வாத்யார் சுஜாதா ஒரு தீர்க்கதரிசியின் பார்வையில் சில அறிவியல் புனைவுக் கதைகள் எழுதியிருக்கிறார்.
தற்போதய ஈரான் போரில் துபாய் அடிவாங்கத்துவங்கியதும் அங்கே சீரும் சிறப்புமாய் வாழ்ந்துகொண்டிருந்த இந்தியர்கள் பலர், தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ அங்கிருந்து தப்பித்து இந்தியா வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வளர்த்து வந்த தங்களின் செல்லப் பிராணிகளை வேறு வழியில்லாமல் அங்கேயே நடுத்தெருவில் விட்டு விட்டுப் போய்விட்டார்கள். என்னதான் தங்கள் குழந்தைப் போலப் பாவித்து வளர்த்துவந்தாலும் உயிருக்குப் பயந்து ஓடும்போது செல்லப் பிராணிகளை ‘ வைக்க வேண்டிய இடத்தில்’ வைத்துவிட்டுதான் வரவேண்டியிருக்கிறது இல்லையா ? கனத்த இதயத்துடன் தான் இதைச் செய்திருப்பார்கள் என்றாலும் வீட்டின் ஒருவராய் வளர்ந்த அந்த நாய்கள் தங்கள் நிலமை என்ன என்று தெரிந்துகொண்டிருக்கும். பாவம். இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் போது சுஜாதவின் கதைதான் ஞாபகத்துக்கு வந்தது.
கதையின் பெயர் “ஜில்லு”. ஜில்லு என்பது ஆத்மாவின் பையன் வளர்த்துவரும் செல்லப் பிராணி. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அனு ஆயூதப் போர் மூண்டு இந்தியாவில் குண்டு விழும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ஒரு நகரை காலி செய்கிறது ராணுவம். அத்யாவசிப்பொருட்கள் மட்டும் அனுமதி என்று கட்டுப்பாடு. ரொம்ப அத்யாவசியம் என்று ஆத்மாவின் பையன் எடுத்துக்கொள்வது “ஜில்லு”. அப்பா சொன்னாலும் கேட்காமல் அடம்பிடிக்கிறான். அப்பா அந்தச் சின்ன நாய்குட்டியை துணியில் சுற்றி திருட்டுத்தனமாய்க் கைப்பையில் எடுத்துப்போகிறார். விமானம் ஏறப்போகும் சமயத்தில் ஒரு ராணுவ அதிகாரி அதைக் கண்டுபிடித்துவிடுகிறார். நாயை அப்புறப்படுத்த சொல்கிறார். பையன் மறுக்கிறான். அப்பாவையும் குடும்பத்தையும் கன்னத்தில் அறைந்து இழுத்துப் போகிறார்கள்.
கடைசியில் ஜில்லுவுக்கு என்ன ஆயிற்று என்று தெரிய ஆசைப்படுபவர்கள். வாத்தியாரின் கதையைப் படிக்கவும்.
Anand Raghav
சில நாட்களுக்கு முன்னால் வாட்ஸாப்பில் ஒரு படச்செய்தி வந்தது. பார்க்கும்போதே பாவமாக, பரிதாபமாக இருந்தது. அதில் கூடுதலாக ஒரு குறிப்பும் இருந்தது. "சுஜாதாவின் ஜில்லு" கதை படித்திருக்கிறீர்களா?" என்று. இதோ அந்தக் கதை.
ஜில்லு
- சுஜாதா -
ஜன்னலுக்கு வெளியே தொடுவானத்தில் ஒரே ஒரு மேகம் கருப்புத் தீற்றலாகத் தெரிந்தது. ஆத்மா கதவைச் சார்த்தினான். மழை வரப்போகிறது.
தெரிந்துவிட்டது. அவர்கள் கணக்குப்படி சாயங்காலம் மழை வந்து விடும். அதற்குள் புறப்பட்டு விட வேண்டும். திரும்பினான். நித்யா பெட்டியில் துணிகளை அடைத்துக் கொண்டிருந்தாள்.
"சீக்கிரம் நித்யா!
"எதை எடுத்துக்கறது எதை விடறது?"
"மொத்தமே மூணு பேருக்கும் எட்டு கிலோதான். ரொம்ப அவசியமானதை மட்டும் எடுத்துக்க"
"அவசியமானதுங்கறது எது?"
