செவ்வாய், 18 அக்டோபர், 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: தானம்


 
     எங்களின் இந்த வார கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதியில் அன்பு நண்பர் வெங்கட் நாகராஜின் கதை இடம் பெறுகிறது.

     அவரின் தளம் சந்தித்ததும் சிந்தித்ததும்.

     பயணப்பிரியர்.  அருமையான புகைப்படக் கலைஞர்.  சுவையான சுற்றுலாப் பதிவுகளை அழகான புகைப்படங்களுடன் தருபவர்.  இவருடைய வாராந்திர பதிவு ஃப்ரூட் ஸாலட் ஒரு சுவாரஸ்யமான பல்சுவைப் பதிவு.  இவருடைய துணைவியாரின் கதை சில நாட்களுக்கு முன்னால் இடம்பெற்று வரவேற்பைப் பெற்றது வாசகர்களுக்கு நினைவிருக்கும்.  இவர்களுடைய மகள் ரோஷிணி கூட ஒரு பிளாக்கர்.  அவர் அருமையாய் - மிக அருமையாய் - ஓவியங்கள் வரைவார்.

     கதை பற்றி வெங்கட்டின் முன்னுரையைத் தொடர்ந்து அவர் படைப்பு...==================================================================அன்பின் ஸ்ரீராம், 

வணக்கம்.  

என்னுடைய ஒரு பதிவும் உங்கள் பக்கத்தில் வெளியிட நினைத்திருக்கும் உங்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி!  

பொதுவாகவே எனக்குக் கவிதைகள், கதைகள் பிடித்திருந்தாலும், அதை எழுதும் அளவிற்கு தைரியம் இல்லை! :)

சில மாதங்களுக்கு முன்னர் தானம் என்ற பெயரில், “கதையல்ல நிஜம்” என்று எனது வலைப்பூவில் எழுதி இருந்தேன்.  அதையே இப்போது சில மாற்றங்களோடு உங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.  

நெய்வேலியில் இருந்தபோது ஒரு வீட்டில் பார்த்த காட்சிகள் தான் இந்த கதை பிறக்கக் காரணம்.  அம்மா உயிருடன் இருக்கும்போது பார்த்துக் கொள்ள ஆள் வைத்து, இறந்த பிறகு பலருக்கு தானங்கள் கொடுத்தார் ஒருவர். அது நடந்தது பல வருடங்களுக்கு முன்னர் என்றாலும் நினைவிலிருந்து நீங்காத நிகழ்வு அது. அதுவே தான் இங்கே கதையாக.....

நட்புடன்

வெங்கட்.


=====================================================================தானம்....
 
வெங்கட் நாகராஜ்

வீட்டின் வெளியே பெரிய பந்தல் போட்டு சில நாற்காலிகளும் போட்டு இருந்தனர். ஊரில் உள்ள

பலர் வருவதும் போவதுமாக இருந்தனர். தனது அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய

வந்தவர்களுக்கெல்லாம் தான-தர்மங்களை செய்து கொண்டு இருந்தார் வேணு.

சிலருக்கு கன்றுடன் பசுமாடு, சிலருக்கு ஒரு காணி நிலம், சிலருக்கு பாத்திரங்கள், வேறு சிலருக்கு

துணிமணிகள் என பலவிதமான தானங்கள் வழங்கிக் கொண்டு இருந்தார். தானம் பெற்ற பலரும்

வேணுவை வாழ்த்தி அவரின் அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும் என வாழ்த்திச்

சென்றார்கள். ஆனாலும் அவருக்குத் தனது தாயார் இறக்கும் முன் சொன்ன வார்த்தைகள்

மனதைத் தைத்துக்கொண்டே இருந்தது.

அசைவில்லாமல் படுத்துக் கிடந்தார் கிருஷ்ணவேணி அம்மாள். ஒரு மாதத்திற்கும் மேலாகவே

படுத்த படுக்கையிலேயே மல-ஜல உபாதைகள் எல்லாம். கடைசி இரண்டு நாட்களாக பேச்சு

இல்லை, உடம்பில் அசைவும் இல்லை. உயிர் மட்டும் ஊசலாடிக்கொண்டு இருந்தது.

மற்றவர்கள் பேசிக் கொண்டிருப்பது மட்டும் கேட்கத் தான் செய்தது.

பத்துமாதம் கஷ்டப்பட்டு சுமந்த மகன் வேணு தன் மனைவியுடன் பேசிக்கொண்டு இருந்தது

காதில் விழுந்தது. “எத்தனை நாளுக்குத்தான் இப்படி இழுத்துக்கொண்டு இருக்கப்போகுதோ

தெரியல? வேலைக்குப் போக முடியல, நிறைய செலவு, எப்பதான் முடியுமோ தெரியல”.

”இவங்க போன பிறகு வேறு நிறைய செலவு இருக்கு. காரியமெல்லாம் தடபுடலா செய்யணும்.

கோதானம், பூதானம் இப்படின்னு நிறைய தானமெல்லாம் பண்ணனும். என்ன பண்றதுன்னு

தெரியல. ஏதோ ஒரு முடிவு தெரிஞ்சா எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்யலாம்!” என்று

சொல்லிக்கொண்டு இருப்பது கிருஷ்ணவேணி அம்மாளின் காதில் விழுந்து

தொல்லைப்படுத்தியது.

