19.8.26

உணவு நம் உள்ளத்தைத் தொடும் காரணம் என்ன? + சரோஜாதேவி கதை பகுதி 12.

 

கேள்வி பதில்கள் :

கீதா சாம்பசிவம் :

ம்ம்ம்ம்? கேட்கலாமா வேண்டாமானு தெரியலை. ஏனெனில் பொதுவாகவே தமிழ்நாட்டளவில் இதைப் பற்றிப் பெரிதாக யாரும் கண்டுக்கலை. பேசிக்கலை. அது கிடக்கு, நம்ம வேலையைப் பார்ப்போம் என்றே போகின்றனர்.  ஆனால் எனக்கு என்னமோ மனசு ஆறவே இல்லை.

1. கார்ப்பரேட் என்றால் அம்பானி/அதானிதானா? சொல்லப்போனால் எல்லா ஐடி கம்பெனிகள், டாடா குழுமம், பிர்லா குழுமம், சன் நெட்வொர்க் குழுமம், என்டிடிவி, ரிபப்ளிக் டிவி, இந்தியா டுடேனு ஆரம்பிச்சு மற்ற ஐடி கம்பெனிகள்னு எல்லாமும் கார்ப்பரேட்டில் வராதா?

# கார்பரேட் என்றால் டாடா, பிர்லா    என்றிருந்த காலம் இருந்தது. டாப்பில் இருப்பவர்களைத்தான் சொல்ல வேண்டும் அல்லவா ?

2. பிரதமரை இப்படி எல்லாம் கன்னாபின்னாவெனத் திட்டுவது சரியா? எனக்குத் தெரிந்து யாருமே அதை எதிர்க்கவில்லை, பிரதமர் உள்பட.

# நீங்கள் கேட்பதற்கான காரணங்கள் புரிகின்றன.  எல்லாக் கட்சிகளிலும் அரசியல் எதிர்ப்பு என்பது கொள்கைகளை ஆட்சேபிப்பதற்குப் பதிலாக தனி மனிதரை இழிவு செய்வதாக மாறியிருக்கிறது. இதை தனிமனிதர்கள் சரி செய்ய இயலாது என்பதும் கசப்பான உண்மை. தர்மம், நியாயம் ஆகிய உணர்வுகள் மங்கிப் போனதன் விளைவு.‌

அவரோட படிப்புச் சான்றிதழைக் கேட்பது எல்லாம் சரியானதா? ஏனெனில் நம் நாட்டில் ஒரு சில மத்திய, மாநில அமைச்சர்கள் படிக்காதவர்களே. நம் தமிழ்நாட்டில் திரு காமராஜர் அவரும் படிக்காதவரே. அது ஏன் இவரை மட்டும் இப்படி எல்லாம் கேள்வி கேட்கின்றனர்?

அடுத்தது அவரோட ஆங்கில உச்சரிப்பு இந்திய உச்சரிப்பாக இருப்பதையும் திரைப்பட நடிகர் ஒருத்தர் உள்படக் கேலி செய்துட்டாங்க. இந்தியாவில் பலருக்கும் இந்தக் குறை உண்டு. இன்னமும் இருக்கிறது. அப்படி இருக்கையில் ஏன் இவரை மட்டும்?. கேலி செய்தவர்கள் எல்லாம் அம்பேரிக்காவில் போய்ப் படிச்ச இந்தியர்கள். அவங்களும் அம்பேரிக்கா போகும் முன்னால் இப்படிப் பேசினவங்க தான். அங்கே போய்த் தான் மாத்திட்டிருப்பாங்க. அந்த உண்மை தெரிஞ்சும் ஒரு நாட்டின் பிரதமரை இப்படிப் பேசலாமா?

இதே வேறு கட்சியைச் சேர்ந்தவர் எனில் இப்படி எல்லாம் பேசி இருக்க முடியுமா?  இதை நினைச்சு நினைச்சு ஒரு எழுத்தாளர் பெண்மணி ரொம்பவே சந்தோஷம் அடைகிறார்  . அந்த அளவுக்கு அவங்களுக்குப் பிரதமரால் என்ன கஷ்டம், அல்லது நஷ்டம் ஏற்பட்டிருக்கும்?

# பிரதமர் மட்டும் அல்ல யாரையானாலும் தரக்குறைவாகப் பேசுவது தவறு.

முன்னேற்றங்கள் இருப்பதை ஏன் ஒத்துக்கொள்வதே இல்லை?

& ஏதாவது ஒன்று கிடைத்துக்கொண்டிருக்கும் வரை அதன் அருமை தெரியாது. கிடைப்பது கிடைக்காமல் போனால்தான் அதன் அருமை தெரியும். அது போலத்தான் முன்னேற்றங்களும். நிழலின் யாரும் வெயிலில்தான் தெரியும்! 

பி.கி. நான் இதை எல்லாம் கேட்பது சரியா/தப்பானு தெரியாது. ஆனல் மனசு ரொம்பவே நொந்து போய் விட்டது. இதை முக்கியமாய் இந்தக் கேள்விகளை வெளியிடலாம் எனில் வெளியிடுங்கள். பதில் சொல்லலாம் எனில் சொல்லுங்கள். இல்லைனா விட்டுடுங்க. இதனால் எங்கள் ப்ளாகின் பதிவுகளுக்குப் பிரச்னை ஏதும் வராமல் இருக்கணும்.  பொதுவில் வெளியிட முடியாது எனில் விட்டுவிடுங்கள்.

இந்த க்ரெடிட் ஸ்கோர்/சிபில் ஸ்கோர்(?) என்பது என்ன? ஏன் வங்கிகள் இவற்றைப் பற்றி அடிக்கடி குறிப்பிட்டு மெயில்கள் அனுப்புகின்றன?

இது முன்னரே ஒரு தரம் கௌதமன் அவர்கள் விளக்கினார். நினைவிலும் இல்லை. புரிஞ்சுக்கவும் இல்லை.

