புதன், 16 பிப்ரவரி, 2011

காஃபி டெக்னாலஜி




காஃபி...
                        
நமக்கு ரொம்பப் பிடித்த விஷயம். ஆனால் நாம் அதைப் பற்றி ரொம்ப சிந்திப்பதில்லை. இருந்த ஒன்று இல்லாமல் போகும்போது இருந்ததன் அடையாளமே அப்போதுதான் உணரப்பட்டு இல்லாத குறை நன்றாகத் தெரியும். ஜீவி சார் இதைப் பற்றி எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது. அவர் பெரிய விஷயங்களுக்கு எழுதி இருந்ததை இங்கு சின்ன விஷயத்துக்கு நினைவு கூர்கிறேன்! உயிரில்லாத ஒரு விஷயத்துக்கு உபயோகப் படுத்திக் கொள்கிறேன்!
            
குடித்துக் கொண்டே இருந்து விட்டு (காஃபிதாங்க..) நடுவில் இல்லாமல் போனால் கஷ்டமாகத்தான் இருக்கும். அப்போதுதான் அதன் அருமை தெரியும்! இரண்டு நாள் முன்பு ஜவஹரின் பதிவைப் படித்ததும் நாமும் ஒரு காபி அடிக்கலாம் என்று தோன்றியது. அது அப்படித்தான்...பக்கத்திலிருப்பவர் காபி குடித்தால் நமக்கும் குடிக்க வேண்டும் என்று தோன்றும்!!
                  
தஞ்சாவூர்க்காரனாக இருந்து விட்டு நல்ல காஃபி பற்றி சொல்லா விட்டால் எப்படி..! டிகாக்க்ஷன் காபிதான் பெஸ்ட். இன்ஸ்டன்ட் காபி வேஸ்ட்.
                       
ஆனாலும் குடிக்கும் காஃபி நல்லா இருக்க வேண்டாமா...எனக்குத் தெரிந்த சில டிப்ஸ்....
                      
முதலில் ஃபில்டர்...
                
ரொம்பப் பெரிய துளைகள் இல்லாமல் சிறிய துளைகள் உள்ள ஃபில்டர் தேவை.
                          
ஈரமில்லாமல் காய்ந்து இருக்க வேண்டும். துளைகள் அடைத்துக் கொண்டு இருக்கக் கூடாது.
                    
நல்ல காஃபிப் பொடி - பழையதாக இல்லாமல் புதிதாய் - ஸ்பெஷல் கிரேடும், முதல் தரமும் கலந்து அரைத்ததாக இருக்கலாம். கொஞ்சம் சிக்கரி இருக்க வேண்டும். ஆனால் கொஞ்சம்தான். இல்லாமல் இருந்தால் காஃபியில் கனம் இருக்காது. நிறைய இருந்தால் காஃபியில் சுவை இருக்காது. (கட்டுப் படியும் ஆகாது!) அரைக் கிலோவுக்கு இருபத்தைந்து கிராம் அல்லது ஐம்பது கிராம் சிக்கரி சேர்க்கலாம்.
                         
அந்த காஃபிப் பொடியை ஃபில்டரில் போடுமுன்பு அரை ஸ்பூன் சர்க்கரையை தூவிக் கொண்டு, ஃபில்டரில் முக்கால் பாகம் வருமளவு பொடியை ஸ்பூனால் சரித்த வகையில் போட வேண்டும். ஸ்பூனால் லேசாக அதை அமுக்கி விட வேண்டும். லேசாகத்தான். பிறகு மேலேயும் லேசாக சர்க்கரை தூவ வேண்டும்.
                     
தண்ணீரைக் நன்றாகக் கொதிக்க வைத்து, கொதிக்கும் போது ஃபில்டரில் தண்ணீரை விட வேண்டும். மூடியோ, டபராவோ போட்டெல்லாம் தட்டக் கூடாது. தானாய் இறங்க வேண்டும்.