கிருஷ்ணவேணி அம்மாளுக்கு தான் தன் மகன் வேணுவுக்காக பட்ட கஷ்டங்கள் மனதில் வந்து

போயிற்று. கணவன் இறந்த பிறகு தனியொருத்தியாய் அவனை வளர்த்து ஆளாக்கி பெரிய

பொறுப்பில் வேலையில் அமரும் வரை, தான் இழந்தது எத்தனை எத்தனை.

வேணு குழந்தையாக இருந்தபோது செய்த அத்தனை அசிங்கங்களையும் சகித்துக்கொண்டு சுத்தம்

செய்ததற்கு, இப்போது அவன் தனது மூக்கைப் பிடித்துக்கொண்டு என் அசிங்கங்களை சுத்தம்

செய்ய வேலையாளை அனுப்புகிறான். இதையெல்லாம் பார்த்து மௌனமாக கண்ணீர்

விடுவதைத் தவிர வேறொன்றும் சொல்ல முடியவில்லை கிருஷ்ணவேணி அம்மாளுக்கு....

இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த கஷ்டங்களோ? ஆண்டவன் நமக்கு ஒரு வழி சொல்ல

மாட்டானா? என்று நினைத்துக் கொள்ள கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்து

கொண்டிருந்தது.

ஆண்டவனும் செவி சாய்த்து விட்டான் போலும்.... இறப்பதற்கு முன்னர் ”வேணு, நான் செத்த

பிறகு நீ எத்தனை தானம் கொடுத்தால் தான் என்ன? அவை என்னுடைய தியாகங்களுக்கு

ஈடாகுமா” என்று கடைசியாக சொல்லிவிட்டு தான் தலைசாய்த்தாள்.

கன்றுடன் பசுமாடு தானம் பெற்ற ஒரு முதியவர் “இந்த தானங்களை விட நீ உனது தாயார்

முடியாமல் இருந்தபோது அவருக்குச் செய்த பணிவிடைகளே மிகப்பெரிய தானம்” என்று சொல்ல,

அவரின் அம்மா இறப்பதற்கு முன்னர் சொன்ன வார்த்தைகள் மீண்டும் கேட்டது போல, துக்கம்

பீறிட்டு அழ ஆரம்பித்தான் வேணு.

40 கருத்துகள்:

 1. வேணும் ,வேணும் ..வேணுவுக்கு இன்னும் நல்லா வேணும் :)

  பதிலளிநீக்கு
 2. ஆஹா..... இன்றைக்கு என்னோட பகிர்வா? மிக்க நன்றி ஸ்ரீராம்...... இதைப் படிக்கப் போகும், படித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி.......

  பதிலளிநீக்கு
 3. நானும் இருக்கும்போது ஒருவர் விரும்பியதைச் செய்வதே சிறந்தது. நீத்தார் கடனெல்லாம் தேவை இல்லை என்று நினைப்பவன்

  பதிலளிநீக்கு
 4. பலர் தனது பெற்றோர் இறந்து போன உடன் செய்யும் தான தருமங்கள் பயத்தின் அடிப்படையில் இருக்கிறதே தவிர அவர்களிடம் கொண்ட அன்பின் பால் இருப்பது போல் இக்காலத்தில் தோன்றவில்லை.

  இன்னும் ஒன்று, ஈமக்கிரியைகளைத் தொடர்ந்து தானங்கள் செய்யாவிடின் என்ன ஆகிவிடுமோ என்ற பயம் இருக்க அவை செய்யவில்லை என்று உற்றாரும் சுற்றமும் நிந்திப்பர் என்ற பயமும் இருக்கிறது.

  இவை ஒருபுறமிருக்க, இந்த கர்மாக்கள் எல்லாமே வியர்த்தங்கள் தான், இருந்தாலும் என்ன செய்தாலும் என்னுடைய சேமிப்புகளில் ஒரு சதவிகிதம் கூட இல்லை. எதுக்கு நமக்கு தேவையில்லாத பொல்லாப்பு !! எத்தனையோ அர்த்தமற்ற செலவுகளில் இதுவும் ஒன்று , என்ற எண்ணமும் இருக்கிறது. சிரத்தை இல்லாத சிரார்த்தங்களில் தான தருமங்களில் பொருள் இல்லை.

  நிற்க. எனது அம்மா, தான் இறப்பதற்கு வெகு காலம் முன்பே எனக்கு சிரார்த்தங்கள் என்று செய்து கொண்டு இருக்கவேண்டாம். உங்களுக்கு அப்படி செய்து தான் தீரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், ஏழை களுக்கு அன்று உங்களால் இயன்ற அன்னதானம் செய்யுங்கள் என்று சொல்லி விட்டார்.


  நிற்க.

