21.10.26

ஒரு திருமணம் என்றால் என்றால் உணவில் நீங்கள் என்ன என்ன எதிர்பார்க்கிறீர்கள்? + சரோஜாதேவி பகுதி 21

 

கேள்வி பதில்கள்.

நெல்லைத்தமிழன்: 

1 திருமணத்தை ஆடம்பரமாக நடத்தக் கூடாது என்பதற்கு ஏன் ஒரு இயக்கமும் உருவாகவில்லை? ஏன் ஆன்மீகத் தலைவர்கள் இதில் தலையிடுவதில்லை?  

# ஒரு பட்டு, (திருமாங்கல்யம் தவிர) பொன் இவற்றைத் தவிர்க்க வேண்டும், வரதட்சணை கூடாது என்று காஞ்சிப் பெரியவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அதை யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. தன் அக்கா அல்லது தன் சினேகிதி செய்து கொண்ட அதே ஆடம்பரத்துடன் தன் கல்யாணமும் நடக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவதாக ஒரு எண்ணம் பரவலாக இருக்கிறது. இந்த ஆடம்பர ஆசை ஆண்களுக்கும் உண்டு. இது பற்றிப் பேசப் போய் நான் கொஞ்சம் கெட்ட பெயர் சம்பாதித்து வைத்திருக்கிறேன். 

2. ஒரு திருமணம் என்றால் என்றால் உணவில் நீங்கள் என்ன என்ன எதிர்பார்க்கிறீர்கள்?  

# பாயசம், போளி, நல்ல நெய், பருப்பு வடை , தயிர்ப் பச்சடி.‌சுவையான ரசம், அவியல்., 

3. திருமணப் பரிசுகள், போட்டோ எடுத்துக்கொள்வது போன்ற பல நடைமுறைகள் எனக்கு பைத்தியக்காரத் தனமாகத் தெரிகிறது. உங்களுக்கு? 

#  பரிசுகளை ஒரேயடியாக வேண்டாம் என்று ஒதுக்கி விட முடியாது.  பரிசைப் பணமாகக் கொடுப்பது சௌகரியமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். போட்டோ வீடியோவைப்  பொறுத்தவரை பெரிதாக செலவு செய்து கஷ்டப்பட வேண்டாம் என்று எனக்குத் தோன்றும். 

உறவினர்கள் தங்கள் மொபைலில் எடுக்கும் படங்கள் வீடியோக்கள் இவற்றை இன்னும் சற்று பிளான் பண்ணி எடுத்தால் போட்டோகிராபர் செலவை  முற்றிலும் தவிர்த்து விடலாம்.

4.ஒரு திருமணத்திலோ இல்லை விசேஷத்திலோ நாம் கலந்துகொள்வதன் ஒரே பயன், மகிழ்ச்சி, எல்லா உறவினர்களையும் ஒரே இடத்தில் பார்த்து பேசி இன்புறுவதுதான். வேறு ஏதேனும் பயன் இருக்கிறதா?  

# மணமக்களுக்கு மனப்பூர்வமாக ஆசி வழங்கும் வசதி இருப்பது மிகவும் முக்கியமானது. பாக்கி எல்லாமே இரண்டாம் பட்சம் தான்.

5. இப்போதைய தலைமுறை-திருமணம் செய்துகொள்பவர்கள், நம் திருமணச் சடங்கு நிகழ்வுகளில் ஆர்வத்துடன் கலந்துகொள்கிறார்களா இல்லை வேறு வழியில்லை, ஓரிரு நாள் கூத்து என்ற சலிப்புடன் கலந்துகொள்கிறார்களா?

# எந்த ஒரு விஷயமானாலும் ஆசையாக ரசிப்பவர்களும்,  கடனே என்று பொறுத்துக் கொள்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். 


