நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - 64
ராஜேந்திர விண்ணகரம் – மன்னார்கோயில் - திருநெல்வேலி
சென்ற வாரம் குலசேகர ஆழ்வார் திருவரசைப் பார்க்கத் துவங்கியிருந்தோம். முதலில் அவர் வழிபட்ட இராமர், லக்ஷ்மணர், சீதை, அனுமான் விக்ரஹங்களை தரிசித்துவிடுவோம். இதனை இணையத்திலிருந்து தேடி எடுத்தேன். நாங்கள் சென்றிருந்தபோது படம் எடுத்துக்கொள்ளவா என்று கேட்கவில்லை. அதன் காரணம் இந்த மண்டபத்தில் நுழையும்போதே ரொம்ப டிரெடிஷனலாகச் செல்லவேண்டும் (சட்டை இல்லாமல்). அதனால் அந்தக் கேள்வியைக் கேட்கத் தோன்றவில்லை. படத்தில் நேரே தெரிவது உற்சவ விக்கிரஹங்கள். நாம் படத்தைப் பார்த்தால், நமக்கு வலதுபுறம், நீல நிற மேசையில் மஞ்சள் மாலையுடன் இருப்பது குலசேகர ஆழ்வார் தினப்படி ஆராதனை செய்து வழிபட்ட இராமர் விக்ரஹம். வலதுபுற நீலமான மேசைகளில் இருப்பது ஆழ்வார் ஆச்சார்யர்கள் விக்ரஹங்கள்.
இரண்டாம் சேரமான் பெருமாள், குலசேகரன் என்ற இயற்பெயருடன் கிபி 730ல் பிறந்தார். ஆழ்வார்கள் சரிதத்தின் பிரகாரம் இவருடைய தகப்பனார் பெயர் திடவிரதன். அரசருக்குரிய போர்ப்பயிற்சி பெற்றவர். நிறைய கல்வி கற்றவர். இயற்கையாகவே இராமபிரான் மீது ஈடுபாடு கொண்டவர்.
சேர அரசர்களில் வைணவ மதத்தைச் சார்ந்தவர் இவர் ஒருவரே. அவருடைய சமகால கட்டத்தில், அதாவது சுந்தரமூர்த்தி நாயனார் 712ல் கயிலை புகுந்த தும், வைணவ மதம் தமிழகத்தில் உயர்வினைப் பெற ஆரம்பித்தது. இவரது சமகாலத்தவர் திருவில்லிபுத்தூரில் வாழ்ந்துவந்த பெரியாழ்வாரும் ஆண்டாளும். பெரியாழ்வாரினால் பாண்டிய நாட்டில் நெடுஞ்சடையன் என்னும் பராந்தக பாண்டியனும் (765-790) பல்லவர் நாட்டில் இரண்டாம் நந்திவர்மனும் (717-775) வைணவ மதத்தை மேற்கொண்டிருந்தனர் (அந்தக் கதைகளுக்குள் புகுந்தால் ஆழ்வார் வரலாற்றை இப்போதைக்கு எழுத முடியாது).
இரண்டாம் சேரமான் பெருமாள் அரசுக்கட்டிலை ஏற்றுக்கொண்டபோது நாட்டில் அமைதி நிலவியது.
இவருடைய ஆட்சிக் காலத்தில் இரண்டாம் நந்திவர்மன் இறந்து அவனது மகன் தந்திவர்மன் என்ற வயிரமேகன் பட்டத்திற்கு வந்தான். அவன் வலிமையானவன் அல்லன். அவனுடன் சேர மன்னர் போர் புரிந்து உறையூர் பகுதியைக் கைப்பற்றி, ‘கோழிக்கோன்’ என்ற பெயர் சூட்டிக்கொண்டார். 790ல் பாண்டிய மன்னன் நெடுஞ்சடையன் மறைந்ததும் அவனது மகன் இரண்டாம் ராஜசிம்மன் பட்டத்திற்கு வந்தான். அவன் வலிமை குறைந்தவன். அந்தக் கால கட்டத்தில் சேர நாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் பகைமை பூண்டு, சேர மன்னன் பாண்டியன் மீது பொருது, வென்றான். அதனால் சேர மன்னனுக்கு ‘கூடற்கோன், கொங்கர்கோன்’ என்ற பட்டம் ஏற்பட்டது. எதனால் இந்த இரண்டு பகுதிகளின் மீது சேர அரசன் படையெடுத்தான் என்பதற்கு சரியான விளக்கங்கள் இல்லை. இருந்தாலும் குலசேகர ஆழ்வார் தன்னுடைய பட்டங்களாக அவர் இயற்றிய பெருமாள் திருமொழியில் குறிப்பிட்டுக்கொள்வதிலிருந்து இதனைக் குறிப்பிடுகிறார்கள்.
