திங்கள், 31 ஜனவரி, 2011

நேர் செய்திகளும், கோணல் கமெண்டுகளும் + புதிர்க்கதை


* பள்ளியில் முதலுதவி பயிற்சி முகாம்.  

! முதலுதவி? ஆசிரியர்களுக்கா அல்லது மாணவர்களுக்கா?
    
 
* திருப்பதியில் நேபாள அதிபர் தரிசனம்.
! திருப்பதிக்கு வந்து, யாருக்கு தரிசனம் கொடுத்தார் அவர்?


* டிரைவர் குடித்தால் காட்டிக் கொடுக்கும் புதிய கார்.
! அடுத்தது என்ன? டிரைவர் குடித்தால் பங்கு கேட்கும் புதிய கார்?

 
* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நெஸ்டர் ஜோடி சாம்பியன். 
! அதிர்ச்சி தோல்வி அடைந்தவர்கள் யார்?

 
* புதுடில்லியில் பிப்., 1ம் தேதி முதல்வர்கள் மாநாடு.  
! நிகழ்கால முதல்வர்களுடன், வருங்கால முதல்வர்களும், மாஜி முதல்வர்களும் பங்கேற்பார்களா?  (அப்போதான் அது 'மா'நாடு. இல்லையேல் வெறும் நாடு!)



* திருப்பூரில் வெளிநாட்டு வேலை மோசடி.   
! அங்கே மட்டும்தானா? எல்லா ஊரிலும் வெளிநாட்டு வேலை மோசடி இருக்குமே!

 
* ஐகோர்ட்டில் தீ விபத்து.   
! வக்கீல்கள் சூடாக வாதம் பண்ணியிருப்பார்கள் போலிருக்கு!


* வாழைப்பழத்தின் விலை 60 சதவீதம் உயர்வு.  
! விலை எவ்வளவு ஏறினாலும், வழுக்கி, கீழே விழாமல் போய்விடுமா?  என்கிறார், வா ப ரசிகர் ஒருவர்.   
              



**************************
மூதுரை:
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.    
              

அப்பாதுரை: (முன்னுரை)   
                                    ** " -- -- " பற்றி எழுதியிருந்ததைப் படித்தேன். எனக்கு அவர் எழுதிய பல சிறுகதைகள் பிடிக்கும். உங்களுக்கு மறுப்பில்லையென்றால் அவரது இரண்டு கதைகளைச் சுருக்க்க்கி எபி வாசகருடன் பகிர அனுப்புகிறேன்.  முதலில் ஒரு கதை; பிடித்தால் சொல்லுங்கள்; அடுத்தது அனுப்புகிறேன்....


எங்களுரை:
** இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒரு கேள்வி: அப்பாதுரை சார் எழுதியிருப்பது, எந்த எழுத்தாளர் பற்றி? சரியாகக் கண்டுபிடிப்பவர்களுக்கு, பாயிண்டுகள் கொடுக்க, அப்பாதுரை சார் ரெடியாம். தெரிஞ்சவங்க சொல்லி, பாயிண்டு தட்டிக்குங்க.

இப்ப கதையைப் படியுங்க.

இப்படியா ஒரு சின்னப் பெண்ணை பயமுறுத்துவாய்?
                                
பார்வதி அம்மாள் வாசலில் தன் மகள் ஜெயா வந்து கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் முகம் மலர வாசல் பக்கம் வந்தாள்.
                                  
"என்னடி அதிசயமா, நீ மட்டும் தனியா வந்திருக்கே?"
            
"உள்ளே வாயேம்மா. எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்"
         
"ரமேஷ் கல்யாணத்துக்குப் புடவை வாங்கப் போகலாம்னு நினைச்சேன்"
                                    
"ஏம்மா, என் தம்பி கல்யாணத்துக்கு புடவை வாங்க என்னைக் கூப்பிட்டிருந்தா நான் வந்திருக்க மாட்டேனா?"
               
"அதுக்கில்லையடியம்மா! உனக்கோ கல்யாணம் ஆகி ஆறு மாசம் தான் ஆறது. கல்யாணத்துக்குன்னு இப்பவே கூப்பிட்டா உங்க வீட்டிலே என்ன நெனைச்சுப்பாளோன்னு பயமா இருந்தது!"
                 
