1.4.26

நல்ல பத்திரிகையாளர்கள் என்று நினைத்தவுடன் உங்கள் மனதில் தோன்றும் நபர்கள் யார் யார்?

 

கேள்வி பதில்கள் :

ஜெயகுமார் சந்திரசேகரன் :

வைணவம் தீவிரமானது தென் இந்தியாவிலா?  ஏன்?

 இவ்வாறு கேட்க காரணங்கள் 

1. வடநாட்டில் விஷ்ணுவின் சயனக்கோலம் உள்ள கோயில்களை காண்பது அரிது.   இல்லை என்றே சொல்லலாம். .

2. கிருஷ்ணன், ராமன் என்று அவதாரங்களையே வடநாட்டவர் அதிகமாக வணங்குகின்றனர். 

3. சங்கரமடம் போன்ற மடங்கள் ஆச்சாரியார் இருப்பிடங்கள் வடநாட்டில் காணவில்லை.

பதில் 1: எ பி : # 1& 2. கிருஷ்ணன் ராமன் இரண்டும் விஷ்ணுவின் அவதாரங்கள் என்ற பின் அது வைஷ்ணவம் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும் ? 

வடக்கே முகலாயர்களின் ஆதிக்கம் மிக தீவிரமாக, பெரிய அளவில் இருந்தபோதும் தெற்கே அதன் பாதிப்பு அந்த அளவு இருக்கவில்லை.  ஆழ்வார்கள், ஸ்ரீ ராமானுஜர் தெற்கே பிறந்த வைணவசீலர்கள். வடக்கிலும் ஜயதேவர் மீரா போன்ற பல விஷ்ணு பக்த சிகாமணிகள் இருந்திருக்கின்றனர்.  இயல்பான தெற்கு வடக்கு கலாச்சார மாறுபாடுகளும் காரணமாக இருக்கலாம்.

3. சங்கரர் நிறுவிய மடங்கள் வடக்கிலேதான் அதிகம்.  ஆனால் அவர் அத்வைதி.

பதில் 2 : நெல்லைத்தமிழன் : 

வைணவத்தின் பிறப்பிடம் தென் இந்தியா, குறிப்பாக தமிழகம். ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்கள், நம்மாழ்வாரால், நாதமுனிகளுக்கு ஆழ்வார் திருநகரியில் கொடுக்கப்பட்டது. நாதமுனிகள் அவற்றை ஒழுங்குபடுத்தி நாலாயிரம் என்ற நூலாக்கினார். அவரே, முதலாயிரம், இரண்டாமாயிரம்…என்றெல்லாம் பிரித்தவர். அவருக்குப் பிறகு ஆளவந்தார், அவருக்குப் பிறகு ராமானுஜர். இவர்கள்தாம் வைணவம் பரவக் காரணம். அதிலும் இராமானுஜர் காலத்தில் வைணவம் வேகமாகப் பரவியது.

ராமானுஜர் வட நாட்டு திவ்யதேசங்களுக்கெல்லாம் பாதயாத்திரையாகச் சென்றார், முக்திநாத் உட்பட. அங்குள்ள பலரும் வைணவ சமயத்தை ஏற்றுக்கொண்டனர். சைவத்தின் ஆரம்பம் காஷ்மீரம் என்பர்.

வட நாட்டிலும் பல புராதான விஷ்ணு கோயில்கள் உண்டு. முஸ்லீம் படையெடுப்புகளால் அங்குள்ள கோயில்கள் பலவும் பாதிப்படைந்தன. கோயில்களில் இருந்த செல்வங்கள் கொள்ளை போயின. விக்ரஹங்கள் பழுதுபட்டன அல்லது உடைக்கப்பட்டன. அந்த இடங்களில் மசூதி கட்டும் வழக்கம் வந்தது. இவையெல்லாம் தாண்டித்தான் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் தலைமுறை தலைமுறையாகத் தொடர்கின்றனர்.