அந்த கேள்விக்கு இந்த சந்தர்ப்பத்தில் 'மூச்சு' என்பதைத் தவிர ஆத்மாவிடம் வேறு பதில் இல்லை
தோருவின் வால்ட்டன் ஞாபகம் வந்தது. ஒன்றுமே தேவையில்லைதான் எல்லாமே புதுசாக அமைத்துக் கொள்ளலாம்.
ஆத்மா ஹாலைச் சுற்றிலும் நிதானமாகப் பார்த்தான். .பதினைந்து வருஷ மண வாழ்க்கையின் சேகரிப்புகள். அவ்வப்போது சந்தோஷம், செய்தி,அறிவு, இதம் தந்த எத்தனை சாமான்கள் ! ஸ்டீரியோவின் ஸ்பீக்கர்கள் இடம் வலமாக மௌனமாக நின்று கொண்டிருந்தன . உடன் இணைத்த காஸட் டெக் ப்ளேயர் ஒலி பெருக்கி. வண்ண ஜாக்கெட்டுகளில் உறைந்திருக்கும் மணிக்கணக்கான சங்கீதம். பீத்தோவன், பாஹ், ஹரிபிரசாத் சௌரஸ்யா எல்லாமே இப்போது தேவையில்லைதான். அருகே டைப்ரைட்டர் இருந்தது. ம்ஹூம் வேண்டாம். கவிதை அடிப்பதற்கு இதுவா சமயம்? அலமாரி நிறையப் புத்தகங்கள் இருந்தன. எதையாவது எடுத்துச் செல்லலாம். எதை? தொல்காப்பிய ஆராய்சசி, முக்கூடற்பள்ளு? பாண்டி நாட்டுத் திருப்பதிகள்? புதுக்கவிதை - நாலு கட்டுரைகள்? தமிழர் நாட்டுப்புற இயல் ஆய்வு? பாலையும் வாழையும்? பைபிள்? திருக்குறள்? எதை? எல்லாமே இப்போது சப்தங்கள்.. வெறும் சப்தங்கள்.
"குண்டுகள் எறிந்து கூரைகள் எரிந்து பெண்டுபிள்ளை வயோதிகரைக் கொன்று குவிப்பது அன்றாடப் பொழுதுபோக்கு!"
"பாஸ்டர்ட்ஸ்!"என்று யாரையோ திட்டினான்.
"என்ன புஸ்தகம் எடுத்துக்கணும்"
'ஏதாவது எடுத்துக்கலாம் பிரயாணத்தில படிக்கறதுக்கு"
"என்ன, சீக்கிரம் சொல்லுங்க"
ஆத்மா மறுபடி அந்த அலமாரியை வருடினான்."இது போதும்!"என்று 'ராணி' இதழைப் பெட்டியின் மேல் போட்டான்.
"நகைப் பெட்டிகளை என்ன பண்றது?"
"எல்லாத்தையும் போட்டுண்டு வா. அங்க போனா வித்து மரவள்ளிக் கிழங்கு வாங்கலாம்"
நித்யா அவனைக் கலவரத்துடன் பார்த்தாள்.
"ஆளுக்கு மூணு செட்டு துணி வெச்சிருக்கேன். குமாருக்கு ஸ்வெட்டர் எடுத்துக்கிட்டிருக்கேன்"
'இது என்ன பெரிசா?"
"நம்ம கல்யாண போட்டோ ஆல்பம் இதை விட்டுப் போக மனசு வரலை"
ஆத்மா அதைப் பிரித்தான். ஒல்லி ஆத்மா பொம்மை போல் நித்யா. மனசுக்குள் புன்னகை விரிந்தது. "உன்னை நான் முதல்ல தொட்ட போது நடுங்கியது".
நித்யா கவனிக்காமல் "பூட்டு போறலை. மொத்தமே நாலு பூட்டுத்தான் இருக்கு"
"பூட்டா? எதுக்கு?"
"வீட்டைப் பூட்டிட்டுப் போக வேண்டாம்?"
ஆத்மா கைதட்டி சிரிதது "பைத்தியமே பூட்ட வேண்டாம். திருடறதுக்கு ஒரு ஆள் கிடையாது இந்த வீட்டில இருக்கற அத்தனையும் ஃபரிஜ், ரேடியோ, டிவி, புஸ்தகங்கள், கித்தார் நாற்காலி, யானை பொம்மை எல்லாமே இங்கதான் இங்கயேதான் இருக்கப் போறது.