 # கடன் பெறுபவர்கள் திருப்ப செலுத்து வதில் முறையாக இருந்திருக்கிறார்களா இன்று கவனித்து அதற்காக ஒரு மதிப்பெண் கொடுக்கிறார்கள். இதில் நாம் தவறு செய்யும் பட்சத்தில் நமது தரம் மிகவும் கீழே இருக்கும். தேவையானபோது கடன் பெறுவதில் சிக்கல் வரும். இதுதான் கிரெடிட் ரேட்டிங்.

& நான் இதுபற்றி விளக்கம் எதுவும் கொடுத்த ஞாபகம் எனக்கு இல்லை. க்ரெடிட் ஸ்கோர்/சிபில் ஸ்கோர் எப்போதாவது கண்ணில் படும். Educational லோன், பையன் படிப்புக்காக நண்பர், உறவினர் லோன், அலுவலக லோன்கள் தவிர்த்து நான் வெளியில் வாங்கிய ஒரே கடன் வீடு கட்ட வாங்கிய HDFC லோன் மட்டுமே. எல்லா கடன்களையும் திருப்பி செலுத்தியாகிவிட்டது. கடந்த இருபது ஆண்டுகளாக கடன் வாங்கியதும் இல்லை, கடன் கொடுப்பதும் இல்லை. இந்தக் காலத்தில் என் ஒரே ஆர்வம் கிரிக்கெட் ஸ்கோர் மட்டுமே! 

இந்த யூபிஐ பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டிருக்கும் பொதுமக்களுக்கு அதற்காக வரி விதிப்பதில்லை. என்பதை நிதி மந்திரி பல முறை தெளிவாக்கி விட்டார். ஆனாலும் வணிகர்கள் தங்கள் லாபத்தில் இருந்து அரசுக்கு வரி செலுத்துகையில் அதை வாடிக்கையாளர்களிடம்தானே வசூலிப்பார்கள்? இது நிச்சயம் நடக்கும் இல்லையா? அப்புறமா ஏன் வரி விதிக்கலைனு அரசு சொல்லணும்? வணிகர்களுக்கும் வரி இல்லைனு சொல்லிவிடலாம் இல்லையா?

# சேவைகள் எப்போதுமே நிரந்தரமாக இலவசமாக இருப்பது சாத்தியமல்ல. அதற்காக ஒரு சிறு கட்டணம் வசூலிப்பதில் தவறு ஏதுமில்லை. இதற்கான எதிர்ப்பெல்லாம் முற்றிலும் அரசியல் காரணங்களுக்காக ஏற்படுகிறது.

நெல்லைத்தமிழன்:

 1. ஏன் ஜீன்ஸ் பேண்டில் முட்டுப் பகுதியில் கிழிசலா இன்னும் பல பகுதிகளில் கிழிந்து என்று ஒரு ட்ரெண்ட் வந்தது?  இவர்களெல்லாம், இந்திரனால், நல்லவர்களின் குணத்தை மாற்றுவதற்காக அனுப்பப்பட்டவர்களா?   

# ' புதுமை என்று எதையாவது செய்தே ஆக வேண்டும் ' என்கிற வெறி வருகின்ற போது செய்வதற்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை என்றால் இப்படித்தான் தாறுமாறாக ஏதேனும் செய்யத் தூண்டும் நமது மனம்.

 இதில் ஏன் இந்திரனைக் கொண்டு வருகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை !

& இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் இருக்கலாம். ஆனால் கி ஜீ பேண்டில் உள்ளவை கண்கள் அல்ல- மற்றவர் கண்களை ஈர்க்கும் துவாரங்கள்! 

2. நமக்கு வேலை வந்துவிடும் என்று கணவர் சில காய்களைத் தவிர்ப்பாரா? (வாழைப்பூ, தண்டு, அரைக்கீரை போன்று)  

# மாட்டார்.  (கணவராக நான் உணர்ந்தது). அவரவருக்குப் பிடிக்காதவை தவிர்க்கப்பட லாம்.

& அந்தக் காலத்தில் எல்லாம் காய்கறி வாங்குவது, சமைப்பது எல்லாமே மனைவியின் இலாக்கா என்பதால் எனக்கு இதில் அனுபவம் இல்லை. 

3.  உணவு நம் உள்ளத்தைத் தொடும் காரணம் என்ன?  உலகத்திலேயே ஜீவி சார் மாத்திரம்தான், உணவு பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவரோ என்று தோன்றும் ஹாஹா.  

# உணவு மட்டுமே ஐம்புலன்களுக்கும் நிறைவு தருவது. அதுவும் சொற்ப நேரத்திலேயே முழு நிறைவும் தருவது. எனவே அது நமக்கு பிடித்திருப்பதற்கு வேறு காரணம் தேவையில்லையே !

& சமைக்கத் தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் உணவு பதிவுகளில் ஆர்வம் காட்டுவார்கள். சமையல் வேலை தெரியாதவர்களுக்கு உணவு பற்றிய பதிவுகள் இரசிக்காது என்று நினைக்கிறேன். 

4.  ஒரு பதிவு எழுதினால், பலரும் படிக்கணும், கருத்து போடணும் என்று ஏன் பலர் நினைக்கிறார்கள்?  முன்பெல்லாம் ரொம்பவே ஆக்டிவ் ஆக இருந்த பதிவர்கள், வாசகர்கள் ஏன் இப்போது இணையம் பக்கமே வருவதில்லை?  

# நாம் எழுதுவதை பலர் படிக்கிறார்கள் ரசிக்கிறார்கள் என்று தெரியும்போது ஒரு திருப்தி இருக்கத்தானே செய்யும் ?

முன் போல் அதிகம் பேர் வராததற்குக் காரணம், எல்லாவற்றுக்கும் ஒரு சலிப்பு என்கிற எல்லைக்கோடு இருக்கும் என்பது மட்டுமேதான்.

5. உங்களுக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களைச் சந்தித்திருக்கிறீர்களா? அவர்களுக்கு ஏதேனும் செய்திருக்கிறீர்களா?

# எனக்கு கற்றுக் கொடுத்த பல ஆசிரியர்களை சந்திக்கவில்லையே சந்திக்க முடியாமல் போயிற்றே என்கிற ஆதங்கம் எனக்கு நிறையவே உண்டு. அதிலும் ஓரிருவரை   பார்த்து, அவர்களை வணங்கி,  வாய் நிறைய நன்றி சொல்ல வேண்டும் -  முடிந்தால் ஒரு பெரிய பரிசு கொடுக்க வேண்டும் என்று கூட நான் நினைத்தது உண்டு,  நடக்கவில்லை.

