16.4.26

வியாழானுகூலம் கிடைக்கப் பெற வியாழனைப் பாருங்கள்!

 

வியாழன் என்றாலே எனக்கு கோளும் (பள்ளிப் படிப்பு), குருவும் (வீட்டில் அடிக்கடி சொல்லப்பட்டதால்) நினைவுக்கு வருவார்கள். என் தனிப்பட்ட மனதில் காரணம் தெரியாமல் நீலமும் பச்சையும் கலந்த நிறமும் கடலும் மலையுமாய் மனதில் வரும். சின்ன சின்ன ஆசை....விண்வெளியில் போக ஆசை...  வியாழனிலிருந்து பூமியைப் பார்க்க ஆசை....  பூமியிலிருந்து வியாழனைப் பார்க்க ஆசை!!! 

ஜோதிட தத்துவங்களின் படி வியாழன் என்றால் குரு என்று சொல்லப்படுகிறது இல்லையா, அதனால குரு தினம் அன்று இதைச் சொல்லாமல் போகலாமா! ஒரு நல்ல தத்துவத்தோடு தொடங்குவோம்! 

இதற்கு இன்னொரு அர்த்தமும் கொள்ளலாம் என்பதை நான் கீழே சொல்வதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!!!! 


777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777

வியாழானுகூலம் கிடைத்திட வியாழனை நல்லா பாருங்க..... திருமணம், தொழில், கல்வி போன்றவற்றில் அனுகூலம் கிடைத்துவிடும்! குறிப்பாகத் திருமணம். சுப காரியங்கள் கைகூடி வரும்!!! - ஜோஸ்ய சிகாமணி ............
(Nellai and Sriram are not eligible! )

77777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777

தங்கைகளில் ஒருவர் ரொம்பவே ஜோதிடப் பிரியை. கால் தடுக்கினாலே நேரம் கிரஹம் பார்ப்பவள்.

"குட்டி, அது உன் கால்ல பேலன்ஸ் இல்லையாக்கும். உன் முட்டி மடங்கிருக்கும்" நான் இப்படித் தொடங்குவேன்.

"போடி....நேக்கு இன்னிக்கு சந்திராஷ்டமமாக்கும் அதுவும் கால்ல, சுண்டு விரல்ல நகத்துக்குன்னு, உனக்கும்தான். காலங்கார்த்தால அந்த ஜோஸ்யர் டிவில சொன்னாராக்கும்..."

“அட! டிவில நம்ம பேரெல்லாம் சொல்லி சொல்றாரா? வாவ்!!!"

"போடி நோக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை. அதான் இப்படி என்னை களியாக்கற"

"பின்ன, உன் கல்யாணத்துக்கு ஜாதகம் பாக்கறப்ப என்ன சொன்னார் ஜோஸ்யர்? 7-ஆம் இடத்தில் குரு இருந்தால், நல்ல, குணமுள்ள, அன்பான வாழ்க்கைத் துணை. திருமணம் இனிமையாக இருக்கும், கணவர் நல்ல நிலையில் இருப்பார்….செல்வச் செழிப்பும், சந்தோஷமும் நிறைந்த வாழ்க்கை அமையும்னு சொன்னாரில்லையா? செல்வச் செழிப்பு இருக்கு….பலித்தது. ஆனா மத்தது எல்லாம் நடந்ததா என்ன? இப்பவும் இந்த ஜோஸ்யத்தை போய்..."

"--------"

"அப்புறம், "........" அவளுக்கு ஏழாம் வீட்டோன் பாதகம் அதிபதின்னு சொன்னாரில்லையா? ஆனா அவளுக்கு எதுவும் அப்படி நடக்கலையே"

"......"

"குட்டி, கேளு, உன் மனசைக் கஷ்டப்படுத்தறதுக்காகச் சொல்லலை இதெல்லாம் விட்டுட்டு, மனசை சமநிலைப்படுத்தப் பாரு. அதுதான் உனக்கு எந்தக் காலத்துலயும், எந்த இடத்துலயும் என்ன நடந்தாலும் ஈசியா கடக்க உதவும்.”

“குட்டி நம்ம ரண்டு பேருக்கும் இப்ப 7 1/2 சனிடி. திருவண்ணாமலை போய்ட்டு வந்தா நல்லதுனு ஜோஸ்யர் சொன்னாராக்கும். நீ எப்ப வரமுடியும் சொல்லு? ப்ளான்பண்ணலாம்.”  

நான் என்ன சொன்னாலும் விட மாட்டாள்.

“எந்தக் கோயிலுக்குமே போக ஜோஸ்யர் சொல்லணுமா என்ன? நமக்குப் போகணும்னு தோணினா போய்டணும். திருவண்ணாமலைக்குப் போகலாமான்னு கேளு, நான் ரெடி. ஆனா இப்படி ஜோஸ்யர் சொன்னார்னு பலன் எதிர்பார்ப்போடு போறதுல எனக்கு விருப்பம் இல்லை.  7 1/2 எதுவும் செய்யாது.  எல்லா மத தத்துவங்கள்லயும் 7ன்றது ரொம்ப புனிதமான எண் தெரியுமோ? ஆன்மீக ஆழத்தையும், உள் அறிதலையும், உண்மையை நோக்கிய பயணத்தையும் பரிபூரண நிலையையும் குறிக்கும்! அதை அடைய 7 வழிகள், அதை நோக்கி மனசை செலுத்துன்னு வலியுறுத்த ஏழரைன்ற ( இந்த அரை, மனுஷன் நாம இடையில கவனம் சிதறுமே அதை நிரப்பிக்கொள்ளனு வைச்சுக்கலம்!!) கொஞ்சம் பயமுறுத்தல்கள். மனசை திடமா வைச்சுக்கோ! அதுதான் ரொம்ப முக்கியம். Focus on your inner peace!” 

என் வழக்கமான லெக்சர்!!!

“போடீ உங்கிட்ட போய் சொல்றேன் பாரு….சரி ஜோஸ்யரை விடு, நீ வரியா?”

“ரமண மகரிஷி ஆஸ்ரமத்துக்கும் போகலாம். ஆனா எனக்கு டக்குனு ப்ளான் பண்ண முடியாதே. டைம் கொடு. இடைல சனி ஒண்ணும் பண்ணமாட்டார். அவர் ரொம்ப நல்லவர்.”

எனக்கு சந்தர்ப்பம் அமையும் போது அவளுக்கு வர இயலவில்லை. அவளுக்கு முடிந்த போது எனக்குப் போக முடியவில்லை.

“நீ உனக்கு வாய்ப்பு வரும் போது போய்டு. நான் எனக்கு முடியும் போது போய்ட்டு வரேன். ஒரு வேளை ரெண்டு பேரும் சேர்ந்து போகும் வாய்ப்பு கிடைச்சாலும் ஓகே. பார்த்துக்கலாம்” என்று சொன்னேன். 

அவளும் போகவில்லை. நானும் போகவில்லை! 

இதோ வெயில் காலம் வந்தாச்சு. இந்த வெயிலில் என்னால் முடியாது. இருப்பிடம் வேங்கடம் வைகுண்டம்! மழைக்காலம் அல்லது குளிர்காலம்தான் எனக்குப் பிடித்த, ஒத்துக் கொள்ளும் காலங்கள். அப்போது பார்த்துக்கொள்ளலாம் திருவண்ணாமலையாரை!  நண்பர் சனியும் அமைதியாக இருக்கிறார்! என்று நினைக்கிறேன். இல்லை என்றால் இதற்குள் என் தங்கை என்னை ஒரு பிடி பிடித்திருப்பாள்!

7777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777

எண் 7 ன் சிறப்புகள் மற்றும் முக்கியத்துவம் மிகவும் அலாதியானது. எல்லா மதங்களிலும் எண் 7 புனிதமாகக் கருதப்படுகிறது என்று மேலே சொன்னேன் இல்லையா? 

நம் வீட்டில் இந்த 7 1/2 அடிக்கடி சொல்லப்படும். பொதுவெளிகளிலும் கூட இது பேசப்படுகிறதே! பயமுறுத்துகிறார்களே! "ஏன் அப்படி" அதைப் பற்றி 'ஹையோ 7 1/2' என்று பேசாமால் அதைப் பற்றி யோசிக்காமல் மனரீதியாகக் கடந்து வர முடியாதா என்று யோசித்து இணையத்தில் தேடிய போது (ஆங்கிலத்தில்) கிடைத்து வாசித்தேன்தெரிந்த போது சற்று ஆச்சரியமாக இருந்தது. கட உள் இதைத்தான் சொல்கின்றன இவை எல்லாமே. பண்டைய சடங்குகள் முதல் நவீன உளவியல் வரை.

பொதுவாக இந்து மதம் - 7 சக்கரங்கள். 7 முனிவர்கள். 7 புனித நதிகள். திருமணத்தின் போது நடக்கும் 7 அடிகள் (சப்தபதி) கூட.

சைவம் - 7 என்பது ஆன்மீக விழிப்புணர்வு, உள்ளுணர்வு மற்றும் ஞானத்தைக் குறிக்கும் எண்ணாகக் கருதப்படுகிறது. "நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும் எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான்" - திருமூலர். 