கேள்விக்காக இரண்டு உதாரணங்கள். 1 காட்மண்டுவில் உள்ள ஜல நாராயணர் கோயில். 2. தியோதர், உத்திரப் பிரதேசத்தில் உள்ள தசாவதாரக் கோயில். நான் ஜலநாராயணரை இரண்டு முறை தரிசித்திருக்கிறேன். உத்திரப்பிரதேசக் கோயிலுக்கு இன்னும் செல்லவில்லை.

இரண்டாவது கேள்வி… இராம கிருஷ்ண அவதாரங்களை வடநாட்டவர் வணங்குவது. இந்த இரண்டு அவதாரங்களும் அயோத்தி, மதுரா என்ற இடங்களிலில் தோன்றி வட நாட்டில் பல இடங்களிலும் வாழ்ந்த இடங்கள். உதாரணமா கிருஷ்ணர், மதுரா, கோகுலம், விருந்தாவன் தொடங்கி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத்,  தில்லி அருகே குருக்ஷேத்திரம் வரை பல்வேறு இடங்களில் அவரது வாழ்வு நகர்ந்தது. அதுபோலவே ராமாவதாரமும். இதுவே கிட்டத்தட்ட முழு இந்தியாவிலும் அவர்களுடைய கோயில்கள் இருப்பதற்குக் காரணம் 

ஆதிசங்கர பகவத் பாதாள், சங்கர மடங்களை ஸ்தாபிதம் செய்தவர் (அவர் மிக க் குறைந்த காலமே இவ்வுலகில் ஜீவித்திருந்தார்). பத்ரி நாராயணப் பெருமாள் கோயிலை ஒழுங்குபடுத்தி அங்கு கேரள நம்பூதிரிகள் வம்சம் பூஜை செய்யும் வழக்கத்தை (ராவல்ஜி என்று சொல்வர்) உண்டாக்கியவரும் அவர்தாம். அவர் நான்கு மடங்களை உண்டாக்கினார். (தெற்கு) கர்நாடகாவில் சிருங்கேரி சாரதா பீடம், (வடக்கு) உத்தராகண்டில் ஜோதிர் மடம், (மேற்கு) குஜராத்தில் துவாரகா காளிகா மடம், (கிழக்கு) ஒடிசாவில் கோவர்தன மடம். கிழக்கில் ஸ்ரீ  ஹஸ்தகமலாச்சார்யார், மேற்கில் ஸ்ரீ  பத்மபாதாச்சார்யார், வடக்கில் ஸ்ரீ தோடகாச்சார்யார், தெற்கில் ஸ்ரீ சுரேஷ்வராச்சார்யார் அந்த அந்தப் பீடத்தின் முதல் ஆச்சார்யர்களாக வீற்றிருந்தனர்.


காட்மண்ட் – நேபாள் – ஜலநாராயணர் கோயில் (2025ல் எடுத்த படம்)

2008ல் அங்கு சென்றிருந்தபோது எடுத்த படம்.



அனந்த சயனம், சாரங்க், ஒடிசா - 9ம் நூற்றாண்டு. 

- - - - - - - - -

கேள்விகள் : நெல்லைத்தமிழன் :

1. ஒன்றும் சாதிக்காத, தெரியாதவனுங்க, பத்திரிகையாளர் என்ற போர்வையில், காசு வாங்கிக்கொண்டு அல்லது தங்களுக்கு வேண்டாதவர்களை மோசமாக எழுதுவதற்காக, கேள்விகள் கேட்பதும், தங்கள் கருத்துக்களை வைத்து யூடியூபில் கதைவிடுவதும் சரியா? இவர்களுக்கும் தேச விரோதிகளுக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்லமுடியுமா?  

# ஊழல் அரசியலின் மிக மோசமான விளைவுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.  கூலிக்கு விலை போகும் மலிவான நபர்கள் பத்திரிகையாளர்கள் என்ற தகுதிக்கு களங்கம் உண்டாக்குகிறவர்கள்.  இது தேச விரோதமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயமாக ஈனம்.

