உறவினர் அழைத்ததால், அவர் வீட்டிற்கு, சிறு விருந்து உண்ண சென்றிருந்தேன். முதலில் சர்க்கரைப்பொங்கல், அதன் பின் புளியோதரை, வடாம், வற்றல என்று ஒரே ஹோம் லிங்க்ஸ் சமாச்சாரங்கள் படை எடுத்து வந்து, தட்டில் விழுந்து, வாயில் போட்டவுடன் சுவையாகக் கரைந்தன.
அரிசி அப்பளம், ஜவ்வரிசி வடாம் போன்ற சைடு டிஷ் சமாச்சாரங்களுக்கு நான் நிரந்தர ரசிகன். நண்பர் வீட்டில் இலையிடப்பட்ட பொரிக்கப்பட்ட அரிசி அப்பளம், இலேசாக, 0.25 mm / 0.5 mm திக்னஸ் உள்ள அரிசி அப்பளம், மிகவும் சுவையாக இருந்தது.
"வீட்டிலே செய்ததா?" என்று கேட்டேன்.
"ஆமாம்."
"அட! எப்படி செய்தீர்கள்?"
"ஹி ஹி நாங்க செய்யலை! ஆனா மாமி கடையில, அப்படித்தான் சொன்னாங்க!"
"என்ன? மாமி கடையா! எங்கே இருக்கு?"
"மாம்பலத்தில்."
"விவரமா சொல்லுங்க. அப்பளம் நன்றாக இருக்கின்றது. நான் காத்மாண்டு போகும்பொழுது பத்து பாக்கெட் வாங்கி போகணும்."
"இப்போ நீங்க சாப்பிட்ட ஹோம் லிங்க்ஸ் பொருட்கள் எல்லாமே மாமி கடையில் வாங்கியதுதான்."
"மாம்பலத்தில் மாமி கடை எங்கே இருக்கு?"
"ஸ்டேஷன் பக்கத்திலேயே. டி நகர் பக்கம் இறங்கி, ரங்கநாதன் தெருவில் அஞ்சு ஸ்டெப்ஸ் நடந்து, வலது பக்கம் திரும்பி நடந்தால், இடது பக்கத்தில் வரும் மாமி கடை. தெரியாவிட்டால் - 'மாமி கடை எங்கே?' என்று சின்னக் குழந்தையைக் கேட்டாக் கூட சொல்லிடும்!"
* * * * * *
உறவினர் சொன்னதைக் கேட்டு, உறுதிப் படுத்திக்காமல் வந்துவிட்டது அசட்டுத் தனமோ என்று அதற்குப் பிறகு தோன்றியது. அவர் சொன்ன அடையாளங்கள் வழியே நடந்து பார்த்தால் அங்கே ஒரு எலெக்ட்ரிக் டிரான்ஸ்பார்மர் என்னை மௌனமாகப் பார்த்தபடி நின்றிருந்தது. அதற்குப் பின்னே ஏதோ கட்டடம் உருவாகிக் கொண்டிருந்தது.
சரி, சின்னக் குழந்தையிடம் கேட்டால் கூட சொல்லிவிடும் என்றாரே என்பது ஞாபகம் வந்தது. ரங்கநாதன் தெருவில், (அதனுடைய) அம்மா தோளில் சாய்ந்து அரை உறக்கத்தில் இருந்த ஒரு இரண்டு வயதுக் குழந்தையிடம், 'மாமி கடை எங்கே இருக்கின்றது?' என்று கேட்டேன். அது, சற்று யோசித்துவிட்டு, 'மாமி பஜ்ஜி போட்டா' என்றது.
மாமி பஜ்ஜி போட்டா(ள்)? / பஜ்ஜி போ(ய்)ட்டா? / பஜ்ஜி போண்டா? / மாமி பஜ்ஜி, (நீ) போடா? இந்தத் தேவை இல்லாத குழப்பங்கள் வேறு இப்போ சேர்ந்துகொண்டது!
ஸ்டேஷனை ஒட்டியே இருந்த ஒரு ஆப்பிள் வண்டிக்காரரை அணுகி, 'சார், இங்கே மாமி கடை எங்கே இருக்கு?' என்று கேட்டேன்.
'ஏன் என் கிட்ட ஆப்பிள் வாங்க மாட்டீங்களா?'
'ஏன் என் கிட்ட ஆப்பிள் வாங்க மாட்டீங்களா?'
'அவங்க கிட்ட வடாம் வற்றல வாங்கவேண்டும், அதுக்குத்தான் கேட்கிறேன்!'
'உங்களுக்கு மாமி முக்கியமா - இல்லே வடாம் முக்கியமா?'
'வடாம்தான்'
'அப்பிடீன்னா - இதோ ரங்கநாதன் தெருவிலேயே, "........ ....." கடை இருக்கே, அங்கே போயி வடாம் வற்றல எல்லாம் வாங்கிக்குங்க.'
அந்தக் கடையில் சில சமயங்களில் வாங்கியது உண்டு. சில சமயங்களில், சில பொருட்கள் மட்டும் நன்றாக இருக்கும். ஆனால் அப்பள வகைகள் ஒன்றும் அவ்வளவு சுகம் கிடையாது. இதை எல்லாம் ஆப்பிள்காரருக்கு சொல்லி விரிவுரை ஆற்ற நேரம் இல்லாததால், மீண்டும் அந்த ஸ்டேஷனை ஒட்டிய வீதியில், டிரான்ஸ்பார்மர் தாண்டி, உலா சென்றேன்.
உறவினரை அலைபேசியில் அழைத்து, பட்ட அல்லல்களைக் கூறி, அதன் பிறகுதான், அந்தக் கடை நான் நினைத்தது போல அருகிலேயே இருக்காது, இன்னும் சற்று உள்ளே போகவேண்டும் என்று தெரிந்துகொண்டேன்.
ஒரு சிறிய ஹோம் லிங்க்ஸ் கடை, பிறகு பட்டாணிக் கடை, இலைக் கடை அதற்குப் பிறகு இருந்தது அந்த மாமி கடை.
மாமி கடையைக் கண்டுபிடித்துவிட்ட சந்தோஷத்தில், அரிசி அப்பளம், உளுந்து அப்பளம், நார்த்தங்காய், புளியோதரைப் பொடி என்று ஏகத்திற்கு வாங்கி, பிறகு கடையைக் கண்டுபிடிக்க, நான் பட்ட பாட்டைச் சொன்னேன். மாமி கடை பற்றி, ப்ளாக் எழுதப்போகும் விவரத்தையும் கூறினேன். மாமி சந்தோஷமாக, ஒரு சிறிய பேப்பரில், ஆங்கிலத்தில் இந்த விவரங்களை எழுதித் தந்தார்.
Dealing in household items like butter, ghee, appalam, vaththal, vadaam, pickles.
KANCHI KAMAKSHI HOMELINKS,
S.BHUVANESHWARI
SHOPNO 6,UMA COMPLEX,
NEW NO 36, OLD NO 1,NATESAN ST,
T NAGAR,
CHENNAI,600017
PHONE: 24354799
ஹோம் லிங்க்ஸ் பொருட்களில் ஆர்வம உடையவர்கள், மாம்பலம் பக்கம் சென்றால், இங்கே ஒருமுறை வாங்கி, சாப்பிட்டுப் பார்த்து, எங்கள் சாய்ஸ் சரியா இல்லையா என்று, எங்களுக்கு மெயில் அனுப்புங்கள்.