வைணவம் - வைணவத்தில் 'எண் 7' என்பது பூரணத்துவம், இறைவடிவம் மற்றும் ஆழ்ந்த ஆன்மீகத் தொடர்பைக் குறிக்கும் ஒரு புனித எண்ணாகக் கருதப்படுகிறது. பூலோக வைகுண்டத்தில் ஏழு திருச்சுற்றுகள், 7 கோபுரங்கள், 7 நிலைகள் + இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு!

கிறித்தவ மதம் - எண் 7 (ஏழு) பூரணத்துவம், நிறைவு மற்றும் தெய்வீகத்தன்மையை குறிக்கும் மிக முக்கியமான குறியீட்டு எண்ணாகும். விவிலியத்தில் (பைபிள்) 700-க்கும் மேற்பட்ட முறை பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த எண். இந்த எண். படைப்பின் 7 நாட்கள். 7 கொடிய பாவங்கள். 7 நற்பண்புகள். வெளிப்படுத்தல் புத்தகத்தில் 7 முத்திரைகள்.

யூத மதம் - மெனோராவிற்கு 7 கிளைகள் உள்ளன. ஓய்வு நாள் என்பது 7-வது நாள்.

இஸ்லாம் - எண் 7 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், தெய்வீகக் குறியீடாகவும் கருதப்படுகிறது. இது படைப்பு, வழிபாட்டு முறைகள் மற்றும் வானியல் தொடர்பில் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 7 வானங்கள். 7 பூமிகள். ஹஜ்ஜின் போது யாத்ரீகர்கள் கஃபாவை 7 முறை சுற்றி வருகிறார்கள்.

பௌத்தம் - எண் 7 என்பது ஆன்மீக விழிப்புணர்வு, முழுமை மற்றும் பிறப்பு-இறப்பு சுழற்சியைக் குறிக்கும் ஒரு புனிதமான, குறியீட்டு எண்ணாகக் கருதப்படுகிறது. புத்தர் பிறந்த பிறகு, அவர் 7 அடிகள் எடுத்து வைக்கிறார்அவருக்குக் கீழே தாமரை மலர்கள் பூக்கின்றன.

சமண மதம் - எண் 7 சமணத் தத்துவத்தின் (தத்வா) 7 கொள்கைகளை குறிக்கிறது. இவை ஆன்மா மற்றும் கர்மவினை பற்றிய உண்மைகளை விளக்குகின்றன.

எல்லா மதங்களும் ஒன்றைத்தான் சொல்கின்றன. அப்புறம் ஏனுங்க இந்த ஜனங்க இப்படி "மதம்" பிடிச்சு சண்டை போட்டுக்கறாங்க?  

இதற்குமே ரொம்ப நான் உள்ளே செல்லவில்லை. =======> விருப்பம் உள்ளவர்கள் இங்கு வாசித்துக் கொள்ளலாம்.<=========

77777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777

கடுகைத் துளைத்து ஏழு கடல் புகட்டி, குறுகத் தரித்த திருக்குறளை இந்த ஏழு என்ற எண்ணை வைத்துதான் ஆராய்ச்சி செய்த நம் டிடி அதை எழுதிவந்தார் என்பதும்  உங்கள் எல்லோருக்கும் தெரியும்! நினைவிருக்கிறதா? அவரைத்தான் காணவில்லை.

7777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777

போதும் கீதா, வகுப்பு எடுத்தது! 

ஓகே ஓகே!...இதோ ... Cool...Cool....Relax.... 

சமீபத்தில் நடந்த நிகழ்விற்குச் சென்றிருந்த போது, நிகழ்வுக்கு வந்திருந்த அப்பாவின் நெருங்கிய உறவுகள், நாங்கள் இருந்த அறைக்கு வந்து அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்தனர். கூடவே நிகழ்வுகளுக்கு இடையில் ஓய்வு எடுக்கவும் உடை மாற்றிக் கொள்ளவும்தான். வெயில். மின்விசிறி சூட்டைத்தான் விசிறியது. அப்பாவுக்காக ஏசி போடவில்லை. உறவுகளில் ஒரு இளையவர், எல்லோருக்கும் ஏழு சுவை கரும்பு ஜூஸ் (இஞ்சி, எலுமிச்சை, புதினா, கருப்பு உப்பு, மாங்காய், இளநீர், பழச் சுவைக்கு ஏதேனும் ஒரு பழம்) யாருக்கெல்லாம் வேண்டும் கையைத் தூக்குங்கள். தாத்தா உனக்கு கரும்பு ஜூஸ்? என்று அருகில் சென்று அவருக்குக் கேட்கும்படி பேசிக் கேட்டதும், 

"கரும்பு ஜூஸா? எனக்கு சக்கரை போடாம கொண்டு வா." !!!!!!

அறையில் எழுந்த சிரிப்பு அதிர்ந்து அடங்க ரொம்ப நேரம் ஆகியது.

77777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777

ஏழு ஸ்வரங்களுக்குள் கீதம்! ஏழு ஸ்வரங்களின் சங்கமம்!

எந்த ஒரு புகழ் வெளிச்சத்திலும், மீடியாக்களிலும் இல்லாத ஆனால் மிகவும் திறமை வாய்ந்த கலைஞர்கள் நம்மூரில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கும் தெரியும்தான்.

இங்கு, பெரும்பாலும் பூம் பூம் மாட்டுடன் பெண்கள் வருகிறார்கள். சும்மா மாட்டோடு வந்து காசு கேட்பார்கள். ஆனால், ஆண்கள்  நாதஸ்வரம் அல்லது புல்லாங்குழல் வாசித்துக் கொண்டே ஒவ்வொரு வீடாக வருகிறார்கள். மாதத்தில் ஒரு முறை எனலாம். சில வீடுகளில் இந்த மாடுகளுக்குப் பூ வைத்து குங்குமம் சந்தனம் எல்லாம் இட்டு தொட்டுக் கும்பிட்டு, மாட்டிற்குப் பழம், அவருக்குப் பணம். கொடுக்கிறார்கள்! Regular Customers!

அப்படி அவர்கள் வந்த போதெல்லாம் சில்லறை நோட்டுகள் இல்லாததால் அவர்களிடம் வாசிக்கச் சொல்லி காணொளி எடுக்க முடியவில்லை. மறைமுகமாக எடுத்திருக்கிறேன். சில்லறை நோட்டுகள் வைத்திருக்கும் போது அவர் வரமாட்டார்.  அவர் வரும் போது என்னிடம் இருக்காது.

இந்த வீட்டிற்கு வந்த பிறகு. நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்த போது ஒரு தெருவில் காணொளியில் இருக்கும் கலைஞர் வாசித்துக் கொண்டே வந்தார். பையில் சில்லறை நோட்டு இருந்தது. நீட்டினேன். அவர் அதை எதிர்பார்த்திருந்திருந்தார் போலும். கொடுக்கும் போதே ஒரு பாட்டு வாசிக்க முடியுமா, நான் வீடியோ எடுத்துக் கொள்ளட்டுமா என்றதும், வாசித்தார்.

என்னடா நம்ம எசமான் வாசிச்சுக்கிட்டே நடக்கறவரு இப்படி இங்கயே நிக்கிறாரே என்று மாடு யோசித்தது போலும். மாட்டிற்குப் பழக்கமில்லாத ஒன்று. அதன் கண்களில் மற்றொரு வீட்டில் தட்டில் பழங்களுடன் ஒரு பெண்மணி நிற்பது தெரிந்துவிட்டது. கண்ணில் பட்டது வாய்க்குக் கிடைக்காம போய்டுமோன்னு பொறுமையை இழந்து கால்களை மாற்றி மாற்றி வைக்கத் தொடங்கியது. எஜமானருக்கும் அடுத்த வரும்படி ரெடி! ஒரு சரணத்துடன் முடித்துக் கொண்டு அவ்வளவுதான் என்று தலையை ஆட்டிவிட்டு நடையைக் கட்டினார்! முடிந்தால், விருப்பமிருந்தால் கேட்டுப் பாருங்க. 

முதலில் இருக்கும் காணொளியும், இரண்டாவது இருக்கும் காணொளியும் இரண்டுமே இசைதான்!

A Busker - வீதி இசைக்கலைஞர் எந்தவித பக்க வாத்தியமும் இல்லாமல் திறந்தவெளி இசை. 



Orchestral music - சேர்ந்திசை. ஓர் அறைக்குள் பல வாத்தியங்களுடன் இசைக்கோர்வைகளுடன், இசைக்குறியீடுகளுடன் உருவாகும் இசை.

https://www.youtube.com/watch?v=0UQCBQzm2DE

படத்தின் பெயர் - கொஞ்சிப் பேசலாம்; இயக்குநர் - ஆர் காளீஸ்வரன்; கதாநாயகன் - வம்சி; கதாநாயகி - ஸ்ரீஜா; ராஜ்கிரண், விஜயகுமார், அவினாஷ் இவர்களும் இப்படத்தில் கதாபாத்திரங்கள்; இசை - இளையராஜா; பாடலாசிரியர் - முத்துலிங்கம்; பாடியவர்கள் - கார்த்திக், சாதனா சர்கம். படம் வெளிவந்த வருடம் - 2003 இப்பாடல் ஓகே என்றுதான் சொல்வேன். ஆஹா ஓஹோ என்று சொல்லிப் பிரித்து மேயும்படி இல்லை.