  ஒரு உயிர் உடலை விட்டுப் பிரியும்போது, அந்த உடலைக்கொண்ட நபருக்கு ஒரு மனம் ஒட்டிய வகையில் ஒரு பிரிவு உபசாரமாக அந்த உடலை நல்ல முறையில் எரித்தோ அல்லது புதைத்தோ அதன் பின், அந்த ஆத்மா சாந்தி அடைய இரு நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அது போதும். அந்த பிரிந்து போன ஆத்மாவைப் பிடித்துக்கொண்டு இருக்க வேண்டாம். அந்த ஆத்மாவுக்கு அடுத்து தான் எங்கு அடைய வேண்டும் என்ற செய்தி தெரியும்.
  இது எங்கள் சஹஜ மார்க்கத்தின் அறிவுரை.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  பதிலளிநீக்கு
 5. கதை சில செய்திகளைச் சொல்லுகிறது. ஆனாலும், வேணுவின் கஷ்டம் புரியத்தான் செய்கிறது. நிதர்சனம் வேறு. நியாயம் வேறு. சுப்புத் தாத்தா சொன்னதும் சிந்திக்க வைக்கிறது. ஆனால், ஒரு வட்டத்தைவிட்டு வெளியே வருவது சுலபமல்ல. புத்தகத்தை அல்லது காகிதத்தைத் தெரியாமல் மிதித்துவிட்டால்கூட மனம் திடுக்கென்றாகிவிடுகிறது.. தவறு செய்துவிட்டோம் என்று சொல்கிறது. We are tuned and it will be difficult to come out. பொதுவாகவே, தான் தன் பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் செய்யாதவற்றைத் தன் குழந்தைகளிடமிருந்தும் மற்றவரிடமிருந்தும் தனக்கு எதிர்பார்ப்பதற்குத் தகுதியில்லை. எதிர்பார்க்கவும் கூடாது.

  ஜி.எம்.பி. ஐயா சொல்லியதில், 'நீத்தார் கடன்' என்ற வார்த்தையே இது எத்தனை தொன்மையானது என்று சொல்லும். விலகி வருவது சுலபமா?

  பதிலளிநீக்கு
 6. கதை சிறப்பாக இருக்கிறது வெங்கட்! தான் செய்யத்தவறியதை நினைத்து காலம் கடந்த பின் குற்ற‌ உணர்ச்சியுடன் அழுவது இன்றைய காலத்தில் நிறைய வீடுகளில் நடக்கத்தான் செய்கிறது.

  பொறுமையும் சகிப்புத்தன்மையும் உள்ளார்ந்த அன்பும் இருந்தால் மட்டுமே நோயுற்று இருப்பவர் அருகில் இருந்து பணிவிடை செய்ய முடியும். அது வெகு சிலரால் மட்டுமே முடியும். இதை எழுதும்போது பதிவர் லக்ஷ்மி அம்மாவின் நினைவு வருகிறது. படுக்கையில் கோமாவில் கிடந்த தன் கணவருக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, பதினான்கு வருடங்கள் பக்கத்திலேயே இருந்து பார்த்துக்கொண்டார்!

  இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. என் சினேகிதி தன் தாயாருக்கு மல ஜலங்கள் சுத்தம் செய்து இறக்கும்வரை தன் வீட்டிலேயே வைத்து பார்த்துக்கொண்டாலும் அவரின் தாயாரோ தன்னைப்பார்க்க வராத தன் மகனை நினைத்துத்தான் அழுது கொண்டிருந்தார்!

  மனித மனங்கள் பல விதம்!

  பதிலளிநீக்கு
 7. சுப்புத்தாத்தாவின் கருத்துகள் எல்லாமே நான் எதிர்பார்க்காத உடன்பாடு.

  பதிலளிநீக்கு
 8. என்னவரின் கதையை இங்கு வெளியிட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 9. என்னவரின் கதையை இங்கு வெளியிட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 10. ஒரு தாயின் தியாகத்திற்கு இணையாக தான, தர்மம் செய்ய முடியுமா,என்ன....????

  பதிலளிநீக்கு
 11. ஒரு தாயின் தியாகத்திற்கு இணையாக தான, தர்மம் செய்ய முடியுமா,என்ன....????

  பதிலளிநீக்கு
 12. வெங்கட் நாகராஜ் அனைத்து வகையான பதிவுகளை எழுதுவதிலும் தேர்ந்தவர் என்பதை இக்கதை நிரூபித்துவிட்டது. அவருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வெங்கட் கதை அருமை. கதை படிக்கும் போது கஷ்டமாய் இருக்கிறது. வேலை ஆள் வைத்து பார்த்து கொண்டதோடு , அன்பாய் இரண்டு வார்த்தை படுத்துக்கொண்டு
  இருக்கும் அம்மா அருகில் அமர்ந்து அம்மா கையை ஆதுரத்துடன் பிடித்து பேசி இருந்தாலே போதும் , அதற்கு மேல் அந்த தாய் வேறு எதிர்பார்க்க மாட்டாள்.

  பதிலளிநீக்கு
 14. கணவனும் இல்லை. குழந்தையாய் பெற்ற பிள்ளை. அவனை வளர்த்து ஆளாக்கிய தாயாருக்கு அவள் மகன என்ன செய்தாலும் ஈடாகாது தான். வயசான அந்த ஜீவனிடம் ஆதுரமாய அன்பாய் குடும்பத்தினர் இருந்தால் போதும். அந்த எதிர்ப்பார்ப்பு பொய்த்துப் போனதை சொல்லும் கதை இது.

  மற்றபடி சிரார்த்தம், தானம் எல்லாம் சம்பந்தமில்லாத விஷயங்கள். அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிப்பானேன்?..

