சமீபத்தில் படித்த புத்தகம். 'மணிக்கொடி காலம்' - பி எஸ் ராமையா எழுதியது. அதில் படித்ததிலிருந்து இங்கு கொஞ்சம் பகிர்வு.
மணிக்கொடிக்கு அந்தப் பெயர் வரக் காரணம் பற்றி பி எஸ் ராமையா குறிப்பிட்டுள்ளதாவது ...
"......சென்னைக் கோட்டைக்கு எதிரில் கடற்கரை மணலில் அமர்ந்து சீனிவாசன், வ.ரா, சொக்கலிங்கம் மூவரும் ஆரம்பிக்கப் போகும் பத்திரிகைக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது மாலை மணி ஆறு. கோட்டை மதில் மேடை மேல் கம்பத்தில் பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஆட்சிக்கொடி தினசரி வழக்கப் படி இறக்கப்பட்டது அவர்கள் கண்ணில் பட்டது. "அந்நிய ஆட்சிக் கொடி விழுந்தது. கம்பத்தின்மேல் நமது கொடி ஏறும் வேளை வந்து விட்டது" என்று ஒருவர் சொன்னார். பத்திரிகைக்குக் கம்பத்தில் ஏறப்போகும் புதிய பாரத சக்திக் கொடிப் பெயராகவே வைக்கவேண்டும் என்ற கருத்து எழுந்தது. சீனிவாசன் கம்பன் கவிதையில் திளைத்தவர். ராமகாதை பாலகாண்டத்தில் கோசிக முனிவனைத் தொடர்ந்து ராமனும் இலக்குவனும் மிதிலை நகருக்குள் நுழைந்தபோது அந்தக் கடிநகரின் கோட்டை மதில்கள் மீதும், மாடங்களின் மீதும் கொடிகள் பறந்து ஆடியது, ஐயனை 'வருக வருக' என்று அழைப்பது போல இருந்தது என்கிறான் கம்பன்.
"மையறு மலரின் நீங்கி
யான் செய்மா தவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள்....."
என்று சேதி சொல்லி ராமனை அழைத்த அக்கொடிகளைக் கம்பன் 'செழுமணிக் கொடிகள்' என்று குறிப்பிட்டிருப்பது சீனிவாசன் நினைவுக்கு வந்தது. அவர் அதைச் சொன்னவுடன் வ.ரா. "கம்பன் மட்டுமென்ன? பாரதியாரும் 'தாயின் மணிக்கொடி' என்றுதானே பாடியிருக்கிறார்?" என்றார்.
அந்த மாலைப் பொழுதில் கடற்கரை மணலில் புதுப் பத்திரிகைக்கு 'மணிக்கொடி' என்று பெயர் சூட்டப்பட்டது..........".
இந்தச் சம்பவங்கள் நேரில் பார்த்தது போல பி எஸ் ராமையா சொல்லியிருந்தாலும் இதற்குப் பிறகு வெகுநாட்கள் கழித்தே அவர் இவர்களுடன் இணைகிறார். அதுவும் எழுத்தாளராக இல்லாமல், விளம்பரப் பொறுப்பாளராக!
அந்த நாளில் லண்டனில் இருந்து ஞாயிறன்று மட்டும் வெளிவரும் 'சண்டே அப்சர்வர்' என்ற பத்திரிகையின் பாதிப்பில் இதையும் ஞாயிறன்று மட்டும் வெளிவரும்படி, தொடங்கப் பட்ட மணிக்கொடி இதழ் முதன் முதலாக 1933 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வெளியானது. அதைப் படித்து விட்டு முதன் முதலாகச் சென்று பாராட்டியவர் கல்கி.
