Dhoni லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Dhoni லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9.1.12

இரட்டைக் குழந்தையும் நாய் நடையும்..... வெட்டி அரட்டை

   
காதல் போயின் ... 


"சேகர்... நான் உங்களை உண்மையா காதலிக்கிறேன்.."  
           

"என் காதல் உண்மைக் காதல்... உண்மைக் காதல் என்றும் தோற்றுப் போவதில்லை.."

இவை ஆங்காங்கு கேட்கும் வசனங்கள்...! காதலில் உண்மைக் காதல், பொய்க் காதல், மீடியம் காதல் எல்லாம் உண்டா என்ன?  

ஒருவன் காதலன்... ஒருத்தி காதலி... (பாட்டுங்க...)

ஏதோ ஒரு தடையினால் காதல் நிறைவேறா நிலை வந்தால் நிம்மதிக்காக (!) அந்தக் காதலை விட்டுக் கொடுத்தல் நல்லதா? அல்லது எப்படி இருந்தாலும் விடமாட்டேன் என்று பிடிவாதத் திருமணம் செய்வது உண்மைக் காதலா? 

காதல் என்றால் என்ன?

திருமணத்துக்கு முன் வரும் காதலும் தி. பின் வரும் காதலும் ஒன்றுதானா... வித்தியாசம் உண்டா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்திருந்தும் பதில் சொல்லாமல் போனால்....

அட, ஒண்ணும் ஆகாது... அடுத்ததைப் படிங்க...!

******************************************
கண்கண்ட பிரபலங்கள்!  

இசைவிழா அலைச்சல்களின்போது சில பிரபலங்கள் கண்ணில் பட்டார்கள்- பாடுபவர்களைத் தவிர! பாஸ்கி, மாது பாலாஜி,  கிரேசி மோகன், ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன். 
   
கடைசியாகச் சொல்லியிருப்பவர் ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் வாரிசு. கல்கியில் ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளிப்பவர். சமீபத்தைய அவரின் பதில் ஒன்றை ரசித்ததாக அவரிடம் சொல்லலாமா என்று சற்று நேரம் தாமதித்தேன். ஐம்பது அகவையைக் கடந்த நாரீமணிகள் அவரிடம் இடைவிடாது கூட நடந்து கேட்டுக் கொண்டு இருந்ததில் என் எண்ணத்தைக் கை விட்டேன். உங்களிடம் பகிர்கிறேன்!

கேள்வி : மான் தோலில் அமர்ந்து ஜெபம் செய்தால் ஞானம் வருமா?

பதில் : போலீஸ்தான் வரும்!

*****************************************
பெயரைச் சொல்லவா? 

சில பெயர்கள் எதிரில் உள்ளவர்கள் சொல்லும்போது அரைகுறையாகக் காதில் விழுந்து என்ன பெயர் என்று தெரியாமல் போகும். சமீபத்தில் என்னுடன் பேசிக் கொண்டிருந்தவர் சொன்ன பெயர் 'பானுமதி சித்தப்பா' என்றே காதில் விழுந்து கொண்டிருந்தது. ரொம்ப நேரம் கழித்து சரியான பெயர் தெரிந்தது பானு முஸ்தபா...!

பள்ளியில் படித்த காலத்தில் வருடத்தின் முதல் நாளில் மாணவர்கள் அவரவர் பெயரை அவரவர் அறிமுகப் படுத்திக் கொள்ளும் நிகழ்வின் போது மலேஷியாவிலிருந்து வந்ததாக அறியப் பட்ட புதிய அட்மிஷன் மாணவன் ஒருவன் அவன் பெயரைச் சொன்னது என் (டப்பா) காதில் ஓமே டகாயராஜ் என்று விழுந்தது. இரண்டு மூன்று நாட்கள் நண்பர்களுடன் அவனைப் பற்றிக் குறிப்பிடும்போது ஓரளவு சந்த நயத்தை மட்டும் வெளிப் படுத்தி சமாளித்த பின் சரியான பெயர் அவன் நோட்டைப் பார்த்ததும் தெரிந்தது! அது வரை மலேஷியப் பெயர் அபபடி வைப்பார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்! சரியான பெயர் கோமேதக வேலு. ஆனாலும் வித்தியாசமான பெயர்தான் இல்லை? 

