செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

யோசனை சொல்லுங்கள்...


உலகக் கோப்பைக்கு அடுத்த அட்ராக்ஷன் தமிழ் நாட்டில் தேர்தல் வருகிறது. தனியாக, சேர்ந்து, கூட்டணி, என்றெல்லாம் ஆரம்பித்து விட்டார்கள். மத்திய அரசு (நடுவண் அரசு!) தமிழக அரசை அதிகாரம் செய்து அதிக இடங்கள் பெறுவதற்கு வாய்ப்பு வந்திருப்பதாக பத்திரிக்கைகள் கணிக்கின்றன. காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆட்சி அமைந்தால் அமைச்சரவையிலும் பங்கு கேட்கலாம், அங்கம் வகிக்கலாம் என்ற எண்ணமும் அவர்களிடம் இருக்கிறது.
             
'முதல்வர்கள் மாநாட்டுக்காக' டெல்லி சென்ற முதல்வர் அங்கிருந்தே ஆலோசிக்காமல், யோசிக்காமல் அவர்கள் கூட்டணியில் பா ம க இருப்பதாகச் சொன்னதையும், மருத்துவர் ஐயா அதை மறுத்து அவர்கள் செயற்குழு கூடி முடிவு செய்யும் என்றும் சொன்னதையும், (அட, எப்போதும் பிகு செய்யும் கலைஞரே தாங்கள் கூட்டணியில் இருப்பதாகச் சொல்கிறார் என்றால் நாம் கூட அதிக டிமாண்ட் செய்யலாம் என்ற கணக்கு இருந்திருக்கும்) கலைஞர் உடனே இல்லை, இல்லை என்று சமாளித்ததையும், அப்புறம் மீண்டும் மருத்துவர் கலைஞர் எண்ணம் வீண் போகாது என்று வழிக்கு வந்ததையும் பார்த்தோம்.

அம்மா என்ன சொல்கிறார், கேப்டன் யார் பக்கம் சேருவார் என்பதெல்லாம் யூகங்களாகவும், கணிப்புகளாகவும் வந்து கொண்டிருக்கின்றன.

இதெல்லாம் இருக்கட்டும்..அரசியல் வேண்டாம்...(அப்போ இவ்வளவு நேரம் மாஞ்சி மாஞ்சி டைப் அடித்திருப்பது என்னவாம்..!)

எனக்குத் தோன்றுவது எந்தக் கட்சியும் எந்தக் கட்சியுடனும் கூட்டணியே கூடாது. ஆட்சியைப் பிடிப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு எதிரெதிர் கொள்கைகளை (அபபடி ஒன்று இருக்கிறதா என்ன) உடைய கட்சிகள் இந்த கொள்கையில் ஒன்று பட்டு கூட்டணி அமைப்பதும் மக்கள் வோட்டுப் போடுவதும் போதும்.

எல்லாக் கட்சியும் தனித் தனியாகத்தான் நிற்க வேண்டும். நோ கூட்டணி. ஆட்சியைப் பிடிக்க இவர்கள் அலைவது சேவையோ நூடுல்சோ செய்ய அல்ல என்று மக்களுக்குத் தெரியும். ஒரு முறை வென்றால் ஐந்து ஆண்டுகள் ஆட்சி நிச்சயம் என்ற முறை ஒழிக்கப் பட வேண்டும். அந்த ஆட்சியை திரும்பப் பெற அடுத்த ஐந்தாண்டுகள் காத்திருக்காமல் பயனில்லா ஆட்சி, சுயநல ஆட்சி, என்று இருக்கும் பட்சத்தில் ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ வருடத்துக்கு ஒருமுறையோ திரும்ப அழைக்கும் வசதி ஏற்படுத்தப் பட வேண்டும். தகுதி இல்லை என்று திருப்பி அழைக்க்கப் பட்டவர்கள் அடுத்த பத்தாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டம் ஏற்பட வேண்டும். (இந்தக் காலத்தில் சட்டங்களை யார் மதிக்கிறார்கள் என்கிறீர்களா...அதுவும் சரிதான்) அதே சமயம் திரும்பத் திரும்ப தேர்தல் என்கிற முறையும் கட்டுப்படியாகாது. வேறு மாற்று வழிதான் யோசிக்க வேண்டும். இரண்டாவதாக வந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்!

காவிரிப் பிரச்னையோ, முல்லை பெரியாறு பிரச்னையோ, கச்சத் தீவுப் பிரச்னையோ...இந்த மாதிரி பிரச்னைகள் அரசியல்வாதிகளின் சுயநலத்தில் அலைக்கழிக்கப் பட்டு கூட்டணி தர்மங்களுக்காகவும், சொந்த லாபங்களுக்காகவும் சரியாக எடுத்தாளப் படாமல் இருக்கின்றன. அவர்கள் அப்படித்தான் செய்வார்கள்.

நீங்கள் இந்த மாதிரிப் பிரச்னைகளை தீர்க்கும் இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்? கர்நாடகமோ, கேரளமோ பாகுபாடு பார்க்காமல் எல்லோரும் இந்தியர்கள் என்ற எண்ணத்துடன் இந்த மாதிரிப் பிரச்னைகளை எடுத்துக் கொண்டு தீர்வு சொல்ல உங்கள் கைவசம் ஏதாவது விரிவான திட்டம் யோசனையில் வருகிறதா நண்பர்களே... அமைச்சர்களும் அதிகாரிகளும்தான் யோசிக்க, திட்டங்கள் போட முடியுமா? நாம் போட்டாலும் அவர்கள் செயல் படுத்தப் போவதில்லை!

