16.10.26

ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் (நோயாளியுடன்) சென்ற அனுபவம் உண்டா?

 நீங்கள் சாலையில் செல்லும்போது அலறிக்கொண்டு பின்னால் வரும், அல்லது எதிரில் வரும் ஆம்புலன்ஸ்களை கவனித்திருக்கிறீர்களா?

108 ஆம்புலன்ஸை நீங்கள் அழைத்தாலும் ஒரு ஆம்புலன்ஸ்தான் வரும்!!! ஆனால் அவனே பத்து வண்டிகளுக்கான கட்டணத்தை வசூலித்து விடுவான்.

சைரனுடன் வரும் ஆம்புலன்சுக்கு வழி விடா விட்டால் பத்தாயிரை ரூபாய் அபராதம் என்று சொல்கிறார்கள்.  யார் பார்த்து எப்படி அபராதம் போடுவார்களோ தெரியாது.  அது மட்டுமல்ல, ஆம்புலன்சுக்கு எளிதில் வழி கிடைக்கும் என்பதால் அதைத் தொடர்ந்து நிறைய இரு சக்கர வாகனங்கள் கூடவே பறக்கும்,  அவர்களை பிடித்தும் அபராதம் போடலாமாம்.  ஆனால் இதுவரை அப்படி யாருக்கும் அபராதம் போட்டும் பார்த்ததில்லை.

இதெல்லாம் ஒரு பயமுறுத்தல்தான்.  அப்படி ஆம்புலன்ஸ் நம்மைத் தாண்டிச் செல்லும்போது ஒரு நிமிடம் மனம் கலங்கும், உள்ளே துடிக்கும் ஒரு உயிருக்காக ஒருகணம் மனதுள் பிரார்த்தனை ஓடும்.  ஆனால் அதிலேயே சில ஊழல்களும் இருக்கின்றன.  ஆம்புலன்ஸ் சும்மா போனால் கூட சைரன் போட்டுக் கொண்டு போகும்.  பிடித்து சோதனை யாரும் போடுவதில்லை.  நிறுத்திக் கேட்டால் கூட என்ன சொல்வார்கள்?  "ஒரு பேஷண்ட் உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கார்.  தாமதம் செய்யாமல் போய் அவரை பிக்கப் செய்து ஆஸ்பத்திரி வரணும்?"

என்ன சொல்ல முடியும்!

அதற்குமேல் யாராவது நிறுத்தினால் அவருக்கு மனிதாபிமானம் இல்லை என்று ஆகிவிடும்.  ஆனால் சும்மா வரும்போதும் சைரன் போட்டுக் கொண்டு வரும் டிரைவர்கள் ஏராளம்.  மாமியார் டிஸ்சார்ஜ் ஆகிவரும்போது சைரன் வேண்டாம் என்று முன்னரே சொன்னேன்.  சரி என்று சொல்லி இருந்தார் டிரைவர்.  சைரன் போட்டால் மாமியார் பதட்டமாகி விடுகிறார்.  ஆனால் பாதியில் சைரன் போட்டு விட்டார்.  அப்போதுதான் வழி கிடைக்குமாம்.  சீக்கிரம் எங்களைக் கொண்டு விட்டால் எமர்ஜென்சியில் இருக்கும் இன்னொரு ஏதோ முகம் தெரியா பேஷண்டுக்கு உதவலாமாம்!  என்னென்ன சொல்கிறார்கள்.. உதவுவதா?  கொள்ளையடிப்பதா?

ஆம்புலன்சில் துணைக்குச் சென்ற அனுபவம் எனக்கு மூன்று நான்கு தடவை உண்டு.  ஓலா ஊபர் வண்டிகளை ஓட்ட வைத்திருக்கும் லொடக்காஸி வண்டிகளை எடுத்து சிவப்பு ப்ளஸ் போட்டு ஆம்புலன்ஸாக்கி விடுகிறார்கள்.ஷாக் அப்சார்பர் இருக்காது.  அவசரகால உதவி எதுவும் இருக்காது.உள்ளே ஏறி படுத்து விடும் அந்த நோயாளி பாடு பரிதாபம்தான்.  பிரசவ கேஸாயிருந்தால் வண்டியிலேயே பிரசவம் ஆகிவிடும்.  இதயநோயாளிகள் பாடு அந்தோ பரிதாபம்.   பெரிய ஆம்புலன்ஸாக இருக்கும் பல வண்டிகள் தேவலாம்..  ஆனாலு அதிலும் ஷாக் அப்சார்பர் இருக்காது.  பெரிய ஆம்புலன்ஸ் பலவற்றில் இப்போதெல்லாம் ப்ரீசர் பாக்ஸும் வைத்திருக்கிறார்கள்.

அடுத்தது கட்டணம்.  அது ஒரு பகல் கொள்ளை.  எரியற வீட்டில் பிடுங்கற வரை லாபம் என்று மனிதாபிமானம் இல்லாமல் பிடுங்குகிறார்கள்.  இரண்டு அல்லது இரண்டரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஆஸ்பத்திரி செல்ல இரண்டாயிரம் மினிமம்.  நம் அவசரம் தெரிந்து கூச்சமே இல்லாமல் கேட்கிறார்கள்.  வீடு திரும்பும்போது மாடி வீடாயிருந்து மேலேறி வீட்டில் கொண்டு விட வேண்டுமென்றால் எக்ஸ்ட்ரா சார்ஜ் உண்டு.  லிப்ட் இல்லாமல் மாடிப்படி என்றால் இன்னும் கொள்ளை.  இப்போதிருக்கும் அபார்ட்மெண்ட் மாடிப் படிகளோ எதற்கும் உதவாதவை.

