நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
19.6.11
17.6.11
பிளேடு
எலெக்ட்ரிக் ட்ரெயினில் ஏறியதிலிருந்தே வழக்கம் போல கச கச என்று நெரிந்த கூட்டம் லேசான கடுப்பையும் எச்சரிக்கை உணர்வையும் தந்தது. சாதாரணமாக பத்தரை மணிக்கு மேல் கூட்டம் இருக்காது என்று பெயர். பதினொன்றரை மணிக்கு இந்தக் கூட்டம் அதிருப்தியைத் தந்தது.
என்ன செய்ய எங்களைப் போலவே எல்லோருக்கும் ஏதோ வேலை...!
மனைவி உள்ளே சென்று உட்கார்ந்திருந்தவர்கள் பக்கத்தில் ஓரமாக நின்று கொள்ள, பிக் ஷாப்பரை காலிடுக்கில் வைத்துக் கொண்டேன். பையில் பணம் பத்திரமாக இருக்கிறதா என்று செக் செய்து, இடுப்பில் செல் இருக்கிறதா என்றும் பார்த்துக் கொண்டேன். கூட்டம் இருந்தாலே தானாக அவ்வப்போது நிகழும் அனிச்சைச் செயல்கள்.
"ஆமாம்...என் பையில் ஆயிர ஆயிரமா பணம் வச்சிருக்கேன்...என்னைத்தான் தேடுவான் பாரு..."
"அதைத்தான் நானும் சொல்றேன்...ஒண்ணும் இல்லாத பைன்னு தெரிஞ்சு பிளேடால பையை இன்னும் ரெண்டு கீறு கீறிட்டுப் போவான்...மார்புல விழுப்புண்ணோட வரலாம்...!
நான் செக் செய்வதை யாராவது கவனிக்கிறார்களா என்று என்னை அறியாமல் பார்த்துக் கொண்டேன்!
இருவர் என்னை கவனித்துக் கொண்டிருப்பது போலப் பட்டது. ஓரக் கண்ணால் சட்டைப் பையைப் பார்த்துக் கொண்டேன். பணம் உள்ளே கொத்தாக இருந்தது. இப்போதெல்லாம் தவறாமல் எடுத்துச் செல்லும் கைக்கு அடக்கமான கோடக் கேமிரா இருந்தது. பேனா சற்றே வெளியில் தெரியும் படி எனக்கும் என் மனைவிக்குமான டிக்கெட் உள்ளே தளளி விட்டுக் கொண்டேன்.
சாதாரணமாக டிக்கெட்டைக் கையிலேயே வைத்திருப்பது வழக்கம். பைக்குள் வைத்து விட்டால் செக்கிங் வந்தால் அவசரத்தில் எடுக்கும்போது பணமோ வேறு ஏதாவது முக்கிய பேப்பரோ வெளியில் வந்து விழுந்து விடும் என்ற பயம். பஸ்ஸில் போனாலும் பத்திரமாக டிக்கெட்டைக் கையில் வைத்திருந்து விட்டு பஸ்ஸை விட்டு இறங்கி வெகு தூரம் வந்த பிறகு கவனமாக தூக்கிப் போடுவேன். ஒரு முறை பழைய பிட் பேப்பரை தூக்கிப் போடுவதை நினைத்து டிக்கெட்டைத் தூக்கி வெளியில் போட்டு விட்டு பட்ட அவஸ்தை ஞாபகத்துக்கு வரும்.
அடுத்த ஸ்டேஷனில் இன்னும் கூட்டம் ஏறியது, நெருக்கியது. இறங்குபவர்களுக்கு வழி விட்டு, பிச்சைக்காரர்கள், வியாபாரிகள் வழியை மறைக்காமல் இருக்கையின் ஓரத்தில் சாய்ந்தவாறு நின்று இடத்தை பாதுகாத்துக் கொண்டேன். காலுடனேயே பிக் ஷாப்பரை அழுத்தி இடுக்கிக் கொண்டேன். அருகில் இருந்தவர் முறைத்தார்.
