செவ்வாய், 19 ஜூன், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : செல்வம் - பரிவை சே. குமார்



செல்வம் 
பரிவை சே. குமார் 


காலையில் எழும்போதே ஏனோ செல்வம் ஞாபகத்துக்குள் வந்தான். அவனைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மெல்ல மெல்ல எழுந்து என்னை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது

செல்வத்தைப் பார்த்து பல வருடங்களாகிவிட்டது.  இப்போது இருவருக்குள்ளும் தொடர்பே இல்லை. ஏனோ இன்று அவன் நினைவாய் இருந்தது.

என்னோட அலமாரியைத் திறந்து கல்லூரியில் நண்பர்கள் எழுதிக் கொடுத்த ஆட்டோகிராப் டைரியை எடுத்து மெல்லப் பக்கங்களை நகர்த்தினேன். விதவிதமான கையெழுத்தில்... கட்டுரையாகவும் கவிதையாகவும் காவியமாகவும் எழுதி கையெழுத்திட்டிருந்தார்கள்.

பெண்களின் ஆட்டோகிராப் பார்க்கும் போது இவர்கள் எல்லாம் இப்ப எங்கே... எப்படி இருப்பார்கள்..? என மனசுக்குள் தோன்ற அன்று பாவாடை தாவணியில் அழகுச் சிட்டுக்களாய் பார்த்த பெண்கள் எல்லாம் இந்த இருபது ஆண்டுகளில் குடும்பம் குழந்தைகள் என எத்தனை மாற்றங்களைப் பெற்றிருப்பார்கள் என்று நினைத்துச் சிரித்துக் கொண்டேன். என் கை தொப்பையைத் தடவிக் கொண்டது.

மெல்ல பக்கங்களைப் புரட்டி வர செமஸ்டரில் பேப்பர் காட்டவில்லை என்ற கோபத்தில் ராஜூ எழுதியிருந்த 'நல்லவனாய் இருந்தால் நடுத்தெருவில்தான் நிற்பாய்என்ற வரிகளைப் படித்துச் சிரித்துக் கொண்டேன். நல்லவனாய் இருப்பதால் எத்தனை சிக்கல்களை வாழ்வில் எதிர்க்கொள்ள வேண்டியிருந்தது... வேண்டியிருக்கிறது. ராஜூ தீர்க்கதரிசிதான்... சரியாகத்தான் சொல்லியிருக்கிறான். ஆமா ராஜூ இப்ப எங்க இருப்பான்... எப்படியிருப்பான்...?

அடுத்தடுத்த பக்கங்களை மெல்ல நகர்த்திக் கொண்டு வர, 'இறுதிவரை என்னில் நீயும் உன்னுள் நானும் என்பதைச் சொல்லிக் கொள்ளாமலே பிரிகின்றோம் நட்பாய்... இது வேடிக்கையாய் இருக்கிறது என்று நினைப்பதே வேதனையாக இருக்கிறது. வாழ்வில் என்றேனும் சந்திக்க நேர்ந்தால் அன்றேனும் மூன்றாண்டுகள் பூட்டி வைத்ததை நம்மால் சொல்லிக் கொள்ள முடியுமா...?'  என அனு எழுதியிருந்த வரிகளைப் பார்த்த போது ஏனோ விரல்கள் அந்த எழுத்தைத் தடவின. கண்ணில் இருந்து கண்ணீர் மெல்ல எட்டிப் பார்த்தது. அனு இப்ப எங்கே இருக்கே...?

அனுவை மனதார காதலித்தவன்தான்... ஏனோ கடைசி வரை நானும் சொல்லவில்லை... அவளும் என்னைக் காதலித்தாள் என்பதை ஆட்டோகிராப் மூலம் அறிந்த போது அவளும் ஏன் சொல்லவில்லை என்ற யோசனைக்குப் பதிலே கிடைக்கவில்லை... இவ்வளவுக்கும் இருவரும் நெருங்க நட்பாய்த்தான் இருந்தோம். பெரும்பாலான நாட்கள் சைக்கிளை உருட்டிக் கொண்டு பேசியபடியே கல்லூரிச் சாலையில் நடந்து வந்திருக்கிறோம். நண்பர்கள் எல்லாம் அவளையும் என்னையும் இணைத்துப் பேசும் போதெல்லாம் சிரித்தபடியே கடந்திருக்கிறாள்.  அனுவைத் தொலைத்தவன் நான்தானே... இனி யோசித்து என்னாவது...?

