தொடர் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடர் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18.11.15

கடவுளைக் கண்டேன் - பித்துப் பிடிக்க வைக்கும் பத்து ஆசைகள்!


 
பத்துப் பத்தாய் ஆசைகளைச் சொல்லி அனைத்துப் பதிவர்களையும் பித்துப் பிடித்து அலைய வைத்திருக்கும் நண்பர் கில்லர்ஜீ வாழ்க!
 
 
இந்தத் தொடர்பதிவு ஜோதியில் எங்களையும் கலக்க வைத்து, ஒரு பதிவுக்கு வழி வகுத்த சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்க்கு நன்றி!  அவரும் வாழ்க.


சகோதரி கிரேஸ் அழைத்தது தெரியாமல், எங்களை மறுபடி அழைத்த சகோதரி மைதிலி கஸ்தூரி ரெங்கன் க்கும் நன்றி!  அவரும் வாழ்க!


சென்னையின் பெருமழையும், அதன் பின்விளைவுகளும், எங்கள் உடல்நிலையும் இந்தப் பதிவைப் போடுவதில் தாமதமேற்படுத்தி விட்டன.  (நேற்று "திங்க'க்கிழமை கூட Draft லேயே வைத்திருந்தும் வெளியிட முடியாமல் போனதற்கு கடந்த ஞாயிறு மாலை முதல் செவ்வாய் மாலை வரை 'கட்' ஆன கரண்ட்டும் ஒரு காரணம்!)  மன்னிக்கவும்.
 
 
 
 
1)  நீரின் மட்டம் உயர உயர தாமரைத் தண்டின் நீளம் அதிகரிக்கும்.  மலர் மேலேயே இருக்கும்.  அதே தத்துவத்தை மனிதனின் கால்களுக்கும் கொடுத்து விட்டால் இந்த மழை என்ன, எந்த நீரின் அளவுக்கும் பயப்பட வேண்டாம்!

 
2)  வாகனப் போக்குவரத்தே வேண்டாம். நகரும் சாலைகள்.  அந்தந்தச் சாலைகளில் நின்றால் அந்தந்த இடத்துக்குப் போய்விடலாம்.  ஒன்றுக்கும் மேற்பட்ட வேக அளவுகளில்!  பெட்ரோல் செலவு இல்லை.  சாலை நெருக்கடி இல்லை!

 
3) தண்ணீர்த் தொட்டிகள் தண்ணீரால் நிறைய ஆட்டோமேடிக் லெவல் கண்ட்ரோல்கள் இருப்பது போல, பூமியின் நீர்த்தேவைக் குறையும்போது தானே மழை பொழிய வேண்டும்.  மழை அளவு அதிகமாகும்போது தானாகவே வெயில் வரவேண்டும்!

 
4) மரணங்கள் இருக்கட்டும்.  பூமிக்குச் சமநிலை வேண்டுமே.  ஆனால் மரணித்த அன்புக்குரியவரை மறுபடியும் நாம் விரும்பும் தருணங்களில் உடனிருக்குமாறு வைக்க வசதி.  அதற்கு இரண்டு முறை அனுமதி,  மூன்று முறை அனுமதி என்று கட்டுப்பாடு இருக்கலாம்.

 
5) இதயத்தை இரண்டு வையுங்களேன்.  சிந்தனை ஒருவழிச் சென்று என்ன பலன் கண்டோம்!  உறுப்பு தானம் சமயத்தில் ஒருவருக்கு பதில் இருவருக்கு உதவுமே!

 
6)  நல்ல விஷயங்களுக்காக பிறருக்கு உதவ நினைக்கும் போது மட்டும் நினைத்தது நடக்க வேண்டும்.  வேண்டுமானால் அதையும் ஒரு கட்டுக்குள்ளும், கிரிக்கெட் DRS போல இரண்டுமுறை, மூன்று முறை மட்டும் என்றும் அனுமதிக்கலாம்.

 
7) மனிதன் போடும் குப்பைகள் அனைத்தும் - அணுக்கழிவிலிருந்து அசிங்கக் கழிவுகள் வரை - பூமியைப் பாழ் படுத்தாமலிருக்க ஏதாவது ஒரு உடனடி வழி!

