வியாழன், 17 பிப்ரவரி, 2011

மாம்ப(பா)லம்

                
எல்லோர் முகத்திலும் வெறுமையான பரபரப்பு...பரபரப்பான வெறுமை...ஏதோ ஒன்று இருந்தது. பீக் அவர்ஸ் அவஸ்தை.
                             

சென்னை பரபரப்புக்கு எத்தனை பஸ், எத்தனை எலெக்ட்ரிக் டிரெயின்கள் விட்டாலும் போதவே போதாது. ஆரம்பமாகி விட்டது மறுபடி ஒரு நாள்...   
         
வியர்வை நெடி, சாராய நெடி, மல்லிகை வாசனை, வித விதமான பவுடர், சென்ட்களின் நெடி...ஒற்றைக் கையால் மேலே தொங்கிய இரும்பு கைப்பிடிகளைப் பிடித்த படி மக்கள் வெள்ளம்.

பெரும்பாலும் தெரிந்த முகங்கள்..தினமும் பரபரப்பாய் காலை ஓடுவதும் மாலை களைத்த முகத்துடன் திரும்புவதும் வழக்கம். திரும்பும்போது சில காலை பார்த்த முகங்களுடன் பல புதிய முகங்களும் இருக்கும்.

எந்த ஸ்டேஷனிலும் கூட்டமில்லாமல் இல்லை. அலை அலையாக மக்கள்...

திடீரென ட்ரெயின் நடு வழியில் நின்று விட்டது. என்ன காரணமோ...

"நின்னு போச்சு...என்ன இழவாச்சோ...லேட்டாறதே..." முதல் குரல்.

"தினமும் ரோதனை...ஒரு நாளாவது ஆஃபீசுக்கு நேரத்துக்குப் போவ முடியாது..." என் ரெயில் தோழியின் குரல்.

"ஏன்..நீ சீக்கிரம் கிளம்பறது..." இன்னொருத்தி.

"இன்னிக்கி பஸ்லயாவது போயிருக்கலாம்..."

"பஸ்லயா... அங்க பார்..." ஒருத்தி கேலியாக அருகில் தெரிந்த ரோடைக் கை காட்டினாள். அனைத்து வாகனங்களும் வரிசை கட்டி அடைத்து நின்றிருந்த காட்சி எந்த ஆபீஸ் போகிறவர்களையும் கலவரப் படுத்தும்! எந்த அரசியல்வாதி நகர்வலம் போறாரோ...இல்லை என்ன போராட்டமோ...

"இந்த தினப்படி அவஸ்தைக்கு பேசாம தற்கொலை பண்ணிக்கலாம்.." அகிலா சற்று அதிகப் படியான உணர்ச்சி காட்டினாள்.

எனக்குப் பேசக் கூடப் பொறுமை இல்லை. காலை அவருக்கும் எனக்கும் நடந்த லடாயில் மனம் நின்றிருந்தது. ."இப்படியே சண்டை போட்டீங்கன்னா ஒரு நாள் 'சட்'டென எழுதி வச்சிட்டு தூக்குல தொங்கிடுவேன்.." என்று கத்தி விட்டு வந்திருந்தேன். என் சின்னப் பையன்தான் பயந்து போய் பார்த்துக் கொண்டிருந்தான்.கிளம்பும்போது மெல்ல அருகில் வந்து "அம்மா...சாயங்காலம் சீக்கிரம் வந்துடு அம்மா...நீயும் நானும் கோவில் போகலாம்னு சொல்லியிருந்தியே...போலாம்மா..." என்றான். எனக்கு அவன் கவலையும் பயமும் புரிந்தது. சிரித்துக் கொண்டே அவன் கன்னத்தைத் தட்டி விட்டு வந்திருந்தேன்.

"ஏய்....உன்னைத்தான்...என்ன கனவு? தூங்கிட்டியா..." கலாவின் குரல்.

"ச்சே..ச்சே..ஏதோ ஞாபகம்...என்ன..."

"நேத்து நைட்டு டீவில புன்னகை மன்னன் படம் போட்டானே பாத்தியான்னு கேட்டேன்..."

நடந்த சண்டையில் அதுக்கெங்கே நேரம்..."இல்லை..பார்த்த படம்தானே..அதுக்கென்ன இப்போ..?"

"சகுந்தலாவோட பக்கத்து வீட்டுப் பொண்ணு ரெண்டு நாளுக்கு முன்னாலே கொளுத்திகிட்டு செத்துப் போச்சாம்...தற்கொலை செய்யறது கோழைத்தனம்னு சொல்லி திட்டிகிட்டு இருந்தா...அதான் கேட்டேன்...அதுல எடுத்த உடனே அது மாதிரி சீன்தானே வரும்..?"

'சுருக்'கென்றது. இங்கேயும் அதே டாபிக். என்ன ஒற்றுமை. நான் ஒன்றும் சீரியஸ் ஆக தற்கொலை எண்ணத்தில் எல்லாம் இல்லை என்றாலும், காலைதான் அது மாதிரி பேசியிருந்ததால் என்னிடமிருந்து இப்படி பதில் வந்தது. "கோழைத்தனமா...அதுக்கு ரொம்ப துணிச்சல் வேண்டும்..."

"வாழ்க்கைக்கு பயந்து ஓடி பிரச்னைகளை எதிர்க்கத் தெம்பில்லாம சாகறதுக்குப் பேரு துணிச்சலா தங்கம்?" கேலியாகக் கேட்டாள் பிரேமா.

