செவ்வாய், 6 டிசம்பர், 2011

எட்டெட்டு ப 6:: பிங்கியால் வந்த வினை.


ஆவி மாயா கூறிய கதை தொடர்கிறது. 

பிங்கி என்னை விட, குறைந்தது பத்து வயதாவது சிறியவளாக இருப்பாள். அவள் எங்கள் வாழ்க்கையில் நுழைந்த நாள் எனக்கு இன்னும் பசுமையாக ஞாபகம் இருக்கின்றது. ஓ ஏ என்னைக் கல்யாணம் செய்துகொள்வதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்பு 'மாயா மேம்சாப்' என்று ஒரு இந்திப் படம் ரிலீசாகி, வட மாநிலங்களில் பரவலாக பேசப்பட்டது. 
   
அந்தப் படத்தில் வேலை செய்த குழுவினரில் சிலர், வேறொரு படம் எடுப்பதற்காக இந்தூர் வந்திருந்தனர். லொகேஷன் தேர்வு, கதை டிஸ்கஷன், இந்த ஹோட்டலில்தான் நடந்தது. ஓட்டலின் சொந்தக்காரர் என்ற வகையில், ஓ ஏ யும் அந்தக் கூட்ட கோலாகலங்களில் அவ்வப்போது கலந்து கொண்டார். அந்தக் குழுவினருடன் வந்திருந்த டீன் ஏஜ் பெண்ணாகிய பிங்கி எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தாள். மிகவும் அழகு, மிகவும் சூட்டிகையான பெண். படத்தின் டைரக்டர், அவளை ஓர் அனாதை இல்லத்திலிருந்து, கண்டு பிடித்து, அடுத்த படத்தில் நடிக்க வைக்க அழைத்து வந்திருந்தார். 
      
பிங்கி ஓ ஏ மனதையும் கவர்ந்து விட்டாள். எங்கள் வீட்டிற்கும் ஓ ஏ அவளை அழைத்து வந்தார். என்னை 'மாயா மேம்சாப். என்று வேடிக்கையாக அறிமுகம் செய்து வைத்தார் ஓ ஏ. பிங்கி என்னை 'அக்கா' என்று அழைக்கத் தொடங்கினாள். அடிக்கடி வந்தாள். ஓ ஏ, அவளை தத்து எடுத்துக் கொள்ளலாமா என்று என்னிடம் கேட்டார். அக்கா என்று கூப்பிடுகின்ற பிங்கி அம்மா என்று என்னைக் கூப்பிட்டால், எனக்கும் சந்தோஷமே. ஆனால் ஓ ஏ யின் அப்பா, இந்தத் திட்டத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. சினிமா சம்பந்தப்பட்ட பெண் யாரும் இந்தக் குடும்பத்தில் நுழையக் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். 
       
பிறகு பிங்கி எங்கள் வீட்டுக்கு வருவது குறைந்து போய், அடியோடு நின்று போனது. ஓ ஏ யின் ஆலோசனையில் அவள் அந்தப் படக்குழுவிலிருந்து விலகி விட்டாள். அதற்கு முன்போ அல்லது பிறகோ அவள் எந்த சினிமாவிலும் நடிக்கவில்லை. ஓ ஏ அவளுடைய படிப்புக்கு நிறைய பண உதவிகள், என்னைக் கலந்தாலோசித்து, செய்தார். கல்லூரிப் படிப்பு, கம்பியூட்டர் படிப்பு என்று ஏதோதோ படித்த பிங்கி, இந்த ஹோட்டலிலேயே தங்கிக் கொண்டு, என் கணவரின் பி ஏ போல ஹோட்டல் பிசினெஸில் அவளால் முடிந்த உதவிகளை என் கணவருக்கு செய்து கொண்டு இருந்தாள். 
       
மாமனார் அவருடைய எண்பத்தைந்தாவது வயதில் ஒருநாள் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அதுவரை ஹோட்டல் வேலை உண்டு, வீடு உண்டு என்று இருந்து கொண்டிருந்த ஓ ஏ,  மும்பையில் ஹோட்டல் கட்டுகின்ற திட்டம் ஒன்றில் முழு மூச்சாக ஈடுபட்டார். மும்பைக்கும் இந்தூருக்கும் அடிக்கடி விமான பயணம் மேற்கொண்டார். அப்பொழுதெல்லாம் அவருடன், பிங்கிதான் சென்று வந்துகொண்டு இருந்தாள். 
            