இப்படி ஒரு படம் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. (இல்லைனா மட்டும் உனக்கு அப்படியே எல்லா சினிமா பத்தியும் தெரிஞ்சுரும் பாரு!!! ஹிஹிஹி) 

"ஏழு கடல் நாட்டிலொரு ராணி இருந்தாள்" இப்பாடல் சங்கிலி எனும் திரைப்படத்தில், எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் இசையில், எஸ் பி ஷைலஜா, பி எஸ் சசிரேகா பாடியா பாடல். இப்பாடல் கேட்பதற்கு சுகம். கொஞ்சம் பழையபாடல் என்பதால்.

மற்றொரு பாடல் "ஏழு வண்ணத்தில்" என்று கே எஸ் ரவிகுமார் இயக்கிய ஜக்குபாய் திரைப்படத்தில், ரஃபி எனும் இசையமைப்பாளரின் இசையில் ஹரிஹரன் பாடிய பாடல். இசை மிகவும் சுமார் என்பதால் பகிரவில்லை.

இங்கு பகிர்ந்திருக்கும் பாடல்கள் எதுவுமே நான் இதுவரை கேட்டதில்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். பதிவிற்காகத் தேடிய போது கிடைத்துக் கேட்டவைதான். 

777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777

ஏழாவது மனிதன்

தமிழில், இயக்குனர் ஹரிஹரன் இயக்கிய "ஏழாவது மனிதன்" என்ற ஒரு திரைப்படம் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். பல விருதுகள் வாங்கிய படம். கலைப்படமோ? அதில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள் அனைத்தும் பாரதியார் பாடல்கள். 

அதே தலைப்பில் ஒரு பிரபலமான ஜப்பானிய சிறுகதை. கீழே சொல்லியிருக்கும் அக்கதை பற்றிய விவரங்களுக்கும் இப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தலைப்பைத் தவிர! 

ஹருகி முரகாமி எனும் புகழ்பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் எழுதிய "ஏழாவது மனிதன்" (The Seventh Man) ஒரு பிரபலமான அருமையான ஜப்பானிய சிறுகதை. 1996 ல் ஜப்பானிய மொழியில் முதன் முதலாக வெளியானது. அதன் பின் 1998ல் Granta எனும் ஆங்கில Journal சஞ்சிகையில்/ஆய்விதழில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. இது பின்னர் 2005-ஆம் ஆண்டு வெளியான "Blind Willow (ப்ளைன்ட் வில்லோ), Sleeping woman (ஸ்லீப்பிங் வுமன்)" என்ற தொகுப்பில் இடம்பெற்றது.

இக்கதையின் கருப்பொருள் - குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட மன அதிர்ச்சி மற்றும் உயிர் பிழைத்தவரின் குற்றவுணர்வு இவற்றை ஆராய்கிறது என்பதால் என் கவனத்தைப் பெற்று ஈர்த்த கதை.

ஒரு பேரலைக்கு (Tsunami) நண்பன் பலியானதால், வாழ்நாள் முழுவதும் பயத்துடனும் குற்ற உணர்ச்சியுடனும் வாழும் ஒருவரின் கதையை விவரிக்கிறது. பயத்தை எதிர்கொள்வதையும், அதிர்ச்சியிலிருந்து மீள்வதையும் இக்கதை மிகவும் ஆழமாகப் பேசுகிறது. ஏன் குற்ற உணர்ச்சி, பயம்?

ஏழாவது மனிதன் தலைப்பின் காரணம் - கதை சொல்லிக்குப் பெயர் இல்லை. ஏழாவது மனிதன் என்றே குறிப்பிடுகிறார் ஆசிரியர். காரணம், ஒரு குழுவாக அமர்ந்து ஆட்கள் சிலர் தங்களது வாழ்க்கையில் நடந்த விசித்திரமான அல்லது பயமுறுத்தும் சம்பவங்களைப் பகிர்ந்து கொள்வதாக இக்கதை தொடங்குகிறது. அந்த வரிசையில், ஏழாவது நபராக எழுந்து நின்று தனது கதையைச் சொல்பவர் இவர். எனவே, அந்த சபையில் அவர் எத்தனையாவது நபர் என்பதைக் குறிக்கவே இப்படி ஆசிரியர் பயன்படுத்துகிறார். 

மேலும் பெயர் என்று வைத்து ஒரு குறிப்பிட்ட தனிமனிதராகத் தெரியாமல், அதிர்ச்சிகரமான நிகழ்வின் நினைவுகளால் பாதிக்கப்பட்ட எவரோ ஒருவராக இருக்க வேண்டும் என்றும், ஒரு பொதுவான அடையாளமாக, வாசிப்பவர்களுக்கு, இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற உணர்வைத் தரலாம் என்பதற்காகவும் இப்படிச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர் என்றும் தெரியவருகிறது. மேலும் அவர் தன் அடையாளத்தை இழந்து ஓர் அதிர்ச்சியான சம்பவத்தின் நிழலிலேயே வாழ்ந்துவருவதாலும் பெயர் முக்கியமில்லாமல் போகிறது என்றும் சொல்லலாம்.

ஒரு செப்டம்பர் மாதம். மதியம். ஜப்பானின் கடலோர கிராமத்தில் கடலில் பேரலை (Tsunami) வருகிறது.  தன் நண்பன் 'K' என்பவனை அலையிடமிருந்து காப்பாற்ற முடியாமல், பயந்து ஓடித் தப்பிக்கிறான். அந்தக் காட்சியின் பயங்கரம் அவனை, அவன் வாழ்க்கையை வாழவிடாமல் நீண்ட காலத்திற்குத் துரத்துகிறது, வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றி முடக்கிவைத்துவிடுகிறது. பல வருடங்களுக்குப் பிறகு, தன் கடந்த காலத்தை எதிர்கொண்டு, பயத்தை வென்று, அந்த கடற்கரைக்குத் திரும்பிச் சென்று மன அமைதி அடைகிறான் என்பதுதான் கதை.

பயம் என்பது நம்மை நாமே சிறைக்குள் தள்ளிக் கொள்ளும் அபாயமான விஷயம் என்பதையும், அதை தைரியமாக எதிர்கொள்வதே விடுதலை என்பதையும் உணர்த்துகிறது இக்கதை. கதையின் முக்கிய அம்சம் பயம், குற்ற உணர்வு, அவற்றிலிருந்து மீளல். கொஞ்சம் உளவியல் ரீதியான தத்துவார்த்தமான கதை எனலாம்.

ஆங்கில இலக்கியப் பாடத்திட்டத்தில் இக்கதை இடம் பெற்றுள்ளது என்றும் அறிய முடிகிறது. எனவே, உளவியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியிலும் அலசுகிறார்கள் இக்கதையை. கதை ஆங்கிலத்தில் இருக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் வாசிக்கலாம் ========> இங்கு <========

77777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777

பொய்மை கொண்ட கலி

காலையில் எழுந்த ரவிக்கு, காஃபி கைக்கு வரவில்லை.   

அப்போதுதான் உரைத்தது, தான் ஒரு முட்டாள்தனமான விஷயத்திற்காக சந்தோஷியிடம் தாறுமாறாக அநாகரீகமான வார்த்தைகளை வீசியதும், அவள், தன் அம்மா வீட்டிற்குச் சென்றதும்.

இப்படி நடப்பது ஒரு முறையா இரு முறையா? ஆனால் இம்முறை கொஞ்சம் தீவிரமாகிவிட்டதோ என்ற குற்ற உணர்ச்சியில் அவளை அழைக்கவில்லை.

அவளும் அழைக்கவில்லை. ஒரே  கட்டிடத்தில்தால் இருவரின் அலுவலகமும் என்றாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் பேசிக் கொள்ளாமல் ஒருவாரம் ஆகியிருந்தது. (7 தினங்கள்).  

மாலை அவள் வீட்டிற்கு நேரே போய்விடலாம் என்று நினைத்து அலுவலகத்துக்குச் சென்றவனிடம், நண்பன், ஷார்ட்ஸ் ஒன்றைக் காட்டினான்.

“வீட்டில், பல அவதாரங்கள் எடுக்கும் பெண்களை, பாரதி சக்திவடிவமாகக் கொண்டாடியதை, மேடை தோறும்  முழங்கியும், பெண்ளைப் போற்றி கவிதையும் எழுதித் தள்ளும்  ஹிப்போக்ரைட்ஸ் ஆண்களே, பாரதி போற்றிய சக்தி வடிவப் பெண்களில் உங்கள் மனைவியும் ஒருத்தி என்பதை நினைவில் கொள்ளுங்கள்"

சந்தோஷி முழங்கிக் கொண்டிருந்தாள்.

ஒரு புகைப்படத்தைக் காட்டி அதைப் பற்றி extempore போட்டியில் சந்தோஷி முதல் பரிசு பெற்றிருப்பதையும் சொன்னான், நண்பன்.