நுறு வருஷம் ஆனாலும் இங்கேதான் இருக்கப் போறது. ஆல்ஃபா கதிர்களிலும் பீட்டா துகள்களிலும் ஜொலிச்சுண்டு"
நித்யா சற்று நேரம் மௌனமாக இருந்தாள். "ஆத்மா நாம் எங்க போறம்?"
"யாருக்குத் தெரியும்? அரபிக் கடல்ங்கறாங்க, மினிக்காய்ங்கறாங்க லட்சத் தீவுங்கறாங்க. காத்துக்கு எதிர்ப்பக்கம் எங்கயாவது கூட்டிட்டுப் போவாங்க"
"முதலில் பம்பாய் போகணுமா?"
"பம்பாயா? அசடே! பம்பாய் காணாமப் போய்டுத்து. ஃபணால் ! ப்ஷ்ஷ்... ராட்சச நாய்க்குடை".
இப்ப அங்க ஒருத்தரும் இல்லை மெட்றாஸ் போச்சு. டெல்லி போச்சு. கல்கத்தா போச்சு நாம ஏதோ இந்த ஊர்ல மாற்றலாகி வந்து சேர்ந்தோம்! தப்பிச்சோம்! மழை துரத்தத் துரத்த ஓடிக்கிட்டே இருக்கலாம்! அதிர்ஷ்டம்!"
"அது அதிர்ஷ்டமா?" என்றாள் நித்யா.
"சரியான கேள்வி. பதில் தெரியலை. குமார் எங்கே-".
"வெளியில விளையாடிட்டு இருக்கான். குமார்?"
குமார் உற்சாகத்துடன உள்ளே வந்து "அப்பா அப்பா ஏ..ழு எலிகாப்டர். வந்து பாரேன்" என்றான்
ஆத்மா மகனுடன் பால்கனிக்கு வந்தான். படப்படப்பட என்று சிறகு சுற்றி ஸ்டெபிலைசரின் க்றீ...ச்சுடன் அந்த இயந்திரப் பூச்சிகள் மைதானத்தில் இறங்குவதைப் பார்த்தான்.
"நித்யா. வந்துட்டாங்க சீக்கிரம் பாக் பண்ணு"
'அப்பா நாம எலிகாப்டரில் போகப்போறமா?"
"ஆமாடா கண்ணு"
"எங்க போறோம்?"
"தூ..ரத்துககு"
"ஸ்கூல் லீவா?"
"இனிமே லீவுதான்"
"எப்ப வருவோம்?"
"திரும்பி வரமாட்டோம்"
'?"
"ஏன்னா பாக்கிஸ்தான் இல்லை பாக்கிஸ்தான்? அவாளும் சைனாவும் சேர்ந்துண்டு நம்மோடு சண்டை போட்டுட்டு டபால்னு நிறயப்பேர் செத்துப் போய்ட்டா! நாம இன்னும் செத்துப் போகலை-"
நித்யா உள்ளே இருந்து "ரொம்ப காரியமா குழந்தைக்கு இதெல்லாம் சொல்லியே ஆகணுமா?"
"ஹி மஸ்ட் நோ நித்யா"
குமார் யோசித்து "அதுக்கு ஏன் ஊருக்குப் போறோம்" என்றான்.
"அவாள்ளாம் வெடிச்ச பட்டாசினால புகை நிறைய ஆய்டுத்து. அதில விஷம் நிறைய இருக்கு அது நம்மகிட்ட வந்துண்டிருக்கு"
'நாம் அவாளை ஷூட் பண்ணலியா?"
"ம்! நாமும் ஷூட் பண்ணோம். ஒரே தமாஷ். தீபாவளி மாதிரி வெடிச்சோம். கராச்சி. ராவல்பிண்டி லாஹூர், பீக்கிங்"
"ஏன் நிறுத்திட்டோம்?"
"பட்டாசெல்லாம் தீர்ந்து போச்சு நிறுத்திட்டோம்"
'"ஊருக்குப் போனதும் எனக்கும் வாங்கித் தாப்பா"
'என்னது?"
"ஆட்டம் பாம்"
ஆத்மா சிரித்தான்."நீதாண்டா தலைவன்"
"குமார் குமார் உன் சமானெல்லாம் எடுத்துண்டியா?"
"ஆச்சு அம்மா" என்று சிறிதாகத் தன் பள்ளிப் பையைக் காட்டினான். அதனுள் ஸ்லேட்டுக் குச்சி, ரப்பர், பம்பரக் கயிறு. தீப்பெட்டி லேபல்கள், ஸ்டாம்புகள் கண்ணாடிக் கோலி.
