'அன்னை மொழி அறிவோம்' லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
'அன்னை மொழி அறிவோம்' லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.5.13

மக்கள் டிவி - தமிழ்ப் பாடம் - நன்னன் - வெட்டி அரட்டை


மக்கள் தொலைக்காட்சியில் வரும் பல நல்ல நிகழ்ச்சிகளில் காலை ஆறரை மணி முதல் ஏழு மணி வரை வரும் 'அன்னை மொழி அறிவோம்' நிகழ்ச்சியும் ஒன்று. 

                                           

பேராசிரியர் மா. நன்னன்.

சென்னைத் தொலைகாட்சியின் ஆரம்ப நாட்களில் தொலைக்காட்சியிலேயே இவர் நடத்தும் தமிழ்ப் பாடம் பிரபலம், சுவாரஸ்யம். ஏதோ எதிரில் நின்று பாடம் நடத்துவது போல 'ம்...பக்கத்துல பார்த்து எழுதக் கூடாது' என்பார். 'ம்...எச்சல் தொட்டு சிலேட்டை அழிக்கக் கூடாது' என்பார்.

இப்போது தமிழ்ப் புத்தகங்களைக் கையில் வைத்துக் கொண்டு வரிகளுக்கிடையில் தப்பு கண்டு பிடிக்கிறார். என்ன புத்தகம் என்று கேமிரா காட்டுவதில்லை. பெரிய எழுத்தாளர்கள், பெரிய செய்தித்தாள் என்றெல்லாம் சாடுவார். 

                                               
  
நான் முதலில் இந்நிகழ்ச்சி சனி ஞாயிறுகளில் மட்டும் காலை ஆறரை மணிக்கு என்று ஒளிபரப்பபடுகிறது என்று நினைத்தேன். இப்போதுதான் வாரம் முழுவதும் அதே நேரத்தில் ஒளிபரப்பாகிறது என்று தெரிகிறது!

தண்டவாளங்களுக்கு நடுவில் வரும் 14 ஸ்லீப்பர் கட்டைகளை வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விட்டது என்று ஆங்கிலத்தில் வந்திருந்த செய்தியை தமிழ்ப்'படுத்திய' நிருபர் ஒருவர் தண்டவாளத்தின் அருகே தூங்கிக் கொண்டிருந்த 14 பேர்களை வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விட்டது என்று மொழி பெயர்த்தாராம்! 

                                                    

'சமீபத்திய பிரச்னைகளால் இந்தக் கூட்டணி உடையாது' என்று வந்திருந்த செய்தியை எடுத்துக் கொண்டார். இதில் என்ன பிழை? உடையாது என்று வரக் கூடாது. பிரியாது, கலையாது என்று சொல்லலாம். ஆங்கிலத்தை அப்படியே தமிழ்ப் படுத்த முயற்சிப்பதால் வரும் வினை இது என்றார். இந்தக் குறிப்பிட்ட வார்த்தை இப்போது எல்லோராலும் உபயோகப்படுத்தப்படும் வார்த்தையாகி விட்டது, எல்லோரும் தவறாகத்தான் உபயோகிக்கிறார்கள் என்றார்.


'இப்படித் தப்புத் தப்பா தமிழை, தமிழன்னையைக் கொலை செய்துட்டு, நன்னன் கத்தறான்னா என்ன செய்யறது?' என்று கேட்கிறார்!


தப்புத்தப்பாய் எழுதும் தமிழ் செய்தித்தாள் அதிபர்களையும் தமிழ் எழுத்தாளர்களையும் "பண்ணையார்களே" என்று அழைக்கிறார்!


"கேடு வரும் பின்னே...

மதி கெட்டு வரும் முன்னே.."

தப்புத் தப்பாய் எழுதித் தமிழைக் கொலை செய்பவர்கள் குறித்து அவர் சொல்வது இது.


"Local system உள்ள கச்சிதமான washing machine from siemens"  தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழர்களிடம் வாங்கச் சொல்லிக் கெஞ்சும், கெஞ்சி வியாபாரம் செய்பவர் இது மாதிரி தமிழைக் கொலை செய்கிறார்.... தமிழர்களே சொரணை இல்லையா? என்று கேட்கிறார்.

                                          
 
"ஆங்கிலத்துக்கோ, சமஸ்கிருதத்துக்கோ நான் எதிரி இல்லை. எனக்கும் ஆங்கிலம் தெரியும். வெளி இடங்களுக்குச் செல்லும்போது எனக்கும் ஆங்கிலம் உதவுகிறது. ஷேக்ஸ்பியர் போன்ற நாடக மேதைகளும் பல்வேறு இலக்கியங்களும் ஆங்கிலைத்திலும், சமஸ்கிருதத்திலும் இருக்கின்றன. ஆனால் அதற்காக அந்த மொழிகள் என் தமிழ்மொழியை அழிக்க விட மாட்டேன். பாம்பை அடிப்பது போல அடிக்க வேண்டும்" என்கிறார்.

அவர் சொல்லும் சில தவறுகள்...

