    But I get the drift. vaazhththukaL Jeevi sir.
    நீங்களும் நல்ல படியாகப் பூர்த்தி செய்வீர்கள் என்று
    நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குடுகுடுப்பைக்காரர்னாலே
      எனக்குத் திகிலாக இருக்கும்.//

      ஹஹ்ஹஹ்ஹா... ரொம்ப பேருக்கு அப்படித்தான். அவர்களைச் சுற்றி நிறைய உண்மை போலவான 'காற்று வாக்கில் கலந்த கதைகள்' உலவி வந்தது தான் காரணம்.

      //தம்பதிகள் நெருக்கம் அழகாக இருக்கிறது.//

      ரசிக்கப்படுபவர்களின் பார்வையிலிருந்து ரசனைகள் என்றுமே தப்பிப் போனதில்லை என்ற என் எண்ணத்தை உறுதி படுத்தியமைக்கு ரொம்பவும் நன்றி.

      //டர்க்கிடவல்,தலையில் நிற்காது:)//

      ஆமாம். வல்லிம்மா.. ஈரிழைத் துண்டாக அது இருந்திருக்க வேண்டும். ஈரிழைத் துண்டு என்றாலே எந்தக் காலத்துக் கதை இது என்று கேட்டு விடும் ஆபத்தும் இருக்கிறது தானே?.. அதனால் டர்க்கி. சரியா?

      கோ-ஆப்டெக்ஸூம் ஈரோடு ஈரிழைத் துண்டுகளும் கூடப் பிறந்தவை.

      // drift..//

      மிகச் சரியான புரிதல் உங்களது, வல்லிம்மா.
      அது ஒரு குறியீடு தான்.

      அருமையான வாசிப்பு அனுபவத்திற்கு நன்றி, வல்லிம்மா.

      நீக்கு
  12. வெகு அழகான கதை நடை .ஓஹோ மூன்று பாகங்கள்.
    சந்திப்போம்,. பிரிவோம் மீண்டும் சந்திப்போம்.
    வித்யாசமான தலைப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சந்திப்போம்,. பிரிவோம் மீண்டும் சந்திப்போம். //

      ஆமாம். இந்த செவ்வாயில் சந்தித்துப் பிரிந்து அடுத்த செவ்வாயில் மீண்டும் சந்தித்துப் பிரிந்து அதற்கடுத்த செவ்வாயில் சந்டிப்போம். சரியா?..

      நீக்கு
  13. நல்ல ஓட்டமுள்ளகதை தொடர்கிறேன்.

    குடுகுடுப்பை காரர்கள் கதைகளில்தான் படித்திருக்கிறேன் நம் ஊர்களில் அறிந்ததில்லை.

    பதிலளிநீக்கு
  14. அப்படியா?.. நீங்கள் குடுகுடுப்பைக்காரர்களைப் பார்த்ததில்லை?..
    அதிசயம், தான்!..

    பதிலளிநீக்கு
  15. இளைஞர் ஜீவியின் கதை என்று வந்தால் தொடர் போல இருக்கிற்துஒரு குடுகுடுப்பையின் வருகை இனிய இணைப்புக்கு வழி வகுத்ததோ வாழ்ககுடுகுடுப்பைக் காரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய இணைப்பு?.. கரெக்ட்! எது நடப்பதற்கும் நமக்கு சட்டென்று வெளிப் பார்வைக்குப் புலப்படாத ஏதேதோ தாம் காரணமாக இருக்கின்றன என்பது வியக்கத்தகுந்த உண்மை. எவரின் தூண்டுதலால் எது நடக்கிறது என்று தெரியாத உண்மை இது. விட்டு விடாமல் தொடர வேண்டுகிறேன். தங்கள் ஆழ்ந்த கருத்திற்கு நன்ரி.

      நீக்கு
  16. ரொம்ப நல்ல தொடக்கம். நல்லா இருந்தது படிக்க.

    கதை படிக்கும்போதே ஓவியர் மாருதி வரைந்தால் எதற்கு வரைந்திருப்பார், என்ன மாதிரி அந்த ஓவியம் இருக்கும் என்றெல்லாம் மனது சென்றது.

    அடுத்து என்ன நடக்கும்? தொடர்கதை மாதிரி ஒரு கொக்கியுடன் கதை முடியலையே என்றெல்லாம் தோன்றியது.

    நேரமில்லாத போதும் கமையை படித்தபோது நல்ல நடையும் கதைச் சூழலும் திருப்தியை உண்டாக்கியது.

