செவ்வாய், 21 ஜனவரி, 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை :  தென்னம்பாளை - துரை செல்வராஜூ 


தென்னம்பாளை.


துரை செல்வராஜூ
==============



பிள்ளையார் கோயிலைக் கடந்தபோது பின்னாலிருந்து அழைக்கும் குரல்...

அஞ்சலகத்தின் உள்ளிருந்து தபால் கட்டுடன் வேகமாக வெளியே வந்தார் ராமையா...

அப்பாவோட கூட்டாளி...

சின்னவங்களோ பெரியவங்களோ எல்லார் கிட்டயும் மரியாதை காட்டுற நல்ல மனுசன்..

அப்படியே சைக்கிளில் வட்டமடித்துத் திரும்பினான் முத்து...

'' முத்து... ஒரு நிமிஷம்... துபாய்...ல இருந்து லெட்டர் வந்திருக்குது!.. ''

கேட்டதுமே முத்துவேல் மனதிற்குள் மகிழ்ச்சி வெள்ளம் ஆர்ப்பரித்தது

தம்பி ரத்தினம் - ரத்னவேல் - எழுதியிருக்கிறான்...  துபாய்க்குப் போய் இரண்டு மாதங்கள் ஆகின்றன..

இது நாலாவது கடுதாசி...

கையிலிருந்த கட்டைப் பிரித்து அந்த கடிதத்தை எடுத்துக் கொடுத்தார்...

வெள்ளை நிறத்தில் நீலம் சிவப்பு வண்ண பட்டைகளுடன் கூடிய அந்தக் கடித உறையைக் கையில் வாங்கியதுமே கண்கள் கலங்கின...

'' என்னா முத்து?... ''

'' ஒண்ணும் இல்லை.. மாமா.. தம்பியோட நெனப்பு வந்துடுச்சு...  பத்து வயசு வரைக்கும் எந்தோள்..ல தான் தூங்குவான்...  எப்படியெல்லாம் வளர்ந்தோம்!... காலம் மாறுனதா.. காட்சி மாறுனதா?...  ஆளுக்கு ஒரு திசையா ஆயிட்டோம்!... ''

'' அதுக்கு என்ன இப்போ?... உலக நீதி இது தானே முத்து!..  முட்டைக்குள்ளேயே குஞ்சு இருந்தா அது பறக்கிறது எப்போ?..
அண்டவெளி ஆகாசத்தை அது அளக்கிறது எப்போ?.. ''

முத்துவின் தோளில் தட்டித் தேற்றினார்...

''சரி.. நான் வரட்டுமா!... ''

'' வாங்க மாமா ஒரு டீ குடிக்கலாம்!...''

'' இருக்கட்டும் முத்து!..''  - மறுத்தார் ராமையா...

அவரை விடாப்பிடியாக இழுத்துக் கொண்டு எதிர்ப்புறம் இருந்த டீக் கடைக்குள் நுழைந்தான்...

'' டீ மட்டும் போதும்!.. '' - என்றார்...  ரெண்டு வடையும் வாங்கிக் கொடுத்து தானும் சாப்பிட்டான்...

'' சரி முத்து... நான் கிளம்பறேன்.. தம்பிக்கு கடுதாசி எழுதறப்போ நான்
விசாரிச்சேன்..ன்னு ஒரு வரி எழுதிப் போடு.. ரெண்டு வருசந்தானே காத்து
மாதிரி பறந்து போகும்... திரும்பி வந்து கல்யாணம் காட்சி..ன்னு சந்தோசமா இருக்கட்டும்... நீ மட்டும் மனசு தளராம தைரியமா இரு!.. ''

சைக்கிளில் ஏறி தெற்குத் தெருவுக்குள் நுழைந்தார்...

தனது சைக்கிளைத் திருப்பிய முத்து அருலிருந்த பிள்ளையார் கோயிலுக்குள் நுழைந்தான்... கடிதத்தை நிலைப்படியில் வைத்து கும்பிட்டான்...

'' தம்பியோட பக்கத்துலயே இருந்து பார்த்துக்க வேணும் பிள்ளையாராப்பா!... ''

கிண்ணத்தில் இருந்த விபூதியை எடுத்துப் பூசிக் கொண்டான்...

அங்கேயே அமர்ந்து உறையைப் பிரித்தான்...  நறுமணம் கமழ்ந்த - அந்தக் கடிதத்தை எடுத்து வாசித்தான்...

