வெள்ளி, 23 செப்டம்பர், 2011

அதிகாலை நேரமே... நடக்கும் நினைவுகள் 4.


நூலக நினைவுகள்


காலை வழக்கமாகப் பார்க்கும் காட்சிகள் பழகி விட்ட நிலையில் போர் அடிக்காமல் இருக்க ஒரு நாள் திசை மாறினால் என்ன என்று தோன்றியதால் மாறி நடந்ததில் குறுக்கிட்ட தெருவில் நடந்த போது மூடிக் கிடந்த 'பொது நூலகம்' இன்றைய நடைச் சிந்தனையைக் கிளறியது.
முதலில் நினைவுக்கு வந்தது சமீபத்தில் எஸ் எம் எஸ்ஸில் வந்த ஒரு செய்தி. ஸ்ரீதேவி லெண்டிங் லைப்ரரி என்ற விளம்பரம். மாத வாடகை - தொடர்பு கொள்ளும் எண் (9444272858). உறுப்பினரானால் தெரிவு செய்யும் புத்தகங்களை வீடு தேடி வந்து கொடுக்கும் திட்டமாகச் சொல்லியுள்ள செய்தி கவர்ந்தது. தொழில் முனைவோருக்குப் புதிது புதிதாக யோசனைகள் பிறக்கின்றன என்பது ஒரு பக்கம், மறுபக்கம் ஆர்வமுள்ள வாசகர்கள் இந்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ளவும் ஒரு வாய்ப்பு. என்னைப் போல வீட்டில் புத்தகக் குப்பையைச் சேர்த்து வைத்துக் கொள்ளாமல், படித்தோமா கொடுத்தோமா, அடுத்த புத்தகத்துக்கு மாறினோமா என்று படிக்கலாம், ஒரு சமயம் ஓரிரு புத்தகங்கள்தான் என்பதாலும், திருப்பிக் கொடுக்கக் கெடு இருப்பதால் குறிப்பிட்ட நேரத்தில் படித்து விடவும் முடியும்! எல்கே தனது பதிவில் சமீபத்தில் சொல்லியுள்ள புத்தகப் பரிமாற்றம் ஐடியா கூட நல்ல திட்டம்தான். இன்னும் சில நாட்கள் முன்பு முக்தா சீனிவாசன் தான் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களை கட்டணம் ஏதுமின்றி படித்து விட்டுக் கொடுக்க தந்து கொண்டிருந்தார் என்று படித்த ஞாபகம் இருக்கிறது.             
   
நூலகம் இந்த நேரத்தில் பூட்டிக் கிடக்கும்தான். பகலில் திறந்து இருந்தாலும் இப்போதெல்லாம் அங்கு நிறையக் கூட்டம் காண முடிவதில்லை. இன்றைய பரபரப்பு உலகம் காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு நாளும் அலுவலகத்துக்குச் சென்று வருவதே ஒரு பெரிய சர்க்கசாகி விட்ட நாள் இது. ஒரு விடுமுறை நாளில் வந்து பார்க்க வேண்டும், எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று! இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் இந்நாளில் நூலகம் வரும் பொறுமை இல்லை. கணினியும் செல்போனும் இருக்கின்றன அவர்களுக்குப் பொழுது போக...! நாம் தேடும் புத்தகங்களும் பெரும்பாலும் நூலகங்களில் கிடைப்பதில்லை. அவர்கள் புத்தகங்கள் ஆர்டர் போட இருக்கும் விதிமுறைகளும், நடைமுறைகளும் சிக்கலானவை. கன்னிமாரா போன்ற பெரிய நூலகங்கள் வேறு வகை. அங்கு வசதியும் அதிகம். வருவோரும் வேறு வகைதான். படிக்க, தூங்க, பொழுது போக.... refer செய்ய... அங்கேயே நகல் எடுக்க...
  