***********************************************
 சோழன் 
  
பெயர்களைப் பற்றிச் சொல்லும்போது நான் கேள்விப் பட்ட, நல்ல தமிழ்ப் பெயர்கள் சிலவற்றைத் தருகிறேன்.

புகழேந்தி, இலக்கியா, எழிலன், இளங்கோ. 

சோழன் என்ற பெயரில் என்னோடு ஒரு மாணவன் படித்தான். ஆச்சர்யம்!  இதை எழுதும்போதுதான் அவன் ஞாபகம் திடீரென வருகிறது. சேரன், பாண்டியன் பெயரெல்லாம் சகஜம்.... தனியாகச் சோழன் என்று நான் கேள்விப்பட்டது அதுவே முதலும் கடைசியும்! என்னுடன் படித்த இன்னொரு வித்தியாசமான பெயர் கொண்ட நண்பன் சுதாமன்! 

****************************************************

ஓடத் தெரிந்த நாயே ... உனக்கு ...

அப்பா கேட்ட சந்தேகம்..."நாய் ஏன் நடப்பதே இல்லை?" ஒன்று மெல்லோட்டம், அல்லது வேக ஓட்டம். நிதான நடை நடக்கும் தெரு நாயைப் பார்ப்பது அரிது. (வாக்கிங் அழைத்துச் செல்லப் படும் நாய்கள் கணக்கில் வாரா!). 'நாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமில்லை சரி, ஆனால் ஏன்?

  

*********************************************

முது காவல். 


முதியோர் கல்வி போல முதியோர் வேலை வாய்ப்பு இப்போது பிரகாசமாக இருக்கிறது போலும்.  ஊர் முழுக்கக் கட்டிடங்கள் ஆபீஸ்கள், அபார்ட்மெண்ட்டுகள் என்று... எல்லா கட்டிட வாசலிலும் நீலச் சீருடை அணிந்த காவலாளிகள்....! என்ன, சம்பளம்தான் பத்தாயிரத்தை தாண்டாது போலும்.
    
***************************************
இரட்டைக் குழவி 


  
திரைப் படத்தில் இரட்டைக் குழந்தைகள் என்று காட்டினாலே ஒன்று தொலையப் போகிறது என்று அர்த்தம்! எனவே இரட்டையர்களாகப் பிறந்தவர்கள் இளவயதில் எதாவது ஒரு பாட்டைக் குடும்பப் பாட்டாக தெரிவு செய்து கொள்ளுதல் நலம். பின்னால் தொலைந்து போனால் உதவியாக இருக்கும்! 

இசை விழாக்களில் இரட்டையர்கள் நிறைய பேர் பாடுகிறார்கள். இதே பயத்திலும் ஐடியாவிலும்தான் அவர்களுடைய பெற்றோர் அந்த இரட்டையர்களுக்கெல்லாம் சங்கீதம் கற்றுக் கொடுத்திருப்பார்களோ....? 

**********************************************
காணாத கோலம் ... 
   
தொலைக் காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது எழுந்த யோசனை.
  
ஒலியை மியூட் செய்ய முடிகிறது. ஆனால் காட்சி வேண்டாம் என்றால் அதை மறைத்து பாட்டு, அல்லது செய்தி மட்டும் கேட்க முடிவதில்லை! நாம் தலையைத் திருப்பிக் கொண்டால்தான் உண்டு! புதிய வசதிகளில் டிவிக்கள் இதை முயற்சி செய்யலாமே....
   
அல்லது ஏற்கெனவே இருந்து என் சிற்றறிவுக்குத் தெரியவில்லையா?

**********************************************************
தோற்று(ம்) தேற்று மனதை ... 
    
ஆஸ்திரேலியத் தொடரில் தோல்விக்கு,  தோனி காரணங்கள் கண்டு பிடித்திருக்கிறார்.

* பேட்ஸ்மேன் யாரும் சரியாக விளையாடவில்லை. 

* முதல் இன்னிங்க்ஸ்ஸில் முன்னூறு முன்னூற்றைம்பது ரன் எடுத்திருக்கலாம். 

* பவுலர்கள் சரியாக பௌல் செய்யவில்லை. ஆஸி அணியினரை ரன் எடுக்க விடாமல் முன்னரே அவுட் செய்திருக்க வேண்டும். 

