அப்பாவி தங்கமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அப்பாவி தங்கமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23.8.16

கேட்டு வாங்கிப்போடும் கதை :: பிரசவ வைராக்கியம்


          எங்களின் இந்த வார "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் அப்பாவி தங்கமணி  (புவனா கோவிந்த்) அவர்களின் படைப்பு இடம் பெறுகிறது.
          அவரின் தளம் .அப்பாவி தங்கமணி.

          சில காலமாக அப்பாவி தங்கமணி வலைப்பூவில் எழுதுவது இல்லை.  சுவாரஸ்யமான எழுத்துகளுக்குச்  சொந்தக்காரர். நகைச்சுவை உர்வு   மிக்கவர்.   அப்பாவியின் இட்லி ஒரு நேரத்தில் எவ்வளவு Famous என்று அனைத்து வலைப்பதிவர் நண்பர்களுக்கும் தெரியும்!!

          எழுத்தாளர் ரமணி சந்திரனின் விசிறி.  அதனாலேயே இவர் கதைகளிலும் அதே அளவு சுவாரஸ்யம் இருக்கும்.  உணர்வுபூர்வமாக கதைகள் படைப்பவர்.

          இந்த வாரத்தில் இடம் பெரும் அவர் படைப்பு அவர் மனதில் உதித்த சமயம் பற்றிய அவர் கருத்துகளைத் தொடர்ந்து அவர் படைப்பு தொடர்கிறது..


========================================================================


கதையின் பின்னணி :
அது நாங்கள் கனடாவில் இருந்த சமயம். தோழி ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்த போது ஒரு பிள்ளை என்பதே இன்றைய காலகட்டத்தில் சிறந்தது என ஒரு தோழி கூற, இல்லை நாம் இருவர் நமக்கு இருவரேனும் வேணும் என சிலர் வாதிட, பிரசவ வைராக்யம் பற்றி பேச்சு வர, அப்போது உதயமானதே இந்த கதைக்கரு
நான் எழுதியதில் எனக்கு பிடித்த கதை இது. இது திண்ணை இணைய இதழிலும் வெளியிடப்பட்டது. எனது வலைப்பூவில் பிப்ரவரி 2011ல் வெளிவந்தது

அதன் இணைப்பு இதோ http://appavithangamani.blogspot.in/2011/02/blog-post.html

திண்ணை இணைய இதழ் இணைப்பு http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=11101177&edition_id=20110117&format=html


=======================================================================





பிரசவ வைராக்கியம்...
 

புவனா கோவிந்த்


"ஐ டாடி டாடி...டாடி வந்தாச்சு" என ஓடி வந்த செல்ல மகளை அள்ளி அணைத்தான் சிவா

"நேஹா குட்டி என்ன பண்ணின இன்னிக்கி?" 

"ஒரே போர் டாடி... மம்மி நைநைனு ஒரே திட்டு" என மழலை குரலில் கொஞ்சலாய் கூற அதை அவன் ரசித்து சிரிக்க 

"ஆமாண்டி மூணு வயசு கூட ஆகல... உனக்கு கூட என்னை பாத்தா அப்படித்தான் இளக்காரமா இருக்கும்... வீட்டுல பெரியவங்க எனக்கு மரியாதை குடுத்தாதானே கொழந்தைக்கு அந்த எண்ணம் வரும்" என எங்கோ பார்த்தபடி கோபமாய் கூறினாள் சோபாவில் அமர்ந்து இருந்த சிவாவின் மனைவி வித்யா 

"என்ன வித்தி... கொழந்த சொன்னதுக்கு இப்படி கோவிச்சுக்கற" என சிரித்தவனிடம் எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள் வித்யா

அவளின் கோபத்திற்கான காரணம் என்னவென அறிந்தபடியால் மௌனமாய் சிரித்தான் சிவா 

"டாடி... இன்னிக்கி பார்க் போலாமா...ப்ளீஸ்?" என நேஹா கெஞ்சலாய் கேட்க 

"சரிடா செல்லம்... டாடி பிரெஷ் ஆய்ட்டு வர்றேன் அப்புறம் போலாம்... அதுவரைக்கும் குட்டி செல்லம் மம்மிய தொந்தரவு பண்ணாம வெளையாடணும் சரியா?"

