Flag hoisting. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Flag hoisting. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2.3.12

அலுவலக அனுபவங்கள்...05:: கொடியேற்றம்

                     
ஒவ்வொருவருக்கும் எவ்வளவோ நம்பிக்கைகள் இருக்கும். அர்த்தமுள்ள நம்பிக்கைகள், அர்த்தமில்லா நம்பிக்கைகள்...
                        
அர்த்தமுள்ள, அர்த்தமில்லா என்று எப்படி முடிவு செய்வது? அவரவர் அனுபவத்தைப் பொறுத்து என்று சொல்லலாமா.... அதுவும் மூட நம்பிக்கைகள் என்று எதிலும் நம்பிக்கை வைக்காதவர்கள் கூட சிலசமயம் பல்வேறுதரப்பட்ட மக்கள் சொல்லும், மற்றும் கடைப் பிடிக்கும் சில விஷயங்களில் ஒன்றும் சொல்ல முடியாமல் போகிறதும் நிகழ்கிறது! சொல்லவும் முடிவதில்லை, செய்யவும் முடிவதில்லை! 
             
தஞ்சைப் பெரிய கோவிலைப் பற்றி கூட அபபடி ஒரு நம்பிக்கை இருக்கிறதே...
        
அது ஓர் அரசு அலுவலகம்.
              
முப்பது பேர் வேலை பார்க்குமிடம். ஜனவரி மாதம் / ஆகஸ்ட் மாதம் வந்தால் போதும். அங்கு ஒரு பதட்டம் தொற்றிக் கொள்ளும். 
             
ஜனவரி, ஆகஸ்ட் மாதங்கள், அரசு அலுவலகங்களில் 'கொடியேற்றும்' மாதங்கள்!
                
இருப்பதில் கீழ்மட்ட ஊழியரைப் பிடித்து கொடிக்கம்பத்துக்கு  ஏற்பாடு செய்யத் தொடங்கும்போதே பிரச்னை தொடங்கி விடும். 
                 
பிரச்னை என்னவோ அல்லது ஆபத்து என்னமோ கொடியேற்றுவதில்தான். ஆனாலும் கம்பம் நடும் நபரே தகராறு செய்யத் தொடங்குவார். அப்புறம் முந்தய வரலாறுகள் அலசப்பட்டு, 'உனக்கு ஒன்றும் ஆகாது' என்று உறுதியளிக்க வேண்டும். அதன் பின்னர் அவர் அரைகுறை மனதுடன் வேலையைத் தொடங்குவார். 
                          
அப்படி என்ன ஆபத்து?
                      
கொடியேற்றுபவர் ஜனவரி என்றால் அடுத்து வரும் ஆகஸ்டுக்கோ ஆகஸ்ட் என்றால் அடுத்த ஜனவரிக்கோ கொடியேற்ற அங்கு இருக்க மாட்டார்! மாறுதல் (Transfer) தேடி வந்து விடும்! 
                 
மூட நம்பிக்கையோ முட்டாள் நம்பிக்கையோ, இந்த விஷயம் மட்டும் தப்பாது 99% சதவிகிதம் நடந்து வருவதால் வருடத்துக்கு இரண்டுமுறை அங்கு காமெடிப் பதட்டம்!
                       
"மூட நம்பிக்கை" என்று முழங்கிய உயர் அதிகாரி, உயர் அதிகாரி ஏற்றினால்தான் இது நடக்கும், எனவே கடைநிலை ஊழியரை விட்டு ஏற்றச் சொல்வோம் என்று' ஒருமுறை (பாதுகாப்பு!) முடிவெடுத்து அப்படியே செய்ததில் பல வருடங்களாக அங்கேயே இருந்த கடைநிலை ஊழியரும் மாற்றப்பட்ட போது நம்பிக்கை பலமாகியது.
                        
இன்னொரு யோசனையாக, கொடியையும் கொடிக் கம்பத்தையும் மாற்றி புதிதாக வாங்கி விடுவோம் என்ற யோசனையும் சொல்லப்பட்டு, ஏற்கப்பட்டு, அதுவும் செய்து பார்த்தாயிற்று!
                  
அந்த நாள் வரும்போது உயர் அதிகாரிகள் "முக்கிய வேலை" என்று முந்தின வாரம் முதலே லீவ் போடுவார்கள். அல்லது விடுமுறையை பயன்படுத்திக் கொண்டு அலுவலகத்துக்கே வரமாட்டார்கள்! 
   
முதலில் நம்பாதவர்கள் கூட தொடர்ந்து நடக்கும் இந்தக் கூத்தைப் பார்த்த பிறகு 'எதற்கு ரிஸ்க்' என்று கொடியேற்ற முன் வர மாட்டார்கள். சில வருடங்கள் கொடி ஏற்றாமல் இருப்பதும் அப்புறம் ஹெட் ஆபீசில் திட்டு வாங்கிய பிறகு மறுபடி தொடர்வதும் வருடாந்திர வழக்கம். இன்னமும் கூட இது அங்கு தொடர்ந்து கொண்டிருக்கலாம்..... யார் கண்டது?!
            
இதுவும் வருடா வருடம் தொடர்ந்த அனுபவம்தான்!