(சென்ற பதிவின் தொடர்ச்சி)
மறுநாள் காலை அல்ல, அடுத்த இரண்டு மூன்று நாள் காலைகள் எதிர்பார்ப்போடுதான் விடிந்தன. ஆனால் ஏமாற்றம்தான்.
ப்ரௌனி வரவில்லை.
"வேண்டாம்னுதானே துரத்திட்டீங்க...நான் ஏன் வரணும்" மனதுக்குள் ப்ரௌனியின் உருவம் தோன்றி பேசியது போல இருந்தது.
நாட்கள் செல்லச் செல்ல மெல்ல மெல்ல மறந்து போகும் என்று எண்ணியிருந்ததும் நடக்கவில்லை. தண்ணீர் என்றாலே ப்ரௌனிக்கு பயம் குளிக்க வரமாட்டேன் என்று அடம் பிடித்து தரையைத் தேய்த்துக் கொண்டே வருவாள். ஆனால் குளிக்கும்போது சமர்த்தாக இருப்பாள். தண்ணீர்க் குவளை அல்லது பாட்டிலை அவள் கண்ணில் காட்டினால் போதும் சென்று ஓரமாகப் பதுங்கி விடுவாள். அப்படிப் பட்டவள் அடித்துப் பெய்யும் மழையில் என்ன செய்கிறாளோ என்று மனைவி கவலைப் பட்டாள்.
"நேரத்துக்கு சாப்பாடு வைப்போம்...அதையே சரியாய்ச் சாப்பிடாது...இப்போ என்ன செய்யுதோ...யார் கொடுப்பாங்க அதுக்கு சோறு...!' சின்னவள் உணர்ச்சி வசப் பட்டாள்.
ஏதாவது பேப்பர் சத்தப் படுத்தினாலே குரல் கொடுக்கும் "எனக்கு எங்கே" என்பது போல...தீனி ஏதாவது சாப்பிடும்போது பாட்டி அதைச் சொல்லி மாய்ந்து போனாள்.
ஆட்டோக்காரரை அப்புறம் பார்த்த போது அந்தப் பக்கம் சவாரி போனீங்களா கண்ணுல பட்டதா என்று கேட்ட போது 'சும்மா இருங்க சார்' என்று சொல்லிச் சென்றார்.
திரும்பி வந்து விடும் என்று எண்ணிதான் கொண்டு விட்டோமோ என்று சந்தேகம் வந்தது. அவர்களும் கூட அந்தப் பக்கம் ஓரிரு முறை சென்று வந்த போது கண்ணில் படவில்லை.
"வீட்டுக்கு வரேன்னு வந்து ஏரியா மாறியிருக்கும்"
"வண்டியில் எங்காவது அடி பட்டிருக்குமோ"
வீட்டைச் சுற்றி தினமும் பார்வை அலைவதை தடுக்க முடியவில்லை.
நடுவில் ஒருநாள் பெரியவன் கல்லூரியிலிருந்து வந்த போது அந்த ஏரியாவில் ப்ரௌனியைப் பார்த்ததாக பரபரப்புடன் சொன்னான்.
"அப்போ உயிரோடதான் இருக்கு..."
"அப்பாடா..."
அந்த வாரக் கடைசியில் புதிய எண்ணம் வந்தது. அது நம்மை விட்டுப் போய் இரண்டு மாதம் இருக்குமா? அதைச் சென்று பார்த்ததால் என்ன?
என்ன அசட்டுத் தனம் என்று யாருக்கும் கேட்கத் தோன்றவில்லை.
"போகும்போதே பிரியாணி எல்லாம் வாங்கிப் போய் விடுவோம்..."
"மட்டன் பிரியாணின்னா அதுக்கு ரொம்ப இஷ்டம்.."
"போய் குடுத்திட்டு சாப்பிட்டதும் கொஞ்ச நேரம் இருந்துட்டு நைஸா வந்துடலாம்..."
"அதெப்படி? அது உன்னை விடவே விடாது...கூடவே வந்துடும்..."
"வராது...முதல்லயும் அப்படிதான் சொன்னாங்க...வரல்லையே..."
"அப்போ அதுக்குத் தெரியாது...இப்போ அனுபவம்..விடவே விடாது"
"வராது..."
"வந்தால்..."
"வராது...வந்தால்...வந்தால் என்ன செய்யலாம்...கூட்டிட்டு வந்துட வேண்டியதுதான்.."
'சட்'டென எல்லார் முகத்திலும் ஒரு புன்னகை வந்து அமர்ந்தது.