"அதை எடுத்து மேலே வைப்பா....நிற்கவே இடமில்லை..!"
நான் லட்சியம் செய்யவில்லை. தூரத்தில் அமர்ந்திருந்த (ஓரத்தில் ஒட்டி உட்கார இருக்கை கிடைத்துவிட்ட) மனைவியைப் பார்த்தேன். அவளிடம் இரண்டு காய்கறிப் பைகள் இருந்தன. அவசரமாக 'அந்த' இருவரைத் தேடினேன். இறங்கியிருப்பார்களோ...? எதிரில் ஒருவனும் அருகில் ஒருவனும் நின்றிருந்தார்கள்.
மறுபடி என்னை அறியாமல் செல் பெளச்சையும் பாண்ட் பாக்கெட்டையும் தொட்டுக் கொண்டு 'பிக் ஷாப்ப'ரை நோட்டமிட்டுக் கொண்டேன். உள்ளுணர்வு இன்று பிளேடு நிச்சயம் என்றது.
பிக் ஷாப்பரில் அசைவு தெரிந்தது. சட்டென பார்த்தேன். கதவுக்கருகில் அமர்ந்திருந்த ஒரு பெண், பிக் ஷாப்பரின் வாயை சரியாக மூடி நிமிர்த்தி வைத்து என்னைப் பார்த்து சிரித்தாள். சந்தேகத்துடன் பார்த்தேன்.
"ஒரு கயிறு இருந்தா கட்டிடு நைனா.. விழாது... "
கயிறுக்கு எங்கே போக...லேசாய்ப் புன்னகைத்து விட்டு திரும்பிக் கொண்டேன். கூட்டம் நெரிய,
'ம்ஹூம்..ஆட்டோவில் போயிருக்கலாம்...'
அடுத்தடுத்த ஸ்டேஷன்களிலும் கூட்டம் ஏறியது. இறங்கியதோ கொஞ்சம்தான். இன்னும் மூன்று ஸ்டேஷன்கள் இருக்கின்றன, நாங்கள் இறங்க...
ஒரு வழியாய் அடுத்த ஸ்டேஷனும் தாண்ட இவர்கள் இருவரும் என்னை நெருங்கி நின்ற படி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஸ்டேஷனில் வண்டி நின்றது. என்னை இடித்துக் கொண்டு தாண்டிச் சென்று ஒருவன் இறங்கினான். செல் பௌச்சை இறுகப் பற்றியபடி பிக் ஷாப்பரையும் கையால் பற்றிக் கொண்டேன். கவனம் சட்டைப் பையில் இருந்தது. ட்ரெயின் கிளம்பியது. இருவரும் சேர்ந்து டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட் கொடுப்பது தெரிந்தது. ஒருவன் டிரைன் கடக்கும் போது, என்னைப் புன்னகையுடன் பார்த்து, சலாம் வைத்தான். சந்தேகத்துடன் சட்டைப் பையைப் பார்த்தேன். பணம் இருந்தது. கேமிரா இருந்தது... பேனா இருந்தது.... ஆனால் ...
டிக்கெட்டைக் காணோம்...
பெட்டியில் டிடிஇ வருகிறாரா என்று நோட்டமிட ஆரம்பித்தேன். அடுத்த ஸ்டேஷனில் இறங்கும்போது படிக் கட்டுக்கருகில் அல்லது நடைமேடையில் டிக்கெட் பரிசோதகரை எப்படி சமாளிப்பது என்று யோசனையில் ஆழ்ந்தேன்.
15.6.11
என்ன பாட்டுப் பாட....