"ஹிப்போக்ரைட்ஸ்"! நெற்றிப் பொட்டில் சுட்டது அவள் வார்த்தை. ரவியின் போலிமுகமூடி உறுத்தியது.

பெண்களை சக்தி என்று போற்றி தான் எழுதிய கவிதை பிரபல பத்திரிகையில் வெளிவந்ததும், கிடைத்த பாராட்டுகளும் அவனுக்கு நினைவுக்கு வந்து அவன் மனதை உறுத்திட, பதில் சொல்லாமல் சென்றவனை நண்பன் புரியாமல் பார்த்தான்.

(விருட்சம் திரு அழகியசிங்கர், 20 வரிக் கதை எழுதச் சொல்லி அவ்வப்போது நிறைய படங்கள் கொடுத்துப் பயிற்சி கொடுக்கிறார். அவை அனைத்தையும் தொகுத்துப் புத்தகமாகவும் கொண்டு வருகிறார். ஸ்ரீராம் அங்கு நிறைய எழுதியிருக்கிறார். நான் அக்குழுவில் இல்லை. எனவே ஸ்ரீராம் என்னிடம் பகிர்ந்த சில படங்களுக்கு நானும் பயிற்சியாக எழுதிப் பார்த்ததில் ஒன்று இது.)

-----------------------------------------------------------------------------------------------------------------------------

-----------------------------------------------------------------------------------------------------------------------------

Pond Heron - குளத்துக் கொக்கு. 



ஸ்ஸ்ஸ்பா....ஒரு வழியா முடிச்சாச்....

80 கருத்துகள்:

  1. கடைசி வரியே சொல்கிறது, வியாழனுக்கு பதிவு எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்று. இருந்தாலும் நல்லா செய்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை....

      எங்கள் தளத்திலுமே எழுதினாலும் எல்லாம் கோர்த்து செட் செய்வது கொஞ்சம் கஷ்டமாகிவிடுகிறது சில சமயங்களில்...

      பின்னர் வருகிறேன். இன்று காலையில் சமையல் தவிர வேறு சில வேலைகள்.

      கீதா

      நீக்கு
  2. குட்டி... என்ற வார்த்தை வந்த பிறகுதான் இது ஶ்ரீராம் வியாழன் அல்ல, கீதா ரங்கனுடையது என்று புரிந்தது. உங்களை வியாழன் பதிவு எழுதச் சொல்லி ஏழரையை இழுத்துவிட்டாரே என்று தோன்றியதால்தான் இன்று அதைப் பற்றியும் ஏழு பற்றியும் விசாரமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா நெல்லை, எங்க வீட்டுல கோந்தே குட்டி ரொம்பவே பயன்படுத்துவோம்! கண்டுபிடிப்பது எளிது. என் கருத்துகள்லயே வருவதை வைச்சு எளிதா கண்டுபிடிச்சிடலாம்.

      ஹாஹாஹா ஸ்ரீராம், சொன்னதால் 7 1/2 இல்ல

      எங்க வீட்டுல் இந்த ஜோசிய சமாச்சாரம் ஒரு தங்கை ரொம்ப சொல்வா...ஸோ அந்த 7 என்பது நல்ல விஷயமான எண். அதுக்குப் போய் எதற்குப் பயப்படணும்? அதான்... 7.

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. Me guessed it from the beginning. தங்கையுடனான உரையாடல் அதை நிரூபித்து விட்டது. நல்ல முயற்சி. ஏழைப்பற்றி ஏழேழுஜென்மத்திற்கும் நினைவு வரும்படியான விஷயங்கள்.

      நீக்கு
    3. எதுக்கு இன்னும் ஏழேழு ஜென்மம் கீசா மேடம்... போதாதோ இந்த ஜென்மமே....

      நீக்கு
  3. ஜோதிடச் செய்திகளை தினமும் கேட்பவர்களையும், அவர்கள் சொல்லுவதை நம்பி அதே நிற உடைகளை அணிவது, பிரயாணம் போன்றவற்றைக் கடைபிடிப்பது என பலர் நடந்துகொள்கின்றனர்.

    மேட்டூரில் ஒருவர் தெரிந்தவரின் இன்ஸ்ட்டிடியூட்டுக்கு வந்து எழுதிக் கொடுத்து (தினபலன்), தட்டச்சு செய்யச் சொல்லி, பிறகு பத்திரிகைக்கு அனுப்புவாராம். சில நாட்கள் வர முடியலைனா, அவரிடம் நீங்களே பலன்களை மாத்திப்கோட்டு தட்டச்சு செய்து அனுப்பிடுங்க என்பாராம். இப்படி இருக்கிறது ஜோஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ நெல்லை முதல் பாரா டிட்டோ! அதைப் பத்திச் சொல்ல நிறைய..

      இரண்டாவது பாரா - அடப் பாவி!!! அப்ப இம்புட்டுதானா விஷயம்!

      நானும் கூட ஜோஸ்ய சிகாமணி ஆகிடலாம்னு சொல்லுங்க!

      கீதா

      நீக்கு
    2. ஆமா ஆகிடலாம் தான் சும்மா நாலு தெரிஞ்சு வைச்சுக்கிட்டு அப்படி நம்பும் மக்கள் நிறைய இருக்கறதுனால நல்லா ஓட்டலாம்னு நினைக்கிறேன்!!! ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    3. நீங்க எந்த ஜோசியரிடமும் போய், உங்களுக்கு இப்போ இருக்கிற உடல்நிலைப் பிரச்சனை (சும்மா...அல்லது ஏதேனும் ஒன்றை) சொல்லி, எப்போ இது தீரும் என்று கேட்டால், உடனே அவங்க, உங்களுக்கு கோச்சாரப்படி, ஏழாம் இடத்தில் குரு இருப்பதால், 9ம் இடத்தில் இருக்கும் சனி மூன்றாம் இடத்தில் இவனைப் பார்க்கிறான். அதனால்.... என்று நமக்குத் தெரியாத மொழில பேசி அவங்கள்தான் அத்தாரிட்டின்னு காமிச்சுப்பாங்க.

      இந்த ஜோசியர்கள்லாம், மருத்துவரிடம் போனால், தொடர்ந்து தலைவலிக்கிறது என்ன செய்யலாம் என்று கேட்டால், மருத்துவரும் அவர் படித்த டெக்னிக்கல் சமாச்சாரத்தை அரை மணி நேரம் அவங்க காதில் ரத்தம் வரும்வரை அறுத்து பிறகு போய் சாரிடான் போட்டுக்கோன்னு சொல்லணும்னு ஆசை.

      நீக்கு
    4. நெல்லை....சிரித்துவிட்டேன்!!!!! ரொம்பவே!!!!! டிட்டோ!!!!!

      அது சரி, இப்ப நிறையப்பேர் தமிழ்நாட்டு அரசியலில் ஆரூடம் சொல்ல்ட்டிருக்காங்க பார்த்தீங்களா!!!!

      கீதா

      நீக்கு
  4. துவக்கத்திலேயே வித்தியாசம் புலப்பட்டது, Sriram & Nellai are not eligible என்னும் வாசகம் யோசிக்க வைத்தது, தொடர்ந்து படித்ததும், கீதா ரெங்கன் என்பது புரிந்து விட்டது. ரொம்ப நாட்களுக்கு முன்னரே எதிர்பார்த்தேன். வித்தியாசமாக கொண்டு வந்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவங்க ரெண்டு பேரையும் சும்மா வம்புக்கு இழுக்கலைனா அப்புறம் என்னா பதிவு!!!

      வித்தியாசமா இருக்கா? மெய்யாலுமா? அட!! நன்றி பானுக்கா

      கீதா

      நீக்கு
  5. //மேலும் அவர் தன் அடையாளத்தை இழந்து ஓர் அதிர்ச்சியான சம்பவத்தின் நிலழிலிலேயே வாழ்ந்துவருவதாலும்// நிழலிலேயே என்று வந்திருக்க வேண்டுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றிடலாம் அக்கா நன்றி.

      மற்றவற்றிற்குப் பதில்கள் பின்னர்.