கிபி 789ல், நம்பூதிரிகளுடைய கிராம சபைக்குத் தலைவர் ஆகி ‘பெருமாள்’ பட்டம் பெற்றார்.
வைணவ மதத்தின் மீது மிகுந்த பற்றுக்கொண்டவர் இவர். இராமனைத் தன் ஆதர்ச தெய்வமாகக் கொண்டவர். எந்த அளவு என்பதற்கு, ஒரு சொற்பொழிவில், அரக்கர்கள் பெரும் படையுடனும் இராமனுடன் போர் புரிய வந்தனர் என்ற நிகழ்வைக் கேட்டு, உணர்ச்சி வசப்பட்டு, தன்னுடைய படையுடன் இராமருக்குத் துணை செல்வேன் என்று எழுந்துவிட்டாராம். போர் வீரனாக மிளிர வேண்டிய அரசர், வைணவர்களுடன் உறவு வைத்துக்கொண்டு பக்தியில் ஈடுபடுவதைக் கொஞ்சம் கூட விரும்பாத அமைச்சர் பெருமக்கள், குலசேகரனின் ஆராதனை மூர்த்தியின் திருவாபரணத்தை ஒளித்து வைத்துவிட்டு, அது காணாமல் போன பழியை, அவருடன் கூட இருக்கும் வைணவ அடியார்களில் ஒருவராக இருக்கலாம் என்று சொன்னார்கள்.
வைணவ அடியார்கள் பேரில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த அரசர், உடனே கருநாகத்தை உள்ளே வைத்து மேலே மூடப்பட்டிருந்த ஒரு குடத்தைக் கொண்டுவரச் செய்து, இந்த ஆபரணத்தை அடியார்களுள் ஒருவர் எடுத்திருந்தால், நாகம் தன்னைக் கடிக்கட்டும் என்று சொல்லி, குடத்தினுள் கையை விட்டாராம். நாகம் அரசரைத் தீண்டாததைக் கண்ட அமைச்சர்கள் பதற்றத்துடன் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள். இந்த நிகழ்வை குலசேகர ஆழ்வாரின் திவ்யப் பிரபந்தமான பெருமாள் திருமொழியின் தனியனில்,
ஆரம்கெடப் பரன் அன்பர் கொள்ளார் என்று வாரம் கெட குடப் பாம்பில் கையிட்டவன்,
என்று சொல்கிறது. ஒரு சமயத்தில், அவருக்கு அரச பதவியைவிட, அரங்கன் சேவையே முக்கியம் என்ற எண்ணம் தோன்ற அரச பதவியை விட்டு விலகி, 798ல் தன்னுடைய குமாரனான மார்த்தாண்ட வர்மனுக்கு அரசபதவியை அளித்து, பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டார். தன்னுடைய குழாங்களுடன், அரசியலை விட்டு விலகி, திவ்யதேசங்களைச் சேவிப்பதிலும் அவற்றிர்க்குத் தொண்டு செய்வதிலும் ஈடுபட்டுவிட்டார்.