முதல் நாலு சொட்டு டிகாக்ஷன் இருக்கே, அதான் விசேஷம்,

கவர்ப் பாலில் கலக்கக் கூடாது...அப்போது கறந்த பாலில் கலக்கணும்.
          
பாலில் தண்ணீரே விடாமல் காய்ச்ச வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் காய்ச்சினால் காஃபி நல்லா வரும்.
               
சூடு குறையுமுன் ஒரு டம்ளரில் ஆடை இல்லாத பாலை விட்டு டிகாக்க்ஷனை (முதல் நாலைந்து சொட்டு மட்டும் விட்டால் ரொம்ப விசேஷம்!) மெல்ல கலக்க வேண்டும். அதிகமாகவும் விட்டு கறுப்பாகக் கலக்கக் கூடாது. குறைவாய் விட்டு வெள்ளையாகவும் இருக்கக் கூடாது. அழகிய காபிக் கலரில் இருக்க வேண்டும்! இந்தக் கலவை ஒரு டெக்னிக்.
                
சர்க்கரை பெயருக்குத்தான் போட வேண்டும். நிறையப் போட்டால் அதன் பெயர் காஃபி இல்லை..பாயசம்! குடிக்கும் போது சர்க்கரை போட்டிருக்கிறோம் என்று தெரிந்திருக்கும் அளவு மட்டும் போட வேண்டும்.
                   
அதை எடுத்து ஒன்று அல்லது இரண்டு ஆற்று மட்டும் டபராவில் ஆற்றி நுரையுடன் குடிக்க ஆரம்பிக்க வேண்டும்.
                    
காபி போட்ட உடன் குடிக்க வேண்டும். ஃபிளாஸ்க்கில் வைத்தோ, சொம்பில் ஊற்றியோ (அலுவலகங்களில் சில சமயம் அபபடி வாங்கி வருவார்கள். சின்ன வயதில் என் நண்பர்கள் வீட்டில் அவர்கள் அம்மாக்கள் "குண்டான்ல காபி வச்சிருக்கேன். போய் மொண்டு குடி" என்பார்கள். எனக்குத் தண்ணீர் ஞாபகம் வரும்) கொண்டு வந்து குடித்தால் தரம் கம்மிதான்... ஃபிளாஸ்கின் 'வாசனை' வேறு சேர்ந்து கொண்டு நல்ல காஃபியின் மணம், சுவையைக் கெடுத்து விடும்.
                           
தஞ்சாவூரில் பெரும்பாலான கடைகளில் காபி நன்றாக இருக்கும். கும்பகோணத்திலும். ஜவஹர் சொல்லியிருப்பது போல கும்பகோணம் டிகிரி காஃபி ஃபேமஸ். மதுரையில் விசாலம் காபிக் கடையில் கொஞ்சம் எதிர்பார்க்கலாம். சென்னையில் சரவணபவன், விவேகானந்தா என்று சில கடைகள்...எல்லா இடத்திலும் 'சர்க்கரை கம்மியாப் போட்டுப்பா' என்று சொல்லி விட வேண்டும். நம்மைப் பாவமாக பார்ப்பார்கள். "பாவம்! சர்க்கரை வியாதி போல இருக்கு"
                          
அவர்களுக்கு என்ன தெரியும் நம் சுவை ஞானம்..! சர்க்கரை கம்மி என்று சொன்னால் தானாகவே டிகாக்ஷனை அதிகமாக விட்டு 'இஷ்ட்ராங்'காக காபி கொண்டு வைத்து விட்டு பெருமையாகப் பார்ப்பார்கள்.
                
இந்தக் கஷ்டத்துக்கு வீட்டிலேயே காபி போட்டு விடலாம்!

28 கருத்துகள்:

  1. சர்க்கரை கம்மி என்று சொன்னால் தானாகவே டிகாக்ஷனை அதிகமாக விட்டு 'இஷ்ட்ராங்'காக காபி//

    100% உண்மை..

