"இதென்ன இங்கே படுத்திருக்கிறான் இவன்..."
வழியில் படுத்திருந்த அண்ணனைக் கண்டதும் மனம் பதறியது.
எதிரிகள் பார்த்து விட்டால்... இவ்வளவு அஜாக்கிரதை நமக்கு உதவாதே...
அருகில் சென்று எழுப்பினேன். உயிரில்லாததை உடனே உணர்ந்தேன், இதயம் நின்று துடித்தது. அப்போதுதான் சாப்பிட்டிருந்த கேக் கசந்தது. "ஐயோ...என்ன இது...யார் வேலை இது..அருகில் யாரோ இருக்கிறார்களோ.." உரக்க எழுந்த குரலை மனதிற்குள்ளேயே அடக்கினேன். ஆபத்து!
'சட்'டென ஓரமாகப் பதுங்கினேன்.
கொஞ்ச தூரத்தில் ஒருக்களித்துப் படுத்திருப்பது போலக் கண்ணில் பட்ட உருவங்கள் இதயத் துடிப்பை அதிகப் படுத்தின. பார்க்கப் போகும் காட்சி என்னவென்று அறிவுக்குத் தெரிந்து விட்ட நிலையில் மனம் 'இருக்கக் கூடாது' என்று விநாயகரை வேண்டிக் கொண்டது.
சுற்றுமுற்றும் பார்த்தபடி அருகே நெருங்கினேன். கண்ணில் நீர் முட்டியது. 'கை விட்டு விட்டாயே விநாயகா'
சத்தப்படுத்தக் கூடாது என்று அடக்கினாலும் குரல் கீச்சிட்டது.
அருகருகே ஒருக்களித்துப் படுத்தபடி உயிர் துறந்திருந்த சகோதரர்களைக் கண்டதும் ஒரு நொடி உலகே வெறுத்துப் போனது.
கொஞ்ச தூரத்தில் அடுத்த சகோதரன், கொஞ்சம் தளளி சகோதரி...
'என்ன நடந்தது...என்ன நடக்கிறது இங்கே...' நெஞ்சில் எழுந்த கேவல் அடுத்த சில நிமிடங்களிலேயே வெஞ்சினமானது.
என் மூத்த சகோதரனும் கால்களை நீட்டியிருந்தான். கால்கள் துவண்டன. குடும்பத்தில் இன்னும் யார்தான் பாக்கி...நா வரண்டதற்குக் காரணம் துக்கம் மட்டும் காரணமில்லை என்று அடுத்த சில நொடிகளில் தெரிந்தது.
'மயக்கம்... நா வறட்சி...காற்று... நல்ல காற்று வேண்டும்... என்ன செய்கிறது எனக்கு...ஐயோ...என் சகோதரர்களுக்கு நேர்ந்த கதி எனக்குமா...என்ன காரணம்...என்ன சாப்பிட்டேன் கடைசியில்....கேக்...ஆ...அந்த கேக்கில் என்னமோ...'
இப்போது அடுத்த பயம் வந்தது. என் அம்மா எது கிடைத்தாலும் என் கடைசிச் சகோதரனுக்குக் கொஞ்சம் எடுத்துக் கொண்டு போய்த் தரும் பழக்கம்...ஐயோ...அந்தக் குழந்தை...அதற்கு நல்லது கெட்டது எதுவுமே தெரியாதே...எனக்கு மட்டும் எல்லாம் தெரிந்திருந்ததா என்ன...எங்கள் விதி...ஐயோ..அம்மா....குழந்தைக் கு எதையும் தருமுன் அவர்களை ஜாக்கிரதைச் செய்து காப்பாற்ற வேண்டும்..
துவண்ட கால்களை நேராக்கி ஓட வீடு நோக்கி ஓட முற்பட்டேன். தண்ணீர் தேடும் ஆசையைத் துறந்து ஓடினேன். காற்றைத் தேடும் உயிர் இச்சையை மதிக்காமல் ஓடினேன்.
ஓடினேன் என்று நினைத்தேன். ஊர்ந்தேன். ஆனால்...
காலம் கடந்திருந்தது. அந்தக் குழந்தை...இளஞ்சிவப்பு கால்களுடன் அந்தக் குழந்தை...ஐயோ...நீயுமா....அரு கிலேயே அம்மா...கடவுளே...அம்மா...நீ கூட ஏமாந்து போனாயா....
எத்தனையோ பொறிகளில் மாட்டாமல் இருக்கச் சொல்லிக் கொடுத்தாயே...
என் முடிவும் அருகில் வந்து விட்டதை உணர்ந்தேன்.
விடக் கூடாது. இவர்களை விடக் கூடாது. வருவேன். மீண்டும் வருவேன். இவர்களைப் பழி வாங்க மீண்டும் வாழ்வேன். என் கண் நிரந்தரமாக மூடு முன் எங்கள் குடும்பத்தையே காலி செய்த அந்த கேக் கண்ணில் பட்டது.
மீண்டும் வாழ்வேன்.....மீ...ண்....டும்.. ...வா.......ழ்.....