சிறு வயதில் அரசுக் குடியிருப்பில் இருந்த நூலகத்தில் கழித்த நாட்களும் படித்த புத்தகங்களும் நினைவுக்கு வருகின்றன. பேசும் படம், பிலிமாலயா புத்தகங்களைக் கையில் வாங்குவதே கஷ்டம். எப்போது போனாலும் முன்னாலேயே ஒருவர் கையில் இருக்கும். அருகில் வேறு ஏதோ புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு 'தேவுடு' காத்துக் கொண்டே 'சார்...அங்கிள்...பிரதர்...' என்று ஏதோ ஒரு வகையில் விளித்து, 'நீங்க படிச்சிட்டு எனக்குத் தாங்க' என்று ரிசர்வ் செய்ய வேண்டும். அதிருஷ்டம் இருந்தால் கிடைக்கும். அல்லது அவர் அருகிலிருக்கும் இன்னொரு 'யூத்'தைக் காட்டி 'இவர் கேட்டிருக்கார்' என்று மூட் அவுட் செய்வார். அவர் நமக்கு 'சரி' என்று ஒப்புதல் தந்தாலுமே அப்புறம் யாராவது 'பெரிசுகள்' வந்து கேடடால் கேள்வி கேட்காமல் நம் உரிமை பறிக்கப் படும்!    
             
    பிடித்த நடிகர்கள் படங்கள், கடைசியில் ஒரு படக் கதை வசன வடிவில் என்று பேசும் படத்துக்கு ஒரு கவர்ச்சி அந்நாளில். இப்போது அந்தப் புத்தகம் வருகிறதா என்று கூடத் தெரியவில்லை! அபூர்வமாக சில காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்கும். இரண்டு மூன்று நாளில் காணாமல் போய் விடும்! இந்த 'படிச்சிட்டு அடுத்தது எனக்குக் குடுங்க' வேறு சில விஷயங்களுக்கும் உபயோகப் பட்டிருக்கிறது. அவர்களிடம் பேச வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே அவர்கள் எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் பக்கத்தில் உட்கார்ந்து 'அடுத்து எனக்கு' என்று ரிசர்வ் செய்து விட்டு படித்து முடித்தாச்சா என்று பார்ப்பது போல அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கலாமே...!
  
இப்படிக் காத்திருக்கும்போதும், வேறு சில காரணங்களினாலும் அங்கு இருக்கும், நம் வீட்டில் வாங்காத புத்தகங்களைப் புரட்டத் தொடங்கி அப்புறம் 'நீங்க படிச்சிட்டு எனக்கு' ரிசர்வேஷன் வரிசையாக மற்ற புத்தகங்களுக்கும் வழக்கமானது. அது என்னமோ நாம் படிக்க நினைக்கும் புத்தகங்கள் தான் எல்லோருக்குமே படிக்கத் தோன்றும் போல...!!
    
இன்னும் கொஞ்ச நாள் கழித்து டேபிளில் இருக்கும் புத்தகங்களைத் தவிர 'ரேக்கில்' இருக்கும் புத்தகங்களையும் எடுத்தும் படிக்கலாம், உறுப்பினர் கார்ட் போட்டு வீட்டுக்கும் எடுத்துப் போகலாம் என்று தெரிந்தது. அப்படிப் படிக்கத் தொடங்கியதில்தான் மு. வ, வி சி காண்டேகர் தொடங்கி, கல்கி நா பா, விக்ரமன் ஜெயகாந்தன் என்று படிக்கத் தொடங்கியது நினைவில் உள்ளது. ஒரு பறவையின் பெயரிலா, பறவையைப் பற்றியா நினைவில்லை, காண்டேகரா மு வ வா என்றும் நினைவில்லை அந்தப் புத்தகத்தை நூலகத்தில் ஒளித்து வைத்து, அடையாளம் வைத்து அடையாளம் வைத்து வந்து படித்து முடித்தது நினைவுக்கு வருகிறது. வீட்டிலேயே அப்பா சேர்த்து வைத்திருந்த தமிழ்வாணன் முதல் தி.ஜ ரா வரையும், பண்பு, சுதந்தரத்தில் அமரர் சித்திரம், மருத்துவக் குறிப்புகள், என்று ஒவ்வொன்றாகப் படிக்கத் தொடங்கினோம். எங்கள் வீட்டிலிருக்கும் 'பாரீசுக்குப் போ' என் நண்பன் ஒருவன் தஞ்சை மத்திய நூலகத்திலிருந்து அசத்தியது!

