Short story Ugly matter. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Short story Ugly matter. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18.6.12

சீ... அசிங்கம்! --- சிறுகதை

      

தீபா எங்கே....? தேடின  அவன் கண்கள்....!   

            
அதோ வருகிறாள்....   

             

'சீக்கிரம் என் பக்கம் வாயேன்... என் தேவதையே....'  

               
ஆட்கள் யாரும் அமராத மேசைப் பக்கமாக நின்று கொண்டான்.
                      
அவள் வரும்போதே பந்தியில் இருப்பவர்களோடு பேசிக் கொண்டு, தெரிந்தவர்களை விசாரித்துக் கொண்டு மெல்ல வந்தாள். ஒரு புதிய நடுத்தர வயதுக்காரனிடம் வலியப் போய்ப் பேச்சுக் கொடுத்தாள். 
            
யார் அவன்? இரண்டு நிமிடம் பேசி விட்டு அங்கிருந்து எதிர் வரிசைப் பக்கம் சென்றாள். அவனுக்கு, தீபா முன்பு சொல்லியிருந்த வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தன. "வயசானவங்க கிட்டயும் நடுத்தர வயசுக் காரங்க கிட்டயும் ஒரு சௌரியம் ராஜு.... அந்நியப் பொம்பளைங்களை முறைச்சு முறைச்சுப் பார்க்கறவங்க கிட்டப் போய்ப் பேசிட்டோம்னா அவங்க ஜொள்ளுல பாதி குறையும்... வயசுப் பசங்கதான் மோசம்!" 
           
"தலைகீழாச் சொல்றியோ... இன்னும் அவங்களைக் கிட்ட அண்ட விடறே..."
           
"தெரியாதவங்கன்னா வர்ற சுதந்திரம் கொஞ்சம் அறிமுகமானவுடன் 'கெடுத்துக்கக் கூடாது'ன்னு கொஞ்சம் ஜாக்கிரதை உணர்ச்சி வரும்..."
           
ராஜுவுக்கு அதில் உடன்பாடில்லைதான்.... ஆனாலும் என்ன செய்ய... சொல்கிறாள். கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்!
                     
"என்ன தனியா இழுக்கறீங்க....... " அருகில் வந்தாள் தீபா.
           
"உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லத்தான் தனியா நிக்கறேன்.. கிட்ட வாயேன்.."
             
"சொல்லுங்க.." சந்தேகத்துடன் கொஞ்சம் அருகில் வந்தாள்.
         
தாண்டிப் போன பரிமாறுபவருக்கு இடம் கொடுத்து நகர்ந்து அவன் தூரம் செல்லும் வரைப் பொறுத்து,  அருகில் உள்ள இலைகளுக்கு முன் யாரும் இல்லை என்று நிச்சயப் படுத்திக் கொண்டு அவளை நெருங்கினேன். 
     
"பசி வந்துடுச்சுன்னா சாப்பிடுங்களேன்... உங்களைப் பொறுப்பாப் போட்டிருக்காங்கன்னா அப்புறம்தான் சாப்பிடணும்னு நிக்கறீங்களா... நான் பார்த்துக்கறேன்..."
          
"சாப்பாடு உள்ளே போகலை தீப்ஸ்.... இப்போ அதைப் பற்றி நினைக்கவும் முடியலை.." அருகில் நெருங்கி அந்த மூன்று வார்த்தையைச் சொல்லி விட்டான்.
            
"எனக்கு வாந்தி வருது"  
             
"என்னது?"
        
"கத்தாதே... சாப்பிடற இடம்... காலைலேருந்து பேதி மாதிரி மூணு நாலு தரம் போயிடுச்சி.... இப்போ வாந்தி வேற வருது... மாப்பிள்ளைக்கு நல்ல வேலை கொடுத்துருக்காங்க உங்க வீட்டுல.... சொல்லவும் முடியாம.. உனக்காக எவ்வளவு நேரம் காத்திருப்பது... கொஞ்சம் பார்த்துக்கோ... வந்துடறேன்"
   
விரைந்து நடந்தான் ராஜு.