பக்கத்தில் நின்றிருந்த ஆண், பெண் அனைவரும் இப்போது இதை கவனித்ததுடன் அவ்வப்போது அவர்கள் கருத்தையும் சொல்லி வந்தனர்.எனக்கு ஏனோ இந்தப் பேச்சைத் தொடர விருப்பமில்லை. மனதில் இனம் தெரியாத பயம் இருந்தது. கதவுக்கு அருகில் நின்றிருந்தோம்.
    
ட்ரெயின் ஏற்கெனவே கிளம்பி ஓடிக் கொண்டிருந்தது.
    
பேச்சு ரெயில் முன் வந்து விழுபவர்கள், தூக்கில் தொங்குபவர்கள், மருந்து குடிப்பவர்கள் என்று பயங்கரமாகவே போய்க் கொண்டிருந்தது.

"என்ன சொல்லு...அது ஒரு நொடி எண்ணம்...அந்த நொடியில தீர்மானிச்சி செய்யறதுதான் தற்கொலை. எவ்வளவு பயங்கரமாயிருந்தாலும்...அப்போ மட்டும் அவங்களை நிறுத்திக் காப்பாத்திட்டா போதும்..அப்புறம் அந்த எண்ணம் வராது...கமல் கூட ரேவதி கிட்ட அதுதான் சொல்லுவார் படத்துல..."

"இல்லடி...நிறுத்தி திட்டம் போட்டு பல நாள் யோசிச்சி சூசைட் பண்ணிக்கிறவங்க இருக்காங்க... ஜோதி ஞாபகமில்லை உனக்கு...?

"..................................." இலேசான மௌனத் தயக்கத்துக்குப் பின் "இருக்கலாம்டி...ஆனால் அது ரொம்பக் கம்மி..."

எலெக்ட்ரிக் ட்ரெயின் சைதாப்பேட்டையிலிருந்து கிளம்பியது.

"இதையெல்லாம் வரையறை செய்ய முடியாதுங்க..." என் அருகில் நின்றவன் முதல் முறையாகப் பேசினான். இவ்வளவு நேரம் பேச்சை கவனித்துக் கொண்டே வந்திருக்கிறான் போலும். கண்ணாடி அணிந்து லேசாய் தலை கலைந்து நடுத்தர வயதை தொட்டுக் கொண்டிருக்கும் வசீகர இளைஞன்.

ரெயில் மாம்பலத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

"எதுக்கு தற்கொலை முயற்சி செய்யறாங்க, என்ன கஷ்டம் இதையெல்லாம் பொறுத்தது...சில தற்கொலைக்கு காரணமே கண்டு பிடிக்க முடியாது......... இருக்காது..." என்று நிறுத்தி புன்னகைத்தவன்,

'சட்'டெனத் திரும்பி மேம்பாலத்தைக் கடந்து கொண்டிருந்த இரயிலிருந்து கீழே குதித்தான்.
     
கீழே லாரி, பஸ்கள் கிரீச்சிட்டு நிற்கும் தாறு மாறான ஓசை நொடியில் கேட்டு தேய்ந்தது.
                                         

16 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. சிறுகதைக்கு கிடைத்த நல்ல கரு.. தற்கொலை தற்கொலை என்ற பேச்சின் மூலம், சஸ்பென்ஸை நாமே உடைத்த மாதிரி ஆகி விடுகிறதே.

  பதிலளிநீக்கு
 3. நல்லா கிளப்பிட்டீங்க, பீதியை... !

  பதிலளிநீக்கு
 4. கதையோ நிஜமோ , தற்கொலை எதற்குமே தீர்வாகாது .

  ரொம்ப interesting ஆ இருந்தது .

  பதிலளிநீக்கு
 5. ஒரு தற்கொலை நடக்கப்போகுதுன்னு மட்டும் விளங்கிச்சு !

  பதிலளிநீக்கு
 6. முடிவு பகீர்ன்னு இருக்கு.
  ரயில் படம் பாக்க ரொம்ப நல்லா இருக்கு. அதுவும் வளைந்து போகும்போது பாக்க இன்னும் அழகா இருக்கு.

  பதிலளிநீக்கு
 7. இதுவரை வந்த எபி கதைகளில் இதுவே டாப்.

  பதிலளிநீக்கு
 8. என் சித்தப்பா மாம்பலத்தில் இருந்து போர்ட் டிரஸ்ட் வரை வேலைக்கு செல்லுவார். சைக்கிளில் சென்று வெத்தலை, பன்னீர் புகையிலை போட்டுக்கொண்டு சனிக்கிழமை கூட அலுவலகம் பலப்பல வருடங்கள் செர்ன்றார். அவர் சொல்லுவார், மாம்பலம் ரயில் நிலையத்தில் 'ரயிலில் ஏற பிளாட்பாரம் ரயிலை பார்த்தும், நாம் இறங்கும் இடத்தில் வெளியே பார்த்து நின்றாலே போதும் என்று - மக்கள் நேந்தி வெளியே தள்ளிவிடுவார்கள் என்று"

  பதிலளிநீக்கு
 9. முடித்த விதத்தில் படிக்கும் நமக்கே ஒரு நிமிடத்திற்கு கால்கள் சில்லிடுகின்றன.!!!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!