இறுதிப்பகுதி – ரிசார்ட் மற்றும் நாடு திரும்புதல்
கான்ஃபரன்ஸ் எல்லாம் இனிதே முடிந்தது. அடுத்த நாள் மதிய விமானத்தில் UK கேட்விக் விமானநிலையம் செல்லணும். இந்தப் பயணத்தை, புதிய தேசத்தை நான் ரொம்பவே அனுபவித்தேன். உணவு என்பது மிகப்பெரிய விஷயமாக எனக்கு இல்லை.
ஒரு தடவை தாய்வான் 6 நாட்கள் பயணமாகச் சென்றிருந்தேன். அங்கு நம் வகை உணவு ஒன்றுமே சாப்பிட்டிருக்கவில்லை. பழங்களும் ப்ரெட்டும் மாத்திரமே. நான் என் வீடு வந்து சேர்ந்தபோது இரவு மணி 8 ½ . உடனே சாதம், வெந்தயக் குழம்பு (வெண்டைக்காய் தான் போட்டு), உருளைக்கிழங்கு கட் பண்ணிச் செய்யும் காரக்கறி, சுடச்சுடச் செய்து 9 ½ மணிக்கு சாப்பிட்டபிறகுதான் கொஞ்சம் உயிர் வந்தது போல இருந்தது. நான் இருந்த தேசத்தில் நம் தமிழக உணவகங்கள் நிறைய உண்டு. இருந்தாலும் நானே பண்ணிச் சாப்பிட்டது எனக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. (கையில் தொழில் இருக்கும்போது, காரை எடுத்துக்கொண்டு ரெஸ்டாரண்ட் செல்வானேன்? அதுவும் தவிர எனக்கு டிபனில் அப்போது ஆசை இல்லை)
ரெஸ்டாரண்டுகள் பற்றி எழுதும்போது, எனக்கு சரவணபவன் உணவு மீது இருந்த தீராக் காதல் நினைவுக்கு வருகிறது. 87-90 களில் சென்னையில் தி நகரில் வேலை பார்த்தபோது, உஸ்மான் ரோடில் இருக்கும் சரவணபவனுக்கு மதிய உணவுக்குச் சென்றுவிடுவேன். எனக்கு எப்போதுமே, சுடச் சுட இருந்தால்தான் சாப்பிடப்பிடிக்கும் (ஆண்களுக்கு இறைவன் கொடுத்த வரம் அது. அப்போ பெண்களுக்கு? ஆறிச் சாப்பிட்டால்தான் நீ செய்த உணவின் குறைகள் தெரியும், கணவனுக்காக திருத்திக்கொள்ளலாம் என்று நினைத்திருப்பாரோ இறைவன்?...) விளையாட்டுக்காக எழுதியிருந்தாலும், நான் கிச்சன் பொறுப்பை எடுத்துக்கொள்ளும்போதெல்லாம், அதாவது மற்றவர்களுக்கான உணவைத் தயார் செய்ய, அவர்களுக்குப் போடுவதில்தான் எனக்கு எண்ணம் இருக்குமே தவிர நான் சாப்பிடணும் என்று தோன்றாது. அவங்கள்லாம் சாப்பிட்ட பிறகு, சூடு குறைவான உணவை நான் ஆர்வத்தோடு உண்ணுவதில்லை, ஏதோ சாப்பிட்டோம் என்று பேர் பண்ணிடுவேன்).
காலை வீட்டில் சாப்பாடு சாப்பிட்டிருக்கவில்லை என்றால், 10 ¾ க்கு சரவணபவன் போய்விடுவேன். அப்போதான் அவர்கள் எள்ளோரை, புளியோதரை-ஏதாவது ஒன்று, அனேகமா எள் சாதம்தான், அங்கிருக்கும் தெய்வப் படங்களுக்கெல்லாம் தூப தீபத்துடன் காட்டிவிட்டு, மதிய உணவை ஆரம்பிப்பார்கள். அவங்களுடைய மதிய உணவுக்கு ஈடு இணை கிடையாது என்பது என் அபிப்ராயம். ஒவ்வொரு ஐட்டமும், அதன் ருசியும் இன்னும் என் மனதில் இருக்கிறது. அந்தக் காலத்தில் அவங்க தரம் எப்படி இருந்தது என்றால், எந்த ஊர், பிராஞ்ச் சரவணபவன் சென்றாலும் அதே தரம், அதே ருசி. இந்த ‘உயர்தர’ என்ற லேபிளை மற்றவர்களும் உபயோகித்துப் பார்த்தார்கள், ‘பவன்’ஐயும் காப்பியடித்து ‘கணேஷ் பவன்’ என்றெல்லாம் ஆரம்பித்தார்கள். டிபனும் அங்கு நல்லாத்தான் இருக்கும். பாண்டிபஜார் பிராஞ்ச் ஆரம்பித்தபோது அங்கு மாத்திரம் கொஞ்சம் அதிக விலை என்று தோன்றும்.