அரசாட்சியை விட்ட பிறகு, பெருமாள் மீது இவர் பாடிய பாசுரங்களை, பெருமாள் திருமொழி என்ற தலைப்பில் திவ்யப்பிரபந்தத்தில் காணலாம். (105 பாசுரங்கள்). பத்து பதிகங்களில், இராமபிரானைக் குறித்துப் பாடிய பதிகங்கள் உள்ளதாலும், இராமபிரானை இவர் ஆராதித்ததாலும், ‘பெருமாள்’ என்ற பெயர் வந்தது எனச் சொல்கின்றனர். ஆனால் நாம் முன்னரே கண்டதுபோல நம்பூதிரிகளின் கிராமங்களுக்குத் தலைவராக இருந்த தால்தான் இவருக்கு ‘பெருமாள்’ என்ற பெயர் ஏற்பட்டது. இறைவனின் மேல் உருகி இவர் பிரபந்தங்களை எழுத ஆரம்பித்தபிறகுதான் ‘ஆழ்வார்’ என்பது இவரது இயற்பெயரான குலசேகரனுடன் ஒட்டிக்கொண்டது. அதனால்தான் இவர் குலசேகர ஆழ்வார் என்று அறியப்படுகிறார். (அதாவது அவர் ஆழ்வார் நிலைக்கு உயர்ந்தது, அரசாட்சியை விட்டுவிட்டு பக்தி மார்க்கத்தில் முழுமையாகத் திரும்பிய பிறகுதான்)
இவர் திருவரங்கம், திருக்கண்ணபுரம், தில்லை திருச்சித்ரகூடம், திருவேங்கடம், காஞ்சீபுரம், திருநாராயணபுரம் (மேல்கோட்டை) போன்ற தலங்களைச் சேவித்து பிறகு கடைசியாக நாஞ்சில் நாட்டு மன்னார்கோயிலுக்கு வந்து சேர்ந்தார்.
இவர் அரசாட்சியை விட்டது கிபி 798ல். பரமபதம் அடைந்தது 803ல். என் அனுமானப்படி கடைசி ஓரிரு வருடங்கள் இவர் மன்னார்கோயிலில் இருந்திருக்கலாம். (ஆனால் மன்னார்கோயிலில் இவர் 30 வருடங்கள் இருந்தார் என்று சொல்கின்றனர். அதற்கு வரலாற்று ஆவணம் கிடையாது)
இந்த குலசேகர ஆழ்வார் வேறு, திருவிதாங்கூர் அரசனாக இருந்த கிருஷ்ண பக்தரான குலசேகர வர்மா என்ற கேரள வர்மா வேறு. பின்னவர் இராமானுசர் காலத்திற்குப் பிற்பட்டவர், கிருஷ்ணரைத் துதிக்கும் முகுந்தமாலை என்ற சமஸ்கிருத ஸ்லோகங்கள் கொண்ட நூலை எழுதியவர். முன்னவர், திவ்யப் பிரபந்தத்தில் பெருமாள் திருமொழி என்ற 105 பாசுரங்கள் கொண்ட பிரபந்தத்தை எழுதியவர் என்கின்றனர். குலசேகர வர்மா பிறந்தது கொடுங்களூருக்கு அருகில் உள்ள திருக்குலசேகரபுரம் என்ற ஊர், அங்குள்ள கேரள பாணிக் கோயிலான ஸ்ரீகிருஷ்ணர் கோயிலைக் கட்டியது அவர் என்று சொல்கின்றனர்.
குலசேகர ஆழ்வாரைப் பற்றிப் (இரண்டாம் சேரமான் பெருமாள்) பார்க்கும் இந்தப் பதிவில், அதிலும் அவர் பரமபதம் அடைந்த மன்னார்கோயிலில் அவரது திருவரசின் படங்களைப் பார்க்கும்போது, அவரது பாசுரங்களைக் கொஞ்சமாவது பார்க்கவேண்டாமா? ஆனால் அதற்கு இடம் இல்லையே. என்ன செய்ய?
பெருமாள் திருமொழியில், அரங்கனையும் (3 பதிகங்கள்), திருவேங்கடமுடையானையும் (1 பதிகம்), தில்லைச் சித்திரகூடத்தானையும் (1 பதிகம்), வித்துவக்கோட்டு அம்மானையும் (1 பதிகம்), கண்ணனைப் பற்றியும் (2 பதிகங்கள்), இராமனைப் பற்றியும் (3 பதிகங்கள்) மொத்தம் 105 பாசுரங்கள் பாடியுள்ளார்.