மெல்லப் பக்கங்கள் நகர, 'நமக்குள் எதற்கு இந்த ஆட்டோகிராப்... உன்னில் நானும் என்னுள் நீயும் எப்போதும் இருப்போம் நண்பா...என எழுதி அழகாய் கையெழுத்திட்டு முகவரியும் எழுதியிருந்தான் காலை முதலாய் என்னை ஆக்கிரமித்திருந்தவன்.

செல்வம்...

கல்லூரியில் என்னுடன் ஒட்டிக் கொண்ட நட்புக்களில் முதன்மையானவன்.  எப்பவும் சிரிக்கச் சிரிக்கப் பேசுபவன்....  எல்லாருக்கும் பிடித்தவன்.... பேராசிரியர்களின் செல்லப் பிள்ளை... அழகாக, அருமையாகப் பாட்டுப் பாடுவான்....  அவன் பாட்டுக்கென்றே கல்லூரியில் ஒரு ரசிகர் கூட்டம் உண்டு.
செல்வம் ஒண்ணும் பெரிய பணக்கார குடும்பம் கிடையாது.... சாதாரண விவசாயக் குடும்பம்... அவனுக்கு மேலே இரண்டு அக்கா... அவனுக்குப் பின்னே ஒரு தங்கையும் தம்பியும்... விவசாய வேலை எல்லாம் அவனுக்கு அத்துபடி... விடியற்காலையில் எழுந்து உழவு ஓட்டிவிட்டு கல்லூரிக்கு நாலு கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டிக் கொண்டு வருபவன்.

கல்லூரி முடிந்து வீட்டுக்குப் போகும் போது உரமூட்டையோ மாடுகளுக்கான தீவன மூட்டையோ தூக்கிக் கொண்டு போவது அவன் வாடிக்கை. அவனையும் ஒருத்தி காதலித்தாள். அவள் வேறு யாருமல்ல எங்கள் வகுப்புத் தோழி மல்லிகாதான்... ரெண்டு பேருக்குள்ளும் காதல் இருப்பதை இறுதி ஆண்டில்தான் அறிய முடிந்தது. அறிந்தபின் அது திவிரக் காதலாக மாறியது. கல்லூரி முடிந்த பின்னும் அவன் அவளைப் பார்ப்பதற்காகவே ஊரில் இருந்து நாலு கிலோ மீட்டர் சைக்கிள் மிதித்து வந்து கொண்டிருந்தான்.

ஏனோ தெரியவில்லை அவர்களின் காதலும் கை கூடவில்லை... இருவரும் தனித்தனி வாழ்க்கையை தனதாக்கிக் கொண்டார்கள். அவர்களின் காதலும் என்பதில்  ஆட்டோகிராப்பில் அனு எழுதும் வரை தெரியாமலேயே இருந்து அதன் பின்னும் கை கூடாத என் காதலும் அடக்கமே.

செல்வத்தின் திருமணத்துக்கு அவன் ஊருக்குச் சென்றேன். மற்ற நண்பர்களுக்கு அவன் சொல்லவில்லை. நவநீதனுக்கு மட்டும் சொன்னேன் என்றான். ஏனோ அவனும் வரவில்லை. கிராமத்தில் திருமணம்... மண்டபத்துக்குச் செல்லாத கல்யாணம்... பெரிய கொட்டகை போட்டு தடபுடலாய் திருமண விருந்து வைத்து சிறப்பாக திருமணத்தை நடத்தினார் செல்வத்தின் அப்பா...

அக்காக்கள் திருமணம் முடிந்து அவனுக்கு அடுத்த தங்கைக்கும் திருமணம் முடித்து அவன் திருமணம் செய்து கொண்ட போது முப்பத்திரண்டை தாண்டியிருந்தான். அவனின் அத்தை பெண்ணே அவனின் மனைவியாய்... அவள் பெயர் கூட மல்லிகாதான் என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.

அவனின் திருமணத்தின் போது என் மகளுக்கு நாலு வயசு... மனைவியின் வயிற்றில் அடுத்த குழந்தை... வயிற்றைத் தள்ளிக் கொண்டு வந்த என் மனைவியிடன் தங்கச்சி அடுத்ததும் மருமகளாப் பொறந்தா அனுன்னு பேர் வையின்னு சொல்லி சிரித்தான். வச்சிட்டாப் போச்சு... எனச் சிரித்தாள் என் ரகசியங்கள் தெரிந்த மனைவி ராதா.