  பதிலளிநீக்கு
 15. பொதுவாக பிள்ளைகளின் கடமையை நாட்டுப்பெண்கள்தான் நிறைவேற்ற வேண்டி வருகிறது. வசதி இருந்து ஆள்போட்டுச் செய்தால் கூட பரவாயில்லை. எவ்வளவோமேல். தன்னிலை இழந்து ஏதும் செய்யமுடியாமல் இருப்பவர்களைச் சொல்லினால் துன்புறுத்தியே செய்பவர்களும் உண்டு. அவர்களுக்கு மற்றவர்கள் சொல்லும் உபதேசம், எதையும் காதில் போட்டுக் கொள்ளாதே, எங்கு சென்றாலும் நிலமை இதைவிட மோசமாக இருக்கிறது. காலம் இப்படி ஆகிவிட்டது என்பதுதான். அதனால் முதியவர்கள் நாளை நம் கதி என்னவோ என்ற பயத்துடன்தான் இருக்கிரார்கள். வசனம் உண்டு அம்மா உடம்பில் துணி கிழிசல் நாஸூக்காக எழுதுகிறேன். கும்பகோணத்தில் கோதானமாம். இந்தக்கதை நடந்து கொண்டுதான் இருக்கிறது. வயதானகாலத்தில் நீ,இவ்வளவுமாதம்,நான் இவ்வளவு மாதம் வைத்துக்கொள்வோம் என்ற ஏல வியாபாரமும் நடக்கிறது. கடைசியில் வேணு மனம் வருந்தி அழவாவது செய்தானே! மனைவியின் ஒத்துழைப்பு இருந்தால்தான், ஒரு பிள்ளை அவனது கடமையைச் செவ்வையாய்ச் செய்யமுடியும். இல்லாவிட்டால் கீரிப்பிள்ளை,அணிற்பிள்ளை,தான். நல்ல கவனிப்பான கதை. மறுத்தே சொல்ல முடியாது.
  அன்புடன்

  பதிலளிநீக்கு
 16. சிறிய கதைதான் அற்புதமான விடயத்தை தந்து மனதை கனக்க வைத்து விட்டது. உண்மை உயிருடன் இருக்கும் பொழுது பெற்றோருக்கு செய்யாதவர்கள் ஊர்ப் பெருமைக்காக, சாஸ்திரத்துக்காக செய்கின்றார்கள் இதில் எனக்கு உடன் பாடில்லை வாழ்த்துகள் வெங்கட் ஜி

  பதிலளிநீக்கு
 17. //பொதுவாக பிள்ளைகளின் கடமையை நாட்டுப்பெண்கள்தான் நிறைவேற்ற வேண்டி வருகிறது. வசதி இருந்து ஆள்போட்டுச் செய்தால் கூட பரவாயில்லை. எவ்வளவோமேல். தன்னிலை இழந்து ஏதும் செய்யமுடியாமல் இருப்பவர்களைச் சொல்லினால் துன்புறுத்தியே செய்பவர்களும் உண்டு//


  //கடைசியில் வேணு மனம் வருந்தி அழவாவது செய்தானே! மனைவியின் ஒத்துழைப்பு இருந்தால்தான், ஒரு பிள்ளை அவனது கடமையைச் செவ்வையாய்ச் செய்யமுடியும். இல்லாவிட்டால் கீரிப்பிள்ளை,அணிற்பிள்ளை,தான்.//

  காமாட்சி அம்மா.. நல்ல அனுபவ வரிகள். அட்சர லட்சம்.

  பதிலளிநீக்கு
 18. இருக்கும் பொழுது கவனிக்காமல்
  இறந்தபின் ஊருக்கு வாரி வழங்கி என்ன பயன்
  தம +1

  பதிலளிநீக்கு
 19. உயிருடன் இருக்கும்போது அம்மாவிடத்தில் கனிவான வார்த்தைகளைக் கூறாமல் போனபிறகு என்ன செய்து என்ன பலன்?
  வருத்தப்பட வைத்த கதை.
  திரு வெங்கட்டிற்கு பாராட்டுக்கள்!
  எல்லோருடைய திறமையையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் உங்களுக்கும் ஒரு சல்யூட்!

  பதிலளிநீக்கு
 20. இருப்பதன் மகிமை இழந்தபின்தான் தெரியும்.

  வெங்கட்ஜியின் புதிய அவதாரம். அவர்தம் பயணக்கட்டுரைகள் போலவே இனிதாக அமைய வாழ்த்துகிறேன்.

  பகிர்ந்த தங்களுக்கும் நன்றி.

  தம

  பதிலளிநீக்கு
 21. மிகப்பெரிய செய்தியை 'நறுக் ' என்று பொட்டில் அறைந்தார் போல் சொல்லிய திரு. வெங்கட்டிற்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி ஸ்ரீராம் சார்.

  பதிலளிநீக்கு
 22. பெரும் செய்தியை சிறுகதையில் சொல்லிவிட்டீர்கள் வெங்கட். வாழ்த்துக்கள்!
  கதையை வெளியிட்ட ஸ்ரீ ராமுக்கும் நன்றி!
  த ம 7

  பதிலளிநீக்கு
 23. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 24. அவரவர் வசதிப்படி, செளகர்யப்படி, மத நம்பிக்கைப்படி, மன சாட்சிப்படி யோசிக்க வைக்கும் ஒரு சிறு நிகழ்வு பற்றி ’கதை’ என்ற பெயரில் இங்கு சொல்லப்பட்டுள்ளது.