"இவ்வளவு தானா?"
'இவ்வளபுதாம்பா, ஜில்லுவுக்கு இடம் வேணும் இல்லையா?"
"என்னது? ஜில்லுவா?"
தன் பெய்ர உச்சரிக்கப் படடதை உணரந்து கட்டில் அடியில் படுத்திருந்த ஜில்லு திடீர் என்று காதுகளை உயர்த்திக்கொண்டு வெளியே வந்து குமாரிடம் வந்த வாலை ஆட்டியது.
"ஜில்லு ஷேக்காண்ட்" ஒரு காலைத் துக்கியது.
"ஜில்லு நட நட"
இரண்டு கால்களில் நின்று நாலு தப்படி நடந்து காட்டியது.
சின்ன நாய். பொம்மைபோல் கன்னங்கரேல் என்று கண்களுடன் சடைசடையாக வாசனையாக, ஒரு சந்தோஷப் பந்தாக.
குமார் அதை தொம்சம் பண்ணினான். காதைப் பிடித்து இழுத்துக் கட்டிக் கொண்டு புரண்டு காலை வாரிவிட்டு குழந்தை செய்த அத்தனை ஹிம்சைகளை சட்டை செய்யாமல் அவனுடனேயே ஒட்டிக்கொண்டது. இரண்டு குழந்தைகள்.
"ஜில்லுஜில்லுஜில்லு.. அப்பா நாம ஜில்லுவையும் கூட்டிப்போறமில்லை"
"இல்லை கண்ணா விட்டுட்டுப் போறம்"
"பொய் ! அம்மா கூட்டிடடுப் போலாம்னு சொன்னாளே"
"அம்மாதான் பொய் சொன்னா. இத பார் குமார். அந்த எலிகாப்டர்ல மனுஷாளுக்கே இடம் இல்லை ஜில்லுவை உள்ள விடமாட்டா"
குமார் உடனே அம ஆரம்பிக்கான் நாயைக் கட்டிக் கொண்டான் "நான் வாலை."
"நீ வந்துதான் ஆகணும் இங்கே ஒருத்தரும் இருக்க மாட்டா"
"நானும் ஜில்லுவும் வீட்டில இருக்கோம் நீ போய்ட்டு வா"
நித்யா வந்து "என்ன சண்டை" என்றாள் "குமார் ஏன் அழறே"
"அப்பா ஜில்லு வேண்டாங்கறார்"
"யார் சொன்னா? ஜில்லுவை கூட்டிண்டுதான் போகப்போறோம் நீ உள்ள போடா கண்ணா"
" குமார் தீர்மானமின்றி கண்ணைத் துடைத்துக் கொண்டு நாயைக் கவலையுடன் அள்ளிக் கொண்டு உள்ளே சென்றான். ஆத்மா மைதானத்தில் இப்போதே க்யு வரிசை அமைவதைப் பார்த்தான். ஏழு ஹெலிகாப்டர்களும் இளைப்பாறிக் கொண்டிருந்தன.
"எதுக்காகப் பொய் சொல்ற? குழந்தை கிட்ட நாயை அனுதிக்கமாட்டான்னு தெரியும். இல்லையா"
'அதை அவன் கிட்ட எதுக்கு சொல்லணும்? கடைசீல சமாதானப் படுத்தி அழைச்சுட்டு போகலாம்னு பார்த்தேன் நீங்க போட்டு உடைச்சுட்டிங்க"
"இல்லை நித்யா இந்த ஏமாற்றத்துக் கெல்லாம் அவனைத் தயார்ப்படுத்தணும். சும்மா கனவுகளை சப்ளை செய்துக்கிட்டே இருக்கக் கூடாது. இன்றைய உலகம் என்னன்னு தெரிஞ்சுக்கணும் நெஞ்சில் உறுதி வரணும்"
இன்னும் இரண்டு மணி நேரம்.
அறைக்குள்ளிருந்து "ஜில்லு பயப்படாதே.. நான் அழைச்சுட்டுப் போறேன் உன்னை விடமாட்டேன். விடாட்டா அவாளை ஷூட் பண்ணிடலாம்"
நித்யா திடீர் என்று "இப்படி செஞ்சா என்ன?" எனறாள்.
"என்ன?"
"பொட்டில இடம் இருக்கு பேசாம ஒரு துண்டில சுத்தி.."
"ம்ஹும் கத்திக் கத்தி செத்துப் போய்டும்.
"கைல ஒரு கூடை வெச்சக்கலாமில்லையா?"