என்னோட ஒரு ரகசியம் மட்டும் இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது... மனைவி உள்பட. ஒரு முறை எங்க ஊர் கார்த்தி மச்சான் பாலத்துக்கு கீழே உக்கார்ந்து பீர் குடித்தான். அவனுடன் நான் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தேன். மச்சான் இது ஒண்ணும் பண்ணாதடா... சூட்டைக் குறைக்கும்... உடம்புக்கு நல்லது எனச் சொல்லி குடிக்கச் சொன்னான். நான் மறுத்து மறுத்துப் பார்த்து கடைசியில் அவன் தொல்லைக்காக ஒரு மிடறு குடித்துப் பார்த்தேன்... ஏனோ அந்தச் சுவை எனக்குப் பிடிக்கவில்லை. அதுவே முதலும் கடைசியுமாய்...  அது குறித்து இது வரை யாரிடமும் சொன்னதில்லை.

செல்வத்தின் திருமணத்துக்குப் பின் அவனுடனான தொடர்பு மெல்ல மெல்லக் குறைந்து டிசம்பர் முப்பத்தி ஒன்றாம் நாள் காலண்டர் போல ஆகிவிட்டது. அதன் பின் எந்தத் தொடர்பும் இல்லை. இப்ப எப்படியிருக்கிறான்...எங்கே இருக்கிறான்...எத்தனை குழந்தைகள்...என எதுவுமே தெரியாது.

புதுப்புது நட்புக்களும் உறவுகளும் வர கூடப் படித்த நட்புக்களை எல்லாம் மறந்து விட்டேன்... இது எல்லாருக்கும் நிகழ்வதுதானே. ஒருவனைத் தவிர மற்ற எவரோடும் இப்போது தொடர்பில் இல்லை. அந்த ஒருவனும் உள்ளூர்க்காரன் என்பதாலயே நட்பு தொடர்கிறது. இருந்தும் நான் வெளியூரில் வேலை பார்ப்பவன்... அவனோ உள்ளூரில்.... போன் செய்தாலும் அங்கிருக்கிறேன்.. இங்கிருக்கிறேன்... எனச் சொல்வதால் அவனுடன் பேசுவதைக் குறைத்து ஊருக்குப் போகும்போது மட்டும் சந்தித்து கொஞ்சம் உரையாடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன்.

அப்புறம் அனுவைப் பார்க்கவே இல்லையான்னு நீங்க கேட்கலாம்... ஒரு முறை பார்த்தேன்... அந்தப் பேக்கரியில் கேக்கும் ரஸ்க்கும் வாங்கி வரலாம் என மகளுடன் சென்ற போது ஒரு பெண் இரண்டு குழந்தைகளுடன் கேக் வாங்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்க்கும் போது அனு போலத்தான் இருந்தாள். என்னைப் பார்த்தவள் சற்றே நகர்ந்து தன் குழந்தைகளிடம் என்ன வேண்டும் எனக் கேட்பதில் கவனம் செலுத்தினாள்.

அது அனுதானா என்ற யோசனை எனக்கு...  அவ அக்கா செண்பாவும் இப்படித்தான் இருப்பாள். ஒருவேளை செண்பாவாக இருந்தால்... பேச யோசனையாக இருந்தது.... இப்படி யோசித்து யோசித்துத்தான் பலவற்றை இழந்தேன் என்றாலும் யோசிப்பதை இன்னும் இழக்கவில்லை.

கூர்ந்து கவனித்த போது நாசி அருகே அந்த ஒற்றை மச்சம்... அது அவள் அனுதான் என பறை சாற்றியது. அவளிடம் எத்தனை மாற்றம்... கெச்சலாய்.... சிவப்பாய்.... இடையில் புரளும் கருகரு முடியோடு பார்த்த அனு... குண்டாய்.... தோளில் புரளும் வெட்டப்பட்ட நரை கலந்த முடியுடன் இருந்தாள்.

அனு எனச் சொல்ல வாயெடுக்கும் போது காரின் ஹாரன் சப்தம் கேட்க, 'இந்தா வாறேங்க.... உங்கப்பா கால்ல வெந்நித்தண்ணிய கொட்டிக்கிட்டுத்தான் நிப்பாரு... உங்களைக் கூட்டிக்கிட்டு வந்து ஏதாச்சும் வாங்கிப் பாக்கணும்... அப்பத் தெரியும் எவ்வளவு நேரமாகுன்னு...எனச் சொல்லியபடி அவசரம் அவசரமாக சில்லறையை வாங்கிக் கொண்டு விரைந்தாள்.

என்னை அறிந்ததாகவே அவள் காட்டிக் கொள்ளவில்லை.அவளை அறிந்த நான் அவள் முதுகுக்குப் பின்னே கண்ணைச் செலுத்த ‘அப்பா’வென பார்வைக்கு தடை போட்டது மகளின் குரல்.