      கீதா

      நீக்கு
    2. ஸ்ரீராம் மாற்றிவிட்டார், அக்கா

      கீதா

      நீக்கு
  6. ஏழு என்னும் எண்ணை குறிப்பிட்டு எடுக்க என்ன காரணம்?
    ஏழாம் எண்ணைப் பற்றி என்னுடைய அப்சர்வேஷன். பெரும்பாலும் மூத்த குழந்தைகள் ஏழாம் தேதி அல்லது மூன்றாம் தேதியில் பிறந்தவர்களாக இருப்பார்கள். பெண்களாக இருந்தால் நடுவிலோ, கடைசியாகவோ பிறந்திருந்தாலும் மூத்த மருமகளாக போவார்கள்(இப்போது பெரும்பாலும் ஒரே குழந்தையாக போய் விட்டதால் இது எப்படி சரியாகும்? என்ற கேள்வி வரலாம். *ஏழாம் தேதியில் பிறந்தவர்கள் பெற்றோர்களை வைத்து பராமரிப்பார்கள் என்றுதான் கூற முடியும்) மண வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருக்காது. எம்.எஸ்., ஏ.ஆர்.ரஹ்மான், பாலமுரளி கிருஷ்ணா, கமல்ஹாசன் போன்றவர்கள் ஏழாம் எண்ணைச் சேர்ந்தவர்கள்.
    *7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள் ஏழாம் எண்ணைச் சேர்ந்தவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறிப்பிட்டு என்றால் - என் தங்கை அவ்வப்போது இந்த சனி, 7 1/2 சனி என்று அடிக்கடி என்னோடு பேசுவாள். சிலர் ரொம்பவே அதுக்குப் பயந்து அரற்றுவதுண்டு. அதனால்தான் படுத்துது இது படுத்துது அப்படினு
      அதனால் இதையே சொல்லலாமே என்று, எழுதி வைத்திருந்ததை தத்துவமும் மனம் சார்ந்ததையும் கலந்து எழுதி வைத்திருந்ததை இங்கு போட நினைத்தேன். 7 என்ற எண்ணைப் பற்றி வாசித்த போது தெரிந்ததில் ஒன்று புலப்பட்டது. அதில் உளவியலை அதிகம் பேசாமல் அதை நீக்கிவிட்டு...நம் மனதை நாம் நம்பிக்கையுடன் 7 படி நிலைகள் சொல்லும் விஷயங்களை மனதில் கொண்டு பயம் இல்லாமல் மனதை அமைதிப்படுத்தத்தான் 7 1/2 என்றெல்லாம் (7 வருடங்கள் சனி 1/2 வருடங்களில் கொஞ்சம் கொஞ்ச்மாகக் குறையுமாமே!!!)

      பயம் என்பது நம்மை எப்படிச் சிறைப்படுத்தி வாழ்க்கையையே புரட்டிப் போடும் என்பதை நான் சிலபேரிடம் கண்டிப்பதால் இந்த 7 1/2 ;யும் அந்த ஏழாம் மனிதன் கதையையும் சொன்னது இங்கு.

      நன்றி பானுக்கா

      கீதா

      நீக்கு
    2. பானுமதி சொல்லி இருக்கும் எந்த எண்ணிலும் என் பெரிய நாத்தனாரோ, என் அண்ணாவோ, எங்க பெண்ணோ வரலையே? நாத்தனாருக்கு 2 ஆம் எண். அண்ணாவுக்கும் 5 ஆம் எண் என நினைவு. பெண்ணிற்குப் பத்தாம் எண். என் நாத்தனார் மூன்றாவது மருமகள். அண்ணா ஒரே மாப்பிள்ளை. பெண் மூத்த மருமகள்னு சொன்னாலும் முன்னால் ஒரு பெண் இருந்தார். சிலருக்குத் தான் பொருந்துமோ என்னமோ? ஆனால் எண் ஜோதிடம்பெரும்பாலும் சரியாய் இருப்பதில்லை.

      நீக்கு
    3. அதே போல இந்த ஏழரைச் சனி உண்மையில் படுத்துமோ என்னமோ தெரியலை. நான் முதல் இரண்டு சுற்று சனி உலாவிய காலங்களிலும் பல விதங்களில் அவமானம், வீண்பழி, வறுமைனு இல்லாட்டியும் தேவைக்குப் பணம் கிடைக்காமல், அதீத வேலைப் பளுனு ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கேன். காரணம் எதுவாக இருந்தாலும் அந்தச் சில வருடங்களில் ஏழரைச் சனியின் உலா இருந்தது என்பது என்னமோ உண்மை. அதிலும் நான் அவமானப் பட்டதை இப்போவும் நெருங்கிய சிலர் நினைவு கூர்ந்து வருந்துவார்கள். :(

      நீக்கு
    4. 7 1/2 சனி நிச்சயம் படுத்தும். படிப்பு சமயம்னா அதைக் கெடுக்கும். வேலை செய்யும் காலம் என்றால் ஆபீசில் பிரச்சனையை உண்டாக்கும்.

      கீசா மேடம்... //அவமானப் படுவது// - இது ரொம்பவே விசேஷம். அப்படி நம்மை அவமானப்படுத்துபவர்கள், நம்மை அறியாமலேயே நம் பூர்வ ஜென்ம கர்மவினைகளை ரொம்பவே குறைத்துவிடுகிறார்கள். அவர்களுக்கு கர்மவினையை அதிகமாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் அவமானப்படுபவர்களுக்கு மனதுக்கு ரொம்பவே கஷ்டத்தை அளிக்கும் என்பது உண்மைதான்.

      நீக்கு
    5. கீதாக்கா உங்கள் கருத்துகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. எங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் சொல்லியிருபப்து போல் நடந்ததுதான். கடந்து கடந்து, மனம் திடமானது. புடம் போட்டுன்னு சொல்வாங்களே அப்படி...அப்படித்தான் நிறைய மனம் பக்குவப்பட்டு .....

      கீதா

      நீக்கு
  7. பெண் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் குரு இருந்தால் அந்தப் பெண் அம்மாவைப் பிரியவே மாட்டாள். அம்மா வீட்டோடு இருப்பாள் என்றும் சொல்வார்கள். பெண்கள் பிறந்த வீட்டோடு இருப்பது நல்ல விஷயம் கிடையாதே? அதனால் இதை தோஷம் என்றும் சொல்வார்கள். இதற்கு நேர் மாறாக ஆண்களுக்கு ஏழாம் வீட்டில் குரு இருந்தாலோ, அல்லது ஏழாம் வீட்டை குரு பார்த்தாலோ அவன் கர்ஜமாயாக அதாவது வேட்டகத்து மாப்பிள்ளையாகி விடுவான். அல்லது நெருங்கிய உறவில் திருமணம் நடக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்களுக்கு நன்றி அக்கா. வேறு எங்கேனும் எனக்குப் பயன்படுத்திக் கொள்ள ஆச்சு!!!! இதில் ஒன்றை மட்டும் பயன்படுத்தியிருக்கிறேன் வேறொன்றில்....

      அக்கா! நான் சுத்தமாக அப்பக்கம் செல்வதில்லை. எழுதுவதற்குத் தேவைப்பட்டால் தேடி எடுத்துப் பார்ப்பதுண்டு!!

      நன்றி பானுக்கா

      கீதா

      நீக்கு
  8. ஏழாவது மனிதன் படத்தை இயக்கிய ஹரிஹரன் ஜி.எம்.பி. சாருக்கு மாமா மகன். ஒரு தொலைகாட்சி பேட்டியில் ஏழாவது மனிதன் என்று பெயர் வைத்ததற்கு காரணம் கூறினார், மறந்து விட்டது. நடிப்பு கல்லூரி ஆரம்பித்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ!!

      ஆனால் இது சற்று நிழலாக நினைவுக்கு வருகிறது. ஜி எம் பி ஸார் தன் தளத்தில் தன் அப்பா வழி அம்மா வழி பற்றிச் சொல்லும் போது குறிப்பிட்டிருக்கிறாரோ என்று ...

      கீதா

      நீக்கு
  9. கடைசிப் படம் பிரமாதம்! மகன் அனுப்பியதா? நேற்று வெளியே சென்ற பொழுது இதே போன்ற காட்சியைப் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ!!!! அக்கா, என்னக்கா இப்படிச் சொல்லிப்பிட்டீக......

      ஒன்று படத்தில் இடப்புறம் மேலே என் பெயர் இருக்கு.

      இரண்டாவது நம்மூரிலும் இப்படியான காட்சிகள் கிடைக்குமே!!! இது வீட்டருகில் ஏரிக்கரைக் காட்சி!

      கீதா

      நீக்கு
  10. 20 வரிக் கதைகளை என்னால் ரசிக்க முடிவதில்லை. ஒரு பக்க கதையே சிறுகதையின் சிதைவு என்பார்கள், இந்த 20 வரி, 10 வரிக் கதைகளெல்லாம் சின்னாபின்னம். இந்தக் கதைகள் எனக்கு போன்சாய் மரத்தை நினைவூட்டும். நண்பர் ஒருவர் வீட்டில் அரச மரத்தையும், ஆல மரத்தையும் போன்சாய் வடிவில் பார்த்தபொழுது மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்படித்தான் இருக்கும் 20 வரிக் கதைகளை படிக்கும்பொழுதும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொல்வதை ஏற்கிறேன் பானுக்கா. உணர்வுகளைக் கொண்டு வருவது சற்று சிரமம் தான். ஒரு பக்கக் கதையிலேயே கூட எதிர்பாரா ட்விஸ்ட் கடைசில இருந்தால் நலலருக்கும் அது போல இதுவும்...

      ஆனால் இதுவும் ஒரு பெரிய சவால்தான். அப்படித்தான் நான் எனக்கு எடுத்துக் கொண்டேன்.. பயிற்சி செய்து பார்த்தேன். காரணம் நான் எழுதுவது மிகப் பெரிதாக இருக்குமே!!! அப்ப என்னால் இப்படி எழுத முடியுமா என்று முயற்சி செய்தேன்.