                                            
 
"யார் ஒருவன், ஒருநாள், ஒரு விஷயத்தை..." என்று தொடங்கும் சொல்லில் யார் என்று வந்தால் ஒருவர் என்று வரவேண்டும்.. மரியாதையாகக் கூப்பீடு இங்க வாடா என்பது போல இருக்கிறது என்கிறார்.

ஆனால் இவரும் 'அண்ணன்மார்களே, தம்பிமார்களே, தமிழ்ப் பண்ணையார்களேஎன்று அன்போடும் மரியாதையோடும் அழைத்து 'சொரணை இல்லையா' என்று கேட்கிறார்!

                                                
 
வட இந்தியா, தென் இந்தியா... எத்தனை இந்தியாக்கள் ஐயா.... இந்தியாவின் வடபகுதி, தென்பகுதி என்று சொல்லுங்கள்' என்று சொல்லிக் கொடுக்கிறார்.

சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.

'ஒரே பக்தர் திருப்பதி உண்டியலில் 5 கோடி ரூபாய் போட்டார்' இதில் 'ஏ'காரம் எங்கு வர வேண்டும்?


இங்கு திருத்தம் சொல்லும்போது நாத்திக வாதம் செய்யத் தவறவில்லை!


" மேலை நாட்டில் சிவாஜி மட்டும் பிறந்திருந்தால் எவ்வளவோ மரியாதைகள் கிடைத்திருக்கும்" என்ற சொல்லில் மட்டும் என்ற வார்த்தை எங்கு வரவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். நமக்கு அது அவர் அந்த வரியை வாசிக்கும்போதே தெரிந்துவிடுகிறது. ஆனால் இது மாதிரித் தவறுகள் அச்சில் வந்துள்ள புகழ்பெற்ற எழுத்தாளர்களின் எழுத்துகளிலேயே வந்துள்ளன என்கிறார்.


இதை எழுதும்போது கூட 'ஏ' காரமும், 'உம்' விகுதியும் ஒழுங்காகத்தான் சேர்த்துள்ளேனா என்று சந்தேகம் வருகிறது!

அப்புறம் அவர் சொன்ன விஷயம் ஒன்று...

சரி.... (உதாரணத்துக்கு) காந்தி இறந்த நாளை அனுசரிப்போமா, கொண்டாடுவோமா?

                                                    
 
"அனுசரிக்கப்படுகிறது என்று சொல்வது சரிதான் என்றாலும், உங்கள் பார்வைக்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன், யோசனையை முன்வைக்கிறேன்.. ஒருவர் சொந்தக்காரராய் இருந்தாலும் பிரபலமானவராய் இருந்தாலும் மறைந்து விட்டார் என்று நினைக்கும்போது சோகமாகத்தான் இருக்கும். துக்கமாகத்தான் இருக்கும். ஆனால், நாள் செல்லச் செல்ல, அந்த துக்கம் மறைந்து விடுகிறது, மறந்து விடுகிறது. ஓராண்டுக்குப் பின், ஈராண்டுகளுக்குப்பின் அவர்களது நினைவுநாள் வரும்போது அவர்களின் நினைவுகளை அவர்களோடு நாம் கழித்த சந்தோஷப் பொழுதுகளை நினைத்து, நினைத்து சந்தோஷம்தானே படுவோம்? கொண்டாடப்படுகிறது என்று சொல்வதில் என்ன தவறு? இதைத் தீர்ப்பாக நான் சொல்லவில்லை, யோசனையாக முன்வைக்கிறேன்" என்றார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


சிவாஜி பற்றி நன்னன் பேசும்போது அறிவுஜீவியும் உடனிருந்தார்.

                                                  
 
அவர் மட்டும் அங்கு பிறந்திருந்தால் வாழ்ந்து மடிந்திருப்பார். அவ்வளவுதான்" என்று சொல்லும்பொழுது, இரண்டு தடவை நாற்காலியில் முன்னே சாய்ந்து கூர்ந்து கவனித்தார் அறிவு ஜீவி.
சரி இவர் சரியான சிவாஜி ரசிகர். எந்த ஒரு துரும்பையும் விடமாட்டார் என்றெண்ணி கிண்டலாக " என்ன நம் நடிகர் திலகத்தைப் பற்றி பேச்சு வந்தவுடன் ஒன்றி விட்டீர்கள் போல இருக்கே ?" என்றேன். 

                                         
 
அவர், "ஒன்றுவதாவது ஒன்றாவது? பேராசிரியர் கையை ஆட்டிப் பேசும்பொழுது கவனித்தீர்களா,  கீழ் நாடு மேல் நாடு என்று சொல்லும் பொழுது கீழேயும் மேலேயும் கையைக் காட்டிப் பேசினார். பேரசிரியர், அதுவும் நன்னன் அவர்களுக்கே இப்படி ஒரு மொழிக் குழப்பம் என்றால் நம் மாதிரி பேதைகளுக்கு ...?" என்று கூறி அவர் வழக்கம் போல இரண்டு முறை  முகவாயை சற்றே உயர்த்தித தலையை ஆட்டிச் சிரித்தார். 

ஹா..ஹா..ஹா.. அவர் தப்புக் கண்டுபிடிக்கும்போது நாம் தப்புக் கண்டுபிடிக்காமல் விடுவோமா....!