"ஒகே டாடி" என சிவாவின் பிடியில் இருந்து இறங்கி வேகமாய் ஓடினாள் தன் பக்கத்துக்கு வீட்டு தோழிகளுடன் விளையாட 

"ஏய் மெல்ல மெல்ல..." என்றான் சிவா பதறி 

********************************************************************

உடை மாற்றி சமயலறைக்கு சென்றவன் வித்யா அடுப்படியில் நிற்க, பக்கவாட்டில் தெரிந்த அவள் முகத்தில் கோபம் சற்றும் குறையாமல் இருந்ததை உணர்ந்தான் 

அவன் அங்கு நிற்பது தெரிந்தும் தெரியாதவள் போல் ஏதோ வேலை செய்யும் பாவனையில் இருந்தாள் வித்யா

சிவாவே மௌனத்தை உடைத்தான் "வித்தி... ஒரு காபி கெடைக்குமா?" 

அவன் குரலில் இருந்த சோர்வு அவளை இளக செய்திருக்க வேண்டும் 

எதுவும் பேசாமல் காபி டம்ளரை சமையல் அறையில் ஒரு புறம் போட்டிருந்த டைனிங் டேபிள் மீது வைத்து விட்டு விலகினாள் 

விலகியவளை விடாமல் மென்மையாய் கரம் பற்றினான் சிவா. கோபமாய் அவனிடம் இருந்து கையை விடுவித்து கொண்டு நகர்ந்தாள் 

இப்போது சமாதானம் செய்ய முயன்றால் மீண்டும் அதே பிரச்னையில் வந்து நிற்பாள் என புரிய எதுவும் பேசாமல் மௌனமாய் காபி அருந்தினான் 

அதே நேரம் உள்ளே வந்த நேஹா "டாடி... இப்போ பார்க் போலாமா?" எனவும் மம்மிகிட்ட கேளு என்பது போல் ஜாடை காட்டினான் குழந்தையிடம் வித்யா அறியாமல் 

"மம்மி... நீயும் வர்றியா பார்க் போலாம்"

"ஒண்ணும் தேவையில்ல... அப்பாவும் மகளும் தானே ஒரு கட்சி... நான் எதுக்கு நடுவுல வேண்டாதவ... " என வித்யா முகம் திருப்ப சிவா எதுவும் பேசாமல் நேஹவை அழைத்து கொண்டு வெளியேறினான் 

********************************************************************

மௌனப்போராட்டம் இப்படியே மேலும் இரண்டு நாள் தொடர்ந்தது 

கடந்த ஒரு வாரமாய் படுக்கை அறைக்குள் நுழைந்ததுமே முதுகு காட்டி படுப்பவள் இன்று கையில் புத்தகத்துடன் அமர்ந்திருக்க விவாதம் செய்ய தயாராய் இருக்கிறாள் என புரிந்து கொண்டான் மனைவியை நன்கு அறிந்த சிவா 

வேண்டுமென்றே படுத்து உறங்க முயற்சிப்பவன் போல் கண்ணை மூட, அவன் எதிர்பார்த்தது போலவே ஆரம்பித்தாள் வித்யா

"பேசாம இருந்தா அப்படியே கெடக்கட்டும் என்ன நஷ்டம்னு விட்டுடுவீங்க இல்ல" என கோபமாய் கையில் இருந்த புத்தகத்தை தூக்கி கீழே போட்டாள் 

இதற்கு மேல் பேசாமல் இருந்தால் பூகம்பம் வெடிக்கும் என்பதை உணர்ந்த சிவா எழுந்து அமர்ந்தான் 

சற்று நேரம் எதுவும் பேசாமல் அவளையே பார்த்தான், அவள் கோபமாய் முகத்தை திருப்ப மெல்ல அவள் கரங்களை பற்றியவன் 

"நான் வந்து பேசினாலும் நீ பேசல... நான் என்ன செய்யட்டும்"

"அப்போ... நான் பேசாம போனா தொலையட்டும்னு விட்டுடுவீங்க அப்படிதானே" 

"நான் எப்பம்மா அப்படி சொன்னேன்"

"சொன்னா தானா... அதான் செயல்ல காட்றீங்களே..."