துபாய் சென்றாலும் அங்கு சரவண பவனில் சாப்பிடுவேன் (அங்க அந்த பிராஞ்ச் வந்தபோது). எந்த நாடு சென்றாலும் அங்கு சரவணபவன் இருந்தால், அங்கு ஒரு வேளையாவது மதிய உணவு சாப்பிடுவேன். துபாய் கராமா பிராஞ்சில்தான் ருசி மாற ஆரம்பித்தது (அதாவது மலையாளிகளை ஈர்ப்பதற்காக பூண்டு சேர்ப்பது அதிகமானது என்று நினைவு). நான் இருந்த தேசத்தில் அவங்க பிராஞ்ச் வரப்போகிறது என்று பேச்சாக இருந்தது. என் மனைவியிடம் அப்போதே சொல்லிவிட்டேன், வார இறுதியில் அங்குதான் மதிய உணவு என்று. (நீங்க வர்றீங்களோ இல்லையோ, நான் அங்குதான் செல்வேன்). திறந்த முதல் நாள், மாலை டிஃபனுக்கு எல்லோரும் சென்றிருந்தோம். (என்னப்பா… சாம்பார் இவ்வளவு தண்ணியா இருக்கு? மதியம் வைத்திருந்ததை போடுகிறார்களோ? என் மகள். அதற்கேற்றபடி மதியம் செய்திருந்த பழக் கிச்சிடியைப் போட்டார் சர்வர், நல்லெண்ணத்துடந்தான்). எனக்கும் கொஞ்சம் ஏமாற்றம்தான். மதிய உணவுக்குச் சென்றேன். ருசி மாறுபாடு இருந்தது. தண்ணீர் காரணம்தான் சார்… சீக்கிரம் சரியாயிடும்… அது சரியாகவே இல்லை. அப்புறம் சென்னை வந்தபோது ஒரு தீபாவளி அன்று (அப்போதான் நாங்க என் அம்மாவைப் பார்க்கச் சென்றோம். வழியில் சரவணபவனில் சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம் என்று நினைத்தோம். ) உஸ்மான் ரோடு சரவண பவனில் உணவு சாப்பிட்டுவிட்டு, ஓரிரண்டு தசாப்தத்தில் இந்த அளவுக்கு மோசமாகிவிட்டதா என்று நினைத்தேன். ஒரு தடவை அடையாறில் உள்ள பிராஞ்சில் சாப்பிட்டேன். சரி. இனி சரவண பவன் ஆசைக்கு முழு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியதுதான் என்று முடிவு செய்துவிட்டேன்.
மெக்சிகோவினர் பெரும் பணக்காரர்கள் கிடையாது. பலரும் சாதாரண நிலையில் இருப்பவர்களே. அதிலும் பெண்கள் ரிசார்ட், ரெஸ்டாரண்ட், கலைப்பொருட்கள் விற்கும் இடம், சுற்றுலாப் பயணிகள் வரும் இடம் என்று பலவற்றிலும் வேலை செய்கிறார்கள். இந்தப் பயணத்தின் அவர்கள் மீதான நல்லெண்ணம்தான் எனக்கு வந்தது.
ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள நல்ல மனம்/குணம் பழகப் பழகத்தான் தெரிகிறது.
தொடர்ந்த ஜிம், நடைப்பயிற்சி போன்றவற்றால் எடையைக் குறைக்க முடிந்தாலும் தொடர்ந்து உணவில் கவனம் வைக்காவிட்டால் மீண்டும் எடை ஏறிவிடுகிறது. இப்போதெல்லாம் எனக்கு எடையைப் பற்றி ரொம்பவே கவலை. என் பையனோ don’t be obsessed with your weight, பிற்காலத்துல பலவற்றைச் சாப்பிடவே முடியாது, அதனால் இப்போதே சாப்பிடாமல் இருக்காதீங்க என்கிறான்.