"இதபார் நித்யா அனாவசியமா காம்ப்ளிக்கேட் பண்ணாதே. விட்டுட்டுப் போயிரலாம்.
சாப்பாட்டுக்குத் தவிக்கும். வெள்ளைக்காரனா இருந்தா சுட்டுட்டுப் போய்டுவான்"
'எனக்குக் கூட இந்த சனியனை விட்டுட்டுப் போறதில இஷ்டமே இல்லை"
"என்ன செய்யறது? தேவடியா பசங்க அவசரப் பட்டு விபரீதம் பண்ணிட்டாங்களே?"
"ஆத்மா ப்ளீஸ்"
அவர்கள் கிளம்பும்போது மணி ஐந்து. அந்தக் கருமேகம் கொஞ்சம் பெரிசாகி இருந்தது.
ஆத்மாவும் நித்யாவும் குமாரும் வெளியே வந்து நின்றார்கள். தனியான திறந்த வீட்டை, மல்லிகைப் பந்தலை, மாமரத்தை, மகிழ மரத்தை, கதவருகில் நீலத்தில் ஆர் எஸ் ஆத்மா என்ற சிறிய பெயர்ப் பலகையை ஒரு முறை கடைசியாகப் பார்த்தான்.
'காஸை மூடினேனோ ஞாபகமில்லை!" என்றாள்
.
"சட்! வா. காஸ் மூடினா என்ன திறந்தா என்ன"
"சட்! வா. காஸ் மூடினா என்ன திறந்தா என்ன"
ஒரு பெட்டி, ஒரு சிறிய கூடை
கூடை!
"ஏய் கூடைக்குள்ள என்ன?"
"நீங்க பேசாம வாங்க ஜில்லு தூங்கறது சமாளிச்சுரலாம்"
"இதபாரு, வம்பு வீண் வம்பு கூடையைத் திறந்து பார்ததா அசிங்கமாப் போய்டும்! வேண்டாம் வுட்டுரு" என்று கூடையைப் பிடுங்கினான் குமார் வீறிட ஆரம்பித்தான்.
"விடுங்கோ நான் சமாளிக்கிறேன். அவா ஒண்ணும் செக் பண்றதில்லையாம்"
ராணுவத்தின் மூன்று டன் வண்டி ஒன்று வந்து நின்றது.
"கமான் க்விக் க்விக்" என்று ஒரு சீருடைக் குரல் கேட்டது.
ஆத்மாவும் நித்யாவும் குமாரும பெட்டியும் கூடையுமாக ஏறிக்கொள்ள வண்டி புறப்பட ஆத்மா அந்த முகங்களைப் பார்த்தான். கவலை முகங்கள். எதிர்காலம் அறியாத முகங்கள். எங்கே போகிறோம் எங்கே நிற்போம், எந்த திசை, எந்த மண் எதுவும் தெரியாமல்.. வண்டி ஆடி ஆடி மைதானத்தை நெருங்கியது. ஆத்மா கூடையை அடிக்கடி கவலையுடன் பார்த்துக் கொண்டிருநதான்.
மைதானத்தில் இறங்கி மெல்ல நகரும் வரிசையில் ஒட்டிக் கொண்டார்கள். ராணுவ உடையில் அதிகாரிகள் மேலும் கீழும் நடந்து கொண்டிருந்தார்கள். ஏழு ஹெலிகாட்ர்களிடமும் ஏழு வரிசைகள் இருந்தன. நகரத்தின் அத்தனை பேரும் வித்தியாசங்கள் இன்றி சற்றே தவிப்புடன் சற்றே அவசரத்துடன் அந்தப் புரியாத வாசலில் தடுமாறி ஏறிக் கொண்டிருந்தார்கள்
இளம் ராணுவ அதிகாரிகள் வயதானவர்களைத் தூக்கி ஏற்றிக் கொண்டிருந்தார்கள். நிற்பவர்கள், நடப்பவர்கள், சக்கர நாற்காலிகள், கைத்தடிகள் ஏழைகள் குழந்தைகள் நகரம் முழுவதும் இன்னும் ஒரு மணி நேரத்தில் காலியாகிவிடும். ஆத்மாவும் நித்யாவும் குமாரும் மெல்ல மெல்ல அந்த இயந்திரப் பறவையை அணுக அணுக அவன் இதயம் தவித்தது. எப்படியாவது உள்ளே சென்று ஏறிக்கொண்டு விட்டால் கிளம்பி விட்டால் அப்புறம் அசட்டு சிரிப்பு சிரித்து சமாளித்து விடலாம்.
