சமீபத்தில்
வெளியாகியுள்ள விஷால் நடித்த 'நான் சிகப்பு மனிதன்' படத்தில் இதழோடு இதழ்
பதித்து ஒரு முத்தக்காட்சி இடம் பெறுகிறதாம். முகநூலில் மற்றும் விமர்சனங்களில் பார்த்தேன்.

இது ஒன்றும் புதிதல்ல. புன்னகை மன்னன் முத்தக் காட்சியும், இன்னும் சில ஹிந்திப் பட முத்தக் காட்சிகளும் ரசிகர்கள் நினைவுக்கு வரலாம். புன்னகை மன்னன் பட முத்தக் காட்சிக்குப் பிறகு கமல் படங்களில் கொஞ்ச காலம் முத்தக் காட்சி கட்டாயக் காட்சியாக இருந்தது! அவருடன் நடித்த கதாநாயகிகள் எல்லாம் இதற்காக பயந்த காலம் இருந்தது! அல்லது பயந்தது போல பேட்டி கொடுத்த காலம் இருந்தது!
1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் பேசும் படம் 'மேனகா'. புராணங்களை விட்டு வெளிவந்து தமிழில் எடுக்கப்பட்ட முதல் சமூகப் படமாம் அது. இதே படத்துக்கு இன்னொரு 'முதல்' சிறப்பும் உண்டு. அது கடைசியில்!
இந்தப் படத்தில் ஒரு காட்சியில் நாயகன் நாயகியை ஒரு கையால் அணைத்து, இன்னொரு கையால் அவள் வலது கையைப் பற்றி உள்ளங்கையிலிருந்து தொடங்கி தோள்பட்டை வரை முத்தமிட்டுக் கொண்டே செல்வாராம்.
அந்நாளில் இந்தக் காட்சி பரபரப்பாகப் பேசப்பட்டது. தீரர் சத்யமூர்த்தி கூட (அவரும் அந்தக் காலத்தில் நாடகங்களில் எல்லாம் நடித்துள்ளார்) இது பற்றி பத்திரிகையில் பேட்டி கொடுத்த அவர், 'தவறில்லை, ஆனால் இது மாதிரி முத்தக் காட்சியை ரொம்ப நீட்டக் கூடாது' என்ற வகையில் கருத்துத் தெரிவித்திருந்திக்கிறார்! டி கே சண்முகமும் இந்தக் காட்சியின் ஒத்திகை முதல் ரியல் ஷாட் வரை நடிக்கும்போது வரை ரொம்ப வெட்கப்பட்டதாய் ஒரு பேட்டியில் அப்போது தெரிவித்திருக்கிறார்.
பின்னாட்களில் ஒவ்வொரு படத்திலும் பாரதியார் பாடல்கள் இடம் பிடித்தன.
ஆனால் மஹாகவி பாரதியார் பாடல் ஒன்று இடம்பெற்ற முதல் திரைப்படம் 'மேனகா'தான். அதில்தான் தீரர் சத்யமூர்த்தி நெகிழ்ந்து போனாராம்.
'வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி! வாழிய, வாழியவே" என்ற பாரதியாரின் பாடல் இந்தப் படத்தில் இடம்பெற்றதாம்.