=====================================================================================

மனசாட்சியம் -20

KGY Raman 

பெரியவர் புராணம் 


" அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் " என்பதுதான் நமக்கு காலத்தில் நட்டு வைத்த கனிதரும் நன்மரம்.  " பெரியவங்களைக் கேட்டுக்கிட்டு முடிவைச் சொல்கிறேன் " என்பது எல்லா முக்கிய சந்தர்ப்பங்களிலும் பேசப்படும் வசனம்.

என் தாயார், என் தந்தை என, தனது மேன்மைக்கான மூலத்தை சிலாகித்துச் சொல்லும் பல சாதனையாளர்களை நாம் அறிவோம். 

" பெரியவர்கள்" எனும் இந்த அந்தஸ்து வெறும் வயது ஏறியதால் மட்டும் வந்து விட்டது என்று நினைக்கும் பெரியவர்கள் பெரிய மனவேதனையை சம்பாதித்துக் கொள்ளக் கூடும். முக்கியமாக கேட்காத போதே "அறிவுரை" தர முற்படும்போது சில சங்கடங்கள் ஏற்படும். 

" சும்மா இருப்பதே சுகம்" என்பது இதுபோன்ற முந்திரிக்கொட்டைப் பெரியவர்களுக்குச் சொல்லப்பட்ட விஷயம்தானோ என்னவோ தெரியவில்லை. 50 வயதாகிற மகனுக்கு அவன் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை சொல்ல அப்பா முன்வரும்போது, " யப்பா நீ கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா " தான் பரிசாகக் கிடைக்கும் அல்லவா?

முடிவு எடுக்க ஆலோசனை அவசியம். அதற்கு நேரம் தேவைப்படும். அந்த மாதிரி சமயங்களில் ஒரு ஒத்திவைப்பு சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிற ஜனங்கள் " பெரியவங்கள கேட்டுச் சொல்றோம் " என்கிற அஸ்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

" நம்ம வீட்டு வழக்கம் என்ன? " , " நம்ம தாத்தாவுக்கு அப்பா பெயர் என்ன " போன்ற கலைக்களஞ்சியத் தகவல்களை மட்டுமே கேட்கும்போது தந்து வாளாவிருக்கும் பெரியவர்களுக்கு மரியாதை கிடைக்கிறதோ இல்லையோ அவமரியாதை கிடைக்காது.

சில சமயம் ஏதோ ஒன்று சொல்ல வேண்டுமே என்ற உந்துதல் காரணமாக பெரியவர்கள் ஏடாகூடமாக ஏதாவது சொல்லி மாட்டிக் கொள்வார்கள்.‌ போலியான பாராட்டு என்பது கூட சற்று டிகாஷன் ஜாஸ்தியாக இருந்து காட்டிக் கொடுத்து விடும். 

உண்மையில் இந்தப் பெரியவர்களே கூட , தாம் இளைஞர்களாக இருந்த போது அவர்களது பெரியவர்களுக்கு மிக்க மரியாதை கொடுத்தார்களா என்பதே கேள்விக்குரிய விஷயம். இப்போது யோசித்துப் பார்க்கும்போது எனக்கு நான் என் பெற்றோர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுத்து வந்திருப்பதாகத் தோன்றுகிறது.  உண்மை அப்படி இல்லாமலும் இருக்கலாம். காரணம் எல்லா மனிதர்களும் தான் செய்த நல்ல செயல்களையும் பிறர் தமக்குச் செய்த தீய செயல்களையும் மறப்பதே இல்லை. இது நான் என் அனுபவத்தில் கண்ட உண்மை. 

பெரியவர்களுக்கு மரியாதை என்பது பரவலாக இப்போது எங்கே கிடைக்கிறது என்றால் வீட்டில் நடக்கும் நல்ல நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்தில் இருக்கிற எல்லா மூத்தவர்களுக்கும் புடவை வேஷ்டி வாங்கித் தந்து அழைப்பிதழ் கொடுக்கிறதில்தான். இதில் காசை விரயம் செய்யாமல் வேறு நல்ல செலவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும் என்று நான் அவ்வப்போது நினைப்பதுண்டு. ஆனால் அது உசிதமல்ல.  ஒரு சுப காரியம் நடக்க இருக்கும் போது நெகட்டிவாக இப்படி எல்லாம் சொல்லக்கூடாது அல்லவா ? விளைவு என்ன என்றால் என்னிடம் ஏகப்பட்ட புது ஜவுளிகள் சேர்ந்து விட்டன.