..
அருகே அருகே
அருகே அருகே
"ஒரு பெட்டிதானே" என்றார் அதிகாரி.
ராணுவ அதிகாரி பெட்டியை குத்து மதிப்பாகத் துக்கிப்பார்த்து "போங்க உள்ளே சீக்கிரம்"
"அப்பாடா"
நித்யா கூடையைத் துக்கிக் கொண்டாள். அந்த சமயம் அதனுள் உறங்கிக் கொண்டிருந்த ஜில்லு கீச்சுக்குரலில் முனக ஆரமபித்தது.
"சீக்கிரம் ஏறு நித்யா"
இப்போது ஜில்லு ஸ்பஷ்டமாக ஊளையிட ஆரம்பித்தது.
"ஜஸ்ட் எ மினிட் மேடம்"
அதிகாரியின் உப அதிகாரி அவளிடமிருந்து கூடையைப் பிடுஙகிக் கொண்டார். சடுதியில் அதன் மேலிருந்த துணியை விலக்கினார்.
"நாய்!" ஜில்லுவைப் பொறுக்கி மேஜைமேல் வைத்தார்.
"மைகாட் யார் நாய் யா இது"
ஆத்மா " ஆபிஸர் இட்ஸ் லைக் திஸ் என் பையன்.."
"ஏன்யா உங்களுக்குப் படிச்சு படிச்சு சொல்லலை? லவுட் ஸ்பீக்க்ரல சொல்லலை? வீடு வீடா வந்து சொல்லலை? மிக அவசியமான பொருள்களை மட்டும் எடுத்துட்டு வரணும்னுட்டு.
நாய்! காட்! வாட் ஸ்டுபிடிட்டி ஐ ஸே"
'ஆபிசர் நான் சொல்றதைக் கேளுங்க்ஷக என் பையன்"
"லுக் மிஸ்டர உன்னோட வாதாடிக்கிட்டிருக்க நேரமில்லை. ஹெலிகாப்டர் புறப்பட்டாகணும்.
அத பாருங்க மேகம். .கதிரியக்க மழை வந்துகிட்டு இருக்கு. நாம எல்லோரும் சாவில இருந்து சிலமைல் துரமே இருக்கோம் மனுஷஙகளுக்கே இடமில்லை. நாயைக் கூட்டி வரேங்கறியே! உனக்கு இப்ப சலுகை தந்தா அந்தாளு பியானோ எடுத்துக்கிட்டு வரேம்பான். இன்னொருத்தன் என் பசு மாட்டை ஏன் விடணும்பான். நாம எல்லாம் உயிர் வாழறதுக்கு ஓடிக்கிட்டு இருக்கோம். உங்களுக்கு எட்டு கிலோ சலுகை கொடுத்ததுக்கே ஸி ஓ என்னைச்
காச்சறார். முடியாது நாயை அனுமதிக்க முடியாது"
"இது எங்க குழந்தை மாதிரி ஸார் " என்றாள் நித்யா.
"உள்ள போங்க உள்ள போங்க .நாய் கிடையாது. அடுத்தது அடுத்தது"
"படு பாவிப் பசங்களா" என்றான் ஆத்மா
'என்னது?"
"உங்களால தானடா சண்டை வந்தது"
"பொறுப்பில்லாம அவசரப் பட்டு அவன் மேல அணுகுண்டைப் போட்டுட்டு அவன் திரும்ப போட்டு உங்க மாதிரி ராட்சசப் பிரஜைகளோட அவசரப் போக்கினாலதானே, கொலை வெறியினாலதானே சண்டை வந்து நாங்க. ஒண்ணுமே தெரியாதவங்க மாட்டிக்கிட்டு இறந்து போயி பிரிஞ்சு போயி இப்ப ஊர் ஊரா எல்லாத்தையும் துறந்து ஓட வேண்டியிருக்கு ப்ளடி மிலிட்டரி ராஸ்கல்ஸ் !பாஸ்டர்ட்ஸ்"
"லுக் மிஸடர் ! நாங்க இல்லை காரணம். தலைவர்கள்தான்! ஹால் ஹிம் அப் ஐஸே"
ஆத்மா குண்டுக் கட்டாக துக்கப்ட்டு உள்ளே திணிக்கப் பட்டான். நித்யாவும் ஏற்றப்பட்டு, அவசர அவசரமாக மற்றவர்கள் ஏற்றப்பட்டு, இறதியில் ராணுவ அதிகாரிகள் ஏறிக் கொள்ள, கதவு மூடப்பட்டு
மண்டைச் சிறகுகள் சுற்ற ஆரம்பித்து சுழற்சி அதிகமாகி ஹெலிகாப்டர்கள் ஒவ்வொன்றாக சாய்வுப் பாதையில் உயர்ந்தன.
