செவ்வாய், 8 ஜூலை, 2014

ஆவி கேட்ட பதில்கள்

                                    
   
பதில் சொல்லவந்தேன் பாப்பு! 
பத்து கேள்வி கொண்ட கோப்பு 
பதில் எல்லாமே டாப்பு 
என்று நான் சொன்னா தப்பு, 
நீங்க சொன்னா அது சோப்பு!  
     
1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?  
     

வழக்கம் போல மனைவி - பகல் பன்னிரண்டு மணிக்கு - 'அட ஆமாம் - உங்களுக்குப் பிறந்தநாள் என்பதையே மறந்துவிட்டேன். எங்க வீட்டுல எல்லாம் பிறந்தநாள் கொண்டாடும் வழக்கமே கிடையாது. அதனால எனக்கு இதெல்லாம் ஞாபகம் இருப்பதில்லை. உங்களை கிரீட் செய்யவில்லை என்று நினைக்காதீர்கள். எனக்கு கிரீட் செய்வதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது!' (அம்மா நீ திட்டாமல் இருந்தால் போதாதா!) 

உயிர் நண்பன் அப்பப்போ (நான் அவன் பிறந்தநாளுக்கு ஃபோன் செய்து வாழ்த்தும்பொழுதெல்லாம்) என்னுடைய பிறந்தநாளை தவறாக நினைவு கூர்ந்து - அதுதானே உன் பிறந்தநாள் என்று கேட்பான். நான் இல்லை என்று சொன்னதும், ஒன்றும் பேசாமல் வைத்துவிடுவான். 
   

இப்போ , முகநூல், நண்பர்கள் எல்லோரிடமும் என் பிறந்தநாளை போட்டுக் கொடுத்துவிடுகிறது. பார்ப்போம் என்னுடைய நூறாவது பிறந்தநாள் வரை முகநூல் உயிரோடு இருக்கின்றதா  என்று! 

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்? 
     

இதுவரை கற்றுக்கொண்டது எல்லாவற்றையும் மறந்து வருகின்றேன். புதிதாக எதையும் கற்றுக்கொண்டு, பிறகு அதை மறந்து - எதற்கு இந்த வேலை எல்லாம். சித்தம் போக்கு சிவம் போக்கு. சத்தம் போடாம இருந்தா செல்வாக்கு! 

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?  
       

எனக்கு புன்னகை மன்னன், இளிச்சவாயன் என்றெல்லாம் பெயர் உண்டு. வாழ்க்கையில் நான் (அட்லீஸ்ட் மனதிற்குள்ளாகவாவது) சிரிக்காத தருணங்கள் இல்லை. பேரனை சிரிக்க வைக்க, பேரனுக்கு விளையாட்டுக் காட்டி, பேரனோடு சேர்ந்து, நான் அடிக்கடி பெரிதாக சிரிப்பது உண்டு. 

4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?  
    

இருப்பது பெங்களூரில் என்பதால் இரவு தூங்குவதற்கு மின்விசிறி, குளிர்சாதனங்கள் வேண்டியது இல்லை. தினமும் எட்டு மணி நேர தூக்கம் இரவு பத்து தொடங்கி காலை ஆறு மணி வரை. மற்ற நேரங்களில் யு பி எஸ் தயவால் மின் பயன்பாட்டை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்வேன். இண்டக்ஷன் ஸ்டவ்வில் காபி போட்டுக் குடிக்கமுடியாது என்பதால் காஸ் ஸ்டவ்வில்தான் எல்லாம் செய்து கொள்ளவேண்டும். காலை நேரங்களில் கரண்ட் கட் என்றால் காஸ் ஸ்டவ்தான் கடவுள்.  
   
தொலைகாட்சி, சீரியல்கள் - எதுவும் பார்ப்பதில்லை. நெட்டில் நியூஸ், பார்ப்பது / படிப்பது எல்லாம் செய்துவிடுவேன். கரண்ட் இல்லை என்றால் ஓவர்ஹெட் டான்க் நிரம்பாது என்பதால் தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துவேன். வாஷிங் மெஷினுக்கு ஒருநாள் ஓய்வு. 

கரண்ட் கட் ஆனதால், லாப் டாப் சார்ஜ் ஆகவில்லை என்றால் வாழ்க்கை ரொம்ப போர் அடித்துவிடும்.  மற்றபடி பவர்கட்டால் எனக்கு அதிக பிரச்னைகள் கிடையாது. 

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?  
     

திருமணநாள் மட்டும் அல்ல - எல்லா நாளிலும் சொல்லவிரும்புவது, கணவன் மனைவி இருவருமே ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சந்தோஷமாக வாழுங்கள். ஒருவரின் சுக துக்கங்களை மற்றவர் பகிர்ந்து கொள்ளுங்கள். 

சந்தோஷமே வாழ்க்கையின் குறிக்கோள். அம்மா அப்பா சந்தோஷமாக இருக்கும் வீட்டில் வளர்கின்ற குழந்தைகள், தன்னம்பிக்கையோடு வளர்ந்து, வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். (ஆனால் பாருங்க - என்னிடத்தில் என் குழந்தைகள் யாரும் அட்வைஸ் கேட்பதில்லை;அடிக்கடி அவர்கள்தான் எனக்கு அட்வைஸ் வழங்குகிறார்கள்!) 