செல்வத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனசில் மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டேயிருந்தது. மனைவியிடம் சொன்ன போது எத்தனை வருசமாச்சுங்க... எங்கயிருக்காருன்னே தெரியாது... எப்படிப் போயி பாக்குறது.... நீங்க வேலை வேலையின்னு நல்லது கெட்டதுக்கு கூட ஊருக்குப் போறது அரிதாகிப் போச்சு... எல்லாத்துக்கும் நாந்தான் ஓடுறேன். ஊருல உள்ள சொந்தங்களே உங்களுக்கு மறந்து போயிருக்கும். இதுல செல்வ அண்ணனை எங்க போயி தேடுவீங்கன்னு கேட்டா. அவ கேட்டதும் சரிதான்... வேலை... வேலையின்னு ஊருப்பக்கமே போறதில்லைதான்.

செல்வத்தோட ஊருக்குப் போயி அவன் அப்பாவைப் பார்த்தா... எங்க இருக்கான்னு சொல்லப் போறாரு...  நான் அப்பாஅம்மாஅண்ணன் அப்படின்னு மூணு உறவைக் கடந்த பத்து வருடங்களில் இழந்திருக்கிறேன். செல்வத்தின் அப்பாவும் அம்மாவும் உயிரோடு இருப்பார்களா...?  என்ற கேள்வி என்னுள் எழயோசனை அதிகமானது.

அவர்கள் இல்லைன்னா என்ன ஊரில் யாரிடமாச்சும் விசாரிச்சா சொல்லப் போறாங்க... எது எப்படியோ இன்று இரவு கிளம்பினால் நாளை அவனைப் பார்த்துவிட்டு நாளை இரவு கிளம்பி மறுநாள் டூட்டிக்கி வந்துடலாம் என முடிவு செய்து மனைவியிடம் மெல்லச் சொன்னேன்.

முதலில் எதுக்குங்க என்று மறுத்தவள் பின்னர் பத்திரமாப் பொயிட்டு வாங்க என சின்னப் பிள்ளையிடம் சொல்வதைப் போல் சொன்னாள். அவளுக்கு நானும் எனக்கு அவளும் எப்பவும் குழந்தைங்கதான். அப்பா என்ன சின்னப் பிள்ளையான்னு என் மகன் அவளைக் கேலி பண்ணினாலும் அவளுக்கு நான் பிள்ளைதான்.

காளையார் கோவிலில் இறங்கிவரலாற்றுச் சிறப்பு மிக்க காளீஸ்வரர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு செல்வத்தின் ஊர் வழியாக தாயமங்கலம் செல்லும் டவுன் பஸ்ஸிற்காக காத்திருந்தேன். கையில் தேவகோட்டையில் வாங்கிய பழங்களும் சுவீட்டும்... பேருந்து வர கோவிலுக்குச் செல்லும் கூட்டத்துக்குள் இடித்துப் பிடித்து  ஏறிஇடம் கிடைக்காமல் நின்று கொண்டேன். பேருந்து நிறைந்த கூட்டத்தை தன்னுள் திணித்து மெல்ல நகர்ந்தது.

காயா ஓடை’ என்ற நிறுத்தத்தில் இறங்கினவனின் கண்ணில்பட்டது அந்த கண்ணீர் அஞ்சலி பேனர்... அதில் சிரித்துக் கொண்டிருந்தான் செல்வம்.

-'பரிவைசே.குமார்.

51 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா எல்லோருக்கும்…

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம் , கீதா/கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  3. ம்ம்ம்ம்ம் கதையை மெதுவாத் தான் வந்து படிக்கணும் இப்போ வேலை இருக்கு.

    பதிலளிநீக்கு
  4. யாரும் வரலையா? என்ன ஆச்சரியம்? நான் தான் லேட்டுனு நினைச்சேன்.

    பதிலளிநீக்கு
  5. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது என்ன ஜதி! நான் வரச்சே யாருமே இல்லை. ஆனால் தி.கீ. துரை சார் கருத்து முன்னாலே வந்து எப்படிக் குதிச்சது?

    பதிலளிநீக்கு
  6. குமார் அவர்களது கதை என்றால் கேட்கவும் வேண்டுமோ!...

    அன்பின் நட்பு....
    பனிச்சாரலில் மலரும் பூக்களாக...

    ஆனால்
    வீணாக உதிர்ந்திருக்க வேண்டாம்..

    பதிலளிநீக்கு
  7. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்... மகன் ஊருக்கு கிளம்பியாச்சா? உங்களுக்குதான் போரடிக்கும்...

    பதிலளிநீக்கு
  8. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  9. ஹை குமாரின் கதையா...வருகிறேன்...

