அசோக் லேலண்டு பற்றி ஓரளவு தெரிந்துகொள்ள இந்த சுட்டியில் சொடுக்கி, தெரிந்து கொள்ளுங்கள். தமிழ்தான்!
ஆனால், அதுவல்ல நான் சொல்ல வந்தது.
மெஷின்ஷாப்பில் வேலை பார்த்த, அசோக் லேலண்டின் ஆரம்ப நாட்களிலிருந்து பணிபுரிந்து வந்த ஒருவர் கூறிய விவரங்கள் அவர் சொன்னது போல, இங்கே பதிகின்றேன்.
" நீ எப்போ பொறந்தே?"
(சொன்னேன்.)
"அப்போவே நான் அசோக் லேலண்டு கம்பெனிலே சேந்துட்டேன், தெரியுமா?"
"ஓ அப்படியா?"
"ஆமாம் - அப்போ எல்லாம் நிரந்தர பணியாளர்கள் யாரும் இங்கே கிடையாது! தெரியுமா?"
ஆச்சரியமாகப் பார்த்தேன்.
"ஆமாம். ஒன்றிரண்டு துரைமாருங்க மட்டும் இருப்பாங்க. பீச் ரோடு (பின் நாட்களில் இராஜாஜி சாலை) வழியாக அசோக் லேலண்டு ஆள் பிடிக்கிற பஸ் ஒன்றிரண்டு வரும். பார்க்கிறதுக்கு தாட்டியா இருக்கறவங்களை எல்லாம் நீ வா / அல்லது வரியா வேலைக்கு - என்று கேட்டு பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு வந்து இங்கே விடுவார்கள். "
"துரை யாராவது ஒருவர் இங்கிலீசுல தஸ் புஸ்ஸுன்னு சொல்லுவாரு, கொஞ்சம் விவரம் தெரிந்த உதவியாளர், ஒவ்வொருவரும் அவரவர்கள் உடல்வாகுக்குத் தகுந்த மாதிரி, என்ன வேலை செய்யணும் - ஆஸ்டின் மோட்டார் பாகங்களை எப்படி இணைக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுப்பார்.
எல்லோரும் கேட்டுப்போம். அதன்படி மோட்டார் பாகங்களை இணைப்போம்.
டீ நேரத்துல டீ. பன்னு. ரொட்டி, பிஸ்கட் எல்லாம் செலவில்லாம கிடைக்கும். சாப்பாடு நேரத்துல நல்ல சாப்பாடு. எட்டு மணி நேரம் வேலை முடிந்து வீட்டுக்குப் போகும்பொழுது ஆளாளுக்கு அவங்கவங்க செஞ்ச வேலைக்குத் தகுந்தாற்போல் கையில் நாலணா /ஆறணா/எட்டணா பத்தணா ஏதாவது கொடுப்பார்கள்!
அதை செலவு செய்ய ஒரு வாரம் ஆகும்! சில பேருங்க ஒரு வாரத்துக்கு ஒருமுறைதான் பீச்சு ரோடு பக்கம் வந்து, பயில்வான் போல நெஞ்சை நிமிர்த்தி, ஆள் பிடிக்கிற பஸ் வரும்பொழுது போஸ் கொடுப்பாங்க. ஒரு நாள் சம்பாதித்ததில் ஒரு வாரம் ஜாலியாக செலவழித்து, அடுத்த வாரம் ஒருநாள் வருவார்கள்!
ஆள் பிடிக்கிற பஸ்ஸில் வருகின்ற காண்டிராக்டருக்கு சம்திங் கொடுத்து, அடிக்கடி வேலைக்கு வந்தவர்களும் உண்டு!
இப்போ உங்க ட்ரைனிங் ஆபீசராக இருக்கானே --- (ஹி ஹி பெயர் எல்லாம் சொல்லக்கூடாது!!!) அவன் பொன்னேரியிலிருந்து ட்ரைன் பிடிச்சு வருவான். சும்மா வரமாட்டான், கையில ரெண்டு மூணு எளநீ வாங்கிகிட்டு வருவான். சும்மா சொல்லக்கூடாது தஸ் புஸ்ஸுனு இங்கிலீஷ் பேசுவான்! துரைமாருங்க கிட்ட அவன் இங்கிலீசுல பொளந்து கட்டுவான்.
துரைங்களுக்கு எல்லோருக்கும் இவனைப் பார்த்தா ஒரு இது! இப்போ பாரு அவன் ஆபீசர், நான் ஒரு சாதாரண தொழிலாளி! "
உண்மையோ, பொய்யோ - இது அவருடைய வார்த்தைகளில், அவருடைய பார்வையில், அந்தக் கால அசோக் லேலண்டு!