Saturday, December 11, 2010

பாட்டுக்கொரு புலவன்    
டிசம்பர் 11. பாரதி பிறந்த நாள் (1882) 
11-12-2010 இன்று சில பகிர்வுகள்.

வீட்டில் இருந்த கொஞ்ச அரிசியை பொறுக்கி சமையலுக்கு தயார் செய்து வைத்து விட்டு செல்லம்மாள் அந்தப் பக்கம் போனதும் அதை எடுத்து சிட்டுக் குருவிகளுக்கு போட்டு விட்டு சந்தோஷப் பட்டுக் கொண்டிருந்த பாரதியைப் பார்த்து கோபமும் வேதனையும் அடைந்த செல்லம்மாள் அந்தப் பக்கம் போனதும் சகுந்தலாவுக்குப் பாடிக் காட்டிப் பிறந்த பாடல் "விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்த சிட்டுக் குருவியைப் போலே..."

அவர் புதுவையில் இருந்தபோது சென்னையில் இருந்த ஒரு சங்கம் வைத்த கவிதைப் போட்டிக்கு எழுதி அனுப்பிமுதல் பரிசு கிடைக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்க, என்ன காரணத்தினாலோ முதலிரண்டு பரிசுகள் வேறு இரண்டு சாதாரணப் பாடல்களுக்குக் கொடுக்கப் பட்டு விட, மூன்றாவது பரிசு பெற்ற பாடல் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே..." முதலிரண்டு பரிசுகள் பெற்ற பாடல்கள்? யாருக்குத் தெரியும்? மூன்றாம் பரிசு பெற்ற இந்தப் பாடல் எவ்வளவு பிரபலம் என்று தெரிகிறதுதானே...

அவர் நண்பர் மண்டையம் ஸ்ரீ ஸ்ரீ யின் இளைய புதல்வன் சிறிய வயதிலேயே நோயுற்று இறந்து விட, காரியங்கள் முடிந்து வீடு வந்து பாரதி வயிற்றில் தாங்க முடியாத உபாதையுடன் மனம் தாங்காமல் அவர் பாடிய பாடல் "நல்லதோர் வீணை செய்தே...அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ..."

புதுவையில் இருந்து அலுத்து விட்ட பாரதி மாறுவேடம் பூண்டு செல்லம்மாள் பதற, உறவினர்களும் நண்பர்களும்ஆறுதல் சொன்னாலும் பதற்றத்துடன் காத்திருக்க, வெளியூர்ப் பிரயாணம் சென்று வந்த பாரதி, பயணத்தின் போது ரெயிலில் ஒரு பிச்சைக் காரப் பெண் பாடிய பாடலில் கவரப் பட்டு அந்த மெட்டில் எழுதிய பாடல் "பாருக்குள்ளே நல்ல நாடு..." உணர்ச்சி வந்தால் சத்தமாக வாய் விட்டுப் பாடி விடும் பாரதி மாறு வேடத்தில் சுற்றி வந்த போது வாயை அடக்க ரொம்பக் கஷ்டப் பட்டாராம்.

1916 ஆம் வருடம் கார்த்திகை மாதம் அடித்த புயலில் மாட்டிய ஏழைகளுக்கு உதவப் போனார்கள் பாரதியாரும் நண்பர்களும். ஜப்பான் நாட்டினர் ஒரு சாதாரணக் குடும்பம் வாங்க எவ்வளவு நிலம் வேண்டும் என்று ஆராய்ந்தார்களாம். அப்போது பாரதியாருக்குத் தோன்றிய பாடல்தான் "காணி நிலம் வேண்டும்..."

"தூண்டிற் புழுவினைப் போல் - வெளியே
சுடர் விளக்கினைப் போல்
நீண்ட பொழுதாக - எனது
நெஞ்சம் துடிக்குதடி.."
கண்ணன் என் காதலன் என்ற தலைப்பில் வரும் காதல் பாடல்களில் முதலில் தோன்றிய வரிகள் இவைகள்தாம். ஒரு நாள் இரவு மனம் சரியில்லாமல் வெளியில் சென்ற பாரதி திரும்பி வந்து ஒரு காகிதத்தில் இந்த வரிகளை எழுதி விட்டு, பின்னர் மற்ற பாடல்கள் எழுதினாராம்.

புதுவையில் தங்குமிடம் கிடைக்காமல் கஷ்டப் பட்ட போது மனம் கலங்கி நின்ற பாரதியார் முன் திடீரென தோன்றிய குவளைக் கிருஷ்ணமாச்சார்யார் அவரை நல்லதொரு வீட்டுக்குக் குடிபுகச் செய்ய, அதைக் குறித்து தோன்றியதுதான் "எங்கிருந்தோ வந்தான்..." பாடல்.

