வெள்ளி, 12 மார்ச், 2021

வெள்ளி வீடியோ : இன்ப துன்பம் இரண்டிலும் பாதிப்பாதி இருவரும்

 எனக்கு கேபிள் டீவி இணைப்பு தந்து கொண்டிருந்தவர் திடீரென ஒருநாள் கம்பெனியை இழுத்து மூடிவிட்டு போலீஸ் ஆகிவிட்டார்.  அதில் ஒரே சந்தோஷம் அவருக்கு.  "செம வருமானம் பார்க்கலாம் ஸார்"

ஏரியாவில் ஏற்கெனவே இருந்த கேபிள் டீவிக்காரர் ஏகபோகமாக கொண்டாடிக் கொண்டிருந்த அதிகாரத்தை தட்டிப்பறித்த இளைஞர் அவர்.   அவரிடம் இணைப்பு பெற்றதும் எனக்கு நல்லதொரு நண்பரானார்.  முன்னர் இருந்த கேபிள் டீவிக்காரர் கனெக்ஷன் சரியில்லை என்று சொன்னால், வந்து பார்க்க நேரம் எடுப்பது, அல்லது பார்க்காமலேயே இருப்பது, பணம் வாங்கிக்கொண்டு, 'போன மாதம் நீங்கள் பணம் தரவில்லை' என்றெல்லாம் சொல்வது, என்று ராஜாங்கம் நடத்திக் கொண்டிருந்தார்.  எனவே இவர் வந்ததும் சந்தோஷமாகப் போனது.  சிறப்பாக, நட்புடன் பழகினார் இவர் என்றாலும் பழைய ஆளுடன் இவருக்கு அவ்வபோது மோதல்கள் நடக்கும்.​

ஒருநாள் ஒரு கேமிராவுடன் வந்தார்.  என்ன என்று கேட்டால்  அவர் அலுவலக மொட்டை மாடியிலிருந்து சில படங்கள் எடுத்தாராம்.  அவை கொஞ்சம் ஸ்பெஷல் என்றார்.  இனி பழைய கேபிள் டீவிக்காரர் வாலாட்ட மாட்டார் என்றார்.

எனக்கு இன்னொரு நண்பர் அறிமுகமானார்.  அவர் ஒரு வக்கீல்.  அவர் அப்போது அவ்வளவாக புகழ்பெறாத காலம்.  பத்திரிகைகளுக்கு அந்த ஏரியாவில் உள்ள குறைகளை போட்டோவுடன் எழுதி அனுப்புவது அவர் வழக்கம்.  அந்த வகையில் சில தேவையில்லாத வம்புகளை சேகரித்து வைத்திருந்தார்.  எனக்கு இருவருமே நண்பர்கள் என்பதால் மூவருமே ஒருவருக்கொருவர் அறிமுகம்.  

புதிய கேபிள் டீவி நண்பருக்கு போலீஸ் வேலை கிடைத்தது என்றதும் எனக்கொரு சங்கடம்.  நான் பழைய ஆளிடம் மறுபடி இணைப்பு வாங்க வேண்டிய நிலை!  போலீஸ் வேலை கிடைத்த கொஞ்ச நாளில் வக்கீல் நண்பரும் போலீஸ் நண்பரும் அடிக்கடி கருத்து மோதல்கள் இடத் தொடங்கினர்!

இரண்டு தொழில்களின் ராசி அப்படி!  

சாலைகளில் செல்லும்போது 'லாயர்' என்று குறிப்பிடப்பட்ட வண்டிகள் இருந்தால் போலீஸ் சற்று கவனத்துடன் பார்க்கும், ஏதாவது ஒன்றில் மாட்டுவாரா என்று.  மாட்டி விட்டால் கருத்து மோதல்கள் வெடிக்கும்!  அதையும் பார்த்திருக்கிறேன்.

இப்படி இருக்கையில் போலீஸ் அதிகாரியும், வக்கீலும் நண்பர்களாக இருக்க  முடியுமோ?  

அமிதாப்பும், சத்ருகன் சின்ஹாவும் போலீஸும் வக்கீலும்!  முதலில் நண்பர்கள்.  நடுவில் எதிரிகள்.  அப்புறம் உண்மை தெரிந்து, வில்லன்களைப் பந்தாடி மறுபடி நண்பர்கள்.  சுபம்!  படம் பெயர் தோஸ்தானா.

இப்படி ஒரு கதை, படம் கிடைத்தால் விடுவாரா பாலாஜி?   ஊ...ஹூம். 