"வித்துமா... இங்க பாரு... நீயே சமாதானம் ஆகட்டும்னு தான் அதிகம் பேசல... பேசினா இப்படி டென்ஷன் ஆவேன்னு தான்..." என அவன் முடிக்கும் முன் 

"ஒகே... அப்போ இப்படியோ இருந்துகோங்க... எப்பவும்" என கையை உதறி விட்டு படுத்து கொண்டாள் 

"வித்து ப்ளீஸ்... இங்க பாரு"

"ஒண்ணும் வேண்டாம்"

"பாத்தியா.. இதான் கெஞ்சினா மிஞ்சறது..." என சிவா குரலில் கோபம் காட்ட விசும்பினாள் வித்யா 

அதற்கு மேல் தாங்கமாட்டாமல் அவளை அணைத்து கொண்டான். அவளும் பேசாமல் அப்படியே இருந்தாள் 

"குட்டிமா... நான் தான் அன்னைக்கே இந்த பேச்சை எடுக்க வேண்டாம், என் முடிவுல மாற்றம் இல்லைன்னு சொன்னேன்ல... மறுபடியும் நீ தான் பிரச்சன பண்ணி டென்ஷன் ஆகற"

"நான் என்ன பிரச்சன பண்ணினேன்... இந்த முடிவுல எனக்கு விருப்பம் இல்ல... அதை சொல்ல எனக்கு உரிமை இல்லையா?"

"அப்படி இல்லடா... ப்ளீஸ்... சொன்னா புரிஞ்சுக்கோ"

"சொன்னா புரிஞ்சுக்கறேன்... எதுவும் சொல்லாம சும்மா வேண்டாம் வேண்டாம்னா நான் ஒத்துக்க மாட்டேன்"

"அதான் சொன்னேனே... நேஹா மட்டும் நமக்கு போதும் வித்யா... நம்ம மொத்த அன்பையும் அவளுக்கு மட்டும் குடுக்கணும். அதை பங்கு போட்டுக்க இன்னொரு குழந்தை வர்ரதுல எனக்கு உடன்பாடு இல்ல... அவ ஏங்கிடுவா" 

"இது சுத்த பைத்தியக்காரத்தனம்... "

"நோ... ஐ அம் ப்ராக்டிகல்"

"அதெல்லாம் எனக்கு தெரியாது... நேஹா என்னை போல கூட பிறந்தவங்க இல்லாம ஒரு பிள்ளையா நிக்கறதுல எனக்கு விருப்பம் இல்ல"

"உன்னோட விருப்பத்துக்காக நேஹா வேதனைபட்ரதுக்கு அனுமதிக்க முடியாது" என அழுத்தமாய் அது தான் முடிவு என்பது போல் கூறினான் 

"ஏன் இப்படி பிடிவாதம் பண்றீங்க... வீட்டுல ஒரே பொண்ணா மத்த வீட்டுல கூட பிறந்தவங்க கும்பலா சந்தோசமா இருக்கறதை நான் ஏக்கமா பாத்திருக்கேன்... இப்ப கூட நாம உங்க அம்மா அப்பாவை பாக்க ஊருக்கு போறப்ப உங்க அக்கா தங்கை அண்ணா கூட நீங்க கலாட்டா பண்றதையும் பாசமா நெகிழ்றதையும் ஏக்கமா பாக்கறவ நான்... அது உங்களுக்கே தெரியும்... அப்ப கல்யாணமான புதுசுல என்னோட ஏக்கத்தை பாத்துட்டு நீங்க என்ன சொன்னீங்க, உன் விருப்பபடி வீடு நெறைய பிள்ளைகள பெத்துக்கலாம்னு நீங்க சொன்னீங்களா இல்லையா?" என குற்றம் சாட்டுவது போல் வித்யா கேட்க பதில் பேசாமல் மௌனமானான் சிவா 

