இருப்பவர்களைப் பற்றிப் பேசுவதில்லை நாம். இல்லாதவர்களைப் பற்றி சிந்திக்க சில நேரம் அவசியம் வந்து விடுகிறது!
சமீபத்தில் மனைவி வழி உறவினரில் ஒரு மூத்த உறுப்பினர் மறைந்தார். மனைவிக்கு அவர் மேல் மிகுந்த ப்ரியம். கோவிலுக்கு போகும்போது இறைவன் பிரதிமை மேல் அவர் உருவம் தெரிந்ததாகச் சொன்னார்!
சில வருடங்கள் முன்பு நான் வீட்டில் தனித்திருந்த சமயம். எல்லோரும் வெளியூர் சென்றிருந்தார்கள். இரவு பன்னிரண்டரை மணி இருக்கும். தூக்கத்தில் இருந்தேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் மச்சினன் ஒருவன் "கொஞ்சம் தள்ளிப் படுத்துக்கோங்க அத்திம்பேர்" என்று சொன்ன மாதிரி இருந்தது. தள்ளிப் படுத்துக் கொண்டு விழித்துக் கொண்டேன். யாரையும் காணோம். ஏதோ பிரமை என்று திரும்ப தூங்க முற்பட்டேன்.
நீங்கள் நினைப்பது சரிதான்...ஃபோன் அடிக்கத் தொடங்கியது. எடுத்தேன்.
ஏதோ ஜுரம் என்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருந்த (அதுவே எனக்குத் தெரியாது) என் மச்சினன் எதிர்பாரா விதமாக சற்றுமுன் இறந்து போனதாக தகவல் வந்தது. அப்புறம் தூங்குவதற்கு ரொம்ப நேரம் ஆனது! (காலை கிளம்பிப் போனேன்)
ஆத்மாவுக்கு ஆதியும் கிடையாது, அந்தமும் கிடையாது என்பார்கள். உடல்தான் அழிகிறது ஆத்மா கர்மபலன்களை அனுபவித்து விட்டு அடுத்த உடலில் புகுவதற்குத் தயாராகி விடுகிறதாம். இறந்தவர்கள் உயிருடன் இருப்பவர்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள் என்றும் சொல்வார்கள்.
முந்தின ஜென்மம் ஞாபகம் வந்த இந்த ஜன்மத்துக்காரர்கள் பழைய இடங்களைத் தேடி அலைந்ததையும் படித்திருக்கிறோம்.
வட நாட்டில் குடியானவச் சிறுவன் ஒருவன் வேற்று பாஷை பேசி வந்ததையும் அப்புறம் அர்த்தம் தெரிந்த போது தன்னுடைய தாய், தந்தை, மனைவி பல கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள ஊரில் இருப்பதாகவும் சொல்லி வந்தானாம். அங்கே போய்ப் பார்த்த பொழுது அது உண்மை என்று தெரிந்ததோடு, அந்த வீட்டில் இருந்த வாலிபன் மாட்டு வண்டியில் வந்த போது கனரக வாகனம் மோதி இறந்ததாகவும் அப்போது பட்ட காயத்தின் வடு இந்த சிறுவனின் உடலில் பிறந்தது முதல் இருந்ததாகவும் படித்திருக்கிறேன்.
கிட்டத் தட்ட இதே போல சம்பவத்தை நேற்று டிஸ்கவரி சேனலில் கூட காட்டினார்கள். அவன் ஒரு ஸ்ரீலங்காச் சிறுவன்.
ஆத்மா விரைவில் அடுத்த சட்டை போட்டு விடும் நிலையில், அதாவது அடுத்த உடம்பில் புகுந்து விடும் என்றால் எப்படி தற்போதைய உறவினர்களைத் தொடர்பு கொள்ளும்? சில பல பிறவிகளை எடுத்த ஆத்மா தொடர்பு கொள்ள அழைத்தால் எந்த கணவன் எந்த மனைவி என்று குழம்பிப் போகாதா?
ஒரு பழைய அனுபவம்...
விடுமுறை நாள்..
அலுவலகத்தில் யாரும் இல்லை. பகல் நேரம்தான். காலை பதினோரு மணிக்குமேல் இருக்கும்.
உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருக்கும்போது முன் ஹாலில் இருந்து ஏதோ சத்தம். கதவை லேசாக அறைந்து சாத்துவது போல.. தொடர்ந்து யாரோ நடந்து வருகிறார்களோ என்று மிக லேசான சத்தம் அல்லது பிரமை.
இரண்டு மூன்று முறை அபபடி ஆனதும் எழுந்து போய் பார்த்தேன். நீண்ட ஹால். எல்லா அறைக் கதவும் மூடியிருந்தன. முன் வாசல் மூடி உட்புறம் தாழிடப் பட்டிருந்தது. பாத் ரூம் வரை சென்று உள்ளே யாரும் இருக்கிறார்களா என்றும் பார்த்து விட்டு, ஜன்னல் கதவுகள் சரியாகத் தாழிடப் பட்டிருக்கின்றனவா என்றும் சோதித்துத் திரும்பினேன். ஒரு அறையைத் தாண்டும்போது வித்யாசமான வாடை ஒன்றை நாசி உணர்ந்தது.
உட்கார்ந்து பதினைந்து நிமிடத்தில் மீண்டும் சத்தம். கதவை வேலை முடிந்து யாரோ மூடிப் பூட்டுவது போல ஆனால் தெளிவில்லாமல். நான் எனக்கு வந்த அழைப்பில் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். யாரோ வருவது போல உணர்வு. திரும்பி ஹாலைப் பார்த்தால் யாரும் இல்லை!
தொலைபேசியில் பேசிய நண்பரிடம் சொன்னேன். சிரித்தார். சமீபத்தில் அலுவலகத்திலேயே செத்துப் போன இரண்டு அலுவலர்களின் பெயர்களைச் சொன்னார்.
பேசிக் கொண்டே மீண்டும் எழுந்து செக் செய்து திரும்பினேன்.
"யார் கூடவாவது பேசிக் கொண்டே வேலை செய்தால் இப்படி பிரமை இருக்கும்..வைத்து விட்டு வேலையைப் பார்" என்றார்.
வைத்து விட்டு வேலையைத் தொடர்ந்தேன். மறுபடி யாரோ நடமாடுவது போல, ஜன்னலில் நின்று என்னை நோக்குவது போல உணர்வு. நிமிர்ந்து பார்த்தால் யாரும் இல்லை.
வேலையைத் தொடர்ந்தாலும் ஒரு சிறு அவஸ்தை இருந்தது.
எழுந்து கதவைத் திறந்து வெளியில் வந்து சாலையை நோக்கினேன். நார்மல். எல்லோரும் அவரவர் வேலையில் ஆழ்ந்திருந்தார்கள்.... இயல்பாக. அந்த வெளிச்சமும் சுறுசுறுப்பும் பார்த்தபோது உள்ளே உணர்ந்த அனுபவம் அபத்தமாக இருக்கவே, மறுபடி அறைக்குத் திரும்பினேன்.
மீண்டும் மீண்டும் இதே அனுபவம். மறுபடி நண்பர் தொலைபேசி நிலைமையைக் கேட்க, சொன்னேன். பேசாமல் கிளம்பிச் சென்று விடு என்றார். கிளம்பி சாவியை எடுக்க முன்னறைக்கு சென்றால் என் முதுகில் மூச்சு விடும் உணர்வு. திரும்பினால் யாரும் இல்லை.
கதவைப் பூட்டி விட்டுக் கிளம்பி விட்டேன். பூட்டும்போது கூட முதுகுக்குப் பின்னால் ஒரு குறு குறு...
பிறகு தொடர்ந்த நாட்களில் பழகி விட்டது. மற்ற ஊழியர்களும் ஒரொரு சமயம் இது மாதிரி உணர்ந்திருப்பதாகச் சொன்னார்கள்.
மருத்துவமனையில் பணிபுரியும் என் சகோதரியிடம் இதைப் பகிர்ந்து கொண்ட போது பிரசவ வார்டின் அருகிலும், ஆபரேஷன் தியேட்டர் உள்ளும் சில சமயம் யாரும் இல்லாத இடத்தில் கேட்கும் அழுகுரல்கள் பற்றி சொன்னாள்.
இன்னொரு நண்பர் அவர் பங்குக்கு உதகை அலுவலகத்தில் வேலைபார்த்தபோது இரவில் தங்கி வேலை பார்த்த ஒரு சந்தர்ப்பத்தில் வந்த அனுபவம் சொன்னார்.