அதுவும் அமிதாப் படம் என்றால் முதலில் ஓடிப்போய் தமிழ் உரிமை வாங்கி விடுவார்.  நாற்பத்தொரு வருடங்களுக்கு முன் வெளியான இதையும் அதுபோல வாங்கி போலீசாக கமலஹாசனையும், லாயராக சரத்பாபுவையும் நடிக்க வைத்து படத்துக்கு 'சட்டம்​'​ என்று பெயரிட்டார்!  ​ படம் வெளிவந்து ​இன்றைக்கு 38 வருடங்களாகின்றன.  ​இயக்கம் விஜயன்.  மாதவி கதாநாயகி.  ​

சுஜாதா சினி ஆர்ட்ஸ் படங்கள் அனைத்திலும் நாயகன் பெயர் ராஜா, நாயகி பெயர் ராதா என்றிருக்கும்!

அதில் ஒரு பாடல் மிக மிக கவனம் கவர்ந்த பாடல்.  அவ்வளவு நல்ல பாடல் என்றால் யார் பாடியதாக இருக்கும், எஸ் பி பி யைத்தவிர!

எல்லோருக்கும் நண்பர்கள் இருப்பார்கள்.  நிறைய பேருக்கு இதுமாதிரி நட்புத்துரோக அனுபவங்களும் இருக்கும்.  அந்த அனுபவங்கள் இல்லா விட்டாலும் பாடலை ரசிக்கலாம்.  அருமையான பாடல்.  குறிப்பாக சரணங்களில் எஸ் பி பி உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி விடுவார்.

வாலி எழுதிய பாடல்.  இசை கங்கை அமரன்.​  ​சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் கங்கை அமரன் இந்தப் பாடலை வெகுவாக சிலாகித்திருந்தார்.

ஒரு நண்பனின் கதை இது
 
ஒரு நண்பனின் கதை இது 
நண்பனா.. பகைவனா.. 
பாடினால் புரியலாம் 
நான் பாடவோ..

இன்ப துன்பம் இரண்டிலும் 
பாதிப்பாதி இருவரும் 
பகிர்ந்துகொண்டு பழகினோம் 
கண்ணாடி முன்னால் நின்று பார்த்தாலுமே 
என் விழி காண்பது அவன் முகம் என்று வாழ்ந்த 

தென்றல் போன்ற நண்பன்தான் 
தீயைப்போல மாறினான் 
சொன்ன வார்த்தை மீறினான்   
ஒரு தாயின் பிள்ளை போல உறவாடினோம் 
தோழனே துரோகியாய் மாறியே 
வஞ்சம் தீர்த்த 


48 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் என்றும் ஆரோக்கியமாக
    அமைதியுடன் வாழ இறை அருள் செய்யட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா..   வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.  அடுத்த ஆறு மாதங்களை கவனமாகக் கடப்போம்.

      நீக்கு
  2. ஓ . இந்தப் பாடல் நினைவிருக்கிறது.
    இதில் தான் அந்த மோட்டர் பைக் பாட்டு வருமோ?

    மாதவி நல்ல அழகான கண்களுடன்
    வந்து போவார்.
    வா வா என் வீணையே பாடலும் நினைவிலிருக்கிறது.

    கமல்,சரத் .ஜெய் ஷங்கர்,விஜயகுமார் என்று எல்லோருமே
    கொஞ்சம் செயற்கையாக இருக்கிறார்களோ.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோட்டார் பைக் பாட்டு?    அது என்ன?  நீங்கள் சொல்வது ஒருவேளை சிவகுமாரும்  சிவசந்திரனும் வரும் நெல்லிக்கனி பாடலோ?

      நீக்கு
  3. உங்கள் நண்பர்கள் கதை சுவாரஸ்யம். இப்போது உங்களுக்கு கேபிள் கனெஷன் இருக்கிறதா.

    இல்லாவிட்டால் சிரமம் தான்.
    லாயர் என்று போட்டிருந்தால் அதில் வக்கீகள் இருந்தே ஆக வேண்டுமா.
    எங்கள் வண்டியிலும் பேபி இன்ஸைட் கார் வசனம் ஒட்டி இருந்தது.
    அந்த பேபி வளர்ந்து இன்னோரு பேபியும்
    வந்த பிறகும் அதை வைத்திருந்தோம்.பேரன்களுக்கான
    போஸ்டர் அது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது நாங்கள் D2H டிஷ் வைத்திருக்கிறோம்.  அது வந்த புதிதில் வித்தியாசமாய் முயற்சித்து ஒரு பதிவு கூட போட்டிருந்தேன்!!

      நீக்கு
  4. மிக அருமையான பாடல். நிறைய தடவை கேட்டிருக்கேன்.

    கல்கண்டில் சினிமா விமர்சனத்தில் சட்டம் வெறும் மட்டம் என்ற கடைசி வரியைப் படித்த நினைவு இருக்கிறது.

