21.10.26

ஒரு திருமணம் என்றால் என்றால் உணவில் நீங்கள் என்ன என்ன எதிர்பார்க்கிறீர்கள்? + சரோஜாதேவி பகுதி 21

 

கேள்வி பதில்கள்.

நெல்லைத்தமிழன்: 

1 திருமணத்தை ஆடம்பரமாக நடத்தக் கூடாது என்பதற்கு ஏன் ஒரு இயக்கமும் உருவாகவில்லை? ஏன் ஆன்மீகத் தலைவர்கள் இதில் தலையிடுவதில்லை?  

# ஒரு பட்டு, (திருமாங்கல்யம் தவிர) பொன் இவற்றைத் தவிர்க்க வேண்டும், வரதட்சணை கூடாது என்று காஞ்சிப் பெரியவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அதை யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. தன் அக்கா அல்லது தன் சினேகிதி செய்து கொண்ட அதே ஆடம்பரத்துடன் தன் கல்யாணமும் நடக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவதாக ஒரு எண்ணம் பரவலாக இருக்கிறது. இந்த ஆடம்பர ஆசை ஆண்களுக்கும் உண்டு. இது பற்றிப் பேசப் போய் நான் கொஞ்சம் கெட்ட பெயர் சம்பாதித்து வைத்திருக்கிறேன். 

2. ஒரு திருமணம் என்றால் என்றால் உணவில் நீங்கள் என்ன என்ன எதிர்பார்க்கிறீர்கள்?  

# பாயசம், போளி, நல்ல நெய், பருப்பு வடை , தயிர்ப் பச்சடி.‌சுவையான ரசம், அவியல்., 

3. திருமணப் பரிசுகள், போட்டோ எடுத்துக்கொள்வது போன்ற பல நடைமுறைகள் எனக்கு பைத்தியக்காரத் தனமாகத் தெரிகிறது. உங்களுக்கு? 

#  பரிசுகளை ஒரேயடியாக வேண்டாம் என்று ஒதுக்கி விட முடியாது.  பரிசைப் பணமாகக் கொடுப்பது சௌகரியமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். போட்டோ வீடியோவைப்  பொறுத்தவரை பெரிதாக செலவு செய்து கஷ்டப்பட வேண்டாம் என்று எனக்குத் தோன்றும். 

உறவினர்கள் தங்கள் மொபைலில் எடுக்கும் படங்கள் வீடியோக்கள் இவற்றை இன்னும் சற்று பிளான் பண்ணி எடுத்தால் போட்டோகிராபர் செலவை  முற்றிலும் தவிர்த்து விடலாம்.

4.ஒரு திருமணத்திலோ இல்லை விசேஷத்திலோ நாம் கலந்துகொள்வதன் ஒரே பயன், மகிழ்ச்சி, எல்லா உறவினர்களையும் ஒரே இடத்தில் பார்த்து பேசி இன்புறுவதுதான். வேறு ஏதேனும் பயன் இருக்கிறதா?  

# மணமக்களுக்கு மனப்பூர்வமாக ஆசி வழங்கும் வசதி இருப்பது மிகவும் முக்கியமானது. பாக்கி எல்லாமே இரண்டாம் பட்சம் தான்.

5. இப்போதைய தலைமுறை-திருமணம் செய்துகொள்பவர்கள், நம் திருமணச் சடங்கு நிகழ்வுகளில் ஆர்வத்துடன் கலந்துகொள்கிறார்களா இல்லை வேறு வழியில்லை, ஓரிரு நாள் கூத்து என்ற சலிப்புடன் கலந்துகொள்கிறார்களா?

# எந்த ஒரு விஷயமானாலும் ஆசையாக ரசிப்பவர்களும்,  கடனே என்று பொறுத்துக் கொள்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். 


=====================================================================================

மனசாட்சியம் -20

KGY Raman 

பெரியவர் புராணம் 


" அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் " என்பதுதான் நமக்கு காலத்தில் நட்டு வைத்த கனிதரும் நன்மரம்.  " பெரியவங்களைக் கேட்டுக்கிட்டு முடிவைச் சொல்கிறேன் " என்பது எல்லா முக்கிய சந்தர்ப்பங்களிலும் பேசப்படும் வசனம்.