"பயம் என்ன பயம்? இவர்களுக்கெல்லாம் பயந்து பயந்து தான் நாமெல்லாம் இப்படிக் குட்டிச்சுவராப் போறோம்!"
              
"அது சரி, என்ன பொட்டியெல்லாம் கொண்டு வந்துட்டே? கல்யாணத்துக்கு இன்னும் பதினஞ்சு நாள் இருக்கே?"
                
"நான் கல்யாணத்துக்கு வரலம்மா!"
           
"என்னடி இது திடீர்னு?"
      
"ஆமாம், எங்க மாமியார் எப்பப் பார்த்தாலும் தொண தொணன்னு ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கார். எது பண்ணினாலும் குத்தம். விடியக் காலம்பற எழுந்து அத்தனை வேலையும் சாப்பாட்டுக் கடையும் ஆகி ஒரு பன்னிரண்டு மணிக்குப் போய் அக்கடானு படுத்துக்கலாம்னா, பகல்ல தூங்கினா தரித்திரமாம்! தெருவில இருக்கிற அத்தனை பேர் வீட்டையும் நாக்குல நரம்பில்லாம அலசுவா, நான் தூங்கினால் மட்டும் தப்பு. இவரோட எங்கியாவது சினிமாவுக்குப் போனா, "ஏண்டா, உனக்கு சினிமாவே பிடிக்காதே? இப்ப என்ன ஆம்படையாளோட வாரா வாரம் சினிமா?'னு எல்லார் முன்னாலேயும் கேட்பா. அவரோ பயந்தாங்குளி. அம்மாவைப் பத்தி ஏதாவது சொன்னா மூக்குக்கு மேலே கோபம் வந்துடும். நாலு நாள் பேச மாட்டார். அந்த மாதிரி சண்டை வந்தது. உன் வீட்டுக்குக் கிளம்பிப் போன்னு சொன்னார். வந்துட்டேன்."
       
"ஐயையோ! இப்ப உங்க அப்பா வந்து கேள்விப்பட்டார்னா அப்படியே இடிஞ்சு போயிடுவாரே?"
          
"நான் போய் மாடி ரூம்ல இருக்கேன். நீ அப்பாகிட்ட எல்லாத்தையும் சொன்ன பிறகு என்னைக் கூப்பிடு" என்று ஜெயா மாடிக்குக் போய்விட்டாள்.
         
ராமநாதன் உள்ளே வந்து முகம் அலம்பிக் கொண்டு கூடத்தில் உட்கார்ந்தார், பார்வதி அம்மாள் காபி கொண்டு வந்து அவர் முன்னால் வைத்தாள். பெண் வந்திருக்கிற விவரத்தை சொல்லி விட்டு, ஜெயாவைக் கூப்பிட்டாள். 
          ******************* 
மறு நாள் காலை ராமநாதன் மாப்பிள்ளையைப் பார்க்கக் கிளம்பிப் போனார். மாப்பிள்ளையின் ஆபீஸில் பியூன் வந்து அவர் கூப்பிடுவதாக அழைத்துப் போனான். தனியாக ஏ.ஸி அறை. டை கட்டிக் கொண்டு இருந்தான். டெலிபோனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தவன் இவரைப் பார்த்தவுடன் ரிஸீவரைக் கையால் மறைத்துக் கொண்டு அவரை உட்காரச் சொல்லிவிட்டு தொடர்ந்தான். அறை விசாலமாக இருந்தது. சுவரில் ஒரு புரியாத ஓவியம் மாட்டியிருந்தது. உட்காரும் ஆசனம் சொகுசாக இருந்தது. டேபிளுக்குப் பக்கத்தில் அவனும் ஜெயாவும் எடுத்துக் கொண்ட ஒரு சின்ன போட்டோ. பேச்சை முடித்துக் கொண்டு டெலிபோனை வைத்தான்.
      
"சொல்லுங்கோ!" என்றான்.
      
"ஒன்றுமில்லை. உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்"
      
"பரவாயில்லை, சொல்லுங்கோ!"
             
"ஜெயா சொன்னா - உங்களுக்கும் ஜெயாவுக்கும் ஏதோ மனஸ்தாபமாம்.."
      
"ம்.."
    