ஏதேதோ சிந்தனைகள் நெற்றியில் விரிந்தன...

பிள்ளையாரை மறுபடியும் கும்பிட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டான்...

அடுத்த பத்து நிமிடங்களில்....

வாசல் முன் கொட்டகையில் அப்பா அமர்ந்திருந்தார்..  ஜிம்மி வளையமாகச் சுருட்டிக் கொண்டு அருகில் கிடந்தது..

சைக்கிள் சத்தத்தைக் கேட்டதும் உடலைச் சிலுப்பிக் கொண்டு ஓடோடி வந்தது..  வேட்டியைப் பிடித்து இழுத்தது..தாவியது.. குதித்தது..

'' வா.. முத்து... லெக்ஷ்மி எப்படி இருக்கா?..  புள்ளைய தூக்கிக்கிட்டு வந்திருக்கலாம்..ல.. ''

'' நான் கடைத் தெருவுல இருந்து அப்படியே வர்றேன்!.. ''

'' மங்களம்...இங்க வந்து பாரு.. பெரியவன் வந்திருக்கான்!.. ''

'' வாப்பா!... என்ன இது இந்த நேரத்துல?... '' - வீட்டிற்குள்ளிருந்து அம்மா...

'' சின்னவன் கடுதாசி போட்டுருக்கான்...  ஒரு வாரமா வேலைக்குப் போறானாம்... ''

'' சம்பளம் வாங்குனதும் மறுவேலையா டிராப்ட் எடுத்து அனுப்பச் சொல்லி எழுதிப் போடு... கண்ட பயலுங்களோட சேர்ந்து ஆட்டம் போடாம ஒழுங்கு மரியாதையா இருக்கச் சொல்லு... ''

அப்பாவிடமிருந்து உத்தரவு பிறந்தது...

'' சாப்பாடு எல்லாம் உடம்புக்கு ஒத்துக்குதாமா?... வெயில் ஜாஸ்தியா
இருக்கும்..ன்னு சொல்றாங்களே.. என்னமோ அந்த கருப்பசாமி தான்
காப்பாத்தணும்!.. ''

'' வேறொண்ணு சொல்லியிருக்கான்!... ''

'' என்னா அது?... ''

'' அங்கே அவுங்க கம்பேனியில மறுபடியும் ஆளு எடுக்குறாங்களாம்.. உனக்கும் விசாவுக்கு கேக்கட்டுமா?... ந்னு கேட்டு எழுதியிருக்கான்!.. ''

ஒரு நிமிஷம் முத்துவேலை உற்றுப் பார்த்தார் அப்பா...

'' அவன் நாலு எழுத்து படிச்சிட்டுப் போயிருக்கான்..  உனக்கு என்ன தெரியும்?.. பத்தாங் கிளாசுக்கு மேல படிப்பு ஏறலை...  அதான் தென்னந்தோப்பை உம் பேர்ல எழுதி வைச்சிருக்கேனே!...காடு கரையப் பார்த்துக்கிட்டு இங்கேயே இருக்கக் கூடாதா?... ''

அவ்வளவு தான்.. இதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை...

அதுவரைக்கும் மௌனமாக இருந்த அம்மா -

'' இப்பவே உம் பொண்டாட்டி உன்னைத் தனியாக் கொண்டு போய்ட்டா.. ''

'' நீங்க தானே தனியா போகச் சொன்னீங்க!?.. '' -  முத்து மெதுவாகச் சொன்னான்.. இருந்தாலும் எடுபடவில்லை...

'' நீயும் அரேபியாவுக்குப் போயி கடல் காசு வந்தது...ன்னா
எல்லாரையும் ஒரு கை பார்க்கிறேன்..ன்னு நிப்பா அவ...  அதுவுமில்லாம ஊரு சனங்களுக்குத் தான் வாயும் வயிறும் சேர்ந்து எரியும்... ''

ஒன்றும் பேசுவதற்கில்லாத பொழுதில் அமைதி இரும்பாகக் கனத்தது..

'' சரி.. நான் போய்ட்டு வர்றேன்... உடம்பைப் பார்த்துக்குங்க... ''

சைக்கிளைத் தள்ளிக் கொண்டு கிளம்பினான்...

வேலைப் படலைக் கடந்து வந்த ஜிம்மி - மறுபடியும் எப்போ வருவே!.. - என்பது மாதிரி வாலை ஆட்டிக் கொண்டு நின்றது...

