எனக்குப் பிடித்தால் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்கக் கூடாது! இந்த டிஷ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் பெரிய மகனுக்குப் பிடிக்காது. அவன் என் அப்பா போல! அரிசி மாவு மோர்க்களிதான் அவனுக்குப் பிடிக்கும். அதுவும் விசுவின் பாஷையில் டகடகடகவென நல்லெண்ணெய் மிதக்கணும்!
வாரத்தில் இரண்டு நாட்கள் இதைச் செய்துவிடச் சொல்லி என் பாஸ் கிட்டச்
சொல்வேன். ஒவ்வொரு நாளும் 'இன்றிரவு டின்னருக்கு என்ன' என்று அயர்ச்சியாவார்
; டென்ஷனாவார் ; கவலையாவார் ; குழப்பமாவார்... ஆனாலும் இதை வாரம் (அல்லது 15 நாட்களுக்கு) ஒரு முறைதான் செய்வார்!
சரி நேயர்களே... இப்போது செய்முறைக்குப்
போவோமா... ஆங்..? யாரது அங்கே எங்களுக்குத் தெரியும் என்று குரல்
கொடுப்பது? விடுங்கள்... அதோ ரெண்டு பேர் தெரியாதவர்கள் இருக்கிறார்கள்..
அவர்களுக்காக.. அல்லது இப்போது இல்லாவிட்டாலும் அப்புறம் லேட்டாக
வருபவர்கள் இந்த போர்டில் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.. ஓகேயா..
இனி, செய்முறை!
எப்போது தேவையோ அதற்கு நாலு மணிநேரம் முன்பாக ஜவ்வரிசியை நன்றாகக் களைந்து
ஊற வைத்து விடலாம். அதை அப்போதே புளிப்பு மோரிலேயே ஊறவும் வைக்கலாம்.
கீதா மாமி இன்னும் குறைந்த நேரம் ஊறினாலே போதும் என்றோ, வெந்நீரில் ஊற
வைக்கலாம் என்றோ சொல்வார்கள்.
குக்கரில் நல்லெண்ணெய் (அதுவும் செக்கு எண்ணெயாக இருந்தால் வாசனை!)
விட்டுக் கொண்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மோர்மிளகாய் (இது கூட
முக்கியம்...
சுவை சேர்க்க இது அவசியம்), சற்றுத் தூக்கலாகவே பெருங்காயம் போட்டு (பிடிக்காது என்றால் கம்மியாகவே போட்டுக் கொள்ளுங்கள்)தாளித்துக் கொண்டு ஊறியிருக்கும் ஜவ்வரிசியை அதிலிட்டு புளிப்பு மோர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து புரட்டி விட்டு, குக்கரை மூடி உங்கள் தேவைப் பக்குவத்தில் இறக்கி வைக்கலாம். நாங்கள் 6 விசிலில் இறக்குவோம். நல்லெண்ணெய் கொஞ்சம் கூட விடலாம். சுவை!
அப்படியே சாப்பிடலாம்! தொட்டுக்கொள்ள ஒன்றும் தேவை இல்லை. என்
அப்பாவுக்கு அரிசிமாவு மோர்க்கூழ்தான் இஷ்டம் என்றாலும் இதுவும்
சாப்பிடுவார். தோசை மிளகாய்ப்பொடிக்கு எண்ணெய் சேர்க்காமல் மேலே தூவிச்
சாப்பிடுவார்!
பின்குறிப்பு :: மோர்க்கூழும் மோர்க்களியும் ஒன்றே!