& ஆசிரியர்கள் யாரையும் படிப்பு முடிந்தபின் சந்தித்ததில்லை; சந்திக்க நினைத்ததும் இல்லை. சில ஆசிரியர்களை அவ்வப்போது நினைவு கூர்ந்தது உண்டு. 

= = = = = = = =

படமும், பதமும் : 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 


கனடாவில் மிஸிஸாகா என்னும் இடத்தில் இருக்கும் absolute tower. இதை அதன் வடிவத்தைக் கொண்டு மர்லின் மன்றோ டவர் என்கிறார்கள்.

மிஸிஸாகாவில் இருக்கும் சென்ட்ரல் லைப்ரரி என்னும் பொது நூலகத்திற்கு சென்றிருந்தேன். மிகப்பெரிய நூலகமாம். இதைப் போல இன்னும் இரண்டு நூலகங்கள் உண்டாம். நம் கன்னிமாராவைவிட சிறியதாகத்தான் இருக்கும், ஆனால் அமைக்கப்பட்டிருக்கும் விதம் அழகாக இருக்கிறது. நல்ல விஸ்தீரணத்தில் ஆங்காங்கே உட்கார்ந்து படிக்க நடுவில் மேஜைகளோடு சோஃபாக்கள், கணிணிகள், குழந்தைகளுக்கு விளையாட பிளாக்குகள், சுத்தமான வாஷ்ரூம் என்று நான்கு தளங்களில் விரிந்திருக்கிறது. 4வது தளத்தில் எல்லா மொழி புத்தகங்களும் இருக்கின்றன. 

தமிழ்ப் பகுதியில் பெரும்பாலும் ஸ்ரீலங்காவைச் சேர்ந்த எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களைத் இருக்கின்றன. அவற்றிற்கு இடையில் அம்பையின் 'அம்மா ஒரு கொலை செய்தாள்' சிறுகதை தொகுப்பு எடுத்து வந்தேன். 

பத்திரிகைகளும் இருந்தன. என்ன ஆ.வி., கலைமகள் போன்றவை இவ்வளவு மெலிந்து விட்டன?


மிஸிஸாகா சென்ட்ரல் லைப்ரரி அருகில் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பதைப் போன்ற டவர்.

நெல்லைத்தமிழன் :

சில படங்கள் எடுக்கும்போது மிக நன்றாக அமைந்துவிடும். இது பஹ்ரைன் கடற்கரையில் எடுத்தது. மாலை வேளை. சூரியன் மறையப்போகிறது. அங்குள்ள ஸ்பீட் போட்களில் எனக்கு பிரயாணம் செய்ய கொஞ்சம் பயம்தான். நான் பக்கத்தில் இருக்கும் தீவுகளுக்கெல்லாம் பயணித்திருக்கிறேன். ஒரு சில நேரங்களில் கடலில் ஆயிரக்கணக்கான (குறைத்துத்தான் சொல்கிறேன்) ஜெல்லி மீன்கள் இருக்கும். அதன் நடுவே போட் செல்லும்.  உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். ஜெல்லி மீன்கள் நம் கால்களில் பட்டால் அரிக்கும். 


அங்கெல்லாம் (பஹ்ரைனில்) கடற்கரைகளில் கும்பல் இருக்காது. பயம் கிடையாது. அமைதியாக உட்கார்ந்து கடலை ரசிக்கலாம். அலையும் அதிகமில்லை. ஏரிபோலத்தான் தோன்றும்.  பஹ்ரைன் தேசமே நிறைய தீவுகளால் ஆனது. கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் இணத்ததால் ஒரே நாடுபோலத் தோன்றினாலும், ஒரு சில இடங்களுக்குச் செல்ல கடல் மேல் போட்டிருக்கும் பாலத்தின் வழியாகச் செல்லவேண்டும்.

= = = = = = =

KGG பக்கம் : 

சரோஜாதேவி தொடர் கதை 

சென்ற வாரம் - சுட்டி : பகுதி 11 : " நாநாவின் திட்டம் : MCEL 01" 

இனி 

இந்த வாரப் பகுதி. 

பகுதி 12 : " நாநாவின் திட்டம் : MCEL 02 " 

அரோகரா பாங்க் பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்திய பாபாவிடம் நாநா சொன்னான்: " பாபா நீ மேனேஜரிடம் பேசி நமக்கு வேண்டிய விஷயங்களை தெரிந்து கொண்ட பின் முதலில் திரும்ப வந்தால் என்னைத் தேடாதே. நீ உருவமாக இருந்து உள்ளே பேசிக் கொண்டு இருக்கும்போது நான் உள்ளே அருவமாக இருந்து சில வேலைகள் செய்ய வேண்டும். நான் திரும்பி வந்த பிறகு நீ காரை எடுக்கலாம். அதுவரை நீ காரில் காத்திரு " என்று சொல்லி அருவமாகி காரிலிருந்து இறங்கிச் சென்றான். 

அதன்பின் பாபாவும் காரிலிருந்து இறங்கிச் சென்றான். 

மேனேஜர் அறைக்குள் நுழைய அவரிடம் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தான் பாபா. 

தன்னை ஒரு ப்ரைவேட் டிடெக்டிவ் என்று அறிமுகப் படுத்திக் கொண்டு, தன் க்ளையண்ட் சார்பாக ஒரு சில விவரங்கள் வேண்டும் என்று கேட்டான் பாபா. 
எந்த டிடெக்டிவ் ஏஜென்சி, என்ன வகை தகவல் என்று விவரங்கள் கேட்டுக் கொண்டார் மேனேஜர். 