அங்கிருந்து மூன்று மைல் பயணம்... தங்கச்சி வீடு...

உச்சிப் பொழுதாகி விட்டது...

நடை சாத்தியிருக்க - வாசலில் நின்று குரல் கொடுத்தான்..

சில விநாடிகள் கதவு திறந்து கொள்ள எட்டிப் பார்த்தாள் தங்கச்சி..

'' வா.. அண்ணே!.. என்ன இது இந்த வெட்ட வெயில்...ல!.. ''

கையில் இருந்த பையை தங்கச்சியின் கைகளில் கொடுத்தான்...

அதை வாங்கி அதனுள்ளிருந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை ஏனோ தானோ என்று பார்த்து விட்டு கதவுக்குப் பின்னால் மாட்டினாள்...

'' உள்ள வா அண்ணே!... ''

'' இருக்கட்டும்...மா!... '' - வாசலிலேயே அமர்ந்து கொண்டான் முத்து...

'' மச்சான்... வாங்க சாப்பிடுங்க!.. ''  -  உள்ளிருந்து வத்தக் குழம்பு வாசத்துடன் குரல் வந்தது..

தங்கச்சி புருசன்...  தாலுக்கா ஆபீஸ்ல வேலை... தாசில்தாருக்கு டிரைவர்...

'' இருக்கட்டும் மாப்ளே... சொன்னதே சந்தோசம்!... ''

தோளில் கிடந்த துண்டை எடுத்து வியர்வையைத் துடைத்துக் கொண்டு
விவரத்தைச் சொன்னான்...

'' அதுக்கென்ன.. இனிமே கூரையப் பிச்சிக்கிட்டு கொட்ட வேண்டியது தான்..  நான் தான் ரெட்டை புள்ளைங்க அதுவும் பொண்ணாப் பெத்து வச்சிக்கிட்டு இருக்கேன்... ''

'' தென்னந்தோப்பைக் கொடுக்கறேன்.. ந்னு சொன்னது தான் மிச்சம்...
கரும்பு தான் பேச்சு... ஒரு துரும்பைக் கிள்ளிப் போடலை.. ஒரு குரும்பையக் கூட கண்ணுல காட்டலை... இருக்குறவங்களுக்கு இரும்பு மனசாப் போச்சு... ''

வீட்டெதிரில் நிழல் விரித்திருந்த மா மரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் முத்துவேல்..

'' அண்ணனும் தம்பியும் அரேபியாவுல சம்பாரிச்சு ஆசைத் தங்கச்சிக்கு வரிசை வைக்காமலா இருக்கப் போறீங்க!... ''

'' சரி!.. '' - என்று அங்கிருந்து கிளம்பினான்..

வழியில் பசுபதி... ஒன்றாகப் படித்தவன்...

'' டே ... முத்து!.. நல்லாருக்கியா?... தங்கச்சி வீட்டுக்குப் போய்ட்டு
வர்றியா!... ''

மலர்ந்த முகத்துடன் புன்னகைத்தான்...

சைக்கிளில் இருந்து இறங்கிய முத்து விவரத்தைச் சொன்னான்...

'' முத்து... இந்த மாதிரி தம்பி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்..
இருந்தாலும் நல்லா யோசனை பண்ணிக்க!...  மூணு ஏக்கரும் இப்போதான் எடுப்பா இருக்குது...  நீயும் லெச்சுமியும் பட்டபாடு... எல்லா மரமும் பாளை விட்டு நிக்குது!... ''

மௌனமாக பசுபதியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் முத்துவேல்..

'' சரி.. ஏன் வெயில்.. ல நின்னுகிட்டு?.. வீட்டுக்கு வந்துட்டுப் போகலாம் வா!... ''

'' இன்னொரு நாளைக்கு வர்றேன் பசுபதி.. தனம் தேடிக்கிட்டு இருப்பா!... ''

சைக்கிளின் சக்கரங்கள் சுழன்றன..

வீட்டு வாசலில் வந்து நின்றபோது சூரியன் மேல் திசையில் இறங்கிக் கொண்டிருந்தான்...

'' எங்கே போய்ட்டு வர்றீங்க?... சாப்பிடாம கொள்ளாம?... ''

இன்முகத்துடன் எதிர் கொண்டாள் தனலக்ஷ்மி..

'' அப்பா!.. '' - என்று ஓடிவந்தது பிள்ளைச் செல்வம்...