:-) இந்த மகேந்திர சிங் முன்பு மன் மோகன் சிங் தோற்றார்! 
  
*****************************************************
நாட் குறிப்பு - நம் தப்பு! 
     
புதிய டைரிகள் வேண்டுமா என்று கேட்டவர்களிடம் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.    
  
எல்லோரும் படிப்பார்கள் என்றால் உண்மையை எழுதுவோமா என்ன? 

டைரியை நம்மைத் தவிர யாரும் படிக்கக் கூடாது என்றால் ஏன் எழுத வேண்டும்?

எனக்கு நிறைய மாமாக்கள். ஒரு மாமா சொன்னார். அவர் எழுதி வைத்திருக்கும் டைரியில் அவ்வப்போது ஒவ்வொரு பக்கத்தில் சில கமெண்ட்ஸ் இருக்குமாம்! 

 "முட்டாளே! நீ நினைத்துக் கொண்டிருப்பது தவறு"

"அடுத்த முறை இன்னும் சுவாரஸ்யமாய் எழுது" இப்படி....!

அவரின் அண்ணனான இன்னொரு மாமாவின் வேலை!

*****************************************************

                 

16.8.11

"எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாங்க...." - கிரிக்கெட் பதிவு.

                                      
தினமணியில் மதியின் சமீபத்திய இரண்டு கார்ட்டூன்கள் ரசிக்க வைத்தன. இப்போது(ம்) தோற்ற கடைசி டெஸ்ட்டின் முதல் இன்னிங்க்சில் தோனி விளையாடும் நாளில் மதி கார்ட்டூன். "அட, தோனி ஐம்பது அடிக்கப் போறாரு....இன்னும் ஒரு ரன் போதும். இதுவரை விளையாடிய இன்னிங்க்சுகளில் மொத்தம் நாற்பத்தி ஒன்பது அடித்திருக்கிறார்.. இன்று ஒரு ரன் எடுத்தால் ஐம்பது.."

அடுத்தது "ராகுல் டிராவிட்டை ஒன் டேயில் விளையாடக் கூப்பிட்ட மாதிரி டெஸ்ட்டில் விளையாட கவாஸ்கர், கபில், மொஹிந்தர், விஸ்வநாத் என்று கூப்பிட்டுப் பார்க்கலாமா " என்று யோசனை சொல்லியிருக்கிறார்!
=============================
             
ஆட்டம் ஆரம்பிக்கும் முன்பு முன் காலத்தில் இங்கிலாந்தை இந்தியா ஜெயித்த மேட்சுகள் சிலவற்றைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். ஆறுதல் போலும்.    
கவாஸ்கர் தனது கோபமான பேட்டியில், 'இந்தியாவின் சில ஆட்டக்காரர்கள் உலகக் கோப்பை ஜெயித்துக் கொடுத்ததற்கு இந்தியா தங்களுக்கு கடன் பட்டிருப்பது போல் நினைக்கிறார்கள். அந்த எண்ணத்திலிருந்தே இன்னும் அவர்கள் வெளிவரவில்லை. இவ்வளவு நோ பால் போடும் பவுலரை கோச் ஒன்றும் கேட்கக் கூட மாட்டாரா...' என்று கூறி, field placing பற்றியும் தன் கோபத்தை வெளிப் படுத்தினார்.
=====================================

நடுவில் ஒருமுறை பார்த்தபோது கங்குலி, வாசிம் அக்ரம் இருவரையும் பழைய இங்க்லீஷ் `பிளேயர் ஒருவர் பேட்டி எடுத்துக் கொண்டிருக்க, கங்குலி அக்ரம் பௌலிங் பற்றி நினைவு கூர்ந்து ஒரு பழைய மேட்ச் பற்றி சொன்னது சுவாரஸ்யமாக இருந்தது.