    மகன் பறந்தாச்சு! வீடு வரும் போது 2.30 மணி ஆனால் தூக்கமே வரவில்லை. ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்..மகன் ஒரு தோழனைப் போல. பாட்டு கேட்டு அதைப் பற்றி பேசி சினிமா பற்றி பேசி, வீட்டில் கணினியில் ஒரு நகைச்சுவை சினிமா பார்த்து.ஒரு பெண்ணும் மூன்று களவாணிகளும்...பல விஷயங்கள் பேசி...அவன் ஊர்க்கதை என்று....உறவினர் வீடுகள் சென்று...என்று ஒரு வாரம் பறந்து விட்டது. ரொம்ப வெறுமையாக் இருக்கு....

    வழக்கம் போல் 4 மணிக்கு எழுந்தாச்சு கடமை ஆற்ற....மகனுடன் கண்ணழகியை அழைத்துச் சென்றிருப்பேன் இந்த நேரம்....இப்படி ரொம்ப டல்லாக இருக்கிறது....முதலில் ஒரு சுணக்கம் வலை வர....

    அப்புறம் மனதைக் கொஞ்சம் மாற்ற நினைத்து வலை வந்து மனதைக் கொஞ்சம் டைவேர்ட் பண்ணனும்..

    கீதா.

    பதிலளிநீக்கு
  10. இனிய காலை வணக்கம் கீதாக்கா.. ஆறு மணி ஆனதே தெரியாமல் உங்கள் தளத்தில் விழுந்து விழுந்து (அடிகிடி படாமல்தான்!) கமெண்ட் போட்டுக் கொண்டிருந்தேன்!

    பதிலளிநீக்கு
  11. ஆமாம் ஸ்ரீராம் கிளம்பியாச்சு. 8 மணிக்கு துபாயிலிருந்து மெசேஜ் வரும் வெயிட்டிங்க்....ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவே போர் ஒரு சுணக்கம்....என்ன செய்ய....கண் கலங்கத்தான் செய்தது அவனுக்கு பை சொல்லும் போது ஆனால் அது நல்லதல்ல என்று அடக்கிக் கொண்டு அவனுக்குத் தெரியக் கூடாதே...அவனுக்கும் அந்த ஃபீலிங்க் இருந்தது..தான்..

    கீதா

    பதிலளிநீக்கு
  12. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது என்ன ஜதி! நான் வரச்சே யாருமே இல்லை. ஆனால் தி.கீ. துரை சார் கருத்து முன்னாலே வந்து எப்படிக் குதிச்சது?//

    அக்கா நான் போடும் போதும் இப்படி நினைத்துத்தான் வந்தேன்..துரை அண்ணாவின் கமென்ட் வந்திருக்கும் என்றும் நினைத்து.... ஆனால் என் கமென்ட் முதலாவதாக வந்து இருந்தது ஆச்சரியம்....

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ஓ கீதாக்கா பதிவு வந்திருக்கா....பார்க்கிறேன் அக்கா. வரேன்....கடமை எல்லாம் ஆற்றிவிட்டு

    கீதா

    பதிலளிநீக்கு
  14. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
    பரிவை குமார், விவரமான கதை. புரிந்த மனைவியைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.
    நண்பனை இழந்த கதா நாயகணுக்கு ஆழ்ந்த வருத்தம் தான் சொல்ல முடியும்.
    ஏன் நட்புகள் இப்படி மாறுகின்றன என்பது இன்னும் புரியாத புதிர்.
    காலத்தின் கோலம் தான்.

    பதிலளிநீக்கு
  15. அப்புறமா வரேன். நாளை கும்பகோணம் குலதெய்வம் கோயில் பயணம். பிரசாதம் பண்ணி வைச்சுக்கணும். :)

    பதிலளிநீக்கு
  16. முடிவு மனதை என்னவோ செய்துவிட்டது. முடிவு ஊகிக்க முடிந்தது என்றாலும் கூட மனதை கனக்க வைத்தது உண்மை குமார். அருமையான நடை. வருகிறேன் மீண்டும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  17. நண்பர் குமார் கதை மனதை கனக்கத்தான் செய்துவிட்டது

    பதிலளிநீக்கு
  18. படிக்க ஆரம்பித்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு கதையாக நினைக்க இயலவில்லை உண்மை நிகழ்வுகளோ....

      "காயாஓடை" ஊரின் பெயரைப்போல் நினைவுகள் காயாமல் ஓடட்டும்...

      நீக்கு
  19. நினைவோடை. நண்பரின் முடிவு மறைமுகமாக அவரது நினைவுகளைக் கிளர்ந்தெழச் செய்திருக்க வேண்டும். கதை அருமை.