 
8) பிறந்தவர் அனைவரும் ஒருநாள் மறைந்துதானாக வேண்டும்.  அது விபத்து, பயங்கர நோய்கள் போன்ற பயங்கரக் காரணங்கள், வழிகளாயில்லாமல், 'நேரம்' வந்ததும் ஒரு வெளியூர்ப் பயணம் கிளம்புவது போல அமைதியாக நடக்க வேண்டும்.

 
9) கில்லர்ஜி ஆரம்பித்து பதிவர்கள் அனைவரும் கேட்டிருக்கும் ஆசைகளை தவணை முறையிலாவது நிறைவேற்ற வேண்டும்.

 
10) பத்தாவது ஆசையை உடனே கேட்காமல் இருப்பிலேயே வைத்துக் கொள்கிறேன்.  கடவுள் என்ற அந்தச் சக்தியை ஒரு கடன்காரன் போல நம் அருகிலேயே காத்திருக்க வைக்க வேண்டி!


8.7.14

ஆவி கேட்ட பதில்கள்

                                    
   
பதில் சொல்லவந்தேன் பாப்பு! 
பத்து கேள்வி கொண்ட கோப்பு 
பதில் எல்லாமே டாப்பு 
என்று நான் சொன்னா தப்பு, 
நீங்க சொன்னா அது சோப்பு!  
     
1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?  
     

வழக்கம் போல மனைவி - பகல் பன்னிரண்டு மணிக்கு - 'அட ஆமாம் - உங்களுக்குப் பிறந்தநாள் என்பதையே மறந்துவிட்டேன். எங்க வீட்டுல எல்லாம் பிறந்தநாள் கொண்டாடும் வழக்கமே கிடையாது. அதனால எனக்கு இதெல்லாம் ஞாபகம் இருப்பதில்லை. உங்களை கிரீட் செய்யவில்லை என்று நினைக்காதீர்கள். எனக்கு கிரீட் செய்வதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது!' (அம்மா நீ திட்டாமல் இருந்தால் போதாதா!) 

உயிர் நண்பன் அப்பப்போ (நான் அவன் பிறந்தநாளுக்கு ஃபோன் செய்து வாழ்த்தும்பொழுதெல்லாம்) என்னுடைய பிறந்தநாளை தவறாக நினைவு கூர்ந்து - அதுதானே உன் பிறந்தநாள் என்று கேட்பான். நான் இல்லை என்று சொன்னதும், ஒன்றும் பேசாமல் வைத்துவிடுவான். 
   

இப்போ , முகநூல், நண்பர்கள் எல்லோரிடமும் என் பிறந்தநாளை போட்டுக் கொடுத்துவிடுகிறது. பார்ப்போம் என்னுடைய நூறாவது பிறந்தநாள் வரை முகநூல் உயிரோடு இருக்கின்றதா  என்று! 

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்? 
     

இதுவரை கற்றுக்கொண்டது எல்லாவற்றையும் மறந்து வருகின்றேன். புதிதாக எதையும் கற்றுக்கொண்டு, பிறகு அதை மறந்து - எதற்கு இந்த வேலை எல்லாம். சித்தம் போக்கு சிவம் போக்கு. சத்தம் போடாம இருந்தா செல்வாக்கு! 

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?  
       

எனக்கு புன்னகை மன்னன், இளிச்சவாயன் என்றெல்லாம் பெயர் உண்டு. வாழ்க்கையில் நான் (அட்லீஸ்ட் மனதிற்குள்ளாகவாவது) சிரிக்காத தருணங்கள் இல்லை. பேரனை சிரிக்க வைக்க, பேரனுக்கு விளையாட்டுக் காட்டி, பேரனோடு சேர்ந்து, நான் அடிக்கடி பெரிதாக சிரிப்பது உண்டு. 

4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?  
    

இருப்பது பெங்களூரில் என்பதால் இரவு தூங்குவதற்கு மின்விசிறி, குளிர்சாதனங்கள் வேண்டியது இல்லை. தினமும் எட்டு மணி நேர தூக்கம் இரவு பத்து தொடங்கி காலை ஆறு மணி வரை. மற்ற நேரங்களில் யு பி எஸ் தயவால் மின் பயன்பாட்டை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்வேன். இண்டக்ஷன் ஸ்டவ்வில் காபி போட்டுக் குடிக்கமுடியாது என்பதால் காஸ் ஸ்டவ்வில்தான் எல்லாம் செய்து கொள்ளவேண்டும். காலை நேரங்களில் கரண்ட் கட் என்றால் காஸ் ஸ்டவ்தான் கடவுள்.  
   