"அவ சின்னக் குழந்தை. அவளுக்கு ஒண்ணும் தெரியாது. ஏதாவது தப்பு பண்ணியிருந்தா நீங்க அதைப் பொருட்படுத்தக் கூடாது"
        
"அதெல்லாம் இல்லை. அவ ரொம்ப சண்டை போடறா. நான் இவளுக்குப் பரிஞ்சு ஒரு வார்த்தை பேசினா அம்மா உடைஞ்சு போயிடுவா. அவளுக்குச் சொன்னா புரிய மாட்டேங்குது. நல்ல வேளை, நீங்க நேரா இங்கே வந்தீங்க. அவ கோவிச்சுண்டு போயிருக்கானு எங்க வீட்ல யாருக்கும் தெரியாது. கல்யாணத்துக்காக அம்மாவுக்கு ஒத்தாசையாக் காரியம் பண்ணப் போகிறாள்னு சொல்லித்தான் அம்மாகிட்டே பர்மிஷன் வாங்கினேன். நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க!"
      
"எனக்கு இப்பத்தான் நிம்மதியா இருக்கு மாப்பிள்ளை!". மன நிறைவுடன் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார் ராமநாதன்.
       
வீட்டுக்குத் திரும்பிய போது, ஹாலில் ரமேஷும் ஜெயாவும் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. செருப்பைக் கழற்றி விட்டு வாசற் பக்கம் இருந்த அறையிலேயே சிறிது இளைப்பார உட்கார்ந்தார். பெண்ணும் பிள்ளையும் பேசுவது இப்போது தெளிவாகக் கேட்டது.
     
"பொண்ணு நல்லா இருக்காளோ?"
      
"ம்.. இருக்கா"
   
"என்ன கலர்?"
  
"..."
   
"சொல்லுடா, ஏண்டா வெட்கப்படறே?"
            
"எலும்பிச்சம்பழக் கலர்"
            
"ரமேஷ்! நான் ஒண்ணு சொல்வேன், கேக்கணும். அவ கல்யாணமாகி இங்கே வந்தப்புறம் நீ அவளைக் கண் கலங்காமப் பாத்துக்கணும்"
      
"சரி"
   
"சரின்னு சொன்னா மட்டும் போதாது. உறுதியா இருக்கணும்"
   
"ம்"
     
"ஏன்னா, உனக்கு இந்த வீட்டுல அம்மா அப்பா எல்லோரும் இருக்கா. ஆனா அவளுக்கு இந்த வீட்டுல எல்லாமே நீ தான். உன்னை மட்டும் தான் நம்பி அவ இங்கே வரப் போறா. ஒரு வேளை அம்மாவுக்கும் அவளுக்கும் ஏதாவது வாக்கு வாதம் வந்துதுனா கூட, நீ தான் உடனே நடுவுல புகுந்து சமரசம் பண்ணி வைக்கணும். அதுக்குன்னு நீ அவ பக்கமே பேசணும்னு அவசியம் இல்லை, புரிஞ்சுதா?"
    
"ம்"
   
"பிராமிஸ்?"
   
கல்யாண மண்டபத்தின் வாசலில் ராமநாதன் காத்திருந்தார். மாப்பிள்ளையும் அவர் உறவினர்களும் இறங்குவதைப் பார்த்த பிறகு தான் மனதுக்கு நிம்மதியாயிற்று.
    
ஜெயா அவர்களை உள்ளே அழைத்துப் போய் விழுந்து விழுந்து உபசாரம் பண்ணுவதைப் பார்த்துத் தனக்குள் சிரித்துக் கொண்டார். முகூர்த்தம் முடிந்து இலை போட்டவுடன் மாமியாரையும் கணவனையும் உட்கார வைத்து இவளே அவர்களுக்குப் பரிமாறுவதைப் பார்த்த போது, "இந்தப் பெண் ஜென்மமே இப்படித்தான்!" என்று தன்னையும் அறியாமல் சொல்லிவிட்டு, தன்னை யாரவது கவனிக்கிறார்களா என்று நாக்கைக் கடித்துக் கொண்டார்.
   
கல்யாணம் முடிந்து மறு நாள் பிள்ளையையும் மருமகளையும் வீட்டுக்கு அழைத்து வரும் வரை ஜெயாவும் மாப்பிள்ளையும் கூடவே வந்திருந்து விடை பெற்றுக் கொண்டு புறப்பட்ட போது அவருக்குக் கொஞ்சம் தொண்டையைக் கூட அடைத்து விட்டது.
   
