வியாழன், 7 ஆகஸ்ட், 2014

அலேக் அனுபவங்கள் 140807 :: இளநீர் செய்த உதவி!

   
அசோக் லேலண்டு பற்றி ஓரளவு தெரிந்துகொள்ள இந்த சுட்டியில் சொடுக்கி, தெரிந்து கொள்ளுங்கள். தமிழ்தான்! 
ஆனால், அதுவல்ல நான் சொல்ல வந்தது. 
     

மெஷின்ஷாப்பில் வேலை பார்த்த, அசோக் லேலண்டின் ஆரம்ப நாட்களிலிருந்து   பணிபுரிந்து வந்த ஒருவர் கூறிய விவரங்கள் அவர் சொன்னது போல, இங்கே பதிகின்றேன். 
      
" நீ எப்போ பொறந்தே?" 
(சொன்னேன்.)
    
"அப்போவே நான் அசோக் லேலண்டு கம்பெனிலே சேந்துட்டேன், தெரியுமா?"  
   
"ஓ அப்படியா?"   
    
"ஆமாம் - அப்போ எல்லாம் நிரந்தர பணியாளர்கள் யாரும் இங்கே கிடையாது! தெரியுமா?"  

ஆச்சரியமாகப் பார்த்தேன்.  
    
"ஆமாம். ஒன்றிரண்டு துரைமாருங்க மட்டும் இருப்பாங்க. பீச் ரோடு (பின் நாட்களில் இராஜாஜி சாலை) வழியாக அசோக் லேலண்டு ஆள் பிடிக்கிற பஸ் ஒன்றிரண்டு வரும். பார்க்கிறதுக்கு தாட்டியா இருக்கறவங்களை எல்லாம் நீ வா / அல்லது வரியா வேலைக்கு - என்று கேட்டு பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு வந்து இங்கே விடுவார்கள். "
     
"துரை யாராவது ஒருவர் இங்கிலீசுல தஸ் புஸ்ஸுன்னு சொல்லுவாரு, கொஞ்சம் விவரம் தெரிந்த உதவியாளர், ஒவ்வொருவரும் அவரவர்கள் உடல்வாகுக்குத் தகுந்த மாதிரி, என்ன வேலை செய்யணும் - ஆஸ்டின் மோட்டார் பாகங்களை எப்படி இணைக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுப்பார். 
          
    

எல்லோரும் கேட்டுப்போம். அதன்படி மோட்டார் பாகங்களை இணைப்போம். 
              
டீ நேரத்துல டீ. பன்னு. ரொட்டி, பிஸ்கட் எல்லாம் செலவில்லாம கிடைக்கும். சாப்பாடு நேரத்துல நல்ல சாப்பாடு. எட்டு மணி நேரம் வேலை முடிந்து வீட்டுக்குப் போகும்பொழுது ஆளாளுக்கு அவங்கவங்க செஞ்ச வேலைக்குத் தகுந்தாற்போல் கையில் நாலணா /ஆறணா/எட்டணா பத்தணா ஏதாவது கொடுப்பார்கள்! 
             
   

அதை செலவு செய்ய ஒரு வாரம் ஆகும்! சில பேருங்க ஒரு வாரத்துக்கு ஒருமுறைதான் பீச்சு ரோடு பக்கம் வந்து, பயில்வான் போல நெஞ்சை நிமிர்த்தி, ஆள் பிடிக்கிற பஸ் வரும்பொழுது போஸ் கொடுப்பாங்க. ஒரு நாள் சம்பாதித்ததில் ஒரு வாரம் ஜாலியாக செலவழித்து, அடுத்த வாரம் ஒருநாள் வருவார்கள்! 
            
ஆள் பிடிக்கிற பஸ்ஸில் வருகின்ற காண்டிராக்டருக்கு சம்திங் கொடுத்து, அடிக்கடி வேலைக்கு வந்தவர்களும் உண்டு! 
            
இப்போ உங்க ட்ரைனிங் ஆபீசராக இருக்கானே --- (ஹி ஹி பெயர் எல்லாம் சொல்லக்கூடாது!!!) அவன் பொன்னேரியிலிருந்து ட்ரைன் பிடிச்சு வருவான். சும்மா வரமாட்டான், கையில ரெண்டு மூணு எளநீ வாங்கிகிட்டு வருவான். சும்மா சொல்லக்கூடாது தஸ் புஸ்ஸுனு இங்கிலீஷ் பேசுவான்! துரைமாருங்க கிட்ட அவன் இங்கிலீசுல பொளந்து கட்டுவான். 
    