சாந்தப் பிள்ளை கேட் அருகில் இருந்த 'செய்தி நிலையம்', மற்றும் ரெயில்வே ஸ்டேஷன் போகும் வழியில் இருந்த 'கிளை நூலகம்' இரண்டிலும் பள்ளியின் மதிய உணவு இடைவேளைகளில் பொழுது போக்கும் இடங்களாயின. வீட்டுக்கருகில் கிடைக்காத அம்புலிமா, பாலமித்ரா போன்ற புத்தகங்களும் சில ஆங்கில, ஏன், அங்கு கிடைக்காத சில தமிழ் தினசரிகள் கூட இங்கு கிடைக்கும். வருகைப் பதிவேட்டில் முதலில் நல்ல பிள்ளையாக சொந்தப் பெயர் எழுதிக் கையெழுத்திட்டாலும் நாள் செல்லச் செல்ல லால்பகதூர் சாஸ்த்ரி, பக்ருதீன் அலி என்றெல்லாம் இறந்த தலைவர்களை வம்புக்கிழுப்பது வழக்கமானது! அங்கு இருக்கும் நூலகர் நாங்கள் போனாலே சற்று அதிக கவனத்துடன் கண்காணிப்பார்! வீட்டுக்கருகிலிருந்த நூலகத்தை விட பெரியவை இவை. மேலும் இந்த நூலகங்களின் கண்டிப்பான மௌன அமைதி சில வேளைகளில் ரசிக்கத் தகுந்தவை. சில வேளைகளில் அலுத்துப் போகும்!

விளையாட்டில் சூரப் புலி இல்லை என்பதால் மைதானத்தில் ஏற்படும் அவமரியாதை அசவுகரியங்களைக் குறைப்பதற்கும் நூலகம் இடமாகியது. புதிய புதிய புத்தகங்கள் அறிமுகமாகின. குங்குமம், இதயம் பேசுகிறது, தாய்,... எவ்வளவுதான் வீட்டில் வாங்குவார்கள்? வீட்டில் ஆரம்ப நாட்களில் குமுதம், கல்கண்டு, விகடன் மட்டும்தான். இந்தப் புத்தகங்களைப் படிக்க நூலகம் வருவது வழக்கமாயிற்று.

எங்கள் கடைசி மாமா தனது ஊரில் ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை நடத்துவது கேள்விப்பட்டு என் அண்ணன் தன் நண்பனுடன் 'வசந்தம்' என்றொரு கையெழுத்துப் பிரதி தொடங்க, எனக்கு அதில் வாய்ப்பு மறுக்கப் பட்டதாலும், 'சொந்தப் பத்திரிக்கை' தொடங்கும் ஆசை வந்ததாலும் எண்ணற்ற ஆர்வலர்கள் போலவே நானும் 'தென்றல்' என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை தொடங்கினேன்! அண்ணன் வசந்தம் என்று பெயர் வைத்ததால் நான் தென்றல் என்று பெயர் சூட்டினேன். அப்புறம் நீண்ட நாள் கழித்து கண்ணதாசன் நடத்திய பத்திரிக்கை பெயரும் அதுதான் என்று தெரிந்தது. எவ்வளவு நண்பர்களைச் சேர்த்துக் கொள்ள முடியும்? வாய்ப்புக் கிடைக்காத இன்னொரு நண்பன் 'மலர்' என்ற பெயரில் ஒரு கை. பத்திரிக்கை தொடங்கினான். ஆக, எங்கள் குடியிருப்பே இலக்கிய ஆர்வலர்களால் நிரம்பி வழிந்த காலம்!!