" ஆபரணார்த்தம் அட்சதான் சமர்ப்பயாமி " என்னும் நல்ல வழக்கத்தைப் பின்பற்றி அழைப்பிதழ்களை தாம்பூலம் ஒரு ஐந்து ரூபாய் நாணயம் இவற்றோடு கொடுத்தால் சரியாக இருக்கும் என்று நான் நினைக்கத்தான் செய்கிறேன் சொன்னதில்லை.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

படமும் பதமும் : 

நெல்லைத்தமிழன் : 


ஹோட்டல்களில் மினி டிபன் என்று ஏன் ஒரு ஐட்டம் வந்தது?  அவங்களுக்கு இது லாபமா இல்லை வாடிக்கையாளர்களை வரவழைக்க இது ஒரு யுக்தியா? நான் பொதுவாக மினி டிபனைத்தான் ஆர்வத்துடன் வாங்குவேன். பஹ்ரைனில் குடும்பத்தோடு காலையில் ஹோட்டலுக்குப் போனால், மினி டிபன் எல்லோருக்கும். பிறகு பசங்க, எனக்கு பூரி பிடிக்கும், எனக்கு தோசைதான் வேணும்னு சொன்னால், நாலு பேருக்கு ஆறு மினி டிபன் வாங்குவேன்.  எல்லாம் சல்லிசு விலைதான். கேசரி என்ற அழகிய சுலபமான அனேகமா எல்லோருக்கும் பிடித்த இனிப்பை, எதற்காக ஹோட்டல்கள் இவ்வளவு கோரமாகச் செய்கின்றனர்? எல்லோ ஹோட்டல்களிலுமே கேசரி என்பது ஜீனி, கலர் போட்ட உப்புமா ரேஞ்சுக்குப் பண்ணுவதன் காரணம் என்ன?


பார்க்க சிறியதாகத் தோன்றும் இந்தக் காற்றாலையின் இறக்கைகள் லாரியில் ஏற்றப்பட்டுச் செல்லும்போது பார்த்திருக்கிறீர்களா? எவ்வளவு நீளம் மற்றும் கன அளவு என்று திகைத்திருக்கிறேன்.  அமைக்க 4 கோடிக்கு மேல் ஆகும் இந்தக் காற்றாலைகள், ஒருவருக்கு பெரிய லாபம் தரும் அளவு கரண்ட் உற்பத்தி செய்கிறதாம். இதைப் பற்றி உங்களில் யாருக்கேனும் கூடுதல் விவரங்கள் தெரியுமா?

குறிப்பு: முதல் படம்... நாகர்கோயில் ஆரிய பவன். சூப்பர் ரெஸ்டாரண்ட்.  இரண்டாவது படம், நாகர்கோயிலிலிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில். 

ஸ்ரீராம்  :

ஒரு சின்ன ஆப்பரேஷன்... மிகச்சிறிய ப்ரொசீஜர்! ஒல்லியாகி விட்டேன். நம்பவில்லை என்றால் படத்தைப் பாருங்கள்.
முதல் படம் ஆபரேஷனுக்கு முன்.
இரண்டாம் படம் ஆபரேஷனுக்குப் பின்.​




= = = = = = = = = = = =

KGG பக்கம் : 

சரோஜாதேவி தொடர் கதை 

சென்ற வாரம் - சுட்டி : பகுதி 20 : " சேலம் சுந்தர்" 

இனி 

இந்த வாரப் பகுதி. 

பகுதி 21 : " நாநாவின் திட்டம் " 

சென்னையிலிருந்து புறப்படுவதற்கு முன்பு நாநா திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சில தகவல்கள் கூறி , வேண்டிய சில தகவல்களைப் பெற்றுக்கொண்டான். 