    பதிலளிநீக்கு
  20. "கண்டக்டர், டிக்கெட் டிக்கெட்" என்று வரும்போது பார்த்தேன். "செல்வம்"... என்று முடித்திருக்கலாமோ. எத்தனையோ வருடங்கள் தள்ளிப்போட்டபோது, கடைசியில் ஊருக்குச் செல்லும்போது "கண்ணீர் அஞ்சலி" போஸ்டர்தானா வரவேற்கவேண்டும்?

    வாழ்க்கையில் நம்முடன் வரும் நட்புகள் அனேகமாக அந்த அந்த காலகட்டங்களுக்குப்பிறகு உதிர்பவையாகவே இருக்கின்றன. வித்தியாசமான கதை.... பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  21. காயா ஓடை...மனதை காயம் செய்து விட்டது....

    பதிலளிநீக்கு
  22. காலை வணக்கம் 🙏

    கதை மனதைத் தொட்டது.

    பதிலளிநீக்கு
  23. எதிர்பாரா முடிவு....

    நிதர்சன வாழ்வின் எழுத்துக்கள்...மிக அருமை..

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் சகோதரரே

    தாங்கள் எழுதிய கதை மனதை கனக்கச் செய்து விட்டது. இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை. நட்பின் அருமையை அழகாக தொகுத்து எழுதியிருக்கிறீர்கள். கதை அருமை. காணமல் இருப்பவர்களை காணச்செல்லும் போது இப்படி நடந்தது எவ்வளவு சோகத்தை தந்திருக்கும். மனதில் என்றும் சுமக்கும் சோகங்களும்
    "காயா ஓடைதான்." கதைக்கேற்ப காயா ஓடை தலைப்பும் அமைந்து விட்டது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  25. தெளிந்த நீரோடை போன்ற நடையில் அருமையான கதை. நட்பு, காதல் இரண்டையும் ஒரே சேர நினைவு கூர்ந்தது சிறப்பு. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்க!

    பதிலளிநீக்கு
  26. நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வரை என் நெருங்கிய தோழி ஃபசில்லா பேகம் என்னும் பெண். ஒன்பதாம் வகுப்பு முடித்தவுடன் நன்றாக படித்துக் கொண்டிருந்த அவள் படிப்பை பாதியில் நிறுத்தி அவளுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள். நாங்கள் கல்லூரி படிப்பை முடிப்பதற்குள் அவளுக்கு நான்கு குழந்தைகள் பிறந்து விட்டன என்றும், உளுந்தூர் பேட்டையில் வசிக்கிறாள் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர சந்திக்கவில்லை. இப்போதும் உளுந்தூர்பேட்டையை கடக்கும் பொழுதெல்லாம் அவளை நினைத்துக் கொள்வேன்.

    பதிலளிநீக்கு
  27. குமார் வலைப்பக்கம் வந்து நாளாச்சு. இங்கு குமார் கதை என்று மகிழ்ச்சியாக வந்தேன், மனது கனத்து போனது.
    நண்பர்கள் இறப்பு மனதை கலங்க செய்யும்.
    இளவயது நட்பு அதில் எத்தனை எத்தனை நினைவுகள்!

    தொடர்ந்து எழுதுங்கள் குமார்.

    பதிலளிநீக்கு
  28. செல்மவம் அடடா. இப்படி ஒருநண்பருக்கு எப்படியான ஏமாற்றம். மன ஓட்டத்தில் செல்வம்.நிகழ்வில் செல்வோம் என்று சொல்வதுபோல என்ன ஒரு மனஓட்டம். நிகழ்வு நம்பும்படியாக மனதை நெருடுகிறது. அனு உணர்வுக்கு இடம் கொடுக்காத பெண். ஆனால் அவள் மனமும் எண்ணங்களினூடே ஈடுபட்டிருக்கும். நல்ல தீட்டல். அன்புடன்

    பதிலளிநீக்கு
  29. குமார் உங்களைக் கண்டு ரொம்ப நாளாகிவிட்டது. வலைப்பக்கம்.

    ஆட்டொக்ராஃப் பார்க்கும் போது நிஜமாகவே பல நினைவுகள் நம் மனதில் அலை போல எழுந்து வரும். சமீபத்தில் வெங்கட்ஜி ஒரு பதிவில் தன் கல்லூரி ஆட்டோக்ராஃப் பற்றி எழுதிய போது நானும் எனது டைரியை எடுத்துப் பார்த்தேன். அதில் பலரும் அவர்களது அட்ரெஸ் கொடுத்திருந்தார்கள். இப்போது அங்குதான் இருப்பார்களா என்றும் தோன்றியது. உங்கள் கதையில் நீங்கள் சொல்லியிருப்பது போலவே யோசித்தேன். அவர்கள் எப்படி இருப்பார்கள்....குடும்பம் என்ன என்றெல்லாம்.