என் தாயார், என் தந்தை என, தனது மேன்மைக்கான மூலத்தை சிலாகித்துச் சொல்லும் பல சாதனையாளர்களை நாம் அறிவோம். 

" பெரியவர்கள்" எனும் இந்த அந்தஸ்து வெறும் வயது ஏறியதால் மட்டும் வந்து விட்டது என்று நினைக்கும் பெரியவர்கள் பெரிய மனவேதனையை சம்பாதித்துக் கொள்ளக் கூடும். முக்கியமாக கேட்காத போதே "அறிவுரை" தர முற்படும்போது சில சங்கடங்கள் ஏற்படும். 

" சும்மா இருப்பதே சுகம்" என்பது இதுபோன்ற முந்திரிக்கொட்டைப் பெரியவர்களுக்குச் சொல்லப்பட்ட விஷயம்தானோ என்னவோ தெரியவில்லை. 50 வயதாகிற மகனுக்கு அவன் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை சொல்ல அப்பா முன்வரும்போது, " யப்பா நீ கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா " தான் பரிசாகக் கிடைக்கும் அல்லவா?

முடிவு எடுக்க ஆலோசனை அவசியம். அதற்கு நேரம் தேவைப்படும். அந்த மாதிரி சமயங்களில் ஒரு ஒத்திவைப்பு சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிற ஜனங்கள் " பெரியவங்கள கேட்டுச் சொல்றோம் " என்கிற அஸ்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

" நம்ம வீட்டு வழக்கம் என்ன? " , " நம்ம தாத்தாவுக்கு அப்பா பெயர் என்ன " போன்ற கலைக்களஞ்சியத் தகவல்களை மட்டுமே கேட்கும்போது தந்து வாளாவிருக்கும் பெரியவர்களுக்கு மரியாதை கிடைக்கிறதோ இல்லையோ அவமரியாதை கிடைக்காது.

சில சமயம் ஏதோ ஒன்று சொல்ல வேண்டுமே என்ற உந்துதல் காரணமாக பெரியவர்கள் ஏடாகூடமாக ஏதாவது சொல்லி மாட்டிக் கொள்வார்கள்.‌ போலியான பாராட்டு என்பது கூட சற்று டிகாஷன் ஜாஸ்தியாக இருந்து காட்டிக் கொடுத்து விடும். 

உண்மையில் இந்தப் பெரியவர்களே கூட , தாம் இளைஞர்களாக இருந்த போது அவர்களது பெரியவர்களுக்கு மிக்க மரியாதை கொடுத்தார்களா என்பதே கேள்விக்குரிய விஷயம். இப்போது யோசித்துப் பார்க்கும்போது எனக்கு நான் என் பெற்றோர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுத்து வந்திருப்பதாகத் தோன்றுகிறது.  உண்மை அப்படி இல்லாமலும் இருக்கலாம். காரணம் எல்லா மனிதர்களும் தான் செய்த நல்ல செயல்களையும் பிறர் தமக்குச் செய்த தீய செயல்களையும் மறப்பதே இல்லை. இது நான் என் அனுபவத்தில் கண்ட உண்மை. 

பெரியவர்களுக்கு மரியாதை என்பது பரவலாக இப்போது எங்கே கிடைக்கிறது என்றால் வீட்டில் நடக்கும் நல்ல நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்தில் இருக்கிற எல்லா மூத்தவர்களுக்கும் புடவை வேஷ்டி வாங்கித் தந்து அழைப்பிதழ் கொடுக்கிறதில்தான். இதில் காசை விரயம் செய்யாமல் வேறு நல்ல செலவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும் என்று நான் அவ்வப்போது நினைப்பதுண்டு. ஆனால் அது உசிதமல்ல.  ஒரு சுப காரியம் நடக்க இருக்கும் போது நெகட்டிவாக இப்படி எல்லாம் சொல்லக்கூடாது அல்லவா ? விளைவு என்ன என்றால் என்னிடம் ஏகப்பட்ட புது ஜவுளிகள் சேர்ந்து விட்டன.