பற்பல வருடங்களுக்கு முன்னால் செத்துப் போன எட்டாம் ஹென்றி அந்த அரண்மனையில் வேலை பார்த்த காவலாளிகளை தீ விபத்து ஏற்படாமல் அரூபமாய் எச்சரித்த சம்பவத்தை டிஸ்கவரியில் காட்டினார்கள். செக்யூரிட்டி அறையைப் படமெடுக்கும் கேமிரா ஒரு தொப்பி அணிந்த நிழலுருவத்தின் நடமாட்டத்தைப் படமெடுத்திருப்பதைக் காட்டினார்கள்.
இத்தனை வருடங்களாக அவர் மறுபிறவி எடுக்காமல் இருக்கிறாரா? சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ போகாமல் இருக்கிறாரா? டவுட்டு#
(எங்கள் கமெண்ட்: இதை, 'அப்படியே பப்ளிஷ் செய்யலாமா அல்லது திருத்தங்கள் ஏதாவது செய்யலாமா' என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், வாசலில் ஒரு சிறு குழந்தை 'பப்பளிக்கா' என்று சொல்லியது காதில் விழுந்தது. எனவே - அப்படியே பப்ளிஷ் செய்ய முடிவெடுத்து, இதோ ......)
எனக்கு இதில் 50% நம்பிக்கை இருக்கிறது.சிலமுறை, நடக்க தேவை இல்லாத விஷயங்கள், நான் நினைத்த உடன் நடந்திருக்கின்றன. காக்காய் உட்கார பனம்பழம் விழுந்திருந்தாலும் மற்ற சக்திகளின் இருப்பை நம்பவே விரும்புகிறேன். இது போன்ற நம்பிக்கைகளே மெஷின்தனமான வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகின்றன.
பதிலளிநீக்குநல்ல சுவாரசியமான பதிவு
பதிலளிநீக்குஅனுபவித்தவர்களுக்குத்தான்
அது புரியும்.அனைவருக்குமே
இதுபோன்ற அனுபவங்கள்
ஏதேனும் ஒருவகையில் இருக்கும்.
உங்களைப் போல சிலரால்தான்
அதை மிகச் சரியாக சொல்லமுடிகிறது
வாழ்த்துக்கள்
முழுக்க இதை ஒதுக்க முடியாது...நம்மை தொந்திரவு செய்யாமல் இருந்தால் சரி..
பதிலளிநீக்குஇப்படி பல அமானுஷ்யங்களிருப்பதாலே தான்,இந்த சின்ன வாழ்க்கைக்கு துணையாக கடவுள் எனும் பிரமாண்டம் தேவைப்படுகிறது.
hmm nambamudiyavillai nambaamalum iruka mudiyavillai
பதிலளிநீக்குவாசலில் வந்த குழந்தை, 'கிச்சிலிக்கா' என்று சொல்லியிருந்தால், பதிவைக் கிழிச்சி எறிந்திருப்பீர்களா?
பதிலளிநீக்குஅவரவர்கள் சொந்தமாக உணராத வரை கட்டுக்கதை, கற்பனை என்றே சொல்வார்கள். அக்பரை தனது பூர்வ ஜென்ம காதலர் என்று ஒரு பெண் சொன்ன கதையும் இதில் உண்டு
பதிலளிநீக்குநாகூரிலிருந்து நாகை செல்லும் வழியில் பால் பண்ணை சேரியாக இருந்து பாப்பன சேரியாக மரியா ஒரு கிராமம் இருக்கிறது. நள்ளிரவில் அவசரமாக நாகை வரை போக வேண்டியிருந்த நண்பர், தமக்கு முன்னே சென்று கொண்டிருந்த முதியவருடன் சேர்ந்து நடந்து கொண்டே "ஏனையா, உங்களுக்கு இந்த பேய் பிசாசு இவற்றில் நம்பிக்கை உண்டா?" என்று கேட்டதும், "உண்டு" என்று சொன்னவரைக் காணோம். நண்பர் அதிர்ச்சியிலிருந்து மீள வெகு நாட்களாயிற்று.
பதிலளிநீக்குஏங்க நான் உயிருடன் இருக்கும்போதே என்னை பேய் மாதிரிதான் பார்க்கிறாள் என் மனைவி ? இது இப்போ ரொம்ப அவசியம் உங்களுக்கு.
