பர்ஸ் காணோம் என்று தெரிந்தவுடன், பல கற்பனைகள். ஒரு வேளை அண்ணன் எக்மோர் ஸ்டேஷனுக்கு வரவில்லை என்றால், எப்படி பஸ் பிடித்து புரசவாக்கம் போய் சேருவது? 'புரச --- வா --- come' என்று சொல்லுமா அல்லது 'டேய் .போ .... go ...' என்று சொல்லுமா? பல வித சிந்தனைகளுடன் இடத்திற்கு வந்து, சோகமாக உட்கார்ந்துகொண்டேன்.
என்னுடைய கர்ண கடூரக் குரலில், டிரெயினிலேயே பாட்டுப் பாடி, நாலு காசு சம்பாதிக்கலாம் என்று கூட ஓர் ஐடியா வந்தது. ஆனால் என்னிடம், கையால் 'டிர்ர்ரக், டிர்ர்ரக்' என்று சத்தம் எழுப்புகின்ற தாளக் கருவி (யார் கண்டுபிடித்திருப்பார்கள் இதை!!) தயாராக இல்லை! ஒரு ரப்பர் பாண்ட் மட்டும் இருந்தது. பக்கத்து சீட்டு சாம்புவிடம், "சார்! ஒரு மாட்ச் பாக்ஸ் இருக்குமா?" என்று கேட்டேன். அவர் திடுக்கிட்டுப் போனார். "லைட்டர்தான் இருக்கு" என்றார். சொல்லியதுடன் நிறுத்தாமல், அவருடைய பையை சீட்டுக்கு அடியிலிருந்து எடுத்து, அதில் ஏதோ தேட ஆரம்பித்தார்.
"எனக்கு காலி நெருப்புப் பெட்டி இருந்தால் போதும்" என்றேன்.
"அது இல்லைங்க தம்பி. இது என்ன? என் பையில் எப்படி வந்தது? ..." என்று கேட்டார். அவர் கையில் என்னுடைய பர்ஸ்! பர்ஸ் பத்திரமாக இருக்கின்றது என்பது தெரிந்தவுடன், ஒரு கெத்து வந்துடுச்சு பாருங்க. எப்படியும் என்னிடம் வந்துவிடும் என்ற நம்பிக்கை! 'அவரே கண்டு பிடிக்கட்டும் என்னுடைய பர்ஸ்தான் என்பதை' என்று நினைத்து, வாயை மூடிக் கொண்டு வேடிக்கை பார்த்தேன்.
அவர் பர்சைத் திறந்தார். உள்ளே இருந்த படம் !! ஹி ஹி என்னுடைய படம் இல்லைங்க! சிக்கல் சிங்கார வடிவேலர் படம்!! அந்தப் படத்தைப் பார்த்தவுடன் அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை! அவர் மேலும் ஆராய்ச்சி செய்து சிங்கார வடிவேலர் படத்துக்கு அடியில் இன்னொரு படம் இருக்கின்றதே - அது என்ன என்று பார்க்க முயற்சி செய்த போது ... நான் அவசரமாகக் குறுக்கிட்டு "சார் அது என்னுடைய பர்ஸ். நான் நீங்க சொன்னது போல, சீட்டுல கர்ச்சீஃப் போட்டேன் இல்லையா - அப்போ பர்ஸ் கர்ச்சீஃபோடு வந்து கீழே இருந்த உங்க பைக்குள் விழுந்துடுச்சு போலிருக்கு. பையில விழுந்ததால, சத்தமே வரலை, நானும் கவனிக்கவில்லை." என்றேன்.
நல்ல வேளை - அவர் சி சி படத்துக்குக் கீழே இருந்த படத்தைப் பார்க்கவில்லை. அது என்ன படம் என்று கேட்கின்றீர்களா? (அப்பாதுரைக்கு அஞ்சு சான்ஸ்!)
ஆனால் பர்ஸ், பணம் என்று எதையும் பற்றிக் கவலைப் படத் தேவை இல்லாமல் போய்விட்டது. ஸ்டேஷனுக்கு அண்ணன் வந்திருந்தார், என்னை புரசைவாக்கம் அழைத்துச் செல்ல!
========================================
அ லே வில் கற்றுக் கொண்ட இரண்டாவது பாடம்:
அசோக் லேலண்டில்,'அப்ரெண்டிஸ் ஆக சேருகின்றேன் ' என்றவுடனேயே, ஒவ்வொருவர் அங்கு யாரைத் தெரியும் என்ற விஷயங்கள் நிறைய சொன்னார்கள். அப்படி காற்றுவாக்கில் வந்த ஒரு தகவல்: 'எனக்கு வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில், இரண்டு வருடங்கள் சீனியர் ஆக இருந்த டி எஸ் ராஜகோபாலன் (என்னுடைய அண்ணனின் வகுப்புத் தோழன்) அங்கு ஏற்கெனவே அப்ரெண்டிஸ் ஆக இருக்கின்றார்' என்பதுதான்.
வேலையில் சேர்ந்த இரண்டு வாரங்களுக்குள், அவர் எந்த டிபார்ட்மெண்டில் இருக்கின்றார் என்ற விவரம் தெரிந்து கொண்டு, அவரைத் தேடித் தேடி, அவரை ஒரு நாள் காண்டீனில் சாப்பாட்டுக் கியூவில் நின்று கொண்டிருக்கும் பொழுது கண்டுபிடித்தேன்.
"விஸ்வேஸ்வரன் தம்பிதானேடா நீ! இங்கே சேர்ந்துட்டியா? வெரி குட். இது நம்ப ஊரு போல இல்லை. எவனும் நமக்கு தேடி வந்து எந்த உதவியும் செய்ய மாட்டான். அவனவன் தன் தன் வேலையைப் பார்த்துக் கொண்டு, போய்கிட்டே இருப்பான். நீயும் அதே போல இருக்கக் கத்துக்க. மற்றவர்களிடம் எந்த உதவியும் எதிர் பார்க்காதே."
நான் அப்படி மற்றவர்களுக்கு எந்த உதவியும் செய்யமாட்டேன் என்று பிரதிக்ஞை எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் 'அவனவன் தன் தன் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க்கினே இருப்பான்' என்று டி எஸ் ஆர் சொன்னது எவ்வளவு உண்மையான வார்த்தைகள் என்பதை அடிக்கடி உணர்ந்தேன்.
============================================
கொசுறு:
ஒரு டீ எட்டு பைசா. ஒரு இட்லி எட்டு பைசா. ஒரு வடை எட்டு பைசா. ஒரு பொங்கல் பதினாறு பைசா! ஒரு பூரி செட் பதினாறு பைசா. சாப்பாடு நாற்பது பைசா. நான் சேர்ந்த பொழுதும், அதற்குப் பின் அங்கு நான் வேலையில் இருந்த முப்பத்தைந்து ஆண்டுகளிலும் அதே விலைதான்!