குலசேகர ஆழ்வார்… திருவரசின் மேல் அமைக்கப்பட்டுள்ள அவர் உருவம்.
தெளிவான கல்வெட்டுகள், குலசேகர ஆழ்வார் திருவரசைச் சுற்றியுள்ள சுவர்களில்.
குலசேகர ஆழ்வார் திருவரசைச் சேவித்துவிட்டு, மன நிறைவாக கோயிலின் வெளிப்பகுதிக்கு வர ஆரம்பித்தோம். அங்கு மூன்று மண்டபங்கள் உள்ளன.
அந்தத் தடவை (அதாவது பலமுறை சென்றதில் ஒருமுறை) மன்னார் கோயில் சென்றிருந்தபோது,
முன் மண்டபத்தில் இருந்த சிற்பங்களைப் படமெடுத்துக்கொண்டிருந்தேன். சட் என்று ஒரு சிற்பம்
என்னைப் பார்த்தது. அது காலை 6 ½ மணி இருக்கும். எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று
பாருங்கள். முதலில் மொத்த சிற்பங்களைப் படமெடுத்தபோது ஒன்றும் தெரியவில்லை. மார்பளவு
வரை படம் எடுத்தபோது சட் என்று அந்தச் சிலை பார்த்தது போலத் தோன்றியது. திரும்பவும்
நான் கூர்ந்து பார்த்தபோது என்னைப் பார்க்கிறது என்று உறுதியாக என் மனதில் தோன்ற, உடம்பு
சிலிர்த்துவிட்டது (பயத்தினால்). மனைவியிடம் சொன்னேன். அவள், இந்த மாதிரி சிற்பங்களுக்கு
கண் திறந்திருக்கமாட்டார்கள். ஒருவேளை இந்தச் சிலைக்குக் கண் திறந்திருக்கலாம் என்றார். அந்த இடத்தைவிட்டு உடனே அகன்றுவிட்டேன். பிறகு சென்றபோதெல்லாம்
இந்தச் சிற்பத்தைப்/சிலையைப் பார்த்த நினைவு இல்லை (இடம் மாற்றி வைத்துவிட்டார்களா
இல்லை என் கண்ணில் தட்டுப்படவில்லையா என்று தெரியவில்லை)
என்னைச் செய்த சிற்பியான நீ (அல்லது அவனுடன் சேர்ந்தவன் நீ). என்னை ஒரு நாள் பார்க்க வருவாய். அதுவரை நான் உனக்காக இங்கு சிலை வடிவில் காத்திருப்பேன் என்று ஒரு தலைமுறையில் சொன்ன பெண்ணோ நீ?
இதுபோல ஒரு முறை, திருக்குறுங்குடிக்கு என் மனைவியுடன் சென்றிருந்தபோது, அங்கு கொட்டடியில் இருந்த யானை என்னிடம் பேசியது (அதன் பாஷையில்). நான் சொல்லச் சொல்ல அதற்கு பதில் சொன்னது. எனக்குத்தான் புரியலை. என் மனைவிதான் இதற்குச் சாட்சி.
என்ன ஒரு அழகான அனுபவம் பாருங்கள்… அடுத்த வாரம்
தொடர்வோம்.
(தொடரும்)
குலசேகர ஆழ்வாரைப் பற்றிய பல்வேறு விவரங்கள் அறிந்து கொண்டேன். நன்றி! எப்படி இவ்வளவு அழகாகப் படம் எடுக்கின்றீர்கள் என்று தெரியவில்லை. அற்புதம்...அவ்வளவு அழகு. சில சிற்பங்கள் கை உடைந்து காணப்படுவது வருத்தமாக உள்ளது. விஷமிகளின் வேலையா? அல்லது காலத்தின் கொடுமையா?