மேடையில் அவ்வப்போது பாடும் நண்பர் ஒருவர் என்னுடன் ஒரு திருமண வரவேற்புக்கு வந்திருந்தார். இப்போது சமீப காலமாக அவர் பாடுவதில்லை. மேடையில் பாடிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் இவர் பழைய தோஸ்த் போலும். பரஸ்பர விசாரிப்புகளுக்கு பின் ஒரு பாடல் இவரைப் பாட அழைக்க, நண்பர் ஆர்வத்துடன் மேடை ஏறி 'பாடும்போது நான் தென்றல் காற்று' என்று கானமிசைத்து பூரிப்புடன் இறங்கினார். அவர் சொல்லும்போது மேடையில் அவர்கள் வைத்திருக்கும் ஒருவகை இசைக் கருவியில் பாடலின் பின்னணி இசைகள் முன்னரே Feed செய்யப் பட்டிருக்கும் என்றார். அப்புறம் சில சமயம் அப்படியும் உண்டு என்று அவரே திருத்தமும் கொண்டு வந்தார். எவ்வளவு உண்மையோ...
வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருவோம்....இதில் திருமண நிகழ்ச்சி சம்பந்தப் பட்ட பாடல்களை தேர்ந்தெடுத்து வைத்திருப்பார்கள். அந்தந்த தருணங்களில் அதைப் பெருமையாக (!) பாடத் தொடங்குவார்கள். 'மணமகளே மணமகளே வா வா', 'வாராய் என் தோழி வாராயோ' போன்ற பாடல்கள் இந்த வகைக்கு பிரபலம். இப்போதெல்லாம் 'புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே' பாடல் பாடுவதில்லை என்று நினைக்கிறேன். பாடல் மட்டுமல்ல அதன் கருத்துகளும் அவுட் டேட்டட் ஆக கருதக் கூடிய பாடலாக இருக்கலாம்!
நான் சென்ற நிகழ்ச்சியில் வரவேற்பில் பாடிய பாடல் ஒன்று பற்றியும் திருமணத்தின் போது நாதஸ்வரத்த்தில் வந்த பாடல் பற்றியும் சிந்தனையில் தோன்றிய முத்துகளை இங்கு சிதறடிக்கலாம் என்று எண்ணம்! முதலாவதாக வரவேற்பில் பாடிய பாடல். 'கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான்' பாடல்.
படக் காட்ச்சியின் படியும் வார்த்தை அமைப்பின் படியும் திருமண நாள் குறித்து பாடும் பாடல்தான். சந்தேகமில்லை. அந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் மிகக் குறைவாகத்தான் இருப்பார்கள். அல்லது காட்சி அமைப்பாவது - ஏன் பாடுகிறார் - என்பதாவது தெரிந்துதான் இருக்கும். கிளைமேக்சில் சாகப் போகிறாள் என்று முடிவு தெரிந்து விட்ட நோயைக் கொண்ட கதாநாயகியைக் குறித்து பாடப் படும், லேசான சோகம் இழையோடும் சரணங்களைக் கொண்ட அந்தப் பாடலை வெறும் பல்லவி வரிகளுக்காகவும், எம் எஸ் வியின் கவர்ச்சியான ஆரம்ப இசைக்காகவும் மட்டும் திருமண வரவேற்பில் பாடுவது சரியா...?
இரண்டாவது பாடல் பற்றி...
பாடலில் தவறில்லை. நடுவில் வரும் வரிகளைப் பிய்த்து பாடும் போது வரும் தாக்கம் பற்றி. நல்ல வேளை நாயனம்!