========================================================================================

வெட்டி அரட்டை :
​சாவித்திரி
ஒரு தலைப்பில் எத்தனை படங்கள் வரக்கூடும்?
இந்தப் பெயரில் 1933 இல் ஒரு திரைப்படம் வந்தது (வந்ததாம்!) . எம் ஆர் கிருஷ்ணமூர்த்தி, ராஜலக்ஷ்மி ஆகியோர் நடித்தது.
1941 இல் ஒய் வி காந்தாராவ், சாந்தா ஆப்தே நடித்த படமொன்று வந்தது (தாம்!). எம் எஸ் சுப்புலக்ஷ்மி கூட இதில் நடித்திருந்தாராம்.
1955 இல் டாக்டர் சாவித்திரி என்று ஒரு படம் வந்தது. எஸ் பாலச்சந்தர், அஞ்சலிதேவி, தங்கவேலு ஆகியோர் நடித்தது.
நாகேஸ்வரராவ், எஸ் வி ரெங்காராவ், நாகையா மற்றும் வரலக்ஷ்மி நடித்து சத்தியவான் சாவித்ரி என்று ஒரு படம் வந்தது. எஸ். வரலக்ஷ்மி தயாரித்த படம்.
இதெல்லாம் என் அபிமானப் பாடகர் ஜெயச்சந்திரன் பாடிய சாவித்ரி படப்பாடலைத் தேடியபோது கிடைத்த தகவல்கள். இந்த விவரம் எல்லாம் வரிசையாகக் கிடைக்க, தேடிய விவரம் கிடைக்க மட்டும் தாமதமானது. கடைசியில் கிடைத்து பாட்டும் கேட்டு விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். யான் பெற்ற இன்பம்...
1980 இல் பரதன் இயக்கி சாவித்ரி ன்று ஒரு படம் வந்தது. நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த மேனகாதான் இதில் கதாநாயகி. கதாநாயகன் வினோத் யார் என்று நினைவில்லை! முதலில் படம் ஓடவில்லை. பின்னர் கிளம்பியது அது பிராமணர்களை இழிவு படுத்துவதாக ஒரு போராட்டம். அப்புறம் படம் பட்டி தொட்டி எங்கும் புகழ் அடைந்தது.
எம் எஸ் விஸ்வநாதன் இசையில் ஜெயச்சந்திரன் குரலில் மழைக்காலமும், பனிக்காலமும் சுகமானது என்ற ஒரு சுகமான பாடல் ஒன்று இதில் உண்டு. இந்தக் கேட்கத் தேடப்போய்த்தான் இத்தனை விவரங்கள்!

======================================================================================

கொஞ்சம் பழசு....

கல்லூரி நிகழ்ச்சியொன்றுக்காக கோவை வந்திருந்தார் பாஸ்கி. 80ஸ் கிட்ஸ், 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் வரைக்கும், வெவ்வேறு துறைகளில் இவர் பிரபலம். எக்ஸ்பிரஸ் வேகத்தில் துள்ளும் நகைச்சுவை. அள்ளும் சிரிப்பு. தன்னம்பிக்கையின் அவசியத்தை தனக்கே உரிய பாணியில் மாணவர்களிடம் கூறி, அவர்கள் சிரிக்க சிரிக்க அள்ளி விட்டுக் கொண்டிருந்தார்.

'முடியாதுன்னு சொன்னாங்க... முடிச்சு காட்டினேன்'

உங்கள சுத்தி இருக்கறவங்க, நீங்க எது பண்ணினாலும், உனக்கு அது வராது, வேண்டாம் அப்டினு தடுத்துட்டே இருப்பாங்க. அதையெல்லாம் மனசுல போட்டுக்கவே கூடாது.

நான் கிரிக்கெட் ஆடணும்னு சொன்னப்ப, உனக்கு வராதுனு சொன்னாங்க. இந்திய அணிக்கு தேர்வாகற அளவுக்கு ஆடினேன். நான், ரவிசாஸ்திரி, ஸ்ரீகாந்த் எல்லாம் ஒரே செட் துரதிருஷ்டவசமா பவுலிங் போடமுடியாத நிலைமை. ஸ்போர்ட்ஸ் கோட்டால, ஐ.ஓ.பி.,ல வேல கிடச்சது.

ஜோக் எழுதினேன். வராதுனு சொன்னாங்க. ஒரு லட்சம் ஜோக்காவது எழுதிருப்பேன். நிறைய நிராகரிப்பு. ஆனா 17 ஆயிரம் ஜோக் பிரசுரம் ஆச்சு.
ரேடியோ ஜாக்கி பண்ணலாம்னு போனேன். குரல் சரியில்ல, உனக்கு வராதுனு சொன்னாங்க. ரேடியோ, நிகழ்ச்சித் தொகுப்பு, கிரிக்கெட் வர்ணனைனு இதுவரைக்கும் 18,000 நிகழ்ச்சி பண்ணிருக்கேன்.

டி.வி.,ல இன்டர்வியூ பண்ணலாம்னு முடிவெடுத்தேன். உனக்கு வராது. சக்ஸஸ் ஆக மாட்டேன்னு சொன்னாங்க. இதுவரைக்கும், 4,000 பேர இன்டர்வியூ பண்ணிருக்கேன்.
மாடலிங் பண்ணலாம்னு யோசிச்சேன். உனக்கு பர்சனாலிடி இல்லேனு சொன்னாங்க. பி.சி., ஸ்ரீராமே 5 விளம்பரங்கள்ல நடிக்க வச்சுருக்கார். இந்த மாதிரி எதெல்லாம் வராதுனு சொன்னாங்களோ, அதெல்லாம் நான் காதுலயே போட்டுக்கல. 12 துறைகள்ல ஜெயிச்சிருக்கேன்.

எந்த சூழ்நிலையையும் நகைச்சுவையோட, கிண்டலடிச்சு கடந்து போக பழகுங்க. என் மனைவி உட்பட மிக நெருங்கிய உறவுகளை அடுத்தடுத்து இழந்தபோதும், நகைச்சுவை உணர்வுதான் என்னை உயிர்ப்போட வச்சுருந்தது. கமிட்மென்ட் வச்சுக்குங்க. கண்டிப்பா ஜெயிக்கலாம்.

சச்சினோட திறமையோட ஒப்பிட முடியாவிட்டாலும், அந்த அளவுக்கு சதமோ, ரன்களோ அடிக்காத தோனியோட தன்னம்பிக்கைதான், அவர அந்த உயரத்துக்கு கொண்டு போயிருக்கு. அவரோட ஆட்டோபயோகிராபி படம்தான் சக்ஸஸ்.
எல்லா சூழ்நிலையிலும் உங்களோட 'ஹ்யூமர் சென்ஸ்' உங்கள காப்பாத்தும். அது ரொம்ப பெரிய ஆயுதம். நீங்க டல்லா இருக்கறதா காமிச்சா, ஏறி மிதிச்சுட்டு போயிருவாங்க. உங்கள வெறுப்பேத்த தூண்டினாலும், கூலா, கிண்டலா பதில் சொல்லுங்க.

எதுக்கும் லாயக்கில்லனு சொல்வாங்க. அதெல்லாம் கவலைப்படக்கூடாது. நம்மள கோவப்பட வைக்க, வருத்தப்பட வைக்க, வெறுப்பேத்தி சந்தோஷப்பட அவங்க அத சொல்வாங்க. நாம ஏன் அத கேக்கணும் தன்னம்பிக்கையோட செய்ங்க கண்டிப்பா ஜெயிக்கலாம்.