பதிலளிநீக்குவாங்க சூர்யா சார்... நெல்லைப் பகுதியில் கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில் சிற்பங்களுக்குப் புகழ் பெற்றது (அங்கு இருந்தவரை அந்தக் கோயிலுக்குச் சென்றதில்லெ. அண்ணன் நண்பர்களுடன் பதின்ம வயதில் சைக்கிளில் சென்றுவந்தருக்கிறான்). அழகான சிற்பங்களில், வில்லைத் தட்டிப் பார்ப்பது, விரலைத் தட்டுவது என்ற விளையாட்டில் ஈடுபட்டு சிலர் உடைத்துவிட்டதால் இப்போ சிற்பங்களைக் கூண்டுக்குள் அடைத்திருக்கிறார்கள். முஸ்லீம் படையெடுப்பில் பல கோயில்களின் சிற்பங்கள் சிதைக்கப்பெற்றன. வாராது வந்த மாமணியாய் விஜயநகரப் பேர்ரசு வந்து பலப் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தன.
நீக்கு/என்னைச் செய்த சிற்பியான நீ (அல்லது அவனுடன் சேர்ந்தவன் நீ). என்னை ஒரு நாள் பார்க்க வருவாய். அதுவரை நான் உனக்காக இங்கு சிலை வடிவில் காத்திருப்பேன் என்று ஒரு தலைமுறையில் சொன்ன பெண்ணோ நீ?/
பதிலளிநீக்கு/திருக்குறுங்குடிக்கு என் மனைவியுடன் சென்றிருந்தபோது, அங்கு கொட்டடியில் இருந்த யானை என்னிடம் பேசியது (அதன் பாஷையில்). நான் சொல்லச் சொல்ல அதற்கு பதில் சொன்னது/
எனக்கும் இந்த மாதிரி சில அனுபவங்கள் உண்டு. வெளியில் சொன்னால் நம்பமாட்டார்கள் என்று சொல்வதில்லை. நல்ல கதைக் கருவாய் இருக்கின்றதே! கற்பனைக் குதிரையையைத் தட்டி விடுங்கள். வியாழன்/வெள்ளிக் கதையாக எங்கள் ப்ளாகில் வரலாம்
நம் அனுபவங்களை, அதுவும் ஆன்மீக அனுபவங்களை பிறர் நம்பும் வாய்ப்பு குறைவு (ஏன்.. மனைவி பசங்களே சிரித்துவிட்டு ஒதுக்கிவிடுவார்கள்). என் ஆசிரியர், குரு, இரண்டு மாதங்களுக்கு முன் முதன்முறை அவரது அனுபவங்களைச் சொன்னார். சிலிர்த்தது. கூடவே சொன்னார், பிறர் நம்புவதற்காக இதைச் சொல்லலை, இது என் அனுபவம் என்றார்.
நீக்குஇரண்டாம் சேரமான் பெருமாள் குலசேகர ஆழ்வாரானார். அவருக்கு ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் வந்த சேரமான் பெருமாள் நாயனார் அறுபத்து மூவரில் ஒருவர். சுந்தரர் சமகாலத்தவர் என்பதால் சுமார் 850 ஆம் ஆண்டு போல் இருக்கவேண்டுமோ? இருவருக்கும் இரத்த சம்பந்தம் உண்டா? அல்லது வேறு வம்சத்தவரா? சேர மன்னர்கள் யார் காலத்தில் வைணவத்திலிருந்து சைவத்துக்கு மாறினார்கள் என்று ஏதேனும் செய்தி உண்டா?
பதிலளிநீக்குசேர மன்னர்கள் முற்றிலும் சைவத்தை ஒழுகியவர்கள், ஆனால் வைணவத்தைப் புறம் தள்ளவில்லை. குலசேகர ஆழ்வார் முதல் வைணவர். அவரது மகன் இரண்டையும் சார்ந்தவர். பிறகு திருவிதாங்கூர் அரசு பத்மநாபர் கோயில் காப்பாளராக மாறியது. அந்த அரசர் மாத்திரம் தனியாக இறைவனுடன் சில நேரம் செலவிடும் உரிமை உண்டு. இப்போதும் அந்த நடைமுறை இருக்கிறது.