பிரிட்டிஷ் அரசாங்கக் காவலர்கள் பாரதியாரை புதுவையிலிருந்து வெளியே இழுத்துக் கைது செய்ய பற்பல முயற்சி செய்தார்கள். அதில் ஒன்று அவர் நண்பரை விட்டே அவரை ஏதோ சொல்லி ஊர் எல்லைக்கு வெளியே அழைத்துவரச் செய்தது. கடைசி வினாடியில் அந்தச் சதியிலிருந்து அதிருஷ்டவசமாக மீண்டார் பாரதியார். நண்பனின் சதியும் புலனாயிற்று. அந்த நண்பர் மறுபடியும் பாரதியைப் பார்க்க வந்தபோது உறவினர்களும் நண்பர்களும் அவர்மீது கோபப் பட, அவர்களைச் சமாதானப் படுத்திய பாரதி அப்போது பாடிய பாடல்தான் "பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே..."

பஜனைக் காலங்களில் பாகவதர் தலைமையில் உஞ்சவிருத்தி செய்து கொண்டு வரும் கோஷ்டியினர் பாடும் பாடல்கள் ஒரு கட்டத்தில் சுரத்து குறைந்து கொண்டே போக, உடன் சென்ற பாரதியார் அப்போது மெட்டமைத்ததுதான் "பார்க்கும் மரங்களெல்லாம் - நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா..." பாடல். நாம் பிரபலமாக அறிந்த "காக்கைச் சிறகினிலே நந்தலாலா..." பாடல்.

இன்றைய சூழலில் பாரதி இருந்தால் என்ன பாடுவார்? மனம் நொந்து போவாரா அல்லது கவியரங்கங்களில் கலந்துகொண்டு 'முந்தைய தமிழே, மூத்த தமிழே' என்று அரசியல்வாதிகளை அவரும் புகழ்ந்து விடுவாரா?
                 

16 comments:

தமிழ் உதயம் said...

கவியரங்கங்களில் கலந்துகொண்டு 'முந்தைய தமிழே, மூத்த தமிழே' என்று அரசியல்வாதிகளை அவரும் புகழ்ந்து விடுவாரா?'///

வேறு வழியில்லை. அப்படி தான் பாடி இருப்பார்.

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

கடைசிக் கேள்விக்கு மாட்டார் என்பதே எனது பதில்:)! அதுவே மகாக்கவிக்கும் இன்றைய கவிகளுக்குமான வேறுபாடு என்பதைச் சொல்லாமல் சொல்லியிருப்பதாகக் கொள்கிறேன்:)!

RVS said...
This comment has been removed by the author.
Chitra said...

இன்றைய சூழலில் பாரதி இருந்தால் என்ன பாடுவார்? மனம் நொந்து போவாரா அல்லது கவியரங்கங்களில் கலந்துகொண்டு 'முந்தைய தமிழே, மூத்த தமிழே' என்று அரசியல்வாதிகளை அவரும் புகழ்ந்து விடுவாரா?


.....அப்படி ஓர் நிலைமை வந்து விடக் கூடாது என்றுதான், முன்பே பிறந்து, மறைந்து விட்டார்.

RVS said...

யாருக்கும் தலை வணங்காதவன் பாரதி. பாட்டுக்கு ஒரு தலைவன்.
சங்கதிகள் சேர்த்து பாடல்கள் மற்றும் கவிதைகள் மேற்கோள் காட்டிய விதம் அருமை. ;-)
(எனக்கு எப்போதுமே பாட்டா தான் தொகுக்க முடியுது.. ரெஃபர் பண்ண டயம் பத்த மாட்டேங்குது. )

அஹ‌ம‌து இர்ஷாத் said...

நல்ல பகிர்வு.

பத்மநாபன் said...

பாட்டுத்தலைவனிடமிருந்து பாட்டு பிறந்த சூழலை மிக அருமையாக தொகுத்து அளித்துள்ளீர்கள்..

பாட்டுத்தலைவன்
பாரதி யாருக்கும் பின்பாட்டு பாடவே மாட்டான்...

ஹேமா said...

என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்ன்னு கேட்டுக் கேட்டே தாகம் தணியாம ஓய்ஞ்சுபோயிருப்பார்.
நினைவூட்டலுக்குச் சந்தோஷம் !

Balamurali said...

Great Poet....

அப்பாவி தங்கமணி said...

இந்த தலைமுறை அறிய அருமையான தகவல்கள்...திரட்டியமைக்கு நன்றி...