" ஆபரணார்த்தம் அட்சதான் சமர்ப்பயாமி " என்னும் நல்ல வழக்கத்தைப் பின்பற்றி அழைப்பிதழ்களை தாம்பூலம் ஒரு ஐந்து ரூபாய் நாணயம் இவற்றோடு கொடுத்தால் சரியாக இருக்கும் என்று நான் நினைக்கத்தான் செய்கிறேன் சொன்னதில்லை.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

படமும் பதமும் : 

நெல்லைத்தமிழன் : 


ஹோட்டல்களில் மினி டிபன் என்று ஏன் ஒரு ஐட்டம் வந்தது?  அவங்களுக்கு இது லாபமா இல்லை வாடிக்கையாளர்களை வரவழைக்க இது ஒரு யுக்தியா? நான் பொதுவாக மினி டிபனைத்தான் ஆர்வத்துடன் வாங்குவேன். பஹ்ரைனில் குடும்பத்தோடு காலையில் ஹோட்டலுக்குப் போனால், மினி டிபன் எல்லோருக்கும். பிறகு பசங்க, எனக்கு பூரி பிடிக்கும், எனக்கு தோசைதான் வேணும்னு சொன்னால், நாலு பேருக்கு ஆறு மினி டிபன் வாங்குவேன்.  எல்லாம் சல்லிசு விலைதான். கேசரி என்ற அழகிய சுலபமான அனேகமா எல்லோருக்கும் பிடித்த இனிப்பை, எதற்காக ஹோட்டல்கள் இவ்வளவு கோரமாகச் செய்கின்றனர்? எல்லோ ஹோட்டல்களிலுமே கேசரி என்பது ஜீனி, கலர் போட்ட உப்புமா ரேஞ்சுக்குப் பண்ணுவதன் காரணம் என்ன?


பார்க்க சிறியதாகத் தோன்றும் இந்தக் காற்றாலையின் இறக்கைகள் லாரியில் ஏற்றப்பட்டுச் செல்லும்போது பார்த்திருக்கிறீர்களா? எவ்வளவு நீளம் மற்றும் கன அளவு என்று திகைத்திருக்கிறேன்.  அமைக்க 4 கோடிக்கு மேல் ஆகும் இந்தக் காற்றாலைகள், ஒருவருக்கு பெரிய லாபம் தரும் அளவு கரண்ட் உற்பத்தி செய்கிறதாம். இதைப் பற்றி உங்களில் யாருக்கேனும் கூடுதல் விவரங்கள் தெரியுமா?

குறிப்பு: முதல் படம்... நாகர்கோயில் ஆரிய பவன். சூப்பர் ரெஸ்டாரண்ட்.  இரண்டாவது படம், நாகர்கோயிலிலிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில். 

ஸ்ரீராம்  :

ஒரு சின்ன ஆப்பரேஷன்... மிகச்சிறிய ப்ரொசீஜர்! ஒல்லியாகி விட்டேன். நம்பவில்லை என்றால் படத்தைப் பாருங்கள்.
முதல் படம் ஆபரேஷனுக்கு முன்.
இரண்டாம் படம் ஆபரேஷனுக்குப் பின்.​




= = = = = = = = = = = =

KGG பக்கம் : 

சரோஜாதேவி தொடர் கதை 

சென்ற வாரம் - சுட்டி : பகுதி 20 : " சேலம் சுந்தர்" 

இனி 

இந்த வாரப் பகுதி. 

பகுதி 21 : " நாநாவின் திட்டம் " 

சென்னையிலிருந்து புறப்படுவதற்கு முன்பு நாநா திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சில தகவல்கள் கூறி , வேண்டிய சில தகவல்களைப் பெற்றுக்கொண்டான். 

சென்னையிலிருந்து சேலத்திற்கு விமானத்தில் செல்லும்போது பாபாவுக்கு தன்னுடைய திட்டத்தை சொன்னான் நாநா. 

" சேலத்தில் ஹோட்டலில் தங்குவோம். நம்முடைய பனானா எண்டர்ப்ரைஸஸ் சேலம் உறுப்பினர், உனக்கு சுந்தர் வீட்டுக்குள் அருவமாக நுழைய நாளைக் காலை அந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்தி - விலாசம் விசாரிப்பவர் போல உதவுவார். நான் ஏற்கெனவே ஆனந்திடம் நிச்சயதார்த்த வீடியோவை அனுப்பியவருக்கு - அந்த வீடியோ பார்த்ததால், ஏற்கெனவே வீணாவுக்கு வேறு ஒரு ஆளுடன் நிச்சயதார்த்தம் நடந்த விவரம் தெரிய வந்ததற்கு நன்றி சொல்லி, தன் கல்யாணத்தை  நிறுத்திவிடப் போவதாக ஒரு செய்தியை நான் ஓகே சொன்னவுடன் அனுப்புமாறு சொல்லியிருக்கிறேன். நீ அருவமாக உள்ளே இருந்து - நடப்பவை எல்லாவற்றையும் வீடியோ எடு. யாரிடமிருந்து சுந்தருக்கு தகவல் வருகிறது என்ற விவரமும் சுந்தரின் மொபைல் போனில் பார்த்து பதிவு செய்துகொள். " 