"சட் சட் என்று எல்லா பேட்ஸ்மேனும் அக்ரம் பௌலிங்கில் அவுட் ஆகிக் கொண்டிருந்தார்கள். நான் உள்ளே போன போது அசாருதீன் கிரீசில் நின்று கொண்டிருக்க, நான் அவரிடம் போய், 'என்ன நடக்கிறது' என்று கேட்க, 'அதுதான் நீயே வந்துட்டேயில்ல, ஆடிப் பாரு' என்பது போலச் சொன்னார். இரண்டு மூன்று பால் விளையாட ஆரம்பித்ததுமே ஒன்றும் புரியவில்லை. உள்ளே ஸ்விங் ஆகி வரும் பாலை இடது புறம் திருப்பிவிட ட்ரை செய்யும்போது அது பேட்டில் பட்டு அபாயகரமாக தர்ட் மேன் திசை நோக்கிச் செல்ல, சமாளிக்க முடியாமல் திணறி, ஓவர் இடையில் அசாருதினிடம் 'என்ன இது' என்று கேட்டபோது அதைத்தான் கடந்த அரை மணி நேரமாக நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்' என்றார். அக்ரம் பௌலிங் போட வரும்போது பந்தைப் பார்க்க முடியாமல் மறைத்து வைத்து ஓடிவருவார். அப்புறம் நானும் அசாருதீனும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம். 'நான்- ஸ்ட்ரைக்கர்' எண்டில் யார் நிற்கிறார்களோ அவர்கள் வாசிம் அக்ரம் பந்து வீச வரும்போது பந்தின் ஷைனிங் பக்கம் எந்தப் பக்கம் இருக்கிறது என்று பார்த்து அந்தப் பக்கம் (இடது அல்லது வலது) தனது பேட்டைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இந்த ஏற்பாட்டுக்குப் பிறகு அவர் பந்துகளை சமாளித்து ஆடிக் கொண்டிருந்தோம். குழம்பிப் போய் வெறுத்துப் போன அக்ரம் மெல்ல பவுன்சர்கள் போட ஆரம்பிக்க, அப்பாடி என்று எங்களுக்கு ரிலீஃப் வந்தது '

கங்குலி சொன்னதைப் புன்னகையுடன் அருகிலிருந்த வாசிம் அக்கரம் கேட்டுக் கொண்டிருந்தார்!

Interesting!
============================================
    
கன்னா பின்னா உடையணிந்த இங்கிலாந்து ரசிகர்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள். போட்டியாம்! முதலிடம் ஜெயிப்பவர் வாழ்நாள் முழுக்க அந்த ஊரில் நடக்கும் கிரிக்கெட் மேட்சுகளைப் பார்க்க இலவச அனுமதியாம்! ஜட்ஜ் மைக் கேட்டிங்காம்! இந்தியாவில் என் இந்த ஐடியா யாருக்கும் வரவில்லை?!!
=============================================


#டவுட்டு !
பையன்: "அப்பா - ஏ முகுந்த் பி பிராட் அப்படீங்கறவர் எந்த ஸ்டேட்?"    
அப்பா: "என்னது?  ஏ முகுந்த் பி பிராடா? அப்படி யாரும் கிடையாதே!"      
பையன்: "முதல் டெஸ்டுல அவர் அந்தப் பேர்ல ஆடினார். அப்புறம் இரண்டாவது டெஸ்டில் ஏ முகுந்த் பி ஆண்டர்சன் என்று பெயரை மாற்றிக் கொண்டு ஆடினார் 
போலிருக்கு. ஆனால் அப்பவும் அவர் இரண்டு இன்னிங்க்ஸ் சேர்த்து மூன்று ரன்தான் எடுத்தார்! " 
    

=============================================


தோனி பேட்டி...     

     
"......எங்களை ஒரு ப்ளேன்ல அழைச்சிகிட்டு போனாங்கம்மா....அங்க ஒரு பதினோரு பேர் இருப்பாங்க...அவங்களால முடிஞ்சவரை அடிச்சாங்க....பதிலுக்கு அடிக்கலாம்னுதான் பார்த்தோம்...அப்போ... அப்போ.... ஸ்ட்ராஸ் சொன்னாரு இவங்களை எவ்வளோ அடிச்சாலும் தாங்கறாங்க....இந்தியா ரொம்ப நல்ல டீம்னு சொன்னாரும்மா...ஆ....ஆ...அவ்வ்வ்வ்" 