இந்தக் கையெழுத்துப் பிரதிகளைப் படிக்க ஆள் வேண்டுமே.... கார்பன் பேப்பர் வைத்து பத்திரிகையில் வந்த ஓவியங்களின் அவுட்லைன் எடுத்து அதில் எங்கள் கைவண்ணம் கூட்டி, காட்டி, கார்பன் வைத்து நாலு வரைந்து அட்டையாக்கி... அப்புறம் ஜோக்குக்குப் படங்கள் சேர்க்கும் வேலையும் என்று அதையும் நாலு காபி எடுத்து.. கஷ்டமான வேலைங்க....பெரும்பாலும் முழுப் பரீட்சை விடுமுறையில்தான் சாத்தியம்! இப்படி நான்கு தயாராகும். ஒன்று ஆபீஸ் காபி!! பள்ளியில், குடியிருப்பில் சுற்றுக்கு என்று இரண்டு, ஒன்று நூலகத்தில். சுற்றுகளில் படிப்பவரிடம் கெஞ்சி, மிரட்டி என்று வாசகர் கடிதம் தேற்றி விடுவோம்! நூலகரை ஐஸ் வைத்து நூலகத்தில் போட்டு விட்டு படிப்போர் கருத்துக்குப் பதுங்கி நின்று காத்திருப்போம்! அப்புறம் மூன்று தயாரித்து, இரண்டாகி அப்புறம் நூலகக் காபி மட்டும் என்று வந்து.... நின்று போனது!
   
நூலகருக்கு ஆயிரம் அவசர வேலைகள் இருந்ததும், அவரைக் கண்காணிக்க என்று யாரும் வரமாட்டார்கள் என்பதும் வசதியாக போனதால், நானும் என் சகோதரனும் பல நாட்கள் நூலகராய், சம்பளமில்லாமல் பணியாற்றியதுண்டு. காலை நூலகம் மூடும் நேரம் வாரப் பத்திரிகைகளை இந்த செல்வாக்கில் வீட்டில் எடுத்து வந்து படித்து விட்டு, மாலை நூலகம் திறக்கும் முன்பு கொண்டு போட்டு விடுவோம்! நூலகச் சாவியே எங்களிடம்தான் இருக்கும். யாரும் ஒன்றும் சொன்னதில்லை. எங்களுக்கு அந்த அந்தஸ்துக் கொடுத்த பரமசிவம் எங்கே இருக்கிறாரோ இப்போது...! காலம் தாழ்த்திக் கொண்டுவரப் படும் பைண்டிங் புத்தகங்களை - அந்தக் கால எங்கள் க.கன்னிகள் - கொண்டு வரும்போது காட்டிய பந்தாக்கள்... புத்தகங்களில் சில பக்கங்களைக் கிழித்துப் பதுக்கியது, சில புத்தகங்களை பனியனுக்குள் பதுக்கிக் கடத்தியது.... இந்த வழக்கம் நாங்கள் 'நூலகராய்' இருந்த போது மற்றவர்களைக் கண்காணிக்க உதவியது!

இந்தக் காலத்தில் புத்தகங்கள் படிக்கும் பழக்கமே குறைந்து வருகிறது. பள்ளிகளிலேயே நூலகம் இருப்பதாக பல பள்ளிகளில் பணம் வாங்குகிறார்கள். சில பல பள்ளிகளில் வைத்துமிருக்கிறார்கள். ஆனாலும் இந்தக் கால மாணவர்களுக்கு அவர்கள் படிப்பையும், வீட்டுப் பாடத்தையுமே முடிக்கவே நேரம் போதவில்லை. இதில் எங்கே புத்தகங்கள் படிக்கிறார்கள்? ஒழிந்த நேரத்துக்கு இருக்கவே இருக்கிறது டிவியும், கணினியும், வலையுலகமும், முகப் புத்தகமும்...

கணினியில் நிறையப் புத்தகங்கள் சேர்த்து வைத்திருந்தாலும் கையில் புத்தகம் வைத்துப் படிக்கும் சுகம் கணினியில் படிப்பதில் வருவதில்லை.
                       

20 கருத்துகள்:

  1. நூலகம் என்று ஆரம்பித்தாலே நிறுத்த முடியாத அளவிற்கு அனுபவங்களும் நிகழ்வுகளையும் பகிர்ந்து விட்டீர்கள்..நானும் எந்த ஊருக்கு போனாலும் நூலகம் எங்கே இருக்கிறது என்பதை முதலில் பார்த்துவிடுவேன் ..
    இப்பொழுது பார்க்கும் பெரும்பாலான நூலக கட்டிடங்கள் சிதிலமடைந்து உள்ளது..ஆனால் அதற்குள்ளும் பத்துபேர் மஞ்சரி கலைமகள் தமிழரசு விடுதலை கலைக்கதிர் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்…

    பதிலளிநீக்கு
  2. //அது என்னமோ நாம் படிக்க நினைக்கும் புத்தகங்கள் தான் எல்லோருக்குமே படிக்கத் தோன்றும் போல...!! //

    Murphy's law

    கடைசி லயன்.. உண்மை.. உண்மை.. உண்மையைத் தவிர வேறில்லை

    பதிலளிநீக்கு
  3. கணினியில் படிக்க பிடிக்கவில்லை என்பது உண்மை தான், ஆனால் பல விலை உயர்ந்த புத்தகங்கள் கணினியில் இலவசமாக கிடைக்கும் பொழுது திகட்டாமல் படிக்க முடிகிறது..