பிறகு , " உங்களுக்கு எங்கள் வாடிக்கையாளர் பற்றி சில தகவல்கள் மட்டுமே அளிக்க முடியும். அதை கூட மறுக்கும் உரிமை எங்களுக்கு உண்டு. ஆனாலும் உங்களுக்காக சில அடிப்படை தகவல்கள் மட்டும் கொடுக்க முயற்சி செய்கிறேன். நீங்கள் அதோ அங்கே உட்கார்ந்து இருக்கின்ற சுபத்ரா கிட்ட போய் கேட்க நினைக்கிற தகவல்களைக் கேளுங்க" என்று சொல்லி அனுப்பினார். 

பாபா அவர் அறையிலிருந்து வெளியே வந்தவுடன் மேனேஜர் சுபத்ராவை தொலைபேசி மூலம் அழைத்து சில இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்தார். அவற்றை எல்லாம் அருவமாக அங்கே இருந்த நாநா கேட்டு உடனடியாக பாபாவின் எண்ணுக்கு சில தகவல்கள் அனுப்பினான். 

சுபத்ராவின் இருக்கைக்கு அருகில் சென்ற பாபா, சுபத்ரா ஃபோனில் பேசி முடிக்கும் வரை காத்திருந்தான். அதே நேரத்தில் நாநா அனுப்பிய செய்தியையும் படித்தான். சுபத்ரா விடம் என்ன தகவல்கள் கேட்க வேண்டும் என்று தெரிந்துகொண்டான். 

சுபத்ரா ஃபோனில் பேசி முடிந்தவுடன் தன்னை அறிமுகம் செய்து கொண்டு தகவல்களை ஒவ்வொன்றாகக் கேட்க ஆரம்பித்தான். 

சுபத்ரா கம்ப்யூட்டர் திரையில் பார்த்து, சில தகவல்கள் கொடுத்தார். 


நாநா சுபத்ரா இருக்கையின் பின்னால் அருவமாக இருந்தபடி கம்ப்யூட்டர் திரையில் ஓடிய தகவல்களை வீடியோ எடுத்துக் கொண்டான். 

பிறகு பாபா சுபத்ராவிற்கு நன்றி சொல்லி விடை பெற்றான். 

நேரே மேனேஜர் அறைக்குச் சென்று அவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு புறப்பட்டான். 

மேனேஜர் ஃபோன் செய்து சுபத்ராவை தன் அறைக்கு அழைத்தார்.

தன் அறைக்கு வந்த சுபத்ராவிடம் பாபா என்ன தகவல்கள் கேட்டார் அதற்கு என்ன விவரங்கள் கொடுக்கப்பட்டன என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். இருவரும் மேலும் சில விஷயங்கள் குறித்து பேசிக் கொண்டு இருந்தனர். 

எல்லாவற்றையும் அருவமாக இருந்த நாநா தன் ஃபோனில் பதிவு செய்து கொண்டான். 

காருக்குத் திரும்பிய பாபா, நாநாவின் வரவுக்காகக் காத்திருந்தான். 

சற்று நேரம் கழித்து கார் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த நாநா அருவத்திலிருந்து உருவத்திற்கு வந்தான். 

வீட்டிற்கு வந்த பிறகு நாநா சேகரித்த தகவல்களை பாபாவுடன் பகிர்ந்து கொண்டான். 

சில பழைய டெப்பாஸிட் கணக்குகளை சுபத்ராவின் உதவியுடன் முடித்து, சில இலட்சங்களை இருவரும் எடுத்துக் கொண்டு விட்டனர் என்பது தெரிந்தது பாபாவுக்கும் நாநாவுக்கும். 

" என்ன செய்யலாம்? போலீஸ் கம்ப்ளெய்ண்ட் கொடுக்கலாமா?" என்று கேட்டான் பாபா. 

" அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது. போலீஸ் இந்த கேஸ் எல்லாம் எடுத்துக்க மாட்டார்கள். எஃப் ஐ ஆர் கூட பதிவு செய்யமாட்டார்கள். இதில் நமக்கு என்ன சம்பந்தம் என்று கேட்பார்கள். நாம் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்றால், ' பேசாம போங்க ஸார் நாட்டுல இந்த மாதிரி எவ்வளவோ நடக்குது. இதில் போய் அனாவசியமாக உங்க டயத்தையும் எங்க டயத்தையும் வேஸ்ட் செய்ய வேண்டுமா? என்று சொல்லி அனுப்பிவிடுவார்கள்" என்றான் நாநா. 

" அப்போ இந்த தகவல்களால் யாருக்கு என்ன லாபம்? " என்று கேட்டான் பாபா. 

" அங்கேதான் இருக்கு இந்த நாநாவின் சாதுரியம்.‌ நாளக்கி நம்ம முரளீஸ் கஃபே முரளியை அழைத்துக்கொண்டு போய், அவருக்கு வேண்டிய பாங்க் லோனை வாங்கிக் கொடுத்துவிடுவேன். அதற்கு இன்று எனக்குக் கிடைத்த சில தகவல்களைப் பயன்படுத்திக் கொள்வேன்" என்றான் நாநா. 

" சரிதான். யாருக்காவது பயன் இருந்தால் சரி" என்றான் பாபா.‌

(தொடரும்) 

60 கருத்துகள்:

  1. இந்திரனுக்குத்தானே, யாரேனும் தவ முனிவர்களைப் போல நல்லவர்களாக இருந்துவிட்டால், எதிர்காலத்தில் நம் பதவிக்குப் போட்டியாகிவிடும் என்று ரம்பா (நான் தேவலோகத்து ரம்பாவைச் சொன்னேன்), ஊர்வசிலாம் அனுப்பி முனிவர்களின் தவத்தைக் கெடுக்க முயல்வார். அதுனால அவரை இழுத்தேன்.

    பதிலளிநீக்கு
  2. ஆவி கலைமகள் போன்றவை இவ்வளவு மெலிந்துவிட்டன? வாசகர்கள் எதையும் கனமாகவும் ஆழமாகவும் படிப்பதில்லை இக்காலங்களில். அதனால்தான் யூடியூபிலும் ஷார்ட்ஸ் போன்றவை வருகின்றன. பெரிய காணொளிகள்லகூட கருத்துகள் பகுதியில் இந்த நிமிடத்தில் இந்த சப்ஜெக்ட் பேசறாங்கன்னு புண்ணியவான்கள் போட்டு, தேவையில்லாமல் வளவள என்றிருக்கும் காணொளியில் நமக்குத் தேவையானவற்றை மாத்திரம் பார்க்கும்படிச் செய்துவிடுகிறார்கள்.

