Dinamani லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Dinamani லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20.9.09

தூறல்கள்!


பிளாட் பாரத்தில் கண் தெரியாத கணவன், மனைவி, இரு குழந்தைகள் - உலகமே அந்தத் தம்பதியர்க்கு இருட்டு - அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் அவர்கள் சிரித்து மகிழ்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்; அடுத்தவேளை அவர்களுக்கும் அந்தக் குழந்தைகளுக்கும் யார் மூலம் என்ன கிடைக்கும் என்று எந்த நிச்சயமும் இல்லாத நிலையில்கூட!'
"கருத்துக் குருடர்கள்' என்கிற தலைப்பில் ஹேமலதா பாலசுப்ரமணியம் எழுதியுள்ள "தூறல்கள்' என்கிற புத்தகத்தில் உள்ள ஒரு பதிவுதான் மேலே குறிப்பிடப்பட்டவை.
ஒரு கணவன், தனது மனைவியை எந்த அளவுக்கு நேசிக்க முடியும்? இதற்கு யாரும் ஷாஜகான்களைத் தேடி அலைய வேண்டாம். தனது மனைவியின் மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்ட எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் ஒரு சமீபத்திய உதாரணம்.
எழுத்தாள அன்பர் கே.ஜி.ஜவகர் ஆண்டுதோறும் தமது மனைவியின் நினைவு நாளன்று, தனது உற்ற நண்பர்களை எல்லாம் தனது வீட்டுக்கு அழைத்து விருந்தளித்து உபசரிக்கிறார். மனைவியே அன்று விருந்து கொடுப்பதாக அவருக்கு மன நிறைவு.
அந்த வரிசையில் பாலசுப்ரமணியம் சற்று வித்தியாசமானவர். பாலசுப்ரமணியம் ஹேமலதா என்று மனைவியின் பெயரைச் சேர்த்துதான் கையொப்பம் இடுகிறார். "பாஹே' என்கிற புனைப்பெயரில்தான் எழுதுகிறார். தனது மனைவியின் பெயரால் பல அறப்பணிச் சேவைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். எல்லோரும் "ராமஜெயம்' எழுதுகிறார்கள் என்றால், இவர் "ஹேமஜெயம்' என்றுதான் வார்த்தைக்கு வார்த்தை முணுமுணுக்கிறார்.
ஈரமுள்ள நெஞ்சத்தில்தான் காதல் துளிர்க்கும். காதலிக்கத் தெரிந்தவர்களிடம்தான் ரசனை இருக்கும். ரசனை இருந்தால் மட்டுமே எழுத்தாளனாக முடியும். மறைவுக்குப் பிறகும் தனது மனைவியை நேசிக்கத் தெரிந்த மனிதனின் எண்ணத்தில் தூய்மையும், எழுத்தில் ஈர்ப்பும் இல்லாமலா போய்விடும்!
நன்றி: தினமணி 20-09-2009 இந்தவாரம் - கலாரசிகன். (பக்கம் எண் எட்டு)