    பொதுவாக ‘தொடரும்’ கதைகளை முடிப்பதற்கு முன் நான் படிப்பதுல்லை என்பதையும் இங்க சொல்லிக்கறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது கொஞ்சம் நீண்ட கதையாதலால் எங்கள் பிளாக்க்கின் வசதிக்கேற்ப பிரித்துப் போடப்பட்டிருக்கு, நெல்லை. அவ்வளவு தான். அதனால் ஒரு நீண்ட கதையை படிக்கிற வாக்கில் ஒவ்வொரு வாரமும் படித்து விடுங்கள். படிக்க நல்லா இருந்தது என்று சொன்னதற்கு நன்றி, நெல்லை.

      நீக்கு
  17. இந்தக் கதையை தலைப்புக்கு ஏற்றவாறு எப்படீன்னாலும் கொண்டுசெல்லலாம். பார்ப்போம் ஜீவி சார் எப்படி நகர்த்துகிறார் என்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்பை பின்னால் வரும் பின்னூட்டத்தில் அழகாய் நியாயப்படுத்தியிருக்கிறீர்கள். இந்தக் கதை எப்படி நகர்கிறது என்பதையும் பார்த்து விடுங்கள்.

      நீக்கு
  18. கணவன் மனைவி உரையாடல்கள் அவர்களின் அந்நியோனத்தைக் கண்ணில் கொண்டுவருகிறது.

    எழுத்தாளர்களுக்குத்தான் வயது கூடுமே தவிர எழுத்துக்கு இல்லை என ஜீவி சார் நிரூபித்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எழுத்தாளர்களுக்குத் தான் வயது கூடுமே தவிர எழுத்துக்கு இல்லை என.... //

      ஹஹாஹ்ஹா.. அருமையான அவதானிப்பு நெல்லை. அதை நீங்கள் சொல்லியிருக்கும் பாங்கு ரொம்பவும் அழகு.

      நீக்கு
  19. இந்தப் பிரிவு மீண்டும் சந்திப்பு எப்போதும்போல் தாய் வீடு பின் குழந்தையுடன் கணவனை மீண்டும் சந்திப்பதா....

    இல்லை மீண்டும் சந்திப்பது என்பது குழந்தையிடம் கணவனை அவள் மீண்டும் காண்பதா...

    அல்லது வேறு மாதிரியாக கதையைக் கொண்டு செல்லப் போகிறாரா?

    காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  20. பிரசவத்திற்காக காத்திருக்கும் ஒரு பெண்ணின் நிலையை கணவனுடனான பிரிவையும், மீண்டும் சந்திப்பையும் கோர்த்து எவ்வளவு நேர்த்தியாக கதைத் தலைப்புடன் இணைத்து சிந்தித்திருக்கிறீர்கள் என்று வியப்பாக இருக்கிறது. தொடர்ந்து வாசித்து விடுங்கள். தங்கள் முத்தான பின்னூட்டங்களுக்கு நன்றி, நெல்லை.

    பதிலளிநீக்கு
  21. இளைஞர் ஜீவி எழுதிய கதை என்று அவரது புகைப்படத்தைப் பார்த்தவுடன் தெரிந்தது! கதையும் அப்படியே இருந்தது.
    குடுகுடுப்பைக்காரன் என்ன சொல்லி இருப்பான் என்று ஒரு சின்ன சஸ்பென்ஸ் வைத்து அதையும் பாசிட்டிவ் ஆக முடித்ததற்கு நன்றி.
    இளம் தம்பதிகள் என்றென்றும் சந்தோஷமாக இருக்கட்டும்


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை இங்குப் பார்த்ததில் சந்தோஷம், ரஞ்சனி மா. இளம் வயதுப் படம் ஏதாவது கொடுங்கள் என்று ஸ்ரீராம் கேட்டதினால் கொடுத்தேன். அவ்வளவு தான் இந்த என் புகைப்படத்திற்கும் கதைக்கும் சம்பந்தம். கதையைத் தொடர்ந்து வாசித்து விட வேண்டுகிறேன். அடுத்த பகுதியில் சந்திக்கலாம். நன்றி.

      நீக்கு
  22. நல்லதொரு ஆரம்பம். மேலும் தெரிந்து கொள்ள இதோ அடுத்த பகுதிக்குச் செல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்! :) இடைவெளிக்குப் பிறகு இங்கே வருவதால் அடுத்த பகுதியும் வந்திருக்கும் எனத் தோன்றியது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை எங்கே காணோம் என்று நினைத்துக் கொண்டீருந்தேன். இதோ வந்து விட்டீர்கள். அடுத்த பகுதி வரும் செவ்வாய்க் கிழமை வெளிவருகிறது. மொத்தம் மூன்று பகுதிகள். தொடர்ந்து வாசித்து விடுங்கள், வெங்கட். நன்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!