ஏதாவது ஒரு விளையாட்டுல இருங்க. அது உங்க உடம்ப ஆரோக்கியமா வைக்கும். யோகா பண்ணுங்க, உங்க மனசு ஆரோக்கியமா இருக்கும் மியூசிக் உங்களோட ரசனையை அதிகரிக்கும். நகைச்சுவை உணர்வு எந்த சூழ்நிலையையும் சமாளிக்க உதவும். இந்த நாலும் இருந்தா, நீங்கதான் சுந்தர் பிச்சை, சுந்தரி பிச்சை எல்லாமே.
கறுப்பா, நல்லா தமிழ் பேசக்கூட தெரியாத ரஜினிதான், சூப்பர்ஸ்டார். பொதுமக்களுக்கு விசில் அடிச்ச வேலை செஞ்சவருக்கு, இன்னிக்கு ஒட்டுமொத்த பொதுமக்களும் விசில் அடிச்சு கொண்டாடறாங்க. அவரை விட ஜெயிக்கறதுக்கு பெஸ்ட் பார்முலா வேறென்ன.

- எங்கே படித்தேன், எதிலிருந்து எடுத்தேன்னு நினைவில்லை! - 

=====================================================================================

கவிதைப்பக்கம் :  மு மேத்தா 

அமுத சுரபியைத்தான் 
நீ தந்து சென்றாய் 
இப்போது 
எங்கள் கைகளில் இருப்பதோ 
பிச்சைப் பாத்திரம்               

வில்லே 
வில்லை வளைக்குமா? 
வளைத்தது 
சீதையின் புருவவில் 
இராமனின் 
இதய வில்லை வளைத்தது 
               தன்பக்கம் அழைத்தது                  

பாரதி வேண்டியது
ஜாதிகள் இல்லாத
தேதிகள் . . .
நமக்கோ
                            ஜாதிகளே இங்கு நீதிகள்                         


பூக்களிலே நானுமொரு 
     பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன் 
பூவாகப் பிறந்தாலும் 
பொன்விரல்கள் தீண்டலையே - 
   நான் பூமாலை யாகலையே            

=========================================================================================================


சொந்த உறவுகளுக்குள்ளாகவே கடன் கொடுக்கத் தயங்கும் இந்தக் காலத்தில் திரைத் துறையில் அதன் ஆரோக்கிய வளர்ச்சிக்காக அதுவரை நேரில் பார்த்திடாத இயக்குநருக்கு தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன் அந்தக் காலத்திலேயே 2 லட்சத்தைக் கொடுத்து உதவி செய்துள்ளார்.…

சொந்த உறவுகளுக்குள்ளாகவே கடன் கொடுக்கத் தயங்கும் இந்தக் காலத்தில் திரைத் துறையில் அதன் ஆரோக்கிய வளர்ச்சிக்காக அதுவரை நேரில் பார்த்திடாத இயக்குநருக்கு தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன் அந்தக் காலத்திலேயே 2 லட்சத்தைக் கொடுத்து உதவி செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் இயக்குனர் திலகம் என்று போற்றப்படும் இயக்குநர் தான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இவரது இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியான படம்தான் பேசும் தெய்வம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி, சவுக்கார் ஜானகி, நாகேஷ், எஸ்.வி.ரங்காராவ், வி.எஸ்.ராகவன் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

மும்முரமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, நிதி பிரச்சனையின் காரணமாக திடீரென நின்றுபோன நிலையில், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல்’ இயக்குனரும் தயாரிப்பாளருமான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தவித்துக் கொண்டிருந்தார். அப்போது பணத்தேவை காரணமாக எஸ்.எஸ்.வாசனை நேரில் சந்தித்துள்ளார். அவரின் நிலை அறிந்த எஸ்.எஸ்.வாசன், தனது மேனேஜரை அழைத்து இவர்களுக்கு 2 லட்சத்திற்காக செக்கை கொடுத்துள்ளார்.

தான் யார் என்றே தெரியாத ஒருவர் தனக்கு ஏன் உதவி செய்ய வேண்டும் என்று கே.எஸ்.கோபால கிருஷ்ணன் எண்ணிக் கொண்டிருக்க, நான் கஷ்டப்படும்போது எனக்கு ஒருவர் உதவி செய்தார். அவருக்கு கைமாறு செய்ய வேண்டி தான் நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று எஸ்.எஸ்.வாசன் பதில் அளித்துள்ளார்.

1948-ம் ஆண்டு வெளியான சந்திரலேகா படத்தை இயக்கி தயாரித்தவர் எஸ்.எஸ்.வாசன். இந்த படம் ஒரு கட்டத்தில் நிதி பிரச்சனை காரணமாக நின்றுபோனது. எஸ்.எஸ்.வாசன் தனது சொத்துக்களை அடமானம் வைத்து படப்பிடிப்பை நடத்தியும் பணம் போதவில்லை. இதனால் 30 லட்சத்திற்கு மேல் கடனாகியுள்ளார். அப்போது தி இந்து பத்திரிக்கை அதிபர் ஸ்ரீனிவாச அய்யங்கார் எஸ்.எஸ்.வாசனை அழைத்து 30 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். படம் வெளியாகும்போது இந்த பணத்தை கொடுத்தால் போதும். இதற்கு நீ ஒரு பைசா கூட வட்டி கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

நீ நல்லவன் திறமைசாலி, வாக்கு தவறாதவன் அதனால் தான் உன்னை நம்பி பணம் கொடுத்திருக்கிறேன். இதற்காக நீ எனக்கு ஒரு கைமாறு செய்ய வேண்டும் என்று சொன்ன ஸ்ரீனிவாச அய்யங்கார், உன்னை போல் ஒரு திறமைசாலி, இந்த மாதிரி ஒரு கஷ்டத்தில் சிக்கி தவிக்கும்போது உதவி செய். அதுதான் நீ எனக்கு செய்யும் கைமாறு என்று கூறியுள்ளார். இதன் காரணமாகத்தான் திறமைசாலியான கே.எஸ்.கோபால கிருஷ்ணனுக்கு எஸ்.எஸ்.வாசன் உதவி செய்துள்ளார்.

