9.9.25

ஒரே ஒரு ஊரிலே - தொடர் கதை - ஸ்கை :: பகுதி 08: “ அழகர் “

 


முன்னறிவிப்பு : 

அப்பப்போ படிச்சுடுங்க. முடிந்தபிறகு மொத்தமாகப் படிச்சுக்கலாம் என்று நினைத்தால் ரொம்பக் கஷ்டப்படுவீங்க. 

முடிவு என்ன ஆகும் என்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளவர்களுக்கு கதையின் கடைசி வரி : " அவர்கள் இருவரும் அதற்குப் பின் சந்தோஷமாக நிம்மதியாக வாழத் தொடங்கினார்கள்" 

= = = = = = = = =

முந்தைய பகுதி சுட்டி <<<<<<<<

அழகர் அவ்வளவு அழகர் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மிகவும் சுமாரான உயரம், மிகவும் சுமாரான நிறம், எளிமையே வடிவாக உடை உடுத்தியிருப்பார்.  தோளில் ஒரு துண்டு எப்போதும் ஒழுங்காக மடித்துப் போட்டிருப்பார்.

உழைப்பால் உயர்ந்த குடும்பம் என்று சொல்வதானால் அழகர் குடும்பத்தைத்தான் சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் அழகருடைய தகப்பனார் நடராசு கிராமத்தில் உள்ளங்கை அளவு நிலத்தை வைத்துக்கொண்டு அதில் மன்றாடி உழைத்து வாய்க்கும் கைக்கும் எப்படியோ ஒப்பேற்றிக் கொண்டு வந்தார்.‌

ரங்கசாமி அவர்களது ஊர்ப் பணக்காரர்.  20, 30 ஆட்களை வேலைக்கு வைத்துக் கொண்டு, பொதுப்பணித்துறை, மின்சார இலாகா, நெடுஞ்சாலைத்துறை  இப்படியாக அரசு ஒப்பந்த வேலைகளை செய்து படிப்படியாக உயர்ந்து ஒரு உன்னத நிலைக்கு வந்திருந்தார்.

ஒரு நாள் ரங்கசாமியிடமிருந்து நடராசுவுக்கு அழைப்பு வந்தது.

இரண்டு மாற்று உடுப்புகளை மட்டும் எடுத்துக் கொண்டு ஒப்பந்தப் பணிகள் நடந்துகொண்டு இருக்கும் இடத்துக்குப் பயணமானார் நடராசு.

" ஏய் நடராசு ! நா சொல்றதை கவனமா கேட்டுக்க.‌ இங்கே மம்முட்டி செம்மட்டி பிடிச்சவன் எல்லாம் ஒரு நாளைக்கு 20, 25னு சம்பாதிக்கிறானுங்க. அவனுங்களுக்கு வேலை கொடுக்கறவன் எல்லாம் ஒரு நாளைக்கு 100 , 150 மிச்சம் பார்க்கிறான் . இப்படி குபேரப்பட்டணம் கொள்ளை போகும்போது நம்ம ஊருக்காரனும் பொழச்சிட்டுப்  போகட்டுமேன்னு  நெனச்சுத்தான் உன்னைக் கூப்பிட்டேன்.‌ இந்தா இந்த ஆயிரம் ரூபாய நா தர்ற கடனா வச்சுக்க. ஆறு மாசம் ஒரு வருஷத்துல திருப்புனா போதும்.

ஆத்து மண்ணு இங்க எதேஷ்டமா தேவைப்படுது. ஒரு லோடுக்கு எக்கசக்கமான காசு கொடுக்கறாங்க. விஷயம் வெளியே தெரிஞ்சு போட்டி வலுக்கறதுக்கு முன்னாடி புள்ளயாரக் கும்பிட்டு வேலய ஆரம்பி " என்று நல்வாக்கு சொன்னார் ரங்கசாமி.

அவர் எந்த சுப வேளையில் சொன்னாரோ தெரியவில்லை, ஆனால் நடராசுவுக்கு அன்று முதல் அதிர்ஷ்டத்திற்கு மேல் அதிர்ஷ்டமாக அடிக்க ஆரம்பித்தது.

 மணல் சப்ளையில்  தொடங்கியவர் , ஜல்லி சப்ளை, செங்கல் சப்ளை என்று  பொருள்களின் ஜாபிதாவை தேவைக்கேற்ப  பெரிது பண்ணிக் கொண்டே போனார் . அப்புறம் சின்ன சின்னதாக வேலைகள். பள்ளம் தோண்டுவது, பள்ளத்தில் கல் மணல் இட்டு ரொப்புவது, காட்டுச் செடிகளை அகற்றி நிலத்தை சீர் செய்வது இப்படியாக அவருடைய தொழில்,  வரலாறு காணாத வளர்ச்சி பெற்றது.