    பதிலளிநீக்கு
  2. //காபி போட்ட உடன் குடிக்க வேண்டும். ஃபிளாஸ்க்கில் வைத்தோ, சொம்பில் ஊற்றியோ//
    சொம்பிலா !! ..நல்லது தான் :)

    பதிலளிநீக்கு
  3. சாவப்போகிறாய் உனது கடைசி ஆசை என்ன?
    சூடா ......ஒரு வாய் பில்டர் காபி.

    பதிலளிநீக்கு
  4. சுவை நிரம்பிய காபி பதிவு . நல்ல விளக்கம் ..கறந்த பாலுக்கு எங்க போவது .... நல்ல பில்ட்டர் காபி குடித்து நாக்கை பழக்கியவர்கள் பாடு திண்டாட்டம் தான் .அதன் பின் இன்ஸ்டன்ட் காபியோ மற்றதோ கழுநீர் ஞாபகம் தான் வரும் ..அதனாலேயே தேநீருக்கு மாறி விட்டேன் ...

    பதிலளிநீக்கு
  5. // சென்னையில் சரவணபவன், விவேகானந்தா // கோவையில் அன்ன பூர்ணா ,கௌரி சங்கர் தாண்டி நல்ல பில்ட்டர் காபிக்கு சி , எஸ் கபே ( ரயில் நிலையம் சாந்தி தியேட்டர் அருகில் ) அந்த கடைக்கு அருகில் போனால் எனது ஸ்கூட்டர் தானாக நின்று விடும் .
    மஸ்கட்டிலும் சரவணபவன் உள்ளது ..காபி அவ்வளவு சோபிதம் இல்லை .....

    பதிலளிநீக்கு
  6. இன்ஸ்டன்ட் காபி குடிச்சு.. குடிச்சு.. காபி குடிக்குற ஆசையே போயிடிச்சு..
    பில்டர் காபிக்கு ஈடாகுமா..?

    பதிலளிநீக்கு
  7. இன்ஸ்டன்ட் காப்பி வேஸ்ட்.பில்டர் காபி
    தான் பெஸ்ட்

    பதிலளிநீக்கு
  8. சர்க்கரை பெயருக்குத்தான் போட வேண்டும். நிறையப் போட்டால் அதன் பெயர் காஃபி இல்லை..பாயசம்! குடிக்கும் போது சர்க்கரை போட்டிருக்கிறோம் என்று தெரிந்திருக்கும் அளவு மட்டும் போட வேண்டும்.


    ...Exactly.... சீனியில் காபி taste , காணாமல் போகிற வரைக்கும் கரைத்து ..... உவ்வே!

    பதிலளிநீக்கு
  9. நான் ஏற்கனவே இதைப் பத்தி எழுதி இருக்கேனே:-)

    http://ramamoorthygopi.blogspot.com/2010/10/blog-post_27.html

    பதிலளிநீக்கு
  10. காபி குடிக்கிற பழக்கம் இல்ல. நல்ல ரசனையான பதிவு.

    பதிலளிநீக்கு
  11. பில்ட்டரில் காபிப்பொடியை போடுவதற்கு முன்பும் பின்பும் சிறிது சர்க்கரையைப் போடுவதா?.. இது என்ன கேள்விப்படாத சமாச்சாரமாய் இருக்கிறது?.. நாளைக்கே டெஸ்ட் பண்ணி விடுகிறேன்.

    நாங்கள் வாங்குவது ஆன் தி ஸ்பாட் அரைத்த பீபரி ரகத் தூள். நோ சிக்கரி. நெருங்கக் கூடாது. அப்புறம் தலை சுத்தும்; வயிற்றில் லேசாக இம்சை அரசனாக செயல்படும்.அதனால் அது இல்லை.

    பாலைக் காய்ச்சுவதில் ஒரு முறை இருக்கிறது. பொங்குவதற்கு இப்பவோ அப்பவோ என்று தயார் ஆகிற சமயத்தில், ஒரு ஸ்பூனால்
    பொங்குகிற பாலில் படியத் துவங்குகிற ஆடையை லேசாகக் கலைத்து விட வேண்டும். இன்னும் கொஞ்சம் கூட கொதிக்கும் பாலுக்கு கொஞ்சம் கூடிய சுவை உண்டு.