பாபா : " இது எப்படி நமக்கு உதவும்?" 

நாநா : " கொஞ்சம் யோசித்துப் பார். நீ ஒரு கல்யாணத்தை நிறுத்த இந்த மாதிரி ஒரு ஃபேக் வீடியோ எடுத்து ஒரு ஆள் மூலமாக ஒருவருக்கு அனுப்புகிறாய் என்று வைத்துக்கொள். அந்த வீடியோவைப் பார்த்த ஆள், கல்யாணத்தை நிறுத்தப் போவதாக வீடியோ அனுப்பியவருக்கு செய்தி அனுப்பினால் - அனுப்பியவர் உடனே யார் அனுப்பச் சொன்னார்களோ அவருக்கு   தகவல் தெரிவிப்பார் - அதாவது கல்யாணத்தை நிறுத்த சதி செய்த உனக்கு தகவல் தெரிவிப்பார். உடனே நீ ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் ஆரம்பிப்பாய். அவ்வளவுதான். சுந்தரும் அவனுடைய அப்பாவும்  தங்களுடைய சதித் திட்டம் வெற்றி பெற்றது என்று கொண்டாடுவதை ஆதாரத்துடன் போலீசில் காட்டி அவர்களைப் பிடித்து ஜெயிலில் போட்டு முட்டிக்கு முட்டித் தட்டி அவர்கள் உண்மையை ஒப்புக்கொள்வதை வீடியோ எடுப்போம்.  அவ்வளவுதான். அப்புறம் ஆனந்த் வீணா கல்யாணம். அதன்பின் பாபா விமலா கல்யாணம். சுபம் ! ஓ கே யா? "

= = = = = = = = = = = = = =


3 கருத்துகள்:

  1. முதலில் தண்டைப் பார்த்து ஶ்ரீராம் வீட்டில் செய்த குச்சி ஐஸைப் படமெடுத்திருக்கிறாரோ என நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  2. என் அப்பா, எல்லா சந்தர்ப்பங்களிலும், வீட்ல கலந்து பேசிட்டுச் சொல்றேன் என்பார். என்னிடம், அப்படிச் சொல்லும்போது உடனடியாக பதில்/முடிவு சொல்வதைத் தவிர்க்கலாம், ஆலோசிக்க நேரம் கிடைக்கும், இன்னொருவரிடம் பேசும்போது வேறு ஒரு ஆங்கிளில் விஷயத்தைப் பார்க்க முடியும் எனச் சொல்லியிருக்கிறார்.

    இந்தக் காலத்துப் பசங்க, வீட்ல பெரியவங்களைக் கேட்டுட்டுச் சொல்றேன் என்பதை கனவிலும் உபயோகிக்க மாட்டாங்க, சொன்னால் நகைச்சுவையாயிடும். அப்படி இருக்கு காலத்தின் நிலை.

    பதிலளிநீக்கு
  3. இன்னொருவருக்கு உடை வாங்கித் தருவது என்பது வீண் வேலை. எனக்கு பிறர் உடை கொடுப்பது பிடிக்காது. வேஷ்டியிலிருந்து ஒவ்வொன்றிலும் எனக்குத் தனிப்பட்ட ரசனை உண்டு. பெரும்பாலும் பிறர் கொடுப்பது என் ரசனைக்கு உகந்ததாக இருக்காது.

    மனித இயல்பில், விசேஷங்களுக்கு மற்ற உறவினர்களுக்குக் கொடுக்க புடவைகள் வாங்கினால், நல்லது என நினைப்பதை நமக்குப் பிடித்தவர்களுக்கும் பிறருக்கு மற்றவைகளையும் கொடுக்கும் குணம் தவிர்க்க இயலாத்து

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!