மழை நாளில் அளவுக்கதிகமாகப் பெய்யும் மழை நீர் ஒவ்வொரு வருடமும் அதிக அளவு கடலுக்குப் போவதும், கோடைக் காலத்தில் தண்ணீர்ப் பிரச்னை வருவதும் தொடர்கதை. மழை நீர் சேகரிப்பு மக்களிடையேயே கூட பெயரளவில் செய்து சான்றிதழ் பெற்று விடுகிறார்கள். நதி நீர் இணைப்பு என்பது பேச்சளவில் மட்டும்.
               
இதற்கெல்லாம் என்ன தீர்வு..? 
   

7 கருத்துகள்:

  1. மழை நீர் சேமிப்பை மிக மிக முக்கியமானதாக வலியுறுத்துவேன். அத்தோடு நீர் சிக்கனத்தையும் வலியுறுத்துவேன். இப்போதைக்கு என் முன்னால் குடி தண்ணீர், விவசாயத்திற்கு என்று தண்ணீர் இவையே பூதாகரமா தெரியுது.

    பதிலளிநீக்கு
  2. கர்நாடகமோ, கேரளமோ பாகுபாடு பார்க்காமல் எல்லோரும் இந்தியர்கள் என்ற எண்ணத்துடன் இந்த மாதிரிப் பிரச்னைகளை எடுத்துக் கொண்டு தீர்வு சொல்ல....


    .....இந்த பாகுபாடு இல்லாமல், திட்டங்களை வகுத்து இருந்தால், இந்தியா என்றோ முன்னேறி இருந்து இருக்குமே. அன்றாட குடிநீர் பிரச்சனைகளை விட - இனம், ஜாதி, மொழி பிரச்சனைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்துத்தானே இங்கே அரசியல் நடக்கிறது. :-(

    பதிலளிநீக்கு
  3. இதற்கெல்லாம் தீர்வு..
    பிலாகு எழுதுவது.. பிலாகு படிப்பது, கமெண்டும் போடுவது..ஒட்டு போடுவது..(இன்டலி, தமிழ்மன போன்றவற்றில் )

    பதிலளிநீக்கு
  4. வீட்டுக்கு ஒரு போர் திட்டம் என்று சொல்லி ஓட்டுக் கேட்டுவிடப் போகிறார்கள். (போர் போடலாம்.. பூமாதேவி தண்ணீர் தருவாளா?) ;-)

    பதிலளிநீக்கு
  5. //ஒரு முறை வென்றால் ஐந்து ஆண்டுகள் ஆட்சி நிச்சயம் என்ற முறை ஒழிக்கப் பட வேண்டும். அந்த ஆட்சியை திரும்பப் பெற அடுத்த ஐந்தாண்டுகள் காத்திருக்காமல் பயனில்லா ஆட்சி, சுயநல ஆட்சி, என்று இருக்கும் பட்சத்தில் ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ வருடத்துக்கு ஒருமுறையோ திரும்ப அழைக்கும் வசதி ஏற்படுத்தப் பட வேண்டும்.//

    வழிமொழிகிறேன்.

    //தகுதி இல்லை என்று திருப்பி அழைக்க்கப் பட்டவர்கள் அடுத்த பத்தாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டம் ஏற்பட வேண்டும்.//

    எல்லா கட்சிகளுக்கும் இந்த சட்டத்தில் மாட்டியே தீரும் என்பதோடு கட்சி ஆரம்பிக்க நினைக்கும் அத்தனை நடிகர்களும் களத்தில் இறங்கி விடுவார்களோ புற்றீசல்களாக?

    வரவிருக்கும் கோடையையும் தண்ணீர் பிரச்சனையும் நினைத்தால் மேலே பேச வராமல் இப்போதே நாக்கு வறழ்கிறது:(!

    நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  6. //நதி நீர் இணைப்பு என்பது பேச்சளவில் மட்டும்//

    நதி நீர் இணைப்பு பற்றி அன்றே சொன்ன மகாகவி பாரதி கிறுக்கன் என்று எள்ளி நகையாடிவிட்டு இன்று தந்தனக்க படுகின்றோம்.

    பாடகி மற்றும் பாட்டி டி.கே. பட்டம்மாள் அவர்களை பேத்தி நித்தியஸ்ரீ பொதிகையில் என்றோ கண்ட பேட்டியை நேற்று காணக்கிடைத்தது. டி.கே. பட்டம்மாள் அவர்கள் நிறைய பாரதி அவர்களின் சுதிந்திர பாடல்களை பாடி இருக்கின்றார்.

    அவரிடம் சுதந்திரம் விடுதலை என்று பாடினீர்களே என்று கேட்டபோது "இப்போது இருக்கும் அவல நிலையை பார்க்கும்போது ஐயோ அவர்களே இருந்திருக்கலாம் என்று சொல்வதை போல்" இருந்தது எனக்கு !!

    தமிழனுக்கு / கன்னடக்காரன் தண்ணீர் கொடுக்கமாட்டான் ஆனால் அரேபியாவில் இருந்து பெட்ரோல் வரவில்லை என்றால் - அரசாங்க தவறு !!

    அட போங்கடா

    உதிரி: என் பிள்ளைகள் இங்கே தண்ணீர் விரயம் செய்வதையே நான் சொல்லுவேன். இருக்கும்போது விரயம் செய்து அடுத்து வரும் சந்ததிகளுக்கு படத்தில் தான் காட்ட வேண்டும்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!