    பாலாஜி படங்களில் கதை இருக்கும். பெயர் பெற்ற நிறுவனம். இரண்டு நாட்களுக்கு முன் ஒரு காணொளியில், பாலாஜி தன் எந்தப் படத்திற்கும் நூறாவது நாள் விழாலாம் நடத்தி காசைச் செலவழித்ததில்லை என்று கேட்டேன் (சிவாஜி மற்றும் ஜெவின் இரு படங்களுக்கு மட்டும்-எங்கிருந்தோ வந்தாள்?... ஒருசேர விழா எடுத்தாராம்.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..   சட்டம் வந்த புதிதில் பார்த்தது.  முன்பே தோஸ்தானா பார்த்ததால் இதில் அவ்வளவு ஈர்ப்பு ஏற்படவில்லை.  பாலாஜி வெற்றி விழா எடுக்கவில்லை என்ற தகவல் புதிது.  ஆனால் வெற்றி விழா எடுத்தது சிவாஜி பிலிம்ஸ் என்று தெரியும்!!!

      நீக்கு
    2. எங்கிருந்தோ வந்தாள் படத்திற்கு நிறைய செலவு செய்து விழா எடுத்த பாலாஜி அதில் பணியாற்றிய அத்தனை பேருக்கும் கேடயம் வழங்கினாராம். சில நாட்கள் கழிந்து ஊழியர் ஒருவர்,"இந்த கேடயத்தை வைத்துக்கொண்டு என்ன சார் செய்வது? அதற்கு பதிலாக பணமாக கொடுத்திருந்தால் எங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும்" என்றாராம். அதிலிருந்து எந்த வெற்றிப் படத்திற்கும் விழா எடுக்க மாட்டாராம். விழா,எடுத்தால் என்ன செலவாகுமோ அதை பகிர்ந்து ஊழியர்களுக்கு வழங்கி விடுவாராம். மலரும் நினைவுகள் நிகழ்ச்சியில் பாலாஜி கூறியது.

      நீக்கு
  5. எஸ்பி பி அவர்களால் உயிரும் உயரமும் பெறும்
    பாடல்களில் இது ஒன்று.

    எப்படித்தான் அந்த வரிகளில் உணர்ச்சியைப் புகுத்துவாரோ.
    பாடலில் நடித்தவர்.

    வாலி எழுதாத சிடுவேஷன்களே இல்லை என்று தோன்றுகிறது.
    மிக நல்ல பாடலுக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  6. நன்றிம்மா...  ஏதோ கமலே பாடுவது போல இருக்கும் பாடல்.  கங்கை அமரனும் அழகாக இசை அமைத்திருக்கிறார்.  

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. பாடல் கேட்டு இருக்கிறேன்.எஸ் பி பி நன்றாக பாடி இருப்பார்.
    கங்கை அமரன் இசை என்று தெரிந்து கொண்டேன்.
    நிறைய பாடல்கள் கங்கை அமரன் இசை அமைத்த பாடல்கள் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். எனக்கும் அவர் இசையில் ரொம்பப் பாடல்கள் பிடிக்கும்.

      நீக்கு
  9. ஸூப்பர் பாடல் ஜி இதை சொல்வதற்கு ஆரம்பித்த பின்னணி ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  10. போலீஸ் காரர் நண்பராக இருப்பது சில சமயம் விபரீதமாக இருக்கும். என்னுடைய அப்பா ஒரு சமயம் ஒரு பழைய நண்பன் போலீசாக இருப்பவரை கண்டார். இருவரும் சேர்ந்து பேசிக்கொண்டே நடந்தனர். அடுத்த நாள் அலுவலகத்தில் ஒரே விசாரிப்பு. ஏன் உன்னை போலீஸ் பிடித்தது என்ற கேள்வி. ஆக நண்பர் சீருடையில் இருக்கும்போது அவருடன் நடந்தோ வாகனத்திலோ செல்லாதீர்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அதே பயம், எச்சரிக்கை உண்டு JC SIR. .. அந்த நண்பன் அப்புறம் தொடர்பில் இல்லை. காவல்துறை பயம் பற்றி முன்னர் ஒரு வியாழனில் எழுதியது உண்டு.

      நீக்கு
  11. படிக்கும் காலத்தில் மிகவும் ரசித்த பாடல்... அதோடு...

    யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு...!
    பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று...!
    பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
    நான் என்ன கள்ளா? பாலா? நீ சொல்லு நந்தலாலா...

    பல நட்புகளின் கதை இது...!

    பதிலளிநீக்கு
  12. எனக்கும் பிடித்த பாடல்.

    //யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு...!// அர்த்தம் பொதிந்த வரிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட். அந்தப் பாடலும் முன்பே பகிர்ந்திருக்கிறேன்.

      நீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம்.
    ஒரு பாட்டு போட இவ்வளவு பில்ட் அப்பா? முன்னுரையை படித்ததும் இன்று வியாழனா? வெள்ளியா? என்று சந்தேகம் வந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா..ஹா... கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே...