    பதிலளிநீக்கு
  4. //கணினியில் நிறையப் புத்தகங்கள் சேர்த்து வைத்திருந்தாலும் கையில் புத்தகம் வைத்துப் படிக்கும் சுகம் கணினியில் படிப்பதில் வருவதில்லை.//

    உண்மைதான்.. அதுவும் அந்த புதுப்புத்தக வாசனை தனிதானே :-)

    பதிலளிநீக்கு
  5. பதிவு, நூலகம் குறித்த நிறைய ஞாபகங்களை கிளறிவிட்டன. பத்திரிகைகளுக்கு நிறைய எழுதிய நாட்களில், நூலகங்களில் தவமாய் கிடந்தேன். காலை 8 to11 நூலகம் திறந்திருக்கும் நேரம். நூலகம் திறப்பதற்கு முன்பாகவே சென்று, நூலகம் திறந்ததும் முதல் ஆளாக சென்று - பிறர் வருவதற்குள் எல்லா இதழ்களையும் வாசித்து விடுவேன். எப்போதும் இரண்டுக்கும் மேற்பட்ட கிளை நூலகங்களோடு தொடர்பில் இருப்பேன். ஒன்றில் வாசிக்க முடியாததை இன்னொன்றில். ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாறி மாறி நூலகங்களுக்கு செல்வேன். எழுதுவது குறைய, குறைய - நூலகங்களுக்கு செல்வதும் குறைந்தது. "அது ஒரு அழகிய நூலக காலம்" என்று தான் சொல்ல வேண்டும்.பதிவு, நூலகம் குறித்த நிறைய ஞாபகங்களை கிளறிவிட்டன. பத்திரிகைகளுக்கு நிறைய எழுதிய நாட்களில், நூலகங்களில் தவமாய் கிடந்தேன். காலை 8 to11 நூலகம் திறந்திருக்கும் நேரம். நூலகம் திறப்பதற்கு முன்பாகவே சென்று, நூலகம் திறந்ததும் முதல் ஆளாக சென்று - பிறர் வருவதற்குள் எல்லா இதழ்களையும் வாசித்து விடுவேன். எப்போதும் இரண்டுக்கும் மேற்பட்ட கிளை நூலகங்களோடு தொடர்பில் இருப்பேன். ஒன்றில் வாசிக்க முடியாததை இன்னொன்றில். ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாறி மாறி நூலகங்களுக்கு செல்வேன். எழுதுவது குறைய, குறைய - நூலகங்களுக்கு செல்வதும் குறைந்தது. "அது ஒரு அழகிய நூலக காலம்" என்று தான் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான நினைவுகள்.நான் கல்லூரி படிக்கும் காலத்தில் தேனாம்பேட்டை நூலகத்திற்கு சென்றுவந்த நினைவுகளை கிளரிவிட்டது.

    //கணினியில் நிறையப் புத்தகங்கள் சேர்த்து வைத்திருந்தாலும் கையில் புத்தகம் வைத்துப் படிக்கும் சுகம் கணினியில் படிப்பதில் வருவதில்லை.//

    உண்மை.

    இதற்காகவே சமீபத்தில் இங்கு ஒரு நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  7. புத்தகம் படிக்கும் வழக்கம் குறைந்து வருகிறது - புத்தகங்கள் வாங்கும் வழக்கம் அதிகமாகி வருகிறது. இந்தியாவின் B நகரங்களிலும் இப்போது புத்தக விழா என்று நடத்துகிறார்கள். படிக்க நேரமில்லாத போது வாங்கி வைக்க நேரமெடுப்பது முரணாக இல்லை?
    நண்பர் ஜவஹருடன் சமீபத்தில் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.