  இருப்பினும் பின்னூட்டங்கள் என்ற பெயரில் பலரும் நன்றாகவே இங்கு ’கதை’ விட்டுள்ளார்கள்.

  எந்த ஒரு ஜீவனும் எதற்கும் பிறரை நம்பி இழுத்துக்கொண்டு நாறக்கூடிய அவல நிலை ஏற்படாமல், மணக்க மணக்கச் சட்டுப்புட்டுன்னு போகும் பாக்யம் செய்திருக்க வேண்டும். இதை சொல்வது மிகவும் எளிது. ஆனால் அதுபோல எல்லோருக்கும் பாக்யம் கிடைத்து நடப்பது மிகவும் கஷ்டம்.

  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக, அவர்களின் சிறுவயதில் செய்யும் தியாகங்களும் கடமைகளும் முற்றிலும் வேறு.

  அதை பிரதிபலனாக பிள்ளைகளிடமிருந்து தங்களின் முதுமையில் எதிர்பார்ப்பது போன்றதொரு முட்டாள்தனம் இருக்கவே முடியாது.

  இன்றைய சூழ்நிலையில் யாருக்கும் எதற்கும் நேரமோ, பொறுமையோ, சகிப்புத்தன்மையோ, சேவை மனப்பான்மையோ, உண்மையான பாசமோ இருப்பது இல்லை. எல்லாமே வெளி வேஷம் மட்டுமே என்ற கசப்பான உண்மையை இங்கு ஆணித்தரமாக வலியுறுத்திச் சொல்லிக்கொள்கிறேன்.

  அழுகை உள்பட அனைத்துமே போலியானவைகள் மட்டுமே. ஆங்காங்கே அழவும் ஒப்பாரி வைக்கவும் கூட ஆள் போட்டு விடுகிறார்கள் என்பதையும் நம்மால் இன்று மிகச்சுலபமாகப் பார்க்க முடிகிறது.

  பலரிடம் இன்று செலவழிக்கப் பணம் மட்டும் உண்டு. எதற்கெடுத்தாலும் காண்ட்ராக்ட் போல ஆளை நியமித்து கவனித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள். பொருத்தமான தகுந்த ஆட்களும் அவ்வளவு எளிதில் கிடைப்பது இல்லை. அப்படியே ஆள் கிடைத்தாலும், பணத்துக்காகவும் கடன் எழவுக்காகவும் வேலை செய்பவராகவே பெரும்பாலும் அமைகிறார்கள். அவர்களிடம் உண்மையான அன்பையோ, அரவணைப்பையோ நாம் எதிர்பார்க்க முடியாது. ரத்த சம்பந்தமுள்ள நமக்கே இல்லாத அன்பும் அக்கறையும் கூலிக்கு மாரடிக்க வந்திருப்போரிடம் மட்டும் எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்?

  எனவே எதற்கும் பிறர் உதவியை எதிர்பார்த்து முடியாமல்
  படுத்துவிடும் நிலைக்கு வந்த ஒருவர் ...................

  அடுத்த மூன்று நிமிஷத்திலோ அல்லது

  அடுத்த மூன்று மணி நேரத்திற்குள்ளோ அல்லது

  அடுத்த மூன்று நாட்களுக்குள்ளோ அல்லது

  அடுத்த மூன்று வாரங்களுக்குள்ளோ அல்லது கடைசி பக்ஷமாக

  அடுத்த மூன்று மாதங்களுக்குள்ளோ

  டிக்கட் வாங்கிக்கொண்டு புறப்படும் பாக்யம் வாய்த்தவராக இருந்தால் மட்டுமே .....

  பி--ழை--த்--தா--ர். :)

  இல்லாதுபோனால்

  செ--த்--தா--ர். :)

  oooooooooooooooooooooooooo

  இன்றைய உலக யதார்த்தங்களை யோசிக்க வைக்கும் நிகழ்வினை எழுதியவருக்கும், வெளியிட்டுள்ளவரும் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 25. வயோதிகம் ஒரு சாபம்தான். நாலுங்கிடக்க நடுவில் போய்விடுகிரார்களே அவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள். வயோதிகத்திலும் வியாதிகள் இல்லாது இருப்பவர்களும் கொடுத்து வைத்தவர்கள். அனாயாஸேன மரணம் கிடைத்தால் அதைவிட பாக்கியம் கிடையாது. மற்றபடி நேரம்,காலம், பொழுது எல்லாம் பார்த்து எதுவும் வருவதில்லை. நீங்கள் எழுதியிருப்பதுபோல ஒவ்வொரு முதியவர்களும் நினைப்பார்கள். கிடைத்தால் பரலோக ஸாம்ராஜ்யம்தான். எல்லாம் எழுதுவதற்கு நன்றாக உள்ளது. அவரவர்கள் வினைப்பயன் அனுபவித்தே தீரவேண்டும். பெற்ற பிள்ளைகளோ, மற்றவர்களோ கருணையுடன் நடந்து கொள்ளுங்கள் முதியவர்களிடம் என்று வேண்டுமானால் கேட்டுக் கொள்ளலாம். நீயாரையா இதெல்லாம் சொல்வதற்கு என்று பதில் வரும். இது தொடர்கதைதானே தவிர பலவும் நல்லது,கெட்டது என எல்லா வகைகளையும் உள்ளடக்கியது.கொஞ்சம் வயதானவர்களை சிந்திக்க வைத்துவிட்ட உண்மைப் பதிவு இது. அன்புடன்

  பதிலளிநீக்கு
 26. 'மனைவியின் ஒத்துழைப்பு இருந்தால்தான், ஒரு பிள்ளை அவனது கடமையைச் செவ்வையாய்ச் செய்யமுடியும்.' என்று காமாட்சி அம்மா சொன்னதை எடுத்துச் சொன்னீர்கள், ஸ்ரீராம்!