இடையில் அந்த அரசாங்க இலாக்காவிலேயே பாழ்பட்டுப் போய் ஓர் மூலையில் தூசியை ஏராளமாக  அப்பிக் கொண்டு கிடந்த ஒரு பழைய லாரி ஏலத்திற்கு வந்தது.‌ அதை வெறும் 1,500 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார் நடராசு. சொற்பமாக மேல் செலவு செய்து லாரியை ரிப்பேர் செய்து மணல் லோடு அடிக்கப் பயன்படுத்திக் கொண்டார்.

" கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் " என்பார்கள் அல்லவா ? அதிர்ஷ்ட தேவதையின் பரிபூரண கடாட்சம்  நடராசுவின் மேல் விழுந்தது. ஏணியில் இரண்டு இரண்டு படிகளாகத் தாவி மேலே மேலே போய்க் கொண்டே இருந்தார் அவர்.

அழகம்மையுடன் நடராசுவின் கல்யாணத்துக்கு ரங்கசாமியோடு இரண்டொரு இஞ்சினியர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.

" உனக்கு தொழில் தொடங்குற சமயத்துல ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்தேனே ஞாபகம் இருக்கா ?  அதைக் கழிச்சுக்கிட்டு உனக்கு மொய்ப் பணம் தரேன் வாங்கிக்கோ "  என்று சொல்லிச் சிரித்தவாறு ரங்கசாமி நடராசு கையில் 101 ரூபாய் ஒரு கவரில் வைத்து கொடுத்தார்.

மொய்க் கவரைப் பணிவாக வாங்கி அதை  அழகம்மை வசம் கொடுத்த பின் தம்பதி இருவரும் ரங்கசாமியின் காலில் விழுந்து, அவரிடமிருந்து வாழ்த்துப் பெற்றனர்.

" ஐயா இன்னிவரை நான் சம்பாதித்தது எல்லாம் நீங்கள் போட்ட தர்மம். உங்க காசு என்கிட்ட இருக்கிற வரைக்கும்தான் எனக்கு அதிர்ஷ்டம் என்று நான் நினைச்சதாலே நான் அந்த காசை உங்களுக்கு திருப்பவில்லை. உங்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய் அரைக்காசு மாத்திரம்னு எனக்கு தெரியாதா ? " நடராசுவுக்கு குரல் தழுதழுத்தது.

"சரி சரி ! இப்ப ஆயிரம் ரூபாய்க்கு மேல வட்டிக் காசும் சேர்த்து வாங்கிட்ட இல்ல ? சந்தோஷமா வாழ்க்கையைக் கொண்டாடு"  என்று சொல்லிச்  சிரித்தார் ரங்கசாமி.

அழகம்மை நடராசு தம்பதியருக்கு ஒரே மகன் அழகர்.  அழகர் கோயில் கள்ளழகர் அவர்கள் குலதெய்வம் என்பதால் அழகம்மையின் தகப்பனார் விரும்பியபடி மகனுக்கு அழகிரிசாமி என்று பெயர் வைத்தார்கள். பையன்  பள்ளிக்குப் போகும் போது அழகிரிசாமி என்ற பெயர் சுருங்கி அப்போதைய வாடிக்கை காரணமாக அழகர் என்று ஆயிற்று. 

பள்ளிக்கூடப் படிப்பு முடித்தபின் அழகர் சிவில் எஞ்சினீரிங் படித்து முடித்தார். அப்பா பார்த்து வந்த காண்டிராக்ட் வேலையில் அவரும் இறங்கினார். 

கள்ளழகர் அருள்தானோ என்னவோ தொழில் மேலும் மேலும் செழித்து ஊர்ப் பெரிய புள்ளிகளில் ஒருவரானார் காண்ட்ராக்டர் அழகர்.

அழகரிடம் இரண்டு வண்டிகள் ஒன்று ஜீப் மற்றொன்று அம்பாஸிடர் கார். இது போக 3 சின்ன லாரி, 2 பெரிய லாரி.

"ஐயா"வின் ஜீப்பு அனேகமாக இலவச ட்ரிப்புகளுக்காக மட்டுமே பயன் பட்டு வந்தது.‌ இன்ஜினியர் வீட்டில் பெண்மணிகள் சினிமா பார்க்க  வேண்டுமானால் ஜீப் பக்கத்து ஊருக்கு போய்விட்டு வரும். ஆபீஸ் கிளார்க்கு யாருக்காவது ஊருக்குப் போக வேண்டிய அவசரம் வந்தால் அவர்களை ஊரில் கொண்டு விட்டுவிட்டு வரும். மாசத்துக்கு இவ்வளவு லிட்டர் பெட்ரோல் என்று அவர் நிர்ணயம் செய்து வைத்திருந்தார்.