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?  
     
   

மங்கோலியப் பிரச்னை. அப்படி ஒரு பிரச்னை இருக்கிறதா என்று கேட்காதீர்கள். எனக்கும் தெரியாது. பிரச்னைகள் என்பதை யார் உருவாக்குகிறார்களோ அவர்களே உட்கார்ந்து பேசி பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். என்னால் உண்டான பிரச்னை ஏதாவது எனக்குத் தெரிய வந்தால் அதைத் தீர்க்க என்னால் முடியும். அதை விட்டு ஊரார் பிரச்னை, உலக பிரச்னை என்றால் நான் சென்றால் என்னுடைய நேரம்தான் வீணாகும். 

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?  
      

சுருங்கச் சொன்னால் அட்வைஸ் கேட்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை. சில இக்கட்டான தருணங்களில் அப்பா, அண்ணன்கள் இவர்களிடம் அட்வைஸ் கேட்டதுண்டு. ஆனால் அவர்கள் சொன்னபடி நடந்திருக்கின்றேனா என்பது சந்தேகம்! 

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?  
     

அதை நம்புவதற்கு அதிக ஆட்கள் இருப்பார்கள். நம்பாமல் இருப்பவர்களும் இருப்பார்கள். எந்தத் தகவலாக இருந்தாலும் என்னிடம் உறுதி செய்துகொள்ள வருபவர்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் உண்மை நிலையை அல்லது உண்மை என்று நான் நினைப்பதை நிச்சயம் இதமாகக் கூறுவேன். நான் சாதாரணமாக 'உங்களைப்பற்றி அவர் இவ்வாறு கூறினாரே' என்று வருகின்ற தகவல்களை அப்படியே எடுத்துக்கொள்ளமாட்டேன். அவர் எந்த சந்தர்ப்பத்தில் எதற்காக அப்படிக் கூறினாரோ - அதைக் கேட்டவர் என்ன மனநிலையில் எப்படி அதைப் புரிந்துகொண்டார் என்றெல்லாம் எனக்குத் தெரியாது என்பதால், கூறப்படுவதை அப்படியே வாங்கி வைத்துக் கொள்வேன். பிறகு நேரம் கிடைக்கும்போது அதை அனலைஸ் செய்து பார்ப்பேன். (என் அலுவலக ட்ரைனிங் கிளாஸ் ஒன்றில் நான் தெரிந்துகொண்ட ஒரு விஷயமும் இதில் உள்ளது. அது பற்றி தனி பதிவு அலேக் அனுபவங்களில் பிறகு எழுதுகின்றேன்.) 
                 
என் மீது தவறு இருந்திருந்தால் அதை எதிர்காலத்தில் திருத்திக் கொள்வேன். தவறு இல்லை என்றால், 'அறியாத குழந்தைகள்' சொல்பவைகளை எப்படி புன்சிரிப்போடு ஏற்றுக்கொள்வோமோ  அதைபோல எடுத்துக் கொள்வேன். I am OK, You are OK புத்தகம் படித்த காலத்திலிருந்து இதைப் பின்பற்றி வருகின்றேன். 


9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?  
      

நண்பரின் மனைவி உயிரோடு இருக்கும் பொழுதே அவரிடம் (நண்பரின் மனைவியிடம்) நான் அதிகம் பேசியிருக்கமாட்டேன். அவர் இறந்தால் மட்டும் அவரிடம் என்ன சொல்லப் போகின்றேன். (இறந்தவர்களோடு பேசுவது எனக்கு பயம் அளிக்கும் சமாச்சாரம்!) 

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?  
      

இதோ 'சில' மட்டும்! 

# உரத்த குரலில் பாட்டுப் பாடுவேன். 
# டான்ஸ் ஆடுவேன். 
# ப்ளாக் எழுதுவேன். 
# எம் பி 3 ப்ளேயரில் உபன்யாசம் கேட்பேன். 
# புத்தகம் படிக்க நினைத்து, படிக்கும்போது தூங்கிடுவேன். 
Z Z Z Z Z Z ! 
        
(தொடர்பதிவுக்கு ஸ்ரீராம் அழைப்பு விடுப்பார். இந்தப் பத்துக் கேள்விகள் பிடிக்கவில்லை என்றால் கோக்கு மாக்காக புதியதாக ஐந்து கேள்விகள் உருவாக்குங்கள்! ஹ ஹ ஸ்ரீராமை கோர்த்துவிட்டாச்சு!) 
                        

20 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா.

  கேள்விகளுக்கு வித்தியாசமாக பதில் சொல்லியுள்ளீர்கள் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. ஹாஹாஹா ஆரம்பமே டிஆர் ஸ்டைல்......ஆப்பு...சோப்பு....

