கீழ் வானம் சிவக்கும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கீழ் வானம் சிவக்கும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.6.11

என்ன பாட்டுப் பாட....

                               
அரசாணிக்கால்.....



சமீபத்தில் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன். முதல் நாள் வரவேற்பில் இசைக் கச்சேரி. 'இது மாதிரி நிகழ்ச்சிகளில் இந்த அலறல்கள் இது எதற்கோ' என்று பாடத் தோன்றும்.நீண்ட நாள் கழித்து நிறைய உறவினர்களை, நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் காது கிழியும் அளவு பாட்டுப் பாடி பேசுவது காதில் விழாத அளவு செய்வார்கள்.அருகில் இருப்பவர்களோடு உரத்த குரலில் அலறி அலறி பேசிக் கொண்டிருப்போம். திடீரென பாடல் நிற்கும். நாம் அலறுவது நமக்கே விநோதமாக இருக்கும். அடுத்த முறை அலற முடியாத வண்ணம் தொண்டையும் கட்டி இருக்கும். அப்போது பார்த்து வீட்டு பெரியவர்கள் யாராவது வந்து ஏதாவது கேள்வி கேட்பார்கள்! அடுத்த அலறல் ஸாரி பாடல் தொடங்கி இருக்கும். சரி, நன்றாகவாவது பாடுகிறார்களா என்றால் நூற்றுக்கு எழுபது சதவிகிதம் சுமார் ரகம்தான்.

மேடையில் அவ்வப்போது பாடும் நண்பர் ஒருவர் என்னுடன் ஒரு திருமண வரவேற்புக்கு வந்திருந்தார். இப்போது சமீப காலமாக அவர் பாடுவதில்லை. மேடையில் பாடிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் இவர் பழைய தோஸ்த் போலும். பரஸ்பர விசாரிப்புகளுக்கு பின் ஒரு பாடல் இவரைப் பாட அழைக்க, நண்பர் ஆர்வத்துடன் மேடை ஏறி 'பாடும்போது நான் தென்றல் காற்று' என்று கானமிசைத்து பூரிப்புடன் இறங்கினார். அவர் சொல்லும்போது மேடையில் அவர்கள் வைத்திருக்கும் ஒருவகை இசைக் கருவியில் பாடலின் பின்னணி இசைகள் முன்னரே Feed செய்யப் பட்டிருக்கும் என்றார். அப்புறம் சில சமயம் அப்படியும் உண்டு என்று அவரே திருத்தமும் கொண்டு வந்தார். எவ்வளவு உண்மையோ...

வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருவோம்....இதில் திருமண நிகழ்ச்சி சம்பந்தப் பட்ட பாடல்களை தேர்ந்தெடுத்து வைத்திருப்பார்கள். அந்தந்த தருணங்களில் அதைப் பெருமையாக (!) பாடத் தொடங்குவார்கள். 'மணமகளே மணமகளே வா வா', 'வாராய் என் தோழி வாராயோ' போன்ற பாடல்கள் இந்த வகைக்கு பிரபலம். இப்போதெல்லாம் 'புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே' பாடல் பாடுவதில்லை என்று நினைக்கிறேன். பாடல் மட்டுமல்ல அதன் கருத்துகளும் அவுட் டேட்டட் ஆக கருதக் கூடிய பாடலாக இருக்கலாம்!

நான் சென்ற நிகழ்ச்சியில் வரவேற்பில் பாடிய பாடல் ஒன்று பற்றியும் திருமணத்தின் போது நாதஸ்வரத்த்தில் வந்த பாடல் பற்றியும் சிந்தனையில் தோன்றிய முத்துகளை இங்கு சிதறடிக்கலாம் என்று எண்ணம்! முதலாவதாக வரவேற்பில் பாடிய பாடல். 'கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான்' பாடல்.