    சொல்லமுடியாது... எதிர்காலத்தில் ஆவி ஜூவி கலைமகள் போன்றவை உள்ளடக்கம் பகுதி மாத்திரமே கொண்டுவரலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். அப்படியும் நடக்கும்!

      நீக்கு
    2. இந்தப் புத்தகங்கள் எல்லாம் பார்த்தே பல ஆண்டுகள் ஆகிவிட்டன. முன்னெல்லாம் ஊர்களுக்குப் போகையில் பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் புத்தகக் கடைகளில் தொங்கும். இப்போதெல்லாம் அங்கேயும் போவதில்லை என்பதால் தெரியவே இல்லை.

      நீக்கு
  3. டவர் படங்களைப் பார்த்ததும், 90களிலேயே, துபாயில் புதிய டவர் கட்டவேண்டுமென்றால் டிசைன் புதிதாக இருந்தால்தான் அனுமதி கிடைக்கும். சும்மா மைசூர்பாக் கட்டிடங்களுக்கு, குடியிருப்பு பகுதிகளைத் தவிர வேறு எங்கும் அனுமநி கிடைக்காது.

    அந்தக் காலகட்டத்தில் முன்பு அபுதாபியில் நான்கு மாடிக் கட்டடங்களாக இருந்தவைகளை முனிசிபாலிட்டி இடிக்க உத்தரவிட்டு பெரிய உயரமான குடியிருப்புகளாக மாற்ற நெருக்கடி தந்ததால் அபுதாபியில் அப்போது வாடகை மிக அதிகம்.

    பதிலளிநீக்கு
  4. அருவமாக இருக்கும்போது ஆள் கையில் வைத்திருக்கும் மொபைலும் மாயமாகுமா? அட இது அதிசயமாக அல்லவா இருக்கு.. நல்ல வேளை... நாநாவுக்கு வசந்த் குணம் வரலை. இல்லைனாவந்த வேலையைப் பார்க்காமல் பெண்ணை ரசிப்பதில் நேரம் கடத்தியிருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு விளக்கம் சரோஜாதேவி சிப் பற்றி விளக்கும் போதே நாநா சொல்லியுள்ளார்.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. ​கீதா சாம்பசிவம் அவர்களின் குண்டக்க மண்டக்க, எசகு பிசகான கேள்விகளை சமாளித்த விதம் அருமை. சமாளிப்பு திலகம் என்று பட்டம் தரலாம். எல்லாம் மனைவியை சமாளித்த அனுபவத்தில் வந்ததா?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :))) அப்படித்தான் இருக்கும்!!

      நீக்கு
    2. எதுவும் குண்டக்க மண்டக்கனு எல்லாம் சொல்லும் அளவுக்கு மோசமானதோ உண்மையில்லாததோ இல்லை. எல்லோரும் பார்க்கப் பொதுவெளியில் எல்லோரும் பேசியது, நடந்து கொள்வது ஆகியவற்றைப் பார்த்த வருத்தத்தில் தான் கேட்டிருக்கேன். இவரை விட மோசமான அரசியல்வாதிகள் உண்டு. ஆனால் இவர் மட்டும் இப்படி வாங்கிக் கட்டிக் கொள்கிறார். அதிலும் அந்த சிஜேபி கட்சித் தலைவர் சவால் விடுகிறார், தன்னோடு போட்டி போடச் சொல்லி. அவரை அவர் பெற்றோர்கள் படிக்க வைச்சு ஆளாக்கி அம்பேரிக்காவின் பாஸ்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் சேர்த்துப் படிக்க வைச்சிருக்காங்க. அல்லது அவராகவே தகுதியை வளர்த்திருக்கார். அதற்கான வாய்ப்புகள் அவருக்குக் கிடைச்சிருக்கு. ஆனால் மோதி அப்படி இல்லையே. அவர் தந்தை ஒரு தேநீர்க்கடைக்காரர் தான். அதனால் அவரும் அந்த வேலையைத் தான் செய்தார். அதை ஒளிக்கவோ மறுக்கவோ இல்லை. தன் படிப்போடு பிரதமரின் படிப்பைச் சேர்த்து எடை போட்டுப் பார்த்து அவரைக் கேலி செய்வது என்பதெல்லாம் சரியாத் தெரியலை. :(

      நீக்கு
    3. அதோடு அந்த சிஜேபி கட்சித்தலைவருக்கு 30 வயதுக்குள் இருக்கலாமோ என்னமோ? இவர் போய் 75 வயதாகும் மோதியைத் தன்னுடன் போட்டி போட வரச் சொல்கிறார். ஆனால் பிரதமர் பதவியிலும் அவர் இருக்கக் கூடாது என்கிறார். வேறே தலைவர் இருக்காங்களானு கேட்டால் இனிமேல் தான் தேடணுமாம். :(

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.
    படமும் , பதமும் பகுதியில்பானு, நெல்லை அனுப்பிய படங்களும் அதற்கு விளக்கமும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. கதையில் அருவமாக வங்கிக்கு சென்று செய்திகளை சேகரித்து கொண்டு லோன் வாங்க பயன் படுத்தி கொண்டார்களே!
    கடைசியில் சொல்வது போல யாருக்காவது பயன் இருந்தால் சரிதான்.

    பதிலளிநீக்கு
  10. ​அஸ்தமன போட்டோ அழகு,

    பதிலளிநீக்கு
  11. எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர் ஒருவரை நாற்பதாண்டுகளுக்கு முன்பு பட்டுக்கோட்டையில் சந்தித்து இருக்கின்றேன்...

    ஒதுக்கீடுகளினால் ஒதுக்கப்பட்ட இடங்களில் எனது நிலையறிந்து
    மிகவும் வருந்தினார்...

    தேங்காய் மண்டியில் கணக்கெழுதவா உன் படிப்பு ?.. என்று மனம் இரங்கினார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! என்ன செய்வது?