பிள்ளையைத் தூக்கிக் கொண்ட முத்துவேல் வேலியோரத்தில் வாழை மரங்களுக்கருகில் இருந்த தொட்டித் தண்ணீரைக் கால்களில் ஊற்றிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்..

 கூடத்துச் சுவர் அருகில் அமர்ந்து சாய்ந்து கொண்டான்..

'' மத்தியானம் எங்கே போயிருந்தீங்க?... சாப்பிடக் கூட வரலை!... ''

விவரத்தைச் சொன்னான்...

'' முதல்ல சாப்பிடுங்க!... '' - என்றாள் தனலக்ஷ்மி...

'' அப்புறமா சாப்பிடலாம்... கொஞ்சம் தண்ணி கொடு... ''

செம்பில் தண்ணீர் கொண்டு வந்த தனம்  கணவனின் அருகில் அமர்ந்து கொண்டாள்...

'' ரத்னத்துக்கு என்ன எழுதிப் போடப் போறீங்க?... ''

'' என்ன எழுதலாம்?.. '' - திருப்பிக் கேட்டான் முத்துவேல்..

'' என்னை ஏன் கேக்கறீங்க!..  நீங்களாச்சு.. உங்க தம்பியாச்சு!.. '' -  பொய்க்கோபம் கொண்டாள் தனம்..

'' இருந்தாலும் மனைவி சொல்லே மந்திரம்.. ந்னு சொல்லியிருக்காங்களே!... ''

ஆகா!.. ரொம்பத்தான் எம்பேச்சைக் கேக்கறீங்க!... '' - தனம் சிரித்தாள்...

அவளது விழிகளை உற்று நோக்கினான் முத்துவேல்..

'' நாளைக்கு எழுதிப் போடறேன்!... ''

'' நீங்க என்ன எழுதுவீங்க..ன்னு எனக்குத் தெரியாதா?... ''

'' நான் என்ன எழுதுவேன்..னு உனக்கு எப்படித் தெரியும்!.. '' - முத்துவேலுக்கு ஆச்சர்யம்...

தனலக்ஷ்மி புன்னகையுடன் சொன்னாள்...

'' தம்பி!.. உன்னோட உடம்பைப் பார்த்துக்கோ... நீ சொன்னதே சந்தோசம்...
வயசான காலத்துல அப்பா அம்மா அவங்களோட பிள்ளைங்க இருக்கறது தான் அவங்களுக்கு நிம்மதி... நம்மோட கடமையும் அதுதான்!...''

'' நாம ரெண்டு பேரும் வெளிநாட்டுல இருந்தா அவங்களுக்குப் பெருமை தான்... ஆனாலும் அது ஆறுதல் ஆகிடுமா?.. அப்பா அம்மாவுக்கு ஆதரவு ஆகிடுமா?...  பெத்த புள்ளைங்கள்..ல ஒருத்தராவது பக்கத்துல இருக்க வேணாமா?.. ''

'' ஓ!.. '' - வியந்தான் முத்துவேல்..

'' நீ நல்லபடியா உழைச்சு நல்லபடியா ஊருக்கு வரணும்...  அதுதான் எனக்கும் பெத்தவங்களுக்கும் சந்தோசம்... ''

'' தென்னந்தோப்பு பாளை விட்டு நிக்குது... அதுவுமில்லாம அண்ணி மறுபடியும் மாசமா இருக்கிறா!...இந்த நேரத்துல எங்களுக்காக சாமிக்கிட்ட வேண்டிக்க!... ''

'' இதைத் தானே எழுதப் போறீங்க!... '' - என்று சொல்லி விட்டு வெட்கத்துடன் முத்துவேலின் தோளில் சாய்ந்து கொண்டாள் தனலக்ஷ்மி...

பொங்கி வந்த பூரிப்பில் தனலக்ஷ்மியின் நெற்றி முகட்டில் முத்தமிட்டான் முத்துவேல்..

ஒன்றும் புரியாத மகிழ்ச்சியில் செண்பகப் பூவாகச் சிரித்தது பிள்ளைச் செல்வம்....



ஃஃஃ


55 கருத்துகள்:

  1. வந்தாச்சு, வந்தாச்சு, முதல்/இரண்டுக்கு வந்தாச்சு!

    பதிலளிநீக்கு
  2. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் நல்வரவு, காலை/மாலை வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். துரை கதையாகத் தான் இருக்கும் என நினைச்சேன். படிச்சுட்டு வரேன்.

