செவ்வாய், 6 மார்ச், 2012

எட்டெட்டு பகுதி 9:: மாயா போட்ட கண்டிஷன்

          
இது எட்டெட்டு பகுதி 8 சுட்டி. 

மாயா கூறிய கதை தொடர்கிறது.   
                      
அறைக்கு வெளியே, பிங்கியும் நானும் பேசியது இது: 

"ஓ ஏ, பிசியாக இருக்கிறார். உங்களைப் பார்க்க இயலாது என்று நினைக்கின்றேன்" என்றாள் பிங்கி. 

"பிங்கி உனக்கு முதலாகவும் கடைசியாகவும் எச்சரிக்கின்றேன். இனிமேல் எங்கள் இருவருக்கும் இடையில் நீ வராதே."

"என்ன அக்கா! என்ன ஆச்சு உங்களுக்கு?"

"எனக்கு ஒன்றும் ஆகிவிடவில்லை. உனக்கு எதுவும் ஆகாமல் பார்த்துக் கொள். அது போதும். " 

"அக்கா நீங்க ஏதோ தப்பாக நினைத்துவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன்...."  

"தப்பாக நடந்துகொள்பவள் நீ! என்னை தப்பாக நினைப்பவள் என்கிறாயா?" 
   
பிங்கி கண்ணீர் விட்டபடி, விசும்பி அழ ஆரம்பித்துவிட்டாள். அவள் அழுகைச் சத்தம் கேட்டதுடன், வெளியே வந்த ஓ ஏ, அவளைப் பார்த்து, 'பிங்கி ஹனி - ஏன் அழுகிறாய்' என்று கேட்டு, என்னைப் பார்த்ததும் சற்று நிலை தடுமாறி, 'நீ? நீ எப்படி இங்கே வந்தாய்? ஏன் பிங்கியை அழ வைத்தாய்? இருவரும் உள்ளே வாருங்கள்! வெளியே விவாதம் வேண்டாம்.' என்றார். 

மூவரும் உள்ளே சென்றோம். 

ஓ ஏ : "நீ ஏன் இங்கு வந்தாய் மாயா?"

நான்: "இது என்ன கேள்வி? கணவன் இருக்குமிடத்திற்கு மனைவி வரக்கூடாதா?"

ஓ ஏ: "தாராளமாக வரலாம். ஆனால் ஒரு ஃபோன் செய்திருக்கலாமே!"

நான்: "ஃபோன் செய்து விட்டு வந்திருந்தால் - இங்கு நடக்கும் நாடகங்கள் எல்லாம் பார்த்திருக்க முடியாதே!"

சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது.  பிறகு ஓ ஏ பேசினார். 
  
ஓ ஏ: "மாயா நான் உன்னிடம் எதையும் மறைக்க விரும்பவில்லை. பிங்கியை நான் இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்துகொள்ளப் போகின்றேன். "

நான்: "ஓ ஏ - உங்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கின்றது? இந்த சின்னப் பெண்ணை, நம் மகளாக சுவீகரிக்கலாமா என்று நினைத்த ஒரு பெண்ணை - மனைவியாக நினைத்துப் பார்க்க எப்படி மனம் வந்தது? சேச்சே - உங்களுக்கு நிச்சயம் புத்தி பேதலித்துப் போய் விட்டது. நீங்கள் மனம் திருந்தி, தன்னிலை அறிய, நான் ஒரு வாரம் அவகாசம் தருகின்றேன். இன்று ஆகஸ்ட் ஒன்று, செவ்வாய்க்கிழமை. அடுத்த செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் எட்டாம் தேதி - என்னுடைய பிறந்த நாள். அன்றைக்குள் நீங்க இந்த பிங்கியின் உறவை தலை முழுகிவிட்டு, நம் வீட்டிற்கு வாருங்கள். இல்லையேல் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது" 
   
(பிங்கியிடம்) "உன்னை சுவீகரிக்கலாமா என்று நினைத்த என்னிடமிருந்து என் கணவனை நீ அபகரிக்கலாமா? உனக்கு ஏன் புத்தி இப்படிப் போயிற்று? ஒரு வாரத்திற்குள் இங்கிதமாக என் வாழ்க்கையிலிருந்து விலகிக் கொள். உனக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் கொடுக்கின்றேன்." 
                 
இதை சொல்லிவிட்டு, நான் வேகமாக அறையை விட்டு வெளியேறி, காரில் ஏறி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
   
(தொடரும்)    

6 கருத்துகள்:

 1. ஒரு வாரம் டைம் எல்லாம் எதுக்குங்க. அடுத்த நிமிடமே என்ன வேண்டுமானாலும் நடக்கும் இல்லையா? பேசாம ஒரு மாத்திரையை எதுலயாவது கலந்து குடிக்க வைச்சிருக்கலாம். அப்படி பண்ணி இருந்தா கதை வளராம சுபம் ஆயிருக்குமே. அதனாலதானா! சரி, சரி தொடருங்கள். தொடர்கிறேன்.

  பதிவாசிரியரிடம் 'தொடா விரதம்' எல்லாம் வேண்டாம்னு சொல்லுங்க. நாங்க ரெண்டு மூணு பேரானாலும் தொடர்ந்துண்டு இருக்கோம் இல்லையா. :)

  பதிலளிநீக்கு
 2. மறந்தே போச்சுங்க இந்த தொடர்.. எட்டு எப்படியாவது எட்டுமானு நானும் பாக்குறேன்..

  பதிலளிநீக்கு
 3. துரை, முழுவதும் மறக்க வேற விடமாடேங்கறார் ஆசிரியர். எல்லாரும் மறந்திருக்கும் நேரத்தில் பதிவு போட்டு, அதில் ஆவலைத் தூண்டும் வண்ணம் கொக்கி போட்டு நிறுத்தி மீண்டும் மண்டை காய வைக்கிறார்

  பதிலளிநீக்கு
 4. கீதா சந்தானம் சொன்னது மிக சரி.

  பதிலளிநீக்கு
 5. சரியாப் போச்சு போங்க! அங்கேயே ரெண்டிலே ஒண்ணு தீர்க்க வேண்டாமோ? என்ன பொண்ணு இந்த மாயா! கெஞ்சிட்டு இருக்காளே! :( தன் மதிப்பே இல்லையே?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!