    இப்பொழுது காபியை கலக்குகிற கட்டம். இரண்டு பேருக்கு என்றால்
    முக்கால் டம்ளர் பால் எடுத்துக் கொண்டு இறக்கிய முதல் டிகாஷனில் ஒன்றேகால் டம்ளர் எடுத்துக் கொண்டு தனியே இரண்டு சமாச்சாரங்களையும் (பால்+டிகாஷன்)கலந்து நுரை பொங்க ஆற்ற வேண்டும். கால் டம்ளருக்கு நுரை வருமே-- அதுவே அலாதி டேஸ்ட்டில்லாத டேஸ்ட்.

    பின் தான் சர்க்கரையின் உபயோகம்.
    யாருக்காவது சர்க்கரை வேண்டாமென் றால், இந்த கட்டத்தில் சர்க்கரையை தவிர்த்து விடலாம் என்பதாலேயே கட்ட கடைசியில் சர்க்கரை உபயோகம். ஒரு முழு டேபிள் ஸ்பூன் சர்க்கரையைப் போட்டு ஆற்றக் கூடாது; ஸ்பூனால் கலக்க வேண்டும்.

    எல்லாம் சரி. டீக்குத் தான் கப்-அன் சாஸர். காப்பிக்கு பெஸ்ட் டபரா-டம்ளர் தான். கொஞ்சமே கொஞ்சம் அந்த டபராவில் ஊற்றி லேசாக ஒரு சுற்று சுற்றி அருந்தினால்.. சுவையோ சுவை!

    டெயில் பீஸ்: அமெரிக்கர்கள் காபி பிரியர்கள்.. கிட்டத்தட்ட பதினைந்துக்கு மேற்பட்ட நாட்டு காப்பிக் கொட்டைகள் ரகரகமாய் லேபிளிட்டு கிடைக்கிறது. அங்கேயே நாமே மெஷினில் வருத்தெடுத்து பில் போட்டுக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  12. ஸ்ரீராம்...எங்க மொழிவழக்கில கோப்பின்னு சொல்லுவோம்.வீட்ல கோப்பி,மல்லி,சுக்கு,சின்னசீரகம்,
    ஏலம் எல்லாம் அளவாகக் கலந்து அரைத்து வைத்துக்கொள்வோம்.பால் கலந்தோ இல்லாமலோ தயாரித்துக் குடிக்கலாம்.

    இதைவிட நெஸ்கபேதான் நீங்க சொன்னமாதிரி செய்முறையில் குடிக்க எனக்கு மிகவும் பிடிக்கும்.

    இன்கு சுவிஸிலும் காபி நிறையவே பாவிக்கிறார்கள்.கபூசீனோன்னு பால் நுரைவிட்டுத் தயாரிப்பார்கள் ஒருவகைக் காபி.ம்ம்...!

    பதிலளிநீக்கு
  13. //டிகாக்ஷனை அதிகமாக விட்டு 'இஷ்ட்ராங்'காக காபி கொண்டு வைத்து விட்டு பெருமையாகப் பார்ப்பார்கள்.//
    ரொம்ப சரி!! ஆனால் சிக்கிரி கலக்காத பொடி வாங்கவேண்டும். நானும் ஒன்னு எழுதறேன்.. எங்கூரு மேட்டரு.. ;-)

    பதிலளிநீக்கு
  14. என்ன காரணம்?
    >>>பொடியை ஃபில்டரில் போடுமுன்பு அரை ஸ்பூன் சர்க்கரையை தூவிக் கொண்டு

    பதிலளிநீக்கு
  15. காஃபித் தூள் ஊறிப் பருமனடைந்து துளைகளை மூடிவிடலாம். சர்க்கரை எப்படியும் கரையக் கொஞ்ச நேரமாகும். அதற்குள் விரிவடைந்த துகள்கள் வந்து மூடாது அல்லவா ? தேநீர் தயாரிக்கும் பொழுது வெந்நீரில் தேயிலை சேர்க்கும் முன் கொஞ்சம் சர்க்கரை சேர்ப்பதுண்டு.