      நன்றி பானுக்கா

      கீதா

      நீக்கு
    2. அருமைச் சிநேகிதியின் பங்கு என்பதாலோ என்னமோ இன்னிக்கு பானுமதி பின்னூட்டங்களில் வெளுத்து வாங்கி இருக்கார். சாதாரணமாகத் தூங்கப் போகணும் என்பார். இன்னிக்கு ஒவ்வொரு பத்தியையும் விமரிசித்துச் சொல்லி இருக்கார். நல்லா இருக்கு அவர் அலசலும்.

      நீக்கு
    3. கீதாக்கா, ஓ அப்படி இருக்குமோ!!! என்று உங்க கருத்தைப் பார்த்ததும் தோன்றியது!! கூடவே புன்சிரிப்பும்!!

      பொதுவாகவே ஜோஸ்யம் என்றால் பானுக்கா ஆர்வத்துடன் பதிலளிப்பார்.

      கீதா

      நீக்கு
  11. வியாழன் என்றால் எனக்கும் இவைதான் ஞாபகம் வரும்.  கூடவே என் கூட பணிபுரிந்த பெண்மணி வாராவாரம் வியாழக்கிழமை Off எடுத்து விடுவார்.  அன்று நான் தனியாக வேலை செய்ய வேண்டும்.  அவர் கூட இருந்தாலுமே பெரும்பாலும் நான்தான் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வது வழக்கம் என்றாலும் அன்று கொஞ்சம் மனதில் பயம் இருக்கும்.  அப்போதெல்லாம் எனக்கு அடிக்கடி மண்டையைப் பிளக்கும் ஒற்றைத் தலைவலி வேற வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் கூட பணிபுரிந்த பெண்மணி வாராவாரம் வியாழக்கிழமை Off எடுத்து விடுவார்.//

      இது முதலில் சிரிப்பை வரவழைத்தாலும் அதானல் வரும் கஷ்டங்களை வாசித்த போது....பணி எவ்வளு கஷ்டம் என்ப்தும் புரிந்தது, ஸ்ரீராம்

      அது சரி அது ஏன் வாராவாரம் வியாழன் அன்று? காரணம் தெரிந்ததா? ஏதேனும் பூஜை செய்வாரோ? குரு பூஜை?

      கீதா

      நீக்கு
    2. நான் எந்த ரிப்போர்ட், புது பிராஜக்டுக்கான அப்ரூவல் போன்றவற்றை மேலதிகாரிகளுக்கு அனுப்பும்போது வியாழன் அன்றுதான் செய்வேன். கையெழுத்து போடுவதும் அப்படித்தான். இல்லைனா ஞாயிறு. மற்ற நாட்களில் தவிர்ப்பேன். ராகுகாலத்தில் மீட்டிங் வைத்தால் போக மாட்டேன். அல்லது கூப்பிட்டு நேரத்தை மாற்றச் சொல்லிவிடுவேன் (நினைவிருக்கட்டும் நான் இருந்தது அராபிய கம்பெனியில்)

      நீக்கு
    3. அட! நெல்லை அராபிய கம்பெனியிலேயேவா...நல்ல ஆளுமைத்திறன் உள்ளவர் நீங்க!!

      சிலர் புதன் அன்று செய்வதைப் பார்த்திருக்கிறேன், நெல்லை. இல்லைனா வெள்ளிக்கிழமை அமாவாசை இப்படி!

      கீதா

      நீக்கு
  12. எங்கள் வீட்டிலும் இப்படி சந்திராஷ்டமம் பார்ப்பார் பாஸ்.  அவர் ஹோரை, ராகுகாலம், எமகண்டம், சூலம், கரிநாள் எதையும் விடமாட்டார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதேதான் ஸ்ரீராம் என் வீட்டிலும். பதிவில் வரும் நபர்!! ரொம்பவே..

      நான் சொல்வேன் முதல்ல நம்பிக்கை வேண்டும் உன் பிரார்த்தனையில் என்று. இது குறித்து சொல்லணும்னா நிறைய போகும். பெரிதாகிவிடும்.

      கீதா

      நீக்கு
    2. மாமா ரொம்பவே இதெல்லாம் பார்ப்பார். அதிலும் செவ்வாய்க்கிழமைகளே அவருக்கு ஒத்துக்காது. ராகுகாலம், எமகண்டம் எல்லாமும் பார்ப்பார். அதெல்லாம் கூடச் சரியா வந்துடும். ஆனால் அஷ்டமியன்று மட்டும் எங்கள் அனுபவங்கள் ரொம்பவே சிரமம் வாய்ந்ததாக அமையும். அஷ்டமியே பார்க்காமல் ஒரு முறை ராஜஸ்தான் நசிராபாதிலிருந்து சென்னைக்குக் குடும்பத்தோடு கிளம்பினோம். பெரிய மைத்துனரின் மனைவிக்கு ஸ்ரீமந்தம் சென்னையில். வழியில் எங்க ரயில் தண்டவாளத்தை விட்டு விலகி மஹாரஷ்ட்ராவின் பூர்ணா ஊருக்கு அருகே நின்று விட்டது. நல்லவேளையாக யாருக்கும் எதுவும் ஆகலை. பின் அங்கிருந்து ஒரு வழியாக மாலை கிளம்பினால் நடு இரவில் வேறோர் இடத்தில் நாக்பூருக்கு முன்னே எஞ்சினில் தீப்பற்றி மறுபடியும் வண்டி நின்றது. பின்னர் நாக்பூரிலிருந்து எஞ்சின் வந்து வண்டி கிளம்பக் காலை ஆகிவிட்டது. சாதாரணமாகவே ந்சிராபாதிலிருந்து சென்னை வர 3 நாட்கள் ஆகும் அப்போல்லாம். இந்த விபத்து நடந்தப்போ நான்காம் நாள் மாலை தான் போய்ச் சேர்ந்தோம்.

      நீக்கு
    3. //ஹோரை// - ஸ்ரீராம்... இந்த ஹோரைக்கும், 'புளிஹோரை', 'எள்ஹோரை' இவற்றிர்க்கும் சம்பந்தம் உண்டா? அவற்றைச் சாப்பிடலாமா?

      நீக்கு
    4. //ராகுகாலம், எமகண்டம், அஷ்டமி...// - கீசா மேடம்... கர்ம வினைப்படி உங்களுக்கு முன்னமே என்ன என்ன கஷ்டம் வரணும்னு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அப்படி இறைவன் ஷெட்யூல் போட்டிருப்பதை, நீங்கள் இதையெல்லாம் (அஷ்டமி, சந்த்ராஷ்டமி, ஹோரை..) பார்த்து தவிர்த்துவிட்டீஙன்னா, இறைவன் என்னதான் செய்வார்? அவர் மீதும் கொஞ்சம் கருணை வைக்கக்கூடாதா?

      நீக்கு
    5. உண்மைதான் நெல்லை. எனக்கும் மாமாவுக்கும் இந்த விஷயத்தில் அடிக்கடி வாக்குவாதம் வரும். ராகுகாலம், கிழமையெல்லாம் பார்க்கக் கூடாது என்பதே என் தரப்பு வாதம். ஆனால் பார்க்காமல் போனால் நிச்சயமாகப் பிரச்னைகள் அதிகமாக்வே தலை தூக்கும். அப்போ மாமா சொல்லிக்காட்டுவார், பார், உன்னோட அபிப்பிராயம் சரியா தப்பானு? என்பார். பதில் சொல்ல முடியாது. ஏனெனில் இது போல்ப் பலமுறை நாங்க வெளியூர் போனாலும் நடந்திருக்கு. என் வரைக்கும் நான் தனியாகவே ராகுகாலத்தில் கிளம்பிப் போனாலும் எனக்குக் கெடுதலாக எதுவும் நடந்ததில்லை. ஆனால் நாங்க குடும்பமாகப் போனால் சரியா வரலை. நவம்பரில் இந்தியா சென்றபோது பையர் நாளெல்லாம் பார்க்கக் கூடாதுனு சொல்லிட்டார். சரியான அஷ்டமி தினம் கிளம்பினோம். எந்தப் பிரச்னையும் இல்லாமல் எல்லாமும் சரியான நேரத்துக்கு நடந்து மறுநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்குப் போயாச்சு. இப்போவும் ஜூனில் ஆப்திகத்துக்குப் போகும்போது நாளெல்லாம் பார்க்கப் போவதில்லைனு சொல்லி இருக்கார் பையர். கிளம்பினால் போதும் என்னும் நிலைமை இருப்பதால் எதுவும் செய்வதற்கில்லை.

      நீக்கு
    6. அஷ்டமி, நவமி எல்லாம் நம்மளுடைய மனத்தடங்கல் தான் என்று எனக்குத் தோன்றும். நான் அஷ்டமியில் பல விஷயங்கள் செய்து வெற்றி பெற்று இருக்கிறேன். எனவே எனக்கு அது தடையாக இருந்ததில்லை .ஒன்று இரண்டு ஏதாவது கோளாறால் சரியாக நடக்காவிட்டால் நம் மனது அதிலேயே தங்கி நின்று விடும். அதனால் தான் இது என்று தோன்றும் ்நடக்காததை நினைக்கும் நம் மனம் நடந்ததை எத்தனை முறை நடந்தது என்று எத்தனை முறை மனதில் தங்கி இருக்கிறது?