அதற்குள் யார் கூப்பிட்டாலும் அவருக்கு சேவகம் செய்ய ஜீப் ரெடி. கிளார்க் வீராசாமியின் தகப்பனார் புதுக்கோட்டையில் காலமானபோது ஒரு துணையோடு அவரை புதுக்கோட்டை அழைத்துச் சென்று விட்டு விட்டு வந்தார்கள் அழகர் காண்ட்ராக்டரின் ஆட்கள்.

= = = =

அழகரின் ஒரே செல்வ மகள் சாந்தி.

சாந்தி ஆர்க்கிடெக்சர் படிப்பு படித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார் அழகர். ஆனால் சாந்தி பள்ளிப் படிப்பிற்குப் பின் ஃபேஷன் டெக்னாலஜி படிக்க ஆசைப்பட்டு அதைத்தான்  படித்தாள். 

ஃபேஷன் டெக்னாலஜி படித்ததால் ப்ராஜக்ட் வொர்க் செய்யும்போது செல்வமீனா கடைக்கு தன் தோழிகளுடன் சென்று வித விதமான துணிகள் வாங்கி நாகரீக உடைகள் வடிவமைத்து அவற்றை ஆட்கள் மூலம் தைக்கப் பழகிக் கொண்டாள்.

அப்போதுதான்ஜ் அங்கு ராஜாவைப் பார்த்தாள்.  காதலில் விழுந்தாள்.

= = = = = =

அப்பா அழகர் பற்றி சாந்தி, பேச்சுவாக்கில் ராஜாவிடம் ஒருநாள் சொன்னாள்:


"எங்க அப்பாவுக்கு ரொம்ப இளகின மனசு. எப்படித்தான் காண்ட்ராக்ட் வேலை செய்து பிழைக்கிறாரோ என்று நானே ஆச்சரியப்பட்டுப் போவேன் . ஏனென்றால் கதை சினிமாக்களில் வரும் காண்ட்ராக்டர்கள் கொடுமையான மனிதர்கள். லாப நோக்கத்திற்காக கொலை கூட செய்வார்கள் .

எனக்குக் கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு அப்பா காண்டிராக்டர் என்று சொல்லிக் கொள்ளவே கொஞ்சம் கூச்சமாக இருந்தது. அது ஏதோ செய்யக்கூடாத தொழில் என்று நினைத்ததற்குக் காரணம், சுற்றி இருந்தவர்கள் காண்ட்ராக்டர்களைப் பற்றி சொன்ன கதைகள்தான்.

ஆனா காண்ட்ராக்டர்களை பத்தி ஒரு நெகட்டிவ் அபிப்பிராயம் இருப்பதற்குக் காரணம் பெரும்பாலான காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்களுக்கு சரியான கூலி கொடுக்க மாட்டார்கள். வயிற்றில் அடித்து வேலையை வாங்குவார்கள். அதே சமயம் அதிகாரிகளுக்கு லஞ்சமாக பணம், பரிசு கொடுக்கத் தயங்க மாட்டார்கள். அப்பா ஒரு தனி ரகம். நியாயமான வேலை, நியாயமான வரும்படி, நியாயமான கூலி இதில் அநியாயமான நம்பிக்கை வைப்பவர். அவர்கிட்ட வேலை செய்றவங்க எல்லாரும் அவருக்காக விழுந்து விழுந்து வேலை செய்வாங்க. முதலாளி முதலாளி என்று சொல்லி அப்படியே உருகிப் போவாங்க நான் போனா கூட என்னை ஏதோ கடவுளை மாதிரி பார்ப்பாங்க. அவங்கள எப்படி சமாளிக்கிறது என்பதே எனக்கு பெரிய பிரச்சனயாக இருக்கும் அவங்களுக்கு மதிப்பு கொடுத்து, மரியாதை கொடுத்து, இன்முகத்தோடு பேசினால் அவர்கள் வெட்கப்பட்டு கொண்டு விலகி ஓடி விடுவார்கள்!”

= = = = = = =

சாந்தி சொன்னதைக் கேட்ட ராஜாவுக்கு சிரிப்பு வந்தது.

“ நம்ம கல்யாணத்துக்கு அப்புறமா நீ ரெண்டு ராஜ்யத்துக்கு இளவரசி ஆயிடுவே! நான் பெயரளவில் மட்டுமே ராஜாவாக இருப்பேன். “

“ பரவாயில்லை ராஜா – நான் உன்னை என்னுடைய சேவகனாக நியமித்துககொள்கிறேன்”

“ என்னா ஒரு வில்லத்தனம் !”

“ சேவகா – உன்னுடைய பெற்றோர்களை சீக்கிரமாக பெண் பார்க்க வரச் சொல். “

“ அப்படியே செய்கிறேன் இளவரசியாரே! ஆனால் அவர்கள் பெண் பார்க்க வரும்போது, நீங்க இப்படி அதிகாரம் செய்தால், அவர்கள் நம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கமாட்டார்கள்”

“ அதை நான் பார்த்துக்கொள்கிறேன் சேவகா – நீ போய் நான் சொன்னதை செய்! “

“ உத்தரவு இளவரசி!”