      நீக்கு
    2. மதுரைக்குப் போய்க் கொண்டிருந்தவரையிலும் ஓரிரு கூடப் படித்த சிநேகிதிகளையாவது பார்ப்பேன். இப்போதெல்லாம் எதுவும் இல்லை. யாரையும் பார்க்கவே இல்லை.

      நீக்கு
  12. கொஞ்சம் இல்லை, நிறையவே சங்கடமான கேள்விகள் என்பது தெரியும். என்றாலும் சரியான பதில் கிடைக்குமா என்பதே என் எதிர்பார்ப்பு. அது பொய்த்துவிட்டது. :( யாருமே இதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனாலும் உங்க ஆதங்கங்களை எ பி மூலம் எல்லோருக்கும் தெரிவித்துவிட்டீர்கள்

      நீக்கு
    2. Actually I wanted to post in my blogpage. But no time.

      நீக்கு
  13. மேலோட்டமாகப் பதில் சொன்னாலும் இருவரும் பதில்கள் அளித்தமைக்கு நன்றி. என்னோட எண்ணம் மற்ற கட்சித் தலைவர்களில் அதுவும் பெரிய கட்சிகளில் உள்ள தலைவர்கள், தலைவிகள் யாருமே அதிகம் படிச்சதில்லை. உதாரணமாகக் காங்கிரசிலேயே சொல்லலாம். ஆனாலும் அவங்களை எல்லாம் பத்தி யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. மோதி பிரதமராக வந்ததில் இருந்தே இப்படிப்பட்ட கேள்விகள், கேலிகள், உருவத்தைக் கேலி செய்வது, அவர் அம்மாவைக் கேவலமாகப் பேசுவது எனப் படித்த அறிவு ஜீவிகள் பலரும் சந்தோஷம் அடைகின்றனர். அதைப் பொதுவெளியில் அல்லது பேட்டியாகக் கொடுத்தும் சந்தோஷம் அடைகின்றனர். மிக்க வியப்பான ஒரு விஷயம் இது. குறிப்பிட்ட ஒருவரிடம் ஏன் இந்த துவேஷம்? இதுவே என் ஆச்சரியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழுத்த மரம்தான் கல்லடி படும்.

      நீக்கு
    2. கல்லடி இல்லை அது. மரத்தையே வெட்டும் முயற்சி. விரைவில் மரத்தை வெட்டிச் சாய்த்துவிடுவார்களோ எனத் தோன்றுகிறது. :(

      நீக்கு
    3. அவங்களோட நோக்கம் நிறைவேறிடுச்சே உங்களைப் போன்றவர்கள் சீரியஸா நினைப்பதால்.

      பெண்களைப் பற்றி கேலி பேசணும் என்றால் முதலில் உருவம், அழகு நிறம் என்று ஆரம்பிப்பார்கள். எதுவும் வேலைக்காகாது என்றால் அவரது கேரக்டரைப் பற்றிப் பேசுவார்கள். மோதியைப் பற்றி எதுவும் சொல்வதற்குக் கிடைக்கவில்லை. அதனால் எதையாவது எடுத்துச் சொல்கின்றனர். சொல்பவர்கள் கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டி போட்டு வெற்றி பெற்றதில்லை. மோதி, கடந்த 25 வருடங்களாக மக்கள் தேர்ந்தெடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். அவ்ளோதான் விஷயம்.

      நீக்கு
  14. பானுமதி போட்டிருக்கும் படங்களும் அருமையாக இருக்கின்றன. கனடாவுக்குப் போய் ஒரு வருஷம் ஆகிறதோ பானுமதி? எப்போ இந்தியா?

    நெல்லையின் சூர்ய அஸ்தமனப் படமும் கடலும் அழகு. அமைதியான அழகு. ஜெல்லி மீன்களைப் பார்த்ததில்லை என்றே நினைக்கிறேன். நெல்லை அவற்றைப் பற்றிச் சொல்லி இருக்கும் விஷயமும் தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெ த ஜெல்லி மீன்கள் படம் பகிரவும்.

      நீக்கு
    2. நிச்சயம் படமெடுத்திருப்பேன். அனுப்பிடறேன்.

      நீக்கு
  15. //உலகத்திலேயே ஜீவி சார் மாத்திரம்தான், உணவு பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவரோ என்று தோன்றும் ஹாஹா. //அப்ப்டித் தெரியலை. அவருக்கும் சாப்பிடாமலா இருக்க முடியும்? பொதுவாகவே மற்றப் பதிவுகளை விட முன்னெல்லாம் சமையல் பதிவுகளில் அதிகமான கருத்துகள் வந்து கொண்டிருந்தன. இப்போதெல்லாம் அவர் அப்படிச் சொல்லுவதில்லை. ஏனெனில் திங்கள் பதிவுகளில் 30/40 கருத்துகள் வந்தால் பெரிசு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதெல்லாம் ஜீவி செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி பதிவுகள் மட்டுமே படிப்பார்.

      நீக்கு
  16. அருவமான நாநா செய்த வேலைகளைப் பற்றி நான் கேட்க நினைச்சிருந்த கேள்விகள் ஏற்கெனவே கேட்கப்பட்டு பதிலும் சொல்லி இருக்கீங்க. அது சரி, எதுக்கு இந்தக் கஷ்டம் எல்லாம்? வங்கியின் இரண்டு பொறுப்பாளர்களையும் குறித்துக் காவல்துறையிடம் புகார் கொடுத்துப் பிடித்துக் கொடுக்க வேண்டாமோ? யாரோட டெபாசிடையோ காலி பண்ணி இருக்காங்க. அவங்க வாரிசுகள் வந்து கேட்டால் என்ன சொல்வாங்க? இது அநியாயமா இல்லையோ? தெரிஞ்சும் இதுக்குத் துணை போவது என்னளவில் சரியாகப் படலை. :( (கதையாகவே இருந்தாலும்.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே! நாடு போகின்ற போக்கே சரியில்லை!