இடையில் தர்ப்பண நாளும் வந்தது. அதற்கான ஆயத்தங்களுடன் சென்றிருந்தேன். பாருங்க மெக்சிகோவில் சென்று தர்ப்பணக் கடமையை நிறைவேற்றணும் என்று இருந்திருக்கிறது.
இன்னொரு ரெஸ்டாரண்டில் உணவு
கடலுக்கும் ரிசார்ட்டுக்கும் இடையில் மிகக் குறைவான தூரமே இருக்கிறது என்பது தெரிகிறதா?
கடற்கரைப் பகுதி Waste landஆக இருந்ததை, சுற்றுலாத் தளங்களாக மாற்ற அரசே நிறைய ரிசார்ட்டுகள் உருவாக வழிவகை செய்திருக்கிறது (1970ல்). இதனால் சில ஆயிர மக்களே இருந்த இடத்தில் இப்போது ஆண்டுக்கு 1 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
Water Sportsம் இருந்திருக்கும். அதையெல்லாம் கவனிக்க நேரமில்லை.
கடல் நீர் பொங்கினால் அந்தப் பகுதியிலும் கடல் நீர் புகும் (பொதுவாக அங்கெல்லாம் கடல் நீர் போகும் என்றே நினைக்கிறேன்)
கடற்கரை மணலில் வாலிபால் விளையாடிக்கொண்டிருந்தார்கள் (பெண்கள், உங்களுக்கே தெரிந்திருக்கும் பிகினியில்). என்னையும் விளையாட்டில் கலந்துகொள்ளச் சொன்னார்கள். நானும் வாலிபால் விளையாடுவேன். ஆனாலும் தயக்கம். அவர்களைப் புகைப்படம் எடுக்கவும் தயங்கிவிட்டேன். கேட்டிருந்தால் சரி என்று சொல்லியிருப்பார்கள்.அலையே போய்வரவா? அழகே போய்வரவா… என்றெல்லாம் எழுத எனக்கு யாரேனும் பணம் கொடுத்தால்தான் கற்பனை சுரக்க ஆரம்பிக்கும்.
ரிசார்ட்டில் பூக்களையே காணோமே என்பவர்களுக்காக. நிறைய பூக்கள் இருந்தன (கீதா ரங்கன் இவற்றை இட்லிப் பூக்கள் என்பார்… உணவே அவர் நினைவில் இருப்பதாலா இல்லை இதுதான் அவற்றின் பெயரா?)
இது மெக்சிகோ ஏர்போர்ட் லாஞ்சில் காத்திருந்தபோது.
மெக்சிகோ கான்கன் விமான நிலையத்திலிருந்து லண்டன் கேட்விக் விமான நிலையம், பிறகு அங்கிருந்து பேருந்தில் ஹீத்ரூ விமான நிலையம். அங்கிருந்து நான் வசித்துவந்த தேசம்.
இனி செக்கின் பண்ணவேண்டியதுதான் பாக்கி.
இதெல்லாம் அப்போது எனக்கு பிரமிப்பாக இருந்தது. தற்போது எல்லா இடங்களிலும் வந்துவிட்டது. ஆனாலும் சில எஸ்கலேட்டர்கள் மிக மிக உயரமானவை, நீளமானவையும்கூட. இதை வெளிநாடுகளில்தான் நான் பார்த்திருக்கிறேன்.
லண்டன் ஹீத்ரூவிலிருந்து கிளம்பப் போகிறேன். இங்கு ஒரு விஷயம் எழுதலாம் என்று நினைக்கிறேன். முதன் முதலில் (2002) பிரிட்டனுக்குப் பிரயாணப்பட்டு, அந்த மண்ணில் காலடி வைத்தபோது ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. நம்மை ஆண்டவர்களின் தேசத்துக்குச் செல்லும்படியான வாய்ப்பு கிடைத்திருக்கிறதே என்று.
நான் வசித்துவந்த தேசத்துக்கு வியாழன் இரவு வந்துசேர்ந்தேன். மறுநாள் விடுமுறை தினம்… ஆனாலும் பசங்க பள்ளிக்கூடத்திற்குச் சென்று, அவங்க கலந்துகொண்டிருந்த எக்ஸிபிஷன் பார்க்கச் சென்றிருந்தோம். ஒவ்வொரு மாணவரின் திறமை வியக்கச் செய்தது. இந்தத் தொடரை நிறைவு செய்ய அதிலிருந்து இரண்டு படங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.