    பதிலளிநீக்கு
  16. கல்யாணம் போன்ற விசேஷங்களில் காஃபிக்குக் கலர் கொடுக்க புளியன்கொட்டையை வறுத்து அரைத்துக் கலப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  17. நாகை வை. ராமஸ்வாமி17 பிப்ரவரி, 2011 அன்று 11:48 AM

    காஃபி ஃபார்முலா - Pea Berry seeds 400 gms. + Plantation 'A' seeds 100 gms. வறுத்தது, அரைத்து அந்த பொடியில் சிக்கரி கலக்காமல் முதல் டிகாக்க்ஷனில் 70% பால் 30% டிகாக்ஷனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து சூடாக 'சர்' ரென்று உறிஞ்சி பார்த்து விட்டுச் சொல்லுங்கள். விருந்தினருக்கும் கொடுங்கள், அப்புறம் உங்களைச் சுற்றி 'காபி குடியர்கள்' அடிக்ட் ஆகி, உங்களைச் சுற்ற ஆரம்பித்துவிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  18. காபி ரொம்ப சூப்பர் . பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு !!!

    பதிலளிநீக்கு
  19. 1986-88 இல் மெடிக்கல் ரேப் காலங்களில் தஞ்சாவூர், கும்பகோணம் செல்வேன். அங்கே ஒரு ஐயர் வீட்டு மெஸ் காபி, அண்ணா நகர் க்ரேண்ட் ஸ்வீட்ஸ் மற்றும் பெங்களூர் எம்.டி.யார் காபி போல் இதுவரை எங்கும் குடித்ததில்லை.

    பதிலளிநீக்கு
  20. // சாய் said...
    1986-88 இல் மெடிக்கல் ரேப் காலங்களில்...//
    என்ன சாய்! ஒப்புதல் வாக்கு மூலமா!

    பதிலளிநீக்கு
  21. //எங்கள் said... // சாய் said...
    1986-88 இல் மெடிக்கல் ரேப் காலங்களில்...//

    என்ன சாய்! ஒப்புதல் வாக்கு மூலமா! //

    தங்கவேலு கல்யாணபரிசு படத்தில் "அட சீ, இவன் உண்மையை சொல்ல விடமாட்டங்கிறனே என்பார்". அதை போல் ஆச்சு உங்க கதை. என் முதல் வேலை அது தான். அதனால் தான் நான் வேலை பார்க்க ஆரம்பித்து இருபத்தைந்து வருடம் என்று இறுமாந்து இருக்கின்றேன் !! நீங்கள் வேறு

    பதிலளிநீக்கு
  22. எங்கள் வெளிச்சம் போட்டது அந்த குறில் நெடில் பேதத்தின் மீது தான்.
    //1986-88 இல் மெடிக்கல் ரேப் காலங்களில்...//
    நெடில் intended என்றால் சரி தான் !

    பதிலளிநீக்கு
  23. சாய் சார்,
    'ரேப்'பா அல்லது 'ரெப்'பா? அதுதான் டவுட்டு!

    பதிலளிநீக்கு
  24. //எங்கள் said...
    சாய் சார்,
    'ரேப்'பா அல்லது 'ரெப்'பா? அதுதான் டவுட்//

    Oh sorry, did not realize that Google Indic gave hath to me ??

    பதிலளிநீக்கு
  25. //Coffee With Engal Blog,//

    இத, இத, இதத்தான் நான் எதிர்பார்த்தேன்... ஹி ஹி ஹி

    பதிலளிநீக்கு
  26. நிறையப் போட்டால் அதன் பெயர் காஃபி இல்லை..பாயசம்//
    குடிக்கும் போது சர்க்கரை போட்டிருக்கிறோம் என்று தெரிந்திருக்கும் அளவு மட்டும் போட வேண்டும்.//
    சரியாகச் சொன்னீர்கள்.பேஷ்!பேஷ்!!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!