    பதிலளிநீக்கு
  5. இன்று எனது சிறுகதையைப் பதிப்பித்த ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
  6. அருமையான மனைவி. இவளைப் போல் மாமனார், மாமியார் சடைத்துக் கொண்டார்களே! போகட்டும். கணவனுக்கு நல்ல ஆலோசனையை அவன் கருத்துப் போலவே சொல்லி இருக்கும் கெட்டிக்காரி. பாளை விட்ட தென்னையை விடவா வெளிநாட்டு வாசம் முக்கியம்? என்ன இருந்தாலும் சொந்த மண்ணில் வசிக்கும் சுகம் வெளிநாட்டில் வருமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆயிரம் தான் இருந்தாலும்
      சொந்த மண்ணில் வாழும் சுகம் வராது தச்ன்...

      அந்த மூலைக்குத் துரத்தப்படும் நிலையினை என்ன என்று சொல்வது?...

      90% பேருக்கு வெளி நாட்டில் உழைப்பதில் விருப்பமே இல்லை...

      ஆனாலும் வேறு விதி இல்லை...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு
  7. கொஞ்சம் வித்தியாசமான கரு எனினும் முடிவு வழக்கம் போல் சுகமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமான கரு!..
      அப்பாடா... தப்பித்தாயிற்று...

      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி...
      நன்றியக்கா...

      நீக்கு
  8. தனம்போல் துணையிருந்தால்
    மனதுக்குள் வந்துவிடும் நிம்மதி

    குணமொன்றில்லாக் குதியல்களோடு
    குலவ நேர்ந்தவரின் கதி என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்பகத்தைச் சேர்ந்தார்க்கும்
      காஞ்சிரங்காய் ஈந்தன்றேல்
      முற்பவத்தில் செய்தவினை...

      - என்பது ஔவையார் திருவாக்கு..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  9. ஒரு கடிதம், அதன் தாக்கம், உறவினர்களின் மனதிலை என நிகழ்வுகள் விரிகின்றன.

    கிராமத்து மனிதர்கள், எண்ண உணர்வுகள் மனமைத் தாக்குகின்றன.

    ஆற்றொருக்கு போல சம்பவங்கள், நீரோடை போன்ற வெள்ளந்தி மனிதர்கள், ஆனாலும் வாழ்க்கை நடத்த அவசியமான பணம்..

    கதை மிக அருமை. பார்தத சந்தித்த மனிதர்களை நினைவில் இருத்துகிறமு.

    பாராட்டுகள் துரை செல்வராஜு சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை ...

      இப்படியான மனிதர்கள் இன்னும் இருக்கின்றார்கள்...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  10. வழக்கம் போல் அழகான, இயல்பான கதை. இவ்வளவு யதார்த்தமாய் கதை மாந்தர்களை படைப்பது எப்படி என்று உங்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். அது சரி, கற்றுக் கொடுத்து வரும் விஷயமா அது? மனம் நிறைந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      பெரிய பெரிய ஜாம்பவான்களின் மத்தியில் நான் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கின்றேன்..
      தங்கள் வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  11. மனநிறைவான கதை அருமை ஜி.

    ஆனாலும் இக்கதை முப்பது வருடங்களுக்கு முன்பு வரவேண்டியதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      அது என்ன முப்பது வருசத்துக்கு முந்தைய கணக்கு?..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  13. //அ நீங்க என்ன எழுதுவீங்க..ன்னு எனக்குத் தெரியாதா?... ''

    '' நான் என்ன எழுதுவேன்..னு உனக்கு எப்படித் தெரியும்!.. '' - முத்துவேலுக்கு ஆச்சர்யம்...
    ருமையான கதை.//
    நான் பேச நினைப்பது எல்லாம் நீ பேச வேண்டும் என்பது போல் முத்து எழுத நினைத்த்தை அப்படியே தன்ம் சொல்லி விட்டாரே!

    வரபோகும் புதுவரவை பார்த்துக் கொண்டு தென்னந் தோப்பில் மகிழ்ச்சியாக இருகட்டும்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...