=============================================================================================

ஹெமிங்வேயின் தற்கொலை 

1961 ஆம் ஆண்டு. ஜூலை மாதம் இரண்டாம் நாள். அன்று வழக்கத்திற்கு மாறாக, விடியும் முன்பே விழித்துக் கொண்டார் எர்னஸ்ட் ஹெமிங்வே.
மனைவி மேரியை ஒருமுறை பரிவுடன் பார்த்துவிட்டு, வீட்டின் அடித்தளத்தை நோக்கி சோர்வுடன் நடந்துச் சென்றார். அங்கு தான், வேட்டையாடுவதற்காக அவர் பயன்படுத்தும் பல்வேறு வகையான துப்பாக்கிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அவருக்கு மிகவும் பிடித்தமான கைத்துப்பாக்கி ஒன்று, முதல் வரிசையில் அவரின் வருகைக்காகக் காத்திருந்தது. நேராக அதனருகில் சென்ற அவர், இறுதியாக ஒருமுறை அதனை அழுத்தமாக தொட்டுப் பார்த்துக் கொண்டார்.
இதுநாள் வரை பறவைகளையும் விலங்குகளையும் மட்டுமே குறி பார்த்த அது, முதன் முறையாக அன்று முதலாளியின் தலையையே குறி பார்த்தது.
சிறிது நேரத்தில் அங்கே கேட்ட பெருஞ்சத்தம், அந்தக் காலைப் பொழுதின் அமைதியை முற்றிலுமாக உருக்குலையச் செய்தது. முதல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த மேரி, சத்தம் கேட்டு அவசர அவசரமாக கீழே வந்து பார்த்தபோது, மூளைச் சிதறி அங்கே பிணமாகக் கிடந்தார் உலகின் ஆகச் சிறந்த எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே.
ஆம்! தந்தை கிளாரன்ஸ் ( Clarence Hemingway ) போலவே, தானும் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார் ஹெமிங்வே!
நோபல் பரிசு பெற்ற, உலகின் முக்கிய எழுத்தாளராக புகழின் உச்சியில் இருந்த எர்னஸ்ட் ஹெமிங்வே, தற்கொலை செய்து கொண்டது ஏன்? அவருக்கிருந்த உளவியல் சார்ந்த பிரச்னைகள் என்னென்ன?
இவை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள, ஹெமிங்வேயின் பால்ய காலத்திலிருந்து ஆரம்பிப்பது தான் சரி.
'கடலும் கிழவனும்' ( The Old Man and The Sea ) போன்ற மென்மையான நாவலை உருவாக்கிய ஹெமிங்வேயின் வாழ்க்கை, கடலைப் போலவே பல மர்மங்களை உள்ளடக்கியது.
ஹெமிங்வேயின் பால்ய காலம்
மூளை மடிப்புகளைப் போலவே ஹெமிங்வேயின் ஆரம்ப கால வாழ்க்கை, பல சிக்கல்களைக் கொண்டது. அதற்குக் காரணம், அவருடைய பெற்றோர்கள் என்றால் நம்ப முடிகிறதா?
எர்னஸ்ட் மில்லர் ஹெமிங்வே ( Ernest Miller Hemingway ) 1899 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் இலினோய் மாகாணத்தில், ஜூலை 21 அன்று பிறந்தார். அவருடைய தந்தை - கிளாரன்ஸ், தாய் - கிரேஸ் ( Grace Hemingway ).
கிளாரன்ஸ் ஒரு மருத்துவர். மிகவும் கண்டிப்பு மிக்க ஒரு தந்தையாகவே அவர் ஹெமிங்வேயிடம் இருந்திருக்கிறார். சிறு தவறு செய்தால் கூட அடி விழும். பொறுமை, கருணை, இரக்கம் போன்ற வார்த்தைகளுக்கு கிளாரன்ஸின் அகராதியில் இடமில்லை. அதனால், தந்தை கிளாரன்ஸைக் கண்டாலே அஞ்சி நடுங்குவார் ஹெமிங்வே. தந்தை மீதிருந்த பயம், போகப் போக வெறுப்பாக மாறியது.
ஹெமிங்வேயின் உளவியலை ஆராய்ந்த மனநல மருத்துவர் ஒருவர், 'ஹெமிங்வேவிற்கு தன்னுடைய தந்தையை சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலேயே இருந்திருக்கிறது' என்கிறார்!
கிளாரன்ஸுக்கு மன அழுத்த நோய் இருந்திருக்கிறது. 1928 ஆம் ஆண்டு அது தீவிரமடைய, தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்து போனார் அவர்.
தந்தையின் தற்கொலை, ஹெமிங்வேயை நிறையவே பாதித்திருக்கிறது. சிறுவயதில் தனக்கு இருந்த தந்தையின் மீதான வெறுப்பு, அவர் தற்கொலை செய்து கொண்ட பிறகு குற்றவுணர்ச்சியாக உருமாறியிருக்கிறது.
'தந்தையின் தற்கொலைக்குக் காரணம் நீ தான்...' என தன்னுடையத் தாயான கிரேஸை வெளிப்படையாகவே பழித்தார் ஹெமிங்வே. இது ஒருவகையில், அவர் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட ஒரு பாதுகாப்புக் கவசமே ( Defence Mechanism).
தாயை வெறுத்த ஹெமிங்வே
புகழ்பெற்ற அவருடைய சிறுகதைகள் பலவற்றில், தற்கொலை செய்து கொள்ளும் தந்தை கதாபாத்திரம் ஒன்று நிச்சயம் இடம்பெறும். அவருடைய முக்கியமான நாவலான 'From Whom the Bell Tolls' ல் கூட, ராபர்ட்டின் தந்தை தற்கொலை செய்து கொள்வார்.
தாய் கிரேஸுடனும் அவருக்கு, எப்போதும் இணக்கம் இருந்ததில்லை. ஹெமிங்வேயின் நெருங்கிய நண்பரும் எழுத்தாளருமாகிய ஜான் டோஸ் பாஸ்சோஸ் ( John Doss Passos ), ஹெமிங்வேக்கும் அவர் தாய்க்கும் இருந்த உறவை இப்படிச் சொல்லியிருக்கிறார்.