தொலைகாட்சி, சீரியல்கள் - எதுவும் பார்ப்பதில்லை. நெட்டில் நியூஸ், பார்ப்பது / படிப்பது எல்லாம் செய்துவிடுவேன். கரண்ட் இல்லை என்றால் ஓவர்ஹெட் டான்க் நிரம்பாது என்பதால் தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துவேன். வாஷிங் மெஷினுக்கு ஒருநாள் ஓய்வு. 

கரண்ட் கட் ஆனதால், லாப் டாப் சார்ஜ் ஆகவில்லை என்றால் வாழ்க்கை ரொம்ப போர் அடித்துவிடும்.  மற்றபடி பவர்கட்டால் எனக்கு அதிக பிரச்னைகள் கிடையாது. 

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?  
     

திருமணநாள் மட்டும் அல்ல - எல்லா நாளிலும் சொல்லவிரும்புவது, கணவன் மனைவி இருவருமே ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சந்தோஷமாக வாழுங்கள். ஒருவரின் சுக துக்கங்களை மற்றவர் பகிர்ந்து கொள்ளுங்கள். 

சந்தோஷமே வாழ்க்கையின் குறிக்கோள். அம்மா அப்பா சந்தோஷமாக இருக்கும் வீட்டில் வளர்கின்ற குழந்தைகள், தன்னம்பிக்கையோடு வளர்ந்து, வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். (ஆனால் பாருங்க - என்னிடத்தில் என் குழந்தைகள் யாரும் அட்வைஸ் கேட்பதில்லை;அடிக்கடி அவர்கள்தான் எனக்கு அட்வைஸ் வழங்குகிறார்கள்!) 

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?  
     
   

மங்கோலியப் பிரச்னை. அப்படி ஒரு பிரச்னை இருக்கிறதா என்று கேட்காதீர்கள். எனக்கும் தெரியாது. பிரச்னைகள் என்பதை யார் உருவாக்குகிறார்களோ அவர்களே உட்கார்ந்து பேசி பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். என்னால் உண்டான பிரச்னை ஏதாவது எனக்குத் தெரிய வந்தால் அதைத் தீர்க்க என்னால் முடியும். அதை விட்டு ஊரார் பிரச்னை, உலக பிரச்னை என்றால் நான் சென்றால் என்னுடைய நேரம்தான் வீணாகும். 

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?  
      

சுருங்கச் சொன்னால் அட்வைஸ் கேட்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை. சில இக்கட்டான தருணங்களில் அப்பா, அண்ணன்கள் இவர்களிடம் அட்வைஸ் கேட்டதுண்டு. ஆனால் அவர்கள் சொன்னபடி நடந்திருக்கின்றேனா என்பது சந்தேகம்! 

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?  
     

அதை நம்புவதற்கு அதிக ஆட்கள் இருப்பார்கள். நம்பாமல் இருப்பவர்களும் இருப்பார்கள். எந்தத் தகவலாக இருந்தாலும் என்னிடம் உறுதி செய்துகொள்ள வருபவர்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் உண்மை நிலையை அல்லது உண்மை என்று நான் நினைப்பதை நிச்சயம் இதமாகக் கூறுவேன். நான் சாதாரணமாக 'உங்களைப்பற்றி அவர் இவ்வாறு கூறினாரே' என்று வருகின்ற தகவல்களை அப்படியே எடுத்துக்கொள்ளமாட்டேன். அவர் எந்த சந்தர்ப்பத்தில் எதற்காக அப்படிக் கூறினாரோ - அதைக் கேட்டவர் என்ன மனநிலையில் எப்படி அதைப் புரிந்துகொண்டார் என்றெல்லாம் எனக்குத் தெரியாது என்பதால், கூறப்படுவதை அப்படியே வாங்கி வைத்துக் கொள்வேன். பிறகு நேரம் கிடைக்கும்போது அதை அனலைஸ் செய்து பார்ப்பேன். (என் அலுவலக ட்ரைனிங் கிளாஸ் ஒன்றில் நான் தெரிந்துகொண்ட ஒரு விஷயமும் இதில் உள்ளது. அது பற்றி தனி பதிவு அலேக் அனுபவங்களில் பிறகு எழுதுகின்றேன்.) 
                 