கையில் அடிபட்ட பிரவீன் அடுத்து வந்த மூன்று பந்தும் சிக்சர் அடித்ததுமல்லாமல் அப்புறமும் அடித்து விளையாடி வாண வேடிக்கைகள் நிகழ்த்த இந்திய ரசிகர்களுக்குக் கொஞ்சம் கை தட்ட கொஞ்சம் வாய்ப்பு! தோனியும் அடித்து ஆடினார். இதைப் பார்த்ததும் எங்களுக்குத் தோன்றிய ஒரு சில யோசனைகள்:-
  
*அடுத்த மேட்சிலிருந்து பிரவீன் குமாரும் மிஸ்ராவும் இன்னிங்க்ஸ் ஓபன் பண்ணவேண்டும். ஷர்மா ஒன் டவுன். அப்புறம் ஸ்ரீசாந்த். அப்புறம் தோனி, இப்படி பேட்டிங் வரிசை அமைக்கலாம்.
*மதி சொன்ன யோசனையும் நல்ல யோசனை. பட்டோடி, மொஹிந்தர் அமர்நாத் போன்ற பழைய ஆட்களை விளையாட அழைக்கலாம். இவர்கள்தான் ஓய்வு இல்லாமல் விளையாடி அலுத்துக் களைத்துப் போயிருக்கிறார்களே...
*எப்படியும் அவுட் ஆவது, தோற்பது என்று முடிவு செய்து விட்டார்கள். எதற்கு ரொம்ப நேரம் விளையாடிக் கொண்டு... சட் சட்டென அவுட் ஆகி விட்டால் உள்ளே வந்து தூங்கி ரெஸ்ட் எடுக்கலாம்." 

*பி சி சி ஐ இடம் சொல்லி அம்பையர்களை கரெக்ட் செய்ய முடியுமா என்று கேட்டுப் பார்க்கலாம்." 

*புதுப் பந்து எடுக்கும்போதெல்லாம் முக்கிய பேட்ஸ்மேன்கள் நைசாய் ரிடையர்ட் ஹர்ட் என்று சொல்லி உள்ளே வந்து விட்டு பந்து பழசானவுடன் சரியாகி விட்டது என்று விளையாடப் போகலாம்!

*பை ரன்னர் வைத்துக் கொள்வது போல (அதையும் இப்போது தடை செய்து விட்டார்கள்) பை பேட்ஸ்மேன் வைத்துக் கொள்ளலாம். சுரேஷ் ரெய்னா, சேவாக் போன்றவர்கள் பை பேட்ஸ் மேனாக பிரவீன், மிஸ்ரா போன்றோரை வைத்துக் கொள்ளக் கேட்டுப் பார்க்கலாம்.

*இடது பக்கம் அடிப்பது போல பாவ்லா காட்டி ஃபீல்டர்களை ஏமாற்றி நைசாய் வலது பக்கம் அடிக்கலாம்!

*நம் பவுலர்கள் பௌலிங் செய்யும்போது பேட்ஸ்மேன் அருகில் நிற்கும் நம் ஃபீல்டர்கள் 'நோ பால்' என்று குரல் கொடுத்தால் இங்க்லீஷ் பேட்ஸ்மேன் அலட்சியமாய் விளையாடி அவுட் ஆகிறார்களா என்று முயன்று பார்க்கலாம்!

*ஒரு சூதாட்ட புக்கி எங்களைச் சந்தித்து நிறைய ரன் எடுத்தால் நிறையப் பணம் தருவதாகச் சொன்னார். அதற்கு உடன்படாத நாங்கள் நாட்டுப் பற்றுடன் உடனே அவுட் ஆகி விட்டோம் என்று பேட்டி தரலாம்!"

'இன்னும் என்னென்ன பாய்ண்ட்ஸ் தரலாம் என்று வாசகர்கள் யோசனை சொல்லுங்களேன்!'

'வெற்றியும் தோல்வியும் சகஜம். எங்கள் எண்ணத்தில் ஏதும் மாற்றமில்லை' என்று தோனி சொல்லியிருக்கிறார். ஆகையால், இந்தியா தோற்கப் போகும் அடுத்த டெஸ்ட் ஓவலில் வரும் பதினெட்டாம் தேதி தொடங்குகிறதாம்.
                       

15.4.10

ஐ. பி எல் அனுபவங்கள்..

சாய்ராம் கோபாலன் ஒரு முட்டிக் கால் வலி மருந்து சிபாரிசு பண்ணியிருந்தார்.  


