"ராசி நல்ல ராசி...உன்னை மாலையிட்ட மங்கை மகராசி... உன் கை ராசி.." ஏ.எம். ராஜா பாடிக் கொண்டிருந்தார்.
அடுத்த பாடலாக,
"ராசிதான்..கை ராசிதான்.." பாடல் ஒலிக்கத் தொடங்கியதும் ரேடியோக் காரர்கள் பாடல் போடும் 'தீம்' புரிந்தது.
கூடவே சில சிந்தனைகளும் கிளர்ந்தெழுந்தது!

சில பேர்,"ராசியான கை உங்க கையால முதல் போணி பண்ணினா ரொம்ப ராசி சார்.." என்பார்கள். சில பேர் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். ஒன்றும் சொல்லவில்லை என்றால் அவர்களைப் பொறுத்தவரை நம் கைகளுக்கு ராசி கிடையாதா, அல்லது அவர்களுக்கு அதில் நம்பிக்கை இல்லையா என்றும் தெரியாது!
எனக்கு இதில் நம்பிக்கை கிடையாது.
அப்படித்தான் சொல்ல வேண்டும். பகுத்தறிவு, விஞ்ஞான அறிவு எல்லாம் கிடையாது.
பட்டறிவு. அதாவது பட்ட அறிவு...!

சில வியாபாரிகள் நாம் முதலில் போய் நின்றிந்தாலும் கூட நம்மை கவனிக்காது, அல்லது கவனிக்காத மாதிரி வேறு வேலை செய்துகொண்டே வேறு ஆட்களுக்கு விற்பனை செய்வதைப் பார்த்திருக்கிறேன். எனக்கும் அதில் சந்தோஷம்தான். உண்மையில் முதல் ஆளாக நாம் வாங்கி விடக் கூடாதே என்ற ஜாக்கிரதை உணர்வும் எனக்கு இருக்கும். ஏனென்றால் மறுநாள் அவர்களைப் பார்க்கும்போது எங்கே 'நேற்று சரியான வியாபரமே இல்லை சார்' என்று மறைமுகமாக சொல்வார்களோ என்று பயமாக இருக்கும். சிலசமயம் அதனாலேயே அங்கு வாங்க வேண்டிய பொருள் இருநதால் கூட, முதல் நாள் அங்கு முதல் ஆளாக வாங்க வேண்டிய சந்தர்ப்பம் வந்திருந்தால், இன்று தவிர்த்து விடுவேன்! ராசியில்லாதவன் என்று பெயர் வாங்குவதில் விருப்பம் இல்லை எனக்கு! ஒரு வேளை நேற்று வியாபாரம் ரொம்ப அமோகம் என்று கூடச் சொல்லலாம். ஆனால் எனக்குத் தேவை இல்லை. பின்னதில் கிடைக்கும் சிறு மனச் சந்தோஷத்தை விட முன்னதில் தவிர்க்கும் மனச் சுருக்கம் பெரிது. என்ன சொல்கிறீர்கள்?

முதல் வியாபாரம் என்று சொல்வதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. தந்திரம் என்று கூட சொல்லலாம். ஆட்டோ ஆகட்டும், பொருட்கள் ஆகட்டும், 'முதல் போணி சார்...' என்று குரல் கொடுத்தார்கள் என்றால் நாம் பேரம் பேசக் கூடாது என்று அர்த்தம்!
ராசியான கை என்று சொல்லப் படுபவர்களை எல்லா இடத்திலும் அப்படிதான் சொல்கிறார்களா என்று ஒரு சந்தேகம் உண்டு. எனக்கு அபபடி இல்லை. ஒருவர் இப்படி. இன்னொருவர் அபபடி! ராசியான கை என்று சொல்லும்போது மகிழ்ந்து போகாமலிருக்கப் பழகி விட்டேன். மாற்றுக் கருத்தில் மனம் சுருங்காமலிருக்கப் பழகிக் கொண்டிருக்கிறேன்!
வியாபாரிகள் இப்படிச் சொல்வதில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் தந்திரமும் உண்டு என்று தெரியும் ஏன் 'உம' விகுதி சேர்க்கிறேன் என்றால் என் நண்பர் ஒருவர் இருக்குமிடம் தேடி சில பொருட்கள் வரும். விலையும் டோக்கன் அமவுண்ட் தான்! 'நாம் கே வாசி' ஓரிரு ரூபாய் வாங்கிச் செல்வார்கள்.

"இப்படி ஒருவரைப் பற்றி கைராசி என்று சொல்கிறீர்களே, அப்போது பக்கத்தில் நிற்கும் மற்ற வாடிக்கையாளர் மனம் என்ன நினைக்கும் என்று யோசிக்க மாட்டீர்களா" என்று என் வியாபார நண்பர் ஒருவரைக் கேட்டேன்.
"எனக்கு எல்லார் கையுமே ராசிதான் சார்...அதனாலதானே எங்க பொழைப்பு...ஆனால் சில பேரு கை ரொம்ப ராசி.." என்றார்!
என்னையும் சில பேர் உங்க கை ராசி சொல்லியிருக்கிறார்கள் என்பதில் ஒரு ரகசிய திருப்தியும் உண்டு. நான் இப்படிச் சொல்லியிருக்கிறேன் என்று வெளியில் சொல்லி விடாதீர்கள்.
அவர்கள் ராசி பார்ப்பது இருக்கட்டும், அவர்களிடம் பொருள் வாங்கிய நாம் என்ன பார்ப்பது? வாங்கி வந்த பொருள் சரியில்லை, அல்லது தொலைந்து விட்டது என்றோ நாம் முதலில் ஆட்டோவிலோ டேக்சியிலோ ஏறிச் சென்ற வேலை நடக்கவில்லை என்றால் அந்தக் கடைகளை நாம் தவிர்க்க வேண்டுமா அல்லது முதலில் 'போணி' செய்வதை தவிர்க்க வேண்டுமா?!!
ராசியான பேனா, ராசியான சட்டை என்று நான் எதுவும் வைத்துக் கொண்டது கிடையாது. நண்பர்களிடமும் ராசி பார்ப்பதில்லை. என் வேலைகளைச் செய்யும் போது ராகு காலம் வந்தால் அஷ்டமி போன்ற தினங்கள் வந்தால் கவலைப் படுவது இல்லை. ஒரு வகையில் மகிழ்ச்சிதான். எப்போதும் இருப்பதைவிட கூட்டம் குறைவாக வேலைகளை எளிதில் முடித்து வரலாம்! அபபடி முடித்துமிருக்கிறேன்.
படங்கள் : நன்றி கூகிள், ஃபோட்டோ நெட்.