      >>> நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் ...<<<

      இந்த கோணத்தை நான் இத்தனை நாள் யோசிக்கவே இல்லை...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. '' நாம ரெண்டு பேரும் வெளிநாட்டுல இருந்தா அவங்களுக்குப் பெருமை தான்... ஆனாலும் அது ஆறுதல் ஆகிடுமா?.. அப்பா அம்மாவுக்கு ஆதரவு ஆகிடுமா?... பெத்த புள்ளைங்கள்..ல ஒருத்தராவது பக்கத்துல இருக்க வேணாமா?.. '//அன்பின் துரைக்கு வாழ்த்துகள்.
    மனம் நிறை அன்பை மனதில் சுமந்து பெற்றோர் உற்றோரைப் பிரிந்து
    வாழும் அன்பர்களின் மனம் பளிங்காகக் காட்டி இருக்கிறீர்கள்.
    விட்டுச் செல்லப்பட்டோரின் ஆதங்கம் புரிந்தாலும்,
    முத்துவேல் போன்ற நல்ல பிள்ளைகளை நோவது யேன் என்று தெரியவில்லை.
    மனைவி மாந்தருள் மாணிக்கம். இந்த செல்வத்தைவிட்டு முத்துவேல் வேறெந்த செல்வமும் தேட வேண்டாம்.
    மிக மிக அருமை. வித்தியாசமான மறுபக்கக் கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      >>> முத்துவேல் போன்ற நல்ல பிள்ளைகளை நோவது ஏன் என்று தெரியவில்லை.. <<<

      காலத்தின் கட்டாயம் அன்றி வேறெதும் இல்லை..

      அன்பான கருத்துரைக்கு நன்றியம்மா...

      நீக்கு
  15. அன்பு துரையின் எழுத்தில் கிராமம் வாழுகிறது. கண்முன்னே தோன்றும் காட்சிகளில் நாம் ஒன்றும் விதமாக வரைந்து விடுகிறார். அன்பு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..

      நீக்கு
  16. அழகிய கிராமத்துக் கதை ... ஊர் , குடும்ப உறவுகள் மிக அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிரின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  17. மனதுக்கு இனிய கதை. கிராமங்கள் வாழட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி. . நன்றி..

      நீக்கு
  18. // காலம் மாறுனதா.. காட்சி மாறுனதா?... ஆளுக்கு ஒரு திசையா ஆயிட்டோம்!... ''

    முத்து!.. முட்டைக்குள்ளேயே குஞ்சு இருந்தா அது பறக்கிறது எப்போ?..
    அண்டவெளி ஆகாசத்தை அது அளக்கிறது எப்போ?.. '' //

    கவிஞர் மனசு படைச்சிருந்தா இப்படித் தான்.. எதை எழுதினாலும் ஒரு கவிதை அங்கே வந்து உக்காந்துக்கும்!..


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜீவி ஐயா...

      >>> கவிஞர் மனசு ... <<<

      தங்களுக்கு பெரிய மனசு...
      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி. . நன்றி..

      நீக்கு
  19. தம்பி ரத்தினம் கடிதத்தில் ஒரு துணையைத் தேடியிருப்பதாக எழுதியிருப்பானோ என்று எதிர்பார்த்தேன்.
    வழக்கமான பாட்டையிலிருந்து விலகிப் போனதே இந்தக் கதைக்கான வெற்றி தான்.. !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 35 வருடங்களுக்கு முன்னால் தென்னந்தோப்புகளுக்குள் வாழ்ந்திருந்த காலத்தை நினைத்து எழுதியது... அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி. . நன்றி..

      நீக்கு
  20. //தனலக்ஷ்மி புன்னகையுடன் சொன்னாள்...

    '' தம்பி!.. உன்னோட உடம்பைப் பார்த்துக்கோ... நீ சொன்னதே சந்தோசம்...
    வயசான காலத்துல அப்பா அம்மா அவங்களோட பிள்ளைங்க இருக்கறது தான் அவங்களுக்கு நிம்மதி... நம்மோட கடமையும் அதுதான்!...'' //

    தனலெஷ்மியின் பதில் வாசிப்போரின் வழக்கமான எதிர்பார்ப்புக்கூ எதிரான சம்மட்டி அடி!.. இயல்பான வார்த்தைகளில் அவள் தன் மனசை வெளிக்காட்டியிருப்பது கூடுதல் அழகைக் கதைக்குக் கூட்டியிருப்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> இயல்பான வார்த்தைகளில் அவள் தன் மனசை வெளிக்காட்டியிருப்பது கூடுதல் அழகு...<<<]

      தங்களது அன்பான கருத்துரைக்கு மகிழ்ச்சி ஐயா..

      நீக்கு
  21. //அவ்வளவு தான்.. இதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை...