படக் காட்ச்சியின் படியும் வார்த்தை அமைப்பின் படியும் திருமண நாள் குறித்து பாடும் பாடல்தான். சந்தேகமில்லை. அந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் மிகக் குறைவாகத்தான் இருப்பார்கள். அல்லது காட்சி அமைப்பாவது - ஏன் பாடுகிறார் - என்பதாவது தெரிந்துதான் இருக்கும். கிளைமேக்சில் சாகப் போகிறாள் என்று முடிவு தெரிந்து விட்ட நோயைக் கொண்ட கதாநாயகியைக் குறித்து பாடப் படும், லேசான சோகம் இழையோடும் சரணங்களைக் கொண்ட அந்தப் பாடலை வெறும் பல்லவி வரிகளுக்காகவும், எம் எஸ் வியின் கவர்ச்சியான ஆரம்ப இசைக்காகவும் மட்டும் திருமண வரவேற்பில் பாடுவது சரியா...?

இரண்டாவது பாடல் பற்றி...

பாடலில் தவறில்லை. நடுவில் வரும் வரிகளைப் பிய்த்து பாடும் போது வரும் தாக்கம் பற்றி. நல்ல வேளை நாயனம்!

திருமண நாள். நாயனக்காரர் பல பாடல்கள் வாசித்தபின் 'அலைபாயுதே' வை வாசிக்க எடுத்தார். இந்தப் பாடல்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது நாயனக் காரர் மேடை மேல் கண்ணாக இருக்க வேண்டும். அங்கிருந்து யாராவது ஒருவர் திடீரென ஒரு விரலை நீட்டி 'கொன்னுடுவேன்' பாணியில் ஆட்ட ஆரம்பிக்க, இரண்டு மூன்று விரல்கள் அந்த ஆட்டத்தில் அணி வகுக்க, நாயனக்காரர் திடீரென நாயன முனையில் பாம்பைக் கண்டது போல வீறிட வேண்டும். கெட்டி மேளம்! மண மகனுக்கும் மண மகளுக்கும் கையில் காப்பு கட்டும் நேரம் இந்தப் பாடல்.என் உதடுகள் நாயன வாசிப்புடன் சேர்ந்து மனதுக்குள் வரிகளை முணுமுணுத்துக் கொண்டிருந்த நேரம்! (பின்னே...தெரிந்த பாடலாச்சே...) மணமகன் கையில் காப்பு கட்டி ஐயர் விரலை ஆட்ட கெட்டி மேளம்....நாயனக் காரர் நிறுத்தி நிதானமாக அந்த இடத்தில் வாசித்த இடம் 'இது முறையா...'....! அடுத்து அவர் சுதாரித்து பிர்கா இழுத்து தாளம் சரி செய்து அடுத்த வரி வருவதற்குள் மணமகள் கையில் மணமகன் கட்டும் காப்பு....மறுபடி விரலாட்டம். மறுபடி கெட்டிமேள வீறிடல். இப்போது ஸ்லோ மோஷனில் வந்த வரிகள் 'இது தகுமா..'...! மணமக்கள் இருவரும் காப்பு கட்டி எழுந்து நிற்கும்போது தருமம்தானா நியாம்தானா என்று கேட்டு -- வாசித்து முடித்தார்! இது சுவாரஸ்யத்துக்காக எழுதியது. இப்படிப் பார்த்தால் நிறைய பாடல்கள் வாசிக்க முடியாமல் போகலாம்!   
    
அப்புறம் ஒரு விஷயம்...

இந்த மாதிரி திருமண நிகழ்ச்சி முழுதும் அதிகாரபூர்வ புகைப்படக் காரர்களும், உறவினர்களும் மேடையில் நின்று விட்டால் திருமண நிகழ்ச்சியை ஹாலில் அமர்ந்திருப்பவர்கள் எப்படி பார்ப்பார்கள்? எல்கே கூட முன்பு ஒரு பதிவில் இதையே சொல்லியிருந்த ஞாபகம் வருகிறது. முன்பு கேரளத் திருமணங்கள் பதிவில் போட்ட மேடை சரியாக இருக்கலாம்!