    நல்ல மனைவி..புரிந்து கொள்ளும் மனைவி...காயா ஓடை காய்ந்துவிட்டதோ?!!!!! அதுவும் இத்தனை வருடங்கள் தொடர்பில் இல்லாமல் சந்திக்க நினைத்த போது....

    கீதா

    பதிலளிநீக்கு
  30. கணவனைப் புரிந்து கொண்ட அருமையான மனைவி! கடைசியில் நட்பு நீடிக்கும் என நினைத்தால்! முடிவு மனதை அதிர வைத்தது! என்றாலும் பல சமயங்கள் இப்படித் தான் ஆகிறது! எதுக்குச் சந்திக்க வைச்சான், எதுக்குப் பிரிய வைக்கிறான் என்றே புரிவதில்லை!

    பதிலளிநீக்கு
  31. "காயா ஓடை" ஊரின் பெயர் மனதைத் தொட்டது!

    இங்கே இணைய உலகிலேயே பனிரண்டு ஆண்டுகளாக இருந்தும் பல நெருங்கிய நட்புகள் இப்போது தொடர்பிலேயே இல்லை. பலரும் இருக்கும் இடமே தெரியவில்லை. 2005--06--07 வரையும் நெருங்கிப் பழகிய பலர் இப்போது எங்கே இருக்காங்களோ! இது வே இப்படி இருக்கும்போது பள்ளி நட்புக்கள் தொடர்பில் இருப்பதும் ஆச்சரியம்! அது ஆண்களுக்கு மட்டுமே வாய்க்கிறது. பெண்கள் எவருக்கும் பள்ளி நட்போ, கல்லூரி நட்போ திருமணத்துக்குப் பின்னர் தொடர்பில் இருப்பது என்பது உண்மையில் ஆச்சரியத்துக்கு உரிய ஒன்று.

    பதிலளிநீக்கு
  32. பழைய நட்பில் நான் இணையத்துக்கு வந்ததும் அறிமுகம் ஆன துளசிகோபால் (இவர் பதிவுகள் தான் என்னையும் எழுதத் தூண்டியது), மற்றும் வல்லி சிம்கன் இருவர் தான் இப்போதும் எழுதுகின்றனர். துளசி நிறையவே ஊர், நாடு சுற்றி எழுதுகிறார். வல்லி அவ்வப்போது அனுபவங்களைப் பகிர்கிறார். மற்ற யாரும் இப்போது எழுதுவது இல்லை. நுனிப்புல் உஷா என்னும் எழுத்தாளர் ஆரம்பத்தில் எழுதினார். இப்போது முகநூலில் மட்டும் இருக்கிறார். இவங்க 3 பேர் தான் எனக்கு ஆரம்பத்தில் பழக்கம் ஆனவங்க!

    பதிலளிநீக்கு
  33. நல்ல கதை குமார். வழக்கம் போல உங்கள் நடை அருமை. எல்லோருக்கும் ஒரு காலகட்டத்தில் தங்கள் பழைய தோழமைகளை நினைத்து அந்த நினைவுகளில் மகிழ்வது....இப்படி யோசிப்பது என்று. நானும் சமீபத்தில் எனது பி எட் தோழர்களைச் சந்தித்தேன்.

    முடிவுதான் வருத்தமாக அமைந்துவிட்டது. நல்ல யதார்த்த ரீதியிலான கதை. இப்படித்தான் விட்டுப் போன நட்புகளைத் தேடிச் செல்லும் போது இப்படியான தருணங்கள் ஏற்படுவதும் உண்டுதான். பாராட்டுகள், வாழ்த்துகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  34. முடிவு சோகமாக மாற்றியதில் வருத்தம்தான்

    பதிலளிநீக்கு
  35. அழகிய ஓட்டோகிராஃப் கதை. உரையாடல்கள் நினைவுகள் சொன்ன விதம் அருமை. வாழ்த்துக்கள்.

    பழைய நம் பள்ளி நினைவுகளையும் தூண்டி விட்டு விட்டது. ஒவ்வொருவருக்கும் இப்படித்தானே படித்த நட்புக்கள் பலர் நல்ல ஆழமாக மனதில் பதிந்திருந்தலும் பின்பு சந்திக்க சந்தர்ப்பம் கிடைப்பதில்லை... கிடைக்கும்போது இப்படியும் ஆகி விடுகிறது.