    அது சரி, பொட்டு வச்சே ஆகணுமா?

    பதிலளிநீக்கு
  8. கையெழுத்துப் பத்திரிகையின் பிரதிகள் ஏதாவது சேர்த்து வைத்தீர்களா?

    பதிலளிநீக்கு
  9. //கையில் புத்தகம் வைத்துப் படிக்கும் சுகம்//

    ரொம்ப உண்மைங்க. விகடனின் ஆன்லைன் வாசகராக இருந்தாலும், கம்ப்யூட்டரையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்கப் படிக்காமல், நிறைய பகுதிகளை விட்டுவிடுகிறேன் இப்பவெல்லாம். :-(((

    ஆன்லைன் சப்ஸ்கிரிப்ஷன் வந்த புதிதில் சில மெயில்கள் விகடனாருக்கு எழுதினேன், பிடிஎஃப் கோப்பாகத் தந்தால், பிரிண்ட் அவுட் எடுத்து, விரும்பும் சமயம் படிக்க வசதியாருக்குமேன்னு. நோ பதில்!! (இல்லையென்றால் சப்ஸ்கிரிப்ஷனைத் தொடர மாட்டேன் என்றுகூட மிரட்டினேன்.. :-)))) )

    புத்தகங்களை, (குப்புறப்)படுத்து, உருண்டு, உட்கார்ந்து, நடந்து, பால் பொங்குகிறதா என்று பார்த்துக்கொண்டே படிப்பது (படித்துக்கொண்டே பொங்கவிடுவது!!), பஸ்ஸில், ஆட்டோவில் பயணிக்கும்போது படிப்பது, இரவு தூங்குமுன் படிப்பது இதிலெல்லாம் இருக்கும் சுகம்... ம்ஹும்.. கம்ப்யூட்டரெல்லாம் கிட்டேகூட வரமுடியாது!!

    பதிலளிநீக்கு
  10. //பார்த்துக்கொண்டிருக்கப் படிக்காமல்//

    -பிடிக்காமல்...

    பதிலளிநீக்கு
  11. கதையோ கட்டுரையோ கையில் புத்தகத்தைப் பிடித்துப் படிக்கும் சுகமே தனிதான். கணிணியில் அந்த நிறைவு கிடைப்பதில்லை. ஆனாலும் இணையத்தின் முக்கிய பலன்- கையெழுத்துப் பத்திரிகையின் equivalent ஆன பதிவுலகம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. நன்று,என்னுடைய லைப்ரரி நினைவுகளையும் தூண்டப்பட்டு விட்டது.

    பதிலளிநீக்கு
  13. எனக்கு பிடித்த டாப் 3 இடங்கள்னு கேட்டா அதுல நூலகமும் உண்டு. அது இன்று பல்வேறு வடிவம் எடுத்து பெருகி வருவதும், மக்களின் படிக்கும் ஆர்வமும் கேட்க மகிழ்ச்சி தான். என்னதான் கணினியில் படித்தாலும் புத்தகம் வைத்து படிப்பதில் உள்ள அந்த ஒரு உணர்வு இருப்பதில்லை. நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  14. நூலக நினைவுகள் அருமை. கையெழுத்துப் பத்திரிகை அனுபவப் பகிர்வு சிறப்பு. அந்த வயதில் மிகுந்த ஆர்வமும் கவனமும் எடுத்து செய்திருப்பது புரிய வருகிறது. Kindle, I pad மூலம் e-புத்தகங்கள் வாசிக்கும் வந்து விட்டாலும், புத்தகத்துக்கு ஈடாகா. நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  15. //அது சரி, பொட்டு வச்சே ஆகணுமா?//

    எங்கள் ஆர்ட் எடிட்டரின் டேஸ்ட் எப்பவும் தனிங்க!

    பதிலளிநீக்கு
  16. நன்றி பத்மநாபன்..மஞ்சரி, தமிழரசு....இப்பவும் வருதா என்ன? நீங்கள் சொல்வது போல நூலகங்கள் பெரும்பாலான இடங்களில் ஏன் இன்னும் சிதிலமடைந்த கட்டிடங்களிலேயே இருக்கின்றன என்பதும் கேள்விக்குறிதான்!