= = = = = = = = =

 (தொடரும்) 

14 கருத்துகள்:

  1. சாந்தியின் பின்னணி இன்று.

    இன்றைய நடை கொஞ்சம் வித்தியாசமாக இருப்பது போல் எனக்குப்படுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. சாந்தி சொன்னதைக் கேட்ட ராஜாவுக்கு சிரிப்பு வந்தது.//

    இப்பகுதி நடை மாறுகிறது!!!!!!!

    இரு பகுதிகளின் எழுத்தாளர்கள் யார் என்று யூகிக்க முடிந்தாலும் நான் சொல்லமாட்டேனே!!!! வானமே!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. கதை கொஞ்சம் தொகுத்துச் சொல்வது போல் தோன்றியது. இன்னும் சம்பவங்கள், உரையாடல்கள் சேர்க்கப்பட்டால் பரிமளிக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்கனவே படிக்க ஆள் இல்லை.... இதுல...!

      நீக்கு
    2. அப்படி நினைக்காதீங்க கௌ அண்ணா. இது ஒரு பரீட்சை, முன்னோட்டம் என்று வைத்துக் கொண்டு, நீங்க...ஸாரி, ஸ்கை ஒரு வேளை இதை இணையத்தில் அமேசானில் புத்தகமாகக் கொண்டு வருவதாக இருந்தால் மாற்றங்கள் செய்யலாமே!

      ஏனென்றால் தொடர்கதை வாசித்த காலம் மாறிப் போச்சு. இப்பலாம் ஒட்டு மொத்துக்கா கொடுத்தாதான் வாசிப்பாங்க போல!!

      நீங்க ஸாரி திரும்பத் திரும்ப நீங்கன்னே வருது.....ஸ்கை அப்படி முயற்சி செய்யலாமேன்னுதான்.

      எதிர்மறையையும் நேர்மறையாக மாற்ற ஒரு முயற்சி!

      கீதா

      நீக்கு
    3. தலைப்பையும் மாற்றி கவர்ச்சிகரமாக வைத்துவிட்டால் ....

      கீதா

      நீக்கு
    4. ஏற்கனவே படிக்க ஆள் இல்லை.... இதுல...!//

      நீங்க வேறா...அண்ணா, சிறு கதைகளைக் கூட பார்த்தீங்கனா, தரமாக வருவதைப் பாராட்டுபவர்கள் இல்லை. இன்னமும் பழைய எழுத்தாளர்கள் கதைகளைத்தான் பல இடங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் அடுத்த கட்ட நவீன எழுத்தாளர்களையும் சொல்லி ஊக்குவிக்கலாமே!

      பார்த்தீங்கனா, போன சனிக்கிழமை நான் படிச்ச கதை பற்றி பானுக்கா இன்று பேசும் போது சொன்னாங்க, படு கண்றாவியான கதை. ஆனா அவங்க எழுத்து பல பத்திரிகைகள் அதுவும் புகழ்பெற்ற பத்திரிகைகளில் வந்துள்ளன, இதே இது நானோ நீங்களோ அனுப்பினால் கண்டிப்பாக வராது அதனால் நான் எந்த இதழுக்கும் அனுப்புவதைத் தவிர்க்கிறேன் என்று.

      நான் சொன்னேன், அதை அந்த சனிக்கிழமை நானும் வெளிப்படுத்தியிருந்தேன் பானுக்க்கா, அக்கதையை விட எபியில் வரும் கதைகள் நிச்சயமாகத் தரமானவை என்று, அவங்ககிட்ட சொன்னேன்.

      ஸ்கையின் இக்கதை உட்பட. ஆனால் கொஞ்சம் தட்டிக் கொட்டினால் பரிமளிக்கும், கௌ அண்ணா.

      கீதா

      நீக்கு
    5. ஏன் அடுத்த கட்ட நவீன எழுத்தாளர்களையும் சொல்லி ஊக்குவிக்கலாமே!//

      இதிலும் கூட இங்கு, நம்ம ஜெ கே அண்ணா, பல எழுத்தாளர்களை, இதுவரை அறிந்திராத எழுத்தாளர்களை அறிமுகப்படுத்திச் சொல்வது மிகவும் சிறப்பு. அண்ணாவை அதற்கே பாராட்ட வேண்டும்.

      கீதா

      நீக்கு
  4. படத்துல இன்று ராஜா நல்லகாலம் அப்படியே வந்திருக்கு. சாந்தி முகத்தை தான் இந்த ஏஐ மாற்றிவிடுகிறது போலும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படித்தான் செய்கிறது இந்த செநு!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!