நீக்குகண்ணதாசனின் சேரமான் காதலியின் (வெகு நாட்களுக்கு முன் படித்தது...மறந்து விட்டது) கதாநாயகன் சேரமான் பெருமாள் நாயனார்தானே! இவர் ஒரு மாற்று மதப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டாரோ? இவர் பற்றிப் பல கட்டுக்கதைகள் உலவுகின்றன. சிலர் இவர் மெக்காவிற்குச் சென்று நபிகள் நாயகத்தைச் சந்தித்து முஸ்லீமாகி விட்டாரென்கிறார்கள். சிலர் இவர் நேபாளத்துக்குச் சென்று புத்த மதத்தில் இணைந்து விட்டாரென்கிறார்கள். நமது நம்பிக்கைப் பிரகாரம் இவர் சுந்தரருடன் கைலாயத்துக்குச் சென்று விட்டார். எது உண்மையோ?
நீக்குநீங்க மூன்று மன்னர்களை, பெயர் குழப்பத்தினால் குழப்பிக்கிறீங்க. அனைத்து வரலாறும் ஒன்றுவிடாமல் வரும், சமாதி உட்பட. கயிலாயம் சென்ற மன்னரை போன வாரம் பார்த்தோம்.
நீக்குஉங்கள் ஆன்மீக அனுபவங்களை நான் நம்புகிறேன். ஏனென்றால் எனக்கும் இப்படி சில அனுபவங்கள் உண்டு.
பதிலளிநீக்குசோழனாடு, நடு நாட்டு கோவில்களை விட பாண்டிய நாட்டு கோவில்களில் சிலைகள் பெரிதாக இருக்கிறதோ?
வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம்....
நீக்குஆன்மீக அனுபவங்கள் பெரும்பாலும் அடுத்தவர்களால் நம்ப முடியாது. கோவிட் சமயத்தில் மூன்று வாரங்களாக அப்போ அப்போ இருமல். காலை நான்கு மணி, தூக்கத்துல, இப்படி இருமல் இருப்பது நியாயமா, லிஃப்ட், வெளீல எங்கயும் போகத் தயக்கம், இதை சரிப்படுத்தக்கூடாதா என திருப்பதி பெருமாளை மனதில் நினைத்துக் கேட்டது நினைவில் இருக்கு. எழுந்ததிலிருந்து இருமல் போயே போச்சு
இல்லை. சில கோயில்கள் தவிர எல்லாவற்றிலும் பிரம்மாண்டமான சிலைகள் உண்டு, நீங்க மூலவர் பற்றிக் கேட்கலைனு அனுமானிக்கிறேன். மூலவர் அமைவது இடத்தைப் பொறுத்தது அல்ல. வைணவ திருப்பதிகளில் சிறிய உருவமும் உண்டு, மிகப் பெரிய உருவமும் உண்டு..
நெல்லையின் எழுத்துகளில் ஒரு குறிப்பிடத்தக்க வேண்டிய பாராட்டப்பட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. பொதுவாக ஸ்காலர்லி ரெலிஜியஸ் சர்க்கிள்களில் ஒரு கருத்து உண்டு. சைவ சமயத் திருமுறைகளில் வரலாற்றுக் குறிப்புகளும் internal cross-reference consistency யும் இருக்கும் அளவிற்கு வைணவத் திருமுறைகளில் கிடையாது என்பதே அந்தக் கருத்து. எனக்குத் தெரிந்த வரை நெல்லை ஒவ்வொரு வரியையும் ஆதார பூர்வமாக எழுத முனைகிறார். எல்லா ஆதாரங்களையும் வாசகர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படையாகத் தெரிவிக்கிறார். நன்றி நெல்லை! ஒன்றிரண்டு ஆதாரங்கள் நம்பும் வகையில் இல்லை என்றாலும் (உதாரணம்: 30,0000 வருட தமிழ் மன்னர் வரலாறு) பாப்புலர் கர்ண பரம்பரைக் கதைகளை மறுப்பதற்கு அவர் தயங்குவது இல்லை (உதாரணம்: குலசேகர ஆழ்வார் 30 ஆண்டுகள் மன்னார்கோயிலில் வாழ்ந்தார்).
