வெள்ளிக்கிழமை.
பூங்கா .
காலை வேளை.
சிறுவர் விளையாடுமிடத்தில், முழங்கால் உயரத் தடுப்புச் சுவற்றின் மீது அமர்ந்து, தலை நரைத்த எட்டு ஆண்கள் இந்தி, கன்னடம், ஆங்கிலம் எல்லா மொழிகளிலும் சுஷ்மா, வசுந்தரா, லலித் மோடி பற்றி எல்லாம் அரட்டையடித்து ஓய்ந்து ஏழு ஐம்பதுக்கு ஒருவருக்கொருவர் கை குலுக்கி, கட்டிப் பிடித்து, சிரிப்போடு அவரவர் வீடு நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.
அலுவலகம் செல்வோர் எல்லோரும் ஏழு மணி முதல் எட்டு மணி ஆவதற்குள், பூங்காவில் இருந்த நடைபாதையில் வேகச் சுற்றுகள் சுற்றி, வாட்சைப் பார்த்தபடி வெளிநடப்பு செய்திருந்தனர்.
அருகில் உள்ள கார்ப்பரேஷன் பள்ளிச் சீருடையணிந்த சிறுவர்கள் ஓடி ஆடி ஓய்ந்து, ஒன்பது மணி சுமாருக்கு வேலி தாண்டிக் குதித்து பள்ளிக்கூடம் சென்றனர்.
பூங்காவில் வெளியாட்கள் அநேகமாக யாரும் இல்லாத நேரம்.
பூங்கா பராமரிப்பு செய்கின்ற குடும்பத்து பெரியவர்கள் பராமரிப்புப் பணிகளில் ஆழ்ந்திருந்தனர். ஒரு நாலு வயதுப் பெண் குழந்தை மட்டும் சிறுவர்களின் விளையாட்டுக்காக சறுக்குமரம், ஸீ - ஸா, ஊஞ்சல் உள்ள பகுதியில், தனித்து நின்று கொண்டிருந்தது. இங்கே அங்கே சும்மா பார்த்துக் கொண்டிருந்தது. கையில் இருந்த ஒரு கையில்லாத பொம்மையை, தூங்க வைப்பது போல கொஞ்சம் தட்டிக் கொடுத்தது.
அப்பொழுது பக்கத்துக் குடியிருப்பு ஒன்றிலிருந்து, வயதான ஒரு வேலைக்கார அம்மா, ஒரு குழந்தையைத் தூக்கிக்கொண்டு பூங்காவுக்குள் நுழைந்தார். அந்த அம்மா கழுத்தில், மஞ்சள் கயிறு மட்டுமே. கைகளில் பிளாஸ்டிக் வளையல்கள். குழந்தை, ஷூ + குல்லாய், ஸ்வெட்டர், கொலுசு அணிந்த இரண்டு வயதுப் பெண் குழந்தை. அந்தக் குழந்தையை ஒரு கையில் தூக்கிக்கொண்டு, மற்ற கையில் ஒரு பெரிய எவர்சில்வர் டபரா சகிதம் பூங்காவில் நுழைந்து, சிறுவர் விளையாடும் பகுதிக்கு வந்தார்கள்.
வேலைக்கார அம்மா அந்தக் குழந்தையை விளையாடுமிடத்தின் முழங்கால் உயர தடுப்புச் சுவற்றின் மீது அமர்த்தி, தன் கைப் பாத்திரத்தில் இருந்த உணவுப் பொருளை, சிறு உருண்டையாக உருட்டி, அந்த இரண்டு வயதுக் குழந்தையின் வாயில் ஊட்டிவிட்டார். அருகில் மரக்கிளையில் வந்து அமர்ந்த காகம் ஒன்று "கா ..... கா" என்று கத்தியது. அது, 'எனக்கு ஏதாவது கிடைக்குமா?' என்று கேட்டது போல இருந்தது.
காகம் தொடர்ந்து கரைந்து கொண்டிருந்தது.
நான்கு வயதுக் குழந்தை இவர்கள் இருவரையும் தூரத்திலிருந்து நோட்டமிட்டது. பிறகு சற்று அருகே சென்று, நின்று, பார்த்தது. அதற்குப் பிறகு, அந்த உணவுப் பாத்திரத்திற்குப் பக்கத்தில் தடுப்புச் சுவற்றின் மீது அமர்ந்துகொண்டது. தன்னுடைய பொம்மையை தடுப்புச் சுவற்றின் மீது படுக்க வைத்தது. அப்படியே அந்த அம்மாவையும், குழந்தையையும் பார்த்து, சிநேகமாக ஒரு புன்னகை செய்தது. அதனுடைய புன்னகைக்கு அவர்கள் இருவரும் பதில் புன்னகை செய்யவில்லை.
நா வ குழந்தை, உணவுப் பாத்திரத்துக்குள் என்ன இருக்கிறது என்று சற்று எட்டிப் பார்த்தது. இ வ குழந்தை சாப்பிடுவதை ஆவலோடு பார்த்தது. ஆனால் கையை நீட்டாமல் சும்மா பார்த்துக்கொண்டு இருந்தது.
வேலைக்கார அம்மா, கொஞ்ச நேரம் இந்த நா வ குழந்தையை யோசனையுடன் பார்த்துவிட்டு, கொஞ்சம் அதிகமாக அந்த உணவைக் கையில் எடுத்து, உருட்டி, நா வ குழந்தைப் பக்கம் கையை நீட்டினார்.
நா வ குழந்தை உடனே ஆவலோடு அந்த உருண்டையை தன் இடது கையில் வாங்கிக்கொண்டது.
அந்தக் கையை தன் கண்களுக்கு அருகே கொண்டுவந்து, அது என்ன என்று பார்த்தது. ஒருவேளை முகர்ந்து பார்த்திருக்குமோ?
மரத்திலிருந்து காகம், " கா ....... கா ......... கா"
நா வ குழந்தை, தன் இடது உள்ளங்கையில் இருந்த உணவு உருண்டையை, வலது கையால் எடுத்து, அந்தக் காகம் இருக்கும் திசையில் வீசியது. காகம் அதை காட்ச் பிடித்து, மீண்டும் மரக்கிளைக்கு சென்று அமர்ந்து கொண்டது.