பள்ளிக்கூட மாணவர்களின் கைத்திறன் அருமை என்றாலும், உணவுப் பொருளை அதற்குரிய விதத்தில் பயன்படுத்தாமல், இந்த மாதிரி டிசைன் போடுகிறேன் என்று வீணாக்குவதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
வேலைப்பளு நிறைய இருந்ததாலும் என்னுடைய இயற்கையான சுபாவத்தினாலும் ரிசார்ட்டின் பல்வேறு சௌகரியங்கள் பக்கம் என்னால் செல்ல முடியவில்லை. கிடைத்த நேரத்தில் பார்த்தவையே இதுவரை எழுதியவை. எடுத்த படங்களில் பாதிக்கு மேல் இங்கு பகிர்ந்துகொண்டுள்ளேன். உங்களுக்கு அவை பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த எனது மெக்சிகோ பயணத் தொடர் ஒரு வழியாக நிறைவடைந்தது. இந்தத் தொடரை நான் ஆரம்பிக்கக் காரணம், சோழ வரலாறு/தாராசுரம் சிற்பங்கள் என்று தொடர்ந்து படிக்க ரொம்பவே போரடித்துவிடக் கூடாது என்பதற்காக. அதிலும் கௌதமன் சார் சொல்லியிருந்த பாண்டிச்சேரி ரிசார்ட் எனக்கு நான் மெக்சிகோவில் தங்கியிருந்த ரிசார்டை நினைவுபடுத்திவிட்டது. ஒரு வாரம் நான் மெக்சிகோவில் தங்கியிருந்த பயணத்தைப் பற்றி எழுதிய இந்தத் தொடரைத் தொடர்ந்து வந்தவர்களுக்கு நன்றி.
மீண்டும் ஒரு வெளிநாட்டுப் பயணப் பதிவோ இல்லை வெறும் படங்களுடனோ உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கணும்.
(ஆண்களுக்கு இறைவன் கொடுத்த வரம் அது. அப்போ பெண்களுக்கு? ஆறிச் சாப்பிட்டால்தான் நீ செய்த உணவின் குறைகள் தெரியும், கணவனுக்காக திருத்திக்கொள்ளலாம் என்று நினைத்திருப்பாரோ இறைவன்?...)//
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மனித சமூகம் நாம செய்துவிட்டு எதுக்கு இறைவன் மீது பழி போடறீங்க!!!!!!!!!!!!!!!!!இறைவனுக்கும் இதற்கும் எந்த நடப்பிற்கும் சம்பந்தம் இல்லை.
கீதா
வாங்க கீதா ரங்கன் க்கா. நான் இறைவனுக்கு உணவைப் படைப்பதற்கு முன்பு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பேன். மனைவி உட்பட பலர் இப்படிச் செய்வதில்லை. பிறகு உணவில் ஒருவேளை உப்பு போன்ற குறைகள் இருந்தால் சரி செய்வார்கள். எது சரியான செயல்?..
நீக்குவிளையாட்டுக்காக எழுதியிருந்தாலும், நான் கிச்சன் பொறுப்பை எடுத்துக்கொள்ளும்போதெல்லாம், அதாவது மற்றவர்களுக்கான உணவைத் தயார் செய்ய, அவர்களுக்குப் போடுவதில்தான் எனக்கு எண்ணம் இருக்குமே தவிர நான் சாப்பிடணும் என்று தோன்றாது. //
பதிலளிநீக்குஇது பாயின்ட்! அப்படி வாங்க நெல்லை. எனக்குமே அப்படித்தான்
கீதா
இதைதான் 'அரைச்சவளுக்கு அம்மி' என்று அடிக்கடி சொல்வார் என் அம்மா. அதற்கான உண்மையான அர்த்தம் வேறாயிருந்தாலும்.
நீக்குஎல்லோரும் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிட்டது போக அம்மாவுக்கு கொஞ்சம்தான் மீதி இருக்கும். நான் பார்த்து வருத்தப்பட்ட போது சொன்னார். விரும்பிச் சாப்பிட்டதைவிட என்ன சந்தோஷம் வேண்டும் அதைச் செய்பவர்களுக்கு... குறிப்பாக அம்மாக்களுக்கு!