"ஆத்மா வலிக்கிறதா?" என்றாள் நித்யா.
ஏகப்பட்ட ஜனங்கள் அடைந்திருந்தார்கள். நித்யாவும் ஆத்மாவும் ஒரு ஓரத்தில் பதிய நின்று கொண்டு மேலே கிடைத்ததைப் பற்றிக் கொள்ள ஹெலிகாப்டர் மேலே மேலே செல்ல, வயிற்றுக்குள் பயப் பந்து சுருட்டிக் கொள்ள "குமார் நாம் ஊருக்குப் போனதும் வேற நாய் வாங்கிக்கலாம் என்றான் ஆத்மா.
"குமார்?"
"ஏய் குமார்! நித்யா குமார் எங்கே?"
"உங்க கூடத்தானே இருந்தான்"
"இல்லையே உன் கையைன்னா பிடிச்சிட்டிருந்தான்"
நித்யாவின் அலறல் அந்த மெஷின் படபடப்பில் கரைந்தது.
'அய்யா அய்யா என் மகன். என் மகனை விட்டுட்டோம். திறங்க. கதவை திறங்க" என்று ஆத்மா மோதினான். ஒரு வலுவான கரம் அவனை அடித்து வீழ்த்திப் பிடித்தது.
ஹெலிகாப்டர்கள் வானத்தில் புள்ளிகளாக மறைய குமார் பெஞ்சின் அடியில் பதுங்கியிருந்தவன். ஜில்லுவைத் தடவிக் கொடுத்துக்கொண்டே வெளியே வந்தான்.
"கவலைப்படாதே ஜில்லு..அப்பா அம்மா ஊருக்குப் போய்ட்டு வந்துருவா..நாம வீட்டுக்குப் போகலாம் வா"
சிறுவனும் நாயும் மெல்ல உற்சாகமாக நடந்து செல்ல, யாருமில்லாத பிஸ்கட் கடையில் அடுக்கி வைத்திருந்த பிஸ்கட்களில் நிறைய எடுத்துக்கொண்டு ஜில்லுவுக்கும் கொடுத்து, தானும் சாப்பிட்டுவிட்டு வீட்டை நோக்கி நடக்கையில் வந்த மழையில் சிறுவனும் நாயும் ஆனந்தமாக நனைந்தார்கள்.
Author's Note on this story :
=========================================================================================
கண்ணதாசன் அசத்தும் வரிகள் பற்றி வாலி.....
=====================================================================================
"நான் இந்தியன்" - சிவாஜி... பிரிவினை பேசும் இந்தக் கால அரசியல்வியாதிகள்!
நடுநிலைவாதம் என்கிற பெயரில் இந்தக் காலத்தில் இந்திய நாட்டையே மட்டமாக பேசும் அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்களை பார்க்கிறோம். சிவாஜி கணேசன் அதுபற்றி பேசும்போது முகத்தில் என்ன பெருமை, கர்வம் பாருங்கள்...
====================================================================================
ஆணென்ன பெண்ணென்ன.. யாராயிருந்தாலும் கவர்ச்சியா படம் போடுவோம்ல.... ஜெ....
அப்போதைய கிசுகிசு....




பாரத தேசத்தை நேசிப்பவர்கள் எம்ஜிஆர் காலத்தோடு போய்விட்டார்கள். பிறகுதான் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், மதச்சார்பின்மை என்ற பெயரில், சிறுபான்மையினர் என்ற பெயரில் தேசத்துரோகிகளை ஒரு கட்சி, தமிழகத்தில் வளர்த்துவிட்டது. ஏப்ரல் 23ல் மக்கள் பாடம் புகட்டுவார்களா இல்லை காசை வாங்கிக்கொண்டு வாக்களித்து நாட்டைக் காட்டிக் கொடுப்பார்களா?
பதிலளிநீக்குஎம் ஜி ஆருக்கு பிறகுதான் சிவாஜி போனார்! இன்னமும் சிலர் இப்படி இருக்கத்தான் செய்கிறார்கள்.. வாங்க நெல்லை!