  இது யதார்த்தமான உண்மை. சாமவேதத்தில் இந்த யதார்த்த உண்மைக்கும் ஒரு முடிச்சுப் போட்டு வைத்திருக்கிறது. மனைவி இருந்தால் தான் சாமவேதம் சார்ந்தோருக்கு தன் முன்னோர்களூக்கு
  சிரார்த்தம் செய்யும் யோக்கியதையே இருக்கிறது என்று அந்த வேத்ததில் வரையறுத்து வைத்திருக்கிறது.
  மருமகளுக்கு அவ்வளவு உரிமை. தாம்பாளத்தில் தணல் கொண்டு வந்து ஹோமத்தையே ஆரம்பித்து வைப்பவள் அவள் தான்.

  பதிலளிநீக்கு
 27. இந்தப் பதிவுக்கு என் கருத்தை இடுவதற்கு முன் ரொம்ப யோசித்தேன். மனம் புண்படும்படி எழுதிடுவோமோ என்ற பயம் தான். ஆனால் இப்போத் தான் ஶ்ரீராம் இங்கே வந்திருக்கும் கருத்துகளைப் படிக்கச் சொன்னார். பலரும் நான் நினைத்தாற்போலவே எழுதி இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே அறுபதைக் கடந்தவர்கள் என்பதும் புரிகிறது. இப்போது என் கருத்தைத் தாராளமாய்ச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 28. தவறாக நினைக்க வேண்டாம். ஒரு கட்டத்தில் பெற்றோரைப் பார்த்துக் கொள்ள ஆள் நியமிப்பது தவறில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. அந்த மகனோ, மகளோ குடும்பத்தில் அதிகம் வேலை செய்பவர்களாகவோ அல்லது அவர்களும் வயதானவர்களாகவோ அல்லது நோயாளிகளாகவோ இருக்கலாம் இல்லையா? ஒன்றுமே இல்லை என்றாலும் வேலை நிமித்தம், பணி நிமித்தம் வெளியே செல்ல நேரிடும். எப்போதும் வயதான தாய், தந்தையைக் கவனிப்பது என்பது இயலாது என்பதே யதார்த்தம்! குறைந்த பட்சமாக சாமான்கள் வாங்கவானும் வெளியே செல்ல வேண்டி இருக்கும். ஆகவே வீட்டோடு இருக்கும்படி நம்பிக்கையான ஆள் கிடைத்தால் போடுவதில் தவறில்லை என்பது என் கருத்து. வீட்டில் இருப்பவர்கள் அவங்க வீட்டு வேலையை முடிச்சுட்டு வந்து தான் வயதான பெற்றோரின் கழிவுகளை அகற்ற முடியும். அதே ஆளைப் போட்டு விட்டால் உடனடியாகச் சுத்தம் செய்வார்கள். பிரச்னைகளும் வராது இல்லையா! //

  இது தான் நான் ஶ்ரீராமுக்கு இந்தக் கதை குறித்து அனுப்பிய கருத்து! நீங்களே சொல்லுங்கனு ஶ்ரீராம் சொன்னதாலே இங்கே கொடுத்திருக்கேன். ஆனால் இதைச் சொல்லும் முன்னர் ரொம்பவே தயங்கினேன். :)

  பதிலளிநீக்கு
 29. அநாயாசமான மரணமே அனைவரும் எதிர்பார்ப்பது! ஆனால் அதுக்கும் அதிர்ஷ்டம் பண்ணி இருக்கணும். மற்றபடி சிராத்தம் செய்வதோ, தானங்கள் செய்வதோ அவரவர் மனோநிலையையும் குடும்ப நிலையையும் பொறுத்தது. இந்தக் கதையில் வரும் பிள்ளை/பெண் தாயிடம் பற்று இருந்ததால் தான் தாயின் நிலை அலங்கோலமாக இருக்க வேண்டாம் என்று ஆளைப் போட்டாவது கவனிக்கச் சொல்லி இருக்கார். என்ன ஒரு குறைனால் அம்மாவிடம் அருகே அமர்ந்து தினம் பத்து நிமிஷமாவது செலவிட்டிருக்கலாம். அதற்கு அவருக்கு நேரமில்லை போலும்! அல்லது மனசு வரலையோ! எதுவோ தெரியலை. ஆனாலும் பெற்ற தாய் கடைசியில் இப்படிச் சொல்லிட்டுச் செத்திருக்கவும் வேண்டாம். நம் பிள்ளைகளுக்கு நாம் செய்துவிட்டு அதைத் தியாகம் என்று சொல்வது சரியில்லை. பிள்ளை நன்றாக இருக்கணும்னு தானே பாடுபட்டுப் பிள்ளையை வளர்க்கிறோம். நாம் மட்டுமா? எல்லாப் பெற்றோரும் செய்வது தான் இது! பிள்ளை ஒண்ணும் தெருவிலே விட்டுடலையே! தன்னோடு வைத்துக் கொண்டு ஆளைப் போட்டுத் தானே பார்த்துக்கொள்ளச் செய்தார். அதுக்கும் பணம் செலவு செய்யணும் இல்லையா? அந்த மனசு பிள்ளைக்கு இருந்திருக்கு இல்லையா?