    நன்றி மாதவன்...அந்த வரி எழுதும்போது மர்ஃபி லா ஞாபகம்தான் வந்தது!

    suryajeeva.... நீங்கள் சொல்வதுபோல சில விலை உயர்ந்த புத்தகங்கள் கணினியில் கிடைக்கும்போது சேமிககதானே வேண்டும்? கணினியிலும் படிக்க முடிகிறது. ஆனாலும் ..

    நன்றி அமைதிச்சாரல் ...புதுப் புத்தக வாசனை நுகர்வதும் தனி சுகம்தான்!

    நன்றி தமிழ் உதயம்..உங்கள் அனுபவங்களையும் எழுதுங்களேன். இப்போதெல்லாம் நூலகத்தில் சென்று உட்கார நேரம் கிடைப்பதில்லை இல்லை?

    நன்றி RAMVI,

    நன்றி அப்பாதுரை...கையெழுத்துப் பிரதிகள் கைவசம் இல்லை! எப்போதோ தொலைந்து விட்டன!

    நன்றி ஹுஸைனம்மா... ஏதோ ஒரு தளத்தில் ஜூவி, விகடன், குமுதம் போன்றவை பி டி எஃப் ஆகத் தருவதைப் பார்த்த நினைவு. எங்கு என்று நினைவில்லை. நீங்கள் சொல்வது போல புத்தகமாகப் படிக்கும் சுகமே தனிதான்.

    நன்றி geetha santhanam. நீங்கள் சொல்வது சரி. இணையம் வசதிதான். ஆனால் சுகம் புத்தகமாகக் கையில் வைத்துப் படிப்பதுதான்.

    நன்றி shanmugavel.

    நன்றி அப்பாவி தங்கமணி.

    நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  17. // சிதிலமடைந்த கட்டிடங்களிலேயே இருக்கின்றன என்பதும் கேள்விக்குறிதான்!//
    சிதிலம் கொஞ்சம் பெரிய வார்த்தையா இருக்கலாம்... சமிபத்தில் நான் பார்த்த இரு பெரிய ஊர் நூலகங்களும் சரியான கட்டிடத்தில் இல்லை.. ராசிபுரத்தில் குப்பைகளை தாண்டிச்செல்லும் ஒரு மாடிக்கட்டிடத்தில்.... ராசிபுரத்தை விடுங்கள்...தாம்பரம் பக்கம்தான் அங்கே பாருங்கள்... மழைவந்தால் நூலகத்திற்குள் உடனே கணுக்கால் அளவு நீர் நிற்கும்...அப்பவும் மாலைமலரை மழை மலராக படிக்க வாசகர்கள் இருப்பது பாராட்டுக்குரியது....

    பதிலளிநீக்கு
  18. புத்தக பரிமாற்றம் நல்லதுதான் ஆனால் எங்கம்மா பைண்ட் செஞ்சு வச்சிருந்த கல்கி பொன்னியின் செல்வன் ,தென்பாண்டி சிங்கம் அப்புறம் இந்துமதி சிவசங்கரி புத்தகங்கள் கொண்டுபோனவங்க திருப்பித்தரல்ல :(
    நான் முதல்முதலா சண்டே ஸ்கூலில் பரிசு வாங்கினேன் 10 புக்ஸ் கிடைச்சது அத்தனையும் அப்போ அண்ணாநகரில் புக் எக்சிபிஷன் போட்டாங்களே அதில் வாங்கினவை ஈசாப் நீதிக்கதைகள் ரஷ்யநாட்டு சிறுவர் கதைகள்னு எல்லாத்தையும் அப்பாவின் நண்பர் அவர் பேத்திக்கு படிச்சிட்டு தரேன்னு சொல்லி ..வரவேயில்லை ..
    அதிலிருந்து பரிசா கொடுப்பேன் ஒழிய நோ பரிமாற்றம் .

    பதிலளிநீக்கு
  19. கையில் புக் பெரிய தலையணை சாய சைடால தட்டு நிறைய நேந்திரங்கா சிப்ஸ் :) ஒரு கோப்பை காபி ஹம்மா செமையா இருக்கும்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!