சென்னையிலிருந்து சேலத்திற்கு விமானத்தில் செல்லும்போது பாபாவுக்கு தன்னுடைய திட்டத்தை சொன்னான் நாநா. 

" சேலத்தில் ஹோட்டலில் தங்குவோம். நம்முடைய பனானா எண்டர்ப்ரைஸஸ் சேலம் உறுப்பினர், உனக்கு சுந்தர் வீட்டுக்குள் அருவமாக நுழைய நாளைக் காலை அந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்தி - விலாசம் விசாரிப்பவர் போல உதவுவார். நான் ஏற்கெனவே ஆனந்திடம் நிச்சயதார்த்த வீடியோவை அனுப்பியவருக்கு - அந்த வீடியோ பார்த்ததால், ஏற்கெனவே வீணாவுக்கு வேறு ஒரு ஆளுடன் நிச்சயதார்த்தம் நடந்த விவரம் தெரிய வந்ததற்கு நன்றி சொல்லி, தன் கல்யாணத்தை  நிறுத்திவிடப் போவதாக ஒரு செய்தியை நான் ஓகே சொன்னவுடன் அனுப்புமாறு சொல்லியிருக்கிறேன். நீ அருவமாக உள்ளே இருந்து - நடப்பவை எல்லாவற்றையும் வீடியோ எடு. யாரிடமிருந்து சுந்தருக்கு தகவல் வருகிறது என்ற விவரமும் சுந்தரின் மொபைல் போனில் பார்த்து பதிவு செய்துகொள். " 

பாபா : " இது எப்படி நமக்கு உதவும்?" 

நாநா : " கொஞ்சம் யோசித்துப் பார். நீ ஒரு கல்யாணத்தை நிறுத்த இந்த மாதிரி ஒரு ஃபேக் வீடியோ எடுத்து ஒரு ஆள் மூலமாக ஒருவருக்கு அனுப்புகிறாய் என்று வைத்துக்கொள். அந்த வீடியோவைப் பார்த்த ஆள், கல்யாணத்தை நிறுத்தப் போவதாக வீடியோ அனுப்பியவருக்கு செய்தி அனுப்பினால் - அனுப்பியவர் உடனே யார் அனுப்பச் சொன்னார்களோ அவருக்கு   தகவல் தெரிவிப்பார் - அதாவது கல்யாணத்தை நிறுத்த சதி செய்த உனக்கு தகவல் தெரிவிப்பார். உடனே நீ ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் ஆரம்பிப்பாய். அவ்வளவுதான். சுந்தரும் அவனுடைய அப்பாவும்  தங்களுடைய சதித் திட்டம் வெற்றி பெற்றது என்று கொண்டாடுவதை ஆதாரத்துடன் போலீசில் காட்டி அவர்களைப் பிடித்து ஜெயிலில் போட்டு முட்டிக்கு முட்டித் தட்டி அவர்கள் உண்மையை ஒப்புக்கொள்வதை வீடியோ எடுப்போம்.  அவ்வளவுதான். அப்புறம் ஆனந்த் வீணா கல்யாணம். அதன்பின் பாபா விமலா கல்யாணம். சுபம் ! ஓ கே யா? "

= = = = = = = = = = = = = =


35 கருத்துகள்:

  1. முதலில் தண்டைப் பார்த்து ஶ்ரீராம் வீட்டில் செய்த குச்சி ஐஸைப் படமெடுத்திருக்கிறாரோ என நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  2. என் அப்பா, எல்லா சந்தர்ப்பங்களிலும், வீட்ல கலந்து பேசிட்டுச் சொல்றேன் என்பார். என்னிடம், அப்படிச் சொல்லும்போது உடனடியாக பதில்/முடிவு சொல்வதைத் தவிர்க்கலாம், ஆலோசிக்க நேரம் கிடைக்கும், இன்னொருவரிடம் பேசும்போது வேறு ஒரு ஆங்கிளில் விஷயத்தைப் பார்க்க முடியும் எனச் சொல்லியிருக்கிறார்.