    என் நன்கு நெருங்கிய ஒரு தோழியும் தொடர்பில்லாமல் போய், பின்பு அறிந்தேன் சூசைட் பண்ணிக்கொண்டார் என.

    இன்னொரு தோழி.. சுகயீனம் காரணமாக இறந்து விட்டாவாம்.. இறப்பதற்கு சில நாட்கள் முன்பு என் பிறந்தநாள் வந்தது... அப்போ அந்த சுகயீன நேரத்திலும் , தன் தாயிடம் சொல்லியிருக்கிறா இன்று அதிராவின் பிறந்ததினம் என.. அப்போது நம் நாட்டுப் பிரச்சனைகளால் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்த காலம்:(.

    பதிலளிநீக்கு
  36. கீசா மேடம்- //அது ஆண்களுக்கு மட்டுமே வாய்க்கிறது// - அப்படி இல்லை. எனக்கு சில நண்பர்கள்/நண்பிகளைப் பார்க்கணும் என்று ஆசை (5ம் வகுப்பு, 8ம் வகுப்பு போன்ற). நண்பர்களை ஒருவேளை முயற்சி எடுத்தால் பார்த்துவிட வாய்ப்பு இருக்கு. நண்பிகளை எப்படிப் பார்ப்பது?

    பதிலளிநீக்கு
  37. //நண்பிகளை எப்படிப் பார்ப்பது?// நானும் இதைத் தானே சொன்னேன்! ஆண் சிநேகிதர்கள் தங்கள் ஆண் சிநேகிதர்களுடன் தொடர்பு வைச்சிருக்கிறாப்போல் பெண்கள் செய்வதில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் தொடர முடியாமல் போகும். அப்படி இருக்கும்போது உங்கள் நண்பிகளை எங்கேனு தேடுவீங்க? பெண்களுக்கு நட்புக்களைத் தக்க வைப்பதில் சிரமம் இருக்கத் தான் செய்கிறது! ஆனால் இப்போது ஆதி வெங்கட் தன் பள்ளியில் தன்னோடு படித்த பழைய மாணவிகளைக் கோவையில் அதே பள்ளியில் சந்தித்திருக்கிறார். இது அந்த வருஷ மாணவிகள் அனைவரும் தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்திருப்பார்கள். அப்படிச் சந்திக்கலாம். ஆனால் நீண்ட தொடர்பு என்பது சாத்தியம் இல்லை.

    பதிலளிநீக்கு
  38. இந்த அனுபவம்பல நாட்களாய் மறந்து விட்டவனைக் காணப் போகும்போது வர வேண்டுமா

    பதிலளிநீக்கு
  39. ..இப்படி யோசித்து யோசித்துத்தான் பலவற்றை இழந்தேன் என்றாலும் யோசிப்பதை இன்னும் இழக்கவில்லை.//

    கொஞ்சம் யோகிக்கவைத்த வரி.

    பதிலளிநீக்கு
  40. மனதை நெகிழ வைத்த கதை... எனது அன்பருக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  41. அழகான ஆட்டோகிராபாக பயணித்த கதை இறுதியில் கண் கலங்க வைத்தது .
    இத்தனைகாலதுக்கு பின் தேடிசெல்லும் நண்பரை கண்ணீர் அஞ்சலி போஸ்டரா வரவேற்கணும் பாவம் :(
    வாழ்த்துக்கள் குமார் .மிகவும் அழகான கதை

    பதிலளிநீக்கு
  42. @geethA Rengan

    கீதா மகன் ஊர் போய் சேர்ந்திட்டாரா ..ஹக்ஸ் டு யூ டியர் ..டேக் கேர்

    பதிலளிநீக்கு
  43. என்ன குமார் இப்பிடி முடிச்சிட்டீங்க. பகீர்னு ஆயிடுச்சு :(

    பதிலளிநீக்கு
  44. இன்று புதன்..

    புதிராக இருந்தது - கேள்வியாய் பதிலாய்
    பதிலே கேள்வியாக!....

    5.30 ஐ தாண்டியாயிற்று...

    பதிலளிநீக்கு
  45. கிட்டத்தட்ட அழ வைத்துவிட்டீர்களே, திரு குமார் அவர்களே. மனதில் பதிந்துவிட்டது. பகிர்ந்த எங்கள் பிளாக் தளத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  46. இப்படித்தான் முடியும் என்ற கதை ஆனாலும் எளிமையா நடையில் கவர்ந்துவிட்டீர்கள். நேற்று எஸ்,அர்ஷியாவின் கதை படித்ஏதேன் அதில் அம்மா...கடைசியில் தொலைபேசியில அம்மாவுட் பேசி சோகத்தைத் தவிர்த்துவிகட்டார்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!