பதிலளிநீக்குநீங்களும் பூச்சாண்டி காட்ட ஆரம்பிச்சிடீங்களா?
பதிலளிநீக்குஇதுபோன்ற விஷயங்கள் சுவாரசியமாய்தான் இருக்கும் .கொஞ்சம் சிலிர்ப்புடன்
நீங்கள் சொல்லும் ரேஞ்சுக்கு இல்லை என்றாலும் ஒருசில நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.
பதிலளிநீக்குமும்பையில் இருந்தபோது கும்பகோணத்தில் இருந்து போன் வந்தால் எப்போதுமே உற்சாகமாக இருக்கும். ஒரே ஒருமுறை போனை எடுக்குமுன்பாகவே ஒரு சோகம் எனக்குள். இவ்வளவிற்கும் அது அகால நேரத்தில் வந்த அழைப்பு கிடையாது. தாய்மாமன் காலமானதை அந்த அழைப்பில் தெரிந்துகொண்டேன்.
நண்பர்களிடம் இருந்து பணஉதவி கேட்டு வரும் அழைப்புகளையும் இதுபோல முன்பே கண்டுகொண்டதுண்டு:-)
இது முழுக்க முழுக்க அனுபவம் சார்ந்த விஷயம். இதெல்லாம் பொய் என்று சொல்பவர்களும் உண்டு.
Ready My story and laugh it out
பதிலளிநீக்குhttp://tamizhkirukkan.blogspot.com/2008/03/blog-post_9575.html
தி..கி..ல்.
பதிலளிநீக்கு, வாசலில் ஒரு சிறு குழந்தை 'பப்பளிக்கா' என்று சொல்லியது காதில் விழுந்தது. எனவே - அப்படியே பப்ளிஷ் செய்ய முடிவெடுத்து, இதோ ......)
பதிலளிநீக்கு....சின்ன புள்ள, அப்பா கிட்ட பப்பாளிக்காய் கேட்டுச்சாம்.... ஹா,ஹா,ஹா...
இருந்தாலும், திகில் நிறைந்த மர்ம பதிவு.... discovery சேனல் ப்ரோக்ராம் பார்த்த பீலிங்க்ஸ் .....
(இந்த கமென்ட் நான் டைப் பண்ணல... யாரோ என் பெயர் சொல்லி டைப் பண்ற மாதிரி ஒரு பிரமை....)
//இருப்பவர்களைப் பற்றிப் பேசுவதில்லை நாம். இல்லாதவர்களைப் பற்றி சிந்திக்க சில நேரம் அவசியம் வந்து விடுகிறது!//
பதிலளிநீக்குதத்துவமாக ஆரம்பித்தாலும், பல இடங்களில் அந்த அமானுஷ்ய உணர்வை உணரச் செய்திருக்கிறீர்கள்.
அதற்கு உங்களைப் பாராட்டியே ஆக வேண்டும். தலைப்பில் 'அமானுஷ்ய' என்கிற வார்த்தையை உபயோகித்த வுடனேயே ஆரம்பித்து விடுகிறது அது. எழுதுவதில் சின்னச் சின்ன வார்த்தைகள் கூட முக்கியத்துவம் பெறுவது இதனால் தான்.
நினைவுகளின் நெருப்பை வளர்த்துப் பார்க்க ஒரு சின்னப்பொறியை ஊதினால் போதும். ஏதாவது ஒரு எண்ணம் தடாலென்று நினைவுகளில் தடம் பதிக்கும் பொழுது விறுவிறு வென்று முழுக்காட்சியையும் நம் கற்பனை வளத்திற்கேற்ப மூளை போட்டுக் காட்டி விடுகிறது. தூக்கத்தில் தான் கனவு வரும் என்றில்லை; விழிப்பிலேயே வரும் கனவு போன்றச் சிதறல்களின் பின்னல்கள் உண்டு. மனம் தான் கொள்ளும் அந்தக் காட்சியை கற்பனையில் நடத்தியே காட்டும்.