மனைவியின் கிச்சன் வீட்டு வேலைகளில் உள்ள கஷ்டங்கள் எனக்குத் தெரியவே தெரியாது, நான் 2012ல் வீட்டை நிர்வகிக்க ஆரம்பித்ததிலிருந்து. என் பெரியம்மாவிற்கு அடுப்பிலிருந்து இறக்கிய சூட்டில் (அதை அவர் ஒட்டிக்க ஒட்டிக்க என்று குறிப்பிடுவார்) சாப்பிடணும் என்ற ஆசை கடைசிவரை அவருக்கு நிறைவேறவேயில்லை.
நீக்குவாங்க ஶ்ரீராம். எனக்குப் பிடிக்காதவைகள் இரண்டு. ஒன்று சமைத்தவருக்குத் தனக்குத் தேவையானதை எடுத்துவைத்துக்கொள்ளாமல் இருப்பது. இரண்டு, மிஞ்சினவற்றை காலி செய்யும் நோக்கில் அவர்கள் அடுத்த வேளை சாப்பிடுவது. மூன்றாவது, கணவன் முதலில் சாப்பிட்ட்டும் எனக் காத்திருப்பது. இவை மூன்றுக்குமே தடா என திருமணம் ஆனபிறகு மனைவியிடம் கண்டிப்பாகச் சொல்லியிருந்தேன். மிஞ்சினதைச் சாப்பிடுவதை நிறுத்த முடியலை. நான் பொதுவே நாலு மணி நேரம் ஆனால் சாப்பிடமாட்டேன்.
நீக்குஎன் அப்பா, உணவுப் பொருளை எப்போது வாங்கிவந்தாலும் (இனிப்பு காரம். இவை விசேஷ வீட்டிலிருந்து வந்தவையாகவும் இருக்கலாம்) ஐந்தாகப் பங்கிட்டு அவரவரிடம் கொடுத்துவிடுவார். அம்மா, பசங்களுக்குத் தன் பங்கிலிருந்து கொடுப்பதை அனுமதிக்க மாட்டார்.
நீக்குஅப்போது சரவணபவன் நன்றாக இருந்தது என்பது உண்மை எந்தக் கிளைக்குச் சென்றாலும் நன்றாக இருந்தது. எப்போதாவது வெளியில் சென்று சாப்பிட்டால் சரவண பவன் அப்ப. அதன் பின் சங்கீதா. அதுவுமே எப்போதாவதுதான். அங்குதான் கடுபு இட்லி இதெல்லாம் தெரிந்து கொண்டு வீட்டில் செய்யத் தொடங்கினேன்.
பதிலளிநீக்குகீதா
பிறகு வந்த சங்கீதாவும் நன்றாக இருந்தது. இது பற்றி விரைவில் எழுதப்பார்க்கிறேன், தி பகுதியில் ஶ்ரீராம் இடமளித்தால்.
நீக்குயாரும் எதுவும் அனுப்பாததால் தான் நான் அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அறிக!! யாராவது ஏதாவது அனுப்பினால், சந்தோஷமாக கைதட்டி விட்டு, விலகி வழி விடுவேன்.
நீக்குஒவ்வொருவருக்குள்ளும் உள்ள நல்ல மனம்/குணம் பழகப் பழகத்தான் தெரிகிறது.//
பதிலளிநீக்குபழகப் பழகத்தான் தெரியும். இரண்டாவது எவரையும் நாம் ஜட்ஜ்மென்ட் செய்யாவிட்டால் உறவும் நட்பும் பிரச்சனை இல்லாமல் போகும்.
படங்கள் எல்லாம் சூப்பர். கடலுக்கும் ரெசார்ட்டுக்கும் இடையில் இடைவெளி குறைவு என்பது தெரிகிறது. அழகா இருக்கு. சுனாமி எல்லாம் வராதோ?
கீதா
//எவரையும் நாம் ஜட்ஜ்மென்ட் செய்யாவிட்டால் // என் மகள் இதை என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பாள். Why should we judge others என்பது அவள் கருத்து.
நீக்குசுனாமி வந்தால்?....... ரிசார்ட்டின் அழகை வசதிகளை அனுபவித்த கையோடு சொர்க்கம்தான்.
கடற்கரை waste land இப்ப அங்கிருக்கும் சில மக்களுக்கும் வரும்படி கிடைக்குமே சுற்றுலாப் பயணிகளால்.
பதிலளிநீக்குபறவைப்பார்வையில் - இந்தப் படம் செம அழகு. அதுவும் கடல் அருகில் பார்த்துக் கொண்டே அப்பகுதியில் இருக்கலாம் போல இடையில் தடுப்பு எதுவுமே இல்லையே!