    அதுவரைக்கும் மௌனமாக இருந்த அம்மா -

    .......................................... //

    அம்மாவின் பார்வை இன்னொரு அழகு!

    பெற்ற தந்தை, கூடப் பிறந்த அண்ணன் - தங்கை, தம்பி எல்லோருக்கும் இல்லாத ஒரு விசேஷ பந்தப் பிசின் -- பிரிக்க முடியாத ஒட்டுதல் -- தாய்க்கு தன் மகனிடம் உண்டு.. வயிற்றில் சுமந்து தன்னிலிருந்து பிரிந்து தனியாக ஆன உயிரல்லவா?..
    தன்னைத் தவிர வேறு யாரும் ஒரு இம்மி அளவு கூட தன் மகனிடம் கூடுதல் சொந்தம் கொண்டாட மனசளவில் அனுமதிக்காத ஒரு அஞ்ஞானம் இது! இயற்கையாக தாய்க்குலத்தின் மனசில் வெளிப்படும் உன்னதம்...

    அந்த மருமகளும் அவள் மகனிடம் அப்படித்தான் இருப்பாள்!

    இறைவன் தாய்க்குலத்திற்கு தந்த விசேஷ அனுக்கிரகம் இது!

    மனோ ரீதியான இந்த மன தர்மத்தை விரித்து விரித்துப் பார்க்க விதவிதமாக விரிந்து கொண்டே போகும்!..

    தன்னைப் போலவே இன்னொரு வீட்டில் கோலோச்ச மகளைத் தயார் படுத்த அதை இயற்கை விதியாக ஏற்றுக் கொள்ளும் தாய் மனம் மகனிடம் மட்டும் வேறுபடுகிறது!

    தாய்க்கு தன் மகன் தான் எல்லாம்!.. பெற்ற மகன் வளர வளர தாலி கட்டின தனக்கு எல்லாமுமான கணவனிடமிருந்து கூட மன அளவில் லேசான விலகல் ஏற்படும்! பிற்காலத்தில் தனக்கு சகலமுமாக இருக்கக் கூடியவன் இவன் தான் என்று எண்ணும் பேதை தாய் நெஞ்சம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சாரின் அலசல் இன்னும் அழகு. தாய் மனம் இனிய தத்துவம். எல்லாவற்றுக்கும் இரண்டு பக்கம். நிதானமாக இருக்கப் பழகி விடும் மனசு.

      நீக்கு
    2. >> தாய்க்கு தன் மகன் தான் எல்லாம்!.. பெற்ற மகன் வளர வளர தாலி கட்டின தனக்கு எல்லாமுமான கணவனிடமிருந்து கூட மன அளவில் லேசான விலகல் ஏற்படும்! பிற்காலத்தில் தனக்கு சகலமுமாக இருக்கக் கூடியவன் இவன் தான் என்று எண்ணும் பேதை தாய் நெஞ்சம்!..<<

      ஜீவி ஐயா அவர்களின் விரிவான விமர்சனம் புது எல்லையைக் காட்டுகின்றது...
      அதே சமயம் பிரமிப்பாகவும் இருக்கின்றது... மகிழ்ச்சி.. நன்றி... நன்றி..

      நீக்கு
    3. //இயற்கையாக தாய்க்குலத்தின் மனசில் வெளிப்படும் உன்னதம்...//என்னால் இதை உன்னதமாக ஏற்க முடியவில்லை. தன் மகன் தனக்கு மட்டுமே சொந்தம் என நினைப்பது அவ்வளவு சரியில்லை என்பதே என் கருத்து. ஆனால் பெரும்பாலான தாய்மார்கள் முதல் மகனுக்கு மட்டும் இந்த விதியை வைத்திருக்கின்றனர். மற்ற மகன்கள் இருந்தால் அவர்களிடம் இந்த உரிமையைச் செலுத்துவது இல்லை. முதல் மகன் கல்யாணம் ஆனாலே பொறுக்காத தாய்மார் பலரைப் பார்த்திருக்கிறேன். இப்போல்லாம் ஒரே பிள்ளையாகப் போய்விட்டதால் அப்படி இல்லை என்பதோடு இப்போதுள்ள வயதுக்காரர்கள் கொஞ்சம் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் நடந்து கொள்கின்றனர். மகன் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால் கணவனை லட்சியம் செய்யாத பெண்களைப் பார்த்திருக்கேன். ஆச்சரியமா இருக்கும்.