    இந்தக் காலத்துப் பசங்க, வீட்ல பெரியவங்களைக் கேட்டுட்டுச் சொல்றேன் என்பதை கனவிலும் உபயோகிக்க மாட்டாங்க, சொன்னால் நகைச்சுவையாயிடும். அப்படி இருக்கு காலத்தின் நிலை.

    பதிலளிநீக்கு
  3. இன்னொருவருக்கு உடை வாங்கித் தருவது என்பது வீண் வேலை. எனக்கு பிறர் உடை கொடுப்பது பிடிக்காது. வேஷ்டியிலிருந்து ஒவ்வொன்றிலும் எனக்குத் தனிப்பட்ட ரசனை உண்டு. பெரும்பாலும் பிறர் கொடுப்பது என் ரசனைக்கு உகந்ததாக இருக்காது.

    மனித இயல்பில், விசேஷங்களுக்கு மற்ற உறவினர்களுக்குக் கொடுக்க புடவைகள் வாங்கினால், நல்லது என நினைப்பதை நமக்குப் பிடித்தவர்களுக்கும் பிறருக்கு மற்றவைகளையும் கொடுக்கும் குணம் தவிர்க்க இயலாத்து

    பதிலளிநீக்கு
  4. ஹோட்டல்களில்
    மினி டிபன் என்று ஏன் வந்தது?...

    வாடிக்கையாளர்களை வரவழைக்க இது ஒரு யுக்தி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எது நல்லா இருக்கும் என்று யோசிப்பதை விட ஒவ்வொன்றையும் டேஸ்ட் பண்ணிப பார்க்க ஒரு வாய்ப்பு.
      அருகில் உள்ள எம் டி ஆர் டிஃபன் ரெஸ்டாரெண்டில் மினி டிஃபன் மெனு : கேசரி, வெண் பொங்கல், சிறு வடை, ஒரு இட்லி, கொஞ்சம் வெஜிடபிள் பாத். அரை கப் ஃபில்டர் காஃபி. எல்லாமே நல்லா இருக்கும்.

      நீக்கு
  5. திருமணப் பரிசுகள்,
    போட்டோ எடுத்துக்
    கொள்வது போன்ற
    பல நடைமுறைகள்
    பைத்தியக்காரத் தனம் தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :)))) ஒருவேளை எதிர்கால சந்ததியினருக்கு உபயோகமாகலாம்.

      நீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    திருமணங்கள் இப்போதெல்லாம் விளம்பரம், சினிமா போல எல்லாவற்றிலும் பிரம்மாண்டம் காண்பிக்கவே ஆசைப்படுவதாகத் தோன்றுகிறது. சாதாரணமாக திருமணம் நடத்தினால் ஊர் என்ன சொல்லும் என்று நினைத்துக் கொண்டு ஆடம்பரமாக நடத்துவது வழக்கமாகிவிட்டதாகத் தோன்றுகிறது. ஃபோட்டோ, வீடியோ போன்றவை தேவையா இல்லையா என்றால் அப்போதைக்கு தேவை - பிறகு அதைச் சீந்துவாரில்லை என்பதே நிதர்சனம். எத்தனை வீடுகளில் கல்யாண ஆல்பம், கல்யாண வீடியோ போன்றவற்றை மீண்டும் மீண்டும் போட்டுப் பார்க்கிறார்கள்? பல வீடுகளில் இவை இரண்டுமே பரண் மேல் கிடக்கக்கூடும்!

    உணவு - பலவகைகளை - வடக்கு, தெற்கு என எல்லாவற்றையும் கலந்துகட்டி பகிர்வது, காலை டிஃபன் என 20 வகை, இரவு டின்னர் 20 வகை என அளிப்பது பல சமயங்களில் குழப்பம் தான். சிலர் எல்லாவற்றையும் சுவைக்க வேண்டும் என அனைத்தையும் வாங்கிக் கொண்டு வீணடிப்பதையும் எல்லா திருமண, வரவேற்பு நிகழ்வுகளிலும் பார்க்கும்போது எத்தனை காசு வீணடிக்கப்படுகிறது என்பதோடு, ஒரு வேளை உணவில்லாமல் தவிக்கும் பசித்த பல முகங்கள் நினைவுக்கு வந்து மனதிற்கு ஒரு வேதனையை அளிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல விஷயங்களில் இருக்கிற நியாயம் நமக்குத் தெரிந்தாலும் , அவற்றை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது என்பதும் தெரிந்தே இருக்கிறது.