கடல் நீர் பொங்கினால் - கண்டிப்பாகப் புகும். இந்தப் படத்தில் இடப்பக்கம் ஒரு பறவை பறப்பதும் வந்திருக்கு அழகா இருக்கு. பறவைகள் பறப்பதை எடுக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா அதுக்குச் சரியான கேமரா வேண்டும் தூரத்தில் பறப்பதை எடுக்கணும்னா.
கீதா
பிறகு படித்த செய்திகள், அந்தப் பகுதியையே மாஃபியாக்கள்தாம் ஹோட்டல் ரிசார்ட் போன்றவைகளை நடத்தித் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்துவிட்டார்கள் என்று.
நீக்குபறவைகள் பறப்பதைச் சரியாக எடுக்க, பல படங்கள் எடுக்கவேண்டும். அவற்றில் ஓரிரண்டு சரியாக வந்திருக்கும்.
Stand at ease, attention அதாங்க நெல்லை நீங்க நிற்கும் படம் சூப்பர்.
பதிலளிநீக்குவாலிபால் விளையாடியிருக்கலாமே!
நான் எங்க ஸ்கூல் டீமில் இருந்தேன். என் விளையாட்டைப் பார்த்து எடுத்துக் கொண்டார் கேம்ஸ் டீச்சர். ஆனா போட்டிக்கெல்லாம் வீட்டில் விடவே இல்லை. கேம்ஸ் டீச்சர் எவ்வளவோ வற்புறுத்திக் கேட்டும்
அலையே போய்வரவா? அழகே போய்வரவா… என்றெல்லாம் எழுத எனக்கு யாரேனும் பணம் கொடுத்தால்தான் கற்பனை சுரக்க ஆரம்பிக்கும்.//
ஹாஹாஹா சிரித்துவிட்டேன் நெல்லை. அதுசரி! வைரமுத்துவுக்குப் போட்டியா இருந்திருப்பீங்க. அப்ப அந்தக் காலகட்டத்துல.
உங்க கருத்துக்கு அப்பாற்பட்டு இது - நம் திறமை பணம் கொடுத்தால்தான் வெளிவரும் என்றால் அது திறமையா? திறமை எப்போது வேண்டுமானாலும் அதற்கான நம் மூட் சரியாக இருந்தால் தானெ வரும் இல்லையா?
கீதா
வாலிபால் ஆடியதை அவர் படம் எடுக்கவில்லை என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? நாராயணா.. நாராயணா...
நீக்கு// அலையே போய்வரவா? அழகே போய்வரவா… என்றெல்லாம் எழுத எனக்கு யாரேனும் பணம் கொடுத்தால்தான் கற்பனை சுரக்க ஆரம்பிக்கும்.//
நீக்குசிறப்பாக எழுதியிருந்தால் ஒரு ரூபாய் பரிசளித்திருப்பேன்.
வாலிபால் விளையாடியிருக்கலாம். ஏனோ தோன்றவில்லை.
நீக்குதிறமை தானாகவே வரும். பணம் கொடுத்தால் வருவதற்கு அது குழாய்த் தண்ணீர் இல்லை என்பது உண்மைதான்.
சிலருக்குத் திறமை இருந்தும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இந்தப் பிறவியில் கொடுத்துவைக்கவில்லை என எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
வாலிபால் ஆடியதைப் படமெடுக்கவில்லை. ஆனால் சில பல சந்தர்ப்பங்களில் ஏடாகூடமான படங்களை எடுத்திருக்கிறேன். பகிராமலா இருக்கப் போகிறேன்? - அதற்கு சென்சார் அதிகாரி கேஜிஜி லீவு போடற சமயமாப் பார்த்து அனுப்பணும்.
நீக்கு//சிறப்பாக எழுதியிருந்தால் ஒரு ரூபாய்//- இது எனக்கு எட்டாம் வகுப்பு திருக்குறள் போட்டியை நினைவுபடுத்துகிறது. இரண்டாவதாக வந்த நான் அறுபது குறள்களும் முதலாவதாக வந்தவர் தொண்ணூறு குறள்களும் ஒப்பித்தோம். பிறகு ஹெட்மாஸ்டர் யாரேனும் நூறு குறள்களை ஒப்பித்திருந்தால் நூறு ரூபாய் பரிசளித்திருப்பேன் என்றார் (போட்டிக்கு முன்பாகச் சொல்லியிருந்திருக்க வேண்டாமோ? 1976)
நீக்குரிசார்ட்டில் பூக்களையே காணோமே என்பவர்களுக்காக. நிறைய பூக்கள் இருந்தன (கீதா ரங்கன் இவற்றை இட்லிப் பூக்கள் என்பார்… உணவே அவர் நினைவில் இருப்பதாலா இல்லை இதுதான் அவற்றின் பெயரா?)//
பதிலளிநீக்குநினைச்சேன் என்னடா நம்மளை இன்னும் வம்புக்கிழுக்கலையேன்னு.