      நீக்கு
  22. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  23. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    மிகவும் அருமையான கதை. பொறுமையான மனம் கொண்ட மூத்த பிள்ளையின் மனதை அப்படியே படித்து அவனுக்காகவே வாழும் குணவதியான அவன் மனைவி , "ஏதோ ஒன்றை சொல்ல வேண்டுமே" என்பதாக பேச்சோடு பேச்சாக இவர்களை குற்றம் சொல்லும் பெற்றோர். அண்ணனும் தன்னைப்போல் முன்னேறி செல்வந்தராக வேண்டும் என்று நினைக்கும் அன்புத்தம்பி, எவ்வளவு செய்தாலும் நிறைவு கொள்ளாத தங்கை, பெற்றவருக்காக அவர்களை காப்பாற்ற வேண்டிய கடமைக்காக, உள்ளுரிலேயே தங்க ஆசைப்படும் அண்ணன் என அத்தனை கதாபாத்திரங்களையும் கண் முன்னே கொண்டு வந்து ஒரு அருமையான நாடகம் பார்த்த மாதிரியான உணர்வை தந்தது தங்கள் அற்புதமான எழுத்து. இந்த மாதிரி எழுத தங்களால்தான் முடியும். வாழ்த்துக்கள்.

    கதை மிகவும் அருமையாக இருந்தது. முத்துவின் முத்தான மனதுகேற்றபடி மனைவி, மக்களோடு கிராமத்திலேயே அவன் விருப்பப்படி நீடுழி வாழட்டும். கதை மூலம் நல்ல குடும்பத்தினரை சந்தித்த மகிழ்ச்சி உண்டாக்கியது. கதையில் நல்லதொரு நிறைவை தந்த தங்களுக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> முத்துவின் முத்தான மனதுகேற்றபடி மனைவி, மக்களோடு கிராமத்திலேயே அவன் விருப்பப்படி நீடுழி வாழட்டும். .<<<

      என்றைக்கும் குறைவில்லாமல் நிறைவாழ்வை முத்துவேலும் தனலக்ஷ்மியும் வாழட்டும்...

      தங்களன்பின் வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி....

      நீக்கு
  24. அன்பின் ஸ்ரீராம் அவர்களை இன்னும் காணவில்லையே!?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடந்த இரு தினங்களாகவே அவரை காணவில்லை. அலுவலக பணிகள் அதிகமோ?

      நீக்கு
    2. வந்து விட்டேன்.   சில முக்கியப் பணிகள் காரணமாக உடனுக்குடன் வரமுடியவில்லை.  இனியும் பிப்ரவரி பதினைந்து வரை சற்றே கடினமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

      அப்புறம்?

      அதுவே பழகிவிடும்!!!

      நீக்கு
    3. வணக்கம் சகோதரரே

      வாருங்கள். உடனுக்குடன் வர இயாலாததை உடனே வந்து சொன்ன உங்களின் இந்த அன்(பண்)பான குணத்திற்காகத்தான் நீங்கள் எங்களுடன் உடனிருந்து வராததற்கு வருத்தப்படுகிறோம். பிப்ரவரி பதினைந்து வரை உள்ள அந்த நாட்கள் எங்களுக்கும் கடினமான நாட்கள்தான்.. இருப்பினும் முக்கியமான பணிகள் என்றுமே முக்கியத்துவம் வாய்ந்ததுதான்..! அதில் சற்றேனும் மாற்றமில்லை... எனினும், இந்த நாட்கள் நட்புக்கு மட்டும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து நீங்கள் எங்களுடன் உடனுக்குடன் வர இயலாத சூழ்நிலையை பழகிக் கொள்ளாமலே கடக்கட்டும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  25. கௌதமன் சார், ஓகே? உடல் நலம் தானே? இன்னிக்கு என்ன இன்னமும் காணோம்? கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியலையா?

    பதிலளிநீக்கு
  26. ஓகே, மெதுவா வாங்க! கணினியில் சார்ஜ் இல்லை. நான் முடிஞ்சா சாப்பிட்டப்புறமா வரேன்.

    பதிலளிநீக்கு
  27. நான் பேச நினப்பதையே நீ பேசுவதே நல்ல றம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புன் ஐயா..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  28. அவருக்கே உரிய பாணியில் மிகச் சிறப்பாக சொல்லிச் சென்றிருக்கிறார். கதை நன்றாக இருந்தது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!