சாய் said...

//ஹேமா said...என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்ன்னு கேட்டுக் கேட்டே தாகம் தணியாம ஓய்ஞ்சுபோயிருப்பார்.//


You bet

Gopi Ramamoorthy said...

உபயோகமான பதிவு

அப்பாதுரை said...

எங்கே பார்த்தாலும் பாரதி பதிவாக இருக்கிறதே - ஒரு வேளை உயிரோடு வந்துவிட்டாரோ என்று பார்த்தால் பாரதி நினைவு நாள் (மறந்து போனதில் கொஞ்சம் வெட்கம்.)

பாரதி நினைவு பற்றிய பதிவுகளில் உங்களது வித்தியாசமாக இருக்கிறது. 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' வரிக்கும், 'எங்கெங்கு காணினும் சக்தியடா', 'ஓடி விளையாடு' பாட்டுக்குப் பின்னும் கதை சொல்வார்கள்.

அவருடைய 'பாஞ்சாலி சபதம்' உந்துதலுக்கு ஒரு கதை சொல்வார்கள். பாரதி சின்னப்பயல் கதையும் நினைவுக்கு வருகிறது.

எங்கள் said...

//தமிழ் உதயம் said,
வேறு வழியில்லை. அப்படி தான் பாடி இருப்பார்.."//

அப்படித் தோன்றவில்லை...போங்கடா என்று போயிருப்பார்!

//ராமலக்ஷ்மி said,
கடைசிக் கேள்விக்கு மாட்டார் என்பதே எனது பதில்:)//

உண்மை. அப்படித்தான் எங்களுக்கும் தோன்றியது.

//Chitra said,
அப்படி ஓர் நிலைமை வந்து விடக் கூடாது என்றுதான், முன்பே பிறந்து, மறைந்து விட்டார்//

சரியாகச் சொன்னீர்கள்.

//RVS said,
யாருக்கும் தலை வணங்காதவன் பாரதி. பாட்டுக்கு ஒரு தலைவன்.
சங்கதிகள் சேர்த்து பாடல்கள் மற்றும் கவிதைகள் மேற்கோள் காட்டிய விதம் அருமை. ;-)
(எனக்கு எப்போதுமே பாட்டா தான் தொகுக்க முடியுது.. ரெஃபர் பண்ண டயம் பத்த மாட்டேங்குது. //

உண்மை ஆர் வி எஸ். உங்கள் பாடல் தெரிவுகள் எல்லாமே அருமையான கலெக்ஷன்.

அஹமது இர்ஷாத் - நன்றி.

பத்மநாபன்,
உங்கள் கருத்து நூற்றுக்கு நூறு சரி.

ரசனைக்கு நன்றி ஹேமா...

கருத்துக்கு நன்றி Balamurali,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்பாவி தங்கமணி,

நன்றி சாய்,

நன்றி Gopi Ramamoorthy,

நன்றி அப்பாதுரை,

பாரதி நினைவு நாள் இல்லை பிறந்த நாள். நினைவு நாளுக்கு வரலாறு எழுதியாகி விட்டது. அதனால் இப்போது காட்டிய வித்தியாசத்தை உணர்ந்தமைக்கு நன்றி.

அப்பாதுரை said...

பிறந்த நாளா! போச்சு.. அவமானம் பிடுங்குதுங்க.. மன்னிச்சுருங்க.

மோ.சி. பாலன் said...

வேலைப்பளுவினால் தாமதமாய் வருகிறேன்....
பாரதியுடன் வாழ்ந்ததுபோல் உணர்வைத் தந்தது இப்பதிவு. மிக அழகு.

பாரதி ஒரு மக்கள் கவிஞன். இன்றிருந்தாலும் மக்களுக்காகத் தான் பாடியிருப்பான்.
அவன் முன்பெழுதிய பாடல்கள் இன்று நனவாக உழைத்திருப்பான்.
- வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து மாநிலங்களில் பயிர் வளர்த்திருப்பான்.
அவன் பாடல்களில் தவறிருந்தால் திருத்தியிருப்பான்
- சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்ற வரி மாற்றி சேதுவும் சீர்படவே கடல்-வீதி தடுப்போம் என்று எழுதியிருப்பான்.
- திரைப்பாடல்கள் எழுதியிருப்பான் - கவியரங்குகளில் வைரமுத்துவிடம் வாதிட்டிருப்பான்
- குருவிக்குக் கூடு கட்டுங்கள் என்ற உங்கள் பதிவிற்கு பின்னூட்டம் எழுதியிருப்பான் !!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!