துரைங்களுக்கு எல்லோருக்கும் இவனைப் பார்த்தா ஒரு இது! இப்போ பாரு அவன் ஆபீசர், நான் ஒரு சாதாரண தொழிலாளி! "
             
      

உண்மையோ, பொய்யோ - இது அவருடைய வார்த்தைகளில், அவருடைய பார்வையில், அந்தக் கால அசோக் லேலண்டு! 
               

16 கருத்துகள்:

 1. ஆள் பிடித்துக் கொண்டிருந்த அசோக் லேலேன்ட் நிறுவனத்தில் இன்று வேலைக் கிடைப்பதே குதிரைக் கொம்பாகி விட்டதே !
  வியாபாரப் போட்டியில் பழைய தரம் இப்போது இல்லை போல் தெரிகிறது !

  பதிலளிநீக்கு
 2. நாலணா எட்டணாவில் ஒரு வாரம் செலவழிக்கலாமா? வியப்பாக இருக்கிறதே! உண்மையிலேயே 'அலெக்' அனுபவங்கள் அதிசயம் ஆனால் உண்மை!

  பதிலளிநீக்கு
 3. புலம்பல் கேசுங்க எப்பவும் உண்டு போலிருக்கு. அடுத்தவன் கொஞ்சம் முனைப்போட முன்னேறிட்டா போதுமே..

  நாலணா எட்டணாவில் ஒரு வாரம் ஓட்டினது சுவாரசியம். மதுவிலக்கு அமலில் இருந்ததோ?

  பதிலளிநீக்கு


 4. இளநீர் கொடுத்தே தென்னை மரமாய் உயர்ந்தாரோ..!

  பதிலளிநீக்கு

 5. இம்மாதிரி ஆட்கள் பயிற்சிக்குப் போகும் ஆட்களுக்கு எதுவும் சொல்லிக் கொடுக்க மாட்டார்களே. ( இப்ப பார் அவன் ஆஃபீசர் நான் தொழிலாளி.)

  பதிலளிநீக்கு
 6. சிறந்த திறனாய்வு பகிர்வு
  தொடருங்கள்

  பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
  http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html

  பதிலளிநீக்கு
 7. அந்தக்காலமே வேறுதான் இல்லையா?! பொன்னேரியிலிருந்து யாருங்க அது! நம்ம ஊரும் பொன்னேரி பக்கம்தான்!

  பதிலளிநீக்கு
 8. //நாலணா எட்டணாவில் ஒரு வாரம் ஓட்டினது சுவாரசியம். மதுவிலக்கு அமலில் இருந்ததோ? //

  :-)

  பதிலளிநீக்கு
 9. பகவான்ஜி ஆமாம் உண்மைதான்! அப்ரெண்டிஸ் ஆக சேருவதற்கே நான் நான் எவ்வளவு பிரயத்தனங்கள் செய்தேன் என்பதை முதல் சில பதிவுகளில் கூறியுள்ளேன்!

  பதிலளிநீக்கு
 10. ரஞ்சனி நாராயணன் - அந்தக் காலத்தில் காலணாவுக்கு கை நிறைய கத்தரிக்காய் கிடைக்குமாம். இவ்வளவு ஏன்? ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில், எங்கள் தோட்டத்தில் விளைந்த கொத்தவரங்காய் ஐந்து பைசாவுக்கு கால் கிலோ என்று கொடுத்திருக்கின்றார் என் தந்தை!

  பதிலளிநீக்கு
 11. அப்பாதுரை சார் - அவர் புலம்பவில்லை - தனக்கு இங்கிலீஷ் பேச வரவில்லையே என்ற குறைதான்! மதுவிலக்கு அமலில் இருந்ததோ இல்லையோ தெரியலை - ஆனால், கள்ளுக்கடைகள் நிறைய இருந்திருக்கும் என்று தோன்றுகிறது!

  பதிலளிநீக்கு
 12. இராஜராஜேஸ்வரி - ஆமாம் - அந்த ட்ரைனிங் ஆபீசரைக் கண்டால் எல்லா அப்ரெண்டிஸ்களும் நடுங்குவார்கள்! எங்களுக்கெல்லாம் அவரைக் கண்டால் பயம்!

  பதிலளிநீக்கு
 13. ஜி எம் பி சார். உண்மைதான்! அவர் சொல்லிக் கொடுக்கவில்லை என்றாலும் அவர் சொன்ன இந்த விஷயங்களிலிருந்து சில (இளநீர்) சுவையான பழைய சம்பவங்கள் எனக்குக் கிடைத்ததே! அது லாபம்தானே!

  பதிலளிநீக்கு
 14. திறனாய்வுப் பதிவா! காசிராஜலிங்கம்! ஆஹா கண்ணைக் கட்டுதே!!!

  பதிலளிநீக்கு
 15. தளிர் சுரேஷ்!
  ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!