திருமண நாள். நாயனக்காரர் பல பாடல்கள் வாசித்தபின் 'அலைபாயுதே' வை வாசிக்க எடுத்தார். இந்தப் பாடல்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது நாயனக் காரர் மேடை மேல் கண்ணாக இருக்க வேண்டும். அங்கிருந்து யாராவது ஒருவர் திடீரென ஒரு விரலை நீட்டி 'கொன்னுடுவேன்' பாணியில் ஆட்ட ஆரம்பிக்க, இரண்டு மூன்று விரல்கள் அந்த ஆட்டத்தில் அணி வகுக்க, நாயனக்காரர் திடீரென நாயன முனையில் பாம்பைக் கண்டது போல வீறிட வேண்டும். கெட்டி மேளம்! மண மகனுக்கும் மண மகளுக்கும் கையில் காப்பு கட்டும் நேரம் இந்தப் பாடல்.என் உதடுகள் நாயன வாசிப்புடன் சேர்ந்து மனதுக்குள் வரிகளை முணுமுணுத்துக் கொண்டிருந்த நேரம்! (பின்னே...தெரிந்த பாடலாச்சே...) மணமகன் கையில் காப்பு கட்டி ஐயர் விரலை ஆட்ட கெட்டி மேளம்....நாயனக் காரர் நிறுத்தி நிதானமாக அந்த இடத்தில் வாசித்த இடம் 'இது முறையா...'....! அடுத்து அவர் சுதாரித்து பிர்கா இழுத்து தாளம் சரி செய்து அடுத்த வரி வருவதற்குள் மணமகள் கையில் மணமகன் கட்டும் காப்பு....மறுபடி விரலாட்டம். மறுபடி கெட்டிமேள வீறிடல். இப்போது ஸ்லோ மோஷனில் வந்த வரிகள் 'இது தகுமா..'...! மணமக்கள் இருவரும் காப்பு கட்டி எழுந்து நிற்கும்போது தருமம்தானா நியாம்தானா என்று கேட்டு -- வாசித்து முடித்தார்! இது சுவாரஸ்யத்துக்காக எழுதியது. இப்படிப் பார்த்தால் நிறைய பாடல்கள் வாசிக்க முடியாமல் போகலாம்!
14.6.11
12.6.11
10.6.11
குமரன் குன்றத்திலே !
"குன்றத்திலே பதிவாசிரியருக்குத் திண்டாட்டம்!
அங்கே குவிந்தனர் அம்மா வாசகர் எல்லாம் செண்டாட்டம், செண்டாட்டம்! " என்று பாடியபடி, அவ்வையார் வருகிறார்.
(கே யைத் தேடி) பதிவாசிரியரைப் பார்க்கிறார்.
"டேய் பதிவாசிரியா... "
பதி: "ஏய் கிழவீ ... மரியாத, மரியாத!"
அவ்: "அப்பனே, நான் என் அப்பன் முருகனையே அவன் இவன் என்றுதான் கூப்பிடுவேன். நீ ஏ பி நாகராஜன் படம் எதுவும் பார்த்ததில்லையா? உனக்கு எல்லாம் என்ன மரியாதை?"
பதி: "அப்பவே நெனச்சேன் - கொடுமுடிக் கோகிலம் போல இருக்கியே, நீ ஒருவேளை அவ்வையாரோ என்று. ஆனாலும் நீதான் அவ்வையா என்று நான் சோதித்துப் பார்த்துவிடுகிறேன்."
அவ்: "அப்புறம் ஏன் தயக்கம்? கேள்விகளைக் கேள்"
பதி: இரு பாட்டீ - நான் சின்ன வயசுல சாயிஸ் ல விட்ட செய்யுள் எல்லாம் ஞாபகத்துக்குக் கொண்டு வரணும் இல்லே?"
அவ்: "அது சரி. கேள்வியில ஏதேனும் தப்பு இருந்தது என்றால், உன்னை இங்கேயே சரபேஸ்வரர் சந்நிதியில் முட்டிக் கால் போட்டு நில்லு என்று சொல்லிவிடுவேன்."
பதி: "ஒன்னாரைத்...."
அவ்: "தேறேல்."
பதி: "ஓரம்..."
அவ்: சொல்லேல்."
பதி: "அட - டஃப் கேள்விக்குக் கூட சரியா பதில் சொல்றீங்களே! நீங்க அவ்வைதான்! ஹூம், இதை, நான் ஆரம்பப் பள்ளியில் படித்த நாட்களிலேயே நீங்க சொல்லியிருந்தால், நான் அனாவசியமா பெஞ்சு மேலே ஒரு பீரியட் முழுவதும் நிற்காமல் இருந்திருப்பேன்."
அவ்: "போடா மரமண்டை - நீ அந்த ரெண்டு செய்யுளுக்கும் அர்த்தம் சொல்லத் தெரியாமல் முழிச்சதாலத்தான் உன்னை பெஞ்சு மேலே நிக்க வெச்சாங்க உன்னுடைய தமிழ் டீச்சர்."
பதி: "அட முக்காலமும் உணர்ந்த மூதாட்டி!"