'தன்னுடைய தாயை உண்மையில் வெறுத்த, நான் அறிந்த ஒரே மனிதன் என்றால் அது ஹெமிங்வே மட்டும் தான்'
தந்தை கண்டிப்பானவர், அதனால் பிடிக்கவில்லை சரி. தாயை ஏன் அவர் வெறுக்க வேண்டும்? அதற்குப் பல காரணங்களை முன் வைக்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
கிரேஸ் எப்போதும் ஹெமிங்வேயைச் சுதந்திரமாக விட்டது இல்லை. இயல்பிலேயே ஆதிக்கக் குணம் கொண்டவர் கிரேஸ். அவர் சொல்வதைத் தான் எல்லோரும் கேட்க வேண்டும்.
பெற்றோர்கள் முலம் சந்தித்த நெருக்கடிகள்...
அக்காலத்தில் விக்டோரியா நாட்டின் வழக்கப்படி, ஆண் சிறுவர்களுக்கு பெண்களைப் போல உடையணிவது வழக்கம். ஹெமிங்வே அதை வெறுத்தார். ஆனால்‌ கிரேஸ், ஹெமிங்வேக்குக் கட்டாயப்படுத்தி அப்படிப்பட்ட ஆடைகளை அணிவித்தார். அவர் அணிவித்த ஆடைகளோ‌ மிகுந்த பெண்மைதன்மைக் கொண்டதாக வேறு இருந்தன.
இதுபற்றி தாயிடம் சொன்னால் அடுத்து என்ன நடக்கும் என்பது ஹெமிங்வேக்கு நன்கு தெரியும். எனவே எல்லா உணர்ச்சிகளையும் அடக்கிக் கொண்டு அமைதியாகி விடுவார். ஹெமிங்வே தன்னுடைய தாயை வெறுக்கப் பல காரணங்களுள் ஒன்றே ஒன்று‌தான் இது.
ஐந்து வயது முதல், பதின்ம வயது தொடக்கம் வரையிலான காலகட்டம் தான் பிள்ளைகளின் மனவளர்ச்சிக்கு முக்கியமான காலகட்டம். அப்போது தான் அவர்களுடைய குணாதிசயங்கள் ஒருநிலை படும். இந்த நேரத்தில் தான், ஏகப்பட்ட உளவியல் சார்ந்த குழப்பங்கள் அவர்களுக்குள் உண்டாகும். அதைத் தீர்க்க வேண்டிய கடமை, பெற்றொர்களிடம் தான் உள்ளது.
ஆனால், ஹெமிங்வேக்கு இந்த காலகட்டம் தான் பிரச்னையாகவே அமைந்தது. பெற்றோர்கள் முலம் அவர் சந்தித்த நெருக்கடிகள் எல்லாமே, பின்னாளில் அவருக்கு ஏற்பட்ட மனநோய்களுக்குக் காரணமாக அமைந்தன.
எனில், சிறுவயதில் தான் எதிர்கொண்ட உளவியல் சார்ந்த சிக்கல்கள் தான் ஹெமிங்வேயைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியதா?
அதுவும் ஒரு காரணமேத் தவிர, அதுதான் காரணம் என்றில்லை.
ஹெமிங்வேயின் குடும்பத்தில் 5 தற்கொலைகள்!
ஹெமிங்வேயின் தந்தை, மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்பதை முன்பே பார்த்தோம் அல்லவா? அவர் மட்டுமல்ல. ஹெமிங்வேயின் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்! ( ஹெமிங்வே மற்றும் அவருடைய தந்தை கிளாரன்ஸ் உள்பட)
மற்ற மூன்று பேருடைய விவரங்கள்:
1. லெய்செஸ்டர் ( Leicester Hemingway ) :
ஹெமிங்வேயின் இளைய சகோதரர். இவரும் ஒரு எழுத்தாளரே. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, தன்னுடைய 67 வயதில் துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டு இறந்து போனார்!
2. உர்சுலா ( Ursula Hemingway ) :
ஹெமிங்வேயின் சகோதரிகளுள் ஒருவர்‌. புற்றுநோயாளியான இவர், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, தன்னுடைய 64 வயதில் அதிக அளவிலான மாத்திரைகளை சாப்பிட்டு இறந்து போனார்.
3. மார்காக்ஸ் ( Margaux Hemingway ) :
ஹெமிங்வேயின் பேத்தி. இவர் ஒரு நடிகை. தன்னுடைய 42 வயதில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் - மன அழுத்தம். தேர்வு செய்த வழி - அதிக அளவிலான மாத்திரைகளை உட்கொண்டது.
இப்படி ஹெமிங்வேயின் குடும்ப ஜீன்களிலேயே, வாடகைக்கு குடியிருந்திருக்கிறது 'தற்கொலை'. ஆக, ஹெமிங்வேயின் தற்கொலைக்கு மரபியல் சார்ந்த விஷயங்களும் முக்கியக் காரணங்களுள் ஒன்றாக இருக்கிறது.
சரி, ஹெமிங்வேக்கு இருந்த மனநோய்களைப் பற்றிப் பார்ப்போம்.
மனநோயால் பாதிப்பு
அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் மார்ட்டின் ( Christopher Martin ) எனும் மனநல மருத்துவர்,
'Ernest Hemingway: A Psychological Autopsy of a Suicide' என்ற தலைப்பில் நீண்ட ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில், ஹெமிங்வேக்கு இருந்த மனநோய்கள் பற்றி விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.
ஹெமிங்வே, 'Bipolar Disorder' எனப்படும் இரு துருவ நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்நோய் உள்ளவர்கள், சில சமயம் மன எழுச்சியாலும் சில சமயம் மனச் சோர்வாலும் பாதிக்கப்படுவர்.
எழுச்சியின் போது எல்லா விஷயங்களையும் அதி வேகமாக அவர்களால் செய்ய முடியும். உலகம் வண்ணமயமாகத் தெரியும். எந்நேரமும் அதீத ஆற்றலுடன், சோர்வே அடையாமல் வேலை செய்வர். தூக்கத்தைத் தூக்கி, தூர வைத்துவிடுவர். இதற்கு அப்படியே நேர் எதிரானது மனச் சோர்வடைவது.
