அன்புள்ள மன்னவனே ... ஆசையில் ஓர் கடிதம் !
கடிதம் வந்த காலங்களெல்லாம் காணாமல் போய் விட்ட இந்நாளில் ஒருவருக்கு கடிதம் வந்தால் எப்படி இருக்கும்? அதுவும் எதிர்பாராத ஒருவரிடமிருந்து! அபபடி ஒரு கடிதம் வந்த செய்தியை சில நாட்களுக்குமுன் தினமணியில் படித்தேன்.அதுவும் எப்படி? ஐம்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்னால் எழுதப் பட்டகடிதம்...
உடனே நம்ம ஊர்லதான் இப்படியெல்லாம் நடக்கும், அதனால் எந்த ஊர் என்று கேட்க வேண்டாம். இது கலிஃபோர்னியாவில் நடந்த சம்பவம். தற்சமயம் எழுபத்தி நாலு வயதாகும் அந்த கிழவருக்கு எங்கெங்கோ சுற்றி விட்டு அலைந்து திரிந்து வந்துள்ள கடிதம். பிரித்துப் பார்த்த போது அவருடைய அப்போதைய காதலி எழுதியிருந்த கடிதம். பல்கலைக் கழகத்தில் படித்தபோது நிகழ்ந்த சம்பவங்கள் நினைவிலாட கொசுவர்த்தியுடன் கிழவர் பாட்டுப் பாடாத குறை. அந்தக் காதலிதான் இவர் முதல் மனைவி. நான்கு குழந்தைகள் பெற்றுக் கொண்டபின் விவாகரத்து வாங்கி இரண்டாவது மனைவி கல்யாணம் பண்ணி அவள் மூலமாக அவருக்கு பதினைந்து குழந்தைகளாம்!
ம்..ஹூம்...எல்லா ஊர்லயும் போஸ்டல் டிபார்ட்மென்ட் இப்படிதானா? எல்லா ஊரிலும் காதல் இவ்வளவுதானா? (காதல் மனைவிக்கு நான்கு குழந்தைகள், 'கல்யாண' மனைவிக்கு பதினைந்து குழந்தைகள்...!)
============================== =======
விவாகரத்து ஆகி பிரிந்து விட்டாலும் லகான் தயாரிப்பு நாளோ, வெற்றி நாளோ, ஏதோ ஒன்று கொண்டாடும்போது ஆமிர்கான், அந்தப் படத் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகித்த தன் முதல் மனைவியை விழாவுக்கு அழைத்து மரியாதை செய்து உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார். யாதோன் கி பாராத் படத்தில் மூன்றாவது குழந்தையாக நடித்தது ஆமிர்கான்தான் தெரியுமோ...? (ராணுவ ரகசியத்தைச் சொல்லி விட்டீர்களாக்கும் என்று நொடிக்க வேண்டாம்!)
============================== =======
ராணுவ ரகசியங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக லீக் ஆகும்போது ஸ்விஸ்ஸ் வங்கிக் கணக்கு விவரங்கள் தப்பித் தவறிக் கூட வெளியில் வராதவாறு கவனமாக, மிக கவனமாக பார்த்துக் கொள்கிறது சோனியாவின் அரசு என்கிறது ஒரு பத்திரிக்கைச் செய்தி.
============================== ==========
ஒரு அழுக்கான ஆஸ்பத்திரி. அல்லது கொஞ்சம் சுத்தமான ஆஸ்பத்திரி. சுமார் பதினைந்து பேர் உள்ள ஜெனெரல் வார்ட் அது. கேண்டீனில் போய் ஃபிளாஸ்கில் காஃபி வாங்கி வரும் ராகுல் அந்த ஏழாம் எண் பெட் அருகே போய் படுத்திருக்கும் சோனியா சாப்பிட்ட டிஃபன் கேரியரை ஒதுக்கி அருகில் உள்ள ஸ்டூலில் அமர்கிறார். அருகில் உள்ள படுக்கையில் ஒரு கிழவி, 'இருமு இருமு' என்று இருமுவதை பொழுது போகாமல் வேடிக்கை பார்க்கிறார் ராகுல்.
இப்படி ஒரு காட்சி மனக் கண்ணில் ஓடியது "சோனியா ஜெனெரல் வார்டுக்கு மாற்றப் பட்டார்' என்ற செயதியைப் படித்ததும்!
அவருக்கு என்ன வியாதி?
தெரியாது.
என்ன ஆபரேஷன்?
தெரியாது. மன்மோகன் சிங்குக்கும் அவர் அரசாங்கத்துக்கும் ஒன்று மட்டும் தெரியும். அன்னை சோனியாவுக்கு உடம்பு சரியில்லை.