      நீக்கு
    2. எனக்கு, திருமண நாட்களில் எவ்வளவு உணவு வீண்டிக்கப்படுகிறது, மனித மனத்தின் ஆடம்பர வக்கிரம், கேடர்ர்களின் காசு பிடுங்கும் தந்திரம் இவற்றை நினைத்தால் எரிச்சலே மிஞ்சும். அதிலும் ஜூஸ் காபி ஸ்டால், மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை ஸ்டால்கள் (இப்போல்லாம் பஜ்ஜி இல்லை. வடாபாவ் பெயர் விளங்காத பல ஐட்டங்கள், இனிப்பு ஸ்டால்கள், ஐஸ்கிரீம் வெரைட்டி என மனசாட்சி இல்லாமல் செலவழிக்கறாங்க, பில் போடறாங்க.)

      என்னைக் கேட்டால் (ஒரு பயலும் கேட்கமாட்டான்) கோயில்ல (இப்போ அதில் வேறு கொள்ளை. பேசாமல் வீட்டில் உறவினர்கள் முன்னிலையில்) தாலி மற்ற அவசியச் சடங்குகள், ஆதாரத்திற்கான செல்போன் புகைப்படங்கள் போன்றவை முடிந்தபின், நம் ஆடம்பரத்தை பிறருக்குக் காண்பித்து அவர்கள் வயிற்றெரிச்சல் படுவதற்காக நாம் ஒதுக்கியிருந்த பணத்தை அப்படியே ஒரு செக் எழுதி பெண் அல்லது பையன் கையில் கொடுப்பதை விட சிறந்த திருமணம் உண்டா?

      நீக்கு
    3. எனது திருமணத்தின் போதே என் வீட்டில் இப்படியான ஒரு ஐடியா சொன்னேன். ஆயிரம் ரூபாய் கல்யாணம்! இரு பக்கத்திலும் அப்பா, அம்மா, சகோதர, சகோதரிகள் மட்டுமே இருந்தால் போதும். எவ்வளவு செலவு செய்ய நினைக்கிறீர்களோ அவ்வளவு பணத்தையும் மணமக்களின் பெயரில் வைப்புத் தொகையாக வைத்து விடுங்கள்! என்று - நீங்கள் சொல்வது போல ஒருத்தரும் கேட்கவில்லை! ஹாஹா... தேவையற்ற செலவு. முடிவு எடுக்கக் கூடிய சூழலில் நான் இருந்தாலும் மற்றவர்களுக்காக இப்படி ஒரு திருமணம் என்னால் நடத்த முடியுமா என்பதும் சந்தேகமே!

      நீக்கு
    4. ராமன் சார்.... நடைமுறைப்படுத்துவதில் என்ன என்ன சிக்கல்கள் இருக்கின்றன என்று சொன்னால் தேவலை. திருமணம் என்பது ஒரு நிகழ்வா இல்லை உன்னைவிட நான் நல்லா நடத்தினேன் என்ற ஒப்பீட்டுப் போட்டியா? ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்ற பழமொழி, நம் பெருமையைக் காட்ட நினைத்து, நமக்குச் சம்பந்தபில்லாத எவனோ ஒருவனுடைய திருமண மண்டபம், காடரிங், புகைப்படம் மேடை அலங்காரம், வாத்தியார்கள்...போன்ற பலவித டாம்பீகச் செலவால் பணத்தைக் கொட்டுகிறோம் அல்லவா?