"இப்படி எதுவும் பேசாம இருந்தா என்ன அர்த்தம்"

"இங்க பாரு வித்யா... ஐ டோன்ட் வான்ட் டு ஹியர் எனிதிங்... நேஹா போதும் நமக்கு" என்றான் தீர்மானமாய் 

"முடியாது முடியாது முடியாது" என வித்யா கோபமாய் கத்த 

"ஜஸ்ட் ஸ்டாப் இட் ஐ சே... " என அவளை பிடித்து உலுக்கினான் சிவா 

"எனக்கு தெரியும் என்ன காரணம்னு...காசு செலவாய்டும்னு தானே... நான் வேணும்னா கொழந்த பொறந்த மூணாவது மாசமே வேலை தேடறேன்... கொழந்தைக்கு ஆகற செலவை நானே பாத்துக்கறேன்" எனவும் 

"பைத்தியம் மாதிரி ஒளராத... நேஹா பொறக்கறதுக்கு முந்தியே உன்னை கம்பல் பண்ணி வேலைய விட சொன்னவன் நான்... எப்பவும் நான் காச பெருசா நெனச்சதில்ல... இன்னும் பத்து பிள்ளைகள நீ பெத்துகிட்டாலும் என்னால காப்பாத்த முடியும்" 

"அப்ப வேற என்ன? ஓ... என் அழகு போயிடும்னா?" என வேண்டுமென்றே அவனை சீண்ட 

"ஸ்டாப் யுவர் நான்சன்ஸ்... நீ இன்னொரு வாட்டி வலி படறத பாக்கற சக்தி எனக்கில்லடி... அதான் காரணம், போதுமா?" என்றவன் அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்காதவன் போல் எழுந்து பால்கனியில் சென்று அமர்ந்தான் 

அவனிடமிருந்து அப்படி ஒரு பதிலை எதிர்பாராத வித்யா அதிலிருந்து வெளியேவர சற்று நேரமானது

********************************************************************

பால்கனி ஊஞ்சலில் அவனருகே சென்று அமர்ந்தவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்

அவன் கோபத்தை உணர்த்துவது போல் அவனுடைய சூடான மூச்சுக்காற்று நெற்றியில் பட "சாரி" என்றாள்

அவன் எதுவும் பேசவில்லை 

"நீங்க சும்மா பிடிவாதம் பண்றீங்கன்னு தான் உங்கள ஒத்துக்க வெக்கறதுக்காக வேணும்னே காசுக்காக சொல்றீங்க, அழகு போய்டும்னு சொல்றீங்கன்னு வம்பு பண்ணினேன்... சாரி"

இப்போதும் அவன் எதுவும் பேசவில்லை 

"காசும் அழகும் உங்களுக்கு பெருசில்லைன்னு எனக்கும் தெரியும்பா... ஆனா இப்படி ஒரு காரணம் எதிர்பாக்கல, சாரி... இன்னும் கோபமா?" என அவன் முகத்தை தன்புறம் திருப்பினாள் 

பௌர்ணமி நிலவின் வெளிச்சத்தில் அவன் கண்கள் கலங்கி இருந்தது தெரிய பதறினாள் 

"என்னப்பா... என்னாச்சு... சாரி... நான்... " என விசும்ப அதற்கு மேல் தாங்காமல் அவளை சேர்த்து அணைத்தான் 

சற்று நேரம் அப்படியே இருந்த வித்யா "நான் சொல்றத கோபபடாம கேப்பீங்களா?" எனவும் 

"இன்னொரு கொழந்தைங்கறதை தவிர வேற என்ன சொன்னாலும் கேக்கறேன்" என்றான் சிவா

"ப்ளீஸ்பா... "

"வித்தி... ஏன் என்னோட உணர்வுகள புரிஞ்சுக்க மாட்டேங்கற"

"இல்லங்க..."