============================== ===========
கல்கியில் சமீபத்தில் தஞ்சை மாவட்ட சிறப்பிதழ் போட்டார்கள். (31-7-2011). அவ்வப்போது ஒவ்வொரு மாவட்டச் சிறப்பிதழாக போடுவதுதான். இந்த இதழ் பக்கங்கள் எல்லாவற்றிலும் பலப்பல அரிய தகவல்கள். அதில் மிக முக்கியச் செய்தி ஒன்று, பி.எஸ்.ராமையா, கு.ப.ரா., புதுமைப் பித்தன், கரிச்சான் குஞ்சு ஆகிய மணிக்கொடி எழுத்தாளர்களோடு இருந்த இன்னொரு மணிக்கொடி எழுத்தாளர் சுவாமிநாத ஆத்ரேயன் பற்றி. இன்று நம்மிடையே இருக்கும் மணிக்கொடி எழுத்தாளர் இவர் ஒருவர்தானாம் . வயது தொண்ணூற்றைந்து ப்ளஸ்ஸில் இருக்கும் இவர் தஞ்சையில் இருக்கிறார். இவரிடம் 'ரெண்டு வார்த்தை' வாங்கிப் போட்டிருக்கிறார்கள். பேசாத போது முழுவதும் ராம ஜபம் செய்கிறாராம். இவர் கதை ஒன்றும் படித்ததில்லை. (சமஸ்க்ருத நெடி என் கதைகளில் அதிகம் இருக்கும் என்கிறார் அவர்) "ஆத்ரேயன் நல்லாத்தான் எழுதறார்... ஆனால் தமிழ்ல எழுதுங்களேன்... இன்னும் நல்லா இருக்கும்" என்று வாழைப்பழ ஊசியாய் கமெண்ட் அடிப்பாராம் பு.பி.
ஜீவி சார்... இவர் கதை எதாவது இருந்தால் பிரசுரியுங்களேன்... அல்லது பி டி எஃபில் கிடைக்குமா?
கல்கியின் தஞ்சைச் சிறப்பிதழ் பழைய தஞ்சைக் கால நினைவுகளை கிளறி விட்டது.
============================== ===============
இதற்கும் அடுத்த இதழ் கல்கியில் சிறுகதைப் போட்டி முடிவு அறிவித்து விட்டார்கள். வண்ணதாசனும், கே பாரதியும் நடுவர்கள். பேராசிரியை பாரதி அவர்களை எனக்குத் தெரியும் என்பது எனக்குப் பெருமை! (அவருக்கும் என்னைத் தெரியுமாக்கும்!) முதல் பரிசு அசோகமித்திரனுக்கு.
பழம்பெரும் எழுத்தாளர். நன்றாக எழுதுவார். என்னுடைய கருத்து என்னவென்றால் அசோகமித்திரன் பெயர் வாங்கி விட்ட எழுத்தாளர். அவர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டது புதிய எழுத்தாளர்கள் வழியை மறைப்பது போல் இல்லையா என்று தோன்றியது ஒரு புறம், மறு புறம் பிரசுரிக்கப்பட்டுள்ள அவர் கதையில் பெரிய சம்பவம் அல்லது நிகழ்வு என்று ஒன்றுமில்லாமல் இருக்கிறது. வண்ணதாசன் அதற்கு ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்."யதார்த்தமு ம், ஒரு விட்டேற்றியான மனோபாவமும் கதையில் வறுமையை பிரச்சாரமாகச் சொல்லாமல் கலாபூர்வமாகச் சொல்கிறார்"
============================== ===============
"ஆடி மாசம் கல்யாணம் செய்யலாமா?"
ஜாதகம் பார்ப்பது முதல் சத்திரம் பார்ப்பது வரை எல்லாம் ஆடி மாதத்தில் செய்யலாம். கல்யாணம் மட்டும் கூடாது!
"விசா கிடைக்க எந்த கோவிலுக்குச் செல்ல வேண்டும்"
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள ஆஞ்சநேயரைப் போய் பார்த்து வரணும்... அர்ச்சனை செய்யணும்.. ராமபிரான் கடல்தாண்டிச் செல்ல உதவியவர் இந்த ஹனுமான்தான்..."
இதெல்லாம் கல்கியில் வரும் ஜோசியப் பகுதியில் வரும் கேள்விகள், மற்றும் பதில்கள்!
"விதியை மதியால் வெல்ல முடியுமா?"
இந்தக் கேள்விக்கு என்ன பதிலாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்...?
============================== ======