  பதிலளிநீக்கு
 30. ஆகவே தானங்கள் செய்வதோ, சிராத்தத்தை விமரிசையாகச் செய்வதோ அவரவர் வசதிப்படி. ஒண்ணுமே கொடுக்க முடியாதவங்க சிராத்தம் செய்யாமலே இருக்காங்களா என்ன? அதுக்குத் தகுந்தாற்போல் நம் சாஸ்திர சம்பிரதாயங்கள் வளைந்து கொடுக்கிறதே தவிர கட்டாயப்படுத்த வில்லை. செய்யாமலே இருப்பவர்களை வற்புறுத்திச் செய்ய வைப்பதும் இல்லை. அவரவர் மன விருப்பம், பண வசதி பொறுத்தே தானங்கள் கொடுப்பது எல்லாம் நடைபெறும். ஒரு சில இடங்களில் புரோகிதர்கள் கேட்பதாகச் சொல்கின்றனர். ஆனால் எனக்குத் தெரிந்து புரோகிதர்கள் வசதி இல்லாதவங்களுக்குக் குறைவான செலவிலேயே முடித்துத் தருவதையும் பார்த்திருக்கேன்.

  பதிலளிநீக்கு
 31. //மனைவி இருந்தால் தான் சாமவேதம் சார்ந்தோருக்கு தன் முன்னோர்களூக்கு
  சிரார்த்தம் செய்யும் யோக்கியதையே இருக்கிறது என்று அந்த வேத்ததில் வரையறுத்து வைத்திருக்கிறது.
  மருமகளுக்கு அவ்வளவு உரிமை. தாம்பாளத்தில் தணல் கொண்டு வந்து ஹோமத்தையே ஆரம்பித்து வைப்பவள் அவள் தான்.//

  எல்லா வேதங்களிலும் ஔபாசனம் சிராத்தம் செய்யும் குடும்பத் தலைவரின் மனைவியால் தான் ஆரம்பித்து வைக்கப்படும். அதைத் தொடர்ந்து சிராத்தம் ஆரம்பிக்கும் முன்னும் கணவன் மனைவியின் அனுமதி வாங்கித் தான் செய்ய ஆரம்பிப்பார். இது பொதுவானது. ஆனால் சாமவேதத்தில் மனைவி உயிருடன் இல்லை என்றாலோ, உடல்நலமின்றிப் படுத்த படுக்கையாக இருந்தாலோ, வீட்டுக்கு விலக்காக இருந்தாலோ, வெளிஊர் சென்றிருந்தாலோ கணவனுக்கு ஹோமம் வளர்த்து சிராத்தம் செய்யும் அருகதை கிடையாது. ஹோமம் இல்லாமல் வெறும் சிராத்தம் மட்டுமே நடக்கும். அதே போல் இரு பிராமணர்கள் பிதுர்க்களாகவும், ஒரு மஹாவிஷ்ணுவும் உண்டு. சமையலும் சிராத்த சமையல் தான் செய்யணும். ஆனால் ஹோமம் மட்டும் இருக்காது. இது நான் இல்லாத சமயங்களில் என் கணவர் செய்திருக்கார். என் கடைசி மைத்துனர் அவர் மனைவிக்கும், தந்தைக்கும் செய்து வரும் சிராத்தத்தில் ஹோமம் இல்லாமலேயே செய்து வருகிறார். இரணிய சிராத்தம் எனப்படும் சிராத்தத்தில் தான் யார் செய்தாலும் எந்த வேதக்காரர்களாக இருந்தாலும் ஹோமம் இல்லை. சிராத்த மந்திரங்களும் அதற்குத் தனியாக உண்டு.

  பதிலளிநீக்கு
 32. சாமவேதத்தில் மனைவி இல்லைனா கணவன் சிராத்தமே செய்யக் கூடாது என்றெல்லாம் சொல்லபப்டவில்லை! சிராத்தம் செய்! ஆனால் மனைவி இல்லாமல் ஹோமம் வளர்க்காதே! என்பது தான் சொல்லப்பட்டிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 33. எத்தனை நாளுக்குத்தான் இப்படி இழுத்துக்கொண்டு இருக்கப்போகுதோ

  தெரியல? வேலைக்குப் போக முடியல, நிறைய செலவு, எப்பதான் முடியுமோ தெரியல”. இப்படிப்பட்ட வார்த்தைகளை அம்மா காதுபட மகன் பேசுவது தான் தவறு. முதுமையில் படுக்கையில் விழுந்தால் நமக்குமே இதே கதிதான். திரு கோபு சார் சொல்லியிருப்பது போல பெற்றோர் நன்றிக்கடனைப் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் தான். பல வீடுகளில் இது தான் இன்றைய நிலைமை. யதார்த்தமான கதைக்குப் பாராட்டுக்கள் வெங்கட்!