நுண்மையான உணர்வு கொண்டோருக்கு தனிமையில் எப்போதோ எங்கேயோ அனுபவமான ஒரு நிகழ்வின் தரிசனம், அந்த நேரத்தில் அரைகுறையாக விட்டுப் போனது வேறு ஒரு சமயத்தில் நம் எண்ண வாகிற்கேற்ப முழுமை கொள்ளும். தொடர்பே இல்லாத சில துண்டு துண்டு நிகழ்வுகள், ஒன்று வேறொன்றுடன் ஒட்டி அழகாக எடிட்
செய்யப்பட்டப் படம் போல நினைவுத் திரையில் ஓடும். இந்தக் கூத்தாட்டத்திற்கு தனிமை மிகமிக முக்கியம். சந்தடியான சூழ்நிலை இடையூறாகத் திகழ்ந்து படச்சுருளைக் கத்தரித்து விடும்.
மனம் என்பது மிக விசித்திரமான, படைப்பு கிரீடம் சூட்டிக்கொண்ட நேர்த்தியான விஷயம். அதன் வண்ணங்கள் அனந்தம். நிறையச் சொல்லலாம்.
ஒருவிதத்தில் இந்த மாதிரி சமாச்சாரங்களை ஒருவர் சொல்லி இன்னொருவர் படிப்பது ஏதோ கட்டுரையைப் படிப்பது போல இருக்கும். உணர்வது தான் இதை உணர சரியான வழி.
அருமையாக கூறியுள்ளீர்கள்.. உங்கள் எழுத்து நடை மிகவும் அருமை.. வாழ்த்துக்கள் நண்பரே..
நீக்குஇந்த மாதிரி விசயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. ( நம்பினால் தான் பிரச்சினை). ஆனால் இறந்து போன என் தந்தை எங்கள் சொந்த ஊர் வீட்டில் நடமாடுவதாக என் மனைவி சொல்கிறாள். என் தாயாருக்கோ எனக்கும் என் சகோதரர்களுக்கோ உணர முடியவில்லை. இது எப்படி தெரியவில்லை
பதிலளிநீக்குஜீவி அவர்கள் எழுதியிருக்கின்ற கமெண்ட் மிகவும் அருமையாக, ஆழமாக உள்ளது. வாழ்த்துக்கள் ஜீவி!
பதிலளிநீக்குஅவ்வ்வ்... இப்படியாப் பயங்காட்டுறது... இங்கே பின்னூட்டம் எழுதிருக்க எல்லாரும் முதலில் தங்கள் ‘இருப்பை’ உறுதி செய்யுங்க!! :-))))
பதிலளிநீக்குஅமானுஷ்ய உணர்வுகள் வியர்க்க வைக்கும் என்றால் அந்த உணர்வுக்களுக்கான காரணங்களை ரசிக்கவும் முடியும்.
பதிலளிநீக்குமிக்க நன்றி, Kggouthaman!
ஜீவி அவர்களின் பின்னூட்டம் ஓரளவுக்கு அருமையான விளக்கத்தை தந்துவிட்டது,,ஆவி அமானுஷ்யம் எல்லாம் நிஜமெனில் லட்சகணக்கில் இறந்த விடுத்லை புலிகள் எப்போதோ
பதிலளிநீக்குதனிநாடு பெற்று த்ந்திருப்பார்கள்,,கேட்க
சுவையாக இருக்கும் இது போன்ற ஆவிக் கதைகள் அங்கொன்றும் இங்கொன்றும் வந்த வண்ணேமே இருக்கிறது ,அனால் இது எதுவும்
நிஜமில்லை என்பதுதான் நிஜம்
படிக்க ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது. எனக்கு இந்த மாதிரி ஒரு அனுபவம் உண்டு. பின்னூட்டமாகப் போடுகிற அளவு சின்னதாகச் சொல்ல முடியாது. கூடிய விரைவில் ஒரு இடுகையாகப் போட உத்தேசம்.
பதிலளிநீக்குhttp://kgjawarlal.wordpress.com
Good post. This made me write on the soul's journey. Here is the link if you like...
பதிலளிநீக்குhttp://all-is-well-that-ends-well.blogspot.com/2011/02/journey-of-soul-per-hinduism-per-my.html
உங்களுக்கு கொஞ்சம் பயந்த சுபாவமா ?
பதிலளிநீக்குஅன்பின் எங்கள் பிளாக்
பதிலளிநீக்குபயமுறுத்திறீங்களே !!!! பரவால்ல - சில பேர் இது இப்படியே நடக்குதுன்னு சொல்றாங்க - பல பேர் பிரமைங்கறாங்க - எது உண்மையோ - அவரவர்களுக்கு - உணர்ந்தவர்களுக்குத் தான் தெரியும்.