என் மீது தவறு இருந்திருந்தால் அதை எதிர்காலத்தில் திருத்திக் கொள்வேன். தவறு இல்லை என்றால், 'அறியாத குழந்தைகள்' சொல்பவைகளை எப்படி புன்சிரிப்போடு ஏற்றுக்கொள்வோமோ  அதைபோல எடுத்துக் கொள்வேன். I am OK, You are OK புத்தகம் படித்த காலத்திலிருந்து இதைப் பின்பற்றி வருகின்றேன். 


9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?  
      

நண்பரின் மனைவி உயிரோடு இருக்கும் பொழுதே அவரிடம் (நண்பரின் மனைவியிடம்) நான் அதிகம் பேசியிருக்கமாட்டேன். அவர் இறந்தால் மட்டும் அவரிடம் என்ன சொல்லப் போகின்றேன். (இறந்தவர்களோடு பேசுவது எனக்கு பயம் அளிக்கும் சமாச்சாரம்!) 

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?  
      

இதோ 'சில' மட்டும்! 

# உரத்த குரலில் பாட்டுப் பாடுவேன். 
# டான்ஸ் ஆடுவேன். 
# ப்ளாக் எழுதுவேன். 
# எம் பி 3 ப்ளேயரில் உபன்யாசம் கேட்பேன். 
# புத்தகம் படிக்க நினைத்து, படிக்கும்போது தூங்கிடுவேன். 
Z Z Z Z Z Z ! 
        
(தொடர்பதிவுக்கு ஸ்ரீராம் அழைப்பு விடுப்பார். இந்தப் பத்துக் கேள்விகள் பிடிக்கவில்லை என்றால் கோக்கு மாக்காக புதியதாக ஐந்து கேள்விகள் உருவாக்குங்கள்! ஹ ஹ ஸ்ரீராமை கோர்த்துவிட்டாச்சு!) 
                        

24.7.13

கம்ப்யூட்டரி(னா)ல் (வந்த) கதை ( 2 )- தொடர் பதிவு

                   
ஆச்சா... எங்க விட்டேன்... ஆங்.. ஸ்டேட்மென்ட்.. இந்த வருடாந்திர ஸ்டேட்மென்ட் அப்புறம் வருடாவருடம் கம்ப்யூட்டரிலேயே போட்டு வந்ததும், மெல்ல மெல்ல கேஜி எனக்கும் தெரியாமல் கணினி சம்பந்தமாக சில விவரங்களை எனக்குள் ஏற்றியிருந்தார். 
                
வர்ட், எக்செல், டாகுமென்ட் கண்ட்ரோல் எஸ் கொடுத்து சேவ் செய்வது, எக்செல்லில் கால்குலேஷன் ஃபார்முலா என்றெல்லாம் தெரிந்தாலும் கணினியைத் தொட்டேனில்லை. தொட்டுத் தப்பாச்சுன்னா மானம் போயிடும் என்று பயம்.  உங்களுக்கே தெரியும் நான் கொஞ்சம் கூச்ச சுபாவம்னு...
                      
ஆபீசில் கம்ப்யூட்டர் பற்றிப் பேசுவதில் நான்தான் பிஸ்தா. ஃபிளாப்பி, சிடி என்று பேசி... 
                  

ஆங்... சிடி... சிடி... சிடியை வைத்துத் தனிப் பதிவே எழுதலாம்! இந்த சிடிக்கு கம்ப்யூட்டர் ஆதரவு ரொம்பத் தேவை. 

                 

கிடைக்காத பழைய SPB பாடல்கள், கிஷோர் குமார் பாடல்கள் போன்ற பாடல்கள், கேசெட்டை விட்டு சிடியில் கிடைக்கத் தொடங்கிய நேரம். வீட்டிலும் சிடி ப்ளேயர் இருக்கவே, கிடைக்கும் சிடிக்களைக் காபி செய்ய அடிக்கடி கேஜி வீட்டுக்குப் படை எடுப்பேன்.  
                     