தித்திப்பூ, இக்சோரா.....ஆனா வழக்கு மொழியில் இதை இட்லிபூன்னு சொல்வாங்க சில அடர்த்தியா வட்டமா புஸ்னு இருக்கறதுனால. பள்ளியில் அப்படி என் நட்புகள் சொல்லித்தான் தெரியும்!
பூச்செண்டுனு கூடச் சொல்லலாம் இல்லையா? முன்னொரு காலத்தில் ரிசெப்ஷனுக்குக் கையில் பூச்செண்டு கொடுத்து நிக்க வைப்பாங்களே. அதுக்கு கடைல போய் வாங்குவதற்குப் பதில் இதையே கொடுத்திடலாம் போல இருக்கும்!
கீதா
இந்த இட்லிப்பூக்களை நான் முதன் முதலாகப் பார்த்தது நான் 2ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது. அன்று சுதந்திரதினம். என் அப்பா ஹெட்மாஸ்டராக இருந்த பள்ளிக்கு (எங்கள் பள்ளியின் சுதந்திர தின விழா முடிந்து) சென்றிருந்தேன். சாக்லேட் வாங்கிக்கொண்டபின் அப்பாஅறைக்குப் பின்புறம் இருந்த தோட்டத்தில் நடந்தபோது இந்தப் பூக்களில் இருந்த தேனி முகத்தில் கொட்டிவிட்டது. அப்பா பிறகு மருந்துபோட்டுவிட்டார்.
நீக்குஇங்கிலாந்தின் வானம், மேலே பறக்கும் விமானம். - நல்ல ஷாட். சூப்பரா இருக்கு
பதிலளிநீக்குபசங்களின் வெஜிட்டபிள் ஷோ சூப்பர். வாவ் போட வைத்தன.
எங்க கல்லூரில இதுல நான் பங்கேற்றிருக்கிறேன். முதலில். முதலை வடிவம், தாமரை வடிவம், போட் என்று பல செய்திருக்கிறேன். ஆனால், அதை நான் போட்டி முடிந்ததும் குப்பையில் போடாமல் குடிசை வீட்டில் வசிப்பவருக்குக் கொடுத்துவிடுவேன். அதன் பின் இப்படி வீணாக்குவது சரியல்ல என்று - பொருளாதாரமாச்சே நான் படிச்சது - நாங்க போராட்டம் செய்து அப்போட்டியை நீக்கினோம்.
கீதா
பள்ளியில் பசங்களின் ஓவியங்கள் மற்றும் வெஜிடபிள் ஷோ மிகவும் நன்றாக இருந்தன.
நீக்குநீங்களும் செய்திருக்கிறீர்களா? பாராட்டுகள். எனக்கும் செய்ய ஆசை. ஆனால் எதுக்கு ஒரு பழத்தைக் கெடுப்பானேன் என்ற எண்ணம்தான் செய்யவிடாமல் தடுக்கிறது (காசு வேஸ்ட் ஆகிவிடுமே)
இந்த மாதிரி டிசைன் போடுகிறேன் என்று வீணாக்குவதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?//
பதிலளிநீக்குஉடனே சப்பிடுவது என்றால் ஓகே. அதுவும் வேறு கலரோ இல்லை கெமிக்கலோ கலக்காமல் இருக்க வேண்டும். ஆனால் சும்மா அழகுக்காக - இப்பலாம் கல்யாண மண்டபத்தில் காட்சிப் பொருளாக வைக்கிறாங்களே அதில் உடன்பாடு இல்லை. வன்மையாக எதிர்க்கிறேன்.
கீதா
உணவுப் பொருளை யார் வீணாக்கினாலும் வன்மையாக எதிர்க்கணும். அதிலும் பஃபே முறையில் காணாத்தைக் கண்ட பிச்சைக்கார்ர்கள் மாதிரி எல்லாத்தையும் அதிகமாக வாங்கிக்கொண்டு வீண்டிப்பவர்களுக்கு பல குழந்தைகள் பிறந்து கலியாணச் செலவு வைத்தால்தான் புத்தி வரும் என நினைத்துக்கொள்வேன்.