2.  மோசமான பத்திரிகையாளர்கள் என்று நினைத்தால் நக்கீரன் கோபாலும் இந்து ராமும் நினைவுக்கு வருவதுபோல, நல்ல பத்திரிகையாளர்கள் என்று நினைத்தவுடன் உங்கள் மனதில் தோன்றும் நபர்கள் யார் யார்?   

# தற்சமயம் பாண்டே,  துக்ளக் குருமூர்த்தி ?

3.  ஒருவர், ஒரு அரசியல்வாதியையோ இல்லை கட்சியையோ விமர்சனம் செய்யும்போது, இவர் மாத்திரம் என்ன ஒழுங்கு? இவர் இதுவரை சொல்லாததா இல்லை செய்யாததா? என்று மனதில் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லையே.  அது ஏன்?  

# கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளும், எல்லா அரசியல்வாதிகளும் ஒரே பாணியில் இருப்பதுதான் முக்கிய காரணம்.

4.  பிச்சைபோடுவது போல போடும் 2-3 சீட்டுகளை வாங்கிக்கொண்டு, பெரியண்ணன் செய்யும் எல்லாவித அக்கிரமங்களையும் சீரணித்துக்கொண்டு, அவருக்கு தொங்குசதையாக கட்சியை நடத்துவதை விட்டுவிட்டு, அந்தக் கட்சியிலேயே  இந்த சிறு கட்சிகள் இணைந்துவிடுவது  நல்லது என்று உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா?  தனியாக கட்சி நடத்துவதற்கு, தேர்தல் சமயத்தில் பெரிய கட்சியிடம் அவர்கள் கொள்ளையடித்த பணத்தில் ஒரு பங்கு வாங்கிக்கொள்வதைத் தவிர வேறு காரணங்கள் இருக்கிறதா?  

# சிறு கட்சி ஜாதிக்கட்சி இரண்டுமே காற்றுள்ள போது தூற்றிக் கொள்ளும் சாமர்த்தியம் படைத்தவை.

5.பத்திரிகைகளோ இல்லை ஊடகங்களோ இல்லை யூடியூபிலோ, இவர்கள் நம்பகமானவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் யார் யார்?

# முன்பே மேலே சொன்னபடி...

6. ஒன்றுக்கும் வாய்ப்பில்லாத ஒருவன், நான் எந்த தகிடுதத்தமும் செய்ததில்லை, எனவே நல்லவன் என்று சொல்வதும்,  ஒரு கவுன்சிலராகக் கூட தேர்ந்தெடுக்கப்படாத தோழர் நல்லகண்ணு, கைச்சுத்தம் மிக்கவர் என்று பெருமைப்படுத்துவதும் சரியாகுமா?  இல்லை இதற்கெல்லாம் வாய்ப்புகள் இருந்தும், நம்ம பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராக இருந்தும் எந்த லஞ்சமும் வாங்காது இருந்தது பெருமைப்படும் விஷயமா? ஒருவர் செத்துப்போய்விட்டார் என்பதற்காக பொருத்தமில்லாத பெருமைகளை ஒருவர் மீது சுமத்துவதும் ஆபாசமான விஷயம்தானே.

# இறந்தவர்களை விமர்சிப்பதோ அளவுக்கு மீறிப் புகழ்வதோ சரியல்ல. என்றாலும் சிறு அளவில் கூட "கெட்ட பெயர்" வாங்காத பொதுப் பிரமுகர்கள் பலத்த பாராட்டுக்குத் தக்கவர்கள்தான்.

= = = = = = = = =

படமும் பதமும் :

நெல்லைத்தமிழன் : 

காங்க்டக் அருகில் (சிக்கிம்) நாதுல்லா பகுதிக்குச் செல்லும் வழியில் (50 கிமீ மலைப்பகுதி) பார்த்த யாக் வகை எருமை. இதில் ஏறி சிறிது தூரம் சென்று பார்க்க 100 ரூபாய் கட்டணம் என்று நினைவு. மனதில் பாவம் என்று தோன்றியதால் பயணித்துப் பார்க்கவில்லை. மிக மிகக் குளிரான பிரதேசம் அது. இதுபோல நிறைய எருமைகளைப் பார்த்தேன். 