CDக்கள் காபி எடுத்து வைக்கும் கலை பழக்கமானது. அந்த வசதி எல்லாம் மிக ஆச்சர்யமாக இருந்தது. கம்ப்யூட்டரிலேயே பாடல் கேட்கும் வசதி மனதை ஈர்த்தது. 

               

இருந்தாலும் சொந்தமாகக் கம்ப்யூட்டர் வாங்கும் அதிருஷ்டம் 2004 ல்தான் வாய்த்தது. என்னைவிட கேஜிக்கு இதில் ரொம்ப சந்தோஷம். வாங்கும் நேரம் கேஜியைக் கூப்பிட்டு பக்கத்தில் இருக்குமாறு பார்த்துக் கொண்டேன். இதில் ஒன்றுமில்லை என்றாலும் அவர் என் திருப்திக்காக வேலையை விட்டு விட்டு வந்து உட்கார்ந்து சென்றார்.
                  
இப்போது என் வீட்டில் ஒரு கணினி! அதில் நான் என்ன செய்தாலும் யாரும் பார்க்கப் போவதில்லை. யாரும் சிரிக்க மாட்டார்கள். கேஜியிடம் கேட்டு கேட்டு ஆபரேட் செய்யத் தொடங்கினேன். 
                

"இதோ பாரு... அது வெடித்து விடாது... ஷாக் அடிக்காது... மவுசைக் கையில பிடித்து ஒவ்வொன்றாக ஓபன் செய்... மூடு.  ஹெல்ப் என்றிருப்பதைப் படி... ட்ரை செய்.. என்ன பிரச்னை வந்து விடப் போகுது? ஏதாவது பிரச்னைன்னா இருக்கவே இருக்கு ஃபோனு...அதுல கேளு.."
                   
அப்புறம் அவ்வப்போது பதட்டமான கால்கள் இங்கிருந்து அங்கு பறக்கும்.
              
"அய்யய்யோ... விண்டோ விண்டோ விண்டோவா எக்கச்சக்கமா ஓபன் ஆயிகிட்டே போகுது... என்ன செய்ய?"
                 
"டெஸ்க் டாப் ஸ்க்ரீன் தலை கீழா தெரியுது... என்ன செய்ய?"  
               
"தானாவே ஆஃப் ஆயிடுது... என்ன செய்ய"
                
"ஆன் செய்தால் ஆனே ஆகலை.. மானிடர் கம்முனு இருக்கு.."
                   
இதுபோன்ற ஒவ்வொரு  சந்தேகங்களுக்கும் பொறுமையாக "கடைசியில் என்ன செய்தே... எதை எதை ஓபன் செய்தே? ஏதாவது எரர் மெசேஜ் வந்ததா... ஓகே கொடுத்தியா.. ரைட் க்ளிக் பண்ணு... பிராபர்டிஸ் போ... கண்ட்ரோல் ஆல்ட் டெலிட் அடி... ஆல் ப்ரோக்ராம்ஸ் போ.. அசசரிஸ் போ...சிஸ்டம் ரெஸ்டோர்னு இருக்கா.." என்றெல்லாம் டெலிபோனிலேயே என் கணினியையும் என்னையும் ரிப்பேர் செய்தார். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் நேரே வந்தும், வேறு சில சமயங்களில் அவரது ஆஸ்தான கணினி மருத்துவரை அனுப்பியும், என்னை பட்டை தீட்டினார். இதுவரை முழுசா பளபளக்கவில்லை என்பது வேறு விஷயம்!!
                
2007 முதலே இணைய இணைப்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருந்தார். அப்போதைய இணைய பிளான்கள் அருகில் நெருங்கும்படி இல்லை. ஓரிருமுறை டயலப் கனெக்ஷனில் சென்றதோடு சரி. அந்தச் சமயங்களில் ரிடிஃப் மெயிலிலும், யாஃகூ மெயிலிலும் சில கணக்குகள் துவக்கி வெட்டியாக வைத்திருந்தேன். 
               
குடும்ப நெட் க்ரூப் ஒன்று செயல்பட்டு வந்தது. அதில் என்னைச் சேரச் சொன்னார். ஊ......... ஹூம். நானா? கேட்டு விடுவேனா? உங்களுக்கே தெரியும் நான் கொஞ்சம் கூச்.... நோ.. நோ.. எதுக்குக் கையை .ஓங்கறீங்க... நோ வன்முறை!