நீக்குஇப்போதெல்லாம் ஹோட்டலில் சுடச்சுட கிடைப்பதில்லை. ஏ டு பியில் கொழுக்கட்டை, இட்லி சமாச்சாரங்களை அவனில் வைத்து சூடாக்கி தருகிறார்கள். தோசை ஆர்டர் செய்தால் கூட அவர்கள் கொண்டு வந்து வைக்கும்போது சூடு இருப்பதில்லை. என்ன மாயமோ...
பதிலளிநீக்குமதிய சாப்பாட்டில் கூட சாதமே சூடாக இருப்பதில்லை. அதெல்லாம் சரவணபவனோடு போச்சு. சாதமே சூடாக இல்லாத போது சாம்பாரும் ரசமும் எப்படி சூடாக இருக்கும்!
ஹோட்டல்களின் தகிடுத்த்தங்களைக் கண்டிருக்கிறேன். காலை ஐந்து மணிக்கு டிபன் சாம்பார் தயாரித்துவிடுவார்கள். பிறகு 11 1/2 வரையில் அதே சாம்பார் தொடர்ந்து சூடாக்கிக்கொண்டிருப்பார்கள், சிலர் சுடுநீரில் சூடாக்குவார்கள்.
நீக்குசென்னை கே கே நகர் மற்றும் தி நகர் சரவணபவனில் வாரநாட்களில் சிலபேருக்கு, வார இறுதியில் நிறையபேர்களும் சாம்பார், ரசம், பொரியல் வாங்கிச் செல்ல பில் போட்டுக் கொண்டு வந்து பெரிய பாத்திரங்களுடன் வரிசையில் நின்று வாங்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். சாம்பார் அவ்வளவு சுவையாக இருக்கும் அப்போது. நான்கூட சரவணபவன் சாம்பார் என்றே பதிவிட்டிருந்தேன்.
பதிலளிநீக்குஅங்கு, விலைக்கு சாம்பார், ரசம், பொரியல் கொடுத்தார்களா? ஆச்சர்யம்தான். ஆனால் சரவணபவன் ருசி (90களில்) அடித்துக்கொள்ள முடியாது. நல்லா விளையாடும், அதிலும் நாலாம் இன்னிங்சில் சூப்பராக விளையாடும் கோஹ்லி, தொடர்ந்து சொதப்பும்போது வரும் கோபம் சரவணபவன் மீதும் வந்தது. அவர்களுக்கு கஸ்டமர்கள் பற்றி என்ன கவலை?
நீக்குஅங்கு தர்ப்பணம் செய்யும்போது சுய அறிமுகத்தை எபப்டி சொல்வீர்கள்?
பதிலளிநீக்குசுய அறிமுகம் மாறாது ஆனால் இட அறிமுகம் மாறும். ஜம்பு த்வீபே பாரத வருஷே பரத கண்டே போன்றவை இடத்துக்கு ஏற்றார்ப்போல் மாறும். கயா, பத்ரி போன்ற பல இடங்களுக்கும் இதில் மாறுதல் உண்டு.
நீக்குஅதை தான் கேட்டேன். என்ன சொல்வீர்கள், எப்படி மாற்றி சொல்வீர்கள் என்று எனக்கு வாட்ஸ் அப்பில் சொல்லலாம்!!
நீக்குபடங்கள் அழகு. குறிப்பாக பறவைப் பார்வை, மற்றும் `சிவந்த வானம், விமானம் படங்கள் நன்றாக உள்ளன.
பதிலளிநீக்குபறவைப் பார்வையெல்லாம் எப்படி படம் எடுத்தீர்கள்? drone எல்லாம் அப்போது கிடையாதே!.
மெக்ஸிகோவின் பிரத்தியேக அம்சங்கள் சிலவற்றை விரிவாக கூறியிருக்கலாம். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தனி சிறப்பு உண்டல்லவா?
தொடர் படங்களால் மிகவும் சிறப்பாக அமைந்தது. பாராட்டுக்கள்.
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார். மெக்சிகோவின் பிரத்யேக அம்சங்கள் எனக்குத் தெரிந்தால்தானே. விக்கியைப் பார்த்து எழுதுவதில் எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டுதான்.
நீக்குபாராட்டுக்கு நன்றி.