அவ்: "அது போகட்டும்; நீ ஏன் வாசகர்களிடம் கோபித்துக் கொண்டு, இந்த குமரன் குன்றத்திற்கு வந்தாய்? திரிசூலத்திலிருந்து இங்கே டைரெக்ட் பஸ் இருக்குதா?"
பதி: "மற்ற மொக்கைப் பதிவுகளுக்கெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு ஓட்டும், கமெண்டும் போடும் வாசகர்கள் என்னுடைய கே யைத் தேடி பதிவுகளுக்கு மட்டும் அதிக அளவில் போடுவதில்லை. ஓட்டும் கமெண்டும் வாசகர்களிடமிருந்து பெற அருகதை இல்லையா எனக்கு?"
அவ்: (பாடுகிறார்)
"பதிவு நீ அப்பா!
மொக்கைப் பதிவு நீ அப்பா!
தமிழ் வலை உலக பதிவு நீ அப்பா!
ப்ளாக் தன்னில்,
எங்கள் ப்ளாக் தன்னில் -
வலை மேய்ந்து சுவைப்போர்க்கு
ப்ளேட் போடும் பதிவு நீ அப்பா ஆ ஆ !
பதி: "ஒளவையே நீ ஆயிரம் சமாதானம் சொன்னாலும் நான் அந்தப் பதிவைத் தொடருவதாக இல்லை!"
அவ்: "சரி நீ இங்கே இருந்து ஒரு நாடகம் நடத்த விரும்பினால் அதைத் தடுக்க யாரால் இயலும்? அப்படி ஏதாவது நாடகம் நடத்துவதாக இருந்தால், கேட் கலெக்ஷன் காண்டிராக்டை எனக்குக் கொடு."
பதி: "அப்படியே ஆகட்டும் ஒளவையே! ஞாயிற்றுக் கிழமை, இங்கே குரோம்பேட்டைக் குறும்பன் வருவதாகக் கூறியுள்ளார். அவர் சொல்லும் சமாதானம் ஏதாவது என் மனசுக்குப் பிடிச்சிருந்தா, நான் வந்து, பதிவைத் தொடர்கின்றேன்."
அவ்: "சரி போ! ஆனால் அந்தக் 'கே' யாரு என்பதை மட்டும் நீ எனக்குக் காதோடு சொல்லிவிடு."
பதி: "நீங்கதான் முக்காலமும் உணர்ந்த மூதாட்டி ஆயிற்றே? கண்டுபிடிங்க பார்ப்போம்!"
அவ்: பதிவாசிரியரின் காதில் இரகசியமாக (.... ----- .....) என்று சொல்லி, "என்ன சரியா?"
பதிவாசிரியரின் முகம் வலைப்பூவாக மலருகிறதுபதி: ஒளவையே! நன்றி, நன்றி. யாரு 'கே' என்பது பற்றி எனக்கே குழப்பம் இருந்தது. அதைத் தீர்த்து வைத்த ஒளவையே! உன்னை உளமாரப் புகழ்கின்றேன்! எங்கள் ப்ளாகைப் புகழ்ந்து ஏதேனும் பாடு!"
அவ்: (பாடுகிறார்)
" பாதி பாதி என பாதித்த பதிவின்று, ஊ ஊ ...
ஷோபனா, ஷோபனா என சுற்ற விடுகின்றதே! ஏ ஏ ...
சாமியாரும் சோணகிரியும் ரங்கனும் சேர்ந்து
கே யைத் தேடிக் கொணருவரே! "
இந்தப் பாடலை, நீலாம்பரி ராகத்தில் அவ்வை பாடியதால், பதிவாசிரியர் கண்கள் சொக்கி, அப்படியே குமரன் குன்றம் மரத்தடியில், படுத்து உறங்கிவிட்டார்!
7.6.11
கே யைத்தேடி 08
அத்தியாயம் 08: "யாரும் இல்லை"
(அய்யா / அம்மா பதிவாசிரியரே - ரொம்ப இழுக்காம சுருக்கமா ஒரு அத்தியாயம் எழுதுங்க!)