பதிலளிநீக்குஎனக்கு ஓர் கேள்வி: அந்தக் காலத் துப்பறியும் கதை மன்னர் வடுவூர் துரைசாமி அய்யங்கார் ஒரு ஆராய்ச்சிப் புத்தகம் எழுதினார் (3 ஆண்டுகள் தீவிர ஆராய்ச்சிக்குப் பின் என்று சொல்வார்கள்). அதில் அவர் "எகிப்திய பாரோ மன்னர்கள் வடகலை அய்யங்கார்களே" என்று வாதமிட்டிருப்பார். (வடகலையே 1,250 ஆம் ஆண்டுக்குப் பின்தான் வந்தது...இதில் எப்படி 7,000 வருடங்களுக்கு முன் வடகலை அய்யங்கார்கள் எகிப்துக்குப் போக முடியும்?) ஒரிஜினல் புத்தகத்தை நான் படித்ததில்லை. யாரேனும் படித்திருக்கிறீர்களா? துரைசாமி அய்யங்காரின் கருத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
நன்றி சூர்யா சார். என்னால் நம்ப முடியாத விஷயங்களை எழுதினால் குறிப்பிட்டு விடுவேன். என் மனதில் இந்து புராணங்கள் சொல்லும் வருடக் கணக்குகள் உண்மைதான் என்று தோன்றும். அதை சரியாக ஆராய, அறிவியல்பூர்வமா, வேண்டும். இராமர் இஷ்வாகு வம்சத்தில் எத்தனையாவது தலைமுறை, கிருஷ்ணர் தலைமுறைகளின் பெயர் என பலவும் விஷ்ணு புராணத்தில் இருக்கிறது.
நீக்குஎனக்கு விநோதமான எண்ணம் உண்டு. பெருமாள் திருநெற்றியில் என்ன திருமண் இருக்கிறது, வடகலையா தென்கலையா என்று. பெரும்பாலும் கஸ்தூரி திலகம் என்பதுதான் இருக்கும், விலையுயர்ந்த பச்சை அல்லது சிவப்பு கல்லினால் செய்யப்பட்ட நீள் ஆபரணம் இருக்கும்.
வடகலை தென்கலை உதயமானது 1300களில்தான். காரணம் வடகலை பொதுவாக இராமானுஜர் காலத்தைய எல்லோரையும் அவர்கள் சொன்னதையும் ஏற்றுக்கொள்வர். பிள்ளைலோகாச்சாரியார் காலத்திலிருந்து கருத்து வேறுபாடு. அதாவது, உயர்ந்த, த்த்துவக் கருத்து வேறுபாடுகள் interpretatins. பிறகு வந்தவர்கள் (கடந்த 200 ஆண்டுகள்) சாறை விலக்கி சக்கையைப் பிடித்துக்கொண்டு கட்சி வளர்க்கிறார்கள். அந்த அந்த கலைகளில் புதிய சிந்தனை இல்லை, தங்கள் கருத்தே சரி என்ற கட்சி மனோபாவம் என்பது என் கருத்து.
பாரத்த்திலிருந்துதான் பலரும் வெளியே சென்றிருக்கின்றனர், மயன் போன்ற பலரும். அதனால் எகிப்திய அராபிய நாகரிகத்திலும் நம் பங்கு உண்டு. அவருடைய துப்பறியும் நாவல்களைப் படித்திருக்கிறேன். எகிப்தில் வடகலை ஐயங்கார்... அட.. புதுசா சிந்திக்கிறாரே எனக் கடந்து போக வேண்டியதுதான்.
ஜனகர், குலசேகர ஆழ்வார் போல ராஜ்ய பரிபாலனமும் செய்து கொண்டு, ஆன்மீக பாதையிலும் முன்னேறுவது மிகவும் கடினம்.
பதிலளிநீக்குஉண்மை... மிக்க் கடினம்...அதனால்தான் பந்தத்திலிருந்து வெளியேறுவது கடினம் என்கிறார்கள்.
நீக்கு