பனிமலைப் பகுதியிலும், பனி சூழ்ந்த சாலைகளிலும் பயணித்தது அதுதான் முதல் தடவை. இத்தனைக்கும் பனி குறைவான ஏப்ரல் இரண்டாம் வாரம். மார்ச்சுக்கு முன்பு இந்தப் பகுதிக்கு அனுமதியில்லையாம், அவ்வளவு பனியும், பனிச்சரிவுகளும் இருக்குமாம். ஏரியும் உறைந்துவிடுமாம். நம் இராணுவ வீரர்களின் கஷ்டம் நமக்குப் புரியாது. அவர்களைப் பற்றி நாம் எண்ணுவதோ கவலைப்படுவதோ இல்லை (பொதுவாக). என்ன அநியாயம் பாருங்கள்! 


டார்ஜீலிங்கை நோக்கிச் செல்லும் பேருந்துச் சாலயில் நம்முடன் பயணிக்கும் இரயில் தண்டவாளங்கள். பல இடங்களில் அவை சாலைகளைக் கடந்து செல்லும். நம் ஊட்டி மலைப்பாதை இரயில் போல. அதில் ஒரு நாள் பயணிக்கணும் என்று எண்ணியிருக்கிறேன். 


அந்த இரயில் இதுதான்.  பார்த்தாலே பயணிக்கவேண்டும் என்ற ஆசை உண்டாகிறதல்லவா?


இதுல பிரச்சனை என்னன்னா, எப்போதாவது தடம் புரண்டாலோ இல்லை வழியில் பிரச்சனை வந்தாலோ, பேருந்துகளும் சாலயில் பயணிக்க முடியாதபடி போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிடும். சாலை சீராக மணிக்கணக்கில் ஆகிவிடும். 


டார்ஜீலிங் தேயிலைத் தோட்டத்தின் மத்தியில். எனக்கென்னவோ மூணாறு தேயிலைத் தோட்டங்கள்தாம் மிகவும் அழகாக இருந்ததுபோன்ற எண்ணம்.


கண்மூடிக் கண் திறப்பதற்குள் ஏப்ரல் மாதம் வந்துவிடும். பிறகென்ன, கடற்கரையில் காயும் மீன்களுக்கும், சென்னையில் வசிப்பவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். பனி சூழ்ந்த காட்டுப் பகுதியை இப்போது பார்த்துக்கொள்ளுங்கள். 


= = = = = = = = = = = = = = =

KGG பக்கம். 

என்னாலேயே நம்ப முடியவில்லை! 

சென்ற வாரம் திடீரென்று ஒரு வெளிநாடு செல்லும் சான்ஸ் கிடைத்தது. 

பையன் அதற்கு சில நாட்கள் முன்பாக என்னிடம் சொன்னது ஏதோ சும்மா சொன்னான் என்று நினைத்தேன். அவன் அலுவலகத்தில் முக்கிய ப்ராஜக்ட் ஒன்றிற்காக அவன் ஒரு அவசர ட்ரிப் வெளிநாடு செல்ல இருப்பதாகவும், அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த அலுவலக ஆடிட் அதிகாரி வர இயலாத நிலையில், ISO ஆடிட் தெரிந்த ஒரு நபர் தேவைப்படுவதாகவும், நான் ஏற்கெனவே ISO ஆடிட்டர் சான்றிதழ் பெற்றிருந்ததால், நான் வர இயலுமா என்று கேட்டான். நான் ஒப்புக்கொண்டவுடன், அவன் அலுவலக ஆட்கள் கிடுகிடுவென என் பாஸ்போர்ட் renewal , விசா எல்லாம் அலுவலகம் மூலமாக மின்னல் வேகத்தில் தயார் செய்தனர். 

 அந்த வெளிநாட்டு ட்ரிப்பில் எடுக்கப்பட்ட சில படங்கள் இப்போது உங்கள் பார்வைக்குக் கொடுக்கிறேன். 

எந்த நாடு என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா என்று பாருங்கள். 









= = = = = = = = = = = = = =

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!