மாலையில் மனைவியுடன் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்து விட்டு, மாடியில் ஈஸிசேரைப் போட்டுக் கொண்டு சுந்தர காண்டத்தை விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தார். கீழே பார்வதியின் குரல் அதிகமாகக் கேட்கவே இறங்கிப் போனார். ஹாலில் பார்வதிக்கு முன்னால் மருமகள் தலையைக் குனிந்து கொண்டு நிற்பது தெரிந்தது. ரமேஷ் வீட்டில் இல்லை.
    
"சமையல் பண்றதுக்கு முன்னால என்ன பண்ணனும்னு என்னைக் கேட்டுக்க மாட்டியோ? நான் எங்கே வெளியூருக்கா போயிட்டேன்? இங்க இருக்கற கோவிலுக்குப் போய் அர்ச்ச்னை பண்ணிட்டு வந்துடறேன்னு சொல்லிட்டுத்தானே போனேன்? அதுக்குள்ள என்ன அவசரம்? இந்த வீட்டிலே வெங்காய சாம்பார் பண்ணவே மாட்டோம். எங்க மாமியார் மாமனார் காலத்துல இருந்தே நாங்க வெங்காயத்தை ஒதுக்கியாச்சு. வீட்டுக்குள்ள வெங்காய வாசனையே கூடாது" என்றாள் மாமியார்.
   
"அவர் கூடச் சாப்பிட மாட்டாராம்மா?" என்றாள் மருமகள்.
   
"அவர் கூடன்னா, அவன் என்ன ஸ்பெஷலா?"
  
"இல்லைம்மா, தெரியாமப் பண்ணிட்டேன்"
  
ராமநாதன் ஹாலுக்கு வந்தார். "பார்வதி, என்ன விஷயம்?"

"பாருங்கோ, இவள் பாட்டுக்கு வெங்காய சாம்பார் பண்ணிட்டாள். என்னைக் கேட்டு விட்டுப் பண்ண மாட்டாளோ?"
   
"சரி, இப்ப ஏன் அதுக்காகக் கத்தறே? அவளுக்கு எப்படித் தெரியும்? இன்னிக்கு உனக்கும் எனக்கும் வெறும் ரசமும் மோரும் போறும். புரியறதா? இதை இத்தோடு நிறுத்திக்க. இன்னொரு தடவை இப்படி சண்டை வந்தால் எனக்கு கோபம் வரும். நீ இலையைப் போடும்மா. இப்ப நானும் இவளும் சாப்பிடறோம். அப்புறம் ரமேஷ் வந்ததும் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா ஒக்காந்து சாப்பிடுங்கள். எல்லோரும் சாப்பிட்டு முடிக்கிற வரையில் இவள் பட்டினியோட காத்துண்டிருக்க வேண்டாம். அதெல்லாம் போன தலை முறையோட போகட்டும்!".
**********
எங்கள் கமெண்ட்: அப்பாதுரை சார் நீங்க சொன்ன வழியை அப்படியே பின்பற்றி வெளியிட்டுவிட்டோம். பரிசு / பாராட்டு யாராவது கொடுத்தால் எங்களுக்கு. வேறு ஏதேனும் கிடைத்தால் ..... அது உங்களுக்கு!
                      

23 கருத்துகள்:

  1. இது வரை படிக்காத கதை....அசோகமித்ரன் பாணி சுருக்கலிலும் அப்படியே இருக்கிறது..

    நல்ல கதையை கொடுத்த அப்பாதுரைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. I have read this story in Poothoorigai earlier but don't recall who is it.

    Could be Durai himself !!!

    பதிலளிநீக்கு
  4. வாழைப்பழத்தின் விலை 60 சதவீதம் உயர்வு.
    ! விலை எவ்வளவு ஏறினாலும், வழுக்கி, கீழே விழாமல் போய்விடுமா? என்கிறார், வா ப ரசிகர் ஒருவர்.

    ...The best!

    பதிலளிநீக்கு
  5. இதுவரையிலும் இங்கே பின்னூட்டம் எழுதியவர்கள் யாருக்கும் பாயிண்டு கிடையாது - யார் கூறியதும் சரியான பதில் இல்லை என்கின்றார், அப்பாதுரை.