அவர் அதில் உடனடியாக இணைய முடியாமல் அப்போதுதான் விகடனில் இணைந்திருந்ததால் (அதுவரை நவசக்தியில் பணியாற்றிக் கொண்டிருந்தாராம்) இதில் அவரால் இணைய முடியாமல் போனதாகக் குறிப்பிடுகிறார் பி எஸ் ராமையா. இரண்டாவதாகச் சென்றவர் இவர்தானாம். கல்கி அப்போது "இந்தத் தமிழ் மாதிரி யாரால் எழுத முடியும்? இந்த மாதிரி வேறு யாரால் மொழி பெயர்க்க முடியும்" என்று தமது உள்ளப் பரபரப்பையும், உவகையையும் கொட்டினாராம். அதற்குக் காரணமாக இருந்த வரி,
அவர் அதில் உடனடியாக இணைய முடியாமல் அப்போதுதான் விகடனில் இணைந்திருந்ததால் (அதுவரை நவசக்தியில் பணியாற்றிக் கொண்டிருந்தாராம்) இதில் அவரால் இணைய முடியாமல் போனதாகக் குறிப்பிடுகிறார் பி எஸ் ராமையா. இரண்டாவதாகச் சென்றவர் இவர்தானாம். கல்கி அப்போது "இந்தத் தமிழ் மாதிரி யாரால் எழுத முடியும்? இந்த மாதிரி வேறு யாரால் மொழி பெயர்க்க முடியும்" என்று தமது உள்ளப் பரபரப்பையும், உவகையையும் கொட்டினாராம். அதற்குக் காரணமாக இருந்த வரி,
"A thing of beauty is a joy for ever" என்ற ஆங்கில வாக்கியத்துக்கு மணிக் கொடி கொடுத்திருந்த "அழகிய ஒரு பொருள் அழியா இன்பம்" என்ற தமிழ் வாக்கியம்தானாம்.
1900 த்தின் ஆரம்பங்களில் சென்னையிலிருந்து வெளி வந்து கொண்டிருந்த விவேக சிந்தாமணி என்ற தமிழ் மாதப் பத்திரிகையில்தான் பி ஆர் ராஜம் ஐயர் தமது கமலாம்பாள் சரித்திரத்தைத் தொடர்கதையாக எழுதினாராம்.
பின்னாளில் தினமணி ஆசிரியரான ஏ என் சிவராமனுடனான தன் அனுபவங்களையும் அங்கங்கே சொல்கிறார் ஆசிரியர்.
அன்றைய ஆட்சியாளர்களுக்குச் சாதகமாகவே செய்திகளைத் திரட்டித் தந்து கொண்டிருந்த ராய்ட்டருக்கும், அசசோசியேட்டட் பிரஸ்சுக்கும் நடுவே உண்மைச் செய்திகளை செய்தி நிறுவனங்களுக்குக் கொடுக்க 'ஃப்ரீ பிரஸ்' என்ற ஒன்றைத் தொடங்கிய வரலாறையும் எழுதி இருக்கிறார். தொடங்கியவர் மணிக்கொடி நிறுவனர்கள், ஆசிரியர்களில் ஒருவரான கு சீனிவாசனின் கல்லூரிப் பருவத் தோழர் சதானந்த்.
நமக்கு எல்லோருக்கும் பாரதிதாசனின் "தமிழுக்கும் அமுதென்று பேர்" பாடல் தெரியும். தெரியாத ஆட்களே இருக்க முடியாது. அந்தப் பாடலை வெளியிட்டது (முதன் முதலில்) மணிக்கொடி. அதுவும் தன் இரண்டாவது இதழிலேயே. அப்போது பாரதிதாசன் என்றால் நிறையப்பேர் யாரென்று அறிந்திருக்கவில்லை என்கிறா பி எஸ் ஆர்.
மணிக்கொடிக் காலம், மணிக்கொடி இலக்கியம் என்றாலே எரிச்சல் அடைந்த எழுபதுகளின் பல எழுத்தாளர்களைப் பற்றியும் சொல்கிறார்!
ஆரம்ப காலங்களில் பி எஸ் ராமையா பக்கெட் ஷாப்பில்தான் வேலை பார்த்தாராம்.
ஆரம்ப காலங்களில் பி எஸ் ராமையா பக்கெட் ஷாப்பில்தான் வேலை பார்த்தாராம்.
ஆமாம், 'பக்கெட் ஷாப்' என்றால் என்னவென்று தெரியுமோ....?
---------------------------------------------
மணிக்கொடி காலம் (சாகித்ய அகாடெமி பரிசு பெற்றது)
ஆசிரியர் பி எஸ் ராமையா
மெய்யப்பன் பதிப்பகம்
முதற்பதிப்பு ஜூலை 1980
இரண்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2004.
விலை : 80.00
விலை : 80.00