அதை சாப்பிட வேண்டுமென்றால் முட்டி வலி இருக்க வேண்டும். அது எனக்கு இல்லையே என்ற போது டென்னிஸ் ஆடுங்கள் வரும் என்று சொல்லியிருந்தார். எனவே டென்னிஸ் ஆட முயற்சித்துக் கொண்டிருந்தேன்.




பையன் ஆர்வமாக ஓடிவந்தான்.

"என்னடா...என்ன ஆச்சு.." 

"கிடைச்சிடுசிப்பா...கிடைச்சிடுச்சி.."
நெட்டிலும் நேரிலும் நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும் ஐ.பி.எல் டிக்கெட்டுக்கு அலைந்த பையன் கடைசியில் எப்படியோ வெற்றி பெற்றான். டிக்கெட் கிடைக்காது என்று நம்பி...நிம்மதியாய் இருந்தவன் நம்பிக்கையில் மண் விழுந்தது. அட, இப்படி எல்லாம் செய்கிறார்களே என்று அங்கலாய்த்த ஐ. பி. எல்லை பையன் வற்புறுத்தல் காரணமாக நேரில் போய்ப் பார்க்க வேண்டி வந்தது. (நல்ல வேளை...ஐ.பி.எல் தேவையா என்று கேள்வி கேட்ட புலவன் புலிகேசி லீவில் இருக்கிறார்...)

சென்னை மற்றும் கோல்கட்டா இடையே நடந்த லீக் மேட்ச்...இரவு எட்டு மணிக்கு ஆரம்பிக்கும் என்றாலும் முன்னரே போய் விடுதல் நலம் என்று தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோரும் ஃபோன் செய்து வற்புறுத்தியதால் மாலை நான்கு மணிக்கே கிளம்பி மைதானத்தை அடைந்தால் மனிதக் கடல்...! நீந்தி வரிசையில் நின்று ஒரு வழியாய் உள்ளே சென்று மே...லே...மேல் வரிசைக்கு சென்று அமர்ந்தோம்.

உள்ளே ஃபோன் எடுத்துச் செல்லக் கூடாது,தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லக் கூடாது என்று சொன்னார்களே என்று பார்த்தால், அதெல்லாம் ஒன்றுமில்லை, இரண்டுமே எடுத்துச் செல்லலாம் என்று விட்டு விட்டார்கள். உணவு, பெரிய வாத்தியங்களுக்குதான் அனுமதி இல்லை.

ஆனால் செல் உள்ளே எடுக்கவில்லை. யாருக்கும் பேசவும் முடியவில்லை. அழைப்பும் வரவில்லை. ("ஸ்க்ராம்ப்ளர் போட்டிருப்பாங்க அங்கிள்... நான் கூட இப்படிதான் ஏமாந்தேன்...கீழ படிக் கட்டுக்குக் கீழ போய்ப் பேசுங்க..எடுக்கும்" என்றான் பின்னாலிருந்து ஒரு எட்டு வயதுப் பொடியன்!)

எனக்கு தோனியிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டியிருந்தது. முதல் நாள் மாம்பலத்திருந்து மவுண்ட் ரோடு வரை பைக்கில் எனக்கு லிஃப்ட் தந்த ஹெல்மெட் நபர் அவர்தானா என்று தெரிய வேண்டும்! குரல் அவர் குரல் மாதிரிதான் இருந்தது. இவ்வளவு உயரத்திலிருந்து கேட்டால் அவர் பதில் சொல்வாரா?!

மேலேயிருந்து பார்க்கும்போது கம்ப்யூட்டரில் விளையாடும் பொம்மைகள் போல விளையாட்டு வீரர்கள்...டிவியில் பார்ப்பது போல பெரிதாய்த் தெரியாததில் வருத்தம்தான்..! ஆனால் பையன் என்னமோ இது ஹசி, அது கங்குலி என்றெல்லாம் கை காட்டிக் கொண்டிருந்தான். ரசிகர்களுக்குப் பரிசு கொடுக்கும் கேட்ச்கள், மற்றும் மைக் வைத்துப் பேசுபவர்கள் எல்லாம் கண்ணில் படவில்லை.

மைதானத் துளிகள்...