நீக்குமுதல் படம் ஏற்கனவே சுற்றிக்கொண்டு இருக்கிறது.
பதிலளிநீக்குமனிதன் சுயநலமானவன். இது பற்றி முன்னர் படித்தது நினைவுக்கு வருகிறது. ஒரே ஒருவர்தான் பிழைக்க முடியும் என்ற நிலை வரும்போது பெண் காட்டும் சுயநலம். (ஆணும் அப்படித்தான்.). இதில் வளர்ப்புப் பிராணி எங்கே.
நானே அனுப்பி இருந்தேன். அதை வைத்துதான் இந்த செவ்வாயை அமைத்தேன்!
நீக்குஜில்லு கதை சுவாரசியம். சுஜாதா எழுத்து நடையே ரசனை.
பதிலளிநீக்குஅப்போதே சொல்லி இருக்கிறார்... நிதர்சனங்கள். நியாயங்கள்!
நீக்குசுஜாதாவின் எழுத்தைப் பற்றிச் சொல்லணுமா....ரொம்ப அழகா எழுதியிருப்பார் யதார்த்த நடையில். ஏற்கனவே வாசித்து மனம் ரொம்ப வேதனைப்பட்ட கதை என்பதால் இப்ப மீண்டும் வாசிக்கவில்லை.
பதிலளிநீக்குகீதா
வாங்க கீதா...
நீக்கு// இப்ப மீண்டும் வாசிக்கவில்லை. //
என் ஒழப்பெல்லாம் பாழாப் போச்சே...!!!!
சிவாஜி நடிகர். கருத்து கூறுகிறாரா, அல்லது வசனம் பேசுகிறாரா என்பதை கணிக்க முடியாது. பேசும்போதே முக பாவங்களை பேச்சுக்கேற்ப மாற்றும் திறமையுடையவர். அதுதான் அவருடைய வெற்றி.
பதிலளிநீக்குJayakumar
வாங்க JKC ஸார்.. அவர் சொல்வது நடிப்பு என்கிறீர்களா? நான் அப்படி நினைக்கவில்லை.
நீக்குஎன்னுடைய பின்னூட்டத்தை தவறாக புரிந்து கொள்கிறீர்கள். சிவாஜி பேசுவதை நான் கேட்கவில்லை, எனக்கு கேட்காது. ஆனால் முகபாவங்களை ரசிக்க முடியும். பின்ன்னூட்டம் பொதுவான கருத்து, பதிவில் உள்ள பேச்சுக்கானது அல்ல.
நீக்குJayakumar
ஓ.. நன்றி JKC சார்.. மன்னிச்சுக்குங்க.. அவசரப்பட்டு விட்டேன்.
நீக்கு
பதிலளிநீக்குஜில்லுவையும் ஜீனோவையும் ஒப்பிட்டு ஒரு சின்ன கட்டுரை சேர்த்தால் என்ன?
ஜீனோ.. சுவாரஸ்யமான இயந்திர ஐந்து! எந்திரனுக்கு முன்னோடி. அதற்கும் தேசபக்தி வந்தது.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்குஇப்போதெல்லாம் அதிகமாக வாசிப்பதைக் குறைத்துக்
பதிலளிநீக்குகொண்டுள்ளேன்...
ஓ.. சிரமப்படுத்திக்காதீங்க....
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குகைத்தல பேசியில் பெரிய ஆக்கங்களை
பதிலளிநீக்குவாசிப்பது கடினமாக உள்ளது...
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கதை மனதை மிகவும் கனத்துப் போக செய்து விட்டது. இந்தக் கதையை இதற்கு முன் படித்ததில்லை. இறுதியில் ஐயோ.. குமார் என என் மனதுக்குள் நானும் அலறி விட்டேன். இந்தப் போர்தான் எத்தனை பதற்றங்களை ஏற்படுத்துகிறது. "கடவுளே "என மனது தவிக்கிறது. போர் அபாயங்களை இறைவன்தான் மனது வைத்து நீக்கிட வேண்டும். மக்கள் அனைவரையும் நிம்மதியுடன் வைத்திருக்க வேண்டும். சுஜாதா அவர்களின் எழுத்துக்கு கேட்கவா வேண்டும். திறம்பட கண்ணெதிரே காணும் உண்மை சம்பவம் போல் எழுதியுள்ளார். நம் மனதுதான் பரிதவித்து போகிறது. இப்போதுள்ள போர் நிலவரங்களுக்கு ஏற்றபடி பகிர்ந்த கதைப்பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.