ஹெமிங்வே இரண்டு வகையாலும் பலமுறை பாதிக்கப்பட்டிருக்கிறார்.
மன எழுச்சியின் போது, நேரம் காலம் பார்க்காமல் எழுதித் தள்ளியிருக்கிறார். ஹெமிங்வேயின் முதல் நாவலான 'The Sun Also Rises', அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் எழுதியது தான். 1924 ல் மட்டும், ஏழு சிறுகதைகளை அடுத்தடுத்து எழுதியிருக்கிறார் ஹெமிங்வே.
ஆனால், மனச் சோர்வின் போது அவரால் அப்படி இயங்க முடியவில்லை. தற்கொலை எண்ணங்கள் மட்டுமே மேலோங்கி நின்றன.
'நான் மாபெரும் ரத்தம் தோய்ந்த வெறுமையையும், ஒன்றுமில்லாததையும் உணர்கிறேன். எப்பொழுதும் இனி என்னால் எழுத முடியாது, சண்டையிட முடியாது, சாப்பிட முடியாது. இது என் மரணத்திற்கான ஆரம்பம்'
மனச் சோர்வில் இருந்தபோது தன்னுடைய நண்பர் பாஸ்சோஸிடம், ஹெமிங்வே சொன்ன வார்த்தைகள் இவை.
இவருடைய மனநோய் பற்றி நன்கு அறிந்த நண்பர்கள்,'அவர் சில நேரம் நன்றாகப் பேசுவார். சில நேரம் கோபமாகப் பேசுவார். சில நேரங்களில் பேசுவதே இல்லை. திடீரென சிரிப்பார். பிறகு வெடித்து அழுவார். அவருக்கிருந்த மனநோய் அவரைப் பாடாய் படுத்தியது' என்கின்றனர்.
இதனாலேயே ஹெமிங்வேயால், யாருடனும் நீண்ட நாட்களுக்கு நட்பு பாராட்ட முடிந்ததில்லை. திருமண வாழ்க்கையில் அடுத்தடுத்து தோல்வியுற்றார் அவர். மேரி, அவருடைய நான்காவது மனைவி.
மேலும், ஹெமிங்வேக்கு புகழ்பெற்ற எல்லா எழுத்தாளர்கள் போலவே மிதமிஞ்சிய குடிப்பழக்கமும் இருந்தது. இது அவருக்கிருந்த மனநலப் பிரச்னையை இன்னும் தீவிரப்படுத்தியது.
குடியால் அவருடைய கல்லீரல் வீக்கம் கண்டது. குடி மயக்கத்தில், அடிக்கடி கீழே விழுந்து மண்டையை உடைத்துக் கொண்டார் ஹெமிங்வே.
மேலும் ஹெமிங்வேவுக்கு எத்தனை முறை விபத்துகள் நடந்திருக்கின்றன என்பது பற்றி, ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். அந்த அளவுக்கு மரணத்துடன் கபடி விளையாடியிருக்கிறார் அவர். மனைவியுடனான ஆப்பிரிக்க பயணத்தின்போது அவர் சென்ற விமானம் விபத்தில் சிக்கி, மரணத்திற்கு மிக அருகில் சென்று திரும்பி வந்தது, அப்போதைய பத்திரிகைகளில் முதல் பக்க செய்தியாக வெளியானது.
காளைச் சண்டையிலும், வேட்டையாடுவதிலும் ஈடுபாடு கொண்ட ஹெமிங்வே, உடல் முழுக்கப் பல வீரத் தழும்புகளைப் பரிசாக வாங்கியுள்ளார். முக்கியமாக தலைப்பகுதியில்! (ஹெமிங்வேயின் நெற்றியில் மினி இட்லி ஸைசில் இருக்கும் தழும்பைத் தேடிப் பார்க்கவும் ).
இப்படி மாதத்திற்கு ஒருமுறை தவணை முறையில் தலையில் அடிபட்டதால், அவருடைய நினைவாற்றலில் சிக்கல் முளைத்தது. கவனம் சிதறியது. இதனால் எழுதுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டார் ஹெமிங்வே.
தற்கொலை செய்து கொள்வதற்கு சில மாதங்கள் முன்பு தான், அமெரிக்காவின் புகழ்பெற்ற மயோ க்ளினிக் ( Mayo Clinic ) மருத்துவமனையில் மன அழுத்தத்திற்கான சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஹெமிங்வே. ஆனால் எவ்வளவு நாள்கள் தான் மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியும்?
தற்கொலை ஒரு நிழலைப் போல, வாழ்நாள் முழுவதும் ஹெமிங்வேயைப் பின்தொடர்ந்திருக்கிறது. காலம் முழுக்க அவருடன் பகடி ஆடிய அது, இறுதியாக அன்றைய விடியற்காலைப் பொழுதில் அவரை வென்றுவிட்டது.
சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட உளவியல் சார்ந்த சிக்கல்கள், குடும்பத்தில் பிணைந்திருந்த தற்கொலைகள், மனநோய், குடிப்பழக்கம், தலையில் பலமுறை அடிபட்டது என இவையெல்லாம் சேர்ந்தே ஹெமிங்வேயின் உயிரை குடித்திருக்கிறது.
இறுதி வரையில் ஹெமிங்வேயின் மனைவி மேரி, 'ஹெமிங்வே தற்கொலை செய்து கொள்ளவில்லை. துப்பாக்கியை சுத்தம் செய்தபோது நடந்த விபத்தில் தான் இறந்தார்' என்றே நம்பி வந்தார். ஆனால் ஹெமிங்வேயின் உளவியலை ஆராய்ந்தால், அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான சாத்தியக்கூறுகள் தான் நிறைய இருக்கின்றன.
'கடலும் கிழவனும்' ( The Old Man and The Sea ) போன்ற மென்மையான நாவலை உருவாக்கிய ஹெமிங்வேயின் வாழ்க்கை, கடலைப் போலவே பல மர்மங்களை உள்ளடக்கியது.
ஹெமிங்வேயின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மைக்கேல் ரெனால்ட்ஸ், 'ஹெமிங்வே ஒரு ஆழமான கிணறு போன்றவர். அதில் குதித்துவிட்டால் மேலே ஏறி வருவது சிரமம்' என்கிறார்.
உண்மைதான்...
ஹெமிங்வேயைப் புரிந்து கொள்வது சிரமம்.
-சரத்
நன்றி: விகடன்