"முன்னாடி சொன்ன கஷ்டம் என்ன ஆச்சு?"
"பார்த்துக்கலாம்.."
ஆசிஃபிலிருந்து மட்டன் பிரியாணியுடன் கிளம்பிப் போனார்கள். அந்த இடம் வந்தது. ப்ரௌனியைக் காணோம். பிரியாணியுடன் கேனத் தனமாக அமர்ந்திருந்தார்கள். வேறு சில நாய்கள் பிரியாணி வாசனையை மோப்பம் பிடித்து வந்து வாலாட்டின.
பைக்கிலும் காரிலும் சென்றவர்கள் லேசாகத் திரும்பிப் பார்த்தபடி சென்றார்கள்.
"அன்னிக்கி நீ பார்த்தது ப்ரௌனிதானாடா?"
"அட என்னப்பா...எனக்குத் தெரியாதா..."
அவர்கள் கண்கள் நாலாபுறமும் பார்த்தபடி இருந்தன. நேரம் செல்லச் செல்ல அலுப்பு வந்தது. முட்டாள்கள் போல உணர்ந்தனர். யோசனையில்லாமல் உணர்ச்சி வசப் பட்டு வந்து விட்டோம் என்று தோன்றியது.
"அப்பா...அங்க பாரு.."
சற்று தூரத்தில் ப்ரௌனி...ஆம்...ப்ரௌனியேதான்...மெல்ல வந்து கொண்டிருந்தது. எதையோ தேடிய அதன் அழகிய கண்கள் மோப்பம் பிடித்தபடி இவர்களைப் பார்க்க,
உடம்பை வளைத்து, குனிந்து நிமிர்ந்து ஓடி வர ஆரம்பித்தது.
முதலில் அவன் மேல் பாய்ந்தது. பயப்படும் அளவு காலை வளைத்து, சுற்றி சுற்றி வந்து மேலே உராய்ந்தது. அதன் குரல் சுற்றி உள்ள நாய்களைக் கலவரப் படுத்தியது. அவை இவர்களை கவனமாகப் பார்த்து விட்டு சற்று தளளி நின்றன.
மனைவியை, பையன்களை என்று ஆனந்த அழுகையுடன் சுற்றி சுற்றி வந்து மேலே பாய்ந்து நக்கி அன்பை வெளிப் படுத்தியது ப்ரௌனி.
பிரியாணியைப் பிரித்து வைத்தார்கள். உடனே சாப்பிடவில்லை. அதை முகர்ந்து பார்த்து விட்டு மறுபடி இவர்களிடம் வந்தது. திரும்ப பிரியாணியை ஒரு பார்வை.
"போய்ச் சாப்பிடு.."
போய்ச் சாப்பிட்டது.
காத்திருந்தனர். சாப்பிட்டது. பக்கத்தில் வந்து புலிக் குட்டி போல உட்கார்ந்து மற்ற நாய்களைப் பார்த்தது.அதன் நெற்றியைத் தடவியபடி தூக்கி ஆட்டோவினுள் விட்டான்.
வழக்கம் போலவே முரண்டு பிடித்தது.
"பயன்தாங்குள்ளி...வழக்கம் போலவே பயப்படுது...லூசு..வீட்டுக்குப் போறோம்.."என்றாள் மனைவி.
புதிதாய் வந்த இரு நாய்கள் குரல் கொடுத்தன. ப்ரௌனி அவைகளைப் பார்த்து வாலாட்டியது. அவைகளிடம் ஓடி ஏதோ சொல்வது போல அருகே நின்று விட்டு மறுபடி இவர்கள் அருகே வந்தது.
"என்னடி..சொல்லிக்கிட்டு வந்துட்டியா.." மனைவி கிண்டலாகக் கேட்டாள்.
வாலாட்டிய ப்ரௌனி, திரும்ப அந்த நாய்களிடம் சென்றது.
அவை மெல்ல திரும்பி நடக்கத் தொடங்கின.
இவர்கள் விக்கித்து நின்றார்கள்.
"ப்ரௌனி...ப்ரௌனி..."
திரும்பிப் பார்த்த ப்ரௌனி லேசாக வாலாட்டியது. சற்றே தயங்கி நின்று விட்டு மறுபடி திரும்பி அதன் தோழர்களுடன் செல்லத் தொடங்கியது...அவற்றின் நடை மெல்லோட்டமாக மாறியது...!
தூரத்தே சென்று மறைந்தது.
(முற்றும்!)