ம்ம்ம்ம் - தெரியலப்பா
நட்புடன் சீனா
நார்மலா நான் இரவு நேரத்தில் இருட்டைப்பார்த்து பயந்து ஜுரம் வந்த அனுபவம் உண்டு.... இப்பவும் பயம் உண்டு...
பதிலளிநீக்குஆனால் பகல் நேரத்திலும் பயமுறுத்தமுடியும்னு சொல்லி இப்படி ஒரு அமானுஷ்யமான பதிவை கொடுத்திருக்கீங்களே நியாயமாப்பா?
வீட்ல டிவி ஓடுது.. எல்லோரும் உடன் இருக்கிறார்கள்... ஆனாலும் இந்த பதிவை படிக்கும்போது தொண்டை வரண்டு பயம் நெஞ்சில் அடைப்பது போல் உணர்ந்தேன். அதுவும் முக்கியமாக வண்டிச்சாவி எடுக்க முனைந்தபோது முதுகில் மூச்சின் உஷ்ணக்காற்று உணர்ந்ததை படித்தபோது திகிலாக இருந்தது.... படிக்கும்போதே மனதில் படபடப்பு வரவைக்கிறது தத்ரூபமாக எழுதும் எழுத்து....
எனக்கும் ஏற்பட்டிருக்கிறது இதுபோன்ற அனுபவம் இறந்த அண்ணனால்....
தத்ரூபமான பகிர்வுப்பா.... பகல்லயே பயமுறுத்திட்டீங்களே சாமிகளா...
உண்மையே. எனக்கும் அனுபவம் உண்டு.
பதிலளிநீக்குமுக்கியமாக அந்த வாசனை.அது தனி யான வாசனை. பாதி தெரியும் பாதி தெரியாது.ஜீவி சார் சொல்வது போல நுண்ணிய உணர்வு..
உண்மை! உண்மை! இது போன்ற அமானுஷ்ய அனுபவங்கள் என் வாழ்விலும் நடந்துள்ளன! சுவாரஸ்யமான பதிவு! நன்றி!
பதிலளிநீக்குதங்களது தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். முடிந்தால் சென்று பார்க்கவும். நன்றி
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.in/2013/08/blog-post_17.html
து போன்ற அனுபவம் எனக்கும் அலுவலகத்தில் ஏற்படுவதுண்டு. கம்ப்யூட்டர் அறையில் உட்கார்ந்து வேலை செய்துகொண்டிருக்கும் போது வெளியே மாடிப்படிகள் மீது யாரோ ஏறிச்செல்லும் காலடி ஓசை கேட்பதுண்டு. சென்று பார்த்தால் யாரும் இருப்பதில்லை. யாரோ வாசல் வழியே உள்ளே வருவது போல் கண்ணாடி வழியே தெரியம். வெளியில் வந்தால் யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு முறை இருக்கையில் அமர்ந்து மேசை மேல் pad வைத்து எழுதிக்கொண்டிருந்தேன். ஆபீஸ் assistant என் எதிரே வந்து அமர்வது போல் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தால் யாரும் இல்லை. அவர் உண்மையில் வந்தபோது இது பற்றி சொன்னேன். ஒண்ணுமில்ல சார், வீக்னசினால இருக்கும் என்பர் சிரித்தாலும் அதன் பின் அவர் என்னை அலுவலகத்தில் அதுவும் அதிகப் பணியின் காரணமாக இரவில் வேலை செய்யும்போது தனியே விடுவதில்லை எவ்வளுவு நேரமானாலும் கூடவே இருப்பார்.
பதிலளிநீக்குஇந்த இடுகை எப்படி 'கடந்த 30 நாட்களில் அதிகம்பேர் படித்தது' என்பதில் வந்தது என்று படித்துப்பார்த்தேன். அமானுஷ்ய உணர்வை நல்லாவே கடத்தியிருக்கார். அமானுஷ்யமும் ஆன்மீகமும் நம் அனுபவம்தான். அதனைப் பிறருக்குச் சொல்லி நம்பவைக்க இயலாது. வேறு வழியில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தாலும், ஆள் அந்தப் பக்கம் போனபின், 'விடறான் பாரு டூப்பு' என்றுதான் எண்ணுவார்கள்.