ஊரில் இருந்தால், ஓ ஏ சாப்பிட, உறங்க, வீட்டுக்கு வருவார். மும்பை சென்றிருந்தால், இரண்டு மூன்று நாட்கள், வீட்டுப் பக்கமே வரமாட்டார். வீட்டில் நிறைய வேலைக்காரர்கள், அவ்வப்போது வந்து தங்கி ஊர் சுற்றிப் பார்க்க, வைத்தியம் பார்த்துக் கொள்ள என்று அவருடைய தூரத்துச் சொந்தக்காரர்கள் என்று வீட்டில் ஏழெட்டுப் பேர்கள் எப்பொழுதுமே இருப்பார்கள். மாமனார் உயிருடன் இருந்த சமயத்தில், எல்லோருமே அவர் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டனர். மாமனாரின் மறைவுக்குப் பின், ஓ ஏ யுக்கும், எனக்கும் அந்த மரியாதை கொடுத்தனர். 
                
ஓ ஏ - நான் இடுகின்ற வேலைகளை கவனிக்க காலு சிங்கை என்னுடைய சிறப்புப் பணியாளாக நியமித்திருந்தார். அதே போல அவர் ஊரில் இருந்தால் அவருக்கு வேண்டியவைகளை கவனித்துக் கொள்வதும் காலு சிங்கின் வேலை. எங்கள் வீட்டுக்கும் இந்த ஹோட்டலுக்கும் நான்கு கிலோ மீட்டர் தூரம். ஓ ஏ யுடனேயே காரில் அவன் வீட்டுக்கும் ஹோட்டலுக்கும் அலைவது வழக்கம். சில நாட்களில் காலு சிங் மட்டும் கூட காரில் வந்து, என் கணவருக்கு வேண்டியவைகளை எடுத்துச் செல்வான். காலு சிங் எங்கள் இருவர் மீதும் எக்கச் சக்கமான எஜமான விசுவாசம் வைத்திருந்தான். எங்கள் இருவர் முன்பும் உட்காரக் கூட மாட்டான். 
       
அவன் ஒரு நாள், தயங்கித் தயங்கிக் கூறிய செய்தி கேட்டவுடன், என் தலையில் இடி விழுந்த மாதிரி ஓர் உணர்வு ஏற்பட்டது. 
       
(தொடரும்) 
          

12 கருத்துகள்:

 1. அடுத்த அத்தியாயத்திற்கு காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 2. அந்த செய்தி என்ன? அடுத்த பகுதிக்கு ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. அது என்ன செய்தின்னு சொல்லிட்டு தொடரும்னு போட கூடாதா? அப்படி என்னங்க அவசரம் உங்களுக்கு! இடி அங்க விழுந்தாலும் மண்டை இங்க காயுதுல்ல!

  பதிலளிநீக்கு
 4. சினிமாவுல இருக்கோ செய்தி? படம் பார்க்கத் தோணுதே?

  பதிலளிநீக்கு
 5. குரோம்பேட்டைக் குறும்பன்7 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:08

  // அப்பாதுரை said...
  சினிமாவுல இருக்கோ செய்தி? படம் பார்க்கத் தோணுதே?//

  அப்பாதுரை சார்! அந்தத் தவறை மட்டும் செய்துவிடாதீர்கள். மாயா மேம்சாப் கதையை wikipedia வில் ஆவலோடு போய்ப் படித்துவிட்டு, ஏண்டா படித்தோம் என்று நொந்து போய்விட்டேன். அதைப் படித்தால் இந்தக் கதை மாயா மீது இருக்கின்ற மரியாதையே போய்விடும்.

  பதிலளிநீக்கு
 6. எச்சரிக்கைக்கு நன்றி கு.கு. (செய்யாதேனு சொன்னாத்தான் எதையும் செய்யத் தோணுது :)

  பதிலளிநீக்கு
 7. இந்தப் பகுதியிலேயே அந்தச் செய்தியைக் கொடுத்திருப்பது தான் உங்கள் சாமர்த்தியம்.

  பதிலளிநீக்கு
 8. // சி.பி.செந்தில்குமார் said...
  என்னது?? தொடருமா??//

  இதுல என்னங்க சந்தேகம்? இது ஆறாவது அத்தியாயம். இன்னும் நிறைய கதை இருக்கு. உங்கள் கேள்வியைப் பார்த்தவுடன் எழுதுகின்ற ஆசிரியருக்கே சந்தேகம் வந்துவிட்டது. மீதி உள்ள ஆசிரியர்களைப் பார்த்து சிவச்சந்திரன் மாதிரி - ஏனய்யா நான் சரியாகத்தானே எழுதி இருக்கேன்? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 9. அவர் வேறே ஒண்ணுக்காகக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த அத்தியாயத்தி லேயே 'அந்தச் செய்தியை' அவர் கொடுத்திருப்பது கொஞ்சம் ஊன்றிப் படித்தாரானால், அவருக்கே தெரிந்து போகும்!

  பதிலளிநீக்கு
 10. எட்டெட்டு ப 6:: பிங்கியால் வந்த வினை."

  தொடரும் மர்மம் பளிச்சிடுகிறது..

  பதிலளிநீக்கு
 11. இதிலே மர்மம் என்ன வேண்டிக்கிடக்கு?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!