      நீக்கு
  17. மோதி ஜி அவர்களது ஆட்சியில் முன்னேற்றங்கள் இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள் - வினோத பிறப்பினர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலும் அறிவு ஜீவிகள், கல்லூரிப் பேராசிரியர்கள், பிரபலமான எழுத்தாளர்கள், தற்போதைய இளைஞர்களில் இந்த ஜென் ஜீ என்போர் மற்றும் இடது சாரிக் கொள்கையைக் கடைப்பிடிப்போர் ஆகியோர் தான் நாடு முன்னேறவில்லை என்பதாகச் சொல்கின்றனர்.

      நீக்கு
    2. மோதி எதிர்ப்புகளினால் வளர்ச்சி அடைந்தவர்,அடைபவர், அடைவார்.

      நீக்கு
    3. //நாடு முன்னேறவில்லை என்பதாகச் சொல்கின்றனர்// நாடு முன்னேறாட்டிப் பரவாயில்லை. இந்த மாதிரிப் பேசுபவர்களால் அவர்களது வீடாவது முன்னேறினால் சரிதான். அறிவு ஜீவிகள் என்பவர்களால் நாட்டிற்கு ஒரு பிரயோசனமும் கிடையாது, அவங்க வாக்களிக்கக்கூட வெளியில் நடக்கமாட்டாங்க. யாருமே அவங்க அவங்க கட்சி சார்பு நிலைக்காக மத்தவங்களைக் குறை சொல்வாங்க. அதனால் அதனையெல்லாம் கண்டுகொள்ளவே கூடாது. அரசியல் சார்பு இல்லாமல் கருத்து எழுதறவங்க, பேசறவங்க எனக்குத் தெரிந்து யாருமே இல்லை.

      நீக்கு
  18. ஆனால் நான் அறிந்தவரையிலும் பார்த்தவரையிலும் இப்போதைய இளைஞர்கள், இளைஞிகள் பெரியவர்களை முக்கியமாய் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களை அலட்சியமாகவே நடத்துகிறார்கள். அவர்களின் அனுபவங்களையோ, ஆற்றல்களையோ லட்சியம் செய்வதே இல்லை. இன்றைய தொழில்நுட்பம் தங்களுக்குத் தெரியும் என்பதிலே அதீத கர்வத்துடன் பெரியவங்களை லட்சியம் செய்வதில்லை. பெரியவங்க உழைத்த உழைப்பின் தொடர்ச்சி தான் இப்போதைய முன்னேறிய தொழில்நுட்பங்கள் என்பதைப் புரிஞ்சுக்கவும் இல்லை. இவங்களுக்கு என்ன தெரியும் என்பதான உணர்வு. முக்கியமாய்க் குழந்தை பெற்றுக்கொள்வதில். இப்போதைய இளைஞர் சமுதாயம் பெரிதும் ஆதரிப்பதில்லை என்பதோடு பயமும் இருக்கு. ஒரு குழந்தையையே சரியாக வளர்க்க முடியலை அவங்களாலே. ஆகவே ஒரே குழந்தை போதும் என்னும் மனப்பான்மை நிறையப் பேரிடம் இருக்கு. என் சொந்தக்காரப் பெண் ஒருத்தர் இரண்டு குழந்தை எல்லாம் இந்தக் காலத்தில் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது என்றார். இதை எல்லாம் பாரக்கையில் முந்தைய காலத்துப் பெற்றோர்கள் குறைந்த பக்ஷமாக நாலைந்து குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கிப் படிக்கவும் வைச்சிருப்பது ரொம்பப் பெரிய விஷயம் இல்லையா? என்னைக் கேட்டால் இப்போதைய இளைஞர் சமுதாயம் தான் பின் தங்கி இருக்கிறது என்பேன். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /குறைந்த பக்ஷமாக நாலைந்து குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கிப் படிக்கவும் வைச்சிருப்பது// இல்லை..தெரியாமல்தான் கேட்கிறேன்.. முந்தைய காலத்துப் பெற்றோர்கள், வளர்த்து ஆளாக்கி படிக்க வைக்க என்னதான் செஞ்சாங்க? அரசுப் பள்ளிக்கூடம், டியூஷன் போவதே கேவலம், கொடுத்ததை எடுத்துட்டு போனாங்க -மோர் சாதம், கலந்த சாதம்னு, கொடுத்த யூனிஃபார்ம். பெற்றோரிடம் இதெல்லாம் கேட்கணும்னு தெரியாம எதையுமே கேட்டதில்லை, எப்பவாச்சும் பால் ஐஸ் வாங்கித் தந்தாலோ இல்லை கடலை மிட்டாய் வாங்கித் தந்தாலோ, ஆஹா என்ன அன்பு என்று நினைத்த பசங்க. இந்தக் காலத்துல இதனை நினைச்சுப் பார்க்க முடியுமா? ப்ளே ஸ்டேஷன், மொபைல், ....என்று சின்னக் குழந்தைகள், பிறகு பாக்கெட் மணி, பிறகு வெளியில் நண்ப நண்பிகளோடு உணவு.. இதையெல்லாம் நீங்க கற்பனை பண்ணிப் பார்த்திருக்கீங்களா? இவ்வளவு செலவு, மற்றும் பெரிய பெரிய ஸ்கூல், அதற்கேற்ற செலவுகள்.. எவ்வளவு இருக்கு... இதுல ஆளுக்கு நாலைஞ்சு பெத்துக்கணுமாமே..எந்த எந்த ஊர்ல உள்ளவங்கள்லாம் நாலஞ்சு பெத்துக்கணுமோ அங்கெல்லாம் கீசா மேடம் இலவச,, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் காப்பகம் நடத்தினால் சொல்லுங்க. அப்புறம் யோசிக்கலாம்.

      நீக்கு
    2. யோசிக்கப்படவேண்டிய விஷயங்கள். காலங்கள் மாறும்போது காட்சிகளும் மாறத்தான் செய்யும்.