பதிலளிநீக்குபெரும்பாலானவர்களுக்கு நுண்ணுணர்வு (ஆவியை அறிந்துகொள்ளும்) கிடையாது. நம்மைவிட அறிவில் குறைந்தவைகளாக நினைக்கும் விலங்கினங்களுக்கு இந்த நுண்ணுணர்வு நம்மைவிட மிகவும் அதிகம். இன்டெரெஸ்டிங்காகத்தான் எழுதியிருக்கிறார் (ஸ்ரீராமா அல்லது கே.ஜி.ஜி அவர்களா?)
நான்தான்!
பதிலளிநீக்குஎங்கள் தந்தை ,என் பெண் திருமணத்துக்கு 13 நாட்கள் முன்பு இறந்தார்.
பதிலளிநீக்குபத்தாம் நாள் என்னைச் சூழ்ந்த அந்த வாசனையை என்னால் மறுத்து ஒதுக்க முடியவில்லை. தாங்க் யூ அப்பான்னு தனியே சென்று அழுது தீர்த்தேன். என் கணவர் இல்லையென்று என்னால்
ஒயத்துக் கொள்ள முடிவதில்லை. பேசாமல் விட்டுச் சென்ற விஷயங்கள் இன்னும் ஏராளம். எங்கே சென்றாலும் அவர் கூடவே இருக்கும் உணர்வு.நான் நம்புகிறேன் ஸ்ரீராம்.
ஹையோ இந்த அமானுஷ்யம் எல்லாம் எனக்கு ஜுஜுபி :) நானா பார்க்காததே இல்லை எனலாம்
பதிலளிநீக்குஎன் முதல் கமெண்டை போடவே விடலை :) இப்போ தான் போட முடியுது ..
பதிலளிநீக்குலக்ஷ்மி அம்மா அதான் எழுத்தாளர் அவர்களுக்கும் இப்படி ஒரு உணர்வு தெரிந்ததாம் அவங்க உறவினர் பெண் இறக்குமுன் இவர் கனவில் வந்ததாக அவர் புத்தகத்தில் படிச்சேன்
எனக்கு அப்பா இறந்த துவக்கத்தில் அவரது சென்ட் வாசனை பல மாதங்களுக்கு என்னை சுற்றி அடிக்கிற உணர்வு ஏற்படும் ..அவர் என்னை எங்க குடும்பத்தை எதிர்பார்த்து உயிரை பிடிச்சிவச்சிட்டிருந்தார் ..நான் செல்வதற்குள் :( அதனால் அந்த உணர்வு நிஜமே என சிலர் சொன்னாங்க ..
பதிலளிநீக்குஅதேபோல அம்மா இறந்த முதல் மாதம் எனக்கு கடும் மைக்ரெயின் வரும் இரவெல்லாம் வலியில் அழுவேன் ஒரு நாள் ஒரு மென்மையான கை என் தலையை தடவின உணர்வு சடாரென எழும்பி அருகில் பார்த்தா கணவர் நல்லா தூங்கறார் ..கொஞ்சம் நடுங்கிப்போச்சு ..
சரி சரி யாரும் பயந்துறாதீங்க நல்லது செய்யத்தான் சில நேரம் மறைந்தவங்க வந்து பார்த்து போவாங்க :)
நிரூபித்துக்காட்ட முடியாது என்பதனால் இவையெல்லாம் பொய் என்று அர்த்தமில்லை. ஒவ்வொருவருக்கும் இத்தகைய அனுபவம் நிகழ்ந்திருக்கலாம். நிகழலாம். சிலர் நுட்பமாக அதனை உணர்ந்திருப்பார்கள். சிலரால் அப்படி உணரமுடியாதுபோயிருக்கலாம். அவரவர் இயல்பும், உணர்வுநிலையும் இங்கே முக்கியம் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குஇம்மாதிரியான விஷயங்களை, அனுபவங்களை உள்ளது உள்ளபடி அல்லது நடந்தது நடந்தபடி எழுத சிலராவது முன்வரவேண்டும். வாழ்க்கை என்பது கண்ணெதெரே தெரிவதுமட்டுமல்ல.
சிறப்பாக எழுதிய ஸ்ரீராமுக்கு நன்றிகள்.