கார்த்திக்கின் வீட்டுக்கு வந்து சேர்ந்தாயிற்று. வீட்டை, கார்த்திக் தன்னுடைய சாவிக்கொத்திலிருந்து சாவியை எடுத்துத் திறந்தார்.
சோபனா: "போன பதிவுல, செல்லுல உங்க மனைவியோட பேசினீங்களா?"
கார்த்திக்: "அட எப்படித் தெரியும்?"
சோபனா: "நீங்க பேசினது எல்லாமே ஒரு வார்த்தையில் பதில் சொன்னீங்க. ஆமாம், இல்லை, உம், ஊஹூம். இதெல்லாம்தான் அதிகமாக சொன்னீங்க. செல் ஃபோனை அவசரம் அவசரமாக - நான் எடுப்பதற்குள் எடுத்துப் பேசியதால், என் குரலை மறுமுனையில் இருப்பவர் கேட்டால் உங்களுக்குப் பிரச்னை ஆகிவிடும் என்று நீங்கள் பயந்தது போலத் தெரிந்தது. மேலும் ....."
கார்த்திக்: "மேலும் என்ன? சொல்லுங்க."
சோபனா: "அதில் H.A calling என்று வந்ததால், அநேகமாக நீங்க 'Head ache' என்று நினைப்பது உங்கள் மனைவியாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்."
கார்த்திக் உண்மையிலேயே திகைத்துப் போனார். "நீங்க என் மனைவியை சந்திக்கும் சந்தர்ப்பம் எதுவும் வாய்த்துவிடக் கூடாது என்று கடவுளிடம் வேண்டிக்கொள்ளப் போகின்றேன். மேடம் எப்பிடி இப்படி எல்லாம் சிந்திக்கிறீங்க! என் மனைவி பெயர் அர்ச்சனா. அவங்க ஹைதராபாத்ல என் பையன் கூட இருக்காங்க. நான் H.A என்பதற்கு விளக்கமாக ஹைதராபாத் அர்ச்சனா என்று கூட சொல்லலாம் இல்லியா?"
எ சா : "உம்ம்... சொல்லலாம். ஆனால் எந்த ஊரில் இருந்தாலும் உங்க மனைவி அர்ச்சனாதான். ஹைதராபாத் அர்ச்சனா என்று ஸ்பெஷலா ஏன் போட்டுக்கணும்?"
கார்த்திக்: "சார் நம்ப வேற சப்ஜெக்ட் பேசலாமா?"
எ சா : "சரி, சரி! நீங்க என்னை மன்னிக்கவேண்டும். நீங்க போலீஸ் ஸ்டேஷனில் இருந்த சமயத்தில், உங்க விலாசத்தை ரங்கன் சாரிடம் ஃபோனில் தெரிந்துகொண்டு , நான் முன்பே இங்கே வந்து, உங்கள் வீட்டுப் பக்கம் வந்த மனிதர்களை, என் செல் காமிராவால் படம் எடுத்துள்ளேன். அந்தப் படங்களை உங்களுக்கு இப்போ காட்டுகின்றேன், அவர்கள் எல்லோரையும் உங்களுக்குத் தெரியுமா என்றும், அதில் உங்கள் காரை வாங்கிய இருவர் போல யாராவது இருக்கின்றார்களா என்பதைக் கூறுங்கள்."
கார்த்திக், எ சா காட்டிய படங்களைப் பார்த்தார். அடையாளம் தெரிந்த சிறு வியாபாரிகள், கார் துடைப்பவர், காய்கறிக்காரர், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆகியோரை அடையாளம் காட்டினார். "இந்தப் படங்களில், கார் வாங்கிச் சென்ற இருவரில் யாரும் இல்லை." என்றார்.
(வர வர, 'கே யைத் தேடி' பதிவுக்கு, வோட்டும் விழமாட்டேங்குது, கமெண்ட்ஸ் எண்ணிக்கையும் குறைகிறது. எனவே இது, இனிமேல் ...
தொடருமா? )
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




