===========================================================================================


இப்போதெல்லாம் இல்லாத ஒரு வழக்கம் அப்போதைய புத்தகங்களில் காணக் கிடைக்கிறது. 1931 ஆம் வருடம் பதிப்பிக்கப்பட்ட 'விஷவைத்திய சிந்தாமணி' புத்தகத்தின் முதல் பக்கம் உ, சிவமயம், திருச்சிற்றம்பலம் ஆகியவற்றைத் தொடர்ந்து காப்பு என்ற ஒன்றும் உள்ளது.
காப்பு
சீரார் விஷயவைத்ய சிந்தா மணி நூலைப்
பரா ரறியவுரை பண்ணுதற்கு - நீராரும்
பிஞ்சுமதி குஞ்சிடைப் பெம்மானா ரன்றளித்த
கஞ்சமத வாரணன் றாள் காப்பு.
சர்ப்பங்களுக்குள்ளும் ஜாதிபேதம் சொல்கிறது புத்தகம்.
புத்தக ஆசிரியர் பல வைத்ய நூல்களை எழுதியவரும், ஆயுர்வேத வைத்தியருமான சிறுமணவூர் முனுசாமி முதலியார்,
"பூவுலகிலுள்ள விஷப் பிராணிகளின் பூர்வோத்திரங்களை நன் குணர்த்துவோமாக. அதாவது காசிபன் மனைவி யாகிய கத்துரு வென்பவளின் வயிற்றிலு தித்த விஷப் பிராணிகள் அளவிறநதனவாயினும் இந்த அண்டகோடிகளுக்குள்ளே சர்ப்பங்களில் தலைமையாயும் உத்தம ஜாதியாயுமுள்ள சர்ப்ப பேதங்களையும், மற்றுமுள்ள சில விஷ பேதங்களையும் கிரமமாகச் சொல்லுவோம்.
உத்தம ஜாதி சர்ப்பங்கள் பெயர்கள்
1. வாசுகி 2. அநந்தன் 3. தக்கன் 4. சங்கபாலன் 5. குளிகன் 6. பதுமன் 7. மகாபதுமன் 5. கார்கோடகன்
ஜாதி பேதம்
வாசுகி யென்னும் சர்ப்பமானது க்ஷத்திரிய ஜாதி
அனந்தனென்னும் சர்ப்பமானது பிரம ஜாதி
தக்கனென்னும் சர்ப்பமானது வைசிய ஜாதி
சங்கபாலனென்னும் சர்ப்பமானது க்ஷத்ரிய ஜாதி
குளிகனென்னும் சர்ப்பமானது பிரம ஜாதி
பதுமனென்னும் சர்ப்பமானது சூத்திர ஜாதி
மகாபதுமனென்னும் சர்ப்பமானது வைசிய ஜாதி
கார்கோடகனென்னும் சர்ப்பமானது சூத்திர ஜாதி
உத்தம ஜாதி சர்ப்பங்களிலிருக்கும் இடங்களும், அவைகளினுடைய மணமும், ஆடுந் திசையும், படத்தின் குறியும், நிறமும், வயதும்...
வாசுகியென்னும் சர்ப்பமானது கிழக்குத் திக்கில் விருக்ஷத்தடியில் இருக்கும். , அது இருக்கு மிடத்தில் தாழம்பூ வாசனை வீசும். மனிதரைப் பார்த்தபடி எதிர்நோக்கி ஆடும். அதன் படத்தில் சக்கரம்போல் குறியும் கருங்குவளை பூப்போல் புள்ளிகளுமிருக்கும். அறுகங் கிழங்கு, வந்து இவைகளை புசிக்கும். அதன் தேகம் பொன்னிறமா யிருக்கும். அதற்கு வயது 800....."
இப்படிச் செல்கிறது புத்தகம்...

==========================================================================================

சேரன் செல்வி என்னும் சாண்டில்யன் புத்தகத்தில் வரும் பாசுரம்

"இதில் எதுவும் நானோ நீயோ கவியோ புலவரோ என் மகளோ தீர்மானிக்க முடியாது." அரசன் பதிலில் உறுதி இருந்தது.

வேறு யார் தீர்மானிப்பது?" இளவழுதியின் கேள்வியில் சிறிது ஆவல் தொனித்தது.

"வரதன்?"

"வரதனா?"

''ஆம், காஞ்சி வரதன்"

''பெருமாளைச் சொல்கிறீர்களா?"

"வேறு யாரைச் சொல்ல முடியும்? இவள் காஞ்சி வரதனுக்கு அர்ப்பணிக்கப்பட்டாள். அவன் இவளை என்ன செய்கிறானென்பது யாருக்குத் தெரியும்? யாருக்குப் புரியும்?" என்று கேட்ட ரவிவர்மன் "ராமானு ஜரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்றும் வினவினான்.

"எந்த ராமானுஜர்?" என்று குழப்பத்துடன் கேட்டான் இளவழுதி.

"வைணவத்துக்கு உயிர் கொடுத்தவர். அவர் தன்னை வரதனுக்கு அர்ப்பணித்துக்கொண்டார். வரதனை இசையால் மயக்கிய வரரங்கன் என்ற பெரியார் ராமானுஜரை வரதராஜனிடமிருந்து இசைப் பரிசாகப் பெற்றார்" என்றான் ரவிவர்மன்.

இதைக் கேட்ட இளவழுதி பிரமித்து நின்றான். "என்னைப் பாடச் சொல்கிறீர்களா?" என்றும் வின வினான்.

இல்லை என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினான் அரசன். "பாட்டினால்தான் வரதனை இசையவைக்க வேண்டுமென்பதில்லை. சேவையினாலும் இசைய வைக்கலாம். நாம் இறங்கும் போர் கோவில்களைக் காக்க வல்லது. இணையிலா சேவைக்கு உனக்கு பரிசு கிடைக்காமலா போகும்?" என்று அரசன் விளக்கி னான். அத்துடன் மேற்கொண்டு அந்தப் பேச்சிற்கு முடிவும் கட்ட “இளைஞனே கேள்!. வரதன் என்ற பெயரே வரம் கொடுப்பவன் என்ற பொருளுடையது. அவனை இஷ்ட தேவதையாக உடையவன் எதையும் பெறுகிறான். கருணை வள்ளலான பகவானிடம் தொண்டு செய்தவர் யாரும் வீணானதில்லை. ஆகவே அவன் தலையில் பாரத்தைப் போட்டுக் கடமையைத் துவங்குவோம்" என்றான். அத்துடன் இளமதியை நோக்கி "பெண்ணே! நீ உன் அறைக்குப் போ, நாங்கள் பேச வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன” என்றும் உத்தரவிட்டான்.

****************

அப்படி அவன் இசையில் மெய் மறந்து மூழ்கிக் கிடந்த சமயத்திலும் அந்த இசை தழுவியது தனது மூதாதையர் ஆன குலசேகரர் இயற்றிய முகுந்த மாலை என்பதை நினைத்ததால் பெருமிதம் கொண்டாள் அரசகுமாரி.  " அந்திம தசையில் என் எண்ணங்கள் எப்படி நிலைகுலைந்து போகுமோ தெரியாது கபவாத பித்தங்களில் தொண்டை அடைத்துக் கொள்ளும் போது என் உன் நாமத்தை எப்படி சொல்லுவேன் ஆகவே என்னுடைய மனம் ஆகிய ராஜ ஹம்சம் இப்பொழுதே உன் திருவடித் தாமரை என்னும் கட்டுக்குள் பிரவேசிக்கட்டும் என்று கண்ணனை அழைக்கும் அந்தப் பாட்டின் தன்மையுடன் கரகரத்த அவன் கம்பீர சாரிரம் எப்படி சேர்ந்து வருகிறது என்று பரவசப்பட்டாள் இளமதி.

===============================================================================  

படித்தால் மட்டும் போதுமா? 1962 தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம். சிவாஜி பாலாஜி, சாவித்ரி, ராஜசுலோச்சனா, முத்துராமன் நடித்திருக்கிறார்கள். பீம்சிங்.