      நீக்கு
    5. நடைமுறைப் படுத்துவதில் என்ன சிக்கல் என்பது ரொம்ப எளிதான விஷயம். கல்யாணம் செய்து கொள்ளப் போகிற பிள்ளையோ பெண்ணோ தன் கல்யாணம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று ஆசைப்படும்போது, அதை மறுத்துச் சொல்ல பெற்றவர்களுக்கு மனம் வராது என்பதுதான் உண்மை.

      நீக்கு
    6. இதில் நாம் சொல்லுகிற விஷயத்தில் இருக்கிற நியாயம் முற்றிலும் அடிபட்டு போய் படுகிறது. பாசம் கண்ணை மறைக்கிறது என்று சும்மாவா சொன்னார்கள் ?

      நீக்கு
    7. போய்விடுகிறது என்று படிக்கவும்

      நீக்கு
    8. அதுவும் முன்பெல்லாம் சில ஆயிரக்கணக்கில் இருந்த போட்டோ வீடியோ கட்டணம் இப்போது இரண்டு லட்சத்தையும் தாண்டி மேலே போய்க்கொண்டிருக்கிறது என்று தெரிந்த பின் இப்படி அநியாயமாக பணம் விரயம் ஆகிறதே என்று நான் கவலைப்படுவது உண்டு. அதேபோல் மேடை அலங்காரம் கூட லட்சக்கணக்கில் செலவழித்து செய்யப்படுகிறது. கேரளத்துத் திருமணங்களில் இருப்பது போன்ற ஒரு எளிய பூ அலங்காரத்துடன் குத்து விளக்கு அட்சதை தட்டு மாலை புஷ்பம் இவை மட்டுமே வைத்துக் கொண்டு மேடையை அலங்காரமாகக் காட்ட முடியாதா என்று நான் யோசிக்கிறேன். " வசதி இல்லாத வீட்டுத் திருமணம் " என்று பிறர் நினைக்கக் கூடாது என்கிற எண்ணம் மிகவும் பரவலாக மிகவும் தீவிரமாக இருக்கிறது. ஆக, மணமக்கள், பெற்றோர் இரண்டு தரப்பிலும் செலவு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்

      நீக்கு
  7. மனசாட்சியம் - பெரியவர், சிறியவர் என்று இல்லாமல் அனைவருமே எல்லா இடங்களிலும் வாயைத் திறந்து தனது கருத்துக்களைச் சொல்லாமல் இருப்பது உறவு நிலைக்க ஒரு வழி. எதையேனும் நம் கருத்தாகச் சொல்லி அதை அடுத்தவர்கள் உதாசீனப்படுத்தும்போது வேதனை தான் மிஞ்சும். மனசாட்சியம் பகுதியில் பேசப்படும் விஷயங்கள் அனைத்தும் சிறப்பு. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாஸ்தவம் தான் என்றாலும் வாயை மூடிக்கொண்டு இருப்பது எல்லா நேரத்திலும் நமக்கு வருவதில்லை அல்லவா ? மனசாட்சியம் குறித்த கருத்துக்கள் அளித்தமைக்கு நன்றி மிக்க சந்தோஷம்

      நீக்கு
    2. பொதுவாக நான் எதையும் சொல்லாமல் இருக்க முயற்சிக்கிறேன். சில இடங்களில் வாயைத் திறந்து ஏதேனும் சொல்லிவிட்டு அதனால் மனஸ்தாபங்கள்! பல சமயங்களில் வாயை மூடிக்கொண்டு இருக்க முடிவதில்லை தான்.

      நீக்கு
  8. எனக்கும் மினி டிஃபன் பிடிக்கும். எல்லாவற்றிலும் அளவாகத் தருவது/உண்பது நல்லது. சமீபத்தில் கூட ஒரு உணவகத்தில் மினி டிஃபன் தான் சாப்பிட்டேன்.