    பதிலளிநீக்கு
  6. //எங்கள் said...
    இதுவரையிலும் இங்கே பின்னூட்டம் எழுதியவர்கள் யாருக்கும் பாயிண்டு கிடையாது - யார் கூறியதும் சரியான பதில் இல்லை என்கின்றார், அப்பாதுரை //

    ஹி.. ஹி.. அது தெரிஞ்சுதான், நா பின்னூட்டம் போடலை..

    பதிலளிநீக்கு
  7. என் பங்குக்கு, “கல்கி”

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  8. எல்லோரும் சைஃபர்.

    பதிலளிநீக்கு
  9. பரிசு ஏதாவது கிடைத்தால் கதை எழுதியவருக்குச் சொந்தம். வேறு எதுவும் கிடைக்க வாய்ப்பே இல்லை, கவலைப்படாதீர்கள்.

    எழுத்தாளரை நினைவுபடுத்த அநியாயத்துக்குச் சுருக்கிய கதைக்கு வரவேற்பிருப்பது ஒரு ஆறுதல். ஒருவேளை அநியாயத்துக்குச் சுருக்கியதால் தான் அடையாளம் காணவில்லையோ? என் பிழையே.

    'யாரென்று தெரிந்திருக்கும்...சட்டென்று பெயர் தோன்றவில்லை' என்றே நினைக்கிறேன். பெயர் சொன்னதும் இவர் எழுத்தைத் தேடிப் படிக்கத் தோன்றும் என்றும் நம்புகிறேன். (விரும்புகிறேன் :)

    நான் 'சுஜாதாவை பத்து வருடத்தில் மறந்துவிடுவோம்' என்றபோது எபி ஸ்ரீராம் உட்பட 'அறியாமை' என்று கொடிபிடித்தது நினைவுக்கு வருகிறது. ம்ம்ம்.. ஒரு வேளை முப்பது வருடம் பிடிக்குமோ என்னவோ?

    interesting...

    பதிலளிநீக்கு
  10. ஒரு clue.
    இவர் கதைகளில் வரும் நாயகன் எல்லாம் கொஞ்சம் ஏமாந்தால் சிகரெட் பிடிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  11. அப்பாதுரை , பாலகுமாரன் படித்ததில்லை சொல்லியிருக்கிங்க...அப்ப யாரு சுப்ரமணிய ராஜு தான் பாக்கி ..சஸ்பென்ஸ் தாங்கலைங்க.. எங்கள் ப்ளாக்கையே சுத்திட்டிருக்கோம் ரிசல்ட்டுகாக....

    பதிலளிநீக்கு
  12. //அப்பாதுரை said...
    புதிர் போட்டது நானில்லிங்க..//
    ஓடறார், ஓடறார்! பிடியுங்க எல்லோரும்...

    பதிலளிநீக்கு
  13. ரிசல்ட்ட சொல்லாமா .. அவர் ஓட , நீங்க துரத்திர சாக்கில் ஓட .. ஆக மொத்தம் டென்சன் கூடுது..

    அடுத்த க்ளு சொல்லுங்க முயற்சிப்போம்.

    பதிலளிநீக்கு
  14. அப்பாதுரை ஓடும்பொழுதே, ஆயிரம் பாயிண்டுகளை, சு.ரா என்று கூறிய பத்மநாபன் அவர்களுக்குக் கொடுக்கும்படி கூறியபடி ஓடிவிட்டார். இந்தக் கதைச் சுருக்கம் நன்றாக இருக்கின்றது என்பதை நாங்கள் அப்பாதுரைக்கு மெயிலில் கூறினோம். இங்கும் பல வாசகர்கள் கூறியுள்ளனர். எனவே, அப்பாதுரை, அடுத்த கதைச் சுருக்கத்தையும் அனுப்பி வைக்கலாம் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்!

    பதிலளிநீக்கு
  15. ஒத்தயா ரெட்டையா போட்டு கண்டுபிடித்ததுக்கு ஆயிரம் பாயிண்டுகளா..நன்றி வந்ததை வரவில் வைப்போம் . சுப்ரமணியராஜ் எழுத்துகள் பாலகுமாரன் முலமாக அறிமுகம்..அவரது பாணி தனியாக இருக்கும். படிக்க ஆரம்பித்தால் நடுவில் நிறுத்தமுடியாது..ரொம்ப நாட்களுக்கு முன் படித்தது ..மீண்டும் படிக்ககிடைப்பதற்கு அப்பாதுரை அவர்களுக்கும் எங்கள் க்கும் நன்றி..நன்றி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!