                     

அப்புறம் 2009ல் இணைய இணைப்புப் பெற்று, உள்ளே வந்து, மெயில் ஐடி பெற்று, விக்கி, கொக்கி, எல்லாவற்றையும் பக்கி மாதிரி படித்துக் கொண்டு வந்தபோது கே ஜி கௌதமன் இட்லிவடை வலைப்பக்கத்தை அறிமுகப்    படுத்தினார். அப்புறம் அவரே ஒரு ப்ளாக் தொடங்கப் போவதாகச் சொன்னார்.  என்ன பெயர் வைக்கலாம் என்று சஜஷன் எல்லாம் கேட்டார். பெயர்கள் சொன்னோம். எங்கள் ப்ளாக்கும் தொடங்கினார்! அங்கு கமெண்ட் போடுவது எப்படி என்று சொல்லிக் கொடுத்தார். அதையும் கற்றுக் கொண்டு, "எழுதுங்க... அப்பப்போ வந்து கைதட்ட நானாச்சு" என்று உற்சாகம் கொடுத்தவனை "கை தட்டறதா... தம்பி குழுவில் நீயும் ஒருத்தன். உள்ள வா" என்றார். உங்களுக்கே தெரியும்... நான் கொஞ்சம் கூச்ச...
                       
அதையும் மீறி என்னை ,உற்சாகப்படுத்தி, ஊக்குவித்து கதை எழுத வைத்து, கட்டுரை எழுத வைத்து வலையுலகில் ஸ்ரீராம் என்றால் நாலு பேருக்குத் தெரியும் என்ற நிலையை உருவாக்கி, வலையுலக நட்புகளைப் பெற்றுத் தந்து, இப்படியெல்லாம் தொடர்பதிவு எழுத அழைக்குமளவு கொண்டு வந்த,  சந்தோஷப்பட வைத்திருக்கும் பெருமை திரு கெளதமனையே சேரும். இது எல்லாம்  கம்ப்யூட்டரால்தான்  சாத்தியமாயிற்று! (அப்பாடா... தலைப்புக்கு மரியாதை செய்து விட்டேன்!!)

             
நன்றி ஆசான்களே....

              
இனி நான் 5 பேரை  பதிவைத் தொடரச் சொல்லிக் கை காட்டணும்... இல்லையா? நான் முன்னர் இது மாதிரி அழைத்த சில பதிவர்கள் நாளது நாள் வரை தொடரவில்லை. எனினும் முயற்சியில் சற்றும் மனம்  தளராது ஒரு ஐந்து பேர்களை இழுத்து விடுகிறேன்.
                     
1)  நகைச்சுவைப் பதிவுகளில் கொடிகட்டிப் பறப்பவர்களில் ஒருவரான அநன்யா மகாதேவன். அநன்யாவின் எண்ண அலைகள் 
              
2) பயணத் தொடர்களிலும்  பதிவுகளிலும் அலுக்காமல் அசத்தும் தில்லி வெங்கட் நாகராஜ்.
               
3) மூத்த பதிவர்களில் ஒருவர், பதிவர், நகைச்சுவையாக(வும்) எழுதக் கூடிய திரு  சாமியின் மன அலைகள் உரிமையாளர் திரு பழனி கந்தசாமி அவர்கள்.
                 
4) அறிவுசார் பதிவுகள் முதல்  நகைச்சுவைப் பதிவுகள் வரை அசத்தும் டிரங்குப்பெட்டி ஸ்பெஷலிஸ்ட் ஹுஸைனம்மா அவர்கள்.
                
5) கண்ணனுக்காக பதிவுகளை விறுவிறுப்புடன் எழுதி வரும், கல்யாணமும் சம்பிரதாயங்களும் பற்றி விலாவாரியாக எழுதி வரும் இன்னொரு மூத்த பதிவர்  கீதா சாம்பசிவம் அவர்கள்.  


இதில் யாரையாவது வேறு யாராவது முன்னரே அழைத்திருந்தால் சொல்லுங்கள். கைவசம் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள், மாட்டி விட! 5 பேர்களைத்தானே சொல்லச் சொன்னார் பாலகணேஷ் என்று கையை அடக்கிக் கொண்டு 5 பெயர்கள் சொல்லியிருக்கிறேன்!!