இன்றைய பாடல் 'நான் கவிஞனும் இல்லை', கண்ணதாசன் எழுதி T M சௌந்தரராஜன் பாடியது. இசை மெல்லிசை இரட்டையர்கள்.

31 கருத்துகள்:

  1. ஆமாம் இரண்டு தடவைகள் போயிருக்கிறேன். அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கும் அவள் இறைவனை அடைந்ததும் வீட்டுக்கு அழைத்து வரவும்,
    மாமியார்க்காகவும் போயிருக்கிறேன். மிகப் பயந்த நாட்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கம்மா..  அப்போதைய ஆம்புலன்ஸ்கள் ஆரோக்யமாக இருந்திருக்குமோ...

      நீக்கு
    2. 89 இல் மாமியாருடன் போனபோது பரவாயில்லை. 2005 இல் அம்மாவுக்காகப் போன 3 தடவையும் மிக நொந்து போனேன்.

      நீக்கு
    3. மோசமான வியாபாரமாக்கி விட்டார்கள்.

      நீக்கு
  2. அனைவருக்கும் இனிய வெள்ளிக்கான வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெள்ளிக்கிழமையைக் கொண்டாடுவோம்!  அதுவும் நவராத்திரி வெள்ளி!

      நீக்கு
    2. உண்மைதான். எல்லா நலங்களையும் பராசக்தி தருவாள்.

      நீக்கு
  3. இதயநோயாளிகள் பாடு அந்தோ பரிதாபம். பெரிய ஆம்புலன்ஸாக இருக்கும் பல வண்டிகள் தேவலாம்.. ஆனாலு அதிலும் ஷாக் அப்சார்பர் இருக்காது. '' உண்மைதான். கொடுமையான அனுபவம். வாழ்க்கையே வெறுத்துவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பக்கத்தில் ஆஸ்பத்திரி இருந்தால் பரவாயில்லை.  தூரம் என்றால் நோயாளியின் பாடு சிரமம்தான்.  அதுவும் காட்டுத்தனமாக ஓட்டுவார்கள்.

      நீக்கு
  4. பாஸ்கியின் நிகழ்ச்சி மிகப் பிடிக்கும். நல்ல பாசிட்டிவ் மனிதர்.

    பதிலளிநீக்கு
  5. சாவித்திரி படத்தில் நாரதராக வந்து பாடியதால் தான் எம் எஸ் நல்ல புகழ் பெற்றார். மாமியார் இந்தக் கதைகளைச் சொல்வார். இத்தனை சாவித்திரிகளா!!!!!!மீண்டும் சாவித்திரி என்று கூடப் படம் வந்திருக்கிறது இல்லையா மா..

    பதிலளிநீக்கு
  6. படித்தால் மட்டும் போதுமா, சிவாஜிக்காக வருத்தப்பட்ட இள வயதுப் படம். உருகி உருகி டி எம் எஸ் பாட. இன்னும் உருகி நடிகர் திலகம் நடித்திருப்பார். தோல்வி கண்ட அன்பு எப்படி இருக்கும் என்பதை அந்த முகம் காட்டும். ஜீனியஸ் அவர்.

    பதிலளிநீக்கு
  7. சாண்டில்யன் எழுத்தில் வரதனா!!! அற்புதமாக இருக்கிறது. பெரியாழ்வார் தன் பாசுரத்தில்''அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன் அரங்க மா நகருளானே'' என்று சொல்லி வேண்டுவார். முதுமையில் வலியினால் அவஸ்தைப் படும்போது கடவுள் நினைவும் வருவது அபூர்வம் என்று பொருள் இருக்கும். சாண்டில்யனும் வைணவர் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தேகமில்லாமல் வைணவர்தான்.  சாண்டில்யன் குறிப்பிட்டிருக்கும் பாசுரம் எந்தப் பாசுரம் என்று நெல்லை தேடிக்கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்!

      நீக்கு
    2. அது தெரிந்ததுதான். அதே மாதிரி, தளரா உடலம் எனதாவி சரிந்து போம்போது இளையாது உனதாள் ஒருங்கப் பிடித்து போத இசை நீயே (நம்மாழ்வார் குடந்தைப் பாசுரம் ஆரா அமுதே.... சொன்ன வரிகள் களைவாய் துன்பம் என ஆரம்பிக்கும் பாசுரம். வல்லிம்மா சொன்னது துப்புடையாரை என ஆரம்பிக்கும் திருமொழி)

      நீக்கு
  8. விஷ வைத்திய புத்தகம் அதிர வைக்கிறது. ராத்திரி வேளையில் படிக்கவில்லை. மீண்டும் கடவுள் அருளில் காலை சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  9. முகுந்த மாலையில் அந்தப் பாசுரம்

    ப்ராணப் பிரயாண சமயே கபவாத பித்தை:
    கண்டாவரோ ஸ்தனவிதௌ ஸ்மரணம் குதஸ்தே

    உடலை விட்டு பிராணன் நீங்கும்போது உன் நினைவு உன் நாமத்தைச் சொல்லவேண்டும் என்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... வாங்க நெல்லை.. நாளையும் பாசுரம். இன்றும்..!

      நீக்கு
  10. வெள்ளிக்கிழமை சென்டிமென்டெல்லாம் சாருக்கு இல்லையா?

    ஒரே மங்கல டாபிக்குகளாகவே இருக்கின்றனவே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி..  வேணும்ன்னு பண்றதில்லை...  அப்படி வர்றதுதான், அமையறதுதான்!

      நீக்கு
  11. எஸ் எஸ் வாசன்.... பெரிய ஆளுமை...

    பதிலளிநீக்கு
  12. பாஸ்கி... தெரிந்த விஷயங்கள்.... ரசிக்கும்படி இருந்தது

    பதிலளிநீக்கு
  13. ''ஹெமிங்வேக்கு புகழ்பெற்ற எல்லா எழுத்தாளர்கள் போலவே மிதமிஞ்சிய குடிப்பழக்கமும் இருந்தது. இது அவருக்கிருந்த மனநலப் பிரச்னையை இன்னும் தீவிரப்படுத்தியது.
    குடியால் அவருடைய கல்லீரல் வீக்கம் கண்டது. குடி மயக்கத்தில், அடிக்கடி கீழே விழுந்து மண்டையை உடைத்துக் கொண்டார் ஹெமிங்வே.'' ............................................................அதிர்ச்சி தரும் வாழ்வு ஹெமிங்க்வே யினுடையது.

    அற்புத அறிவு படைத்தவர்களின் வாழ்வு ஏன் இப்படி ஆகிறது:(
    எங்கள் சிங்கத்துக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்.
    எனக்கு இவர் எழுத்து புரிவதில்லை.

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!