"ப்ளீஸ்... இன்னும் என்னால மறக்க முடியல... நீ வலில துடிச்சத கதறினத... ஐயோ... வேண்டாம்... போதும்... அன்னைக்கே நான் முடிவு பண்ணிட்டேன் நமக்கு நேஹா மட்டும் போதும்னு" என அந்த நாள் நினைவில் அவன் உடல் நடுங்க

"நான்னா அவ்ளோ உயிரா சிவா?" என காதலுடன் வித்யா கேட்க 

"அத நான் சொல்லித்தான் உனக்கு தெரியணுமா?" என கண் பனித்தான் சிவா

"என்னை விட அதிஷ்டசாலி யாருமில்ல சிவா... ஆனா... "

"ப்ளீஸ்...வேண்டாம் வித்தி... உன்ன கெஞ்சி கேக்கறேன்" 

"ப்ளீஸ்பா நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளுங்க... என்னோட ஒரு நாள் வேதனைக்காக நம்ம நேஹா காலம் பூரா ஏக்கபடணுமா? நமக்கு பின்னாடி அவளுக்கு பிறந்து வீட்டு உறவுன்னு கூட பிறந்தவங்க வேணுங்க... ஆயிரம் பேரு இருந்தாலும் ஒரு கஷ்டம்னு வர்றப்ப உடன் பிறப்புகளோட தோள் பெரிய ஆதரவுப்பா... "

"நீ சொல்றதெல்லாம் சரின்னு எனக்கும் புரியுது வித்யா... எனக்கு கொழந்தை வேண்டாம்னு இல்லம்மா... ஆனா...."

"கொஞ்சம் யோசிச்சு பாருங்க... என்னோட ஒரு நாள் வலி பத்தி யோசிச்சு நேஹா வேண்டாம்னு இருந்திருந்தா நேஹா இல்லாத ஒரு வாழ்கைய உங்களால நெனைக்க முடியுதா" என கேட்க இல்லை என தலை அசைத்தான் 

"அதே போல தான்... ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்"  என வெகு நேர கெஞ்சலுக்கு பின்

"சரி... " என்றான் அப்போதும் அரைமனதாய் 

"தேங்க்ஸ் தேங்க்ஸ்... தேங்க்ஸ் அ மில்லியன்" என கணவனை கட்டிக்கொண்ட வித்யா சத்தமாய் சிரித்தாள்

அவள் சிரிப்பு சிவாவை மகிழ்வித்தபோதும் வேண்டுமென்றே கோபம் போல் "இப்ப என்ன சிரிப்பு என்னை ஜெய்ச்சுட்டேனா?" என கேட்க 

"ம்...இல்லப்பா... எங்க பாட்டி சொல்லுவாங்க... அந்த காலத்துல நெறைய கொழந்தைங்க பெத்துபாங்க தானே... ஆனா ஒரு ஒரு பிரசவத்தப்பவும் வலி படறப்ப பொண்ணுங்க இது தான் கடைசி இனி இல்லைன்னு வைராக்யமா சொல்லுவாங்களாம்... ஆனா அடுத்த வருசமே வயத்த தள்ளிட்டு பிரசவத்துக்கு  நிப்பாங்களாம்... அதை பிரசவ வைராக்கியம்னு அந்த காலத்துல கிண்டல் பண்ணுவாங்களாம்" என சிரிக்க 

"இப்ப எங்க இது வந்தது" என ஆசையாய் மனைவியின் முன் நெற்றியில்  இதழ் பதித்தவாறே கேட்டான் சிவா 

"ம்... அந்த காலத்துல மனைவிக்கு வந்த பிரசவ வைராக்கியம் இப்ப என் கணவனுக்கு வந்ததை நெனச்சு சிரிச்சேன்" என அவள் மீண்டும் சிரிக்க 

"என்னை கிண்டலா பண்ற... உன்ன... என்ன பண்றேன் பார்... " என குழந்தையை தூக்குவது போல் அவளை தூக்கி கீழே போடுவது போல் பாவனை செய்ய அவனை இறுக பிடித்து கொண்டே சிரித்தாள் வித்யா 

அவர்களின் அன்பை கண்டு வெட்கிய முழு நிலவு அந்த கணத்தை பதிவு செய்து மேகத்துள் மறைந்தது