  நாங்கள் தருகின்றோம் உமக்கு காப்பு! பதில்கள் அனைத்தையும் ரசித்ததற்கு....அதில்
  //உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?// இந்தக் கேள்விக்கு தங்கள் பதில் மிகவும் ரசித்தோம்....ஏன்? வித்தியாசம்...நாங்கள் எல்லோரும் நண்பருக்கு என்ன ஆறுதல் சொல்வோம் என்பதைச் சொன்னோம்....இந்தக் கேள்வியை இப்படியும் அர்த்தம் கொள்ள முடியும் என்று இறந்த மனைவிக்கு பதிலாக .....சூப்பர்! சரிதான் இந்தக் கேள்வி இப்படியும் அர்த்தம் கொள்ளலாம்......lateral thinking!!!!!சபாஷ்!!!

  பதிலளிநீக்கு
 3. சிந்திக்க வைக்கும் சிறந்த பதில்கள்

  பதிலளிநீக்கு
 4. அருமையான பதில்கள்.
  குழந்தைகளுக்கு திருமண நாளில் சொல்ல விரும்பும் பதில்கள் மிக நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 5. ஆஹா, நண்பரின் மனைவி கேள்விக்கு விழுந்து விழுந்து சிரித்தேன்.. விழுந்ததில் மூக்கில் சின்ன அடி வேறு.. ;-)

  பதிலளிநீக்கு
 6. எல்லாமே அசத்தல். இப்படி ஏதாவது பதில் வரும்னு தான் கூப்பிட்டேன்.. தங்களை அழைத்ததில் தன்யனானேன்.. :)

  பதிலளிநீக்கு
 7. எனக்கும் அழைப்பு இருக்கிறது பதில் சொல்ல. நான் நாட்களைக்கடத்திக்கொண்டும் பிறரது பதில்களைப் படித்துக் கொண்டும். உங்கள் பதிவைப் படிக்கும் போது “இருப்பது பெங்களூரில்” என்று படித்தபின் அதையே நினைத்துக் கொண்டு இருக்கிறேன் தெரியாமல் போய் விட்டதே. பிரியம் இருந்தால் முகவரி அஞ்சல் செய்யவும் நன்றி

  பதிலளிநீக்கு
 8. /// சத்தம் போடாம இருந்தா செல்வாக்கு...! ///

  ஓஹோ... இது தெரியாமப் போச்சே...! ஹிஹி...


  /// டான்ஸ் ஆடுவேன்... /// Coming Friday Video Please...

  பதிலளிநீக்கு
 9. டாப் டென் பதில்கள்! அதுவும் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்லுவீர்கள் என்பதற்கான பதில் நல்ல காமெடி! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 10. உங்கள் ஸ்டைலில் அத்தனை கேள்விகளுக்கும் பதில்கள்ல சிக்ஸர் அடிச்சுட்டீங்க. ரொம்பவே ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 11. அனைத்து பதில்களும் ரசித்தேன். அதிலும் அந்த ஒன்பதாம் கேள்விக்கான பதில்! :)

  பதிலளிநீக்கு
 12. தங்களின் பதில்களை ரசித்தேன் நண்பரே
  நன்றி

  பதிலளிநீக்கு
 13. சூப்பர் சார்.......

  குறும்பான பதில், நகைச்சுவையான பதில் , பொறுப்பான பதில் ஒவ்வொரூ கேள்விக்கான பதிலையும் வேறு வேறு சமயங்களில் / சூழ்நிலைகளில் எழுதியது போல் ஒன்றுக்கொன்று வித்யாசமாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 14. எல்லாக் கேள்விகளுக்கும் விதவித பதில்கள் சுவையாக இருந்தது. பங்களூரில் வெயில் இல்லாத காலமா இப்ப.

  பதிலளிநீக்கு
 15. //நண்பரின் மனைவி உயிரோடு இருக்கும் பொழுதே அவரிடம் (நண்பரின் மனைவியிடம்) நான் அதிகம் பேசியிருக்கமாட்டேன். அவர் இறந்தால் மட்டும் அவரிடம் என்ன சொல்லப் போகின்றேன். (இறந்தவர்களோடு பேசுவது எனக்கு பயம் அளிக்கும் சமாச்சாரம்!)//

  ஹாஹாஹாஹாஹ்ஹிஹிஹிஹிஹி ஹுஹுஹுஹுஹெஹெஹெஹெஹெஹெ

  பதிலளிநீக்கு
 16. //(ஆனால் பாருங்க - என்னிடத்தில் என் குழந்தைகள் யாரும் அட்வைஸ் கேட்பதில்லை;அடிக்கடி அவர்கள்தான் எனக்கு அட்வைஸ் வழங்குகிறார்கள்!) //

  அதே, அதே சபாபதே!

  பதிலளிநீக்கு
 17. கௌதமன் சார் அனுப்பிய பொற்கிழி இன்று வந்து சேர்ந்தது. எங்கள் ப்ளாக் ஆ"சிரி"யர்கள் அனைவருக்கும் நன்றி. :)

  பதிலளிநீக்கு
 18. லேட்டாட பதில் சொன்னாலும் லேட்டஸ்டா பதில் சொல்லி இருக்கிறீர்கள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!