      நீக்கு
  14. இந்தப் படத்தில் ஒரு காட்சியில் மாதவியும் கமலஹாசனும் ரெஸ்டாரெண்டில் அமரந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது சர்வர்,"சார் டூயட் பாடப் போகிறீர்களா?" என்று கேட்பார். கமலஹாசனால் வாய்ப்பு கிடைத்த கதாநாயகி மாதவி. பெரிய கண்கள்,ஆனால் அதில் பாவமோ,உயிரோ இருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிந்தியிலிருந்து அப்படியே...! ஹிந்தியில் உடனே அமிதாப்பும் ஜீனத்தும் "தில்லகி நீ தீஹவா" என்று பாடப் போய் விடுவார்கள்!

      நீக்கு
    2. ம்ம்ம்ம்ம், மாதவியை மலையாளப் படங்களில் பார்த்திருக்கீங்களா? அதுவும் மமுட்டியோடு நடிச்சு? அதே போல் ஷோபனாவும்! தமிழில் அவரைக் கவர்ச்சிக் கதாநாயகியாகவே காட்டிட்டாங்க. ஆனால் ஷோபனாவின் நடிப்பு! அபாரம்! பத்மினியெல்லாம் ஒண்ணுமே இல்லை. மாதவியும் மலையாளப் படங்களில் திறமையைக் காட்டி இருப்பார்.

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    4. ஷோபனா வேற லெவல். ஷோபனா,மாதவி இரண்டு பேர்கள் நடித்த மலையாள படங்களும் பார்த்திருக்கிறேன்."வாய்பேசும் வார்த்தை எல்லாம் கண் பேசும் அல்லவோ?" என்னும் வார்த்தைகளுக்கு முற்றிலும் பொருத்தமானவர் ஷோபனா. அவரை மாதவியோடு ஒப்பிடுவது க்ரைம்.

      நீக்கு
    5. ஒருத்தருக்கொருத்தர் ஒப்பீடெல்லாம் செய்யவில்லை. மாதவியும் திறமையான நடிகை என்பதே என் தாழ்மையான கருத்து.

      நீக்கு
  15. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    நலமே வாழ்க எங்கெங்கும்..

    பதிலளிநீக்கு
  16. இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறேன்.. ஆனாலும் அவ்வளவாக நினைவில் இல்லை..

    எல்லாருக்கும் இனிதாகட்டும் பொழுது...

    பதிலளிநீக்கு
  17. வியாழன் செம பிஸி என்றால் வெள்ளிக்கு கொஞ்சம் ஹாயாக இருக்கத் தோன்றும் தான். இந்த ஹாயில் பின்னால்ட்ட வியாழனுக்கு மேட்டர் தயார் பண்ணிக் கொள்ளலாம் தான்.

    இது கூட வலைப்பூ கொண்டிருக்கும் என் நண்பர் ஒருவரின் கதை தான்.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    இன்றைய இந்தப்பாடல் அடிக்கடி கேட்ட நினைவும் இல்லை. ஆனால் படம் பெயர் கேள்விப்பட்ட மாதிரியும் உள்ளது. பார்த்த மாதிரியும் உள்ளது. ஒரே குழப்பம். முதலில் பதிவுடன் ஆரம்பித்த உங்களின் தனிப்பட்ட கதையே இன்று என்ன கிழமை என குழப்பம் வந்து விட்டது..ஹா.ஹா.ஹா.
    ஆனால் சுவாரஷ்யமாக இருந்தது. படக் கதைக்கு பொருத்தமாக உங்களின் பழைய சில நினைவு கதைகளையும் சேர்த்ததை ரசித்தேன்.

    பாடல் இப்போது கேட்டேன். நன்றாக உள்ளது. ஒருவேளை சட்டம் என் கையில் என்ற டைட்டிலில் ஒரு படம் வந்ததோ? அதைத்தான் தொ. காட்சியில் பார்த்துள்ளேனோ என்னவோ? அதுவும் கமல்தான் கதாநாயகன் என நினைக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...   சட்டம் என் கையில் என்றும் ஒரு படம் இருக்கிறது.  டி என் பாலு படம்.  ஒரே ஒரு மெலடி, ஒரு எஸ் பி பி பாடல் நன்றாயிருக்கும் அதில்.

      நீக்கு
  19. where are my comments? I am getting the follow up comments. Bur my comments? where are they?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ சதி! உள் நாட்டு/வெளி நாட்டுச் சதி? ம்ம்ம்ம்ம், என்ன சொன்னேன்னு இப்போ நினைவில் இல்லை. நேத்திக்கே மறுபடி கொடுத்திருக்கணும். :(

      நீக்கு
  20. இத்திரைப்படம் சுமாராகத்தான் இருக்கும். பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!