      நீக்கு
    3. கீசா மேடத்துக்குத் தெரிந்தே இந்தக் கேள்வி கேட்டிருக்காங்க. என்னுடைய சிறு வயதிலும், அனேகமா எல்லோர் குடும்பத்திலும், பெண்ணுக்கு தாவணி அல்லது யூனிஃபார்ம் வாங்கினாலும் இல்லை பசங்களுக்கு உடை வாங்கினாலும் உள்ள டக் வைத்துத் தைக்கச் சொல்வாங்க. உயர உயர, அதைப் பிரிச்சுவிட்டு உபயோகப்படுத்துவாங்க. அண்ணன் உடை அடுத்து தம்பிக்கு வரும். இதையெல்லாம் இப்போ கற்பனை செய்ய முடியுமா? மோர் சாதம் கையில் குழம்பு விட்டு பசங்களுக்கு ராமாயணம் மஹாபாரதம் இல்லை மத்த கதைகளைச் சொல்லி போடுவாங்க. நல்லா தொந்தி வரும் அளவு சின்னக் குழந்தைகள் சாப்பிடும். இப்போ குழந்தைகள்ட இந்த மாதிரி கதையைச் சொல்ல முடியுமா? இல்லை தொலைக்காட்சியில் கார்ட்டுன் அல்லது கையில் மொபைல் கொடுக்காமல் சோத்தைப் போட இயலுமா?

      நீக்கு
  19. நமக்கு வேலை வந்துடும் எனக் கணவர் சில காய்களைத் தவிர்ப்பாரா என நெல்லை கேட்டிருப்பது சிரிப்பை வரவழைத்தது. எங்க வீட்டில் இந்த வாழைப்பூ, கீரை, வாழைத்தண்டு, முருங்கைக்கீரை போன்றதெல்லாம் ஆயவோ நறுக்கவோ வீட்டில் உள்ள எந்த ஆண்களும் வரமாட்டார்கள். மாமா பெரும்பாலும் சின்ன/பெரிய வெங்காயம், மாங்காய் ஊறுகாய்க்குத் மற்றும் தொக்குக்கு, ஆவக்காய்க்கு என நறுக்குவார். சில சமயம் நேரம் ஆகிவிட்டது என்றால் கொத்தவரை, பீன்ஸ் போன்றவை நறுக்கிக் கொடுப்பார். கீரை எல்லாம் நான் கட்டைப் பிரிச்சு உதறிப் போட்டு அதில் இருக்கும் புற்கள், மற்றச் செடிகள், வேறே கீரை வகைகள் பூச்சி பிடிச்ச கீரை எனு பார்த்து எல்லாவற்றையும் நீக்கிவிட்டுத் தண்டு இருந்தால் அதைத் தனியாக எடுத்து வைச்சுட்டுக் கீரையை நறுக்குவேன். தண்டு இருக்கும் அளவைப் பொறுத்து ஒரு நாள் சாம்பாருக்கு அல்லது, பொரிச்ச குழம்பு அல்லது மோர்க்கூட்டு எனப் பண்ணுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வேறே கீரை வகைகள் பூச்சி பிடிச்ச கீரை எனு பார்த்து எல்லாவற்றையும் நீக்கிவிட்டுத் // ஹா ஹா ஹா. நான் பெரும்பாலும் கீரையை ஆய்ந்து கொடுப்பேன். பிறகு மனைவி, அதனை முழுவதும் நம்பாமல் ஒவ்வொரு இலைக்குப் பின்னாலும் ஏதேனும் வலை இருக்கா, கூடு கட்டியிருக்கா என்றெல்லாம் ஆராய்வாள். இந்தப் பெண்களை அதனால்தான் ஹோட்டல் வேலைகளுக்கு அதிலும் சமையல் வேலைகளுக்கு சேர்ப்பதே இல்லை. இவங்க எல்லாத்தையும் ஆராய்ந்து சுத்தம் செய்து தயார் செய்தால், அனேகமா இரவுச் சாப்பாடு கூட தயாராகாது. ஹா ஹா ஹா

      நீக்கு
  20. //டாப்பில் இருப்பவர்களைத்தான் சொல்ல வேண்டும் அல்லவா// அப்படியா சொல்றாங்க? சன் குழுமம் ஜிஸ்கொயர் போன்றவை கார்பொரேட் நிறுவனங்கள் அல்லவா? தமிழ்நாட்டில் சொல்லும்போது இவைகளைச் சொல்லுவதுதானே முறை (கட்சி ஆதரவு இருப்பதால்தானே இத்தகைய நிறுவனங்கள் மேலே வந்தன?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவ்ங்களைப் பொறுத்தவரை அம்பானியும், அதானியும் தான் தொழிலதிபர்கள். ஆனால் உண்மையில் அம்பானி குழுமம் எண்பதுகளில் ஆரம்பிச்சுத் தொண்ணூறுகளில் நாங்க ஜாம்நகரில் இருக்கையில் ரிலையன்ஸ் குழுமம் மிகப் பெரிதாகப் பேசப்பட்டது. அவங்க தான் டெக்ஸ்டைல்ஸுக்கும் வந்து பழமையான பாம்பே டையிங், கடாவ், அர்விந்த் மில், கார்டன், காலி க்ளாத் போன்ற மில்களின் துணிகளைக் காணாமல் போகச் செய்தனர். காலிநிட் புடைவை என்னிடம் 2,3 இருந்தது. கடாவில் வாயில் புடைவைகள், அர்விந்த் செமி வாயில் புடைவைகள்னு நிறையக் கட்டி இருக்கேன். அது மாதிரி மில் புடைவைகள் இப்போதெல்லாம் பார்க்கவே முடியாது. அதானி குழுமமும் காங்கிரஸ் ஆட்சியில் தான் தொடங்கப்பட்டது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தப்போக் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியது. ஆனால் இதெல்லாம் மோதி வந்து தான் துவக்கி வைத்தார் என்பதாக இன்றைய விமரிசனங்கள் சொல்கின்றன. :))))

      நீக்கு
    2. அரசியல்வாதிகள் சொல்வதை நம்புகின்ற கண்மூடித்தனமான கூட்டம் இருப்பதால்தான் எல்லோரும் இஷ்டத்துக்கு அடித்துவிடுகிறார்கள்!

      நீக்கு
  21. /// பெரும்பாலும் அறிவு ஜீவிகள்,///

    அறிவு ஜீவிகள் என்று சொல்லிக்
    கொள்ளுகிறவர் தான் அதிகம்..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!