    காற்றாலைகள் - அந்த இறக்கைகள் சாலைகளில் எடுத்துச் செல்லப்படும்போதும், Install செய்வதற்கு முன்னர் கீழே இருப்பதையும் பார்த்திருக்கிறேன். முன்பு நாகர்கோவில் பக்கம் மட்டுமே இருந்ததைப் பார்த்திருக்கிறேன். இப்போது திருச்சி - கோவை பகுதிகளிலும் நிறைய இடங்களில் காற்றாலைகள் இருக்கின்றன. பிரம்மாண்டம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெங்களூருக்கும் சென்னைக்கும் இடையே காரில் பயணிக்கும் போதெல்லாம் எதிரில் நம்ப முடியாத அளவுக்கு பல காற்றாலை ரெக்கைகள் பெரிய பெரிய லாரிகளில் எடுத்து செல்லப்படுவதைக் கண்டு வியந்து இருக்கிறேன். இதெல்லாம் புதிதாக அமைக்கப் போவதற்கா அல்லது ரிப்பேர் செய்வதற்கா என்று கூட யோசித்தது உண்டு.

      நீக்கு
  9. சரோஜா தேவி - தொடர் நடுவே நான் படிக்காமல் விட்டதால், முதலிலிருந்து படிக்க வேண்டும்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வாரத்துக்குள் படிச்சுடுங்க.‌ இல்லாவிட்டால் கஷ்டம்.

      நீக்கு
  10. நான்கு பேருக்கு ஆறு மினி டிபன். நெ.த நீங்கள் செய்தது நல்ல ஐடியா. எனக்குத் தோன்றாத யுக்தி.
    எல்லா ஹோட்டல்களிலும் கேசரி அவ்வளவு மோசமாகவா இருக்கிறது ? சரவணபவனில் அல்லது அடையார் ஆனந்த பவனில் நான் மிகவும் நன்றாகத் தயாரிக்கப்பட்ட கேசரியை மினி டிபனில் சாப்பிட்டு இருப்பதாக நினைவு.
    காற்றாலை குறித்த எல்லா தகவல்களும் இணையத்தில் காணக் கிடைக்குமே !

    ஸ்ரீராம் வீட்டு வாழைத்தண்டு.. ஆள் பாதி ஆடை பாதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எப்போதுமே இயன்றவரை அடித் தண்டுதான் வாங்குவேன். ஆள் முக்கலே அரைக்கால் ஆடை மீதி... ஹா ஹா ஹா

      நீக்கு
    2. ரொம்ப நாளைக்கு வாழைத்தாரின் அருகில் இருக்கும் பகுதி தான் இளசாக இருக்கும் என்று நான் முட்டாள்தனமாக நினைத்திருந்தேன். அது எவ்வளவு இல்லாஜிக்கல் என்று என் மூளைக்கு உரைக்கவே இல்லை.

      நீக்கு
  11. சில மாதங்களுக்கு முன் மனசாட்சியம் போன்ற பகுதியை, துக்ளக்கின் துர்வாசர் பகுதி போல நான் எழுத ஆரம்பிக்க நினைத்தேன். பிறகு மனம் செல்லவில்லை. இப்போது உங்கள் மனசாட்சியம் பகுதி மெருகேறி வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி. தினம் ஒன்று எழுத முடியுமா என்று நான் யோசித்த காலம் உண்டு. முடிகிறதோ இல்லையோ சொல்ல ஏதாவது இருக்கும் வரை அதை சொல்லித்தான் பார்ப்போம் என்று எழுத ஆரம்பித்தேன். நடுவிலே எழுதாமல் போனாலும் யாரும் பொருட்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

      நீக்கு
  12. மனசாட்சியம் பகுதியில் ஸ்ரீராம் நமக்கு என்ன மேக்கப் போட்டு இருக்கிறார் என்று ஆர்வமாக அன்றாடம் பார்த்து வருவேன் . செயற்கை நுண்ணறிவின் வீச்சு எந்த மட்டில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதும் ஒரு சுவாரஸ்யம் தானே.. நானாக நான் இல்லை நண்பா, நல்வாழ்வு தந்தாயே நீயே என்று பாடத் தோன்றுமோ ?

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!