      கடைசி வார்த்தை சரியாக அமையவில்லை என்று தெரிகிறது!

      நீக்கு
    7. எனக்கு நீங்க சொல்ல வந்தது புரியுது ஸ்ரீராம். ஆனால் உங்களுக்கு என்ன அஷ்டமி, நவமி எல்லாம்? ஸ்ரீராமரின் ஜன்ம நக்ஷத்திரத்தில் பிறந்து அவர் பெயரையே வைச்சிருக்காங்க. ஆகவே தொட்டதெல்லாம் ஜயம் தான். ஆசிகள், வாழ்த்துகள்.

      நீக்கு
    8. கீதாக்கா உங்கள் அனுபவங்களைப் புரிந்து கொண்டேன்.

      கூடவே ஸ்ரீராமின் கருத்தும் எனக்கு. ஆனால் வீட்டில் பார்ப்பதே இல்லை. எல்லாம் வல்ல அந்த சக்தி பார்த்துக் கொள்ளும் என்ற திட நம்பிக்கையில்...., அப்படியே தடங்கல் வந்தாலும் சரி சமாளிப்போம் .என்ற ஒரு வலுவான எண்ணம். ஆனால் எப்போதும் மன அமைதி பிரார்த்தனை!

      கீதா

      நீக்கு
    9. கீதாக்கா - ஹைஃபைவ் உங்க கருத்துகளுக்கு ....முதல் கருத்தில்....

      எல்லாம் நல்லபடியாக நடக்கும் கீதாக்கா. நீங்க சொல்லிருப்பது போல் கிளம்புவதற்கு இப்போதைய சமயத்தில் நாள் பார்க்க முடியாதே. உங்க பையர் எல்லாம் நல்லபடியா செய்வார். உங்கள் எல்லோரது நல்ல எண்ணங்களே வழிநடத்திவிடும் கீதாக்கா.

      கீதா

      நீக்கு
  13. அக்கா தங்கைக்குள் உரையாடல் சுவாரஸ்யம். 

    இதோ 2019 ல் திருப்பதியில் என்னை வாசலோடு அனுப்பினார்  VC பதி.  இதுவரை மறுபடி செல்ல முடியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம்.

      VC பதி.//

      ஹாஹாஹா......

      இல்லை ஸ்ரீராம் அதையே நினைத்துக் கொண்டிருந்தால் போகணும் என்று நினைத்துக் கொண்டிருந்தால் நடக்குமாம்! நடக்கும். ஏனென்றால் அந்த எண்ணம் நம்மை முனைந்து செயல்பட வைக்கும்.

      மீக்கும்! ஆனால் இப்ப என் மனம் வெயில் என்பதால் சுணக்கம். எனவே சீசன் நல்லானதும் அதுவே முனைந்துவிடும்!!

      கீதா

      நீக்கு
  14. மாதங்களில் 7 ன் பெருமை படித்தேன்.  யூகி சேது 'மாதங்கள் 7' என்றொரு படம் எடுத்திருக்கிறார்.  அருமையான மிக அருமையான ஒரு  SPB பாட்டு அதில் இருக்கிறது.

    ஏழு ஜென்மங்களுக்கு ஒருமுறை தலைமுறையில் மாற்றங்கள் நிகழும் என்று சொல்வார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! புதிய தகவல் - யூகி சேது இப்படி ஒரு படம் எடுத்திருக்கிறாரா? புதிய தகவல்!! பாருங்க இந்த இணையம் கூட அதைப் பத்திச் சொல்லலை பாருங்க, நான் தேடினப்ப. பார்க்கிறேன் அப்படம் என்னவென்று, கேட்கிறேன் அப்பாடலை!

      ஏழு ஜென்மங்களுக்கு ஒருமுறை தலைமுறையில் மாற்றங்கள் நிகழும் என்று சொல்வார்கள்!//

      ஓ! மாற்றங்கள் என்றால்? எண்ணங்கள் ? இதைக் குறித்தும் சொல்ல முடியும்...ஆனால் இப்ப இங்கு சொல்லத் தொடங்கினால் நீளும்.

      கீதா

      நீக்கு
    2. https://engalblog.blogspot.com/2023/03/blog-post_24.html

      நீக்கு
    3. ஸ்ரீராம் பாருங்க் என் மனசுல பதியவே இல்லை போல!!!! இல்லைனா நீங்க சொல்லியிருக்கும் போதே நினைவுக்கு வந்திருக்குமே!

      சுட்டி போய் பார்த்தேன்....கருத்தும் இருக்கிறது!!!! எப்படி நினைவிலிருந்துட் தப்பியதோ!! பாடலை மீண்டும் கேட்கிறேன் ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
    4. //ஏழு ஜென்மங்களுக்கு ஒருமுறை தலைமுறையில் மாற்றங்கள் நிகழும்// எனக்குத் தெரிந்து ஏழாவது தலைமுறை ஏழையா இருப்பாங்க. பிறகு ஒவ்வொரு தலைமுறையும் செழித்து, 4ம் தலைமுறைலேர்ந்து இறக்கம் ஆரம்பித்து, ஏழாம் தலைமுறை மீண்டும் ஏழையாயிடுவாங்க. சோதிச்சுப் பாருங்க.

      நீக்கு
    5. அட... இதைதான் நானும் சொல்ல வந்து குழப்பியிருக்கிறேன்.

      நீக்கு
  15. சர்க்கரை போடாத கரும்புச்சாறு உடனடியாக சிரிக்க வைத்து விட்டது.  வெல்லம், சர்க்கரை போடாத பாயசம், பொங்கல் கொண்டு வா என்றும் சொல்லலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், அது மனதில் ஊறிப் போன வரி. அந்த நிமிடத்தில் என்ன சொல்கிறார்கள்னு மனசுல ஏறாம, நிகழ்கால சிந்தையில் இல்லாமல், மனதில் ஊறிப் போனதிலிருந்து டக்கென்று வெளிவருவது. அதற்குத்தான் conscious mind வளர்க்கணும்னு சொல்றாங்க.

      //வெல்லம், சர்க்கரை போடாத பாயசம், பொங்கல் கொண்டு வா என்றும் சொல்லலாமா?//

      சிரித்துவிட்டேன்!! ஸ்ரீராம்

      கீதா

      கீதா

      நீக்கு
  16. பூம்பூம் மாட்டுக்கலைஞர் இசையை நானும் கேட்டு மிகவும் ரசித்திருக்கிறேன். 

    நீங்கள் அனுப்பிதான்.. 

    நல்ல திறமை, இனிமை.  பாடல்கள் என்னைக் கவரவில்லை. 

    எனக்கு ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.. "ஏழிசை கீதமே..'  இன்னொரு பாடல் "ஏழு கடல் சீமை..  அதை ஆளுகின்ற நேர்மை.."  ஒரு பாடலின் நடுவே வரும் வரி 'ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். ரொம்பத் திறமை. வேறு இரண்டு பேர் நாதஸ்வரம் புல்லாங்குழல் என்று மறைமுகமாக எடுத்து வைத்திருக்கிறேன். எங்கள் தளத்தில் பகிர்கிறேன்.

      ஏழிசை கீதமே, ஏழு ஸ்வரங்கள் இரண்டும் டக்கென்று வந்தாலும், ஏற்கனவே இங்கு பகிர்ந்திருக்கீங்களே ஸ்ரீராம். அதனால் வேறு என்ன என்று தேடிய போது ஜக்குபாய் படத்திலும் கூட ஒன்றிருந்தது ஆனால் அது நல்லால்ல....இப்பாடலும் கூட பிரித்து மேயும் படி சிலாகிக்க முடிந்த பாடல் இல்லைதான். ஆனாலும் better அவ்வளவே!

      நீங்க சொல்லியிருக்கும் மற்ற பாடல்களையும் கேட்கிறேன் ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  17. ​எண் 7 D D இடம் இருந்து உங்களுக்கும் தொற்றிவிட்டதோ? பாவம் அவரைத்தான் காணவில்லை.

    தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொருவருக்கும் உள்ளே இருக்கும் விருப்பு, வெறுப்புகள், எழுதும் நடை போன்றவை தானே வெளிப்படும். அவ்வகையில் இன்றைய பதிவு தொடக்கத்திலேயே ஆசிரியரைக் காட்டிக் கொடுத்துவிட்டது.

    அஷ்ட புஜாம்பிகை படமும், இரண்டு புகைப்படங்களும் நன்றாக உள்ளன. கவிதை இல்லாதது ஒரு குறை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஜெ கே அண்ணா....இல்லை காரணம் வேறு.

      கண்டிப்பாகக் காட்டிக் கொடுத்துவிடும் என்று தெரியும் அண்ணா.

      அஷ்ட புஜாம்பிகை படமும், இரண்டு புகைப்படங்களும் நன்றாக உள்ளன. கவிதை இல்லாதது ஒரு குறை.//

      நன்றி ஜெ கே அண்ணா.

      கவிதை - ஸ்ரீராம் சொல்லியிருந்தார், கூடியவரை அவரது ஃபார்மாட் இல்லாமல் பதிவு இருந்தால் நல்லது என்று. வித்தியாசமாக என்று.