மைதானத்துக்கு வெளியே எல்லா டீம் சட்டைகளும் நூற்று எண்பது ரூபாய் என்று விற்றுக் கொண்டிருந்தார்கள். மேலும் தலைத் தொப்பி, ஊதுகுழல் ஆகியவையும்...

முன்னாலேயே போய் விட்டதால் சாப்பிட ஏதாவது வாங்கிதான் ஆக வேண்டும்...ஆவின் பால் கோவா கப் போல இருக்கும் கப்பில் வெஜ். பிரியாணி எண்பது ரூபாய். சுவைதான். ஆனால் காணாது.மற்ற ஐட்டங்கள் பர்கர், சிப்ஸ் என்று எதை எடுத்தாலும் ஐம்பது ரூபாய்!

ஜூஸ் கப் போலக் கப்புகளில் ஐந்து ரூபாய் கொடுத்தால் தண்ணீர் நிரப்பித் தருகிறார்கள்.

ட்ரம்ஸ் சிவமணி ட்ரம்சை தூக்கிக் கொண்டு (ஆள் வைத்துதான்..!) ஒவ்வொரு இடமாக நகர்ந்து நகர்ந்து சென்று சத்தப் படுத்திக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு ஓவர் இடைவெளியிலும் குத்துப் பாடல்கள்...ஆட்டங்கள்...

ஆட்டம் ஆரம்பிக்கும் முன்பும் நடந்து கொண்டிருக்கும்போதும் ஏராள பறவைகள் மேலே பறந்த வண்ணமிருந்தன.

ஆரம்பிக்கும் முன்னரும் முடிந்த பின்னரும் எல்லா இடங்களையும் இணைத்து பஸ்கள் விட்டிருந்தது சிறப்பு.

வயதான தம்பதிகள் முதல் குழந்தைகள் வரை ஆட்டத்தை மிக ரசித்தார்கள். அட, நம்ம தாத்தா கலைஞர் கூட பேரனுடன் அமர்ந்து பார்த்தாராம்..எங்களுக்குத் தெரியாது மறு நாள் டிவி பார்த்துதான் இதையும், அம்பையர் இரண்டு மூன்று அவுட்கள் தவறாகத் தந்தார் எண்பது போன்ற விவரங்களும் தெரிந்தன.

அது சரி, ஆட்டம் என்கிறீர்களா? அது யாருக்குத் தெரியும்? யார் பார்த்தார்கள்..பையனைத்தான் கேட்க வேண்டும்.

முத்தையா முரளிதரன் விஜய் டிவியில் அனுவுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அவருக்குப் பிடித்த நடிகர் ரஜினிதானாம் சிவாஜியை பத்து முறை பார்த்தாராம். கமல் நடித்த நாயகன் பிடிக்குமாம்.

லெக் ஸ்பின் போடும்போது அதில் ஆஃப் ஸ்பின் கலந்தால் அதுதான் 'தூஸ்ரா' என்றார்.

பிடித்த கேப்டன் அர்ஜுனா ரணதுங்காதானாம். நாற்பது வயதாகியும் சிறப்பாக விளையாடும் ஜெயசூர்யாவுக்கு பாராட்டு மாலை சூட்டினார்.

ஹெய்டனுக்கு நாமக்கல் ஆஞ்சநேயர் என்று பெயர் வைத்துள்ளார்களாம். ஹெய்டனுக்கு இவர்கள் தமிழ் சொல்லிக் கொடுப்பார்களாம். ஐ.பி.எல், எதிரிகளாகப் பார்க்கும் வெளிநாட்டு வீரர்களையும் நண்பர்களாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்திருக்கிறது என்றார்.
இதை எழுதிக் கொண்டிருக்கும்போது செல் ஒலித்தது. எடுத்தல் புதிய குரல்.."சார்! நான் வசந்தபாலனோட அசிஸ்டென்ட் பேசறேன்...நேத்து ஐ.பி.எல் மேட்ச் நடுவுல திரையில உங்களை டைரக்டர் பார்த்தாராம்..அடுத்த படத்துல நடிக்கிறீங்களான்னு கேக்கச் சொல்றார்.."

பையனை முறைத்தேன். அவனால்தானே இந்த புதிய வம்பெல்லாம்...!