  பதிலளிநீக்கு
 34. அம்மா செய்தவற்றிற்கு பிரதி பலன் எவராலும் செய்துவிடமுடியுமா? ஒரு விழுக்காடாவது...? சுத்தம் செய்யவாவது ஒரு ஆளை ஏற்பாடு செய்தவரையில்...சரிதான். ஒருவரின் மறைவிற்குப்பிறகு இதை செய்திருக்கலாமே ...விட்டுவிட்டோமே என்ற எண்ணம் மேலிடுவதும் இயல்புதான். பெத்த மனம் பித்து...பிள்ளை மனம் கல்லு...ஒத்துக்கொள்ளத்தானே வேண்டும்! சற்றே உணர்ச்சிகரமான பதிவுதான். நன்றி!!!

  பதிலளிநீக்கு
 35. அதே போல் சாம வேதத்தில் மூத்த பிள்ளைக்கு மனைவி இல்லை என்றாலோ அல்லது மனைவியால் சிராத்தத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனாலோ அடுத்த பிள்ளையின் மனைவி இருந்தால் கூட ஹோமம் பண்ணி சிராத்தம் என்பது இல்லை. மூத்த பிள்ளையின் மனைவி இருந்தால் மட்டுமே மூத்த பிள்ளை செய்யும் சிராத்தத்தில் ஹோமம் உண்டு. தம்பி மனைவி இருந்தால் கூட ஹோமம் இல்லை. மூத்த பிள்ளை, மூத்த மருமகள் இருவருமே இல்லை என்றால் மட்டுமே அடுத்த பிள்ளை தன் மனைவியுடன் சேர்ந்து ஹோமம் வளர்த்துப் பெற்றோரின் சிராத்தம் செய்யலாம்.

  பதிலளிநீக்கு
 36. கீதாம்மா, வேதங்களில் கூட யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதைச் சொல்வதற்காக நான் அழுத்தமாக எடுத்துக்காட்டிய ஒரு விஷயத்தை ரொம்பவே dilute பண்ணி விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 37. கதையல்ல நிஜம்.....

  சில விஷயங்கள் நம்மைப் பாதிக்கும் விதமாகவே இருக்கின்றன. ஆள் வைத்து பார்த்துக் கொள்வதில் தவறில்லை - இருந்தாலும் பெற்ற குழந்தைகளும் கொஞ்சம் அனுசரணையாக இருக்கலாமே என்பதைச் சொல்லத்தான் இந்தப் பகிர்வு.

  தங்களது கருத்துகளைச் சொன்ன அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி. எனது பகிர்வையும் இங்கே வெளியிட்ட “எங்கள் பிளாக்” ஆசிரியர் குழுவிற்கு மனம் நிறைந்த நன்றி.

  அலுவலக வேலைகள், தமிழகப் பயணம் என சில நாட்களாக பதிவுலகம் பக்கம் வர இயலாத சூழல்..... கருத்துச் சொன்ன அனைவருக்கும் தனித்தனியாக பதில் சொல்ல முடியவில்லை. அனைவருக்கும் மீண்டும் நன்றி!

  பதிலளிநீக்கு
 38. ஹை நம்ம வெங்கட்ஜி! அவர்களின் கதை! அருமையான கதை. ஜிக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்.

  துளசி, கீதா...

  கீதா: பொதுவாக கருத்திடும் முன்னர் பிற பின்னூட்டங்களைப் பார்ப்பது இல்லை. கருத்திட கீழே அழுத்திக் கொண்டே வரும் போது சுப்புத்தாத்தாவின் கருத்தில் ஒரு வரி கண்ணில் படவும் உடனே வாசித்தேன்.அப்படியே நான் அடிக்கடிச் சொல்லும் கருத்து. நானும் எனது மகனுக்குச்சொல்லியிருப்பது அதுதான்..தாத்தாவின் அம்மா சொல்லியிருப்பது போல். அந்தத் தினம் என்றில்லாமல் எப்போதுமே...

  அருமையான கருத்துடனான கதை. முடிவும் கண்ணில் கண்ணீஈர் வரவஹைத்துவிட்ட்து. எங்கள் ப்ளாகிற்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 39. இந்தப்பதிவினில் நான் எழுதியுள்ள பின்னூட்டத்தைப் படித்து, மகிழ்ந்து, வியந்து, பாராட்டி ‘வாழ்வியல்’ என்ற தலைப்பினில் இன்று நம் பெரியவர் .. முனைவர் கந்தசாமி ஐயா அவர்கள் தனது ‘மன அலைகள்’ என்ற வலைத்தளத்தினில் தனிப்பதிவே வெளியிட்டுள்ளார்கள்.

  இதோ அதற்கான இணைப்பு:

  http://swamysmusings.blogspot.com/2016/11/blog-post.html

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  பதிலளிநீக்கு
 40. //அவை என்னுடைய தியாகங்களுக்கு
  ஈடாகுமா//

  பெற்றோருடைய அன்பு, பாசம், தியாகம் என்பது அரித்தால் சொரிந்துகொள்வது போல. Basic instinct. அடுத்த வீட்டு குழந்தைக்கு செய்தால்கூட கொஞ்சம் ஒத்துக்கொள்ளலாம். ஆனால் அதுவும் Basic instinct தான். சுயநலத்துடன் குழந்தையை வளர்த்தால், குழந்தைகளும் வளர்ந்த பிறகு சுயநலத்துடன்தான் இருக்கும். முற்பகல் செய்யின்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!