      ஆனால் எப்படிப் போட்டாலும் கிட்டத்தட்ட அப்படியே ....அதனால் கவிதையைத் தவிர்த்தேன் அண்ணா.

      நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
  18. 16 செயற்கைக் கோள்கள். அதிலும் ஏழு.

    தி/கீதாவை ஏழுவிதமாகப் பாராட்டணும். ஆனால் எப்படினு தெரியலை. ஆகவே ஏழேழு பதிவுகளுக்கும் நன்றி. எப்படியோ ஸ்ரீராமுக்கு ஒரு நாள் பதிவுக்கு மண்டையை உடைச்சுக்காமல் ஓய்வு கிடைச்சிருக்கு. மற்றபடி ஜோக்குகள், கவிதைகள்னு இல்லை என்பது ஒரு குறையாகத் தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேசாம உங்க வீட்டுக்கு அவர் வரும்போது, ஏழுவித ஊத்தாப்பம் செய்து கொடுத்துவிடுங்கள்.

      ஜோக்குகள் இல்லாதது குறைதான். ஜோக்குடன் வியாழன் முடியும். ஒருவேளை நம்ம கீதா ரங்கன் ரொம்ப சீரியஸ் ஆள் போலிருக்கு.

      நீக்கு
    2. ஜோக்ஸ் போட்டால் அதில் எல்லாம் சிரிப்பே வரவில்லை என்பதை கவனித்து இருப்பார்! எதற்கு வீணாக என்று நினைத்திருக்கலாம்!

      நீக்கு
    3. கீதாக்கா ரொம்ப ரொம்ப நன்றி கீதாக்கா!!!!

      கீதா

      நீக்கு
    4. நெல்லை சொன்னாப்ல உங்க வீட்டுக்கு வரும் போது 7 ஊத்தப்பம் .ஆனா ஒவ்வொரு ஊத்தப்பமும் சின்ன பட்டன் சைஸ் தான் இருக்கணும்!!!

      கீதா

      நீக்கு
    5. நெல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நான் ஒன்றும் அப்படி ஒன்றும் சீரியஸ் ஆள் கிடையாது. எதுக்கெடுத்தாலும் டக்கென்று சிரித்துவிடுவேன்!!!!

      ஸ்ரீராம் தன் ஃபார்மாட்டில் இருக்க வேண்டாம் என்று எண்ணினார். அதன் முயற்சி.

      மேலே கருத்தெல்லாம் பார்க்கவே மாட்டார் போல இந்த நெல்லை. பதிவில் சிலது வாசிகக்வும் இல்லைன்னு தெரியுது...

      ஜோக் குக்கு அதான் ரியல் ஜோக் கொடுத்திருக்கிறேனே!!!!!

      கீதா



      நீக்கு
    6. ஜோக்ஸ் போட்டால் அதில் எல்லாம் சிரிப்பே வரவில்லை என்பதை கவனித்து இருப்பார்! எதற்கு வீணாக என்று நினைத்திருக்கலாம்!//

      ஸ்ரீராம், ஃபார்மாட் வேறு மாதிரினு யோசித்ததில் தவிர்த்தவை, கவிதை ஜோக்ஸ் எல்லாம். அதனால் நடந்த ஒரு சிரிப்பு சம்பவத்தைச் சொல்லிவிட்டேன் அதை ஈடுகட்ட. அம்புட்டுதான்.

      கீதா

      நீக்கு
    7. ஸ்ரீராம், நீங்க பகிர்ந்த எத்தனை ஜோக்குகளுக்கு நெல்லை சிரித்தார்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      ஹப்பா இழுத்தாச்சு!

      கீதா

      நீக்கு
  19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  20. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  21. இந்த வார ஆசிரியர் கீதா ரெங்கன் சிறப்பாக செய்து இருக்கிறார்.
    குருவின்படமும் அவர் சொன்ன வாசகமும் அருமை. குருவை வணங்கி படிக்க தொடங்கியவுடன் தெரிந்து விட்டது கீதா தான் என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நன்றி கோமதிக்கா.

      தெரிஞ்சுரும் தான்!!!! கோமதிக்கா.

      வாசகம் ரொம்பப் பிடித்த வாசகம்.

      கீதா

      நீக்கு
  22. ஜோஸ்ய சிகாமணி ............
    (Nellai and Sriram are not eligible! ) மேலும் அவர்கள் இல்லை நான் தான் என்று குறிப்பு கொடுத்து விட்டார்.

    “//நீ உனக்கு வாய்ப்பு வரும் போது போய்டு. நான் எனக்கு முடியும் போது போய்ட்டு வரேன். ஒரு வேளை ரெண்டு பேரும் சேர்ந்து போகும் வாய்ப்பு கிடைச்சாலும் ஓகே. பார்த்துக்கலாம்” என்று சொன்னேன். //

    இருவரும் சேர்ந்து ரமண மகரிஷி ஆஸ்ரமத்துக்கு போக வாய்ப்பு கிடைக்கட்டும்.

    எண் 7 ன் சிறப்புகள் மற்றும் முக்கியத்துவம் சொன்னது அருமை.
    எங்களுக்கு(எனக்கு) , என் மகனுக்கு, அவன் பெரியப்பாவிற்கு எல்லாம் 7 ஆம் தேதிதான் திருமண நாள் அமைந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! பாருங்க கோமதிக்கா, அவங்க ரெண்டு பேரையும் இழுத்ததில் தெரிந்துவிட்டது! இல்லைனாலும் தெரிந்துவிடும் என்றாலும் இது இன்னொரு க்ளூ ஆகிருப்பதை நான் கவனிக்கவும் இல்லை!

      நன்றி கோமதிக்கா. இருவருக்கும் சேர்ந்து போக ஆசைதான் பார்ப்போம் ஆனால் இப்போது முடியாது அக்கா. இந்த வெயில் எனக்குக் கொஞ்சம் கஷ்டம். வெயில் குறையட்டும். கண்டிப்பாகச் சென்று வர நினைத்துள்ளேன். வீட்டின் நிலைமையும் பொருத்து

      அட! உங்கள் மூவருக்கும் 7 ஆம் தேதிதான் திருமண நாள்!!

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  23. "//கரும்பு ஜூஸா? எனக்கு சக்கரை போடாம கொண்டு வா." !!!!!!

    அறையில் எழுந்த சிரிப்பு அதிர்ந்து அடங்க ரொம்ப நேரம் ஆகியது.//

    வழக்கமாக ஜூஸ் கொண்டுவரவா என்றால் சக்கரை இல்லாமல் என்று சொல்வது வழக்கமாக ஆகி விட்டது .
    இருந்தாலும் ரசித்து சிரித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அக்கா, அபப்டிச் சொல்லிப் பழக்கமாகிவிட்டதால் டக்கென்று வந்திருக்கு.

      பாவம் எல்லாரும் எதுக்குச் சிரிக்கறாங்க என்று அவருக்குப் புரியவில்லை. அப்புறம் சொன்னதும் கூட அவருக்கு டக்கென்று புரியவில்லை. அப்புறம் விளக்கியதும் தான், "ஒ சரி சரி" என்று சொல்லிக் கொஞ்ச நேரம் பொருத்து, என்னிடம், "நான் குடிக்கக் கூடாதோ? தித்திப்பா இருக்கும்லியா" என்று கேட்டார். நானும், மீண்டும் விளக்கியதும், "ஓ கரும்மை அரைச்சுப் பிழியறா இல்லையா....." என்று சொல்லிவிட்டு அப்புறம், எனக்கு வேண்டாம் என்றார்.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  24. //வீதி இசைக்கலைஞர் எந்தவித பக்க வாத்தியமும் இல்லாமல் திறந்தவெளி இசை. //
    நானும் பெங்களூரில் எடுத்து இருக்கிறேன். அவர் தலைப்பாய் எல்லாம் கட்டிக் கொண்டு அவர் கூட வந்த மாடு கம்பீரமாக நிறைய அலங்காரங்களுடன் இருந்தது. முன்பு பெங்களூர் பதிவில் போட்டு இருக்கிறேன்.

    அவரும் எளிமை ,அவர் மாடும் எளிமை. அவர் வாசித்த இசை அருமை.

    பதிலளிநீக்கு
  25. கொஞ்சிப் பேசலாம் படமும் பார்க்கவில்லை, பாடலும் கேட்டது இல்லை.
    இன்று கேட்டேன், பரவாயில்லை.
    ஏழு கடல் நாட்டிலொரு ராணி இருந்தாள் பாடல் கேட்டேன், அடுத்த பாடல் ஏழு வண்ணத்தில்கேட்கமுடியவில்லை.
    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் நினைவுக்கு வந்தது.

    ஏழாவது மனிதன் தலைப்பில் இடம் பெற்ற செய்திகள் மற்றும்

    பொய்மை கொண்ட கலிகதையும் பொருத்தமான படமும் அருமை.

    கடைசியில் பகிர்ந்த படங்கள் நன்றாக இருக்கிறது.

    கொடுத்த வியாழன் பணியை சிறப்பாக செய்து விட்டதற்கு வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!